ஜிஹாத் எனும் இஸ்லாமிய கடமை!

This entry is part [part not set] of 36 in the series 20060818_Issue

இப்னு பஷீர்


‘இஸ்லாம் என்றாலே பயங்கரவாதம்’ என்ற துவேஷப் பிரச்சாரம் இஸ்லாமிய எதிர்ப்பு பிரச்சாரகர்களால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பரப்பப் பட்டு வருகிறது. ஊடகங்களின் துணையோடு இவர்களின் குரல் உரத்து ஒலிக்கிறது. உரக்கச் சொல்வதெல்லாம் உண்மையாகி விடுமா? இவர்கள் சொல்வது போல், இஸ்லாம் வன்முறையை தூண்டும் மார்க்கமா?

குர்ஆன் என்ன சொல்கிறது?

“நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்கு பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்பபடும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரை கொலை செய்கிறானோ, அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும் எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்.” (குர்ஆன் 5:32). அப்பாவி பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வண்ணம் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுபவர்களை இஸ்லாம் கடுமையாக கண்டிக்கிறது என்பதற்கு மேற்கண்ட குர்ஆன் வசனம் ஒரு உதாரணம்.

ஆனால் இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் ‘இஸ்லாம் வன்முறையைத் தூண்டுகிறது’ என்கிற தமது துவேஷப் பிரச்சாரத்திற்கு பலம் சேர்ப்பதற்காக அடிக்கடி எடுத்துக்காட்டும் திருமறை வசனங்களிள் ஒன்று, அத்தியாயம் 9-ன் 5-ம் வசனம். “முஷ்ரிக் (எனப்படும் இறைவனுக்கு இணைவைப்பவர்)களை கண்ட இடங்களில் வெட்டுங்கள்; அவர்களை பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள் ” எனும் இந்த வசனத்தை பிரபல பத்திரிக்கையாளர் அருண் ஷோரி கூட தனது ‘ஃபத்வாக்களின் உலகம்’ என்ற நூலில் பக்கம் 572-ல் மேற்கோள் காட்டி இஸ்லாம் மீது அவதூறு சுமத்தியிருக்கிறறர். இவ்வாறு அவதூறு பரப்புபவர்கள், இதே வசனத்திற்கு முன்புள்ள 9:4-ஐயும் பின்புள்ள 9:6-ஐயும் கவனமாக தவிர்த்து விடுவார்கள். அருண் ஷோரியும் அதைத்தான் செய்திருக்கிறார்.

இந்த வசனம் எந்தச் சூழலில் யாரைக் குறித்து சொல்லப் பட்டது என்பதை தெளிவாக அறிந்து கொள்ள வேண்டுமெனில், இந்த அத்தியாயத்தை முதலாம் வசனத்திலிருந்து படிக்க வேண்டியது அவசியம். அதோடு இந்த வசனம் இறங்கியதன் பிண்ணனியைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும். முஸ்லிமல்லாதவர்களில் சில பிரிவினர் இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு எதிராக செயல்பட மாட்டோம் என ஒப்பந்தம் செய்திருந்தனர். இந்த ஒப்பந்தத்திற்கு கட்டுப்பட்டு, அதற்கு மாறு செய்யாமலும், முஸ்லிம்களின் எதிரிகளுக்கு உதவி செய்யாமலும் இருக்கும் கூட்டத்தினருடன் ‘அந்த உடன்படிக்கையை பூரணமாக நிறைவேற்றுங்கள்’ என வசனம் 9:4 மூலம் நபி அவர்களுக்கு இறைவன் கட்டளையிடுகிறான். அந்த ஒப்பந்தத்திற்கு மாறு செய்பவர்களுடன் சண்டையிடும்படி வசனம் 9:5-ல் கூறும் அதே நேரத்தில், அவர்களில் யாரேனும் புகலிடம் தேடி வந்தால் அவர்களுக்கு அபயமளிக்கும்படியும் வசனம் 9:6-ல் இறைவன் அறிவுறுத்துகிறான்.

