மறைக்கப்பட்ட வரலாறு:அனார்ச்சாவின் கதை

This entry is part [part not set] of 39 in the series 20060630_Issue

தமிழில்: அசுரன்



மருத்துவ முதுகலை படித்த அலெக்சாண்டிரியா சி. லிஞ்ச் எழுதியுள்ள அனார்ச்சாவின் கதை என்ற இந்த ஆக்கமானது ‘நவீன மகப்பேற்றியல் மருத்துவத்தின் தந்தை, நிறுவனர்’ என்று புகழப்படும் தெற்கு கரோலினாவைச் சேர்ந்த மருத்துவர் ஜேம்ஸ் மரியன் சிம்ஸ் (1813- 1883) ஒடுக்கப்பட்ட கறுப்பர்கள் மீதும் ஏழை அயர்லாந்து பெண்கள் மீதும் மேற்கொண்ட கசாப்புக்கடை பாணியிலான, கொலைகார ஆய்வுகளை வெளிப்படுத்துகிறது.
“எனது பேராசிரியர் கிரீஸ் நாடுதான் நவீன மருத்துவத்தின் பிறப்பிடம் என்றும் அதில் பங்கேற்றோருக்கு, அமெரிக்க மருத்துவத்திற்கு பங்களித்தவர்களுக்கு நாம் நன்றிகூறவேண்டும் என்று தெரிவித்தார். எண்ணற்ற பங்களிப்புகளை வழங்கிய பிற நாட்டு மக்களைக் குறித்த விபரங்கள் பெரும்பாலும் இல்லாமலேயே போய்விட்டன. இதை ஒரு சிக்கலாக நினைத்த பிற மருத்துவ மாணவர்களுடன் நான் பேசினேன்.
பெரும்பாலான மருத்துவக்கல்லூரிகளின் பாடத்திட்டங்கள் தரப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், இந்த மருத்துவத்திற்காக பங்களித்த சிறுபான்மையினர் அல்லது வெள்ளையர் அல்லாதவர்கள் குறித்த விபரங்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. அண்மையில் பெண்களை ஆய்வுசெய்வது தொடர்பான ஒரு உரையைக் கேட்டபோது குறிப்பாக இந்த சமத்துவமின்மையை நான் அனுபவித்தேன். மருத்துவர்கள் பெண்களின் பிறப்புறுப்பையும் கருப்பையையும் ஆராய்வதற்கான ஒரு சிறப்பான முறையை உருவாக்கிய மருத்துவர் சிம்ஸ் குறித்து அந்த பெண் உரையாற்றியதில், அது தொடர்பான வரலாற்றின் பெரும்பகுதியை அவர் சொல்லாததை உணர்ந்தேன்.
அவர் புறக்கணித்த அந்த வரலாறு குறித்து அறிய நான் அதிக ஆர்வமுடையவளாக இருந்தேன். மருத்துவர் சிம்சை ஒரு கதாநாயகனாக்கிய பல கொடூரமான விபரங்களை அறிந்தபின்னர் அதே பாணியில் அடிமைப் பெண்களின் நினைவுகளையும் தொகுத்தேன். எழுதவோ படிக்கவோ தெரியாத அனார்ச்சாவால் அவரது சொந்த கதையை சொல்ல இயலவில்லை. அவரது கதை மிகக்கொடூரமான ஒரு புனைகதை போல இருக்கிறது. அந்த துண்டு, துணுக்குகளை இங்கே தொகுத்தளித்துள்ளேன்” என்கிறார் அலெக்சாண்டிரியா.

