சமூக நீதியும், இட ஒதுக்கீடும் – சில மாற்றுச் சிந்தனைகள்

This entry is part [part not set] of 39 in the series 20060630_Issue

ஜடாயு


தஞ்சை மாவட்டம் சிறிய கிராமம் ஒன்றில் வசிக்கும், அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி, ஏழை சமையல்கார சாம்பு மாமா (படித்தது 10ம் வகுப்பு வரை தான்) மகள் நந்தினி. சென்னையில் வசிக்கும், நகரின் சிறந்த தனியார் பள்ளி ஒன்றில் பயிலும், அரசு உயர் அதிகாரியாகப் பணிபுரியும் செல்வராஜ் (எம்.ஏ) மகன் சுரேஷ். இவர்கள் இருவரும் பொறியியல் கல்லூரி நுழைவுத்தேர்வுக்காப் போட்டியிடுகிறார்கள். சுரேஷை விட நந்தினி கொஞ்சம் அதிக மதிப்பெண்களும் பெற்றிருக்கிறாள், புத்திசாலி மாணவியும் கூட. ஆனால், அரசு விதிமுறைகளின்படி சுரேஷ் “மிகவும் பிற்படுத்தப் பட்ட” வகுப்பைச் சார்ந்தவர் என்று காரணம் கூறப்பட்டு, இட ஒதுக்கீடு அடிப்படையில் அவருக்கு இடமும் வழங்கப் படுகிறது. சுரேஷ் இடத்தில் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரக் குடும்பங்களில் ஒன்றான (நன்றி: வைகோ) ஒரு தனியார் தொலைக்காட்சி குழுமத்தை நடத்தும் குடும்பத்தைச் சேர்ந்த பையன் போட்டியிட்டாலும், அவனுக்கும் “மிகவும் பிற்படுத்தப் பட்ட” என்ற அடைமொழியோடு இட ஒதுக்கீடு வழங்கப் படும். வாழ்க்கையின் பலவிதமான பாதகங்கள் நிறைந்த சூழலிலும், முயன்று போராடி இவ்வளது தூரம் எதிர்நீச்சல் போட்டு வந்த நந்தினிக்குக் கிடைத்தது ஏமாற்றமும், அவமதிப்பும், தொடரும் ஏழ்மையும் தான். இதற்குப் பெயர் சமூக நீதி அல்ல. சமூக அநீதி, திட்டமிட்ட சமூக, அரசியல் மோசடி.

21ம் நூற்றாண்டின் இன்றைய சூழலில், சாதி அடிப்படையில் மட்டுமே இட ஒதுக்கீடு என்கிற சமாசாரம் கொள்கை அளவிலும், நடைமுறை அளவிலும் எங்கே தவறுகிறது என்பதை மேற்படி உதாரணம் தெளிவாக்குகிறது. சுரேஷைத் தவிர, அதே சென்னை நகரில் வசிக்கும் ரயில்வே கடைநிலை ஊழியர் ரங்கசாமி மகன் கோவிந்தசாமிக்கும் இதே இட ஒதுக்கீடு உதவி செய்கிறதே என்று கேட்கலாம்.. கண்டிப்பாக உண்மை. அதே தான் நான் சொல்ல வருவது. சமூக ஏற்றத்தாழ்வுகளைச் சமன் செய்யும் வழிமுறை என்ற பெயரில் இட ஒதுக்கீடு என்று ஒன்று இருந்தால், அது ரங்கசாமிகளுக்கும், நந்தினிகளுக்கும் உதவக் கூடியதாக இருக்க வேண்டுமேயல்லாது, வாழ்க்கையில் ஏற்கனவே காயங்கள் சுமந்த அவர்களை இன்னும் காயப் படுத்துவதாக இருக்கக் கூடாது. மேலும் இது போன்ற மேற்படி சலுகைகளுக்கு எந்த வகையிலும் தகுதியற்ற சுரேஷ் போன்ற ஆசாமிகள் நுழையப் பயன்படுத்தும் பாம்புப் புற்றாக மாறிவிடக் கூடாது.

தமிழ்நாட்டின் இன்றைய நிதரிசனம் என்ன? இந்த சூழலில் சில மாற்றுச் சிந்தனைகளை முன்வைப்பது அவசியமாகிறது.