இந்த உண்மையான விளக்கத்தை மறைத்து, சண்டையிடும்படி சொல்லும் வசனம் 9:5-ஐ மட்டும் out of context-ல் எடுத்துக் காட்டி பிரச்சாரம் செய்வது இஸ்லாமிய எதிர்ப்பாளர்களின் வாடிக்கையாக இருந்து வருகிறது.

ஜிஹாத் என்றால் என்ன?

இன்று மிக அதிகமாக தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட இஸ்லாமிய மரபுச்சொல் ஜிஹாதாகத்தான் இருக்க வேண்டும். ஜிஹாத் என்றாலே மற்ற மதத்தவர்களைக் கொல்லுதல்; தாக்கி அழித்தல்; அவர்கள் மீது போர் தொடுத்தல் என்கிற ரீதியில் ஒரு தவறான கருத்தோட்டம் நிலை பெற்றிருக்கிறது. இந்த தவறான புரிதலுக்கும், கருத்தாக்கத்துக்கும் பல்வேறு காரணங்களும் பின்னணிகளும் இருக்கின்றன. மேற்கத்திய மீடியாக்களின் சளைக்காத பிரச்சாரமும் இதற்கு ஒரு காரணம். இஸ்லாத்தை முஸ்லிம்களே சரியாக விளங்கிக் கொள்ளாமல் இருப்பதும் ஒரு காரணம்.

‘முயற்சித்தல்’ எனப் பொருள்படும் ‘ஜஹத’ எனும் அரபி மூலச்சொல்லிலிருந்து பிறந்ததுதான் ‘ஜிஹாத்’ எனும் பதம். இச்சொல்லுக்கு ‘அயராத போராட்டம்’, ‘விடா முயற்சி’, ‘கடின உழைப்பு’ என்றெல்லாம் பொருள் உண்டு. குர்ஆனில் ‘ஜிஹாத்’ என்ற சொல் பல இடங்களில் நான்கு விதமான அர்த்தங்களில் இடம் பெற்றுள்ளது.

1. இணைவைப்பவர்கள், நயவஞ்சகர்களுடன் போர் புரிதல்.

2. வழிகேட்டில் இருப்பவர்களுடன் போர் புரிதல்.

3. தனது மனோஇச்சையுடன் போர் புரிதல்

4. இறைவன் காட்டிய நேர்வழியில் நடக்க முயற்சித்தல், அல்லது போராடுதல்.

இவற்றுள் முதல் இரண்டு வகை ஜிஹாதையும் முறைப்படி அறிவித்து நடத்தும் அதிகாரம் ஒரு இஸ்லாமிய அரசாங்கத்திற்கு மட்டுமே உண்டு. அதனை தனி நபர்களோ, தனிக்குழுக்களோ தன்னிச்சையாக மேற்கொள்ள முடியாது. அத்தகைய இஸ்லாமிய அரசு கூட தன்னிச்சையாக வேறொரு நாட்டின் மீது ஜிஹாத் என அறிவித்து விட முடியாது. மார்க்க ரீதியான, உலகாதாய ரீதியான, ஒழுக்க ரீதியான என எல்லா அம்சங்களையும் சீர்தூக்கிப் பார்த்தே அது முடிவெடுக்க வேண்டும். அவ்வாறு போரிடும்போது கூட பெண்களை, பொதுமக்களை, குழந்தைகளை, மதகுருக்களைத் தாக்கக்கூடாது. விளை நிலங்களைச் சேதப் படுத்தக் கூடாது. மரங்களையோ வீடுகளையோ கொளுத்தக் கூடாது. நிராயுதபாணி வீரர்களை கொல்லக் கூடாது என்றெல்லாம் இஸ்லாம் நிபந்தனைகளை விதிக்கிறது.

