திண்ணை வாசகர்களுடன் தொடரும் உறவுகள்

This entry is part [part not set] of 39 in the series 20060825_Issue

மலர் மன்னன்


சில தினங்களுக்கு முன் பெங்களூர் சென்றுவிட்டு சென்னை திரும்புவதற்காக இரவு காவேரி துரித ரயிலின் வரவுக்கென ஐந்தாம் எண் பிளாட்பாரத்தில் காத்திருந்தேன். தற்சமயம் அந்த நடைமேடையில் புதிய கற்கள் பாவும் பொருட்டுப் பழைய கற்களைப் பெயர்த்துப் போட்டிருக்கிறார்கள். தரையெல்லாம் செம்மண் புழுதி மண்டிக் கிடக்கிறது.

நான் அமர்ந்திருந்த இடத்திற்கு அருகாமையில், இளம் வயது கணவன், மனைவி, மூன்று வயது ஆண் குழந்தை என ஒரு அழகான சிறு குடும்பமும் வந்தமர்ந்ததை முதலில் நான் கவனிக்கவில்லை. எப்போதும்போல் என் சுபாவப்படி ஒரு புத்தகத்தைப் படிப்பதில்
முனைந்திருந்தேன். கணவனான இளைஞர் என்னிடம் பேச்சுக் கொடுத்தார். படிக்கும் புத்தகம் பற்றி விசாரித்தார். தனக்கும் படிக்கும் பழக்கம் உண்டென்றார். நானும் எழுதுகிறவன்தானா எனக் கேட்டார். ஆம் என்றேன். பெயரைத் தெரிந்துகொள்ள விரும்பினார். சொன்னேன். உடனே அவர் மிகவும் பரபரப்படைந்தவராக எழுந்துவிட்டார். திண்ணையில் நீங்கள் எழுதுவதைத் தொடர்ந்து படிப்பவன். உங்களுக்கு மின்னஞ்ல்களும் எழுதியிருக்கிறேன். அமெரிக்காவில் இருந்துவிட்டு இப்போது பெங்களூரில் ஒரு நிறுவனத்தில் சேர்ந்துள்ளேன். என் பெயர் ரங்கராஜன் என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டு, செம்மண் புழுதித் தரையாக இருப்பதையும் பொருட்படுத்தாமல் நான் மிகவும் கூச்சப்படுமாறு, நான் தடுத்தும் கேளாமல் முழு உடலமும் தரையில் பட என்னை விழுந்து வணங்கினார்.

திண்ணையில் நான் எழுதத் தொடங்கிய பிறகு எனக்கு இவ்வாறான அனுபவம் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. திண்ணையின் வாசகப் பரப்பு எவ்வளவு விரிவாக உள்ளது என்பதை இடைவிடாமல் எனக்கு அறிவுறுத்தி வருகின்றன, இம்மாதிரியான சம்பவங்கள். மேலும், என்னைச் சந்திக்க நேரிடும் திண்ணையின் வாசகர்கள் இவ்வாறு என்னோடு ஒன்றிப்போவதும் என்னிடம் மிகுந்த மரியாதை செலுத்துவதும் நான் எடுத்துச் சொல்லும் விஷயங்களுக்காகவேயன்றி எனக்காக அல்ல என்பதை நன்கு உணர்ந்தேயிருக்கிறேன்.

வெளியூர்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் அவ்வப்போது மின்னஞ்சல் அனுப்பும் வாசகர்கள் தாம் சென்னை வரவிருப்பதாகவும் அப்போது என்னைக் காண விரும்புவதாகவும் தெரிவிக்கிறார்கள். எனக்காக என்ன கொண்டு வரவேண்டும் என்று நான் பெற்றெடுத்த பிள்ளைகளைப்போலக் கேட்கிறார்கள். நெஞ்சம் நிறையப் பாசத்துடன் வாருங்கள் அதற்கு மிஞ்சிய பரிசு எதுவுமில்லை என்று அவர்களுக்குப் பதில் எழுதுகிறேன்.

