பயங்கரவாதம் – பல தலையுள்ள பாம்பு – தேவை பலமுனை யுத்த தந்திரம், ஆயத்தம்

This entry is part of 36 in the series 20060818_Issue

நரேந்திர மோடி


பயங்கரவாதம் – பல தலையுள்ள பாம்பு – தேவை பலமுனை யுத்த தந்திரம், ஆயத்தம்

பயங்கரவாத காலங்களில் அரசும், சமூகமும்

பயங்கரவாதம் என்பது அரசாங்கங்களையும் சமூகங்களையும் , வன்முறை மூலம் பயமுறுத்தி அரசியல் மதம் மற்றும் கொள்கை ரீதியான குறிக்கோள்களை அடைவதற்கு உபயோகப்படும் திட்டமிட்ட வழிமுறை. பன்னாட்டு பயங்கரவாதம் பல நாட்டுமக்களை குறி வைக்கிறது.

பாகிஸ்தான் உருவாவதற்கு எப்படிப்பட்ட மனநிலை இருந்ததோ அது இன்றும் இருக்கிறது. பாகிஸ்தானின் உள்நாட்டு அரசியல் இந்தியாவை மையம் கொண்டது. அது உயிர்வாழ்வதே “இந்தியாவை வெறுக்கிறோம்” என்ற உணர்வின் அடிப்படையில்தான். இந்தியாவுடனான பதட்டத்தை பயன்படுத்திக்கொண்டு உலகம் முழுவதிலிருந்தும் பண உதவியைப் பெறுகிறது. ஏன் பாகிஸ்தான் இப்படிப்பட்ட வேலைகளைச் செய்கிறது என்பதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.

உலக அமைப்புகள் இன்று யார் பயங்கரவாதத்தை ஆதரிக்கிறார்கள் என்றும், யார் பயங்கரவாதத்தை எதிர்க்கிறார்கள் என்றும் பிரிந்து கிடக்கிறது. உலகம் இரண்டு முகாம்களாக அமைகிறது. முன்பு இரண்டு மாபெரும் வல்லரசுகள் இருந்தன. வரப்போகும் காலத்தில், யார் பயங்கரவாதத்தை ஆதரிக்கிறார்கள் என்றும் யார் மனிதநேயத்தை ஆதரிக்கிறார்கள் என்ற அடிப்படையில் பிரிவு அமையும்..

இந்துஸ்தானம் அப்படிப்பட்ட, பயங்கரவாத எதிர்ப்புக் குழு அமைய தனது நல்லுள்ளத்தையும் வலிமையையும் கொடுக்க வேண்டும் என்று நம்புகிறேன். நாம் எல்லோரும் இணைந்து இதற்காக போராட வேண்டும்.

இதே விஷயம்தான் குஜராத்திலும் இஷாரத் வழக்கில் நடந்தது. பத்திரிக்கைகளில் “மோடி இஷாரத்தை கொன்றார்” என்று எழுதப்பட்டன. மூன்றாம் நாள், பாகிஸ்தானிலிருந்து இஷாரத் அவர்களது இயக்கத்தைச் சார்ந்தவர் என்றும், அவள் தன்னாட்டுக்காக உயிரைக்கொடுத்தாள் என்றும் அறிவிக்கப்பட்டதும், பத்திரிக்கையாளர்கள் தங்கள் சிவந்து போன முகத்தை எங்கே வைத்துக்கொள்வது என்று ஓடினார்கள்.

செம்டம்பர் 11க்குப் பிறகு, அமெரிக்காவில் பயங்கரவாதத்துக்கு எதிரான கடுமையான சட்டங்களைக் கொண்டுவந்தது. நாட்டினுள் பிற நாட்டினர் நுழையத் தேவையான சட்டங்களைக் கடுமையாக்கியது மட்டுமல்ல, உள்நாட்டுப் பாதுகாப்பு (“ஹோம்லேண்ட் செக்யூரிட்டி”) என்ற புதிய அமைப்பை உருவாக்கி பயங்கரவாதங்களுக்கு எதிராக நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்த உறுதி பூண்டார்கள். அதே போல ஒன்று இந்தியாவில் உருவாக்கப்பட்டாலொழிய பயங்கரவாதத்துக்கு எதிராக உறுதியான செயலை இந்தியா மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்க முடியாது.