மேலும், இறைவன் இந்த ஆட்சியாளர்களை நீதியை நிலைநாட்டும்படி வலியுறுத்துகிறான்;

‘உங்களுக்கும், அவர்களின் நின்றும் நீங்கள் விரோதித்திருக்கின்றீர்களே அவர்களுக்குமிடையே அல்லாஹ் பிரியத்தை உண்டாக்கி விடக்கூடும்; மேலும் அல்லாஹ் பேராற்றலுடையவன்; அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன்; மிக்க கிருபை உடையவன்’ (60:7)

‘மார்க்க (விஷயத்)தில் உங்களிடம் போரிடாமலும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே, அவர்களுக்கு நீங்கள் நன்மை செயவதையும், அவர்களுக்கு நீங்கள் நீதி செய்வதையும் அல்லாஹ் விலக்கவில்லை – நிச்சயமாக அல்லாஹ் நீதி செய்பவர்களை நேசிக்கிறான்’. (60:8)

‘நிச்சயமாக அல்லாஹ் உங்களை விலக்குவதெல்லாம், மார்க்க விஷயத்தில் உங்களிடம் போர் செய்து உங்களை உங்கள் இல்லங்களை விட்டும் வெளியேற்றி, நீங்கள் வெளியேற்றப் படுவதற்கு உதவியும் செய்தார்களே, அத்தகையவர்களை நீங்கள் நேசர்களாக ஆக்கிக் கொள்வதைத்தான் – எனவே, எவர்கள் அவர்களை நேசர்களாக்கிக் கொள்கிறார்களோ அவர்கள்தாம் அநியாயம் செய்பவர்கள்’. (60:9)

அப்பாவி பொதுமக்களை வேட்டையாடுகிற யூத நடைமுறை, இஸ்லாத்துக்கும் இஸ்லாம் காட்டும் அறவழிக்கும் முற்றிலும் மாறுபட்டதாகும். அதே சமயம் தீமைகள் புயலாய் வீசும்போது மூலையில் முடங்கியிருக்க இஸ்லாம் ஊக்குவிக்கவில்லை. தனது தாய்நாடு மாற்றாரால் ஆக்ரமிக்கப்பட்டு அப்பாவி பெண்களும், குழந்தைகளும், முதியவர்களும் ஈவிரக்கமின்றி கொல்லப்படும்போது அவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கவும் பணிக்கவில்லை. மண்ணின் விடுதலைக்காக போராடுபவர்கள் தீவிரவாதிகளல்ல என்பது உலக நாடுகளால் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒன்றுதான்.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டால், ‘ஜிஹாத்’ என்ற பெயரிடப்பட்டு இஸ்லாம் மீது பழி சுமத்தப்படும் வன்முறைச் சம்பவங்கள் எதுவுமே ஜிஹாத் கிடையாது என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ளலாம்.

மேலே குறிப்பிட்ட நான்கு வகை ஜிஹாத்களில் 3-ம் 4-ம் தான் ஒவ்வொரு முஸ்லிமிற்கும் கடமையான ஜிஹாத் ஆகும். ஒரு முஸ்லிம் தன் மனத்துடன் போராடி, மன இச்சைகளை வென்று, உளத்தூய்மையை ஏற்படுத்தப் போராடுவதுதான் அவருக்கு கடமையான ஜிஹாத். மேலும், தமது வாழ்விலும் தாம் வாழும் சமூகத்திலும் நன்மைகளை ஏவுவதற்காகவும், தீமைகளை அழித்தொழிப்பதற்காகவும் ஓயாமல் பாடுபடுவதும், அந்த நோக்கத்திற்காக தம்மிடம் உள்ள அனைத்து வசதிகளையும் வாய்ப்புகளையும் ஆற்றல்களையும் திறமைகளையும் பயன்படுத்துவதும் ஜிஹாத் தான். இறைத் திருப்தியை பெறுவதே ஜிஹாதின் நோக்கமாக இருக்கவேண்டும். இன்னும் சொல்லப்போனால் எதிரிகளுடன் போரிடுவதைவிட மனதுடன் போரிடுவது தான் உயர்ந்தது. அதுவே பெரிய ஜிஹாத் (ஜிஹாதே அக்பர்) என நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தி இருக்கின்றார்கள்.

