நாலந்தாவின் மரணம் : வரலாற்றின் கண்ணீர்த்துளிகளிலிருந்து..

This entry is part [part not set] of 34 in the series 20061026_Issue

ஜடாயு


“அல்லாஹோ அக்பர்” என்று கத்திக் கொண்டே வந்த சம்சுத்தீன் என்ற அந்தப் படைவீரனின் கூரிய வாள் பிரதம ஆச்சாரியர் சீலபத்திரரின் நெஞ்சில் இறங்கியது. தன்னைச் சுற்றியிருந்த ஸ்தூபங்களின்
உச்சிகள் எல்லாம் ஒளிமழுங்கிப் பேரிருள் சூழ்வது போலத் தோன்றியது. தான் தவழ்ந்து, விளையாடிக் கற்று வளர்ந்த அறிவுத் திருக் கோயில் அரக்கர்களால் சூறையாடப் பட்டுக் கொண்டிருந்ததைக் காணச் சகியாமல் அவர் கண்கள் மூடின. கண்கள் மூடியிருந்தாலும் சுற்றியுள்ள சைத்யங்களிலும், ஆலயங்களிலும் உள்ள சிற்பங்கள் ஒரு கணம் தன்னையே உற்றுப் பார்ப்பதாக அவருக்குப் பட்டது – கச்சப ஜாதகத்தில் வரும் போதிசத்வர், பத்மபாணி, மகர தோரணம், மயில் மீதமர்ந்த கார்த்திகேயன், கின்னரர்கள், அப்சராக்கள், பரிநிர்வாண புத்தர், குபேரன், கஜலஷ்மி, நாக கன்னிகைகள், அவலோகிதேஸ்வரர்.

உடல் முழுவதும் செயலிழந்தது.. சுவாசம் தடுமாறியது.. கண நேரம் ஆயிரமாயிரம் எண்ணங்கள் அவர் நெஞ்சில் அலைபாய்ந்தன.

யார் இந்தப் பாதகர்கள்? காந்தாரத்துக்கு அப்பால் ஏதோ ஒரு பாஷை பேசித் திரியும் மிருக வெறி படைத்த கொலைகாரக்கூட்டங்கள் இந்தப் பக்கமாக வந்து கொண்டிருப்பதாகக் கேள்விப்பட்டோமே, அவர்கள் தானா இது? சில ஆயிரம் மாணவர்களும், பிட்சுக்களுமே உள்ள இந்த விஹாரத்துக்குள் வந்து ஏன் இப்படி எல்லாரையும் கொன்று குவித்துக் கொண்டிருக்கிறார்கள்? ஓ தர்ம தேவதையே, நாங்கள் என்ன பாவம் செய்தோம்?

வேத மந்திரங்களின் ஒத்திசையையும், உபநிஷத தத்துவ விவாதங்களையும் உள்வாங்கி வளர்ந்த தெய்வ நதி பாயும் கங்காவர்த்தமே! வர்த்தமான மகாவீரர் பதினான்கு மழைக்காலங்கள் தங்கி அருள்புரிந்த தவபூமியே! புத்த பகவானும், சாரிபுத்ரரும் புனிதத் திருப்பாதம் பதித்ததனால் இன்னும் புனிதமானாய் நீ! அசோக சக்ரவர்த்தி நட்ட மரங்களின் நிழலில் இங்கே அமர்ந்து படிக்கும் பாக்கியம் பெற்றதை ஏழு பிறவிகளிலும் மறப்பேனா? இளம் பிரம்மசாரியாக இங்கே வந்து மகாயானத்தின் மகா குருவாக உயர்ந்த நாகார்ஜுனர் ஸ்தாபித்த சைத்யங்கள், விஹாரங்கள், அதற்குப் போட்டியாக வைதீகர் சுவிஷ்ணு உருவாக்கிய தேவாலயங்கள்.. இவற்றின் படிகளில் அமர்ந்த அந்த தெய்வீகத் தருணங்கள்! ஐயோ, அர்த்த சாஸ்திர மேதை, என் உயிர் நண்பன் உபகுப்தன் எப்படியிருக்கிறான்? அவனையும் இந்த அரக்கர்கள் கொன்று விட்டார்களா?

