இன்றைய இந்தியாவிற்கு வந்தேமாதரம் தேவையில்லை?

This entry is part [part not set] of 31 in the series 20060929_Issue

அரவிந்தன் நீலகண்டன்


17-9-2006,
நாகர்கோவில்-2.
மதிப்பிற்குரிய ஆனந்தவிகடன் ஆசிரியருக்கு,

24-9-2006 ஆனந்தவிகடன் இதழில் திரு.ஞாநி வந்தேமாதரம் குறித்து எழுதிய கட்டுரையை தங்கள் இதழ் வெளியிட்டது. ஒரு இந்தியன் என்கிற முறையிலும் ‘வந்தேமாதரத்தினை’ மதரீதியில் சித்தரித்திருந்த அக்கட்டுரையை தாங்கள் பிரசுரித்தது பெரும் வேதனையை அளித்தது. தேசபக்தியின் ஊற்றுக்கண்ணாக விளங்கிய ஒரு பாடலினை மதரீதியாக கொச்சைப்படுத்தும் கருத்தினை தங்கள் இதழின் மூலம் கோடிக்கணக்கான தமிழ் மக்களுக்கு கொண்டு செல்லும் பட்சத்தில், ஒரு பாரம்பரியமான இதழின் ஆசிரியர் என்கிற முறையில் அப்பாடலின் அனைத்து பரிமாணங்களையும் நீங்கள் மக்கள் முன் வைத்திருக்க வேண்டும். அது உங்கள் குறைந்த பட்ச இதழியல் கடமை என கருதுகிறேன். எதுவாயினும் இதற்கெல்லாம் உங்களுக்கு நியாயப்படுத்தும் காரணங்கள் இருக்கலாம். இருக்கட்டும்.

தமிழகம் வந்தேமாதர கீதத்தினை குருதியில் ஏந்தி தியாகங்கள் செய்த பல செம்மல்களைப் பெற்றுள்ளது. ஒரு வ.உ.சியோ, பாரதியோ, வாஞ்சிநாதனோ, சுப்ரமணிய சிவாவோ தங்கள் இதழை படிக்க நேர்ந்தால் அவர்கள் மனம் என்ன துயரம் அடையும் என சிறிதே நேரம் கிடைத்தால் சிந்தியுங்கள். அந்த தியாகிகளின் ஆன்மாக்கள் இப் பொய் பிரச்சாரத்தை எதிர்த்திட ஒருவரும் தமிழ்நாட்டில் இல்லையா என ஆவேசப்படக்கூடும். அத்தகையதோர் சாபம் தமிழகத்திற்கு ஏற்படவேண்டாம் என்று எண்ணி ஒரு மறுப்புக் கட்டுரையினை இத்துடன் இணைத்துள்ளேன். தங்கள் இதழின் தரத்திற்கு தகுதியுடன் இக்கட்டுரை இருப்பின் வெளியிட வேண்டுகிறேன்.

என்றபோதிலும் இக்கட்டுரை தங்கள் மேலான இதழில் வெளியிடப்படாது என நான் அறிவேன். ஒற்றுப்பிழைகள் முதல் இடமின்மை -கட்டுரையின் நீளம் வரை ஒரு கட்டுரையை புறங்கையால் ஒதுக்கிட ஆயிரம் காரணங்களில் ஒன்றால் இக்கட்டுரை நிராகரிக்கப்படும் என்பதையும் நான் அறிவேன். எனவே ஏன் இக்கட்டுரையை உங்களுக்கு பிரசுரிக்க வேண்டி அனுப்புகிறேன்?

சாதிமதங்களைப் பாராது உயர் ஜென்மம் இத்தேசத்தில் எய்தியவர்கள் இப்பாரத தாயினை வந்தேமாதர மந்திரத்தால் வணங்குவர் என்று பாடிய பாரதியின் ஆன்மா இக்கட்டுரையை அறியும். வந்தேமாதரத்திற்கென்று பேச ஆளில்லாத தேசபக்த வறட்சி தனது தமிழ்நாட்டில் ஏற்பட்டிடவில்லை என நிச்சயமாக மகிழும். எனவேதான் இக்கட்டுரை. மற்றபடி இக்கட்டுரை உங்கள் அலுவலகத்தின் குப்பைத்தொட்டிக்கே போனாலும் நான் ஆச்சரியப்படமாட்டேன்.