நேரில் என்னைக் காணும்போது இவர்கள் எனக்கு ஏதாவது செய்தேயாக வேண்டும் என்று தவிக்கிறார்கள். திண்ணை வாசகர்கள் வாசிப்பதோடு நின்றுவிடாமல் தங்களுக்குச் சரியென்று படுகிற விஷயங்களில் உருப்படியாக ஏதேனும் செய்தாகவேண்டும் என்கிற தவிப்பும் உள்ளவர்களாக இருப்பதை இவ்வாறாக அனுபவப் பூர்வமாக உணர்ந்துள்ளேன். இத்தகைய அபாரமான மனித ஆற்றல் வீணாகிவிடாமல் நம்முடைய தேசநலனுக்கு நன்கு பயன்படுவதற்கான செயல் திட்டம் எதையேனும் திண்ணை மேற்கொண்டால் அது மிகச் சிறந்த தொண்டாக இருக்கும்.

நான் யார் என்பதைத் தெரிந்துகொண்டபின் எனக்கு உபசாரங்கள் செய்வதில் ரங்கராஜன் மிகுந்த கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார். அவசியமில்லை என்ற போதிலும், நான் மறுத்துங்கூட, தனது குடும்பத்தைக் காட்டிலும் என்னை முக்கியமாகக் கருதி முதலில் என்னை வண்டியில் ஏற்றிவிட்டுத்தான் மனைவியையும் குழந்தையையும் கவனிக்கச் சென்றார்.

திருவல்லிக்கேணியில் உள்ள தன் பெற்றோருடன் சில தினங்கள் இருந்துவிட்டுப் போவதற்காகச் சென்னைக்குப் பயணமாகியிருந்தார், ரங்கராஜன். மறுநாள் மாலை எனக்கும் திருவல்லிக்கேணி செல்லவேண்டியிருந்தது. காலச்சுவடு கண்ணன் அழைத்திருந்தார். காலச்சுவடு அலுவலகத்திலேயே ஒரு புத்தக்கடையும் திறக்கப்போவதாகவும் அந்த நிகழ்ச்சிக்கு நானும் வரவேண்டும் என்றும் சொல்லியிருந்தார். இதனை நான் ரங்கராஜனிடம் தெரிவித்தேன். திருவல்லிக்கேணி வரும்போது தனது வீட்டிற்கும் வரவேண்டும் என்று ரங்கராஜன் சொன்னார்.

மறுநாள் மாலை காலச்சுவடு புத்தகக்கடைத் திறப்பிற்கு ரங்கராஜனையும் வருமாறு கூறியிருந்தேன். அவரும் வந்தார். நிகழ்ச்சி நடந்தேறியபின் என்னை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்கு அவர் பெற்றோருடனும் அவருடைய மனைவி யுடனும் உரையாடி மகிழ்ந்திருக்கையில் சமீபத்தில் திருமணமான அவருடைய நண்பர் சத்யா தன் மனைவியுடன் வந்தார்.

சத்யா மலேசியாவின் தலை நகர் கோலாலம்பூரில் ஒரு நிறுவனத்தின் காஸ்ட் அக்கவுன்டென்டாகப் பணியாற்றுகிறார். மலேசியா தன்னை இஸ்லாமிய நாடு என அடையாளப்படுத்திக் கொண்டிருப்பினும் பிற சமயத்தவரும், இனத்தவரும் அவரவர் நம்பிக்கைகளுக்கும் கலாசாரப் பண்புகளுக்கும் ஏற்ப வாழ்வதை அனுமதிக்கும் நாடுதான்.

சமீபத்தில் அங்கு நடந்த ஒரு நிகழ்ச்சி பற்றிய தகவலை சத்யா தெரிவித்தார்:

மலேசியாவில் சிறுபான்மையினர் சிலர் இணைந்து தங்களுக்குப் பொதுவான விஷயங்கள் குறித்துப் பேசுவதற்காக ஒரு கூட்டம் நடத்தத் திட்டமிட்டனர். உடனே அதற்கு அந்த நாட்டின் பிரதமரிடமிருந்தே கண்டனம் வந்துவிட்டது.

பன்முகத்தன்மையும் பல்வேறு காலாசாரங்கள், நம்பிக்கைகளும் சங்கமித்துள்ள மலேசிய சமுதாயத்தில் இவ்வாறு சிறுபான்மையினர் தங்களைத் தனிமைப் படுத்திக்கொண்டு தங்களுக்குள் கூட்டம் நடத்த முற்படுவது மலேசியாவின் பன்முக ஒருமைப்பாட்டிற்கு ஊறு விளைவிக்கும் என்பதுதான் கண்டனத்தின் சாராம்சம்.

