பகலில் வரலாற்றை உருவாக்குகிறேன்

This entry is part [part not set] of 36 in the series 20060811_Issue

இக்வான் அமீர்


நாங்கள் இரவு 11 மணிக்கு வழக்கம்போல் தூங்கச் சென்றோம். இரவு 2 அல்லது 2.30 மணிக்கு நோன்பிற்காக சஹர் (நோன்புக்கால காலை உணவு) செய்தோம். சுமார் 4 மணிக்கு பங்களாவின் வாசலில் காலடிச் சத்தங்கள் கேட்டு விழித்துக்கொண்டேன். “யார் அது?” என்று வினவியதற்கு ‘தாங்கள்தானா மிஸ்டர் ஷவ்கத் அலி?’ என டிப்டி கமிஷனரான மிஸ்டர் புலூட்டன் கேட்டார். இவர்கள் கைது செய்ய வந்திருக்கிறார்கள் என உணர்ந்துக்கொண்டேன்.

புலூட்டன் கைது செய்ய வந்திருப்பதாக அறிந்ததும் முஹம்மது அலி, தயாராக இருக்கிறேன் என கூறினார். இதற்குள்ளாக தாயாரும் புர்கா அணிந்துக்கொண்டு வந்து எங்களுடன் வருவதாகக் கூறினார். அதற்கு புலூட்டன், ‘இவ்விருவரையும் அழைத்துச் செல்லத்தான் எங்களுக்கு உத்தரவு’ எனக் கூறிவிட்டார்.

முஹம்மது ஹ¤ஸைன் (குடும்ப உறுப்பினர்) என்னுடன் கட்டித் தழுவும்போது அழுது விட்டான். நான் பலமாக கன்னத்தில் ஓர் அறை கொடுத்து, ‘ஜாக்கிறதை வெள்ளையன் முன் அழக்கூடாது’ என கத்தி எச்சரித்தேன்.

ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக இருந்துவந்த அலி சகோதரர்களில் ஒருவரான மௌலானா ஷவ்கத் அலியின் டைரி குறிப்பு ஒன்றே மேலே காணப்படுவது.

இந்திய விடுதலைப் போரில் அலி சகோதரர்கள் என்று சிறப்பு பட்டம் பெற்ற சகோதரர்களில் மூத்தவர் ஷவ்கத் அலி, இளையவர் முஹம்மது அலி.

முஹம்மது அலி தமது 18 வயதில் பி. ஏ முதல் வகுப்பில் தேறி சாதனைப் படைத்தார். அதன்பின் ஆக்ஸ்போர்டிலுள்ள லின்கன் கல்லூரியில் 1898 முதல் 1902 வரை கல்வி கற்றார். மேலைக் கல்வி கற்ற அதேசமயம் சிறந்த சமயப் பற்றாளாராகத் திகழ்ந்தார். அங்கு பி. ஏ ஆனர்ஸ் படித்துத் தேறினார்.

1902-ல் முஹம்மதலி இங்கிலாந்திலிருந்து இந்தியா திரும்பினார். சிறிது காலம் ராம்பூர் சமஸ்தானத்தில் கல்வி அதிகாரியாகப் பணியாற்றினார். அதன்பின் இரண்டு வருட நீண்ட விடுப்பில் கல்கத்தா சென்று “காம்ரேட்” பத்திரிக்கையைத் தொடங்கினார். 1911 ஜனவரி 11-ம் நாள் வெளியான காம்ரேட் வெறும் இருநூற்றைம்பது ரூபாய் கைமாற்றில் ஆரம்பிக்கப்பட்டு இந்திய பத்திரிக்கை வானில் தாரகையாய் மிளிர்ந்தது. அரசியல் பிரமுகர்கள் எல்லாம் அதன் வாசகர்கள்.