வந்தேமாதரம்!

தங்கள் உண்மையுள்ள

அரவிந்தன் நீலகண்டன்.

இன்றைய இந்தியாவிற்கு வந்தேமாதரம் தேவையில்லை

அண்மையில் தங்கள் பத்திரிகையில் திரு.ஞாநி எழுதுகிற ‘ஓ…பக்கங்கள்’ எனும் பகுதியில் ‘வந்தே மாதரம்’ குறித்து எழுதப்பட்ட வரிகளைக் கண்டு மிகவும் மனம் வருந்தினேன். ‘வந்தேமாதரம்’ ஏதோ ஹிந்துக்களின் பாடல் என்கிற ரீதியாக அந்த எழுத்தாளர் எழுதியுள்ளார். அக்கட்டுரையில் பல தகவல் பிழைகள் இருப்பதுடன் இந்த நாட்டினைத் துண்டாட காரணமாக அமைந்த பிரிவினைக் கருத்தியலையும் அவர் ஆதரித்துள்ளார் என்பது வருத்தமான விஷயமாகும்.
1881 இல் எழுதப்பட்ட ‘ஆனந்தமடம்’ நாவல் முஸ்லீம் ஆட்சிக்கு எதிராகப் போராடும் ஹிந்துத் துறவிகளை கதாநாயகர்களாகக் கொண்ட நாவல் என்பது சரியானதல்ல. வங்காளத்தை அன்று ஆண்ட நவாப் பிரிட்டிஷ் கைப்பொம்மை ஆகிவிட்ட நிலையில் பிரிட்டிஷ¤க்கு எதிராக துறவிகள் போராடும் நாவல் இது. இரண்டு முக்கிய போர்க்கள காட்சிகள் ஆனந்தமடத்தில் காட்டப்படுகின்றன. ஒன்று காப்டன் தாமஸ் என்கிற வெள்ளையன் தலைமையிலான பிரிட்டிஷ் இராணுவத்தை சந்தான்கள் (அன்னையின் புதல்வர்கள்) எனும் துறவிகள் தாக்கி அழிக்கின்றனர். இறுதிக்கட்டத்தில் மேஜர் எட்வர்ட்ஸ் என்கிற வெள்ளையன் தலைமையிலான இராணுவத்தை தாக்கி அழிக்கின்றனர். மேலும் ஹிந்து விடுதலை வீரர்கள் மட்டுமே வந்தே மாதரத்தை தமது முழக்கமாகக் கொண்டிருந்தனர் எனக் கூறுவதும் தவறாகும். மதச்சார்பின்மைக்கு ஆதரவாக பேசுகிறதாக தம்மை முன்னிறுத்தும் ஒருவர் எந்த அளவு வகுப்புவாதத்தன்மையுடன் (ஹிந்து விடுதலை வீரர்கள், முஸ்லீம் விடுதலை வீரர்கள்) விடுதலைப் போராட்டத்தை அணுகுகிறார் என்பது அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது. வந்தேமாதரத்தை தாம் வடிவமைத்த பாரத தேசியக்கொடியில் பொறித்த காமா அம்மையார் பார்ஸி மதத்தை சார்ந்தவர். பார்ஸி மதத்தை சார்ந்த காமா அம்மையாரும் அயர்லாந்தில் கத்தோலிக்கராக பிறந்து பாரதத்தை தன் குருவாக ஏற்று மகாகவியின் குருவாக விளங்கிய மார்க்ரட் நோபிள் எனும் சகோதரி நிவேதிதாவும் வந்தேமாதர கீதத்தை தம் இதயத்தில் நிலை நிறுத்தி வாழ்ந்தவர்கள். இத்தகைய பெருமக்களை மதம் எனும் சிறு வட்டத்துக்குள் அடைத்திட அசாத்திய நேர்மையின்மை வேண்டும். நம் அறிவுஜீவிகளிடம் அறிவு பஞ்சம் இருந்தாலும் அத்தகைய நேர்மையின்மைக்கு குறையன்றுமில்லை (தேசத்தின் எதிர்காலம்) கோவிந்தா!