0 0 0
தனது கைகளை இடுப்பில் வைத்தபடி தகிக்கும் வெயிலில் நின்றுகொண்டிருந்தாள் அந்த கர்ப்பிணிப் பெண். பருத்தி பறிப்பது, அதன் பின்னர் தனது முதலாளியின் குழந்தைகளைக் கவனிப்பது அல்லது அந்த பெரிய வீட்டில் உள்ளோருக்கு சமைப்பது என 18 மணிநேர வேலையால் அவள் மிகவும் சோர்ந்திருந்தாள். குழந்தையைப் பெற்றெடுக்கும்வரையிலும் தொடர்ந்து இப்படி பணிசெய்யவேண்டிய இந்தப் பெண்ணின் நிலை இக்காலங்களில் மிகக் கடுமையானதாகும்.
அவர் மிகவும் சோர்ந்திருந்தார். அவரது எலும்புகள் எல்லாம் கொடூரமாக வலித்தன. இப்போது என்றைக்கு வேண்டுமானாலும் குழந்தை பிறக்கலாம் என்ற மகிழ்ச்சிகரமான எதிர்பார்ப்பு அவரிடத்தில் நிரம்பி வழிந்தது. ஒரு அடிமைப்பெண் என்ற வகையில் அவரது லாழ்க்கை மிகவும் சிக்கலானதுதான். ஆனால், இன்னும் இத்தகைய அழகிய நிமிடங்கள் இப்பெண்களிடமிருந்து பறிக்கப்படவில்லை. அடிமையாக இருக்கும் நிலையிலும் உலகிலுள்ள பிற பெண்களைப் போன்றே அவரும் வாழ்வை இயற்கையாக மேற்கொண்டார்.
தனது குடியிருப்புக்கு திரும்பிய அவர் இருப்பதிலேயே நல்ல உடையை அணிந்துகொண்டார். அவருடன் பணியாற்றும் தோழமை அடிமைகள் அவருக்கு குழந்தை பிறக்கப்போவது குறித்து தங்கள் கருத்துகளைப் பேசிக்கொண்டிருந்தார்கள். அந்த தோட்டத்திலுள்ள அனைத்து பெண்களும், பெற்றோரும் அப்புதிய குழந்தையின் தந்தை யாரென்று தெரியாவிட்டாலும் அப்புதிய பிறப்பின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
அன்று பின்னிரவில் அவருக்கு மகப்பேற்று வலி ஏற்பட்டது. குழந்தை விரைவில் பிறந்துவிடவேண்டும் என்று அவர் விரும்பினார். ஏனென்றால், இதைக் காரணம் காட்டி மறுநாள் அவரால் வேலைக்குப்போவதைத் தவிர்க்க முடியாது. சில மணி நேரங்களின் பின்னர் அந்த அறையில் மற்றொரு பெண் வீறிட்டு அலறுவதை அவர் கேட்டார். அடுத்த சிறிது நேரத்தில் அவரது உடைகளைக் களைந்து, அவரை முடிந்தளவு வசதியாக வைத்தனர்.
அந்த இரவு கடந்தபோதிலும் அவரது வலிக்கு முடிவு கிட்டவில்லை. மருத்துவக் குழு தலைவர் இன்று அனார்ச்சா வேலைக்குச் செல்ல இயலாது என்று தெரிவித்தார். அனார்ச்சாவால் நிற்கவே முடியவில்லை. அந்த நாள் கடந்தபின்னரும் குழந்தை பிறக்கவில்லை. வலியோடு அவர் சோர்ந்திருந்தார். இப்படியாக 3 நாட்கள் கடந்தபின்னரும் அவரால் தனது குழந்தையைக் காண இயலவில்லை. மூன்று நாட்காக அவரது நிலை கவலைக்கிடமாக இருந்தது. அதன் பின்னர் இந்நிலையில் அந்த அடிமைப்பெண்ணால் எந்த வேலை செய்ய இயலாது என்ற உண்மையை உணர்ந்த முதலாளி தனது முதலீட்டைப் பாதுகாக்கும் நோக்கில் மருத்துவ உதவிக்காக மருத்துவரை அழைக்கத் தீர்மானித்தார்.

