திரும்பவும் வெண்மணிச் சோகம் எனும் பழங்கதை

This entry is part [part not set] of 41 in the series 20060901_Issue

மலர் மன்னன்


1968 டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் சமயத்தில் கீழ் வெண்மணியில் விவசாயத் தொழிலாளர்கள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட கொடுஞ் செயலுக்கான காரணத்தை ஆராய்ந்தால், இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சியினர் தமது மேலாதிக்கத்திற்காக விவசாயக் கூலிகளைப் பலியிட்டனர் என்பது தெரிய வரும் என்று பல ஆண்டுகளுக்கு முன் நான் எழுதியபோது மார்க்சிஸ்ட் தலைவர் பி.ராமமூர்த்தியிலிருந்து சாதாரணத் தொண்டர் வரை என்மீது பாய்ந்தனர். சில ஆண்டுகளுக்குப்பின் அதுபற்றி ஜாடையாக நான் துக்ளக்கில் எழுதியபோதும் அதனைக் கண்டித்துக் கடிதங்கள் எழுதினார்கள்(துக்ளக்கில் வெளியான அக்கட்டுரையின் பக்கங்கள் சில மாதங்களுக்கு முன் திண்ணையில் வெளியிடப்பட்டது நினைவிருக்கும்).

வெண்மணித் துயரம் நிகழ்ந்தமைக்கான காரணத்தை நான் திண்ணையில் எழுதியிருந்ததைப் படித்துவிட்டு இந்திரா பார்த்தசாரதிகூட என் அறிவுத் திறனை ‘naive’ என்று விமர்சித்திருந்தார்.

முற்போக்காளர் எனத் தம்மை வர்ணித்துக்கொள்பவரிடையே ஈ.வே.ரா. அவர்கள் தெரிவித்து வந்த கருத்துகளுக்குப் பெரிதும் மரியாதை இருப்பதால் வெண்மணி சம்பவம் குறித்து அவர் என்ன சொன்னார் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.

1969 ஜனவரி 12ந் தேதி தஞ்சை மாவட்டம் செம்பனார் கோயிலில் நடந்த பொதுக் கூட்டத்தில் ஈ.வே.ரா. அவர்கள் பேசியபோது வெண்மணி பற்றிப்பேசினார்கள். திராவிடர் கழக நாளேடான விடுதலை, ஈ.வே.ரா. அவர்களின் பேச்சை எப்போது வெளியிட்டாலும் அவரது இயல்பான கொச்சைப் பேச்சைத் தவிர்த்து, இலக்கணச் சுத்தமான முறையில்தான் வெளியிடும். இதன் காரணமாக ஈ. வே.ரா. அவர்களின் இயல்பான பேச்சில் வெளிப்படும் வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என்பதான கடுமை, மெல்லிய நகைச் சுவை, அவருக்கே உரித்தான வார்த்தை பிரயோகங்கள் எல்லாம் காணாமற்போய், அழகு கெட்டுச் சுவையற்றுப் பதிவாகிவிடும். வெண்மணி பற்றிய ஈ.வே.ரா. வின் செம்பனார்கோயில் பேச்சும் அவ்வாறே விடுதலையில் பிரசுரமாகியுள்ளது. எனவே வெண்மணியையொட்டி அவர் தெரிவித்த இடதுசாரி கம்யூனிஸ்டுகள் மீதான விமர்சனம் விடுதலை இதழின் பதிவில் காரம் குறைவாகவே காணப்படுகிறது. எனினும், ஈ.வே. ரா. அவர்களின் இயல்பை அறிந்தவர்கள் அவரது பேச்சு எவ்வளவு கடுமையாக இருந்திருக்கும் என்பதை யூகித்துக்கொள்ளலாம். இனி, 1969 ஜனவரி 20 ந் தேதி விடுதலையில் வெளியான ஈ.வே.ரா. அவர்களின் பேச்சு:

“தஞ்சை மாவட்டத்தில் இடதுசாரி கம்யூனிஸ்டுகள் விவசாய மக்களுக்கு நலன் செய்வது போல, அவர்களுக்காகப் பாடுபடுவது போல, ஏழை எளியவர்களின் வாழ்வை உயர்த்துவது போல மேடைகளிலே பேசுகிறார்கள். உங்கள் கூலியை உயர்த்துவது, வாழ்வை வளமாக்குவது எங்கள் கட்சியேயாகும் எனக் கூறி விவசாய மக்களை ஏமாற்றி, அவர்களை பலிவாங்கிக் கொண்டு வருகிறார்கள். கூலி உயர்வு என்பது ஒரு கட்சியால் ஏற்படுவது அல்ல. இதனைத் தொழிலாளர்கள் உணரவேண்டும். நாட்டில் ஏற்படுகின்ற பொருளாதார மாற்றம், விலைவாசி உயர்வு, பற்றாக்குறை, இவைகளைக்கொண்டுதான் கூலிகள் உயர்கின்றதே தவிரக் கட்சிகளால் அல்ல.