திரு.ஞாநி அம்பேத்கரை தமது கருத்தியலுக்கு ஆதரவாக சேர்க்கிறார். ஆனால் தமது ‘பாகிஸ்தான் குறித்த சிந்தனைகள்’ எனும் நூலில் ஒரு தேசத்தின் ஒற்றுமை என்பது ஆன்மிகரீதியில் ஏற்படும் ஒற்றுமையே ஆகும் என கூறியவர் அண்ணல் அம்பேத்கர் ஆவார். இஸ்லாமிய அடிப்படைவாதிகளுடன் காங்கிரஸ் தலைவர்களான காந்தி நேரு ஆகியோர் செய்த சமரசங்களைக் கடுமையாக கண்டித்த அண்ணல் அம்பேத்கர், இஸ்லாமிய பிரிவினைவாதத்தை ‘ஹிட்லரியத் தன்மை கொண்டது’ எனக் கடுமையாக விமர்சித்தார். இசை அமைப்பாளர் திரு.அம்பைகர் பாரத அரசியல் சட்ட நிர்ணயக்குழுவினர் முன்னால் வந்தேமாதரம் இசைக்கப்பட்டபோது மனம் நெகிழ்ந்தவர் அண்ணல் அம்பேத்கர். இசைக்கலைஞர் கேசர்பாய் கேர்க்கர் குரலில் காம்பவதி இராகத்தில் இசைக்கப்பட்ட வந்தேமாதரத்தின் முதல் இசைத்தட்டை பெறுபவர் தானாக இருக்க வேண்டும் என்று கூறினார் பாபாசாகேப் அம்பேத்கர்.
மகாத்மா காந்தி தேசவிடுதலைப் போராட்ட களத்தில் உதயமாவதற்கு முன்பே வங்க சுதேசி இயக்கம் வந்தேமாதரத்தை தன் ஜீவகோஷமாக்கி வீறுகொண்டெழுந்தது. தூத்துக்குடியிலும் அது மக்கள் இயக்கமாக உருவெடுத்தது. வரலாறு அதில் பல இஸ்லாமியரின் பங்கினைக் கண்டது. தேசபக்தியில் ஹிந்துக்களுக்கு எவ்விதத்திலும் சளைக்காத அந்த இஸ்லாமியர்களுக்கு வந்தேமாதரம் எவ்வித பிரச்சனையையும் ஏற்படுத்திடவில்லை. பகத்சிங்கின் குருவென கருதப்படும் தியாகி அஷ்பகுல்லா கான் வந்தேமாதரம் கானத்தை பாடியுள்ளார். எனில் இஸ்லாமின் பெயரால் வந்தேமாதரத்தை எதிர்க்கும் போக்கு எப்போது இருந்து தொடங்கியது? பிரிட்டிஷ் விசுவாசிகளாக இருந்த ஒரு இஸ்லாமிய பிரிவினர் துருக்கி இஸ்லாமிய காலீப் ஆட்சிக்கு ஆதரவாக பிரிட்டிஷ¤க்கு எதிராக மாறியபோது அவர்களை காங்கிரஸ் ஆதரிக்கத் தொடங்கியது. தேசபக்த முஸ்லீம்கள் பின்னால் தள்ளப்பட்டு அடிப்படைவாத இஸ்லாமிய பிற்போக்காளர்கள் ஒட்டுமொத்த இஸ்லாமிய சமுதாயத்தின் பிரதிநிதிகளாக முன்னிறுத்தப் பட்டனர். அப்போதுதான் தொடங்கியது இஸ்லாமின் பெயரால் வந்தேமாதரத்துக்கு எதிரான எதிர்ப்புக்குரல்கள். வகுப்புவாத சக்திகள் முதலில் வந்தேமாதரத்தை துண்டாடின. மௌனம் காத்தது காங்கிரஸ். விளைவு வந்தேமாதரத்தை தொடர்ந்து துண்டாடப்பட்டது நம் அன்னை பூமி.
