பேசும் செய்தி – 3

This entry is part [part not set] of 35 in the series 20061012_Issue

பாஸ்டன் பாலாஜி


1. ஹாலிவுட் நடிகர்களை புகைப்படம் எடுக்க வந்தவர், மெய்காப்பாளரின் கிடுக்கிப்பிடியில் சிக்கி கொலை மிரட்டலுக்கு உள்ளானார்: ஆங்கில உலகின் நட்சத்திரத் தம்பதியினரான அஞ்சலினா ஜோலியும் ப்ராட் பிட்டும் இந்தியாவில் படபிடிப்பில் இருந்தார்கள். எங்கு சென்றாலும் கவனத்தை ஈர்க்கும் இவர்களை, இந்தியாவிலும் நிருபர்கள் பின் தொடர்ந்து நிழற்படங்கள் எடுக்க முனைந்தனர். ‘அத்துமீறுபவர்களின் உயிர் போய்விடும்’ என்று மிரட்டிய பாதுகாவலர்கள், கேமிராகாரர் ஒருவரின் குரல்வளையை நெறித்து அச்சுறுத்தினார்.

பாதுகாப்பாளரைத் தொடர்பு கொண்டோம். “தமிழ்ப் படங்களில் ஹீரோ சேலை கட்டி விடுவதைப் பார்த்த பிராட் பிட், ஹாலிவுட்டில் இந்த மாதிரி நாயகிகளை அலங்கரிக்கும் காட்சிகள் அமைவதில்லை என்று வருத்தப்பட்டார். அவரின் குறையைப் போக்கும் விதமாக ‘A Mighty Heart’ திரைப்படத்தில் அஞ்சலினாவுக்கு ரிவர்ஸிபள் சேலை கட்டிவிடுவதாக காட்சியமைக்கப்பட்டது” என்றார். நாம் எவ்வளவோ கெஞ்சிக் கூத்தாடியும் அஞ்சலினா 4-இன்-1 சேலை கட்டியதை புகைப்படமெடுக்க மெய்காப்பாளர் மறுத்துவிட்டார்.

மூச்சு விட சிரமப்பட்ட புகைப்படக்காரர் சம்பவம் குறித்தும் விசாரித்தோம். “நான் திராவிட பாரம்பரியத்தில் வந்தவன். சொல்வதைத்தான் செய்வேன்; செய்வதைத்தான் சொல்வேன். படமெடுத்தால் உயிர் போகும் என்று வாக்குறுதி கொடுத்தேன். அவன் கவலைப்படாமல் ஃப்ளாஷ் அடித்தான். சொன்னதற்கு ஏற்ப, உயிர் எடுக்காமல், கொடுத்த வாக்கை நிறைவேற்றாத திராவிடக் கலாச்சாரத்தைத்தானே பின்பற்றினேன்?” என்று முடித்துக்கொண்டார்.

2. உள்ளாட்சித் தேர்தல் 2006: “சிக்குன் குனியா பரவுவதற்கு அதிமுக அரசுதான் காரணம்: கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு”: அதிரடியான அறிக்கையைப் படித்தவுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமிக்கு தொலைபேசினேன். அடுத்த குற்றச்சாட்டைத் தயார் செய்யும் அலுவலுக்கு நடுவிலும் எனக்கு நேரம் ஒதுக்கினார்.

“அடுத்த தாக்குதல் ரெடி. விலைவாசி உயர்வுக்கு ஜெயலலிதாவே காரணம். அதிமுகவினர் பல்லாயிரக் கணக்கான டன் அளவில் மக்கள் தினமும் பயன்படுத்தும் பொருள்களை பதுக்குகிறார்கள். இதனால் ஒரு செயற்கையான பொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி இருக்கிறார்கள் என்பதை தேர்தலுக்கு முந்தின நாள் சொல்லப் போகிறேன்.” என்று சொற்பொழிவைத் தொடங்கினார்.

சிகுன் குனியா குறித்து விசாரித்தேன். “கருணாநிதியை யாரும் எளிதில் பார்க்க முடியும். ஆனால், ஜெயலலிதாவை யாரும் பார்க்க முடியாது. 2003-ம் ஆண்டு கொசுக்கள் அன்றைய முதல்வரை சந்திக்க வந்தன. அவர் பார்க்க மறுத்ததால், கடுங்கோபம் கொண்டு, வெஞ்சினம் கொண்ட வேங்கை போல சூளுரைத்தது. அதன் பலனைத்தான் இன்று சிகுன் குனியாவாகப் பார்க்கிறோம். இப்போது சொல்லுங்கள்… அதிமுக அரசு அன்றே கொசுவை சந்தித்து உரையாடியிருந்தால் இவ்வளவும் நிகழ்ந்திருக்குமா?” என்றவுடன் வாயடைத்துப் போனேன்.

3. “கிறிஸ்தவ இளைஞருக்கு மொட்டை: ஒரிசா கிராமத்தில் பதற்றம்”: கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்த இளைஞரை மீண்டும் இந்து மதத்தில் சேர்ப்பதற்காக வலுக்கட்டாயமாக மொட்டையடித்ததால் ஒரிசா கிராமத்தில் பதற்றம் நிலவுகிறது. வலுக்கட்டாயமாக மொட்டை அடித்தவர்களை துப்பறிந்து விசாரணையைத் தொடங்கினோம்.

