இந்த இஸ்லாமிய இளைஞரின் பாதம் பணிந்து…

This entry is part [part not set] of 41 in the series 20060901_Issue

எஸ் அரவிந்தன் நீலகண்டன்



அர்ஜுன் சிங்கும் இதர ஓட்டு வங்கி அரசியல்வியாதிகளும் சிறுபான்மை வாக்குகளைப் பொறுக்கிட வந்தேமாதரத்தை அவமானப்படுத்திக் கொண்டிருந்த அதே நேரத்தில் ஆக்ராவின் சிவில் நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் பாரத அன்னையின் சிலையின் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்திருக்கலாம்.

ஆனந்த கண்ணீருடன் இணைந்த வேதனைக் கண்ணீர்.

ஒரு இளம் இஸ்லாமியர் ஒருவாரமாக அன்னையின் சிலையின் முன் தண்ணீர் கூட பருகாமல் உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்தார். 21.ஆகஸ்ட்.2006 அன்று அவரக்கு ஏதாவது மோசமாக ஆகிவிடக்கூடும் என்பதால் மாவட்ட நிர்வாகம் பழச்சாறினை அவரது வாயில் வலுக்கட்டாயமாக திணித்து அவரது உண்ணாவிரதத்தை முறித்தது.
உண்ணாவிரதத்தின் காரணம்?
‘வந்தே மாதரத்தை பாடுவது இஸ்லாமுக்கு எதிரானது என பத்வா அளித்து கல்விச்சாலைகளில் அது பாடுவதை எதிர்க்கிற ஸன்னி உலேமா அமைப்பு தலைவன் மௌலானா ஷையது ஷா பத்ருதீன் செய்த தேசவிரோத செயலை’ கண்டித்து இந்த உண்ணாவிரதத்தை மேற்கொண்டதாக அந்த இஸ்லாமிய இளைஞர் கூறியுள்ளார்.

அவர் பெயர் குல்சமன் ஷெர்வானி.

எழுச்சி தீபங்கள் (Ignited minds) என்னும் நூலில் அப்துல் கலாம் கூறுகிறார்: “பாரதத்தின் மையக் கலாச்சாரம் காலத்திற்கு அப்பால்பட்டது. அது இஸ்லாத்தின் வருகைக்கும் முந்தையது. அது கிறிஸ்தவத்தின் வருகைக்கும் முந்தையது. தொடக்ககால கிறிஸ்தவர்களான சிரியக் கிறிஸ்தவர்கள் மெச்சத்தகுந்த வைராக்கியத்துடன் தமது பாரதத்தன்மையை பாதுகாத்து வருகின்றனர். அவர்களது திருமணமான பெண்கள் திருமாங்கல்யம் அணிவதாலேயோ அவர்களது ஆண்கள் கேரள முறையில் வேட்டி அணிவதனாலேயோ அவர்கள் என்ன குறைவான கிறிஸ்தவர்களாகிவிட்டார்களா என்ன? …ஏ.ஆர்.ரஹ்மான் இஸ்லாமியராக இருக்கலாம். ஆனால் அவர் வந்தே மாதரம் பாடும் போது அவரது குரல் அனைத்து பாரத மக்களின் இதயத்திலும், அவர்கள் எந்த மத நம்பிக்கையைக் கொண்டிருந்தாலும், அனைத்து பாரத மக்களின் இதயத்திலும் ஒலிக்கிறது. நம் ஒற்றுமை மனப்பாங்குக்கும் நம் இலக்கு சார்ந்த முன்னேற்றத்துக்கும் மிகப்பெரிய தடைக்கல்லாக விளங்குவது மக்களைப் பிளக்கும் சித்தாந்தவாதிகள்…இன்று கவலைத் தரக்கூடிய விஷயமென்னவென்றால் மதத்தின் புற உருவை மத உணர்வுகளுக்கு மேலாக மதிக்கிற போக்குதான். நாம் ஏன் கலாச்சார ரீதியாக- மதரீதியாக அல்ல- ஒரு தன்மையை நம் பாரம்பரியத்துக்கு நம் அனைவரையும் பாரத மக்களாக்கும் ஒரு தன்மையை வளர்க்கக் கூடாது?”