பெற்றோருக்குப் பணிவிடை செய்வதே சிறந்த ஜிஹாத் என்றும் நபியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஜிஹாதில் கலந்து கொள்ள அனுமதி வேண்டி வந்த ஒரு மனிதரிடம், “உமது பெற்றோர் உயிருடன் இருக்கிறார்களா?” என்றார்கள். அதற்கு அம்மனிதர் “ஆம்!” என்றார். “பெற்றோருக்கு பணிவிட செய்வதற்கு அரும்பாடுபடு” என்று சொல்லி திருப்பி அனுப்பினார்கள்!” (ஆதாரம்: ஸஹீஹ் புகாரி). இன்னொரு சந்தர்ப்பத்தில், பெண்களும் இஸ்லாமிய யுத்தங்களில் பங்கெடுக்க அனுமதி கேட்டபோது ” பரிபூரணமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜே பெண்களுக்கான ஜிஹாத்” எனறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) நவின்றார்கள்: “உங்களில் எவர் ஒரு தீய செயலை காண்கிறாரோ அவர் அதனை தனது கைகளால் தடுக்கட்டும். அவரால் முடியவில்லையெனில் அதை நாவால் தடுக்கட்டும். அவரால் அதையும் செய்ய முடியவில்லையெனில் அதை தம் மனத்தால் வெறுக்கட்டும். இது இறை நம்பிக்கையில் மிகவும் பலவீனமான நிலையாகும்”. (ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம்)

ஆக நன்மையை ஏவுவதும், தீமைகளுக்கு எதிராகப் பொங்கி எழுவதும் அறவழியில் போராடுவதுமே ஒவ்வொரு முஸ்லிமிற்கும் கடமையான ஜிஹாத் ஆகும். பொது மக்களுக்குத் தீங்கிழைப்பதும் அப்பாவி மக்களின் உயிரைப் பறிப்பதும் எந்த நிலையிலும் ஜிஹாத் ஆகாது.

பயங்கரவாதத்தைப் பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடு இவ்வாறு தெளிவாக வரையறுக்கப் பட்டிருக்க, சில முஸ்லிம்கள் சம்பந்தப்படும் வன்முறைச் சம்பவங்களை இஸ்லாத்தின் மீதே குற்றம் சுமத்தி அவதூற்றுப் பிரச்சாரம் செய்வது கடைந்தெடுத்த அயோக்கியத்தனத்தின் வெளிப்பாடு.

சுட்டிகள்: http://www.readislam.net/jihad2.htm
http://www.islamonline.net /servlet/Satellite?cid=1123996015820&pagename=IslamOnline-English-AAbout_Islam%2FAskAboutIslamE%2FAskAboutIslamE

பயங்கரவாதத்தைப் பற்றி இன்றைய பெரும்பான்மை முஸ்லிம்களின் கருத்து என்ன?

‘பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுபவர்களும் தாங்கள் குர்ஆனையே பின்பற்றுவதாக சொல்கிறார்களே!’ என ஒரு சந்தேகம் எழலாம். இஸ்லாத்தின் கொள்கைகளை சில முஸ்லிம்களே சரியாக புரிந்து கொள்ளாமல் இருப்பதுதான் இதற்கு காரணம். தங்களது தவறான புரிதல்களால் தனது மார்க்கத்திற்கு தாமே களங்கம் ஏற்படுத்துவதை இவர்கள் உணர்ந்து கொள்ளவில்லை. அத்தகையோரை இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் கடுமையாக கண்டிக்கிறார்கள். செப்-11 தாக்குதலைக் கண்டித்து மார்க்க அறிஞர்கள், முஸ்லிம் தலைவர்கள், அமைப்புகள் வெளியிட்ட அறிக்கைகளைச் சில வலைத்தளங்களில் தொகுத்து வைத்திருக்கிறார்கள். ( http://www.cair-net.org/html/911statements.html http://www.islamfortoday.com/terrorism.htm ).

