நான் என்ன செய்தேன் நாட்டுக்கு?

This entry is part [part not set] of 32 in the series 20061116_Issue

செல்வன்



கென்யாவை நாம் பெரும்பாலும் ஸ்டீவ் டிக்கலோவின் தேசம் என்ற முறையில் தான் அறிவோம். ஆனால் கென்யா உண்மையில் வாங்கரி மாதாயின் தேசம்.
கென்யா ஒரு ஏழை ஆப்பிரிக்க நாடு.தனிநபர் சராசரி வருமானம் இந்தியாவை விட 50% குறைவு என்றால் தெரிந்து கொள்ளலாம் அது எப்படிப்பட்ட ஏழை நாடு என்று.மூன்றில் இரண்டு பங்கு கிறிஸ்தவர்கள் இருந்தாலும் ஆப்பிரிக்க இனக்குழு கலாச்சாரம் தான் அங்கே அதிகம்.அடிக்கடி வரும் பஞ்சமும் அதனால் விளையும் வறுமையும் மக்களை துன்புறுத்திக்கொண்டே இருக்கும்.வறுமையில் வாடும் மக்கள் ஆபிரிக்காவில் அதிகம் இருக்கும் வனவளங்களை குறிவைத்தனர். மரங்களை வெட்டி விற்றும், விலங்குகளை அதிக அளவில் வேட்டையாடி உண்டும், விற்றும் காலம் கழித்தனர்.இதனால் கென்யாவில் வனவளம் குறைந்தது.

மேலும் கென்யாவில் குழாய் தண்ணிர் எல்லாம் அதிக அளவில் கிடையாது. மக்களே ஆற்றுக்கும், குளத்துக்கும், கிணற்றுக்கும் போய் வாளிகளில் தண்ணீர் பிடிக்க வேண்டியதுதான். வனவளம் குறைய, குறைய தண்ணீர் பஞ்சமும் அதிகரித்து கென்யா தனது அண்டைநாடான சோமாலியா போலாகிவிடுமோ என்ற அச்சம் மேலோங்கியது.

வறுமையும், கல்வி அறிவின்மையும் மேலோங்கி இருக்கும் தேசத்தில் விடிவெள்ளி முளைப்பது எங்ஙனம்?படித்த இளைஞர்கள் மனது வைத்தால் தானே அது நடக்கும்?அப்படிப்பட்ட விடிவெள்ளி ஒன்று கென்யாவில் வாங்கரி மாதாய் எனும் பெண் வடிவில் உருவானது. ஏழைகள் நிறைந்த கென்யாவிலிருந்து அமெரிக்காவின் பிட்ஸ்பர்க்குக்கு போய் படித்தார் வாங்கரி மாதாய்.படித்தபின் தன் கல்வியை பயன்படுத்தி அமெரிக்காவில் செட்டில் ஆக விரும்பவில்லை.தன் கல்வி தன் தாய்நாட்டுக்கு பயன்பட வேண்டும் என விரும்பினார். எந்த நம்பிக்கையும், வேலை வாய்ப்புமில்லாத கென்யாவுக்கு துணிந்து திரும்பினார்.1971ல் யுனிவர்சிடி ஆப் நைரோபியில் புரபசர் வேலைக்கு சேர்ந்தார்.

70களில் மரங்களுக்கும், விறகுகளுக்கும் கென்யாவில் பெரும்பஞ்சம் வந்தது. தன்நாடு தன் கண்முன் அழிவதை அவரால் காண இயலவில்லை.தன் நாடு முன்னேற வேண்டுமானால் மரங்களின் மூலமும், வனங்களின் மூலமும் மட்டுமே முடியும் என்பதை உணர்ந்தார் வாங்கரி மாதாய். அதற்கு ஒரே வழி கென்யாவின் வனவளத்தை பெருக்குவது. தனிநபர் ஒருவர் நினைத்தால் செய்யக்கூடிய காரியமா இது? ஆனால் அதை எல்லாம் அவர் யோசித்துகொண்டிருக்கவில்லை.களத்தில் குதித்துவிட்டார்.

1977ல் கிரீன் பெல்ட் இயக்கம் எனும் இயக்கத்தை துவக்கினார்.கிராமம், கிராமமாக போய் மரம் நடுதலின் அவசியத்தை பற்றி சொன்னார். சோறே இல்லாத கிராமங்கள் மரம் நடுவதை பற்றி யோசிப்பார்களா என்ன?ஆனால் அவர்களை அப்படி நினைக்க வைத்ததில் தான் வாங்கரிமாதாயின் வெற்றி அமைந்தது.கிரீன் பெல்ட் இயக்கத்துக்கு செல்வாக்கு அதிகரித்தது. தன் இயக்கத்தை முழுக்க, முழுக்க பெண்கள் சுயமுன்னேற்ற இயக்கமாக மாற்றிய வாங்கரிமாதாய் வனம் சார்ந்த தொழில்களில் அடித்தட்டு வர்க்க பெண்களுக்கு பயிற்சி அளித்தார். தேனி வளர்த்தல், உணவு பதனீடு போன்ற வனம் சார்ந்த தொழிலகளில் அப்பெண்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.மரம் நடுதல் முக்கிய கடமையாக போதிக்கப்பட்டது.

