பேசும் செய்தி – 6

This entry is part [part not set] of 41 in the series 20061109_Issue

பாஸ்டன் பாலாஜி



————————————————————————-

1. ஆப்ரிக்க நாடுகளின் தலைவர்கள் ஓய்வுபெற ஊக்கத்தொகை: ஆப்ரிக்க நாடுகளின் தலைவர்கள், அவர்களது பதவிக் காலம் முடிவடைந்த உடன் பதவியில் இருந்து விலகும் அதிபர்களுக்கு, பத்தாண்டு காலத்தில் சுமார் ஐந்து மில்லியன் டாலர் கொடுக்கப்படும். பரிசு பெறுவதற்கு ஆப்பிரிக்க அதிபர்கள் தங்களுடைய பதவிக் காலத்தில் நல்லது செய்தவர்களாகவும் இருக்க வேண்டும்.

செய்தியைக் கேட்டவுடன் தலைவர்கள் சிலருக்கு குறுந்தகவல் தட்டினோம். அவர்களின் எஸ்.எம்.எஸ் பதில்கள் இணைக்கப்பட்டுள்ளது:

* மேற்கு வங்கத்தின் ஜோதி பாசு: ‘இப்பொழுதுதான் ஆப்பிரிக்காவிலேயே ஆரம்பித்திருக்கிறார்கள். முன்பே, இந்த மாதிரி வரும் என்று தெரிந்திருந்தால் புத்ததேவிடம் கொடுத்தே இருக்க மாட்டேனே!’

* அடல் பிஹாரி வாஜ்பாய்: ‘என்னுடைய பதவிக் காலம் என்னிக்கு முடிஞ்சிருக்கு? பா.ஜ.க.விற்கு நான் மட்டுமே நிரந்தர பிரதம மந்திரி.’

* பெர்வேஸ் முஷாரஃப்: ‘என்னது… நல்லது செஞ்சிருக்கணுமா? காமெடி கீமடி பண்ணலியே!’

2. தில்லியில் உள்துறை அமைச்சகத்தின் 2 கார்கள் திருட்டு: மத்திய உள்துறை அமைச்சகத்துக்குச் சொந்தமான 2 கார்கள் தில்லியில் காணாமல் போயுள்ளன. இந்த 2 கார்களிலும் உள்துறை அமைச்சகத்தின் எம்எச்ஏ என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளதால், அவற்றைப் பயன்படுத்தித் தாக்குதல் நடத்துவதற்காக பயங்கரவாதிகள் திருடியிருக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

உள்நாட்டு விவகார அமைச்சர் ஷிவ்ராஜ் பட்டீலைத் தொடர்பு கொள்ள முயற்சித்தோம். அவரே காணாமல் பதுங்கியிருக்கிறார் என்னும் தகவல் கிடைத்தது. ஆந்திராவில் வெள்ளைத்தை வானூர்தியில் பார்க்கக் கிளம்பியதாக கடைசியாகப் பார்த்தவர்கள் சொன்னார்கள். பிறகு, விமானமே திருடப்பட்டால் என்ன செய்வது என்ற அச்சத்தால், வீட்டிலேயே ஓய்வு எடுக்கப் போய் விட்டதாக மற்றொரு தரப்பினர் சொன்னார்கள்.

கார் விவகாரம் குறித்து மன்மோகன் சிங்கை பிடித்தோம். “ஷிவ்ராஜ் பட்டீல் மாயமானதற்கோ அமைச்சர்கள் களவு போவதற்கோ நாடே கொள்ளையடிக்கப்பட்டாலோ கூட நான் கவலைப்படுவதில்லை. எங்கள் தானைத் தலைவி சோனியா காந்தி இருக்கிறார். தங்க மகன் சிங்க ராஜா ராகுல் காந்தியை கண்டுபிடித்துக் கொடுத்திருக்கிறார். மக்கள் மத்தியில் அவர்கள் தொலையாத வரைக்கும் பிரச்சினை ஒன்றும் இல்லை” என்றார்.