1950இலிருந்து வடகிழக்கு மாநிலங்களில் அரசுக்கு எதிரான ஆயுதம் தாங்கிய போராட்டங்களுக்கு பாகிஸ்தான் உதவி வந்திருக்கிறது. 1981இலிருந்து பஞ்சாபின் பயங்கரவாதிகளுக்கு உதவி வந்திருக்கிறது. 1989இலிருந்து ஜம்மு காஷ்மீர் பயங்கரவாதிகளுக்கு உதவி வருகிறது. உலகளாவிய பயங்கரவாதத்துக்கு, பின்லாடன் ஆதரவு குழுக்களுக்கு 1993இலிருந்து உதவி வருகிறது. தாவூத் இப்ராஹிம் போன்ற பன்னாட்டு மா·பியா கும்பல்களுக்கு பொருளாதார பயங்கரவாதத்தைச் செய்ய 1993இலிருந்து உதவி வருகிறது.

பயங்கரவாதம் என்பது மேற்கு எல்லையில் மட்டும் நடப்பதல்ல. முழு வடகிழக்கும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. இன, மொழி, மதவாத குழுக்கள் தங்களது எல்லைகளை பாதுகாக்கவும், தங்கள் அடையாளத்தை பாதுகாப்பதற்கும் பலவிதமான வன்முறை வழிகளைக் கையில் எடுத்துள்ளார்கள்.

குற்றவாளி என்பவன் ஒரு குற்றவாளிதான். ஒரு பயங்கரவாதி பயங்கரவாதிதான். பயங்கரவாதிக்கும் குற்றவாளிக்கும் மதமில்லை. மதச்சார்பின்மை கண்ணாடிகளை போட்டுக்கொண்டோ, மதவாத அணுகுமுறையிலோ அணுகக்கூடாது. ஐ.எஸ்.ஐ (பாகிஸ்தான் உளவு ஸ்தாபனம்) எல்லா இடங்களிலும் தங்களுக்கு ஆட்களை வைத்திருக்கிறது. பாவ்நகரில் ஒரு ஐ.எஸ்.ஐ குழுவை உடைத்தோம். ஒரு பிராம்மண பையனை கைது செய்தோம். அவன் இப்போது சிறையில் காலத்தை கழித்துக்கொண்டிருக்கிறான். ஐ.எஸ்.ஐ வலைகளை மதத்தோடு இணைத்து பேசக்கூடாது. இந்த ஐ.எஸ்.ஐ குழுக்கள் பல மாவட்டங்களிலும், சமூகப்பிரச்னை மிகுந்த இடங்களிலும் தோன்றுகின்றன. அங்கிருக்கும் சமூக பிரச்னைகளை எவ்வாறு உபயோகப்படுத்திக்கொண்டு பொதுமக்கள் மத்தியில் கலவரங்களை உருவாக்குவது என்று முயற்சிக்கின்றன. இப்படிப்பட்ட வரைபடம் அவர்களிடம் தயாராகவே இருக்கிறது. ஐ.எஸ்.ஐ குழுக்கள் நாடெங்கும் வேலை செய்துகொண்டிருக்கின்றன. குஜராத்தில் அவர்களுக்கு எதிரான போராட்டத்தை அரசு தொடங்கியிருக்கிறது. அவர்களுக்கு எதிராக சில வெற்றியை உருவாக்கியிருக்கிறோம்.

பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐயின் ஆதரவுடனேயே பலவிதமான பயங்கரவாத செயல்கள் இந்தியாவில் நடத்தப்படுகின்றன. துப்பு துலக்கியபோது, 1993 பம்பாய் குண்டுவெடிப்புகளுக்கு ஐ.எஸ்.ஐதான் காரணம் என்று சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இன்னமும் முக்கியமான குற்றவாளிகள் . டைகர் மேமோன் உட்பட, பாதுகாப்புடன் இருக்கிறார்கள். 1996இல் நடந்த டெல்லி குண்டுவெடிப்புகள், மும்பையில் 1997இல் நடந்த குண்டுவெடிப்புகள், 1998இல் நடந்த குண்டுவெடிப்புகள் எல்லாமே ஐ.எஸ்.ஐயின் வேலைகள்தாம். கொல்கொத்தாவில் அமெரிக்க தூதராலயத்தில் நடந்த குண்டுவெடிப்புகளும் அக்ஷர்தாம் ஆலயத்தில் நடந்த நிகழ்வும்(2002) ஐ.எஸ்.ஐயின் வேலைத்திட்டத்தை காட்டிக்கொடுத்தது.

வெளிநாடுகளின் உறவோடு இடதுசாரி தீவிரவாதம் நிலைபெற்று வருவதும் முக்கிய ஆபத்தான நிகழ்வே. சீனாவிலிருந்து நேபாள் வழியாக பீகார், ஜார்க்கெண்ட், சட்டிஸ்கார்க், ஒரிஸ்ஸா மஹாராஷ்ட்ரா ஆந்திர பிரதேஷ் ஆகிய பிரதேசங்களை தீவிரவாதத்தின் மூலம் இணைக்க முயல்கிறார்கள்.

அறிவியல் தொழில்நுட்பத்தில் மாபெரும் சாதனைகளையும், ஆராய்ச்சிகளையும், சந்திரனில் கால்பதித்ததையும், விண்வெளி கலங்களையும் கொண்டு இருபதாம் நூற்றாண்டை அடையாளப்படுத்துகிறோம். இதற்கு முன்னால், அது போன்ற சாதனைகள் எந்த நூற்றாண்டிலும் நடத்தப்படவில்லை. அந்த நூற்றாண்டில் மாபெரும் சாம்ராஜ்யங்கள் தோன்றியதும் வீழ்ந்ததும் நிகழ்ந்தது. காலனியாதிக்கத்தின் முடிவும், கொள்கைரீதியான போராட்டங்களும், லீக் ஆ·ப் நேஷன்ஸ் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையும் தோன்றின.

இரண்டாம் உலகப்போரின் முடிவில் தோன்றிய ஆயுதப்போட்டியின் விளைவாக, மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரம் மேலும் மேலும் அழிவு ஆயுதங்களின் உற்பத்தியிலும், அந்த ஆயுதங்களை முறியடிக்கிற எதிர்ப்பு ஆயுதங்களிலும் வளர்ந்து செழித்தது. அவ்வாறு மேற்கத்திய நாடுகளில் உருவாக்கப்பட்ட பாரம்பரிய ஆயுதங்களும் கருவிகளும் மூன்றாம் உலக நாடுகளுக்கு வர ஆரம்பித்தன. முக்கியமாக ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு வந்து சேர்ந்தன. மேற்குலகின் ஆயுதத் தொழிற்சாலைகள் மூன்றாம் உலக நாடுகளை ஆயுதங்களால் மூழ்கடித்தன. அளவுக்கதிகமான ஆயுதங்கள் இந்த மூன்றாம் உலக நாடுகளை பாதுகாப்பற்றவையாக ஆக்கின. இது ஆயுதங்களுக்கும் இன்னும் அதிகமான தேவையை உருவாக்கியது. இது இன்னமும் அதிகமாக மேற்கத்திய நாடுகள் ஆயுதங்களை உற்பத்தி செய்ய தூண்டின. இவ்வாறு, பயத்தை உருவாக்குவதும், ஆயுதங்களை வாங்குவதும், ஆயுதங்களை உபயோகிப்பதும், அதன் மூலம் மேலும் அதிகமான பயத்தை உருவாக்குவதும் ஒரு சாதாரண வியாபாரமாகி விட்டது.

Now how do we define terrorism?

இந்தச்சூழலில் எவ்வாறு பயங்கரவாதத்தை வரையறுக்கிறோம்?