மலேசியாவைவிட நமது பாரத தேசத்திற்குத்தான் பன்முகத்தன்மை என்கிற வடிவம் முற்றிலுமாகப் பொருந்தும். ஆனால் இங்குள்ள மனப்போக்கு எப்படி உள்ளது?

மலேசியாவின் சிறுபான்மையினர் தமக்குள்ளாக கூட்டம் கூடிப் பேசத்திட்டமிட்டனர், அவ்வளவே. அவர்கள் தமது கூட்டத்தில் விவாதிக்கவிருப்பது என்ன என்பதுகூடத் தெரியவந்திருக்கவில்லை. ஆனால் சிறுபான்மையினர் அவ்விதம் தமக்குள் கூட்டம் கூடிப் பேச முற்படுவதே தேசத்தின் பன்முகத்தன்மைக்கு விரோதம் என்று நாட்டின் பிரதமரிடமிருந்தே கண்டனம் பிறக்கிறது.

இங்கோ, ஆர்ப்பாட்டம், ரகளை, அடாவடி என வரம்பு மீறிய செயல்கள் பலவற்றிலும் தங்கு தடையின்றி சிறுபான்மையினர் ஈடுபட எவ்விதத் தடங்கலும் இல்லை. எது உருப்படும் சொல்லுங்கள், பரத சமுதாயமா, மலேசிய சமுதாயமா?

அண்மைக் காலமாக மலேசியாவிலும் முகமதிய அடிப்படைவாதம் வலுத்துவருவதாக சத்யா மேலும் தெரிவித்த தகவல் கவலைக்குரியது. ஒரு காலத்தில் முற்றிலும் ஹிந்து ராஜ்ஜியமாக இருந்த தேசந்தான் மலேசியா! இன்று அது ஒரு முகமதிய தேசம்!

பாரதம் இன்றைக்கு எதிர்கொள்ள வேண்டியிருக்கும் நிலைமைகள் குறித்து சத்யாவும் மிகுந்த அக்கரையுள்ளவராகத் தெரிந்தார். இளைய தலைமுறையில் கணிசமான பகுதி சரியான திசைவழியில்தான் செல்கிறது என்பதை எனக்குப் புரியவைக்கின்றன இத்தகைய திண்ணை வழியூடே நிகழும் சந்திப்புகள்.

யுக தர்மம் பற்றி நான் திண்ணையில் எழுதியதைப் படித்துவிட்டு எனக்கு வரத் தொடங்கியுள்ள மின்னஞ்சல்கள், சில பிரச்சனைகளை நான் தொடவில்லையென்றும் அவை குறித்தும் நான் எழுதியாகவேண்டும் என்றும் வற்புறுத்துகின்றன. ஒவ்வொருமுறை நான் எழுதுவது வெளியாகிறபோதும் இவ்வாறான எதிர்பார்ப்புகள் திண்ணை வாசகர்களிடமிருந்து வரத் தொடங்கிவிடுகின்றன. ஒருவிதத்தில் இது மகிழ்ச்சி தருவதுதான் என்றாலும் நிரம்ப வேலை வாங்குவதும்கூட.

இஸ்ரேல்லெபனான் விவகரங்கள், இஸ்ரேல் மீது நாம் காட்டும் அபிமானம் சரியா, என்றெல்லாம் நான் எழுதவேண்டும் என்று கேட்கிறார்கள். நல்லவேளையாக என்னைக் காட்டிலும் வெகு சிறப்பாக அனல் தூங்கும் கண்ணன், வஜ்ரா சங்கர், நேசக்குமார் ஆகியோர் கடந்த திண்ணையில் இவை குறித்து எழுதிவிட்டார்கள். எனக்கு வேலையில்லாமல் செய்து உதவிய அவர்களுக்கு நன்றி.

வரலாற்று ஆதாரப்படி மிகவும் சரியாக எடுத்துக்காட்டியவாறு, யூதர்கள் நாலாபுறங்களிலும் சிதறடிக்கப்பட்டவர்களேயன்றி அவர்களாக விரும்பி வெளியேறியவர்கள் அல்ல. இவ்வாறு அலைக்கழிந்த ஒரு யூதர் குழு நமது பாரத தேசத்தின் மேற்குக் கரையிலும் ஒதுங்கித் தஞ்சம் புகுந்தது. உலகிலேயே பாரத தேசம் ஒன்றில்தான் வழிபாட்டு சுதந்திரத்துடன், பிறரால் எவ்விதத் தொந்தரவுமின்றி யூதர்கள் வாழ முடிந்துள்ளது என்று இஸ்ரேல் உருவான சமயத்தில் பாரத தேசத்திற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. நியாயப்படி அந்தக் கணத்திலிருந்தே தொடங்கியிருக்கவேண்டும், இஸ்ரேல் மீதான நமது அபிமானம். ஏனெனில் பாரத தேசத்திடம் இவ்வாறு நன்றி பாராட்டியவர்கள் வெகு குறைவே!