1. தலித் மற்றும் பழங்குடியினருக்கான (SC/ST) இட ஒதுக்கீடு அப்படியே தொடரவேண்டும். இந்த ஒதுக்கீட்டையும் நீக்குவதற்கான சமூக சூழல் இன்னும் வரவில்லை. ஏற்கனவே பயன்பெற்ற மேல்தட்டு மக்களும் (creamy layer) இந்த சாதியினரில் மிகக் குறைந்த அளவே உள்ளார்கள். இந்த சாதிகளைச் சேர்ந்தவர்கள் இட ஒதுக்ககீட்டு சலுகைகளை இன்னும் நன்றாகப் பயன்படுத்திக் கொள்வதற்கு அரசும், தனியார் தொண்டு நிறுவனங்களும் உதவ வேண்டும்.

2. விவாதத்திற்குரியது என்பது “பிற்படுத்தப்பட்ட” என்று பொதுவாக அழைக்கப்படும் BC, MBC, OBC பெயர்களில் அடங்கும் பல்வேறு சாதிகளுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு தான். குறிப்பாகத் தமிழகத்தில் “முற்பட்டவர்” என்று அப்பட்டமாக முத்திரை குத்தப்பட்ட சில பரிதாபத்திற்குரிய சாதியார் தவிர (பிராமணர்கள், சில செட்டியார், வேளாளர் உட்சாதிகள் போன்றவை), மற்ற அனைத்து சாதிக் காரர்களும் போட்டி போட்டுக்கொண்டு தங்களது சாதிகளை இந்தப் பட்டியலில் சேர்த்தாயிற்று – சாதி அரசியல், ஓட்டு வங்கி, வன்முறை, அராஜகம் போன்ற வழிமுறைகளே இதற்குப் பெரிதும் உதவின. இந்தப் பட்டியலில் இப்போது இடம் பெற்றிருக்கும் பல சாதிகள் அப்பட்டமான ஆதிக்க சாதிகளே என்பது சிறிதளவு சமூக, சரித்திர ஆராச்சியிலேயே புலப்படும். சில இதழ்கள் முன்பு திண்ணையில் வெளிவந்த ‘அட்டவணை’யின் படியும் (பார்க்க: [4]), இந்தியாவிலேயே அதிக சதவீதம் பிற்படுத்தப் பட்டவர்கள் உள்ள மாநிலம் என்கிற ‘பெருமை’யையும் தமிழகம் பெற்றிருக்கிறது. மலைவாழ் மக்கள் பெரும்பான்மையினராக வாழும் சத்தீஸ்கட், மத்தியப்பிரதேசத்தை விடவும் தமிழ்நாட்டில் அதிகம் ‘பிற்பட்டவர்கள்’ இருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! அகில இந்திய அளவில் நிலைமை இந்த அளவுக்கு மோசமாகவில்லை. அதனால் தான் இட ஒதுக்கீட்டு அரசியலை எதிர்ப்பதற்கு ஓரளவு மக்கள் சக்தியாவது உள்ளது. 100% இட ஒதுக்கீடு என்று தமிழக அரசு ஒரு பேச்சுக்காக அறிவித்தாலும் கூட, அதை எதிர்ப்பதற்குத் தமிழ்நாட்டில் நாதியிருக்காது. இதுதான் தங்கள் தலையெழுத்து என்று இட-ஒதுக்கீடு-இல்லாத-சாதியார் தங்களை நொந்துகொண்டு வேறு வழிகள் தேட வேண்டியது தான்.

3. இதில் கூடுதல் சோகம் – தமிழகத்தில், ஒதுக்கீடு இல்லாத போட்டிக்கான இடங்களின் (open competition) பெரும்பங்கையும் எப்படி ஒதிக்கீடு-பெறும் சாதிக்காரர்களே பெற்று ஏப்பம் விட்டு, ஒதுக்கீடு இல்லாத சாதிக்காரர்களின் வயிற்றில் அடிக்கிறார்கள் என்பது. (பார்க்க: [2]). இவர்களுக்கு உண்மையிலேயே மனச்சாட்சி இருந்தால் அதிக மதிப்பெண் பெற்றிருந்தாலும், இட ஒதுக்கீட்டையே பயன்படுத்துவேன் என்று சொல்லி, OC (ஓஸி?)யில் கிடைக்கும் இடத்தை, பாவப்பட்ட, இட ஒதுக்கீடு பெறமுடியாத மாணவர்களுக்கு விட்டுத் தர வேண்டும்.. ஆனால், இவர்களது சிந்தனை “நமக்கு OC-யில் இடம் கிடைத்து விட்டதே.. அந்த இடத்தை நம்ம சாதிக் (இட ஒதுக்கீடு சாதி) காரன் ஒருத்தன் எடுத்துக் கொள்ளட்டும்” என்பதாகத் தான் இருக்கிறது.. இந்த சிந்தனை சுயநலம், குரூரம் மற்றும் துவேஷ மனப்பான்மையினாலேயே உருவாகிறது.