பயங்கரவாதம் என்பது அரசாங்கங்களையும் சமூகங்களையும் திட்டமிட்ட வன்முறை மூலம் பயமுறுத்தி அரசியல் மத மற்றும் கொள்கை ரீதியான குறிக்கோள்களை அடைவதற்கு உபயோகப்படும் வழிமுறை. பன்னாட்டு பயங்கரவாதம் பல நாட்டுமக்களை குறி வைத்தது.

பயங்கரவாதத்தை நியாயப்படுத்த பலவேறு காரணங்கள், கொள்கை உட்பட, முன்னுக்கு வைக்கப்படுகின்றன. ஆனால், பயங்கரவாதத்தின் பின்னால், அரசியல் அதிகாரத்துக்கான வெறிதான் இருக்கிறது என்பது உண்மை. அவர்களது உண்மையான காரணத்தை கொள்கை என்ற முகமூடி போட்டு மறைத்துவிடுவது எளிதானது.

பய உணர்வைத்தூண்டி அதன் வழியாக தம் ஒரு சக்தியைப் பெருக்கிக்கொள்ள பயன்படுத்திக்கொள்வதே பயங்கரவாதத்தின் ஆதார சுதி. சன் சூ என்ற சீன ராஜதந்திரவாதி கூறினார், “உங்களது எல்லா போர்களிலும் சண்டையிட்டு வெற்றிபெறுவது சிறப்பல்ல. எதிரியின் எதிர்ப்பை சண்டையிடாமலேயே உடைப்பதுதான் சிறப்பு”. இதுதான் பயங்கரவாதத்தின் ஆதார சுதி. எதிரியின் உள்ள உறுதியை பய உணர்வு மூலம் உடைப்பதுதான் பயங்கரவாதத்தின் மூலம் அடைய விரும்புவது. கடந்த காலங்களில், பயங்கரவாதிகள் விளம்பரத்துக்கும் பிரச்சாரத்துக்கும் ஆர்வமுள்ளவர்களாக இருந்தார்கள் என்று கூறப்பட்டது. உலகம் முழுவதும் நடக்கும் அதிகரித்துவரும் தாக்குதல்களைப் பார்க்கும்போது, (அவை நான் தான் செய்தேன் என்று கோரப்படுவதுமில்லை, அவற்றை செய்தவர்கள் அந்த செய்கைகளை அறிவிப்பதுமில்லை), பயங்கரவாதம் செய்பவர்களின் குறிக்கோள் மாறிவருகிறது என்பதையே முடிவுசெய்யவேண்டும். இப்போது மக்கள் இறக்கவேண்டும், பயம் பரவ வேண்டும் என்பதே பயங்கரவாதிகளின் விருப்பம். குறைவான இழப்பின் மூலம் மிகவும் அதிகமான லாபத்தை அடைவதும், முன்னெப்போதையும் விட அதிகமான வலிமையுடன் தாக்குவதுமே அவர்கள் விரும்புவது.

சில வேளைகளில், வெறும் பொருளாதாரத்தையும் ஒவ்வொருநாள் உயிர்வாழ்வதையும் தாண்டி பார்க்கத்தெரியாத சில மேற்குலகு ஆராய்ச்சியாளர்கள் பயங்கரவாதத்துக்கு வறுமையை காரணமாகச் சொல்கிறார்கள். சில நாடுகளில் அது சரிப்படலாம். ஆனால், பஞ்சாபில் பயங்கரவாதம் தோன்றியபோது, அது நாட்டிலேயே மிகவும் வளமை மிகுந்த மாநிலமாக இருந்தது. பஞ்சாபில் வறுமையே இல்லை. அங்கு பசியும் இல்லை. இருப்பினும் 12 நீண்ட வருடங்களில் 14000 மக்களின் உயிரை பயங்கரவாதம் பலி வாங்கியது. எடுத்தது. என்ன காரணம்? சிலர் படிப்பறிவின்மை பயங்கரவாதத்திற்கு காரணமாக இருக்கிறது என்று கூறுகிறார்கள். வடகிழக்கில் மிகவும் படிப்பறிவு மிக்க மக்கள் இருக்கிறார்கள். ஏன் மேற்குலகில் பயங்கரவாதம் தோன்றியிருக்கிறது? அது மிகவும் செல்வச்செழிப்பில் இருக்கிறது. வெறும் சாப்பாடுதான் பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண் என்று கூறுபவர்கள் குறைப்பார்வை கொண்டவர்கள், உண்மையை பார்க்காமல் கண்களை திருப்பிக்கொள்பவர்கள்.

