தெளகீது பிராமணர்களின் கூர் மழுங்கிய வாள்களும் வெட்டுப்பட்ட சில பண்பாட்டுத் தலைகளும்

This entry is part [part not set] of 29 in the series 20060915_Issue

ஹெச்.ஜி.ரசூல்


1) ஷிர்க் (இணைவைத்தல்) பித்அத் (இஸ்லாத்தில் புதிதாக நுழைந்தது) என்கிற இரு சொல்லாக்கங்களைப் பயன்படுத்திக் கொண்டு எதற்கெடுத்தாலும் தங்களைத் தவிர பிற இஸ்லாமியர்களை அடித்தள மக்கள் வாழ்வுசார்ந்த தர்கா மரபுகளை பின்பற்றுவோரை, மார்க்கம் தெரியாதவர்கள் மூடநம்பிக்கையாளர்கள், விலக்கப்படவேண்டியவர்கள் என்பதாக தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். இத்தகைய கருத்தியல் வன்முறை நிகழ்த்திவரும் வஹ்ஹாபிகள் என்னும் இந்த தெளகீதுவாதிகள் இஸ்லாமியத்திற்குள் ஒருவகை பிராமணீயத்தை கட்டமைக்க முயல்கிறார்கள்.
பிராமணீயம் – பிராமணர் உள்ளிட்ட வைதீகவாதிகளை உயர்ந்தவர்களாகவும், தூய்மையாளர்களாகவும், பிற இடைநிலை ஜாதி மற்றும் தலித்துகளை விலக்கப்பட்டோர்களாகவும், தீண்டத்தகாதவர்களாகவும் கருதுகிறது. அகமணமுறையை பின்பற்றவும் கட்டாயப்படுத்தப்படுகிறது. அதிகாரம் இணைந்த புரோகித தலைமையை முன்நிறுத்துகிறது. இந்த குணங்கள் அனைத்தும் தெளகீதுவாதிகளின் வழிமுறையாக இருக்கிறது.

2) மவ்லிது ஓதுதல் உள்ளிட்ட பல செயல்பாடுகளை ‘பித்அத்’ என இவர்கள் சொல்வது ஏற்றுக் கொள்ளத்தக்கதா என்பது குறித்த பரிசீலனை மிக அவசியமாகப்படுகிறது.
இஸ்லாம் வாழ்வின் ஒவ்வொரு அணுத்துகள்களிலும், இயங்குவதற்கான அடிப்படைகளை வைத்துள்ளது என்பதிலிருந்து தொழுகை வழிபாடு, ஹஜ்கிரியை உள்ளிட்ட கடமைகள் மட்டும் மார்க்கமல்ல என்பதை புரிந்து கொள்ளலாம். அன்றாட வாழ்வின் நடவடிக்கைகள், மரபுகள், உழைப்பு உற்பத்தி சார்ந்த உருவாக்கங்கள் என்பதான இடைவிடா செயல்கள் சார்ந்து பித்அத் எனும் கருத்தாக்கத்தை கவனிக்க வேண்டும். நபிகள் நாயகத்தின் சொல், செயல், விழிப்பின் அசைவு, அசைவற்ற தன்மை, அடுத்தவர் செயலுக்கு மெளனம் என்பதைத் தாண்டி இஸ்லாமியர் வாழ்வில் நுழைந்து விட்ட அனைத்து நடவடிக்கைகளையும் ‘பித்அத்’ என்ற சொல்லாக்கத்தினால் குறிப்பிடலாம். தெளகீது பிராமணர்கள் குறிப்பிடுகிற பித்அத் (இஸ்லாமியர் வாழ்வில் புதிதாக உருவானவை) இல்லாமல் இஸ்லாம் இல்லை.

3) வரலாறு என்பது கல்வெட்டு, சுவடிகள், அகழ்வாராய்ச்சி தொகுக்கப்பட்ட ஆவணங்கள், எழுதப்படாத வாய்மொழி கதையாடல்கள் மூலமாக அறியப்படுகிறது. ஏழாம் நூற்றாண்டு அராபியச் சூழல் குறித்த வரலாறு திருக்குர்ஆனிலும் உள்ளது. எனினும் நபிகள் நாயகத்தின் பிறப்பு குறித்து எந்த ஆண்டில் எந்த தேதியில் பிறந்தார்கள் என்பது திருக்குர்ஆன், ஹதீஸ்கள் இவையிரண்டிலும் கிடையாது.

4) அதுபோல் நபிகள் நாயகத்தின் நபித்துவத்திற்கு முற்பட்ட இளமைக்கால வாழ்வு பற்றியும் குறிப்புகள் இல்லை. எனவே பிற வரலாற்று ஆதாரங்கள் நோக்கி நாம் நகர வேண்டியுள்ளது.