கிட்டத்தட்ட 30,000 பெண்களுக்கு சுயதொழில் பயிற்ச்சி அளித்தார் மாதாய்.மேலும் முக்கியமாக 3 கோடி மரக்கன்றுகள் கென்யாவெங்கும் நடப்பட்டன.அதாவது நாட்டின் ஜனத்தொகைக்கு சமமான அளவில் மரக்கன்றுகள் வாங்கரிமாதாயின் இயக்கத்தால் நடப்பட்டன.

மரம் நடுதலை மட்டும் செய்யவில்லை மாதாய்.வனவள அழிப்பையும் எதிர்த்தார்.1989ல் தலைநகர் நைரோபியில் உள்ள உஹுரு பார்க்கை அழித்து அங்கே 60 அடுக்கு வணிகவளாகம் கட்ட திட்டமிட்ட கென்ய ஜனாதிபதி டேனியேல் அராப் மோயை தன்னந்தனியாய் எதிர்த்து போராடி கைதானார் வாங்கரிமாதாய்.அந்த திட்டமும் பின் கைவிடப்பட்டது.இதேபோல் 1998ல் கரூரா காடுகளை ப்ளாட் போட்டு விற்கும் திட்டத்துக்கு எதிராக மிகப்பெரும் மக்கள் படையை திரட்டினார் வாங்கரிமாதாய்.அந்த திட்டமும் கைவிடப்பட்டது.

ஆள்வோரை எதிர்த்தால் சும்மா இருக்குமா அரசு?கிரீன் பெல்ட் இயக்க ஆபிஸ்கள் அடித்து உடைக்கப்பட்டன.முண்ணணி நபர்கள் கைது செய்யப்பட்டனர். வாங்கரிமாதாயே கடுமையான போலிஸ் தாக்குதலுக்கு உள்ளனார்.இரு முறை கைதும் செய்யப்பட்டார்.

நம்மூரில் ஓட்டு வாங்க தலைக்கு இரண்டு ஏக்கர் நிலம் தருகிறேன் என்றதுபோல் கென்யாவிலும் ஓட்டு வாங்க நிலமில்லாத ஏழைகளுக்கு வனப்பகுதி நிலங்களை பட்டா போட்டு தரும் திட்டம் துவக்கப்பட அதை கடுமையாக எதிர்த்தார் வாங்கரிமாதாய்.கென்யாவின் நிலப்பரப்பில் வெறும் இரண்டு சதவிகிதமே வனவளம் உள்ளது.அந்த நிலங்களையும் விளைநிலமாக்கி மக்களை குடியேற்றினால் நாடு பாலைவனமாகிவிடும் சூழ்நிலை அல்லவா உருவாகும்?வழக்குகள் மூலமும்,மக்கள் போராட்டம் மூலமும் அத்திட்டத்தை கடுமையாக எதிர்த்து வருகிறார் வாங்கரிமாதாய்.

நாட்டுக்கு இத்தனை போராட்டம் நடத்தினால் சொந்த வாழ்வு என்னாகும்?துயர் நிறைந்ததாகத்தானே இருக்கும்?வாங்கரிமாதாய்க்கும் அதுதான் நடந்தது.ம்வாங்கி மாதாய் எனும் அரசியல்வாதியை சிலவருடங்கள் திருமணம் செய்து கடும் மனஸ்தாபங்களுக்கு இடையே விவாகரத்து செய்தார் வாங்கரிமாதாய்.

வனவளங்களை அபகரிக்க துடிக்கும் அடக்குமுறை அரசு, படிப்பறிவற்ற ஏழை மக்கள், இவர்களுக்கிடையே நாட்டை பற்றி கவலைப்படும் கிரீன்பெல்ட் இயக்கம் என போராட்டமாகவே சென்று கொண்டிருக்கிறது வாங்கரிமாதாயின் வாழ்க்கை.

இவருக்கு 2004ல் உலகின் மிக உயர்ந்த பரிசான நோபல் பரிசு கிடைத்தபோதுதான் மேற்கத்திய மக்களுக்கு இப்படி ஒருவர் இருப்பதே தெரிந்தது.

அடிக்கடி சர்ச்சைக்கு உள்ளாகும் வண்ணம் பேசுவது இவரது வாடிக்கை.”எய்ட்ஸ் கிருமி கறுப்பர்களை அழிக்க வெள்ளையர்கள் அனுப்பியது” என பேசி சர்ச்சைக்கு உள்ளாகி அதன்பின் அதை வாபஸ் வாங்கினார்.

தனிமனிதனால் நாட்டுக்கு என்ன செய்யமுடியும் என்பதற்கு ஒரு உதாரணம் வாங்கரிமாதாய்.நாட்டுக்காக தன் கல்வி, வெளிநாட்டு வேலைவாய்ப்பு,சொந்தவாழ்வு என அனைத்தையும் தியாகம் செய்தார் வாங்கரிமாதாய்.

“நாடு என்ன செய்தது எனக்கு?” என அவர் கேட்கவில்லை.
“நான் என்ன செய்தேன் நாட்டுக்கு?” எனத்தான் அவர் யோசித்தார்.

நல்லோர் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை

என்றான் பொய்யாமொழிப்புலவன்

நிஜத்தில் கென்யாவில் மழைபெய்வது இவர் ஒருவர் உள்ளதால் மட்டுமே.

-செல்வன்

www.holyox.blogspot.com
www.groups.google.com/group/muththamiz

Series Navigation

செல்வன்

செல்வன்