பயங்கரவாதத்துக்கு தேச, பௌதீக, சமூக, உணர்வு எல்லைகள் ஏதும் இல்லை. அது நோய்வடைந்த மனத்தின் குரூர வெளிப்பாடு. அதன் ஒரே தாகம் தன்னிச்சையான அரசியல் அதிகாரம். பின் லாடனுக்கு என்ன கொள்கை இருக்கிறது? எந்த ஒரு நாட்டுக்கும் அவன் எதிரி அல்ல. இருப்பினும், உலக பயங்கரவாதத்தின் முக்கியமான அடையாளமாக இருக்கிறான். பயங்கரவாதக் கொள்கை என்ன செய்கின்றதென்றால், அது மக்களின் உணர்வுப்பூர்வமான ஒரு முகத்தை சுயநலத்துக்கு உபயோகப்படுத்திக்கொள்கிறது. ஒவ்வொரு மனிதனிடத்திலும் உள்ளத்தில் ஒரு பண்பாடு இருக்கிறது. அந்த உள்ளத்தில் ஒரு நீதிக்கான குரலும் இருக்கிறது. ஒரு குழு மக்களிடம் இருக்கும் நேர்மை உணர்வை உபயோகப்படுத்திக்கொள்ளும் ஒரு குரலை ஒரு பயங்கரவாதி எழுப்புகிறான். நமக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது என்ற ஒரு பொய்யான உணர்வை மனத்தில் ஏற்றுகிறான். அந்த சமூகத்தில் உள்ள உணர்வுப்பூர்வமான காயங்களை தனக்காக உபயோகப்படுத்திக்கொள்கிறான். முன்பே விளக்கியது போல, கொள்கை என்னும் முகமூடி பூண்டு உண்மையான குறிக்கோளை மறைத்துக்கொள்கிறான். வழமையாக, கொள்கையை உருவாக்குவது எளிதானது அல்ல என்பதால், மதம் வெகு எளிதில் உபயோகப்படுத்திக்கொள்ள சுலபமாகக் கிடைக்கிறது. ஏனெனில் அது குழு மனப்பான்மையைக் கொண்டுவந்து சமூக அடையாளத்தை பயன்படுத்திக்கொள்ள எளிய உத்தி.

முன்னாள் பிரதமரான அடல் பிகாரி வாஜ்பாய் தன்னுடைய ஆட்சிக்காலத்தில் செய்த முயற்சிகளுக்காக அவருக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். முன்பு பன்னாட்டு விவாதக்களங்களில் காஷ்மீர் பற்றிய பேச்சு இருக்கும். அவரது வெளிநாட்டு கொள்கை காரணமாக இன்று பயங்கரவாதம் மைய இடத்தில் இருக்கிறது. இன்று பன்னாட்டு விவாதக்களங்களில் பயங்கரவாதத்துக்கு எதிரானவர்கள், பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்கள் என்று இரண்டாகப் பிளவு பட்டு இருக்கிறது.இந்துஸ்தானம் அப்படிப்பட்ட எதிர்ப்புக் குழு அமைய தனது நல்லுள்ளத்தையும் வலிமையையும் கொடுக்க வேண்டும் என்று நம்புகிறேன். நாம் எல்லோரும் இணைந்து இதற்காகப் போராட வேண்டும். பயங்கரவாதம் தானாகப் போய்விடாது. நாம் அதனை எதிர்த்து போராட வேண்டும்.

