ஒரு சிலையும் என் சிலம்புதலும்

This entry is part [part not set] of 41 in the series 20060616_Issue

காஞ்சனா தாமோதரன்


மூத்த எழுத்தாளர் ஜோதிர்லதா கிரிஜா அவர்கள் கண்ணகி பற்றி எழுதியிருந்தது வாசிக்கக் கிடைத்தது. சிலை வைக்கிற அளவுக்கு அவள் அறிவாளியா நெஞ்சில் ஈவிரக்கம் உள்ளவளா எனக் கேட்டு, ஒரு முட்டாள் கதைப்பெண்ணுக்குச் சிலை வைத்துப் பெண்களாகிய எங்களை முட்டாளாக்காதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அவர் உணர்ச்சிபூர்வமாக எழுதியிருக்கும் கருத்துக்கான அவரது அடிப்படை ஜனநாயக உரிமைகளை மதிக்கிறேன். என் தனிப்பட்ட வாசகப் பார்வையைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி என இன்று கிடைக்கும் மூன்று பெருங்காப்பியங்களையும் உரைநூல்களின் உதவியுடன் படித்திருக்கிறேன். அழிந்து போன குண்டலகேசியின் பகுதிகளை உள்ளடக்கிய குறுங்காப்பியமான நீலகேசியையும் வாசித்திருக்கிறேன். மணிமேகலையும், சீவக சிந்தாமணியும், நீலகேசியும் அழகுதமிழில் சுவாரசியமாக எழுதப்பட்ட மதப்பிரச்சார இலக்கியங்களாக, தட்டையான பாத்திரப் படைப்புகளுடன் நின்று போயின. சிலப்பதிகாரமே மானுடநிலையை நிறுத்து அசைபோட வைப்பதாய், ஆகவே, முழுமையான இலக்கியமாய்த் தெரிந்தது.

தாய்மொழியின் பிற செவ்விலக்கியங்களைப் படித்து முடித்த பிறகு, கால்நூற்றாண்டுக்கு மேலாய் நான் வாழும் மேற்கின் வேர்களைப் புரிந்து கொள்ளுவது முக்கியமாய்த் தெரிந்தது. அதற்காக அமெரிக்காவின் ஒரு முக்கியப் பல்கலைக்கழகம் பரிந்துரைத்த சிலநூறு நூல்களைச் சுயமாகப் படித்தேன். பண்டைய கிரேக்கம் துவங்கி இன்றைய அமெரிக்கா வரையிலான இலக்கியம், அரசியல்-சரித்திரம், தத்துவம் ஆகிய துறைசார் நூல்களைக் காலவரிசைப்படி, ஆங்கிலம் வழியே வாசித்தேன். உலகக் காப்பிய வரிசையில் வைத்துச் சிலம்பை மீண்டும் வாசித்தேன்.

1. கண்ணகி, திருமாவுண்ணி, பத்தினி என்று பல பெயர்களில் சிலம்புக்கு முன்னரே ஒரு பெண் தொன்மம் இருந்ததை அறிஞர்கள் நிறுவியிருக்கிறார்கள். புறநானூறு, நற்றிணை, பதிற்றுப்பத்து முதலியவற்றை வாசிக்கையில் சிலம்பின் கதை ஏற்கெனவே வழக்கிலிருந்தது புரிகிறது. கண்ணகி அம்மனாய்ச் சில இடங்களில் வழிபடப்படுவதாய்க் கேள்வி — வஞ்சிக்கப்பட்டுத் துர்மரணம் எய்திய பெண்களின் பெயரில் கல்லை நட்டு அவர்களைச் சிறுதெய்வமாக வழிபடும் நாட்டார்மரபை இங்கு நினைவுகூர வேண்டும்.