மாத்யமிக மரபின் ஆரியதேவரும், யோகாசார்ய மரபின் வசுபந்துவும், அசங்கரும் அமர்ந்த குருபீடங்கள்! சக்கரவர்த்திகளான சமுத்ரகுப்தனும், குமார குப்தனும் எத்தனை முறை இங்கே வந்து ஆசாரியர்களின் பாதம் பணிந்திருக்கிறார்கள் ! மகாராஜா சக்ராதித்தன் கட்டித் தந்த மாணவர் விடுதி, எத்தனை வாத விவாதங்கள், ஞானத் தேடல்கள் அங்கே நடந்திருக்கின்றன! தர்க்கம், வியாகரணம், ஆயுர்வேதம், ஜ்யோதிஷம்.. எத்தனை அறிவுத் துறைகள் இந்த விஹாரத்தில் முளைத்துச் செழித்து வளர்ந்தன! இலங்கையிலிருந்தும், சீனத்திலிருந்தும், காந்தாரத்திலிருந்தும், கலிங்கத்திலிருந்தும், வங்கத்திலிருந்தும், காம்போஜத்திலிருந்தும் எத்தனை ஆயிரம் மாணவர்கள் ! போன வாரம் கூட த்ராவிட தேசத்தின் காஞ்சி நகரிலிருந்து 100 வித்யார்த்திகள் வந்தார்களே.. ஐயோ, அவர்களுக்கு என்ன ஆயிற்றோ? கன்னௌஜத்தில் சக்ரவர்த்தி ஹர்ஷவர்த்தனரின் பட்டாபிஷேகத்தில் இங்கேயிருந்து ஆயிரம் பிட்சுக்கள் போய்வந்ததைப் பற்றிய கதைகள் இன்றும் ஆர்வத்துடன் கேட்கப் பட்டு வருகின்றனவே..பிராமணர்களும், சிரமணர்களும் ஒன்று கூடி ஹர்ஷனை வாழ்த்திய அந்தக் கதைகள்! இதைப் பற்றியே ஒரு அழகிய காவியம் எழுதவேண்டும் என்று கவி பிரம்மதத்தன் சொல்லி வந்தானே? ஐயோ, அவனுக்கும் அவனது சீடர்களான அற்புதக் கவிஞர்களுக்கும் என்னவாயிற்றோ? உபவீதி, விக்ரமசிலா, ஓடந்தபுரி இந்த விஹாரங்களில் இருந்தெல்லாம் அடுத்தவாரம் மாணவர்கள் வருவார்களே, ஐயோ அவர்களை யார் வரவேற்பார்கள்?

அதிகாலை முதல் அர்த்தராத்திரி வரை விவாதங்களின் மெல்லோசைகள் ஓயாத ஞான நதியே! மஹிபால மன்னனின் காலத்தில் தீப்பிடித்து விஹாரத்தின் சில பகுதிகள் அழிந்த போது, உடனடியாகப் புதுப்பிக்கப் பட்ட விஹாரங்களின் பொலிவு தான் என்ன, “வெந்தணலால் வேகாது” என்பது மெய்யாயிற்றல்லவா? அந்த சீன யாத்திரீகன் யுவான் சுவாங், அவனுக்குக் கூட இங்கே மோக்ஷதேவன் என்று தீட்சைப் பெயர் அளிக்கப் பட்டதே, அந்த மகா மேதாவியான சீனனுக்கே குருவாய் விளங்கிய சீலபத்திரரின் பெயரை அல்லவா எனக்கு வைத்தார்கள்! தர்க்க சாஸ்திரத்தின் தந்தை திக்நாகர், பௌத்தப் பேரறிஞர்கள் தர்மபாலர், தர்மகீர்த்தி, பத்மசம்பவர், சந்தரக்ஷிதர் – எத்தனை எத்தனை மேதைகள் உன் மடியில் தவழ்ந்தனர்! ரத்னௌததி என்று உன் நூலகத்திற்குப் பெயர் வைத்தது சாலப் பொருத்தம் தான்.. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஞானக் கடலில் மூழ்கி எம் முன்னோர் அள்ளிய முத்துக்களும் மணிகளும் அல்லவா அங்கே ஓலைச் சுவடிகளாய் இருக்கின்றன? ஐயோ, அந்தச் சுவடிகள், என் ரத்தினங்கள்.. இந்தக் கிராதகர்கள் அவை அனைத்தையும் கொளுத்தி விடுவார்களோ? ஐயோ, அவற்றுக்கு என்னவாகியிருக்கும்? என்னவாகி….”

