என்ன சொல்லி விட்டார் போப் பெனடிக்ட்?- 2

This entry is part [part not set] of 43 in the series 20061019_Issue

அருணகிரி



இத்தலைப்பில் சில வாரங்களுக்கு முன் எழுதிய கட்டுரையில், காரண அறிவையும், இஸ்லாத்தையும் குறித்த போப்பின் கருத்தின் சாரமாக இவ்வாறு குறிப்பிட்டிருந்தேன்: “ஒருபுறம் விவிலிய கிறித்துவத்தை கிரேக்க காரண அறிவுடன் மணமுடித்து, ஐரோப்பிய காரண அறிவியலாளர்களுடன் சமரசம் காணல்; மறுபுறம், ஜிஹாத் (மற்றும் அதனை அடிப்படையாகக் கொண்டதாக) இஸ்லாத்தினைக் காரண அறிவுக்கு முரணாகக் காட்டி அது கடவுளுக்கும் முரணானது எனப் புறம் தள்ளல்; இவற்றின் மூலம் உலக அளவிலும் குறிப்பாக மேற்குலகிலும் காரண அறிவியலாளர்களை கிறித்துவ நம்பிக்கையாளர்களுடன் ஓரணியில் திரட்டி, அதன்மூலம் இஸ்லாத்திடமிருந்து மேற்கினை மீட்பது. இந்த தொலைநோக்குத்திட்டத்தின் ஒரு அங்கமாகவே போப்பின் தற்போதைய பேச்சு விளங்குகிறது”.

போப்பின் உரையிலுள்ள முக்கிய அம்சம் இதுதான் என்றாலும், அவரது ஆழமான விருப்பம் ஒன்றும் இவ்வுரையில் வெளிப்படுகிறது. வட்டிகனின் தொலைநோக்குத்திட்டத்தின் அடித்தளத்தில் இருந்து கொண்டு இயக்குவிக்கும் ஆதார விருப்பம் இது என்பதனால் இதனைக் குறித்து ஆராய்வதும் அவசியமாகின்றது. கிரேக்கத்தாக்க நீக்கம் என்பதை மூன்று நிலைகளாக போப் காண்கிறார். இம்மூன்று நிலைகளை கிறித்துவ சர்ச்சின் வரலாற்றுப்பார்வையின் அடிப்படையில் மூன்று காலங்களாக போப் பிரிக்கிறார். அவை: சீர்திருத்த காலம் (Reformation) , தாராள இறையியல் காலம் (liberalism), தற்காலம்.

1. முதல் நிலை விமர்சனம்- சீர்திருத்த காலம்: 16-ஆம் நூற்றாண்டுகளில் வட்டிகனின் ஆதிக்கத்தை எதிர்த்து உண்டான இந்த இயக்கம் ப்ராட்டஸ்டண்டுகள் சர்ச்சிலிருந்து பிரியக் காரணமானது. அரசாதிக்கத்திலும், அரசியலிலும், மேற்கு ஐரோப்பிய சமூகத்தின்மேல் வட்டிகன் கொண்டிருந்த தனிப்பெரும் ஆதிக்கத்திற்கு விழுந்த முதற்பெரும் அடி இது. சர்ச் ஒப்புதல் இல்லாமல்கூட சமூக அரசியல் இயக்கங்கள் சாத்தியமாகும் என்ற நம்பிக்கையை இது ஏற்படுத்தியது; அதன் விளைவாக காரண அறிவியலாளர்களிடையில் வட்டிகனின் பழிவாங்குதல் குறித்த பயம் ஓரளவு குறைந்து செயல்படக்கூடிய சூழலை ஏற்படுத்தித்தந்தது. 17-18ஆம் நூற்றாண்டுகளில் காரண அறிவை முதன்மைப்படுத்தி வலுப்பெற்ற விழிப்புணர்வு இயக்கத்திற்கும் பின்னாளில் இம்மானுவல் கான்ட் காரண அறிவையும், இறை நம்பிக்கையையும் தனித்தனியாக வெட்டி விலக்கி வெவ்வேறு தளங்களில் பிரித்ததற்கும், கலிலியோவின்மீதான வட்டிகனின் பழிவாங்குதல்கள் ஆரம்பப்புள்ளியாக இருந்தன. காரண அறிவை அடிப்படையாக்கிய விழிப்புணர்வு இயக்கத்தால், அறிவுலக சாதனங்களிலும், அறிவுப்பரவலிலும் அமைப்புரீதியாக சர்ச் கொண்டிருந்த ஆதிக்கம் ஆட்டம் கண்டது. இதன் விளைவாக அறிவுலக ஆர்வலர்களும் கிறித்துவ மதவாதிகளும் எதிரணியில் பிரியத்தொடங்கினர். சர்ச் மேலாண்மையிலிருந்து விடுதலை பெற்றதால் ப்ராட்டஸ்டண்ட் இயக்கத்திற்குப்பல அரசர்களின் ஆதரவும் கிடைத்தது என்பதையும் குறிப்பிட வேண்டும்.