ஒத்துழையாமை இயக்க நாட்களில் மௌலானா அவர்களின் பேச்சினால் ஏற்பட்ட உத்வேகத்தில் முப்பது நாட்களில் முப்பாதியிரம் ஆண்களும் பெண்களும் சிறை நிறப்பும் போராட்டங்களில் பங்கு கொண்டனர்.

பகலில் அரசியல் பணிகளும் இரவில் எழுத்துப் பணிகளுமாய் மூழ்கி இருக்கும் மௌலானா முஹம்மதலி “நான் பகலில் வரலாற்றை உருவாக்குகிறேன், இரவிலோ வரலாற்றை எழுதுகிறேன்” என்பார்.

வெள்ளையர் ஏகாதிபத்தியத்தின் கொடுமையான துன்பங்களுக்கும் வெஞ்சிறைச் சாலை களுக்கும் அலி சகோதரர்கள் அஞ்சியதில்லை. 1915 மே 15-ம் தேதி இந்திய பாதுகாப்புச் சட்டத்தை முன்னிறுத்தி ஷவ்கத் அலியும் முஹம்மதலியும் கைது செய்யப்பட்டு சிந்துவாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.

25-11-1919 அரசாங்கக் கட்டளையின்படி அலி சகோதரர்கள் விடுதலை அடைந்து நேராக அமிர்தரஸில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் கலந்துக்கொள்ளச் சென்றார்கள். அங்கு ஒருவர் முஹம்மதலியைப் பார்த்து, “தாங்கள் வெளிவந்து விட்டீர்களா?” என்று கேட்க, அவர் “ரிட்டர்ன் டிக்கட் வாங்கிக்கொண்டு வந்திருக்கிறோம்” என்றார் புன்னகையுடன்.

1923 ஆகஸ்ட் கடைசி வாரத்தில் ஜான்சியில் முஹம்மது அலி விடுதலை செய்யப்பட்டார். விடுதலைக்குப்பின் அவர் பேசிய முதல் கூட்டத்தில், “நான் விடுதலையானது எனக்கு மிகுந்த மன வருத்தத்தைத் தருகிறது, ஏனென்றால் நாட்டினுடைய பெரும் சுமை என் மீது சுமத்தப் பட்டுவிட்டது. என் அண்ணன் ஷவ்கத் அலியைவிட நான் அதிகமாக நேசிக்கும் அந்த பெருந்தலைவர் காந்திஜி இங்கு இல்லாத நிலையில் நான் சிறிய சிறையிலிருந்து பெரிய சிறைக்கு வந்திருப்பதாக உணர்கிறேன். இனி என் முதல் கடமை விடுதலையின் (சுயராஜ்யம்) திறவுகோலைத் தேடி எடுத்து இந்தியாவின் ஆத்மா (காந்திஜி) அடைப்பட்டுக் கிடக்கும் எரவாடா சிறையைத் திறப்பதுவேயாகும்!” என்றார்.

நாட்டு விடுதலைக்காக முதன் முதலில் சிறை புகுந்த பெருமை மௌலானா முஹம்மது அலியையே சாரும். அரசியல் போர்க்களங்களில் பல்லாண்டுக்கால தொடர் சிறைவாசத்தை அலி சகோதரர்கள் அனுபவித்தார்கள். அவர்களின் விடுதலையின்போது வறுமையின் கோரம் தாண்டவமாடியது. உண்ண உணவின்றி இருந்த இடத்திற்கு வாடகை கொடுக்கப் பணமின்றி சிரமப்பட்டனர். அந்த நிலையிலும் மக்கள் திரட்டிக் கொடுத்த ரூபாய் 12 ஆயிரம் பண முடிப்பையும், அவர்களை கௌரவித்து அணிவித்த ஆயிரம் பவுன் மதிப்புள்ள தங்கச் சரிகை மாலையையும் ‘கிலாபத்’ நிதியில் சேர்த்துவிட்டனர்.

