வட கொரியாவின் அணு ஆயுத சோதனை

This entry is part [part not set] of 43 in the series 20061019_Issue

த.வி. ராகவ ராஜ்


வடகொரியா அணு ஆயுத சோதனை செய்திருப்பதை யாரெல்லாம் கண்டனம் செய்வார்கள், எதிர்ப்பார்கள் என்று எதிர்ப்பார்த்தோமோ அப்படியே நிகழ்ந்திருக்கிறது. அமெரிக்காவும் ஜப்பானும் ஐ.நா.வில் தங்களுக்குள்ள வல்லமையைப் பயன்படுத்தி ஒரு தடையையும் வடகொரியாவின் மீது விதித்துவிட்டது. இத்துடன் கூடுதலாக வடகொரியாவின் எதிரி நாடாக்கப்பட்டுவிட்ட தென்கொரியாவைச் சேர்ந்த பான் கி மூன் ஐநா அவையின் அடுத்த பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் வடகொரியாவின் அணு ஆயுதச் சோதனையையும் அதை எதிர்ப்பவர்களின் நிலையையும் பரிசீலனை செய்வோம்.

இடையில் ஒரு சிறிய விஷயத்தைப் பார்த்துவிடுவோம். அது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா)-ன் விசித்திரமான நிலைப்பாடு. வட கொரியாவின் அணு ஆயுத சோதனை கெடுவாய்ப்பானது என்றும் ஆனால் அதற்காகக் குற்றஞ்சாட்டப்பட வேண்டியது ஐக்கிய அமெரிக்க நாடுகள் தான் என்றும் கூறியிருக்கிறது அக்கட்சி. வட கொரியாவின் அணு ஆயுத சோதனை கெடுவாய்ப்பானது எனில் ஐக்கிய அமெரிக்காவை குற்றம் சாட்ட வேண்டியதில்லை; அமெரிக்கா குற்றம் சாட்டப்படவேண்டியது எனில் வட கொரியாவின் அணு ஆயுதச் சோதனை கெடுவாய்ப்பானதாக இருக்க முடியாது. உலகில் போர்களே கூடாது; போர்களுக்கான அடிப்படைக் காரணங்கள் களையப்பட வேண்டும் என்பது தான் நமது நிலைப்பாடு. அதன் முதற்படியாக, படுநாசகரமான அணு ஆயுதங்கள் கூடாது என நாம் சொல்கிறோம். இதன் பொருள் சிறிய அல்லது பெரிய என எந்த நாடுகளும் அணு ஆயுதங்கள் வைத்திருக்கக்கூடாது என்பது தான். ஆனால் சில நாடுகள், கடந்த காலங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பிற நாடுகளை, சமூகங்களை ஆதிக்கம் செய்த, லட்சக்கணக்கான உயிர்களைக் கொன்று குவித்த இகழார்ந்த வரலாறு கொண்டவை. அந்நாடுகள் மிக அதிகமான அளவில் அணு ஆயுதங்களைக் குவித்து வைத்திருக்கும் போது, உலகின் எந்த நாட்டின் மீதும் அணு ஆயுதங்களை வீசுவதற்காக 10000 கி.மீ தொலைவுக்கும் அப்பால் எடுத்துச் செல்லக்கூடிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் ஏராளமாக வைத்திருக்கின்ற நிலையில் அவற்றை இல்லாமல் செய்வது எப்படி என்பது தான் வினா.

அணு ஆயுதங்களின் வகைகள் எண்ணிக்கை மற்றும் வேறு சில விஷயங்களையும் நாம் கேள்விப்பட்டவற்றையும் நினைவுகூர்ந்துவிட்டு மேலே தொடர்வோம். அமெரிக்கா, ருஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய வல்லரசுகளிடம் உள்ள மொத்த அணு ஆயுதங்கள், இவ்வுலகில் நிலத்திலும் கடலிலும் காற்றிலும் உள்ள நுண்ணுயிர்கள் உட்பட அனைத்தையும் முப்பது முறை முற்றாக அழிப்பதற்குப் போதுமானது என கடந்த எண்பதுகளில் கேள்விப்பட்டிருக்கிறோம். இந்த அணு ஆயுதங்கள் மூன்று வகைப்படும். அணு குண்டுகள், ஹைட்ரஜன் குண்டுகள், நியூட்ரான் குண்டுகள் ஆகியன அவை. உயிரினங்களை மட்டும் கொன்று பொருள்களுக்கு எந்த சேதமும் விளைவிக்காதவை நியூட்ரான் குண்டுகள் என்றும், தான் அவற்றைத் தயாரித்து வைத்திருப்பதாகவும் இருபதாண்டுகளுக்கு முன்னரே அமெரிக்கா அறிவித்திருக்கிறது. இத்தகைய அணு ஆயுதங்களை, ஒரே நேரத்தில் பத்துக்கும் மேற்பட்ட குண்டுகளை ஏந்திக் கொண்டு 10000 கி.மீ தொலைவுக்கும் அதிகமாகச் சென்று நினைத்த இடங்களில் ஒவ்வொன்றாக அவற்றைப் போடுகின்ற திறன் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகனைகளும் அமெரிக்காவிடம் நூற்றுக் கணக்கில் இருக்கின்றன.