4. இந்த BC இட ஒதுக்கீட்டையே அழித்து விட வேண்டும். SC/ST ஒதுக்கீடு போக மீதி இருக்கும் எல்லா இடங்களிலும் எல்லாரும் போட்டி போடலாம் (open competition) என்று அறிவிக்க வேண்டும். இந்தப் போட்டிக்கான “புள்ளிகளை” (points) நிர்ணயிப்பதில் தான் சமூக நீதியும், சமூக அக்கறையும் வெளிப்பட வேண்டும். (பார்க்க: [1])

5. ஒரு உதாரணத்திற்காக இப்படி எடுத்துக் கொள்வோம். 100 புள்ளிகளில், 80 புள்ளிகள் கல்வி/மதிப்பெண்கள் அடிப்படையில் அமையும் (அதாவது 100% மதிப்பெண்களை, 80க்கு normalize செய்துகொள்ளலாம்). மீதி 20 புள்ளிகள் போட்டி போடுபவரது சமூக மற்றும் தனிப்பட்ட பாதகங்களின் (social and individual disadvantages) அடிப்படையில் அமையும். இந்த 20 புள்ளிகளையும் மூன்று பிரிவாகப் பிரித்து சாதி (10), பள்ளிச்சூழல் (5), குடும்பச்சூழல் (5) என்று இவற்றுக்கேற்ப புள்ளிகள் அளிக்கலாம். இந்தப் புள்ளிகளையும் 0 அல்லது முழுதும் என்று இல்லாமல் தரவாரியாக அமைக்கலாம். உதாரணமாக, “பள்ளிச்சூழல்” புள்ளிகளில், மாணவன் +2 முடித்த பள்ளி கிராமப்புற தமிழ்வழி அரசு பள்ளியானால் 5, அரசு உதவி பெறும் சுமாரான ஆங்கிலப் பள்ளியானால் 2, உயர்தர தனியார்/கான்வென்ட் பள்ளிகள் 0. “குடும்பச்சூழல்” புள்ளிகளில், நகரில் வசிக்கும் உயர் அதிகாரி/பெருவணிகர்/புரபஷனல் இவர்களது குழந்தைகளுக்கு 0, கூலி வேலைக்காரர்/சிறுவிவசாயி/சிறுவியாபாரி இவர்களது குழந்தைகளுக்கு 5.. இப்படி நிர்ணயிக்கலாம்.

6. சாதிப் புள்ளிகளையும் 0 அல்லது 10 என்று ஒட்டுமொத்தமாக அளிக்காமல், 2-5-7-10 போன்ற தரங்கள் அமைக்க வேண்டும். ஒவ்வொரு சாதியின் மக்கள்தொகையையும், அந்த சாதியைச் சேர்ந்த ஆரம்பக்கல்வி/உயர்கல்வி பெற்றோர் விகிதத்தையும் கணக்கில் கொள்ளவேண்டும். இதற்கு சாதிவாரி சென்ஸஸ் கணக்கெடுப்பு முக்கியம். அதையும் கண்டிப்பாக செய்யவேண்டும். இல்லாவிட்டால் 1931-ம் ஆண்டுக் கணக்கை வைத்துக்கொண்டு 90-களில் மண்டல் கமிஷன், 2006-ல் இட ஒதுக்கீட்டுக்கொள்கை போன்ற அபத்தங்கள் தான் நிகழும். மிகவும் முற்போக்கான நாடான அமெரிக்காவிலேயே, இத்தகைய இனவாரி கணக்கெடுப்பை அரசு நடத்துகிறது, பல அரசுக் கொள்கைகளும் அதன் அடிப்படையில் வகுக்கப் படுகின்றன. இந்தியாவில் நிலைமையே வேறு. அதிகாரபூர்வ சாதி கணக்கெடுப்பு இல்லை என்பதெல்லாம் சும்மா பம்மாத்து, கண்துடைப்பு. எந்தெந்த சாதிகள் எந்தெந்த இடங்களில் எவ்வளவு இருக்கின்றன என்ற கணக்கெல்லாம் அரசியல்வாதிகளுக்கு அத்துப்படி. எல்லா சாதி,மதங்களும் கலந்துகட்டி வாழும் சில நகர்ப்புறங்கள் தவிர்த்து, மற்ற எல்லா இடங்களிலும், கட்சி வேட்பாளர்கள் இந்த அடிப்படையில் தான் எல்லா கட்சிகளாலும் நிறுத்தப்படுகிறார்கள். எனவே ஏற்கனவே data இருக்கிறது. அதை அதிகாரபூர்வமாகத் தொகுத்து அரசு பயன்படுத்த வேண்டியது தான் பாக்கி. சென்சஸ் கணக்குகளின்படி, காலப்போக்கில் இட ஒதுக்கீட்டின் விளைவாக சில சாதிகள் எந்தவிதமான பிற்போக்கு அறிகுறிகளும் இல்லாதவை/குறைந்து வருபவை என்பது நிறுவப்பட்டால், அந்த சாதிக்கான புள்ளிகள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்கப்பட வேண்டும்.