5) கி.பி. ஏழாம் நூற்றாண்டிற்கு முன்பதான ஆதிச் சமூக துவக்கங்களின் சமூக, தத்துவ கலாச்சார வரலாறுகளை தொகுத்தறிந்து கொள்வது எவ்வாறு என்ற பிரச்சினை மிக முக்கியமானது. நபிகள் நாயகம் காலகட்டம் அதற்கு முன்பதான கிரேக்க, அரேபிய, ஐரோப்பிய ஆசிய தொல்குடி சமூகங்களைப் பற்றி, அதன் நடப்பியல் பண்பாட்டு மதிப்பீடுகளை புரிந்து கொள்வதற்கான வரலாற்று மானுடவியல் ஆய்வு விரிவா¡க்கம் மிகவும் முக்கியமன ஒன்றாகிவிட்டது. இத்தகைய அணுகுமுறைகளை வெறும் ‘பித்அத்’ என்ற ஒற்றைச் சொல்லினால் ஓரம்கட்டிவிட முடியாது.

6) திருக்குர்ஆன், ஹதீஸ்கள் எதிர்கொள்கிற உபரிக்கொள்கை மதிப்பு, தொழில் முதலாளித்துவம், பின்னைக்காலனியம், உலகமயமாக்கல், தகவல் ஊடகக் கருத்தியல் கட்டமைப்பு, பண்பாட்டு அரசியல், பெண்ணியம், தலித்தியம் உள்ளிட்ட நவீன பின் நவீன கால சமூக அரசியல் பொருளாதார பண்பாட்டு பிரச்சினைகளுக்கு திருக்குர்ஆன் ஹதீஸ் எல்லைகளைத் தாண்டி இஜ்திகாத் என்னும் சூழலை அனுசரித்த புதிய விளக்கம் தேவைப்படுகிறது.

7) எந்தப் பொழுதுகளில் தொழுகை என்பது பற்றி பேசினாலும் நாம் இன்று கூட நடைமுறைப்படுத்துவது போன்ற தொழுகையின் அமைப்பு முறை பற்றியும், எப்படி தொழுவது என்பது பற்றியும் தகவல்கள் முழுமையும் திருக்குர்ஆனில் கிடையாது. தலைமுறைத் தொடர் பழக்கமாக இருப்பினும் நபிகள் நாயகத்தின் மறைவுக்குப் பிறகு இருநூறு ஆண்டு காலம் கழித்து தொகுக்கப்பட்டு ஆணப்படுத்தப்பட்ட ஹதீஸ்களிலிருந்தும் மத்ஹபுகளிலிருந்துமே சுன்னத், பர்ளு, உள்ளிட்ட தொழுகை தொடர்பான முழு விவரங்கள் கிடைக்கப்பட்டுள்ளன.

8) இன்றைய வடிவத்திலிருக்கும் திருக்குர்ஆன் நபிகள் நாயகத்தின் காலத்தில் இந்த வரிசை கிரமத்தில் அமைப்பு முறையில் தொகுக்கப்படவில்லை. இஸ்லாமிய மக்கள் பகுதியில் பயன்படுத்தப்பட்ட திருக்குர்ஆனின் பல மாறுபட்ட பிரதிகள் அழிக்கப்பட்டு, இன்றைய வடிவத்தில் அது ஒற்றைப்பிரதியாக தொகுக்கப்பட்டு ஹலரத்உதுமான் காலத்தில் வழங்கப்பட்டது. நபிகள் நாயகம் செய்யாத ஒன்றை, திருக்குர்ஆன் விளக்கம் தராத பலவற்றை மார்க்கக் கடமையாக செயல்படுத்தும் போது தெளகீது பிராமணர்களின் அணுகுமுறையில் இவைகளும் ‘பித்அத் ஆகிவிடும் அபாயம் நிகழ்ந்து விடுகிறது.

9) நபிகள் நாயக காலத்தின் வர்த்தக முறை பெரும்பாலும் பண்டமாற்று தன்மை சார்ந்தே இயங்கியுள்ளது. அச்சிடப்பட்ட திர்ஹம், தினார், ரியால் பணம் (Printed Money) என்பது கிடையாது. நவீன வர்த்தக வாழ்வியலில் இது நிராகரிப்பிற்குரிய ஒன்றாக இல்லை.

10) புவியியல் பரப்பு சார்ந்த எல்லை வகுக்கப்பட்ட அரபுநாடுகளின் உருவாக்கம் 1971-களில் ஐக்கிய அரபு அமீரகங்களின் தோற்றம், பெட்ரோல் கண்டுபிடிப்பு, அது தொடர்பான வர்த்தகம் நவீனத்துவ முதலாளித்துவ நாடுகளுடனான வணிக தொழில் துறை ஒப்பந்தங்கள் எதுவும் நபிகள் நாயகம் காலத்தில் நடைமுறைப்படுத்தப்படாதவை.

11) துவக்கக்கால ஹஜ் பயணங்கள், உட்பட்ட அனைத்தும் உயிருக்கு உத்தரவாதமளிக்காத கடல்வழி, தரை வழி மார்க்கமாக மட்டுமே அமைந்திருந்தன. இன்றின் சூழலில் தரைவழியிலான ஒட்டகப் பயணங்கள் விரைவு வாகனப் பயணங்களாகவும், வான்வெளிப் பயணங்கள் அதிநவீன வசதி சார்ந்த விமானப் பயணங்களாகவும் மாறியுள்ளன.