ஆனால் அந்த வகுப்புவாத புயல் வீசியபோது கூட வந்தேமாதரத்துக்காக குரல் கொடுத்த இஸ்லாமிய சகோதரர்கள் உண்டு. வங்காளத்தைச் சார்ந்த முகமது ராஸா எனும் மௌலானா ‘வந்தேமாதரம்’ என்றே ஒரு பிரசுரத்தை வெளியிட்டார். ஆண்டு 1944. “…நம்மில் சிலர் வாழ்வின் ஆதாரமான விஷயங்களைக் கூட சிலை வழிபாடு எனக்கூறி எதிர்க்க ஆரம்பித்துள்ளனர். தேசத்தை அன்னை என்பது கூட அவர்களுக்கு சிலை வழிபாடு ஆகிவிட்டது. பெற்றோர் கால்களைத் தொட்டு வணங்குவதும் ஒரு தேசத்தலைவரின் சித்திரத்தை வீட்டில் மாட்டுவதும் கூட இஸ்லாமிய விரோதம் ஆகிவிட்டது. இவ்வாறு எதிர்ப்பவர்கள் சாதாரண முஸ்லீம்கள் மனதில் ‘இஸ்லாமிய விரோதம்’ என்கிற பெயரில் அச்சத்தை உருவாக்குகிறார்கள். இத்தகைய போக்கு உங்கள் சிந்திக்கும் திறனை அழிப்பதுடன் தேசவிடுதலைக்கு போராடும் ஆற்றலை அழிக்கிறது.” 1944 இல் எழுதிய வார்த்தைகள் இன்றைக்கும் நமக்கு பொருந்துவது ஒரு மிகத் துரதிர்ஷ்டமான நிலை. ஷாநவாஸ்கான் போன்ற முஸ்லீம் இராணுவ அதிகாரிகளையும் பல்லாயிரக்கணக்கான ஹிந்து முஸ்லீம் வீரர்களையும் கொண்ட ஆசாத் ஹிந்த் பவுஜின் இராணுவ அணிவகுப்பில் வந்தேமாதரம் இசைக்கப்பட்டது. சுபாஷ் சந்திர போஸ் திமிர்பரண் எனும் இசையமைப்பாளரிடம் வந்தேமாதரத்தை துர்கா இராகத்தில் இராணுவ அணிவகுப்புக்கு ஏற்ப அமைக்கப் பணித்தார். ஆஸாத் ஹிந்த் பவுஜ்ஜின் அணிவகுப்பு வந்தேமாதரம் இசைக்க நடைபெற்றது. அந்த அணிவகுப்பில் இஸ்லாமிய சகோதரர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு எவ்வித எதிர்ப்புணர்ச்சியும் தோன்றிடவில்லை.
விடுதலைக்கு பின்னரும் பாரத இஸ்லாமிய பாரம்பரியத்தின் ஆகச் சிறந்த வெளிப்பாடான இசை மேதைகள் வந்தேமாதரத்தை இசைத்துள்ளனர். பின்னணியில் தேசபக்தியை தட்டி எழுப்பும் ஸ்ரீ அரவிந்தரின் வந்தேமாதர மொழிபெயர்ப்பு உச்சாடனத்துடன் உஸ்தாத் சாதிக் கான் ஊனும் உயிரும் கரைய பாடிய வந்தேமாதரம் 1998 இல் வெளியானது (பாரத்பாலா வெளியீடு). உஸ்தாத் ரஷீத் கான் 1999 இல் மும்பையில் பல்லாயிரக்கணக்கான மக்களின் முன்னால் உணர்ச்சி ததும்ப பாடினார். ஏ.ஆர்.ரஹ்மானின் வந்தேமாதரம் இளைய சமுதாயத்தினை பாரதம் எனும் ஓருணர்வில் தளையவைத்தது.
நம் மதிப்பிற்கும் அன்பிற்கும் உரிய டாக்டர் அப்துல் கலாம் கூறுகிறார்: “…ஏ.ர்.ரஹ்மான் இஸ்லாமியராக இருக்கலாம். ஆனால் அவர் வந்தே மாதரம் பாடும் போது அவரது குரல் அனைத்து பாரத மக்களின் இதயத்திலும், அவர்கள் எந்த மத நம்பிக்கையைக் கொண்டிருந்தாலும், அனைத்து பாரத மக்களின் இதயத்திலும் ஒலிக்கிறது. நம் ஒற்றுமை மனப்பாங்குக்கும் நம் இலக்கு சார்ந்த முன்னேற்றத்துக்கும் மிகப்பெரிய தடைக்கல்லாக விளங்குவது மக்களைப் பிளக்கும் சித்தாந்தவாதிகள்…இன்று கவலைத் தரக்கூடிய விஷயமென்னவென்றால் மதத்தின் புற உருவை மத உணர்வுகளுக்கு மேலாக மதிக்கிற போக்குதான். நாம் ஏன் கலாச்சார ரீதியாக- மதரீதியாக அல்ல- ஒரு தன்மையை நம் பாரம்பரியத்துக்கு நம் அனைவரையும் பாரத மக்களாக்கும் ஒரு தன்மையை வளர்க்கக் கூடாது?”