லண்டன் வட்டமேஜை மாநாட்டுக்கு வைஸ்ராய் லார்டு இர்வின் கொடுத்த அழைப்பை ஏற்று மௌலானா புறப்பட்டபோது அவரது உடல்நிலை கடுமையாய் பாதிக்கப்பட்டிருந்தது. கட்டிலில் படுக்கவைத்தவாறு பம்பாய் துறைமுகத்தில் கப்பலில் ஏற்றிய காட்சி கண்ணீர் வரவழைப்பதாகும். கடுமையான நோய்களால் அவதிப்பட்ட அப்பெரியார் தம் நாடு சுதந்திரம் பெற்றேயாக வேண்டுமென்று முனைப்புடன் பயணம் செய்தார்.

லண்டன் மாநாட்டில் “சமாதானத்திற்காகவும், நேசத்திற்காகவும், சுதந்திரத்திற்காகவும் நாங்கள் இங்கு வந்தோம். இவற்றையெல்லாம் பெற்றே திரும்புவோம் என நம்புகிறேன். இல்லை என்றால் போராட்டக் குழுக்களுடன் இணைந்து விடுவோம். தேசத்துரோகிகள், கலகக்காரர்கள், வரம்பு மீறியவர்கள் என்று நீங்கள் எங்களை அழைத்தாலும் கவலையில்லை! சுதந்திரத் தாயகத்துக்கே நான் திரும்ப விரும்புகிறேன். இல்லாவிட்டால் அந்நிய நாடாக இருந்தாலும் உங்கள் நாடு சுதந்திர நாடாக இருப்பதால் எனக்கு இங்கேயே ஒரு சவக் குழி தந்துவிடுங்கள்” என்று மௌலானா வீர முழக்கமிட்டார்.

இந்த வரலாற்றுப் புகழ்மிக்க பேருரைக்குப்பின் அவரது உடல் நிலை மிகவும் சீர்குலைந்தது. 03-01-1931 ல் அவரது ஆவி பிரிந்தது.

மௌலானாவின் அடக்கம் சம்பந்தமாக பிரச்சினை எழுந்தது. உடலை இந்தியாவுக்கு அனுப்பினால் பெரும் எழுச்சி ஏற்படும் என்ற பயந்த வெள்ளையர் அரசு, பாலஸ்தீனத்திலுள்ள மஸ்ஜிதே அக்ஸாவிற்கு (ஜெருஸலம்) அருகில் நல்லடக்கம் செய்ய ஏற்பாடு செய்தது.

கடைசிவரை இந்திய விடுதலைக்காப் போராடிய மௌலானா முஹம்மது அலி ஜவஹர் உயிரைத் தன் நாட்டுக்காக ஈந்தாரே தவிர உடலைத் தரவில்லை. ஏனென்றால் அடிமை மண்ணில் சிறைப்பட அவரது உடல்கூடத் தயாராக இல்லை.

இது பழய பத்திரிக்கைத் துண்டிலிருந்து எடுக்கப்பட்டது, பெயரில்லை. – ஹமீது ஜா·பர்

நாம் அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு அறுபது ஆண்டுகளைக் கடந்துக்
கொண்டிருக்கிறோம். ஆனால் உள்ளத்திலுள்ள அடிமைத் தனம் இன்னும் நம்மை விட்டு அகலவில்லை. ஆங்கிலம் கலந்து பேசினால் எதோ உயர்ந்த நிலையில் இருப்பதாக ஒரு பேதமை நிலையில் வாழ்கிறோம். சாதி, மதம், மொழி, நான், நீ என்ற வேறுபாடுகளை கலைந்துவிட்டு நாம் அனைவருமே மனித சங்கிலியாக கை கோர்த்து வலிமை மிக்க இந்தியாவை உருவாக்குவோம் என்ற உறுதிமொழியை சுதந்திரத்திற்காக தியாகம் செய்த அனைவருக்கும் காணிக்கையாக்குவோம்.

Email: maricar@eim.ae

Series Navigation

இக்வான் அமீர்

இக்வான் அமீர்