சமீபகாலங்களில் மிகவும் அதிகரித்திருக்கும் பயங்கரவாத வன்முறைக்கும், பயங்கரவாதம் தொடர்பான நிகழ்வுகளுக்கும் ஆப்கான் போர் முடிந்ததால் வந்திருக்கும் “எச்சமே” காரணம். இந்த எச்ச சொச்சத்தில் காலாட்படைகளும் ஆயுதங்களும் கருவிகளும் அடக்கம். இந்தப் போர்வீரர்களில் பெரும்பாலோனோர், தங்களை முஜாஹிதீன்கள் என்றும் சுதந்திரப் போராளிகள் என்றும் அழைத்துக்கொள்பவர்கள், கூலிப்படைகளாக மாறியிருக்கிறார்கள். கலாஷ்னிகோவ் துப்பாக்கி ஏந்துவது தவிர வேறெதும் தொழில் தெரியாதவர்களாக இருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானத்திலிருந்து கம்யூனிஸ்ட்கள் வெளியேற்றப்பட்டதும், அங்கிருக்கும் இஸ்லாமிய ஒற்றுமையைக் குலைக்கும் உள்நாட்டுப் போரினால், இந்த வேலையற்ற கெரில்லாக்கள் புதிய போர்க்களங்களையும் புதிய எதிரிகளையும் தேடி அலைகிறார்கள். இந்த கூலிப்படைகளை முன்பு தங்களது வெளியுறவுக்கொள்கைகளுக்காக பயன்படுத்திக்கொண்டிருந்த நாடுகள் இன்று வேறு வெளியுறவுக்கொள்கைகளுக்காக பயன்படுத்திக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். வெளியில் பயங்கரவாதத்தை எதிர்த்துக் குரல் கொடுக்கும் பல நாடுகள் இவர்களை தம் நாட்டில் ஆதரிக்கின்றன. இவர்கள் தங்கள் நாடுகளில் வாழ்வதை சகித்துக்கொள்ளவும் செய்கின்றன. பாகிஸ்தான், சூடான், ஈரான், இன்னும் சில நாடுகளை இப்படி குறிப்பிடலாம். 1994 தொடங்கி 2003 வழியே பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சூடான் ஆகியவை ஒரு அரக்கனை உருவாக்கியிருக்கின்றன என்பதும், இந்த அரக்கன் உலகத்தை வெகுகாலம் பயமுறுத்திக்கொண்டிருக்கப் போகிறான் என்பதும் எல்லா நாடுகளும் சந்தேகமின்றி தெளிவாய் உணரத் தொடங்கியுள்ளனர்.

இந்தியா கலாச்சாரமும், பாரம்பரியமும் காந்தியின் தாக்கமும் நிறைந்துள்ள நாடு. இது பயங்கரவாதத்துக்கு விளைநிலத்தை கொடுப்பதில்லை. சொல்லப்போனால், இதிலிருந்து பயங்கரவாதம் வருவதற்கு வாய்ப்பே இல்லை. இது மதம், கலாச்சாரம், ஒருவரோடு ஒருவர் பண்பாடுள்ள முறையில் பழகுவதும் கொண்ட நாடு. சாதாரண இந்திய மனம் ஆக்கிரமிப்பு மனமல்ல. அதனாலேயே இந்தியாவுக்குள் பயங்கரவாதிகளைத் திணிக்க வேண்டி உள்ளது. உதாரணமாக, காஷ்மீரில் கொல்லப்பட்ட 10 தீவிரவாதிகளில் 8 பேர் வெளிநாட்டினர். பயங்கரவாதம் கோட்பாட்டை அடிப்படையாய்க் கொண்டது என்ற வாதம் பொய்யென இந்தத் தகவல் நிரூபிக்கிறது. ஒரு ஈரானியனுக்கும், ஆப்கானிய கூலிப்படை ஆளுக்கும், காஷ்மீரின் அரசியல் நிலையைப் பற்றி என்ன அக்கறை இருக்க முடியும்?

(தொடரும்)

Series Navigation