பசும்பொன் தேவர் ஜாதி தலைவர்; அண்ணாவோ வெறும் குடும்பத் தலைவர்!

This entry is part [part not set] of 35 in the series 20061102_Issue

மலர் மன்னன்


பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சுபாஷ் சந்திர போஸ் தலைமையின் கீழ் அகில பாரத பார்வர்டு ப்ளாக் கட்சியின் முன்னோடும் பிள்ளையாக விளங்கியவர். அந்த வகையில் அவர் ஒரு தேசியத் தலைவராகத் திகழ்ந்தார். தென் கிழக்கு ஆசிய நாடுகள் பலவற்றிலும் பல்வேறு தொழில்களின் நிமித்தம் வசித்து வந்த தமிழர்கள் பலரும் தேசிய ஆவேசத்துடன் சுபாஷின் இந்திய தேசிய ராணுவத்தில் சேருவதற்குக் காரணமாக இருந்தவர், பசுபொன் தேவர். அந்த விதத்தில் கிழக்கு ஆசியத் தலைவர் என்கிற தகுதிக்கு உரியவரானவரும்கூட. ஆனால் காலப் போக்கில் அவரது அந்தஸ்து மறைக்கப்பட்டு, ஒரு ஜாதித் தலைவராக அவரது ஜாதியினர் குரு பூசை என்று அவருடைய பிறந்த நாளைக் கொண்டாடுவதும், ஒரு சம்பிரதாயம் போல அனைத்துக் கட்சித் தலைவர்களும் அவரது சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்துவதுமான நிலைமை இன்று உருவாகிவிட்டிருக்கிறது.

. அவர் மீது தலித்துகளின் விரோதி என்னும் பழியைச் சுமத்தி, இம்மானுவேல் என்கிற கிறிஸ்தவ தலித்தைக் கொலை செய்யத் தூண்டினார் எனக் குற்றம் சாட்டிச் சிறையில் அடைத்தது, அன்றைக்கு காமராஜர் தலைமையில் இருந்த தமிழக அரசு. பசும்பொன் தேவர் தண்டனை பெறுவதற்கு ஏற்ப அரசால் வழக்கு ஜோடிக்கப்பட்டது மட்டுமின்றி, முதுகுளத்தூரில் கலவரத்தை அடக்கும் சாக்கில் பல தேவர்களைக் காவல் துறை நிற்கவைத்துச் சுட்டுக் கொன்ற நிகழ்ச்சியும் நடந்தது. தேவர் சமூகத்தின்மீது மிகக் கொடிய அடக்குமுறையும் செலுத்தப்பட்டது. தேவர்தலித் மக்களிடையே பகைமை தோற்றுவிக்கப்பட்டது!

இம்மானுவேல் கிறிஸ்தவச் சர்ச்சுகளால் தூண்டப்பட்டு ஹிந்து தலித்துகள் கிறிஸ்தவர்களாக மதம் மாறவேண்டிய நிர்ப்பந்தத்தை உருவாக்கும் ஏவுகணையாகச் செயல்பட்டு, பலிகடாவானவர். பிற்காலத்தில் மீனாட்சிபுரம் ஹிந்து தலித்துகள் முகமதியராக மாற வேண்டிய நிர்ப்பந்தம் உருவாக்கப்பட்டதற்கு அது ஒரு முன்னுதாரணம்!

இதன் பின் விளைவாகத்தான் தென் கிழக்கு ஆசியத் தலைவர் என்கிற உயர் தகுதியில் இருந்த பசும்பொன் தேவர் காமராஜர் ஆட்சியால் ஒரு கொலை வழக்குக் குற்றவாளியாகச் சிறைவைக்கப்பட்டு அவமதிக்கப்பட்டார். ஹிந்து தலித்துகளைத் தூண்டிவிட்டு சங்கடத்தில் ஆழ்த்திப் பிறகு அவர்களை ஒட்டு மொத்தமாகக் கிறிஸ்தவர்களாக மாற்றும் சதித் திட்டத்தை முறியடிக்க முற்பட்டதுதான் பசும்பொன் தேவர் செய்த மாபெரும் தவறு!

தேவர்களுக்கும் தலித்துகளுக்கும் இடையிலான ஜாதிக் கலவரமாக அது தடம் புரண்டு வருந்தத் தக்க விளைவுகளை உண்டாக்கிவிட்டது. இந்த அடிப்படை உண்மையை காமராஜர் அரசு சாமர்த்தியமாக மறைத்துவிட்டது. பசும்பொன் தேவர் தேவர்மாரின் ஜாதித் தலைவராகக் குறுக்கப்பட்டார்.