மிகக் களைத்துப்போயிருந்த அனார்ச்சா தரையில் படுத்திருந்தார். அந்த அறைக்குள் வந்த மருத்துவர் அவரின் கருவறையிலிருந்து குழந்தையை வெளியே இழுத்தெடுக்க ஒரு இடுக்கியைப் பயன்படுத்தினார். அதனைப் பயன்படுத்துவதில் அவருக்கு மிகக்குறைந்தளவு அனுபவமே இருந்தது. தனது குழந்தையைப் பெற்றெடுத்த பல நாட்களின் பின்னரும் தனது உடல் செயல்பாடுகளை கட்டுப்படுத்த அனார்ச்சாவால் இயலவில்லை. அவரது முதலாளி அவரது உடல்நிலையை சீர்படுத்த மீண்டும் மீண்டும் அந்த மருத்துவரிடமே அனுப்பினார்.
பீதியடைந்திருந்த, நோய்வாய்ப்பட்டிருந்த அனார்ச்சா இதுபோல பாதிக்கப்பட்ட அடிமைகளுக்கு மருத்துவம் செய்வதற்கென அந்த வீட்டின் பின்புறத்தில் கட்டப்பட்டிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். அங்கு படுக்கைகளிலும் தரையிலுமாக பல அடிமைப் பெண்கள் நீண்டகாலமாக பஞ்சத்தில் அடிபட்டவர்களைப் போல படுத்திருந்தனர். தனது விதி என்னாகுமோ என்ற அச்சம் அனார்ச்சாவிடத்தில் நிறைந்திருந்தது. இந்தப் பெண்கள் நலமாகிறார்களா?, இவர்களைப் போலவே தானும் வேதனையை அனுபவிக்க வேண்டியிருக்குமோ?, தன்னை யாராவது இந்த அச்சுறுத்தும் நிலையிலிருந்து காப்பாற்றுவார்களா? அல்லது ஒரு சிறிய வதை முகாம் போல காணப்படும் இந்த இடத்திலேயே இருக்கவேண்டியதுதானா? என்ற எண்ணவோட்டமே அவரிடத்தில் இருந்தது.
அனார்ச்சாவைப் பார்த்ததில் அந்த மருத்துவருக்கு மிக்க மகிழ்ச்சி. அவரது நிலையை சீர்படுத்த ஒரு அறுவைச்சிகிச்சை மேற்கொள்ள திட்டமிட்டார் அவர். அப்பெண்ணை இக்கொடிய நிலையிலிருந்து மீட்பதிலோ, தனது வேதனையிலிருந்து அப்பெண் விடுதலையாக உதவுவதிலோ அவருக்கு ஆர்வம் இல்லை. முன்பொருநாள் தன்னால் குணப்படுத்தப்பட்ட பெண்ணுக்கும் இந்த பெண்ணுக்குமிடையேயான ஒற்றுமைகளைப் பற்றியே அவர் சிந்தித்துக்கொண்டிருந்தார். அனார்ச்சாவை அங்கிருந்த மேசை மேல் ஏறிப்படுக்கச்செய்த அவர் ஒரு வெள்ளைத் துணியால் மூடினார்.
உடனடியாக, சேதமடைந்திருந்த அனார்ச்சாவின் பிறப்புறுப்பைத் தெளிவாகப் பார்க்க கால்களை அகற்றி விரிக்கச் செய்தார். அனார்ச்சா ஏதும் சொல்வதற்கு அனுமதிக்ாத அவர் குறடுகளைப் பயன்படுத்தி விரித்துப் பிடித்தபடி அனார்ச்சாவின் அந்தரங்கத்தை ஆராயலானார். தனது தொடக்கநிலை ஆய்வுகளை அவர் எப்போது முடிப்பார் என்று காத்திருந்தார் அப்பெண். அனார்ச்சாவின் பிறப்புறுப்பில் பல கிழிசல்கள் ஏற்பட்டிருந்ததால் அம்மருத்துவர் அதில் அறுவைச்சிகிச்சை மேற்கொள்ள விரும்பினார். பின்னர் அனார்ச்சாவைப் பார்வையிட்ட அவரது துணை மருத்துவர்களும் அறுவை மேற்கொள்ளவேண்டியதை வலியுறுத்தினர்.
அந்நாளின் பிற்பகுதியில் அறுவைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அனார்ச்சாவிற்கு மயக்க மருந்துகள் ஏதும் அளிக்கப்படவில்லை. அறுவை செய்யப்படவேண்டிய பகுதி கிருமிநீக்கம்கூட செய்யப்படவில்லை. அவரது பிறப்புறுப்பு அறுவை கத்தியால் வெட்டப்பட்டது. ஏற்கனவே ஆபத்தான நிலையிலிருந்த அப்பெண்ணால் அலறுவதைத் தவிர வேறேதும் செய்ய இயலவில்லை. அறுவை முடிந்ததும் தையல் போடப்பட்டது.