12) அரபு நாடுகள் தவிர்த்த பிற அனைத்து நாட்டு மக்களும் தங்கள் தாயக அல்லது பிரதேச மொழியை தொடர்பு மொழியாகவும், கலாச்சார அடையாளமாகவும் பாதுகாத்து பேணி வருகின்றனர். இந்நிலையில் நபிகள் நாயகம் பேசாத தமிழ்மொழியை நாம் பேசுவது கூட பித்அத் ஆகிவிடுகிறது.

13) பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியன. அங்கு நபிகள் நாயகத்தின் புகழ் பாடலாம் என்று எழுப்பப்படுகிற விவாதமும் உப்பு சப்பற்றது. பள்ளிவாசல்களில் அல்லாஹ்வை தொழுதல் என்கிற வரையறுக்கப்பட்ட கடமைக்கு மாறாக ‘பிற தெய்வங்களை’ தொழுதல் கூடாது என்கிற அர்த்தத்தையே மேற்கண்ட வாசகம் உற்பத்தி செய்கிறது. யாரும் அங்கு சென்று ‘முகம்மது அக்பர்’ என்று தக்பீர் கட்டி தொழுகை நடத்துவதில்லை. ஆனால் இந்த தொழுகைமுறையை இஸ்லாமியர்களுக்கு சொல்லித்தந்த நபிகள் நாயகத்தின் புகழைப்பாடுவது விலக்கப்பட்ட காரியம் ஒன்றுமில்லை. தொழுகை வேறு, மவ்லிது வேறு என்கிற தனித்தனியான வரையறுக்கப்பட்ட வடிவமைப்புகள் இருக்கும் நிலையில் இதைப்பற்றி குழப்புவது, இஸ்லாத்தின் வரலாற்று மரபு, கவிதை, இசைமரபுகளை திட்டமிட்டே சிதைப்பதாகும். இந்நிலையில் தொழுகையின் பாங்கு அழைப்பில் அல்லாஹ்வுடன், அண்ணல் நபி முகம்மதை இணைத்து அழைப்பதையும் அல்லாஹ்வை தொழுது கொண்டிருக்கும் அத்தஹாயாத் இருப்பு நிலையில் அண்ணல் நபி முகம்மதுவையும் நபி இபுராகீமையும் சாட்சியம் கூறுவதையும் இந்த தெளகீது பிராமணர்கள் எப்படி விளக்க முற்படுவார்கள்?

14) நபிகள் நாயகத்தின் காலத்திற்கு பிறகான நான்கு கலீபாக்களின் ஆட்சி முறை இன்றைய அரபு நாடுகளைப்போல வாரிசுரிமை ஆட்சியாக இருந்ததில்லை. ஐரோப்பிய அல்லது கீழைய தேசங்களைப் போல காலனியாதிக்கத்திலிருந்து விடுபட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக ஆட்சி முறையாகவும் இல்லை. மாறாக ஒரு குடும்பத்தன்மை கொண்ட ஆட்சி என்பதாகவே மதிப்பிடலாம். உற்றத்தோழராக இருந்து பிற்காலத்தில் தனது மகள் ஆயிஷா நாயகியை நபிகளாருக்கு மணம் செய்துவித்து கொடுத்த நிலையில் கலீபா அபூபக்கர் மாமனார் அந்தஸ்தைப் பெறுகிறார். அதுபோல் கலீபா உமர் அவர்களும் தனது மகள் ஹபீஸாவை நபிகளாருக்கு மணம் செய்து கொடுத்தே உள்ளார். மூன்றாவது, நான்காவது கலீபாவான உஸ்மான் மற்றும் அலி ஆகியோர் நபிகளாரின் மகள்களை திருமணம் செய்த வகையில் நபிகளாரின் மருமகன்களாகி விடுகிறார்கள். எனவே இந்த குடும்பவகை ஆட்சி முறை தவிர்த்த ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுக்கும் ஜனநாயக ஆட்சி முறை உள்ளிட்ட அனைத்தையும் ‘பித்அத்’ என்று நிராகரித்து விட்டால் உலகின் எந்த மூலையிலும் ஒரு முஸ்லிம் கூட வாழமுடியாது.

மவ்லிது ஓதுதலும், மீலாது விழா கொண்டாடுதலும், மட்டுமல்ல பித்அத். மேற்சொல்லப்பட்ட இஸ்லாமியர் வாழ்வின் சமூக, பண்பாட்டு, அரசியல், பொருளாதார தளம் முழுவதும் பித் அத்களால் நிரப்பப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் தெளகீது பிராமணர்கள் இல்லையென மறுக்க முடியுமா? இவர்களால் தட்டுத்தடுமாறி சாக்கு போக்கு மட்டுமே சொல்ல முடியும். காலம் இவர்களைத் தாண்டி விரைவாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. நாம் ‘பித்அத்’களை வரவேற்போம். ஏனெனில் இவை அனைத்தும் பித்அத்தே ஹஸனா – பித்அத்களில் நல்லவை.


Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்