இவ்வளவுக்கும் காமராஜருக்கு முதல் முதலில் விருதுப்பட்டி என்கிற பிற்கால விருதுநகரின் நகராட்சித் தேர்த்தலில் நிற்பதற்கான தகுதியை ஏற்படுத்திக் கொடுத்தவரே பசும்பொன் தேவர்தான்! ஒரு ஆட்டை வாங்கி காமராஜர் பெயரில் அதற்காக நகராட்சிக்கு வரி செலுத்தி அப்படியொரு தகுதியை காமராஜர் பெறச் செய்தார், பசும்பொன் தேவர்.

பிற்காலத்தில் காமராஜர் மாநில முதல்வர் பதவியில் அமரும் அளவுக்கு உயர்ந்துவிட்ட நிலையில் பசுபொன் தேவர் ஒரு சந்தர்ப்பத்தில் இந்த நிகழ்ச்சியை மிகவும் அலட்சியமான தொனியில் பகிரங்கப் படுத்தியதைக் காமராஜரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. பதிலுக்குப் பசும்ப்பொன் தேவரை வீழ்ச்சியடையச் செய்வதற்கான நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார்; இம்மானுவேல் கொலைப்பட்டது அவருக்கு வசதியாகப் போயிற்று!

இந்தச் சம்பவம் எனக்கு நினைவு வரக் காரணம் அண்மையில் அண்ணாவின் பிறந்த தினம் சென்னை நுங்கம்பாக்கம் அவென்யு சாலையில் உள்ள அண்ணாவின் இல்லத்தில் கொண்டாடப்பட்ட நிகழ்ச்சிதான்.

அண்ணா ஈ வே ரா அவர்களின் தலைமையில் திராவிடர் கழகத்தின் தளபதியாகவே இருந்தவர். ஈ வே ரா அவர்களே அண்ணாவை அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் அமரவைத்துத் தாம் அதற்கு முன்னால் நடந்து செல்லும் அளவுக்கு ஒரு காலத்தில் திராவிடர் கழகத்தில் அண்ணாவின் செல்வாக்கு கொடிகட்டிப் பறந்தது. திராவிடர் கழகத்தின் மிகப் பெரும்பாலான உறுப்பினர்கள் அண்ணாவின் தம்பிமார்களாகத்தான் இருந்தார்கள். ஆனால் ஈ வே ரா அவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டபோது அண்ணா கண்ணியமாக விலகிக்கொண்டாரேயன்றி பெரும்பாலான உறுப்பினர்களைத் தம் வயப்படுத்திக் கொண்டு இன்றுள்ள அரசியல்பாணியில் நாங்கள்தான் உண்மையான திராவிடர் கழகம் என்று அறிவிக்க வில்லை! விரும்பியிருந்தால் திராவிடர் கழகத்தின் சொத்துக்களையும் அவரால் ஆக்கிரமித்துக் கொண்டிருக்க முடியும்! இவ்வளவுக்கும் அப்போது அண்ணா நாற்பது வயதேயான முதிர் இளைஞர். சபலம் தட்டுகிற பிராயந்தான்! விரும்பியிருந்தால் அண்ணா திராவிடர் கழகத்தை ஹைஜாக் செய்து அந்த முயற்சியில் வெற்றியும் பெற்றிருக்க முடியும், பிற்காலத்தில் இந்திரா காந்தியும் ஜயலலிதாவும் செய்து வெற்றி பெற்றதுபோல! ஆனால் எம் அண்ணா அந்த முறைகேட்டைச் செய்யக் கூடியவரல்ல, மனதால் அத்தகைய செயலை நினைக்கவும் மாட்டாதவர் எம் அண்ணா!