அண்மையில் வந்தேமாதரத்திற்கு எழுந்த எதிர்ப்பு கூட அடிப்படைவாதிகளால் எழுப்பப்பட்டதுதான். இத்தகைய மதக்கட்டுப்பாடுகளுக்கு எதிரான உணர்ச்சி பூர்வமான எதிர்ப்பும், வந்தேமாதரத்திற்கு ஆதரவான குரலும் இஸ்லாமிய சமுதாயத்திலிருந்து கிளம்பியது. 13 ஆகஸ்ட் 2006 முதல் 21.ஆகஸ்ட்.2006 வரை குல்சமன் ஷெர்வானி எனும் இஸ்லாமிய இளைஞர் ஒருவாரமாக பாரத அன்னையின் சிலையின் முன் தண்ணீர் கூட பருகாமல் உண்ணாவிரதம் மேற்கொண்டார். 21 ஆகஸ்ட் அன்று அவருக்கு ஏதாவது மோசமாக ஆகிவிடக்கூடாதே என்பதால் மாவட்ட நிர்வாகம் பழச்சாறினை அவரது வாயில் வலுக்கட்டாயமாகத் திணித்து அவரது உண்ணாவிரதத்தை முறித்தது. உண்ணாவிரதத்தின் காரணம்? ‘வந்தே மாதரத்தை பாடுவது இஸ்லாமுக்கு எதிரானது என பத்வா அளித்து கல்விச்சாலைகளில் அது பாடுவதை எதிர்க்கிற ஸன்னி உலேமா அமைப்பின் மௌலானா ஷையது ஷா பத்ருதீன் செய்த தேசவிரோத செயலை’ கண்டித்து இந்த உண்ணாவிரதத்தை மேற்கொண்டதாக ஷெர்வானி கூறியுள்ளார். உண்மையில் ஷெர்வானி டாக்டர்.அப்துல்கலாம் கூறும் கலாச்சார ரீதியாக நம் அனைவரையும் பாரத மக்களாக்கும் ஒரு பாரம்பரியத் தன்மைக்கு’ தன்னையே ஒரு செயல்படும் உதாரணமாக்கியிருந்தார். பாரத எல்லைகளுக்கு வெளியிலிருந்து உத்வேகம் பெறும் அடிப்படைவாத தாக்குதல்களுக்கு இலக்காகி அழிக்கப்பட்டுவரும் ஒரு மகத்தான பாரத வேர் கொண்ட இஸ்லாமிய பாரம்பரியத்தின் வெளிப்பாடு அவர்.
பிரோஸ் பக்த் அகமது எனும் கல்வி-சமுதாய விமர்சகர் அண்மையில் இந்த சர்ச்சை குறித்து மனம் நொந்து கூறினார்: ” ஒரு முஸ்லீம் என்கிற முறையில் என் தேச மக்கள் அனைவருக்கும், குறிப்பாக என் மத சகோதரர்களுக்கு நான் ஒரு விஷயத்தை தெளிவாக கூற விரும்புகிறேன். சில அரசியல் சக்திகள் வந்தேமாதர பாடலைக் குறித்து அரசியல் உள்நோக்கம் கொண்ட சர்ச்சையை உருவாக்க விளைகின்றனர். ஆனால் வந்தேமாதரம் கிடைப்பதற்கரியதோர் முத்தினைப் போன்ற பாடலாகும். எனது பார்வையில் ‘ஜனகணமண’ விற்கு பதிலாக இது தேசியகீதமாக வீற்றிருக்க வேண்டிய பாடலாகும்.” (AINS, 28-ஆகஸ்ட்-2006)