2. இரண்டாம் நிலை விமர்சனம்: 19,20-ஆம் நூற்றாண்டுகள் ப்ராட்டஸ்டண்டுகள் படிப்படியாக வலுப்பெற்ற காலம். இதற்கு, சிவில் யுத்தத்திற்குப்பின் அமெரிக்கா (மற்றும் அந்நாட்டில் மேற்கு ஐரோப்பாவிலிருந்து வந்து புகுந்த ப்ராட்டஸ்டண்டுகள்) கண்ட அதிவேக பொருளாதார வளர்ச்சி உத்வேகம் தந்தது. லிபரல் ப்ராட்டஸ்டண்ட்டான அடால்ஃப் வான் ஹர்னக், கிறித்துவத்தை ஏசு வழிபாடு என்ற அளவில் நடைமுறை (ப்ராக்டிகல்) மதமாக மட்டும் குறுக்கி, அதற்கு விரிந்ததொரு இறையியல் கோட்பாடு என்ற இடத்தைத்தர மறுத்தார். அவர் ‘இறைமகன் என்று தன்னை ஏசு அறிவித்தது தெய்வ அனுபவத்தை நெருக்கமாக உணர்ந்ததால் சொன்ன குறியீட்டுச்சொல் மட்டுமே’ என்று கூறி, ‘இறைவனின் ஒரே மகன்’ என்ற தெய்வீகத்தன்மையைப் பின்னுக்குத் தள்ளி, வரலாற்றுப்பாத்திரமாக மட்டுமே ஏசுவை முன்வைத்தார்.19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20-ஆம் நூற்றாண்டுத்துவக்கத்திலும் பிரபலமடைந்த இந்தப்போக்கினால், ஏசு ‘வரலாற்று பாத்திரம்’ என்ற அளவில் மட்டுமே முன்னிலைப்படுத்தப்பட்டு சர்ச் பின்னுக்குத் தள்ளப்பட்டதன் காரணமாக, அமைப்பு ரீதியாக வட்டிகன் மேலும் வலுவிழந்தது.

3. மூன்றாம் நிலை விமர்சனம் தற்காலத்தின் மீது: இன்றுகாணும் நிலை. புதிய நிலங்களில் அறுவடை நிகழ்த்தப் புறப்படும் பொழுது, அந்த நாட்டுக்கலாசாரப்படியே கிறித்துவம் மாறலாம் என்ற கருத்தானது, போப்பின் வார்த்தைகளில் சொல்வதானால், “பொய்யானது என்பது மட்டுமல்ல, முரட்டுத்தனமானதும் தெளிவற்றதும் ஆகும்”. ஏனெனில், கிரேக்கத்தாக்கம் கொண்ட கிறித்துவத்தால் உண்டானதாக , தான் உருவகிக்கும் ஐரோப்பாவை போப் தனது ஆதர்சமாக்குகிறார்; அந்த வகை ஐரோப்பியத் தாக்கம் கிறித்துவம் பரவும் நாடுகளின் கலாசாரங்களில் – அது அந்நாட்டுக் கலாசாரத்திற்கு மாறுபட்டதாய் இருந்தாலும்- புகுத்தப்பட வேண்டும் என்கிறார். வட்டிகன் ஆளுமைக்குட்பட்ட கிறித்துவத்தில் முக்கியெடுக்கப்பட்ட அக்கால ஐரோப்பிய கலாசாரமே அவரது ஆதர்ச கலாசாரம். அதுவே கிறித்துவம் பரவும் எல்லா நாடுகளிலும் பொது கலாசாரமாகப் பரவி அதன் மூலம் பிற கலாசாரங்களும், அவற்றைப் பின்பற்றுவோரும் தம் முன்னோரின் பண்பாட்டிலிருந்து துண்டிக்கப்பட்டு, அவர்களின் வழிபாட்டு வரலாற்றை மறந்தால் மட்டுமே, அந்தப் புதிய ஆடுகளை வல்லாண்மை செய்வது வட்டிகனுக்கு எளிதாகும். வட்டிகனுக்கு இந்தத் தெளிவு எதனால் வந்தது என்று யூகிக்க முடிகிறது.