கழகப் பணிகளிலிருந்து அத்தருணம் மவுனமாக ஒதுங்கிக்கொண்டு காஞ்சிபுரம் சென்றுவிட்டார், அண்ணா. பதறிப்போன திராவிடர் கழக முன்னோடிகள் காஞ்சிபுரம் சென்று அண்ணாவிடம் திராவிடர் கழகத்தை வழி நடத்தும் பொறுப்பினை ஏற்குமாறு வற்புறுதினார்கள். அண்ணா அதற்கு ஒப்பவில்லை. அதற்கு மாற்றாகத்தான் திராவிடர் என்பதற்குப் பதிலாக திராவிட எனத் தெளிவாக வித்தியாசப்படுத்தித் தனிக் கட்சியைத் தொடங்கினார். இந்தத் தொடக்கக் கட்டத்தின் போது அண்ணாவைச் சூழ்ந்து அரணாக நின்ற தம்பிமார் பட்டியலில் கருணாநிதியின் பெயர் இல்லை! 1949 செப்டம்பர் 19 அன்று சென்னை ராபின்சன் பூங்காவில் அண்ணா தம் தம்பிமார் புடைசூழப் புதிய கட்சியைத் தொடங்கிய கட்டத்திலும் அந்தக் குழுவில் கருணாநிதி இல்லை! மதில் மேல் பூனையாக எந்தத் தட்டு கீழே சாய்கிறது என்று பார்த்துக் கொண்டிருந்துவிட்டு அண்ணாவின் பக்கம்தான் அதிக செல்வாக்கு என உறுதியான பின் தி மு க விற்கு வந்து சேர்ந்தார்! அப்போது சட்டக் கல்லூரி மாணவராக இருந்த கே ஏ மதியழகனது நோட்டுப் புத்தகத்தில்தான் தி மு க வின் நிறுவன சட்ட திட்டங்கள் எழுதப்பட்டன!

இந்தப் பின்னணியில்தான் அண்ணாவின் இல்லத்தில் கொண்டாடப்பட்ட அண்ணா பிறந்த நாளை நினைத்துப் பார்க்கிறேன். மனம் கனத்துப் போகிறது!

காலஞ்சென்ற என் குடும்ப நண்பர் எஸ். கருணானந்தம் கருணாநிதியின் மிக நெருங்கிய நண்பர். மயிலாடுதுறையில் ஆர் எம் எஸ் என்கிற ரயில்வே தபால் பட்டுவாடா துறையில் பணியாற்றியவர். ஐம்பதுகளில் முரசொலி பொங்கல் மலர் தயாரிப்பின் போதெல்லாம் இரவெல்லாம் கண் விழித்து அதற்காக உழைத்தவர். செங்கோட்டை பாசஞ்சரில் ஆர் எம் எஸ் வேனில் பணி நிமித்தம் வருவார். சென்னை செல்வதாக இருந்தால் நான் சிதம்பரத்திலிருந்து அந்த வேனில் ஏறிக்கொள்வேன்! கருணானந்தம் சென்னை எழும்பூரில் இறங்கி முரசொலி அலுவலகம் சென்று இரவுப் பணியாற்றுவார், இலவசமாக! நான் என் வழியில் செல்வேன்.

கருணானந்தம் ஈ வே ரா அவர்களிடம் அணுக்கத் தொண்டராக இருந்து பணிசெய்தவர். கருணாநிதியின் கோஷ்டியில் இருந்தபோதிலும் அண்ணாவின் மீது மெய்யான பாசம் வைத்திருந்தவர் கருணானந்தம்! அண்ணா என்றாலே மெழுகாக உருகிப் போவார்.

கருணாநிதி சந்தர்ப்பம் வாய்க்கும்போது தன் தோழர்களை நன்கு கவனித்துக்கொள்ளும் பண்பு உள்ளவர்தான். 1971ல் இரண்டாம் முறை முதல்வரானபோது கருணானந்தத்திற்கு மாநில மக்கள் தொடர்பு மற்றும் தகவல் துறையின் துணை இயக்குனர் பதவியை வழங்கினார். ஆனால் 1975 நெருக்கடி நிலையின்போது கருணானந்தத்திற்குப் பலவாறான நெருக்கடிகள் தரப்பட்டு, அவர் கருணாநிதியைக் கைவிடும் கட்டாயத்திற்கு ஆளானார். அதன் விளைவாகப் பிறகு கருணாநிதியின் நல்லெண்ணத்தை இழந்தார்.

கருணானந்தம் அண்ணாவின் மீது தமக்கு இருந்த அபிமானம் காரணமாக மட்டுமின்றி, அண்ணா மறக்கப்பட்டுவிடலாகாது என்கிற அக்கரையின் காரணமாகவும் பிற்காலத்தில் தன் நண்பர்கள் ஆதரவுடன் அண்ணா பேரவை என்கிற அமைப்பைத் தொடங்கினார். ஆனால் அதற்கு யாரிடமிருந்து முழு முதல் ஆதரவு கிட்டவேண்டுமோ அவரிடமிருந்து அலட்சியம்தான் கிடைத்தது!