கபீர், ரஸ் கான், ஷா லத்தீப், தாரா ஷ¤கோ, அஷ்பகுல்லாகான், முகமது கரீம் சாக்லா, தியாகி ஹமீது, ஷேக் சின்ன மௌலானா, பிஸ்மில்லாகான், அப்துல் கலாம் எனத் தொடரும் அப்பெரும் பாரம்பரியத்தை சிலைவழிபாடு என்றும், இசை எனும் ஹராம் என்றும் ஒதுக்கிடலாமா? அதுதான் இன்று நடந்து கொண்டிருக்கிறது. ஒரு சில மத அடிப்படைவாதிகளைத் திருப்தி செய்ய பாரத இஸ்லாமிய விழுமிய ஒரு மரபினையே இஸ்லாமிய சமுதாயத்திடம் இருந்து பறித்து அடிப்படைவாதத்தினால் அழிப்பதுதான் மதச்சார்பின்மையா அல்லது அறிவுஜீவித்தன நேர்மையா? இதன் விளைவுகள் என்னவாக இருக்கும்? சில இஸ்லாமிய தலைவர்கள் ஏற்கனவே தேசிய கீதத்திற்கும் தேசிய கொடிக்கும் மரியாதை செய்வது இஸ்லாமிற்கு எதிரானது என பிரச்சாரம் செய்து வருகின்றனர். ‘தியாகத்தின் நிறம் காவியல்ல பச்சை’ என்றுகூட பிரச்சாரம் நடக்கிறது.
இஸ்லாமிய தேசபக்தர்களையும் பாரத மண் சார்ந்த இஸ்லாமிய மரபுகளையும் மதச்சார்பின்மை பேசும் அரசியல்வாதிகள் தொடர்ந்து புறக்கணித்து வருவதை புரிந்து கொள்ள முடிகிறது. ஏனெனில் அவர்களுக்கு விதி கொடுத்திருக்கும் வயிற்றுபிழைப்பு அது. ஆனால் தங்களை அறிவுஜீவிகளாக முன்னிறுத்தி மத நல்லிணக்கம் எனும் பெயரில் எழுதுபவர்களும், அரசியல்வாதிகள் செய்யும் அதே துரோகத்தை இஸ்லாமிய சமுதாயத்திற்கும் பாரத தேசத்திற்கும் செய்யும் போது அது அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. அது ‘ஆனந்த விகடன்’ போன்ற பாரம்பரியமான பத்திரிகையில் வெளிவரும் போது, நம் சமுதாயம் அடைந்திருக்கும் ஒட்டுமொத்த கீழ்மை நிலையைக் காட்டுகிறது.
ஒருவேளை வந்தேமாதரம் இந்தியர்களால் பாடப்படாமல் போவதும் சரிதான் என்றே தோன்றுகிறது. வந்தேமாதர கீதம் சாதி மொழி இன மத எல்லைகளுக்கு அப்பால் தேசபக்தர்களின் இரத்தத்தாலும் தியாகத்தாலும் புனிதப்படுத்தப்பட்ட மந்திரமாக இருக்கலாம். செக்கிழுத்தவர்களும் குண்டடி பட்டவர்களும் தமது துன்பத்திலும் இறுதி மூச்சிலும் நினைவில் நிறுத்திய மந்திரமாக வரலாறு அதனை அறியலாம். எனில் சொந்த அன்னைக்கு துரோகம் செய்வதை பெருமையாக கருதும் அறிவுஜீவிகளும், அரசியல்வியாதிகளும், ஊடகங்களும் இருக்கும் சமுதாயத்திற்கு ‘வந்தேமாதரம்’ போன்றதோர் உன்னத மந்திரம் எப்படி சொந்தமாக இருந்திட முடியும்? அந்த புண்ணிய மந்திரத்தை உச்சரிக்கும் உன்னதத்தை நம் இதயங்களும் உதடுகளும் இழந்துவிட்டன போலும். ஆம் திரு.ஞாநி உங்களுடன் உடன்படத்தான் வேண்டியுள்ளது. நமக்கு வேண்டாம் வந்தேமாதரம். ஓ போடுவதே போதும். வாழ்க மதச்சார்பின்மை.


Series Navigation

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்