அதன் பின்னர் அனார்ச்சா மலங்கழிப்பதைக் கட்டுப்படுத்துவதற்காக கூடுதலாக அபின் அளிக்கப்பட்டது. என்ன நடக்கிறதென்று ஏதும் தெரியாதவராக அப்பெண் தரையில் கிடந்தார். அறுவைச் சிகிச்சையின் பின்னரும் வாரக்கணக்கில் குறைவான உணவு மற்றும் மலங்கழிப்பதைத் தடுக்கும் மருந்துகளுடன் அவர் அவதிப்பட்டார். அனார்ச்சா தனது குழந்தையுடனும் நண்பர்களுடனும் வாழ ஆசைப்பட்டார். வாரங்கள் பல கடந்தபின்னர் அவருக்கு அதுபோல மற்றொரு அறுவைச்சிகிச்சை செய்யப்பட்டது. இதனால் அவரது நிலை மேலும் மோசமடைந்தது. காயங்களினால் ஏற்பட்ட நோய்த்தொற்றுகளால் அவர் மேலும் பலவீனமடைந்தார்.
அந்தக் கொடூர சூழலில் இருந்து வெளியே வருவதற்கு அவரால் ஏதும் செய்ய இயலவில்லை. முன்பின் தெரியாத யாரிடமெல்லாமோ தனது பிறப்புறுப்பைக் காட்டியபடி, அறுவைச்சிகிச்சையின் பின்னர் நோய்த்தொற்றுகளைத் தடுக்கும் மருந்துகளோ அல்லது மயக்க மருந்துகளோ அளிக்கப்படாமல் மிகக் கொடூரமான நிலையில் இருந்தார் அவர். இறுதியாக அவருக்கு எந்த நோய்த்தொற்றும் இல்லை என்று அந்த மருத்துவர் சான்றளித்தார். அவரது பிறப்புறுப்பில் இருந்த பல கிழிசல்களில் ஒன்று 30 அறுவைச் சிகிச்சைகளின் பின்னரே சரிசெய்யப்பட்டது.
சிம்ஸ் என்ற அந்த மருத்துவருக்கு இதன்மூலம் அழியாப்புகழ் கிடைத்தது. இது மருத்துவர் சிம்சை நவீன மகப்பேற்றியல் மருத்துவத்தின் தந்தையாக்கியது, ஆனால் அனார்ச்சாவின் கதையோ காணாமல்போனது, அவர் புறக்கணிக்கப்பட்டார்.
எழுதப் படிக்கத் தெரியாத அனார்ச்சாவால் தன்மீது ஏவப்பட்ட இந்த அத்துமீறலை ஆவணப்படுத்த இயலவில்லை. இதனைப் படிக்கிற ஒவ்வொருவரும் மருத்துவர் சிம்சைப் பற்றி நினைக்கும்போது அதற்கு ஈடான அளவில் அனார்ச்சாவைப் பற்றியும் நினைக்கவேண்டும். 1846 முதல் 1849 வரையான காலகட்டத்தில் பெண்களின் பிறப்புறுப்பில் அறுவைச்சிகிச்சை மேற்கொள்வது தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட சிம்ஸ் அதற்கு இத்தகைய அடிமைப்பெண்களைப் பயன்படுத்திக்கொண்டார். மகப்பேற்றின்போது பயன்படுத்தப்படும் கருவிகளை சிம்ஸ் தூய்மையாக வைத்திருந்தாரா, ஏழைகளையும் அடிமைப்பெண்களையும் முறையாகப் பயன்படுத்தினாரா என்பதெல்லாம் ஐயத்திற்குரியதே.
அடிமை ஆப்பிரிக்கர்களின் மிக அடிப்படையான மனித உரிமைகளை குறித்த பார்வையில்லாத சமூகத்தின் ஓர் அங்கமே சிம்ஸ். மருத்துவ வரலாற்றில் பல மருத்துவர்கள் சாதனையாளர்களாக குறிப்பிடப்படும் அதேவேளை அவர்களால் பயன்படுத்தப்பட்ட அனார்ச்சாக்களின் பங்கு புறக்கணிக்கப்படுகிறது. இம்மக்கள் மருத்துவத்துறைக்கு நம்மால் கற்பனை செய்ய இயலாத அளவுக்கு பங்களிப்பு நல்கியுள்ளனர். ஆனால் சிம்ஸ்களைப் போல இவர்கள் நினைவில் வைத்துக்கொள்ளப்படுகிறார்களா?.
தற்போது நவீன மருத்துவ முறையை பயன்படுத்தும் மருத்துவர்கள் என்ற வகையில் அனார்ச்சாக்களையும் கற்பனைக்கெட்டாத அளவில் கட்டாயப்படுத்தி அவர்கள் தியாகம் செய்ய வைக்கப்பட்டதையும் நாம் மறந்துவிடக்கூடாது. நாம் இவற்றை எப்போதும் புறக்கணிக்கக்கூடாது.
0 0 0

இவை குறித்து மேலும் விரிவாக அறிந்துகொள்ள W. Michael Byrd மற்றும் Linda Clayton ஆகியோரால் எழுதப்பட்டுள்ள An American Health Dilemma: A Medical History of African Americans and the Problem of Raceஎன்ற நூல் உதவும்.

(asuran98@rediffmail.com)

Series Navigation

அசுரன்

அசுரன்