அண்ணா காலமாகி தி முக அதிகாரப் பூர்வமாக நடத்திய முதல் இரங்கல் கூட்டத்திலேயே அண்ணாவை வெறும் சின்னமாக்கி, அவரது முக்கியத்துவத்தைக் குறைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தி மு க விற்குச் சிறிதும் சம்பந்தமில்லாத, தி மு கவிற்குத்தான் இனி எதிர் காலம் எனப் புரிந்துகொண்டு அதில் தன்னை இணைத்துக்கொண்ட தினத் தந்தி அதிபர் சி பா ஆதித்தனார்தான் அதற்கு அடிப்போட்டார்.

இனி கருணாநிதிதான் தி முக விற்கு அடுத்த அண்ணா. அவரை நாம் அண்ணா இரண்டு என அழைக்க வேண்டும் என இரங்கல் கூட்டத்தில் அறிவித்தார், ஆதித்தனார். முதலாம் ஜார்ஜ், இரண்டாம் ஜார்ஜ் என்று வரலாற்றுப் புத்தகங்களில் குறிப்பிடுவதுபோல!

ஆதித்தனாரின் பேச்சுக்குக் கட்சியினரிடையே பெரும் எதிர்ப்பு இருந்தது என்றாலும் அது மவுனமாகவே இருந்தது. மதியழகன் மட்டும் மனம் பொறாமல் ஆதித்தனாரின் கருத்திற்கு அக்கூட்டத்திலேயே தாம் பேசும்போது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்தார். தி மு க விற்கு ஒரு அண்ணாதான் இருக்க முடியும், வரலாற்று ஆசிரியர்கள் மன்னர்களை அடையாளப் படுத்துவதைப் போல அண்ணாவை அடையாளப்படுத்தி அவரது முக்கியத்துவத்தைக் குறைத்துவிட முடியாது என்று வெகுண்டெழுந்து பேசினார், எனக்கு மிகவும் வேண்டியவராக விளங்கிய மதியழகன்.

தி முக வின் தொடக்க காலத்தில், அண்ணா ஒருமுறை பதினெட்டு வயது பருவப் பெண் தனக்கு ஏற்ற மணாளனை எதிர்நோக்கிக் காத்திருப்பதுபோல தி மு கழகம் தமிழ் மக்களின் ஆதரவை எதிர்பார்த்துக் காத்திருப்பதாக வர்ணித்தார். எவ்வளவு கவித்துவமான உருவகம்! எத்தனை உள்ளார்ந்த பொருள் மிக்க உவமை! ஆனால் வக்கிர புத்தி உள்ளவர்களுக்கு அது ஆபாசமாகத்தான் தெரியும்.

தி முக வை அண்ணா அவ்வாறு ஒப்பிட்டுப் பேசியபின் தினத்தந்தி நாளிதழ் தி மு கவைத் தனது கருத்துப் படத்தில் சித்திரிக்கும்போதெல்லாம் அண்ணாவுக்கு சேலை கட்டி, கவர்ச்சியான ஒரு பருவப் பெண்ணாகச் சித்திரித்து, அந்தப் பெண் தெருவோடு போகிற ஓர் ஆணை ஆர்வத்துடன் அழைப்பதுபோல் காண்பிக்கும். அத்தகைய தினத் தந்தியின் அதிபரும் ஆசிரியருமான ஆதித்தனார்தான் பிற்காலத்தில் காற்று வீசும் திசை அறிந்து தி மு க வில் இணைந்து கருணாநிதியின் அமைச்சரவையிலும் இடம்பெற்றார். ஆதித்தனார் அண்ணாவின் அமைச்சரவையிலேயே இடம்பெற விரும்பியவர்தான். ஆனால் அண்ணா அவரை சபாநாயகர் நாற்காலியோடு நிறுத்திவைத்தார்.

அண்ணாவின் முக்கியத்துவத்தைக் குறைக்கும் முயற்சி இவ்வாறாக அண்ணா மறைந்தவுடனேயே தொடங்கிவிட்டது. வாஸ்தவத்தில் தி மு க என்ற கட்சியின் தலைவராக இருந்து, தமிழகத் தலைவராக மலர்ந்து, தேசியத் தலைவராக உயர்ந்தவரேயாவார், அண்ணா. மேலும் தமது மனிதாபிமானப் பண்பினால் சர்வ தேசத் தலைவராகவே விளங்கும் தகுதியினை அவர் பெற்றிருந்தார்.