இத்தாக்குதலை கண்டித்து உடனடியாக அறிக்கை வெளியிட்டவர்களில் குறிப்பிடத்தக்க ஒரு மார்க்க அறிஞர் எகிப்து அல்-அஸ்ஹர் பல்கலைக்கழக தலைமை இமாம் ஷேக் முஹம்மது சையது தன்தாவி அவர்கள். ( http://news.bbc.co.uk/1/hi/world/middle_east/3059365.stm ) ‘தீவிரவாதம் என்பது இஸ்லாத்திற்கு எதிரி ஆகும். தீவிரவாதத்திற்கும், தனது நாட்டை பாதுகாக்க, ஒடுக்குமுறைக்கு எதிராக போன்ற காரணங்களுக்காக இஸ்லாத்தில் அனுமதிக்கப் பட்டிருக்கும் ஜிஹாதிற்கும் இடையில் உள்ள வித்தியாசம், வானுக்கும் பூமிக்கும் இடையில் உள்ள வித்தியாசத்தைப் போன்றதாகும்’ என்பது இமாம் தன்தாவி அவர்களின் கருத்து.

இத்தாக்குதலைக் கண்டித்தவர்களில் முக்கியமான மற்றொரு மார்க்க அறிஞர் டாக்டர் யூசுப் அல் கர்ளாவி அவர்கள். ( http://en.wikipedia.org/wiki/Yusuf_al-Qaradawi ) ‘இஸ்லாம் நல்லிணக்கப் போக்கை விரும்பும் மார்க்கம். இது மனித உயிர்களுக்கு மிகுந்த மதிப்பளிக்கிறது. அப்பாவி மக்களுக்கு எதிரான தாக்குதல்களை கொடிய பாவமாக இஸ்லாம் கருதுகிறது.’ என இம்மார்க்க அறிஞர் கருத்து தெரிவித்திருக்கிறார். இவர் 1999-லிருந்தே அமெரிக்காவில் நுழைய தடை விதிக்கப் பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அப்பாவி பொதுமக்களின் உயிருக்கு பாதகம் ஏற்படுத்தும் பயங்கரவாத செயல்களுக்கு இஸ்லாத்தில் இடமில்லை என்பதற்கும் அத்தகைய செயல்களை செய்பவர்கள் யாராக இருப்பினும் அதனை முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்வதில்லை என்பதற்கும் இவையே அத்தாட்சிகள்.

****

இஸ்லாத்தை தவறாக விளங்கிக் கொண்ட சில முஸ்லிம்கள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவது இஸ்லாத்தின் மீதே களங்கம் சுமத்தப் படுவதற்கு காரணமாக அமைகிறது என்பது கசப்பான ஒரு உண்மையே! அவர்களின் செயல்களுக்கு இஸ்லாம் மார்க்கமோ பிற முஸ்லிம்களோ எவ்விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள் என்றாலும், அவ்வாறு தவறான வழியில் செல்பவர்களை நேர்வழிப் படுத்தும் பொறுப்பு முஸ்லிம் சமுதாயத்திற்கு இருக்கிறதா, இல்லையா? இந்தப் பொறுப்பை அவர்கள் எவ்வழியில் நிறைவேற்ற இயலும்?

விளக்கம் பகுதி 4-ல்

(தொடரும்)

http://ibnubasheer.blogsome.com

Series Navigation

இப்னு பஷீர்

இப்னு பஷீர்