இக்கருதுகோளுக்கு வலு சேர்க்கும் இரண்டு அப்பட்ட உதாரணங்கள் தேசியம் தாண்டிய இஸங்களான, இஸ்லாமும், கம்யூனிஸமும். இந்தியாவின் இரு பெரும் கம்யூனிஸ்டு கட்சிகளும் தங்களை Communist Party of India/ CPI(M) என்று- அதாவது உலகளாவிய ஓர் அமைப்பின் இந்தியக் கிளை என்ற வகையிலேயே தம்மை அடையாளப்படுத்திக்கொள்கின்றன என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். வேர் மறந்த அராபிய, மற்றும் அராபியமயமாகும் தீவிர இஸ்லாமிய கலாசாரங்களின் தேசியம் தாண்டிய மதப்பிடிப்பும் இதற்கு மற்றொரு உதாரணமாகத் திகழ்கின்றது. இந்த இரண்டு எதிரிகளையுமே ஐரோப்பாவில் எதிர்கொண்டது வட்டிகன். எனவே அதன் கவனத்தை, இந்தப் பொது அம்சம் கவர்ந்ததிலோ, அவர்களை வீழ்த்த அவர்களது ஆயுதத்தையே போப் நாடுவதிலோ வியப்பொன்றுமில்லைதான்.

போப்பின் ஆதர்ச கிறித்துவ சமுதாயம் அமைய செய்ய வேண்டியது என்ன என்ற வரைபடம் இப்போது கிடைத்து விட்டது: முதல் வேலையாக சீர்திருத்தம் மற்றும் விழிப்புணர்வு காலங்களை கிறித்துவ வரலாற்றிலிருந்து நீக்கவேண்டும்; பின் சொந்த மண்ணின் கலாசாரங்களை விலக்கி, கிறித்துவ ஐரோப்பிய கலாசாரத்தைப் புகுத்த வேண்டும். இதனைச்செய்து, ஏசுவை ஒரே இறைவனின் ஒரே மகன் என்று ஆக்கி விட்டால் விட்டால் போதும்- போப்பின் ஆதர்ச கிறித்துவ சமுதாயம் அங்கு மலர்ந்து விடும். ஆனால் உண்மை என்னவென்றால், போப் சொல்லும் இம்மூன்று நிலைகளையும் கிறித்துவ வரலாற்றிலிருந்து நீக்கி விட்டால் அது மிகச்சரியாக நம்மை, வட்டிகன் அறிவுலகைத் தன் நுகத்தடியில் வைத்திருந்து மேற்கினை ஆண்ட 16-ஆம் நூற்றாண்டிற்கு முந்தைய காலத்தில் கொண்டு போய் விட்டு விடும் என்பதுதான். இந்த உண்மையை அனைவரும் கண்டுகொண்டு விடலாம் என்பதையும் போப் அறிந்தே உள்ளார். அதனால்தான்- எங்கப்பன் குதிருக்குள் இல்லையென்பது போல்- அவசரமாய் ஒரு டிஸ்க்ளெய்மரும் கொடுக்கிறார் : “இந்த விமர்சன முயற்சியானது, விழிப்புணர்வு காலத்திற்கு முந்தைய காலத்திற்குத்திரும்புவதாகவோ நவீன கால அறிவுப்பார்வைகளை உதறித்தள்ளுவதாகவோ ஆகாது” என்று. ஆனால் இருண்ட காலத்திலிருந்து தட்டுத்தடுமாறி ஐரோப்பா வெளியேறவும் இன்று மேற்குலகம் பல அறிவியல், பொருளாதார வெற்றிகள் கண்டதன் முக்கிய காரணங்களில் ஒன்றாக இருப்பதும், சர்ச்சின் இறுக்கத்திலிருந்து மேற்கின் அறிவுப்பார்வை படிப்படியாக அடைந்த விலகலும் விடுதலையும்தான். போப்பினைப் பொறுத்தவரையிலோ அமைப்புரீதியாக அறிவியலும் கல்விக்கூடங்களும் வட்டிகனின் ஆளுமையின் கீழ் மண்டியிட்டுக்கிடந்த காலம் வட்டிகனின் பொற்காலம். அதற்கு மீள அவர் விழைவதில் வியப்பொன்றும் இல்லை.