“கிரஹாம் ஸ்டெயின்ஸையும் அவரின் சிறார்களையும் காவு வாங்கியது போல் கொலையா செய்துவிட்டோம்?” என்று எங்களை ஏளனப்படுத்திவிட்டு பேசுவதற்கு மறுத்துவிட்டார்கள். கட்டாயப்படுத்தியதில் “அஃப்சலுக்குக் கூட கருணை காட்ட பணிக்கிறார்கள். நாங்கள் எங்களுடைய கிராமத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தவே எண்ணிணோம். இருபதாயிரம் பேர் மொட்டை போடும் திருப்பதியில் நாற்பது கோடி ரூபாய் தலைமுடியில் புரளுகிறது. ஒரிசாவிலும் குட்டி திருப்பதியை உருவாக்க உள்ளோம்” என்று உற்சாகமானார்கள்.

4. “வடகொரியாவுக்கு இந்தியா கண்டனம்”: ‘சர்வதேச எதிர்ப்பை மீறி இந்த அணுகுண்டு சோதனை நடத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது. கொரிய தீபகற்ப பகுதியில் அமைதியை இது பாதிக்கும்’ என்று இந்தியா கூறியுள்ளது. வெளியுறவுத் துறை அலுவலகத்தைத் தொடர்பு கொண்டோம். மேலோட்டமாக செய்திகளைப் படித்து செல்லாமல், ஆழமாகவும் அமரிக்கையா அறிந்து கொள்ள அறிவுறுத்தினார்கள்.

“தற்போதைய சோதனையின் படி வட கொரியாவின் ஏவுகணைகள் அமெரிக்காவை சென்றடையாது. அப்படி இருக்கும்போது இந்தியாவிற்கு இது வருத்தத்தையேத் தரும். அமெரிக்காவிற்கு ஆபத்து என்றால்தான் புஷ் போர் தொடுப்பார். பொருளாதாரம் உயரும்; பட்ஜெட் நிதி ஒதுக்கீடு அதிகரிக்கும். அங்கே இருப்பவர்கள் போர்க்களம் காணச் செல்வார்கள். அதன் மூலம் அவுட்சோர்ஸிங் தேவை அதிகரிக்கும். இந்தியாவுக்கும் லாபம்” என்பதை உணர்த்தினார்.

இன்னொரு வல்லுநர், “இந்தியாவைப் பொறுத்தவரை இது வருத்தமான நிகழ்வு. ஈரான், துருக்கி, எகிப்து என்று நாற்பது நாடுகள் அணுகுண்டு சோதனையின் விளிம்பில் நிற்கிறார்கள். இவர்களுக்கான தொழிற்நுட்பத்தை இந்தியா ஏற்றுமதி செய்ய விரும்புகிறது. எல்லா நாடுகளுக்கும் பாகிஸ்தானே முந்திக் கொண்டால், போட்ட முதலீட்டை எடுக்கமுடியாமல், இந்தியாவின் அணு ஆராய்ச்சி திவாலாகும் அபாயம் நேரிடும்” என்று அச்சுறுத்தினார்.

5. “லகான் ஸ்டைலில் கிரிக்கெட் போட்டி: கம்யூனிஸ்டு வற்புறுத்தல்”: லகான் படத்தைப் போன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டியை இந்தியா முதல் சுதந்திர போராட்டம் 150-வது ஆண்டு விழாவையொட்டி நடத்த வேண்டும் என்று மாரக்சிஸ்டு கம்யூனிஸ்டு மூத்த தலைவர் சீதாராம் எச்சூரி வற்புறுத்தி இருக்கிறார். இதற்காக இந்தியா, பாகிஸ் தான், வங்காளதேசம் கொண்ட தனி கிரிக்கெட் அணியை உருவாக்க வேண்டும். இந்த அணி இங்கிலாந்துடன் மோத வேண்டும் என்று கூறி உள்ளார்.

பிரகாஷ் காரட் உள்ளிட்ட பலரும் இந்தத் திரைப்பட் மோகத்தை வரவேற்று இருக்கின்றனர். “முதல்வன் திரைப்படத்தில் ஒரு நாள் முதல்வராக அர்ஜுன் இருப்பார். அதன் பிறகு ஆட்சியையும் பிடிப்பார். அது போல், ஜோதிபாசுவிற்கு ஒரு நாள் பிரதம மந்திரியாக வாய்ப்பளிக்க வேண்டும்.” என்று வேண்டுகோள் விடுத்தார்.

“இஸ்ரேலிய பராக் ரக, கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் வாங்கியதற்காக ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் மாட்டிக் கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில், இளைஞர்களைக் கவர இது நல்ல சந்தர்ப்பம். ரங் தே பஸந்தி திரைப்படத்தைப் போல் ஜெயா ஜெட்லி போன்றோரை விசாரணையின்றி பலியாக்கலாம். உண்மையான லெனினிசத்தை இந்த மாதிரி ரத்த வெளிப்பாடுகள் நிறைவேற்றும்” என்று ஹர்கிஷன் சிங் சுர்ஜீத் தெரிவித்தார்.

பொலிட்பீரோ சந்திப்பில் பிருந்தா காரத் சூர்யவம்சத்தை பரிந்துரைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Series Navigation

பாஸ்டன் பாலாஜி

பாஸ்டன் பாலாஜி