7. இந்த அடிப்படையில், நாம் ஆரம்பத்தில் கண்ட மாணவர்கள் எப்படி மதிப்பிடப்படுவார்கள் என்று பார்ப்போம்.

சுரேஷ் : 70.40 கல்வி (88% மொத்த மதிப்பெண்கள்) + 5 (சாதி) + 0 (பள்ளிச்சூழல்) + 0 (குடும்பச்சூழல்) = 79.40
நந்தினி : 75.2 கல்வி (94% மொத்த மதிப்பெண்கள்) + 0 (சாதி) + 3 (பள்ளிச்சூழல்) + 4 (குடும்பச்சூழல்) = 82.20
கோவிந்தசாமி : 68.00 கல்வி (85% மொத்த மதிப்பெண்கள்) + 5 (சாதி) + 3 (பள்ளிச்சூழல்) + 3 (குடும்பச்சூழல்) = 79.00

இந்த மதிப்பீடுகளும், புள்ளிகளுக்கான எடை (weightage) முதலியவையும் ஒரு உதாரணத்திற்காகக் கொடுக்கப்பட்டது.. இதை வைத்துகொண்டு எந்த சமூக பாதகங்களும் இல்லாத மாணவன், 100% எடுத்தால் கூட அவருக்கு நந்தினியை விடக் குறைந்த புள்ளிகள் வருகிறதே என்று கேட்க வேண்டாம். இந்த ஐடியாவை செயல்படுத்தும்போது இது போன்ற சாத்தியங்களும் கணக்கில் கொள்ளப்படவேண்டும் என்பதற்காக இத்தகைய உதாரணங்களைக் கொடுத்தேன்.

8. இத்தகைய செயல் திட்டங்கள் வெற்றிபெற, அரசு ஒழுங்காக இயங்க வேண்டும்.. எங்கும் தலைவிரித்தாடும் லஞ்சம், ஊழல் இதிலும் புகுந்துவிடாமல் இருக்க வேண்டும். சமூக பாதகங்களுக்கான புள்ளிகளை நிர்ணயித்தல், வழங்குதல் இவற்றில் முறைகேடுகள் நிகழாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். உதாரணத்திற்காக நாம் குறிப்பிட்ட காரணிகள் தவிர, வேறு பல காரணிகளையும் உள்ளடக்க வேண்டும் – ஆண்/பெண், முன்னேறிய/பின்தங்கிய பகுதி (உ-ம்: கோவை vs தருமபுரி மாவட்டங்கள்), உடல் ஊனம் முதலியவை.

9. சமூக நீதி, திறமை-உழைப்பிற்கு மதிப்பளித்தல் இந்த இரண்டுமே நம் நாட்டின் வளர்ச்சிக்கு சம அளவில் முக்கியமானவை. ஒன்றுக்கு மிகப்பெரிய இடம் அளித்து, இன்னொன்றை விட்டுவிடுவது முட்டாள்தனமும், தற்கொலைக்கொப்பான செயலும் ஆகும். இரண்டையும் சரிசமமாக சீர்தூக்கித் திட்டங்கள் வகுப்பதே சரியான பாதை.