அடுத்த கணம் அவர் மூச்சு அடங்கியது, உயிர் உடலை விட்டுப் பிரிந்தது. ஹேஹேஹே என்று சம்சுதீன் சிரித்த கோரச் சிரிப்பில் இந்த ஓசையற்ற ஒலிகள் உயிரிழந்தன. இந்த மொட்டைத் தலைக் காஃபிர்களை நொடிப் பொழுதில் கொன்று குவித்த தன் படைகளின் வீரத்தையும், தன் தளபதியின் யுத்த சாமர்த்தியத்தையும் எண்ணி வியந்தான் அவன். தனக்குத் தெரிந்த உமர் மின்ஹாஜுத்தீன் உஸ்மான் இப்னு சிராஜுத்தீன் அல் ஜுஜானி என்கிற புகழ் பெற்ற வரலாற்றாசிரியர் ரொம்பப் பெரிசாக இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு இந்த வீரப் பிரதாபங்கள் பற்றி தபகத்-ஏ-நாசிரி என்ற புத்தகத்தில் இப்படி எழுதுவார் என்பது தெரிந்திருந்தது போலும்!

“முகமது பக்தியார் (Bakhtiyar) என்கிற இந்த கில்ஜி, கோர் பிராந்தியத்தின் கர்ம்சிர் பகுதியைச் சார்ந்தவன். இவன் மிகுந்த சாமர்த்தியம் கொண்டவன், முயற்சி மிக்கவன், தைரியமும், துணிவும், அறிவும் அனுபவமும் வாய்ந்த மனிதன்….. கொஞ்ச காலம் கழித்து மாலிக் ஹிசாமுத்தீன் உக்லபாக்கின் பணியில் அவத் (அயோத்தி) சென்றான். அவனிடத்தில் நல்ல குதிரைகளும், படைகளும் இருந்தன. பல இடங்களில் தன் வீரத்தைக் காண்பித்ததனால் ஜாகீரில் ஸஹ்லத்தும் ஸாஹ்லியும் பெற்றான். துணிவும் முயற்சியும் வாய்ந்த மனிதனாகையால் முனி (மோங்கீர்), பீகார் முதலிய பிராந்தியங்களில் படையெடுத்துச் சென்று நிரம்ப கொள்ளைப் பொருள்களைக் கொண்டு வந்தான். இதே ரீதியில் நிறைய குதிரைகள், படைகளைச் சேர்த்தான். அவனது வீரத்தாக்குதல்கள் மற்றும் கொள்ளைகள் பற்றிய புகழ் எல்லா இடங்களிலும் பரவியது. ஹிந்துஸ்தானத்தில் இருந்த கில்ஜிகளின் குழுக்களும் அவனோடு இணைந்தன. இதெல்லாம் சுல்தான் குத்புதீன் ஐபெக் காதுக்கு எட்டின. சுல்தான் அவனுக்கு உயர்ந்த ஆடை அணிகலன்களை அனுப்பித் தன் மரியாதையைத் தெரிவித்தார். இப்படி ஊக்குவிக்கப்பட்ட அவன், தன் படைகளுடன் பீகாருக்குச் சென்று அதனை அழித்து ஒழித்தான். இப்படியே இரண்டு மூன்று வருடங்கள் அக்கம்பக்கங்களைக் கொள்ளையடித்து வந்த அவன், அந்த நாட்டின் மீது படையெடுக்கத் தயாரானான்.