வாய்மொழி மரபையும் எழுத்திலக்கிய மரபையும் இணைக்கும் வடிவில் எழுதப்பட்டுள்ள சிலம்பு, ஒரு தொன்மத்தைக் காப்பியத் தலைவி ஆக்குகிறது. வாய்மொழி மரபில் ஒரு பாவப்பட்ட பெண்ணின் துன்பியல் கதையாக இருந்தது, காப்பிய வடிவில் அவளது எழுச்சியுடன் முடிவதாய் மாறுகிறது. வாழ்வியல், பன்முகச் சமூகவியல், கலை, புலம்பெயர்தல், அரசியல் எனப் பரந்து விரியும் பின்புலத்துடன், பெண்நிலை பற்றின ஒரு பெருங்கதையாகிறது. நேரடித்தன்மையுள்ள ஒரு வாய்மொழிக் கதையை ‘உயர்’ இலக்கியப் பூச்சுடன் சொல்லும்போது இழப்பது என்ன, பெறுவது என்ன என்பவை தனிக் கட்டுரைக்கான கேள்விகள்.

2. சிலம்பு கண்ணகியின் கதை என்னும் இளங்கோவின் கூற்று வெறும் வார்த்தைக்கோர்ப்பு அல்ல. காவியம் அவளை மையமாய்க் கொண்டுதான் நகருகிறது. அவளது பாத்திரமே பல நுட்பங்களையும் முரண்களையும் உள்ளடக்கியதாய் வளருகிறது. அவளது பாத்திரமே படைப்புநோக்கிலும் (என்) வாசகநோக்கிலும் செறிவுள்ளதாய்த் தெரிகிறது. கண்ணகிக்கு அடுத்தபடி என் வாசகக் கவனத்தைப் பெற்றது பாண்டிய மன்னனின் பாத்திரம்: தன்னாட்டுக் குடிமகள் அல்லாத ஒரு சாமானியப் பெண்ணுக்குத் தன்னை எதிர்த்துக் கேள்வி கேட்க உரிமையளிப்பவன்; அறவியல் இல்லாது அரசியல் இல்லை என்று மருகி மாய்பவன்.

3. கண்ணகி பாத்திரத்தை ‘முட்டாள்’ ‘கட்டுப்பெட்டி’ ‘கல்நெஞ்சக்காரி’ என்று இன்றைய என்னால் பழிக்க முடியவில்லை. பகடிபண்ணவும் முடியவில்லை. பரிவுபடத்தான் முடிகிறது.

சிலம்பு காட்டும் தமிழ்ச்சமுதாயம், பெருநகர்ப்புற மக்கள் முதல் மலைவாழ் மக்கள் வரை உள்ளடக்கிய பன்முகமானது. அச்சமூதாயத்தின் எல்லாக் குழுக்களும் கண்ணகியின் சூழல் போலவே இயங்கியிருக்குமெனப் பொதுமைப்படுத்த இயலாது. கண்ணகி தன் இளம்பதின்ம வயதுத் துவக்கத்தில் மணமுடித்துச் சில ஆண்டுகள் கோவலனுடன் அன்பாய்க் குடும்பம் நடத்தினவள். கணவன் போகிறான், வருகிறான். கண்ணகி பொறுத்துக் கொள்ளுகிறாள். அவள் இயல்பும் சூழலும் அப்படி.

துறவி, பரத்தை, குடும்பப்பெண் என்னும் அனுமதிக்கப்பட்ட வெளிகளின் அதிகார அளவும் வீச்சும் வேறுபடுகின்றன. துறவறம் பூண்ட கவுந்தி அடிகளுக்குச் சமூகப் பாதுகாப்பும் அந்தஸ்தும் நடமாட்டச் சுதந்திரமும் இருக்கின்றன. அரசனிடம் தலைக்கோல் பெற்ற மாதவிக்குச் சமூக அடையாளமும் கலைஞானமும் நடமாட்டச் சுதந்திரமும் இருக்கின்றன; கோவலனின் இல்லப்பரத்தையாய் நெறிப்படி வாழ்ந்து, அவன் பிரிவுக்குப் பின் துறவியாகிறாள். இல்லறத்தில் இருக்கும் கண்ணகியின் வாழ்வெளி வித்தியாசமானது: அவளது உறவுகள், சமூக அடையாளம், பாதுகாப்பு, எல்லாவற்றுக்கும் அவள் கணவனே ஆதாரம்.