இப்படியாக, இச்சொற்பொழிவில் போப் இஸ்லாம் குறித்த கருத்தைத் தவிர பலவற்றையும் வட்டிகனின் vision plan என்று சொல்லும் அளவுக்குக் கோடி காட்டிவிட்டுச் சென்றிருக்கிறார். திருவிழா நேர சாவு போல உலகமெங்கும் நடந்த இஸ்லாமிய ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வன்முறைகளுக்கு மத்தியில் ப்ராட்டஸ்டண்டுகளைக் குட்டியதையோ, பாகன்களின் உருவ வழிபாட்டை குறைத்துப்பேசியதையோ, கலாசாரமயமாக்கல் என்று சொல்லி மறைமுகமாக கிறித்துவ ஐரோப்பியத்தை உயர்த்தும் இனவெறிச்சார்பை முன்னிறுத்தியதையோ அதிகமாக யாரும் கண்டு கொள்ளவில்லை. ஆனால் ஆபிரஹாமிய மதங்களின் அடுத்தடுத்த ஆக்கிரமிப்பின் விளைவுகளாலும், கலாசார அவமதிப்பாலும், காலனீய சுரண்டல்களாலும், இன்றும் அவதிப்பட்டுக்கொண்டிருக்கின்ற, பாகன் நம்பிக்கைகளின் ஒரே வாழ்நிலமாக விளங்கும் இந்தியாவிற்கோ இந்த சொற்பொழிவு ஒரு முக்கிய செய்தியைத் தாங்கி வருகிறது: “பழைய வரலாற்றை மறப்பவர் அதனை மீண்டும் அனுபவிக்கும் நிலைக்குத் தள்ளப்படுவர்” என்பதே அது.

Series Navigation

அருணகிரி

அருணகிரி

என்ன சொல்லி விட்டார் போப் பெனடிக்ட்?

This entry is part [part not set] of 31 in the series 20060929_Issue

அருணகிரி



(Reason என்பது காரண அறிவு என்று இக்கட்டுரையில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது; நன்றி: ஜெயமோகன்)

செப்டம்பர் 12-இல் பதினாறாம் போப் பெனடிக்ட் அறிவியலாளர் மத்தியில் நிகழ்த்திய சொற்பொழிவு* ஒன்று இஸ்லாமிய நாடுகள் மற்றும் இஸ்லாமிய மக்களிடையே கடும் எதிர்ப்பினைச் சந்தித்துள்ளது. எகிப்தில் செயல்படும் ஒரு அல்-கைதா அமைப்பு போப்பை ஷரிய சட்டத்தின்படி தண்டிக்க வேண்டுமென அறைகூவல் விடுத்திருக்கிறது; மேற்குக்கரையிலும் காசாவிலும் சர்ச்சுகள்மீது எறிகுண்டுத்தாக்குதல் நடக்க, உச்ச கட்டமாக சோமாலியாவில் ஒரு இத்தாலியப்பெண் துறவி கொல்லப்பட்டிருக்கிறார். மறுபுறம், போப்பிற்கு ஆதரவுக்குரல்கள் மேற்கு ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்பட உலகத்தின் பல பகுதிகளிலிருந்தும் எழுந்துள்ளன. ஆஸ்திரேலிய கார்டினல் இததகைய வன்முறை, இஸ்லாம் குறித்த போப்பின் அச்சத்தை உறுதி செய்வதாகவே உள்ளது என்று கூறியிருக்கிறார். “உண்மைக்கு எந்தப்பாதுகாப்பும் தேவையில்லையாதலால், இஸ்லாமியர்களின் எதிர்ப்பைக் கிறித்துவத்துக்கே உரிய துணிவுடனும் ஜெபத்துடனும் எதிர்கொள்ளவேண்டும்” என இந்தியக்கத்தோலிக்க பிஷப் கான்பரன்ஸின் தலைவர் கார்டினல் தெலஸ்போர் தொப்போ கூறியுள்ளார்.