அண்ணா மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற போது, அவரது உடல் நலிவு குறித்து மிகவும் கவலைப்பட்ட பிரதமர் இந்திரா காந்தி, அண்ணா பாரதத்தின் மிகச் சிறந்த தேசியத் தலைவர்களில் ஒருவர் என உளமார்ந்த உணர்வுடன் தெரிவித்தார்.

அண்ணா முதல்வராக இருக்கையில் அமெரிக்கக் கப்பல் பாரதத்திற்கான பரிசாக கோதுமை மூட்டைகளை நிரப்பிக்கொண்டு சென்னைத் துறைமுகம் வந்தது. அதனை ஒரு சம்பிரதாயமாக முதல்வர் அண்ணா பெற்றுக்கொள்ள வேண்டும் என அமெரிக்க தூதரகம் விரும்பியது. சென்னையில்அப்போது அதன் கான்சல் ஜெனரலாக இருந்த பிராங்க்ளின் அண்ணாவிடம் அமெரிக்க தூதரகத்தின் விண்ணப்பத்தைத் தெரிவித்தார். அண்ணாவும் உடனே அதற்குச் சம்மதம் தெரிவித்தார். சென்னைத் துறைமுகத்தில் அமெரிக்க தூதரக அதிகாரிகள் புடைசூழ நன்கொடையாக வந்த கோதுமையை ஏற்கையில் எம் அண்ணா மிகவும் அருமையானதோர் உரையாற்றினார். உண்மையான கிறிஸ்தவம் எது என்பதன் விளக்கமாக அந்த உரை அமைந்தது. அதனைக் கேட்டு மெய் சிலிர்த்துப்போன பிராங்க்ளின், அண்ணா உலகத் தலைவர்களில் ஒருவராக இருக்கத்தக்கவர் என்றார்.

பிராங்க்ளின் சுயஆர்வம் காரணமாகத் தமிழ் இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தவர். அன்றைக்கு இருந்த தமிழ்ப் படைப்பாளிகளுடன் நெருங்கிய தொடர்புகொண்டிருந்தவர். அந்த அடிப்படையில் என்னோடும் நட்பு பாராட்டியவர். பிற்காலத்தில் நான் நடத்திய கால் இதழுக்கு அமெரிக்காவிலிருந்தே சந்தா செலுத்தியவர்! ஏன் இதழை நிறுத்தினாய் என்று பிறகு கோபத்துடன் கடிதமும் எழுதியவர்! அவர் சொன்னார் அன்று, அண்ணா சர்வ தேசத் தலைவருக்கான தகுதி படைத்தவர், அவரைத் தமிழ் நாட்டின் முதலமைச்சராக மட்டுமே அடையாளப் படுத்த வேண்டிய நிலை உள்ளது என்று!

பின்னர் அண்ணா யேல் பல்கலைக் கழகத்தின் அழைப்பை ஏற்று அங்கு பேராசிரியர்கள், மாணவர்கள் முதலானோரோடு கலந்துரையாடியபோதும் அவ்வாறாக அவர்கள் உணரச் செய்தார்.

அண்ணாவே மிகுந்த அடக்கத்தோடு ஆனால் தமது தகுதியை ஒருமுறை மிகத் தெளிவாக வெளிப்படுத்தினார். அன்றைய பாரதப் பிரதமரும் உலகத் தலைவர்களுள் ஒருவர் என மதிக்கப் பட்டவருமான நேருஜியுடன் தம்மை ஒப்பிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டபோது, அவர் கட்டி முடிக்கப்பட்ட மாளிகை; நானோ கொட்டிக் கிடக்கும் செங்கல் என்றார் எம் அண்ணா. எத்தனை உட்பொருள் பொதிந்த ஒப்புவமை! கட்டி முடிக்கப்பட்ட மாளிகைக்கு மேலும் உயர்ந்தோங்க வாய்ப்பில்லை. ஆனால் கொட்டிக் கிடக்கும் செங்கல்லுக்கோ அதற்கான வாய்ப்பு மிகுதியும் உண்டு!