நம்பத்தகுந்தவர்களின் கூற்றுப்படி பீகார் கோட்டையின் வாயிலுக்கு வெறும் 200 குதிரைகளுடன் போய், எதிரிகள் அறியாத வண்ணம் சென்று அவன் போரைத் தொடங்கினான். பக்தியாரின் பணியில் பெரும் அறிவுபெற்ற இரண்டு சகோதரர்கள் இருந்தார்கள். ஒருவன் நிஜாமுத்தீன், இன்னொருவன் சம்சுத்தீன். இந்த நூலின் ஆசிரியன் லக்னௌடி என்ற இடத்தில் ஹிஜ்ரி ஆண்டு 641 (கி.பி. 1243) சம்சுத்தீனைச் சந்தித்த போது பின்வரும் சம்பவத்தைக் கேட்க நேர்ந்தது. அந்தக் கோட்டையின் வாயிலருகே பக்தியார் சென்று மிக்க சக்தியுடனும் சாமர்த்தியத்துடனும் போரைத் தொடங்கி உடனே அந்த இடத்தைக் கையகப் படுத்திவிட்டான். இந்த இரண்டு அறிவார்ந்த சகோதரர்களும் அந்தப் போரில் பெரும் சாகசம் புரிந்தனர். வெற்றி பெற்றவர்களுக்குப் பெரும் கொள்ளைகள் காத்திருந்தன. அந்த இடத்தில் இருந்த பெரும்பாலானாவர்கள் தலையை முழுக்க மொட்டையடித்த பிராமணர்கள் (பிட்சுக்கள்). அவர்கள் உடனடியாகக் கொல்லப் பட்டார்கள். பெரும் எண்ணிக்கையில் அங்கே புத்தகங்கள் இருந்தன. அவைகளைப் பார்த்த முகமதியர்கள் அவற்றில் என்ன இருக்கிறது என்று சில ஆட்களைக் கேட்க விரும்பினார்கள். ஆனால் எல்லாருமே கொல்லப்பட்டு விட்டார்கள். அந்தக் கோட்டை மற்றும் நகரம் முழுவதும் ஒரு கல்வி கற்கும் இடம் (மதரஸா) என்று தெரியவந்தது. ஹிந்தி மொழியில் பிகார் (விஹார்) என்பதற்கு கல்வி கற்கும் இடம் என்று பொருள்.”

இங்கிலாந்தில் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் முகப்பில் இருக்கும் புல்வெளிகளைப் (Cambridge lawns) பற்றியே ஒரு உருவகமாக மிக சிறப்பாகப் பேசுவார்கள். நானூறு ஆண்டுகளாக நீரூற்றி வளர்க்கப்பட்ட இந்தப் புல்வெளிகள் நியூட்டன் முதலான மாமேதைகள் பாதம் பதித்தவை. பரத கண்டத்தில் தோன்றி வளர்ந்து செழித்த உலகத்தின் முதன் முதல் பல்கலைக் கழகத்தின் இடிபாடுகளின் பெருமை, இந்தப் புல்வெளிகளையும் நாணித் தலைகுனியவைப்பது. அந்த இடிபாடுகளில் காதை வைத்துக் கேளுங்கள், சீலபத்திரரின் மரண ஓலம் இன்னும் அங்கே ஒலித்துக் கொண்டிருக்கிறது.

நாலந்தா மிகச் சிறிய கிராமம் தான். அரசு தொல்பொருள் துறை ஒரு சின்ன அருங்காட்சியகத்தை அங்கே நடத்தி வருகிறது. அங்கே போக வேண்டுமானால் பக்கத்தில் உள்ள பெரிய ஊரான பக்தியார்புர் (Bakhtiyarpur) என்ற ரயில் நிலையத்தில் இறங்க வேண்டும். இந்தியாவுக்கே கலாசாரத்தைக் கொண்டுவந்த முகமதியர்களின் பெருவீரர்களில் ஒருவன், இஸ்லாமிய வரலாற்று ஆசிரியர்களால் எப்படியெல்லாம் புகழப்பட்டவன், அவன் பெயரில் உள்ள ஊர் அல்லவா இது? இந்த ஊரில் அவனுக்கு பிரம்மாண்ட கல்லறை கூட இருக்கலாம். தில்லி வழியாக நீங்கள் போனால், அங்கே இருக்கும் குதுப் மினார் என்ற நெட்டுக்குத்தாக நிற்கும் ஒரு கோபுரத்தைப் பார்க்கலாம். இது யாருடைய நினைவாக நிற்கிறதோ அந்த சுல்தான் குத்புதீன் ஐபெக், முகமது பக்தியார் கில்ஜி போன்ற மாவீர தளபதியை உரிய முறையில் கௌரவித்த மாமன்னன். அவன் இந்தியக் கலாசாரத்திற்குச் செய்த சேவை கொஞ்சமா நஞ்சமா? இந்தியாவின் பன்முகக் கலாசாரத்திற்கு எப்பேற்பட்ட எடுத்துக்காட்டு இந்த மாவீரர்கள்!