அப்படி என்னதான் சொல்லி விட்டார் போப்?

விஞ்ஞானப் பிரதிநிதிகளுக்காக நிகழ்த்தப்பட்ட இந்தச் சொற்பொழிவின் மையக்கருத்து இஸ்லாம் குறித்ததே அல்ல. அவரது சொற்பொழிவின் குவியம் விவிலிய மத நம்பிக்கையும் காரண அறிவுப்பார்வையும் ஒன்றுக்கொன்று முரண்பட்டதல்ல என்பதுதான். இதுவும் கடந்த சில ஆண்டுகளாகவே வட்டிகன் முன்வைத்து வரும் ஒரு கருத்தாக்கம்தான்.

எதன் அடிப்படையில் போப் இவ்வாறு கூறுகிறார்? புதிய ஏற்பாட்டில் யோவானின் நற்செய்தி பின்வரும் வாக்கியங்களோடு தொடங்குகிறது. “தொடக்கத்தில் வாக்கு இருந்தது. அவ்வாக்கு கடவுளோடு இருந்தது. அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது”. இதில் உள்ள வாக்கு என்பதன் கிரேக்க மூலம் “logos” என்ற சொற்பதம் ஆகும். Logos என்பது விவிலிய அறிஞர்களால் -logic என்பது உட்பட- பலவாறு மொழிபெயர்க்கப்பட்டு வந்துள்ளது. (‘கிரேக்க “logos”, இந்து ஞான மரபின் “தர்மம்” என்பது போன்ற ஒரு கண்ணோட்டம்’ என்று சொல்பவரும் உண்டு).

போப் பெனடிக்ட் இந்த “logos” என்ற வார்த்தையை எடுத்துக்கொண்டு முன்வைக்கும் கருத்தாக்கத்தின் சாரம் இதுதான்: ‘கிரேக்கத்தில் எழுதப்பட்ட புதிய ஏற்பாட்டில் காணப்படும் “logos” என்பதனைக் காரண அறிவு (reason) எனக் கண்டால், விவிலிய இறை நம்பிக்கையும் காரண அறிவும் ஒன்றுக்கொன்று முற்றிலும் முரண்பட்டதல்ல என்பது புரியும்’ என்று கூறி, “காரண அறிவுடன் செயல்படாமை கடவுளுக்கு எதிரானது” என்ற பைசான்டின் அரசன் இரண்டாம் மானுவலின் கருத்தை வழிமொழிந்து முடிக்கிறார். இதனையே கிரேக்க தர்க்க ஞானமும் விவிலிய நம்பிக்கையும் ஒருங்கிணையும் புள்ளியாகவும் காண்கிறார். நிஜத்தில் ஐரோப்பாவிற்கு கிழக்கில் தோன்றினாலும், கிறித்துவம் கிரேக்க தத்துவ ஞானம் கலந்த இந்த ஒருங்கிணைப்பின் மூலம் ஐரோப்பிய மண்ணில்தான் செம்மை அடைந்தது என்று கூறி, ஐரோப்பாவிற்கும் கிறித்துவத்திற்குமான முடிச்சு இறுக்கமானது என சுட்டிக்காட்ட விழைந்திருக்கிறார்.