10. இன்னொன்று – இட ஒதுக்கீடு பற்றி இவ்வளவு உணர்ச்சிகரமான சண்டைகள் நடப்பதன் அடிப்படைக் காரணம் என்ன? பாரதம் போன்ற இவ்வளவு மக்கள்தொகை பெருத்த, முன்னேறத்துடிக்கும் மத்தியத்தர மக்கள் பெருகி வரும் நாட்டில், தேவைக்கேற்ற அளவு தரமான உயர்கல்வி நிறுவனங்கள் இல்லை (அடிப்படைக் கல்வி மட்டும் என்ன வாழ்கிறதாம், அங்கும் இதே நிலைமை தான்). தனியார் கல்வி நிறுவனங்கள் ஓரளவு இந்தத் தேவையை நிரப்புகின்றன என்றாலும், தரம் மற்றும் வசதி குறைந்தவர்கள் படிப்பதற்கான வாய்ப்பு முதலிய விஷயங்களில் அரசு கல்வி நிறுவனங்கள் காட்டும் அக்கறை காண்பிக்கப் படும் என்று எதிர்பார்க்க முடியாது.. இட ஒதுக்கீடு அரசியல் என்பது பொருளாதார அடிப்படையில் சொன்னால், செல்வத்தைப் பங்கு போடுவது அல்ல, வறுமையைப் பங்கு போடுவது (Redistributing poverty, not redistributing wealth). “வீதி தோறும் இரண்டொரு பள்ளி.. நாடு முற்றிலும் உள்ளன ஊர்கள் நகர்கள் எங்கும் பல பல பள்ளி” என்று பாரதி சொன்னாற்போல எல்லாப் பகுதிளிலும், எல்லா தரப்பட்ட மக்களும் படித்து முன்னேறும் வகையில் பெரும் எண்ணிக்கையில் கல்வி நிறுவனங்கள் உருவானால், இட ஒதுக்கிட்டுக்கான சண்டைகளே இல்லாமல் போகும் ! ஆனால் அந்த நீண்ட நெடிய நேர் வழியில் செல்வதற்கு அரசியல் வாதிகளுக்கு ஆர்வம் (ஆதாயம்) இல்லை. இருக்கவே இருக்கிறது இட ஒதுக்கீடு குறுக்கு வழி! (பார்க்க: [5])

11. 27% இட ஒதுக்கீடு உடனே கொடுத்து விட்டு, ‘கொஞ்சம் கொஞ்சமாக’ எல்லா கல்லூரிகளிலும், அதே அளவு இடங்களை அதிகப்படுத்தி விடலாம் என்கிற திட்டமும் முன்வைக்கப் படுகிறது.. ஐஐடி, ஐஐஎம் போன்ற உயர்கல்வி நிறுவனங்கள் உருவாவதற்கு எத்தனை ஆண்டு கால வளர்ச்சியும் உழைப்பும் தேவைப்படும் என்பது தெரியுமா இந்தப் பேர்வழிகளுக்கு? ஐஐடியும் மருத்துவக் கல்லூரிகளும் என்ன பெட்டிக் கடைகளா நினைத்த உடனே திறந்து வியாபாரம் நடத்துவதற்கு? (உயர் தரம் அடையத் தேவைப்படும் கால அளவிற்காகச் சொன்ன உதாரணம் இது. பெட்டிக்கடை நடத்தும் தொழில் முனைவோரைக் குறைத்து மதிப்பிடுவதற்காக அல்ல). இட ஒதுக்கீடு ஆதரவாளர்களின் ‘தீர்வுகள்’ எந்த ரகத்தில் இருக்கின்றன என்பதற்கு இது ஒரு உதாரணம்.

jataayu_b@yahoo.com

ஆதாரங்கள்:

[1] அவுட்லுக் மற்றும் இந்து பத்திரிகையில் யோகேந்திர யாதவ், சதிஷ் தேஷ்பாண்டே
http://www.outlookindia.com/full.asp?fodname=20060524&fname=alternativetomandal&sid=1&pn=1

[2] இந்து பிஸினஸ்லைன் – பேரா.வைத்தியநாதன்
http://www.thehindubusinessline.com/2006/05/18/stories/2006051800251000.htm

[3] இந்து பிஸினஸ்லைன் – பேரா. பி.வி. இந்திரேசன்
http://www.thehindubusinessline.com/2006/05/29/stories/2006052900220800.htm

[4] திண்ணை அட்டவண –
http://www.thinnai.com/?module=displaystory&story_id=20606098&format=html

[5] டைம்ஸ் ஆ·ப் இந்தியா – குருசரண்தாஸ்
http://timesofindia.indiatimes.com/articleshow/1540050.cms
—————————————————————-

(jataayu_b@yahoo.com)

Series Navigation

ஜடாயு

ஜடாயு