வில் டுரான்ட் தனது “நாகரீகங்களின் வரலாறு” என்ற நூலில் கூறுகிறார் “இந்தியாவை இஸ்லாமியர்கள் கைப்பற்றியது தான் உலக சரித்திரத்திலேயே அதிக அளவு ரத்தக்கறை படிந்த கதையாக இருக்கும். அது எவரையும் நிலைகுலையச் செய்யும் கதை. அதிலிருந்து தெளிவாகப் புரியும் பாடம் என்னவென்றால், கலாசாரம் என்பது ஒரு பெருமதிப்புள்ள பொருள். அதன் சிக்கலான, நுட்பமான ஒழுங்கும், சுதந்திரமும் வெளியிலிருந்து ஆக்கிரமிப்பவர்கள் மற்றும் அவர்கள் மூலம் உள்ளிருந்தே பல்கிப்பெருகுபவர்கள் என்ற இருவகைக் காட்டுமிராண்டிகளாலும் எந்நேரமும் தகர்த்தெறியப் படும் அபாயம் இருக்கிறது”.
“…the Islamic conquest of India is probably the bloodiest story in history. It is a discouraging tale, for its evident moral is that civilization is a precious good, whose delicate complex order and freedom can at any moment be overthrown by barbarians invading from without and multiplying from within “ – Will Durant in “History of Civilization”
ஜார்ஜ் சாந்தாயனா சொன்னது இன்னும் முக்கியமானது “கடந்த காலத்தின் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளாதவர்கள் அவற்றையே மறுமுறை செய்யும் நிலைக்குத் தள்ளப் படுகிறார்கள்”.


jataayu_b@yahoo.com
http://jataayu.blogspot.com
பின்குறிப்பு:
இதில் வரும் எல்லா சம்பவங்களும் வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையில் எழுதப் பட்டவையே.
1) Tabakat-i Nasiri of Abu ‘Umar Minhaju-d din, ‘Usman ibn Siraju-d din al Juzjani : http://www.infinityfoundation.com/ECITTabakatiNasiri2frame.htm
2) Temples and Legends of Nalanda by PC Roy Chaudhuri
http://www.hindubooks.org/temples/bihar/nalanda/index.htm
3) பௌத்தத்தின் அழிவு குறித்து டாக்டர் அம்பேத்கர் (நன்றி: திரு. அரவிந்தன் நீலகண்டன் 19-அக்டோபர் திண்ணை இதழில் எழுதிய கட்டுரை)
“முஸ்லீம் படையெடுப்பாளர்களால் அழிக்கப்பட்ட பௌத்த கலாசாலைகளில் ஒருசிலவற்றின் பெயர்களையாவது கூற வேண்டுமானால் நாலந்தா, விக்கிரமசீலா, ஜகத்தாலா, ஓடந்தபுரி ஆகிய இடங்களில் இருந்து முஸ்லீம் படையெடுப்பாளர்களால் அழிக்கப்பட்டவற்றைக் கூறலாம். முஸ்லீம் படையெடுப்பாளர்கள் நாடெங்கும் இருந்த பௌத்த மடாலயங்களையெல்லாம் அழித்தார்கள். பௌத்த துறவிகள் இந்தியாவிற்கு வெளியே நேபாளம், திபெத் என தப்பி ஓடினார்கள். மிக அதிக அளவில் பௌத்த துறவிகள் முஸ்லீம் தளபதிகளின் நேரடி ஆணைகளின் படி கொல்லப்பட்டார்கள்.”
” பௌத்த துறவிகள் மீது இஸ்லாமிய படையெடுப்பாளர்களால் ஏவப்பட்ட வன்கொலைகள் மிகக்கொடுமையானது. கோடாலியின் வெட்டு (பௌத்தம் எனும் மரத்தின்) அடிவேரிலேயே விழுந்தது. பௌத்த துறவிகளைக் கொன்றதன் மூலம் இஸ்லாம் பௌத்தத்தைக் கொன்றது. இதுவே பௌத்த சமயத்தின் மீது இந்தியாவில் ஏற்பட்ட மிகக் கொடுமையான அடியாகும்.”


Series Navigation

ஜடாயு

ஜடாயு