ஆனால் நம்மிடம் நன்றி பாராட்டிய இஸ்ரேலை நாம் ஒரு தேசமாக அங்கீகரித்து அதனுடன் ராஜீய உறவுகொள்ள முன்வரவில்லை என்பதுதான் கடந்தகால வரலாறு! இதற்கு நாம் கற்பித்துக்கொண்ட நியாயமோ, மிகவும் வெட்கக்கேடானது. இஸ்ரேலுக்கு நாம் அங்கீகாரம் வழங்கினால் அரபு தேசங்கள் நம்மிடம் கோபித்துக் கொள்ளுமாம். அவற்றின் ஆதரவை நாம் இழக்க நேரிடுமாம். இப்படித்தான் சொன்னார்கள் அன்று நமது வெளியுறவுக் கொள்கையை வகுத்துச் செயல்படுத்திய நேருவிய ராஜீயதந்திரிகள்! இவ்வளவுக்கும் அரபு தேசங்கள் ஒருதடவைகூட உலக அரங்கில் நமக்குச் சாதகமாக நடந்துகொண்டதாகச் சரித்திரம் இல்லை. மாறாக மத ஒற்றுமையின் அடிப்படையில் அவை பாகிஸ்தான் பக்கம் சாயவும் தவறியதில்லை! பல ஆண்டுகள் கழிந்தபின்அரபுநாடுகளிடமிருந்து ஆட்சேபம் இருக்காது என்று உறுதியான பிறகே இஸ்ரேலுடன் ராஜீய உறவுகொள்ளும் துணிவு பிறந்தது, நமக்கு. வெளியார் நிர்பந்தங்களுக்கு ஏற்ப நமது வெளியுறவுக் கொள்கை அமைவதாகக் குற்றஞ் சாட்டும் இடதுசாரிகளுக்கு இந்த விஷயம் மட்டும் ஏனோ உறுத்துவதே இல்லை!

பாரதத்தின் மேற்குக் கரையில் நிம்மதியாகக் குடியமர்ந்த யூதக் குடும்பங்கள் காலப்போக்கில் நமது கலாசாரத்துடன் ஒன்றிப் போய் சுமுகமாக வாழப்பழகிவிட்டதால் பாரத யூதர்களைப் பொருத்தமட்டில் அவர்கள் விரும்பினால் எப்போது வேண்டுமானாலும் பாரதத்திற்கே திரும்பிச் சென்றுவிட முனையலாம் என்கிற சலுகைகூட வழங்கப்பட்டது! இவையெல்லாம் அறுபது ஆண்டுகளுக்கு முற்பட்ட மறந்துபோன விஷயங்கள்.

அடுத்தபடியாக என்னிடமிருந்து திண்ணை வாசகர்கள் எதிர்பார்க்கும் விவரங்கள் தெற்கு லெபனான், ஆப்கானிஸ்தான்பாகிஸ்தான், பாரதம்நேபாளம் ஆகியவை பற்றியெல்லாம் சின்னக் கருப்பன் எழுதியவற்றில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள்பற்றி.

முதலில் திண்ணை வாசகர்கள் தெரிந்துகொள்ளவேண்டியது நான் சகலமும் அறிந்த மேதாவியல்ல. என்னிடம் உள்ள தகவல்கள் ஒருக்கால் தவறாகவும் இருக்கக்கூடும். ஏனெனில் அவை முழுக்க முழுக்க ஞாபகத்தின் அடிப்படையில்தான் தெரிவிக்கப்
படுகின்றன. மிகவும் சராசரியான பொதுஅறிவுள்ளவனான எனக்கு, விவரம் தெரியத் தொடங்கிய வயதில் பல்வேறு விஷயங்கள் குறித்தும் தெரிந்துகொள்ள ஆர்வங்காட்டியவன் என்பதைத் தவிர வேறு யோக்கியதாம்சம் எதுவும் இல்லை.