தொழிலாளர்கள் தங்களுக்குக் கிடைக்கிற பொருளாதாரத்தில் எப்படி வாழ வேண்டும் என்பதைக் கம்யூனிஸ்டு தோழர்கள் உங்களுக்குக் கூறாமல் நாட்டிலே கலவரத்தையும் புரட்சியையும் ஏற்படுத்தி இன்றைய தினம் வலதானாலும் சரி, இடதானாலும் சரி, இந்த ஆட்சியை (அண்ணா தலைமையிலான தி. மு.க. ஆட்சி) கவிழ்த்துவிட வேண்டும் என்கிற முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். அதற்கு விவசாயத் தோழர்களும் மற்ற தொழிலாள நண்பர்களும் இடங் கொடுக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.

நாகைத் தாலுகாவிலே கலகம் செய்யத் தூண்டியது (மார்க்சிஸ்ட்) கம்யூனிஸ்ட் கட்சி. அதன் காரணமாக 42 பேர் உயிரிழந்தனர். நாட்டில் அராஜகத்தைத் தூண்டும் பணியில் கம்யூனிஸ்ட் கட்சி தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது. இதற்கு இடங் கொடுக்காமல் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கம்யூனிஸ்ட்களின் குறி கீழ்த் தஞ்சைப் பகுதி பக்கம் திரும்பியிருக்கிறது. இங்குள்ள விவசாயத் தோழர்கள் இங்கு அந்தத் தீய சக்தி பரவ இடங் கொடுக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.”

கீழ் வெண்மணி சம்பவத்திற்கான அடிப்படைக் காரணம் குறித்து நான் தயாரித்த அறிக்கையின் சாராம்சமும் ஏறத் தாழ இவ்வாறாகவே இருந்தது. விசாரணைக் கமிஷன் அமைத்தால் இவ்வுண்மைகள் வெளிப்பட்டுவிடும் என்பதால்தான் இடது சாரி கம்யூனிஸ்டுகள் அவசர அவசரமாக விசாரணைக் கமிஷன் எதுவும் வேண்டாம் என்கிறார்கள் என்றும் எனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தேன்.

அன்றைய கால கட்டம் அதி தீவிரவாத நக்ஸல்பாரி இயக்கம் வெகு விரைவாகப் பரவி வந்த காலம். தொழிலாளர் மத்தியில் தங்கள் மேலாதிக்கம் பறிபோய்விடுமோ வெனத் தேர்தல் முறை ஜனநாயக வழியைத் தேர்ந்த கம்யூனிஸ்டுகள் பதறிய காலம். அதன் காரணமாகவே நக்ஸல்பாரி இயக்கத்தை நசுக்குவதில் பிறரைவிட கம்யூனிஸ்டுகள் கூடுதலான அக்கரை கொண்டிருந்தனர். கீழ்த் தஞ்சையில் நக்ஸல்பாரி இயக்கம் காலூன்றிவிடலாகாது என்பதால் இடதுசாரி கம்யூனிஸ்டுகள் விவசாயத் தொழிலாளரைத் தம் வசம் வைத்திருக்கும் பொருட்டு தாமே அதிதீவிரவாதக் கோலம் பூண்டனர்.

இந்திரா பார்த்தசாரதி இந்தக் கோணங்களில் எல்லாம் நிலைமைகளை ஆராயாமல் தில்லியிலிருந்து வந்து கடைசியில் ஒரு சராசரியான ஆண்டான் அடிமைக் கதையாக திராவிட இயக்க எழுத்தாளர்களின் பாணியில் நோகாமல் தமது குருதிப் புனலை எழுதிவிட்டாரே என்பதுதான் எனது வருத்தம். எனது இந்த நல்லெண்ணம் அவருக்குப் புரியாமல்போனதில் எனக்கு மேலும் வருத்தம்.

கம்யூனிஸ்டுகளுக்கு எப்போதுமே இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்கிக் கொள்கிற சாமர்த்தியம் உண்டு. ரஷ்யாவில் ஜார் அரசை வீழ்த்திய புரட்சியானது கம்யூனிஸ்டுகள் தனியாக நடத்தியதல்ல. ஜன நாயகவாதிகளுக்கும் அதில் பங்கிருந்தது. எனவே ஜார் அரசுக்குப் பின் அமைந்த ஆட்சியில் அவர்களுக்கும் இடமிருந்தது. ஆட்சிக்கு வந்தபின் அவர்களுக்கு துரோகப் பட்டங்கட்டி அவர்களை வீழ்த்திவிட்டு அதிகாரத்தை முழுமையாகக் கைப்பற்றிக்கொண்டார், லெனின். இந்த வரலாற்று உண்மைகளையெல்லாம் கம்யூனிஸ்டுகள் பேசமாட்டார்கள்.