அண்ணா மேலும் சில ஆண்டுகள் நம்மிடையே இருந்திருப்பின் நிச்சயமாக அதனை நிரூபணம் செய்திருப்பார். தாம் கட்சி அரசியலை மட்டுமின்றி ஒரு தேசத்தின் எல்லைகளையும் கடந்து, வானுயர வளரும் உலகத் தலைவர் என்பதை அனவரும் ஒப்புக் கொள்ளச் செய்திருப்பார். அத்தகைய அண்ணாவின் பிறந்த நாள்தான் அண்ணா இல்லத்தில் அண்ணா பேரவையின் சார்பில், அண்ணாவின் வளர்ப்பு மகன் டாக்டர் பரிமளம் முன்னின்று நடத்துகின்ற குடும்ப நிகழ்ச்சியாகக் குறைவுற்றுப் போனது!

தி மு க கொண்டாடும் அண்ணா பிறந்த நாளோ அது நடத்தும் முப்பெரும் விழாவினுள் கரைந்து தனது தனித் தன்மையை இழந்து போனது!

பசும்பொன் தேவரை ஒரு ஜாதித் தலைவராகக் குன்றச் செய்த சதியுடன் இதனை ஒப்பிடத் தோன்றுகிறது, எனக்கு.

தி மு க வின் முப்பெரும் விழா அண்ணாவின் முக்கியத்துவத்தைக் குறைப்பதற்கான சதித் திட்டம் என வெளிப்படையாகவே பேசிவிட்டார், அண்ணாவின் இல்லத்தில் நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் நிகச்சியில் உரையாற்றிய தஞ்சை வழக்கறிஞர் ராமலிங்கம்! கசப்பான உண்மையைப் பேசியதால் சிலரின் கண்டனத்திற்கும் ஆளானர்! நியாயப்படி ராமலிங்கத்தின் கருத்திற்கு மாற்றுக் கருத்து இருக்குமானால் அதனை ராமலிங்கம் பேசியான பிறகுதான் வெளியிட்டிருக்க வேண்டும்; ஆனால் இன்றைய தி முக வழமைப்படி சிலரால் ராமலிங்கம் தனது கருத்தைப் பேசுவதற்கு இயலாதவாறு இடையூறு செய்யப்பட்டிருக்கிறார். இவ்வளவுக்கும் ராமலிங்கமும் தி மு க வில்தான் இருக்கிறார். அவரது தவறு அண்ணாவின் அபிமானியாக இருப்பதுடன் ஓர் உண்மையைத் தயக்கமின்றி வெளிப்படையாகப் பேசிவிட்டதுதான்!

கூட்டத்தில் அண்ணாவின் உண்மையான அபிமானியும் சிறந்த ஜனநாயகவாதியுமான இரா. செழியனும் பங்கேற்றிருக்கிறார். இவ்வாறு ஜனநாயகப் பண்பு இருப்பதாலேயே இன்றைய அரசியலுக்குப் பொருந்தாதவராக உள்ள செழியன், கூட்டத்தில் ராமலிங்கம் தன் கருத்தை வெளியிட இயலாதவாறு தடங்கல் செய்யப்பட்ட அநாகரிகத்தைச் சகித்துக்கொள்ள முடியாமல் கூட்டத்திலிருந்து வெளியேறிவிட்டார். ஆனால் ராமலிங்கம் தெரிவித்த கருத்தை ஒப்புக்கொள்ளாததால்தான் செழியன் கூட்டத்திலிருந்து வெளியேறியதுபோல் கற்பிக்கப் படுகிறது! பொறுமையும் சகிப்புத்தன்மையும் மிகுந்த அண்ணா மாற்றுக் கருத்திற்கு என்றும் மதிப்பளித்தவர். தம்மை மிகவும் இழிவாகப் பேசியவர்களைக் கூட அவர்கள் மேலும் பேசப் புன்முறுவலுடன் அனுமதித்தவர். அதன் காரணமாகவே மக்களின் பேரன்பிற்குப் பாத்திரமானவர். இன்றைய தி மு க வினர் தி முக வின் நிறுவனரான அண்ணாவிடமிருந்து வெகு தொலைவிற்குச் சென்றுவிட்டார்கள் என்பதையே அண்ணா இல்லத்தில் நடந்த அண்ணா பிறந்த நாள் நிகழ்ச்சியின் போது தஞ்சை வழக்கறிஞர் ராமலிங்கம் மனம் வெதும்பிப் பேசியதால் எதிர்கொள்ள நேர்ந்த இடைமறிப்பு எனக்கு உணர்த்துகிறது.

++++


malarmannan79@rediffmail.com

Series Navigation

மலர் மன்னன்

மலர் மன்னன்