தெற்கு லெபனான் ஷியா பிரிவு முகமதியர் அதிகம் வசிக்கும் பகுதி. முகமதிய பயங்கரவாத இயக்கமான ஹிஸபுல்லா அங்குதான் மையம் கொண்டுள்ளது. அது இஸ்ரேலை ஒட்டியுள்ள பகுதியாதலால் அங்கிருந்து இஸ்ரேலுக்குத் தொல்லை கொடுப்பது அதற்கு மிகவும் வசதியாக உள்ளது. லெபனான் அரசின் அதிகாரப்பூர்வ ராணுவத்திற்கும் இதற்கும் வித்தியாசமில்லை என்கிற அளவுக்கு லெபனானில் நிலைமை ஹிஸபுல்லாவுக்குச் சாதகமாக உள்ளது. லெபனான் அமைச்சரவையிலேயே அதற்கு இரு பிரதி நிதிகள் உள்ளனர். பயங்கரவாத இயக்கத்திற்கு ஆட்சியில் இடமளிக்கிற அளவுக்கும் ஆட்சிப் பொறுப்பையே ஒப்படைத்துவிடுகிற அளவுக்கும் துணிந்துவிட்ட லெபனான், பாலஸ்தீனம் ஆகிய தேசங்களை ஜன நாயக ஆட்சியுள்ள நமது நாடு, பயங்கரவாதத்தால் பலத்த சேதமடைந்துவரும் நமது தாயகம், ஆதரிக்க வேண்டும் என வலியுறுத்துவது வியப்பிலும் வியப்பு.

ஆப்கானிஸ்தானில் சோவியத் யூனியனுக்குச் சாதகமான ஆட்சி இருந்தவரைதான் அதற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பிணக்கு இருந்தது. தாலிபான் அங்கு அதிகாரத்தைக் கைப்பற்றியபின் இரு நாடுகளும் ஒட்டி உறவாடவே செய்தன. வாஸ்தவத்தில் இரு நாடுகளுக்கிடையே எல்லைக் கோடே இல்லாத அளவுக்கு குலாவல் இருந்தது. தாலிபானைத் தேடி அழிக்க அமெரிக்கப் படை வந்த காலத்திலேகூடப் பாகிஸ்தானின் ராணுவம் தாலிபானுடன் தோளொடு தோள் இணைந்து அமெரிக்காவுக்கு எதிராக, பாகிஸ்தான் அரசின் அதிகாரப் பூர்வ நிலைப்பாட்டிற்கு முற்றிலும் மாறாக இயங்கியது. பாகிஸ்தான் மண்ணில் இருந்துகொண்டுதான் தாலிபானை மடக்க முடியும் என்பதால் பாகிஸ்தான் அரசின் ஆதரவை முன்னிட்டு அமெரிக்கா இந்த முரணைப் பெரிது படுத்தவில்லை என்பதோடு, தாலிபனோடு சேர்ந்து இடையில் சிக்கிக் கொண்ட பாகிஸ்தான் ராணுவத்தின் ஒரு பிரிவைத் தானே காப்பாற்றிக் கரை சேர்க்கவும் முன்வந்தது! பாகிஸ்தானுக்கும் ஆப்கனிஸ்தானுக்கும் இப்போது மீண்டும் பிணக்கு ஏற்பட்டிருப்பதற்குக் காரணம், பாகிஸ்தானின் பாராமுகம் காரணமாக தாலிபானுக்கு உருவாகியுள்ள கோபமும், ஆப்கானிஸ்தானில் இப்போதுள்ள அரசு பாகிஸ்தான் ராணுவம் ரகசியமாகத் தாலிபானுக்கு ஆதரவு தருவது குறித்து அடைந்துள்ள எரிச்சலும்தான்.