1967 ஆம் ஆண்டு மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த பொதுத் தேர்தலின்போதும் இப்படித்தான் நடந்தது. காங்கிரஸ்காரரான அஜாய் முகர்ஜி கட்சித் தலைமை மீது கோபங்கொண்டு, பங்களா காங்கிரஸ் என்ற பெயரில் தனிக் கட்சி தொடங்கித் தேர்தலில் போட்டியிட முனைந்தார். நல்ல மனிதரான அவருக்கு மக்கள் மத்தியில் கணிசமான அளவு செல்வாக்கு இருந்தது. இதனைப் பயன்படுத்திக்கொள்ள விரும்பிய இடதுசாரி கம்யூனிஸ்டுகள் அவரது கட்சியுடன் கூட்டுச் சேர்ந்தனர். தேர்தல் முடிவு பங்களா காங்கிரஸ் இடதுசாரி கம்யூனிஸ்ட் கூட்டணிக்குச் சாதகமாக அமைந்தது. அப்பாவி அஜாய் முகர்ஜி முதல்வர் பதவியை ஏற்று ஜோதி பாசுவுக்குத் துணை முதல்வர் பதவியை வழங்கினார். காலப் போக்கில் கம்யூனிஸ்ட் கலாசாரப்படி, அஜாய் முகர்ஜி கீழே தள்ளப்பட்டு அதிகாராம் கை மாறியது.

1967ல் தமிழ் நாட்டிலும் இருபதாண்டு காங்கிரஸ் ஆட்சி என்கிற ஆல மரம் விழுந்து திமுக ஆட்சியைக் கைப்பற்றியது. ராஜாஜி அவர்களின் சுதந்திரா கட்சி மட்டுமின்றி, அதற்கு முற்றிலும் எதிர்முனையில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சியும் சேர்ந்த கூட்டணிக்குக் கிடைத்த வெற்றியின் பயனை தி முக மட்டுமே புசித்தது. ஆட்சிக்கு வந்தது முதலே அண்ணா அவர்களின் உடல் நிலையும் மோசமடைய ஆரம்பித்துவிட்டது. பலம் பொருந்திய காங்கிரசே சரிந்துவிட்டதால் புதிதாகப் பதவிக்கு வந்துள்ள, தலைவர் தளர்ந்துள்ள திமுக வை எளிதாகச் சரித்துவிட்டு அதிகாரத்தை மெதுவாகக் கவர்ந்துகொள்ளலாம் என்கிற சபலம் கம்யூனிஸ்டுகளுக்கு வந்திருக்கக் கூடும். இந்தப் பின்புலத்தில்தான் கீழ் வெண்மணிச் சம்பவத்தைப் பார்க்க வேண்டும் என்பதும் அன்று எனது கருத்து.

மிகவும் நலிவுற்ற நிலையில் முதலமைச்சர் அண்ணா அவர்கள் இருந்த போதிலும் எனது அறிக்கையினை முழுவதுமாகப் படித்தார்கள். எனது அறிக்கையை வாங்கிக்கொண்ட அன்று இரவே அண்ணா அவர்கள் என்னை அழைத்து, வெல்டன், இட் ஈஸ் எ வேல்யுஅபிள் டாக்குமென்ட் என்று சொன்னார்கள். உன்னுடைய பார்வையில் திமுக கவனத்தில் கொள்ள வேண்டிய படிப்பினை உள்ளது என்றும் சொன்னார்கள். இதனை அண்ணா அவர்கள் நெடுஞ்செழியன், மதியழகன், கருணாநிதி முதலான தம் தம்பிமார்களிடமும் சொன்னார்கள் என்பதைப் பின்னர் மதியின் வாயிலாக அறிந்துகொண்டேன். இதற்கு ஏற்பப் பிற்பாடு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற கருணாநிதியும் கம்யூனிஸ்டுகளிடம் மிகவும் எச்சரிக்கையாக நடந்துகொண்டார். கம்யூனிஸ்டுகளிடையே குழப்பத்தை உண்டாக்கி , அதனைச் சரிகட்டுவதிலேயே அவர்கள் உழலுமாறு செய்தார், கருணாநிதி.

பின்னர் எம் ஜி ஆர் தனிக் கட்சி தொடங்கி அதற்கு மக்களிடையே அமோக ஆதரவு இருப்பதைக் கண்டதும் அதனைத் தமது செல்வாக்கு பரவப் பயன் படுத்திக்கொள்ளும் ஆசையில் வலது கம்யூனிஸ்டுகள் எம்ஜிஆரோடு மிகவும் நெருக்கமான உறவுகொண்டனர். புத்திசாலியான எம் ஜி ஆரும் அவர்கள் எல்லை தாண்டாமல் பார்த்துக்கொண்டார்.

கம்யூனிஸ்டுகளைப் பற்றி மதிப்பீடு செய்வதற்கு இப்பழங்கதை பயன்படும் என்பதாலேயே வெண்மணி சோகத்தைத் திரும்பவும் கவனப் படுத்தலானேன்.


malarmannan79@rediffmail.com

Series Navigation

மலர் மன்னன்

மலர் மன்னன்