இதில் எங்கே இஸ்லாம் குறித்த விமர்சனம் வருகிறது என்றால், அது பைசான்டிய அரசன் இரண்டாம் மானுவல் பாலியோலோகஸ், ஒரு பெர்சியப் பண்டிதனிடம் ஏறக்குறைய 1391-இல் இஸ்லாத்தின் ஜிஹாதிய புனிதப்போர்கள் குறித்துச் சொன்ன கருத்திலும் அதை ஒரு முக்கிய மேற்கோளாக போப் கையாண்டதிலும் இருக்கிறது. அரசன் மானுவல் சொல்கிறான்: “முஹம்மது கொண்டு வந்ததில் என்னதான் புதியதாக உள்ளது என்று காட்டுங்கள், அங்கு கொடியதும், இரக்கமற்றதுமான விஷயங்களையே நீங்கள் காண்பீர்கள்- கத்திமுனையில் மத நம்பிக்கையைப் பரப்பச் சொன்ன அவரது கட்டளையைப்போல”. வன்முறை, காரண அறிவுக்கு எதிரானது என்பதால் இறைவனுக்கும் எதிரானது என்ற இரண்டாம் மானுவலின் கருத்தை வழிமொழியும் போப், அம்மன்னனது மேற்கண்ட கருத்தை இதற்கு மேற்கோளாக்குகிறார். அதோடு விடவில்லை “மத நம்பிக்கையில் கட்டாயப்படுத்துதலுக்கு இடமில்லை” (சுரா 2,256) என்ற இஸ்லாமியக் கருத்தினைக் குறிப்பிட்டு இக்கருத்து முஹம்மது பலம் குறைந்திருந்த ஆரம்ப காலங்களில் எழுதப்பட்டதாயிருக்கும் என்ற பண்டிதர்களின் கருத்தையும் சுட்டிக்காட்டுகிறார். (முஹம்மது என்றே போப் பேசுகிறார்; நபி என்று சொல்லவில்லை). இரண்டு முக்கிய கருதுகோள்களை இதன் மூலம் முன் வைக்கிறார்:
1. வன்முறை, காரண அறிவுக்கு எதிரானதால் கடவுளுக்கு எதிரானது
2. புனிதப்போர்கள் என்ற பெயரில் வன்முறைகள் மூலமே இஸ்லாம் பரப்பப்பட்டது.
அதாவது, வன்முறை மூலம் பரப்பப்பட்ட இஸ்லாம் கடவுளுக்கு எதிரானது என்ற முடிவினை நோக்கி உந்துவதாக இந்தக்கருத்தாக்கங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இந்தக் கருத்துக்களை இஸ்லாமிய உலகம் தங்கள் மத உணர்வுகளுக்கு எதிராகக்கருதியதில் வியப்பில்லைதான். பல இடங்களில் வன்முறையும், வலுத்த எதிர்ப்புகளும் வளர்ந்தது கண்டு, தன் பேச்சு இஸ்லாமியர்களின் உணர்வைப் புண்படுத்தியதற்கு போப் வருத்தம் தெரிவிப்பதாக வட்டிகனிலிருந்து அறிக்கை வெளியிடப்பட்டது- கவனிக்க, தன் இஸ்லாமிய எதிர்ப்புக்கருத்துகளுக்காக வருத்தம் தெரிவிக்கவில்லை. இஸ்லாமியரிடத்தில் மன்னிப்பும் கேட்கவில்லை, அக்கருத்துகளைத் திரும்ப பெறுவதாக இதுவரை கூறவுமில்லை. நிற்க.
காரண அறிவும் மத நம்பிக்கையும் முரண்பட்டவையல்ல என்ற கருத்தாக்கத்தை தற்போதைய போப்பும் இவருக்கு முந்தைய போப்பும்கூட பலமுறை கூறியிருக்கின்றனர்; போப் பெனடிக்ட் கடந்த ஆண்டிலும் இது குறித்துப் பேசினார். என்றாலும் இந்த சொற்பொழிவில் மட்டும்தான் இஸ்லாத்தைத் தன் வாதத்திற்குள் இழுத்திருக்கிறார். இதற்கு என்ன காரணம்? .
இஸ்லாம் குறித்த இவ்விமர்சனங்கள் நியாயமானவையா அல்லவா என்பதையோ, காரண அறிவுக்கெதிரான வட்டிகனின் நிலைப்பாடுகளையோ அல்லது கிரேக்க காரண அறிவை வசதியாகக் கிறித்துவத்திற்குக் கடத்தி கிறித்துவத்தின் அதிகார மேலாண்மை வன்முறைகளுக்கு அமைதி மார்க்க முலாம் பூச முனையும் போப்பின் முயற்சிகளையோ இங்கு பேசப்போவதில்லை. ஆனால், கந்தக சூழலில் தீப்பொறியாக இப்பொழுது இவ்வாறு போப் பேச வேண்டிய அவசியம் என்ன என்பதை அறிய இடம், காலம் முதலான பின்புலங்கள் கொண்டு ஆராய்வது அவசியமாகின்றது.