3. பாஜகவுக்கு மோடியை தலைவராக்கி இருக்க வேண்டும்: விஎச்பி கருத்து: பாரதீய ஜனதா கட்சிக்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைத் தலைவராக்கி இருக்க வேண்டும்; கட்சித் தலைவராக இருக்கும் ராஜ்நாத் சிங்கை விட அவரே சிறந்த தலைவர் என்று விசுவ ஹிந்து பரிஷத் தலைவர் விஷ்ணு ஹரி டால்மியா கருத்து தெரிவித்துள்ளார்.

பாதி பேட்டிதான் வெளியாகியுள்ளது என்று வருத்தப்பட்ட வி.எச்.பி. தலைவர், மீதியையும் எனக்கு மின்னஞ்சல் செய்துள்ளார். அதில் இருந்து அவரின் மற்ற பரிந்துரைகள்.

திமுக தலைவர் – திருநாவுக்கரசர்
அதிமுக – ஜெயேந்திர சரஸ்வதி
பகுஜன் சமாஜ் கட்சி – கல்யாண் சிங்
சமாஜ்வாதி கட்சி – முரளி மனோஹர் ஜோஷி
இந்திரா காங்கிரஸ் (தமிழ்நாடு) – முன்னாள் ஜனாதிபதி ஆர். வெங்கட்ராமன்

4. சிக்குன் குனியா-டெங்குவை பரப்பும் ‘ஏடிஸ்’ கொசுக்கள் மழை- குளிரால் அழியும்: இந்த இரு நோய்களையும் பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் மழை மற்றும் குளிருக்கு தாக்கு பிடிக்காது. லேசான மழை பெய்தால் கூட இந்த கொசுக்கள் இறந்துவிடும்.

முதலில் அகப்பட்டவர் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன். “சிக்குன் குனியா நோயை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. பல்வேறு மாநிலங்களிலும் மத்திய அரசு இதற்காக ரூ.22 கோடியை ஒதுக்கி இருக்கிறது. இந்த சமயத்தில் கொசுக்கள் தானே மரித்து உயிர் நீக்குவது சொல்லொண்ணா வருத்தத்தை தருகிறது. மழை நீர் சேமிப்புத் திட்டத்தின் மூலம் இந்த சதியை அரங்கேற்றியவர் செல்வி ஜெயலலிதாதான். அவர் நிறுவிய அந்த சட்டத்தின் மூலம்தான் இப்பொழுது தமிழகமே வெள்ளக்காடாக மாறி சிக்குன் குனியா கொசுக்களும், லாரி இடித்த கண்ணகியாக மறைந்து போயிருக்கிறது! கூடிய சீக்கிரமே ‘கிணறுகளை வெட்டி வீழ்த்துவோம்’ திட்டம் மூலம் புதுப் பொலிவுடன் மீண்டும் வலம் வரும் கொசுக்களுக்கு, திறப்பு விழா நடத்தப்படும்”

அடுத்து வந்தவர் அமெரிக்காவில் இருந்து அவுட்சோர்ஸிங் ப்ராஜெக்ட் ஒழுங்காக செல்கிறதா என்று அறியவந்த அமெரிக்கர். “நான் கொஞ்ச நாளிலேயே தமிழ் பேசக் கற்றுக் கொண்டு விட்டேன். ‘நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை’ என்பது மூதுரை எழுதிய ஔவையாரின் வாக்கு. மேற்கத்திய நாடுகளில் இருந்த பல இந்தியர்களும் சென்னைக்கு மேலாளர்களாக திரும்புவதாலும், என்னைப் போன்றோரின் வருகையாலும், எங்களின் சுற்றுலா பழக்கத்தினாலும் தமிழ் நாடே செழித்திருக்கிறது. இலக்கியம் கற்ற நாங்கள் அமெரிக்காவிலும் தமிழ் வேள்வி வளர்த்து, வான்சிறப்பாக

துப்பாகிக்குத் தோட்டாய சிப்பாயிக்குத் தந்தாருக்குத்
வேட்டாய போடுஉம் தேர்தல்.

என்று புதுக்குறள் படைக்கப் போகிறோம்” என்று செந்தமிழ் வித்தகர் ஆனார்.

– பாஸ்டன் பாலாஜி


bsubra@gmail.com

Series Navigation

பாஸ்டன் பாலாஜி

பாஸ்டன் பாலாஜி