கலாமின் வார்த்தைகளுக்கு குல்சமன் ஷெர்வானி செயல் வடிவம் அளித்துள்ளார். தைரியமான செயல் வடிவம். ஆன்மிக ஒளியும் தேசபக்தியும் இணைந்து சுடர் விடும் செயல் வடிவம். இதனைக்கூறும் போதே மற்றொரு விஷயமும் நினைவுக்கு வருகிறது.
தற்போது நின்றுவிட்ட ஜெண்டில்மேன் பத்திரிகையில் பிஸ்மில்லாகானுடனான ஒரு பேட்டி பத்துவருடங்களுக்கு முன் வெளிவந்திருந்தது. அந்த பத்திரிகை நிருபர் கேட்ட கேள்வி முகம் சுளிக்க வைத்தது. ‘நீங்கள் ஏன் பாகிஸ்தான் போகவில்லை?’ ஆனால் ஆலகால விஷத்துக்கு பின்னால் அமுதம் வரும் என்பது போல பிஸ்மில்லாகான் அவர்களின் பதில் அமைந்திருந்தது. “ஏனெனில் இங்குதான் கங்கை அன்னை உள்ளாள் இங்குதான் மந்திர் இருக்கிறது.”

அவரது மறைவுக்கு பின்னர் அவரது மைந்தர் ஒரு பத்திரிகை பேட்டியில் கூறியிருந்தார்: “அவரை அமெரிக்கா அழைத்த போது அவர் மறுத்துவிட்டு கூறினார். பகீரதன் கங்கையை விண்ணிலிருந்து பூமிக்கு அழைத்து வந்தார். அது போல ஒரு பகீரதன் கங்கையை அமெரிக்காவிற்கு அழைத்து செல்லட்டும். சென்றால் அப்போது நானும் வருகிறேன்.”

அர்ஜுன் சிங்குகளும் மன்மோகன்சிங்குகளும் காப்பாற்றத் தவறிய பாரத அன்னையின் தவ மந்திரத்தின் மேன்மையை பாதுகாக்க தன் உடல் வருத்தி குரல் கொடுத்த இந்த இளைஞர் கபீர், ரஸ் கான், அஷ்பகுல்லாகான், முகமது கரீம் சாக்லா, தியாகி ஹமீது, ஷேக் சின்ன மௌலானா, பிஸ்மில்லாகான், அப்துல் கலாம் எனத் தொடரும் என்றும் வரண்டிடாத சரஸ்வதி நதி ஜீவ பிரவாகத்தின் கிளையாக ஒளிர்கிறார்.

செப்டம்பர் 7 இல் வரப்போகும் வந்தேமாதரத்தின் நூற்றாண்டு விழாவில் சிறப்பிக்கப்பட வேண்டியது இந்த இளைஞரைத்தான். வந்தேமாதரத்திற்கு துரோகம் செய்த ஓட்டுவங்கி பொறுக்கிகளான அரசியல்வியாதிகள்தான் ஆனால் மேடையேறி அசிங்கங்களை அரங்கேற்றப்போகிறார்கள். என்ன செய்வது…முகமது கரீம் சாக்லா பாரத அரசியல்வியாதிகளை குறித்து கூறிய ஒரு விஷயம் : “மதசார்பற்ற அரசியல்வாதிகள் எனத் தங்களைச் சொல்லிக்கொள்கிறவர்கள் ஒவ்வொருமுறையும் தேசியவாத முஸ்லீம்களை ஒதுக்கி வகுப்புவாத இஸ்லாமியவாதிகளை தாஜா செய்துவந்துள்ளனர். இவ்விதமாக தேசிய முஸ்லீம்களுக்கு துரோகம் செய்திருக்கின்றனர்.”

வந்தேமாதர கீதத்தின் நூற்றாண்டு விழாவில் தேசத்தின் பதாகையை தலைநிமிர வைத்திருக்கும் அந்த இஸ்லாமிய இளைஞரின் பாதம் பணிந்து கூறிடுவேன்.

வந்தே மாதரம்! வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

நன்றி: ‘Muslim youth fasts against fatwa’: IANS, ஆகஸ்ட் 22, 2006

Series Navigation

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்