கிறித்துவத்தின் ஆதாரப்புள்ளியாக விளங்கும் ஐரோப்பாவில் அது மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்தித்துவருகிறது. ஐரோப்பா அளவு இல்லாவிட்டாலும் அமெரிக்காவிலும் சர்ச் செல்லும் கிறித்துவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டேதான் வருகிறது. ஐரோப்பாவில் கிறித்துவத்தின் வீழ்ச்சி விழிப்புணர்வு காலத்தில் (Age of Enlightenment) காரண அறிவின் பரவலில் தொடங்கியது. காரண அறிவினை தன் நுகத்தடியின் கீழ் வைத்திருக்க முயன்ற சர்ச்சின் முயற்சிகள் தோற்று, விடுதலை பெற்ற விஞ்ஞானத் தேடலும் அது தந்த சிந்தனை சுதந்திரமும் கிறித்துவத்தின் வீழ்ச்சியை விரைவுபடுத்தின. அதுகூடப் பரவாயில்லை, புதிய அறுவடைகளை வேறு நிலங்களில் நிகழ்த்திக் கொள்ளலாம்தான். ஆனால் கிறித்துவம் மெலிந்த ஐரோப்பாவில் இஸ்லாம் ஆதிக்கம் பெற்றாலோ அது வட்டிகனுக்கே ஆபத்து. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னும் குறிப்பாக சோவியத்தின் கம்யூனிச வீழ்ச்சிக்குப்பின்னும் ஐரோப்பாவிலும் ஆப்பிரிக்காவிலும் இஸ்லாம் வேகமாகப்பரவி வரும் சூழலில், ஐரோப்பியப் பெரும்பான்மையும், அறிவுஜீவிகளும் சர்ச்சின்மேல் அவநம்பிக்கையும், காரண அறிவை விவிலியத்திற்கு எதிரானதாக முன்னிலைப்படுத்தி கிறித்துவத்தின்மேல் பிடிப்பற்று இருப்பதும், கிறித்துவ மேலாண்மைக்கும் வட்டிகனின் அதிகார எதிர்காலத்திற்கும் அத்தனை நல்லதில்லைதான்.

கார்டினல் ராட்சிங்கர் போப் பெனடிக்டாக அதிகாரம் அடைந்தது ஐரோப்பாவில் கிறித்துவம் மெலிந்து இஸ்லாம் வலுத்து வரும் ஒரு சூழலில். முந்தைய போப்பின் பெரும் சவாலாக விளங்கியது கம்யூனிசம் என்றால், தற்போதைய போப்பின் தலைவலி கிறித்துவ நாடுகளாகக் கருதப்படும் இடங்களில், குறிப்பாக ஐரோப்பாவில் அதிகரித்துவரும் இஸ்லாமிய அழுத்தங்கள். கிறித்துவப் பெரும்பான்மை நாடுகளில் இஸ்லாத்திற்கு இருக்கும் கருத்து மற்றும் பிரச்சார சுதந்திரம், இஸ்லாமிய நாடுகளில் கிறித்துவத்திற்கு
இல்லாதது இந்த அழுத்தத்திற்கு மேலும் வலு சேர்ப்பதாயுள்ளது. இந்நிலையில் கிறித்துவத்தலைமையின் உடனடித்தேவை, காரண அறிவே முக்கியம் என்று மதப்பிடிப்பு இல்லாதிருக்கும் மேற்குலகில் கிறித்துவத்தை மீட்டெடுத்து வலுப்படுத்துவது. கார்டினலாக இருந்த காலத்தில் துருக்கியின் இஸ்லாமியப் பின்னணியையும் வரலாற்றுத் தொடர்பையும் காரணம் காட்டி, ஐரோப்பியக் குழுமத்தில் இடம் பெற எதிர்ப்புத் தெரிவித்தவர்தான் தற்போதைய போப். இந்த உண்மைகளின் பின்புலத்தில் போப்பின் பேச்சினைக் காண்கையில் அவரது காய் நகர்த்துதலை நன்றாகவே புரிந்து கொள்ள முடியும்.