கணவனுடன் அன்புறவு பேணி வாழ்ந்திருந்த கண்ணகி, வீட்டையே தன் வெளியாய்ச் சிறகொடுக்கும் கண்ணகி, அவன் திரும்பி வருகையில் என்ன செய்வாள்? பல தேர்வுகளும் உரிமைகளும் உள்ள இக்காலத்தியப் பெண்களிலும் ஆண்களிலும் கூடக் கணிசமானவர்கள் கண்ணகி போல முடிவெடுப்பதைச் சமூகக் களப்பணிகளில் பார்க்கிறோம். துணைவனோ துணைவியோ இழைத்த தவறை ஒரு தட்டிலும், தவறு மீண்டும் நடக்காதென்ற நம்பிக்கையில் உறவை மீட்டெடுக்கும் விருப்பத்தை மறுதட்டிலுமாய் வைத்து நிறுத்து, *இறுதித் தேர்வு எதுவானாலும்* அதை ஏற்கும் விவேகம் இன்றைய மின்வேக வாழ்க்கையில் கூட இருக்கிறது. அக்காலத்தியக் கண்ணகிக்கு இந்த விவேகமும் தன்னுணர்வும் சற்றுக் கூடுதலாகவே இருந்திருக்கும். அவளது தீர்வு அவளுக்கு இயல்பானது.

அப்படியானால், இக்காலத்துப் பெண்களுக்கும் கண்ணகிக்கும் என்ன உறவு? (அ) தாய்மொழியின் தலைக்காப்பியத்து நாயகிக்கும் அதன் வாசகருக்கும் உள்ள உறவு. (ஆ) சில இடர்ப்பாடுகளுக்கும் இழப்புகளுக்கும் பின் எனக்கென்று நான் இன்று உருவாக்கியிருக்கும் வெளி, எனக்கு நெருக்கமான முந்தைய தலைமுறைப் பெண்களுக்குக் கிடையாது. அவர்களது கதையும் கண்ணீரும் கனவும் கருணையும் என்னில் ஒரு பகுதியாகவும், அவர்கள் நின்ற புள்ளியிலிருந்து என்னை முன்னகர்த்திய உந்துசக்தியாகவும் இருந்திருக்கின்றன. என் கதையின் இயக்கமூலம் அவர்கள் கதைகளில் பொதிந்திருக்கிறது. தொடர்ச்சியும் முரணும் உள்ள ஒரு மெல்லிய இழை.

4. பரத்தமை முறையைப் பேணிய சமூகம் ஆணுக்கும் பெண்ணுக்கும் வெவ்வேறு வரையறைகளை விதித்திருந்ததோ? சங்க இலக்கிய வாசிப்புக்குப் பின், சிலம்பு வாசிப்பைத் துவக்கிய போது எழும்பிய கேள்வி இது. மதுரைக் காண்டத்தில், தன் தவறுகளைப் பற்றிக் கண்ணகியிடம் கோவலன் வருந்துகிறான்:
“வறுமொழி யாளரொடு வம்பப் பரத்தரொடு
குறுமொழிக் கோட்டி நெடுநகை புக்கு….” எனப் பரத்தை உறவு அவனைச் சமூகம் ஏளனம் செய்யவும், இகழ்ந்து சிரிக்கவும் காரணமாயிற்று என்கிறான். மாதவியின் மீதுள்ள கோபத்தால் தெறிக்கும் சுடுசொற்களைக் கடந்து புரிவது: கண்ணகிக்கு விதிக்கப்பட்ட உண்மைதான் கோவலனுக்கும். இந்த உண்மையின் மீறலாய், திருமணம் என்னும் பரஸ்பரச் சமூக ஒப்பந்தத்தின் மீறலாய்த்தான் அவனது நடவடிக்கை கருதப்படுகிறது. ஆனால், அவன் மீறலுக்கான சமூக விலை பாலின அடிப்படையில் நெகிழ்த்தப்படுகிறது. ‘அரளிப் பூச்செண்டால் அடிச்சாரோ, ராராரோ ராரிரரோ’ என்கிற நாட்டுப்பாடல் வரி மனதில் வந்து போகிறது.