இனி, நேபாளத்திற்கும் நமக்குமிடையே பனிப் போர் நிலவுவதாக க் கூறப்படுவது எந்த அளவுக்குச் சரியென்று பார்க்கலாம்: பாரதம் தொடக்க முதலே நேபாளத்தின் பாதுகாப்பிற்குப் பொறுப்பேற்றுவந்துள்ளது. பூகோள ரீதியான நேபாளத்தின் இருப்பு இவ்வாறான பொறுப்பை பாரதத்திற்கு வழங்கியுள்ளது. நேபாளத்தின் வர்த்தகம், பொருளாதாரம் ஆகியவற்றுக்கும் இவ்வாறே பாரதம் உதவியாக உள்ளது. எனினும், நேபாளம் பாகிஸ்தான் உளவாளிகள், பயங்கரவாதக் கும்பல்கள், போதை மருந்து கடத்துவோர், பாரதத்திலிருந்து தப்பியோடும் குற்றவாளிகள் ஆகியோர் எவ்விதத் தடையுமின்றி இயங்க இடமளித்து
வருகிறது, முக்கியமாகத் தனது இயலாமையினாலும், பொறுப்பின்மையினாலும். நேபாளத்தில் எதற்கெடுத்தாலும் பாரதத்தின் கையை எதிர்பார்க்கும் நிலை இருப்பதாலும் அங்கு பாரத துவேஷப் பிரசாரம் வலுப்பெற்று வருகிறது. மவோயிஸ்டுகள் தங்கள் ஆதரவைப் பெருக்கிக் கொள்வதற்காக பாரத துவேஷப் பிரசாரத்தைத் தூண்டிவருகிறார்கள். இதனால் பாரதம் அதிருப்தியடைந்துள்ளது. நேபாளத்தின் மீது தனது செல்வாக்கு குன்றினால் சீனாவுக்கு ஆதாயமாகிவிடும் என்கிற கவலை இருப்பதால் பாரதம் தொடர்ந்து நேபாளத்திற்கு நிதி உதவி உள்ளிட்ட சகாயங்களை அளித்து வருகிறது. மற்றபடி பனிப்போர் என்று சொல்லும் படியாக இரு நாடுகளுக்கிடையே எதுவும் இல்லை. மாவோயிஸ்ட்களின் பாரத் துவேஷப் பிரசாரம் அங்கு வலுத்து வருகிறது. ஆனால் நமது அரசினரும், இங்குள்ள இடதுசாரிகளும் மாவோயிஸ்ட்களுக்குச் சாதகமான சமிக்ஞைகளைக் காட்டிவருகின்றனர்!

அரச குடும்பத்தினரே கள்ளக் கடத்தலில் மும்முரமாக இயங்கும் விசித்திர தேசம் நேபாளம். பெயரளவுக்குத்தான் அங்கே ராஜாங்கம். எவர்வேண்டுமானாலும் சர்வசாதாரணமாக நுழைந்துவிடலாம். சில ஆண்டுகளுக்கு முன் நேபாளத்தில் பாகிஸ்தானின் தூதுவரக அதிகாரி ஒருவர் பாரத தேசத்தின் பொருளாதாரத்தைச் சிதைக்கும் பொருட்டு கட்டுக் கட்டாக பாரத தேசத்து கரன்சி நோட்டுகளைப் போன்ற கள்ள நோட்டுகளை எடுத்துவந்து பாரத தேசத்திற்குள் புழங்க முயற்சி செய்தபோது கையும் களவுமாகப் பிடிபட்டார். ஆனால் அவரை பத்திரமாகப் பாகிஸ்தான் செல்ல அனுமதியளித்து உதவியது, நேபாளம். வழக்கம் போல் நாமும் நமது அண்டை அயலாருடன் சுமுகமாக இருப்பதுதான் நல்லது என்று அதைக் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டோம்!

நண்பர்களை நம்மால் தேர்ந்துகொள்வது சாத்தியம். ஆனால் அண்டை வீட்டாரை அவ்வாறு தேர்வு செய்துகொள்வது சாத்தியமில்லைதான். ஆனால் அதற்காக நமது நலன்களை விட்டுக் கொடுத்தாவது அண்டை வீட்டாருடன் சுமுகமாக வாழ முனைவது அறிவுடமையாகாது. மேலும் மேற்கிலும் கிழக்கிலும் உள்ள நமது முக்கிய அண்டை வீட்டார், கொள்ளிக் கட்டையால் தலையைச் சொறிந்துகொள்கிற மாதிரி நாமாகவே உருவாக்கிக்கொண்டவர்கள்தான் என்பதை மறப்பது நல்லதல்ல. இலங்கை, பர்மா, ஆகியவையும்கூட ஒரு காலத்தில் பாரதத்தின் அங்கங்களாக இருந்தவையேயன்றி, அண்டை வீடுகளாக அல்ல!

+++

Series Navigation

மலர் மன்னன்

மலர் மன்னன்