இத்தகைய படுநாசகரமான அணு ஆயுதங்களை இவ்வளவு அதிக அளவில் குவித்து வைத்திருக்கின்ற அமெரிக்கா போன்ற நாடுகளின் மனப்பாங்கு என்னவாக இருக்கிறது? கடந்த நூற்றாண்டின் எண்பதுகளில் அமெரிக்காவின் ராணுவக் கூட்டணியான நேட்டோ நாடுகள் வரம்புக்குட்பட்ட போர் நடத்தலாம் என்று அடுத்த உலகப் போரை நடத்துகின்ற வழிமுறை பற்றி யோசனை தெரிவித்தனர். அணு ஆயுதங்களின் எண்ணிக்கை, நடைபெறும் நாட்கள் போன்றவை வரம்புக்குட்பட்டதாக(ம்?) இருப்பினும் அதனால் மனித குலத்துக்கு ஏற்படக்கூடிய இழப்புகளும் துன்ப துயரங்களும் வரம்புக்குட்பட்டதாக இருக்காது என்பதைப் புரிந்துகொள்ள யாரும் பெரும் முயற்சியெடுக்க வேண்டியிராது.

இதே காலகட்டத்தில் அமெரிக்க அரசு, ஒரு அணு அயுதப் போருக்குப் பிறகு இறைச்சி உட்படப் பல பொருள்களின் விலைகளும் மிகப்பெருவாரியான மக்கள் இறந்து விடுவதனால் குறைந்து விடும் என்ற கருத்தினைக் கொண்ட வாசகத்தினை உள்ளடக்கிய ஒரு துண்டறிக்கையை, அமெரிக்க மக்களிடம் உலகப் போரை ஏற்றுக்கொள்ளக்கூடிய, ஆதரிக்கக்கூடிய அல்லது சகித்துக்கொள்ளக்கூடிய மனநிலையை உருவாக்குவதற்காக சுற்றுக்கு விட்டது. கோர்பசேவ் காலத்தில் சோவியத் ஒன்றியம் அணு ஆயுதத்தை முதலில் ஏவுகின்ற நாடாக நாங்கள் இருக்கமாட்டோம் என்று அறிவித்து இதே போன்று அமெரிக்காவும் அறிவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தபோது, அமெரிக்க பிடிவாதமாக மறுத்துவிட்டதை பலரும் மறந்திருக்கமாட்டார்கள். இதன் பின்னணியில் இருக்கின்ற மனப்பாங்கு என்ன என்பது எளிதில் புரிந்துகொள்ளக்கூடியது தான். அத்துடன் கடந்த 10 ஆண்டுகளாக அமெரிக்காவின் செயல்பாடுகள் அந்த மனப்பாங்கின் உண்மைத் தன்மையை வெளிச்சம் போட்டுக் காட்டிக்கொண்டிருக்கின்றன.

எனவே இவற்றையெல்லாம் நாம் நினைவில் கொண்டு தற்போதைய நிகழ்வுகளைப் பரிசீலிக்கவேண்டும். 2001 செப். 11 உலக வர்த்தக மையத்தின் மீது நடைபெற்ற தாக்குதலைச் சாக்காகக் கொண்டு, (அமெரிக்க உளவுத்துறை இத்தகைய தாக்குதலுக்கு வாய்ப்பிருப்பதாக தகவல் தெரிவித்த பின்னரும், ஆ·ப்கானிஸ்தானை ஆக்கிரமிப்பதற்கு அதை ஒரு காரணமாக வைத்துக் கொள்ளத் திட்டமிட்டு, தடுப்பு நடவடிக்கைகள் எதையும் வேண்டுமென்றே அமெரிக்கா தவிர்த்துவிட்டது என்று அமெரிக்காவிலிருந்தே செய்திகள் கசிந்தன) ஆ·ப்கானிஸ்தானை ஆக்கிரமித்தது. பின்னர் இரண்டே ஆண்டுகளில் பச்சையான பொய்களைச் சொல்லி இராக் மீது அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் தாக்குதல் தொடுத்து, ஆக்கிரமிப்பு செய்தன. அடுத்த தாக்குதல் இலக்கு சிரியாதான் என்பதாக அமெரிக்கா மிரட்டிக் கொண்டிருந்த நிலையில், அமெரிக்காவின் கைப்பாவையான இஸ்ரேலைக் கொண்டு லெபனான் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது. இவற்றையும் மனதில் கொண்டு மேலே செல்வோம்.

அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளான பிரிட்டன், பிரான்ஸ் ஆகியவையும் மூன்று வகை அணு ஆயுதங்களை மிக அதிகமான அளவும் பல்லாயிரக்கணக்கான கி.மீ தொலைவு செல்லக்கூடிய ஏவுகனைகளை நூற்றுக்கணக்கிலும் வைத்திருப்பது எதற்காக? நிச்சயமாக, தற்காப்புக்கானவை என்று கூறமுடியாது. பிற நாடுகளை ஆதிக்கம் செய்வதற்கும் அடி பணியச் செய்வதற்கும் தான் என்பது நடப்பு வரலாறு. அமெரிக்க ஆதிக்கத்திற்குப் பணிய வேண்டும் அல்லது அணு ஆயுதத் தாக்குதலால் அழிவைச் சந்திக்கவேண்டும். இதுதானே இப்போதைய நிலைமை, அல்லது வரவிருக்கின்ற நிலைமை? இந்நிலைமையிலிருந்து தற்காத்துக் கொள்ள விரும்புகின்ற எந்த நாடும் அணு ஆயுதங்களையும் நெடுந்தொலைவு செல்லக்கூடிய ஏவுகணைகளையும் தயாரிப்பதைத் தவிர வேறு வழியேயில்லை.

உலகில் அணு குண்டு எனும் அணு ஆயுதத்தை முதலில் தயாரித்தது அமெரிக்கா தான். பின்னர் ஹைட்ரஜன் குண்டு, நியூட்ரான் குண்டு எனும் அணு குண்டைவிட நாசகரமான அணு ஆயுத வகைகளையும் முதலில் தயாரித்தது அமெரிக்கா தான். தர்க்க ரீதியாகப் பார்த்தால் இது தாக்குதல் தன்மை கொண்டது. நடைமுறையிலும் அப்படியே நிகழ்ந்ததையும், நிகழ்ந்துகொண்டிருப்பதையும் எல்லோரும் பார்த்தோம். இவ்வாறிருக்கையில் இன்னொரு நாடு தனது தற்காப்புக்காக அணு ஆயுதம் தயாரிப்பதை தவறு என்று எப்படிச் சொல்லமுடியும்? அதிலும் அமெரிக்காவுக்கு என்ன தகுதி இருக்கிறது? தங்களின் ஆதிக்கத்திற்கு சிறு தடையும் இருக்கக்கூடாது எனும் எண்ணத்தில்தான் அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் அவ்வாறு சொல்லுகின்றன. பின்னர், மற்றவர்கள், எந்த ஆதிக்கத்தையும் விரும்பாதவர்கள் என்று கூறிக்கொள்வோர் எவ்வாறு அமெரிக்கா சொல்வதை வழிமொழிய முடியும்?

அமெரிக்காவின், அதன் கூட்டணி நாடுகளின் மிரட்டல்களையும் ஆதிக்கத்தினையும் எதிர்த்துக் குரல் கொடுப்பதற்கு, அமெரிக்காவை நியாயமான ஒரு பேச்சு வார்த்தைக்கு இணங்கச் செய்யக்கூடிய அரங்கு எதுவும் இன்றைக்கு இல்லை என்றாகிவிட்டது. குறிப்பாக தனது உளவுத்துறையான சி.ஐ.ஏ. மூலம் சிலி நாட்டுத் தலைவர் அலெண்டே மற்றும் மக்களின் பேராதரவு பெற்ற பல தலைவர்களைத் தீர்த்துக்கட்டி, அண்மையில் வெனிசுலா அதிபர் சாவேள்ஸ கொலை செய்வோம் என்று பகிரங்கமாக அமெரிக்கா மிரட்டிக் கொண்டிருக்கின்ற சூழலில் ஆதிக்க அணு ஆயுதங்களுக்கு எதிராக தற்காப்பு அணு ஆயுதங்கள் தயாரிக்கப்படுவது தான் ஆதிக்கச் சக்திகளை தண்டிக்கவோ அல்லது திருத்தவோ செய்திடாதெனினும் சற்று நிதானமாக யோசிக்கவாவது வைக்கும். ஆயுத ஏற்றத்தாழ்வு நீங்கி, ஆயுதச் சமத்துவம் ஏற்படுவது போருக்கான காரணிகளை வலுவிழக்க வைக்கின்றன, குறைக்கின்றன. எனவே தற்காப்பு அணு ஆயுதத் தயாரிப்புகள் வரவேற்கப்படவேண்டும். அதுவே உலக சமாதானத்தை விரும்புவோர் இப்போது செய்ய வேண்டிய பணி. இந்தக் கருத்தில் தான் அமெரிக்க இராக் மீது தாக்குதல் நடத்தியபோது, ஒரு இந்திய ராணுவ ஜெனரல், இராக்கிடம் அணு ஆயுதம் இருந்திருந்தால் அமெரிக்கா தாக்குதலே நடத்தியிராது என்றார்.


raghavarajtv@yahoo.com

Series Navigation

த.வி. ராகவ ராஜ்

த.வி. ராகவ ராஜ்