ஒருபுறம் விவிலிய கிறித்துவத்தை கிரேக்க காரண அறிவுடன் மணமுடித்து, ஐரோப்பிய காரண அறிவியலாளர்களுடன் சமரசம் காணல்; மறுபுறம், ஜிஹாத் (மற்றும் அதனை அடிப்படையாகக் கொண்டதாக) இஸ்லாத்தினைக் காரண அறிவுக்கு முரணாகக் காட்டி அது கடவுளுக்கும் முரணானது எனப் புறம் தள்ளல்; இவற்றின் மூலம் உலக அளவிலும் குறிப்பாக மேற்குலகிலும் காரண அறிவியலாளர்களை கிறித்துவ நம்பிக்கையாளர்களுடன் ஓரணியில் திரட்டி, அதன்மூலம் இஸ்லாத்திடமிருந்து மேற்கினை மீட்பது. இந்த தொலைநோக்குத்திட்டத்தின் ஒரு அங்கமாகவே போப்பின் தற்போதைய பேச்சு விளங்குகிறது. ‘மதமும் வன்முறையும் ஒன்றுக்கொன்று முரணானவை; மதமும் காரண அறிவுமே ஒன்றுக்கொன்று முரணற்றவை’ என சுட்டிக்காட்டவே முனைந்ததாக பின்னர் போப் விளக்கினாலும், வசதியாக முந்தையதற்கு இஸ்லாத்தையும் பிந்தையதற்கு கிறித்துவத்தையும் உதாரணப்படுத்தியது வட்டிகனின் இந்த தொலைநோக்குத்திட்டத்தை உறுதி செய்வதாகவே உள்ளது.

இத்திட்டம் வெற்றியடைவது முஸ்லீம்களின் கையில்தான் இருக்கிறது. பல ஆண்டுகளாக ஐரோப்பாவில் சாதிக்க முடியாத கிறித்துவ ஒருங்கிணைப்பை கடந்த சில ஆண்டுகளாக இஸ்லாத்தின் வன்முறை ஆர்ப்பாட்டங்கள் சம்பாதித்துத் தந்து விட்டன என்பதைச் சரியாக அடையாளம் கண்டு கொண்ட வட்டிகன், கிறித்துவ வன்முறைகளை வசதியாக மறந்து, இஸ்லாத்தை மட்டும் உதாரணப்படுத்தி, குறிபார்த்த எறிந்த கல்தான் இந்தப் பேச்சு. எதிர்பார்த்த விளைவுகளையே ஏற்படுத்தியுள்ளது. இஸ்லாமிய உலகின் குரலும் செயலும் மேற்கத்திய நாடுகளையும், கிறித்துவத்தையும் பிரதான எதிரியாகக் கண்டு கருத்துலகிலும், வன்முறையிலும் வலுப்பெற வலுப்பெற, பாதுகாப்பின்மையால் உந்தப்பட்டு மேற்கத்திய உலகம் தன் பொது அடையாளமாகக் கிறித்துவத்தை மீட்டெடுப்புச் செய்யும் நிலைக்குத் தள்ளப்படும். இவ்வாறு நடந்தால் வட்டிகனின் எண்ணம் ஈடேற சாத்தியங்கள் உண்டுதான்.

இந்த சொற்பொழிவு விஷயத்தில் இஸ்லாமின் வழக்கமான வன்முறை எதிர்ப்புகளையும், மேற்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்தும், அமெரிக்காவிலிருந்தும், ஆஸ்திரேலியாவிலிருந்தும் போப்பிற்கு ஆதரவான குரல்கள் அணிதிரள்வதையும் காண்கையில், காய்கள் வட்டிகனின் விருப்பப்படியே நகருவதாகத்தான் தோன்றுகின்றது.

——————————————————————————————————————————–
* போப்பின் சொற்பொழிவு குறித்த இடுகை: http://www.vatican.va/holy_father/benedict_xvi/speeches/2006/september/documents/hf_ben-xvi_spe_20060912_university-regensburg_en.html


arunagiri_123@yahoo.com

Series Navigation

அருணகிரி

அருணகிரி