5. கண்ணகிக்கென்று தனிப்பட்ட உணர்வுகள் இருந்தனவா அல்லது சமூக நியதிகளால் மழுங்கடிக்கப்பட்டனவா? கணவனின் மீறலால் தனக்கு ஏற்பட்ட மன அழுத்தம் பற்றி மதுரைக் காண்டத்தில்தான் அவனிடம் சொல்லுகிறாள் கண்ணகி. மனந்திறந்து பேசி மறைத்திருந்த ரணத்தை ஆற்றத் துவங்கும் காட்சி இது. தான் துயருற்றதாகவும், துயரத்தைப் புன்னகையால் மறைத்துக் கொண்டதாகவும், புன்னகையையும் மீறி வெளிப்பட்ட துயரம் அவனது பெற்றோரைத் துயரில் ஆழ்த்தியதைக் கண்டு இன்னும் வருந்தியதாகவும் சொல்லுகிறாள்.

புன்னகைக்கும் முகத்துடன் மௌனமாய் அழுந்தி, தம் சூழலின் கட்டுக்கோப்புக் கெடாமல் பராமரிக்கும் பெண்களைச் சமூகக் களப்பணிகளில் இன்று பார்க்கிறோம் (ஆண்களையும் கூட!). இந்த மன அழுத்தத்தினால் அவர்கள் மனமும் உடலும் தேய்வதைப் பார்த்து வருந்துகிறோம். இவர்களை உளவியல் வன்முறைக்கு ஆளானவர்கள் என்கிறோம். இளங்கோ தனது காவியத் தலைவியாய்த் தேர்ந்தெடுப்பது இத்தகைய யதார்த்தத்தில் உழலும் ஒரு பெண்பாத்திரம். தனக்கென எவ்விதத் தனிப்பட்ட அடையாளமும் இல்லாமல் — தாய் என்னும் அடையாளம் கூட இல்லாமல் — துவங்கும் ஒரு சிறுபெண்ணைக் கதாநாயகியாக்கிக் காப்பியம் இயற்றுகிறார் இளங்கோ. வலியோர் மட்டும்தான் கதாநாயகத் தகுதிச் சான்றிதழ் பெற்றவரா என்ன.

6. கள்வன் என்று கோவலனைக் கொலை செய்யக் கருதினர் என்று தோழி இலைமறைவாய்ச் சேதி சொல்லவும் கண்ணகி புலம்புகிறாள்:
“………..யான் அவலங்கொண்டு அழிவலோ
தம்முறு பெருங்கணவன் தழலெரி அகமூழ்கக்
கைம்மைகூர் துறைமூழ்கும் கவலைய மகளிரைப்போல்
செம்மையின் இகந்தகோல் தென்னவன் தவறிழைப்ப
இம்மையும் இசையோரீஇ இணைந்தேங்கி அழிவலோ……”
அக்காலத்தில் கணவனை இழந்த பெண்நிலை விளக்கும் காட்சி இது. மன்னனின் பிழையால், உடன்கட்டை ஏறாமல் கைம்மை நோன்பு நூற்கும் பெண்களின் அவல நிலைதான் எனக்கு வாய்க்குமோ என்று அழுகிறாள் கண்ணகி. அவள் கண்ணீரில் தெரிவது அன்றைய சமூகத்தின் முகம். தன் இணையின் இறப்பினால் தன் இருப்பு நீர்ப்பதையே முதன்மைப்படுத்தி அழ வேண்டிய அவலம். கோவலனின் கொலையுண்ட உடலைப் பார்த்ததும் இரங்குகிறாள். அறமற்ற இந்த நகரில் பெண்களும் தெய்வங்களும் சான்றோர்களும் உண்டா என்று பொங்குகிறாள். இதுவரை துன்பத்தில் இன்முகம் காட்டினவள் அந்த முகமூடியைக் கழற்றி எறிகிறாள்.

7. கண்ணகி ஈவிரக்கமில்லாமல், குறிப்பிட்ட மனிதர்கள் மற்றும் மிருகங்கள் தவிர்த்து, பிறரை அழித்தொழித்தவள் என்னும் குற்றச்சாட்டு இன்றுவரை தொடருகிறது. கொலையோ தற்கொலையோ எந்தப் பிரச்சினைக்கும் தீர்வில்லை என்பது இன்றுள்ள தெளிவு. மேலும், குறிப்பிட்ட உயிர்களுக்கு மட்டும் சலுகை காட்டுவது, எல்லா உயிரும் சமம் என்னும் இன்றைய அறத்துக்குப் புறம்பானது. கண்ணகியின் தனிமனிதச் செயலை வழக்கத்திலிருந்து மாறுபட்டதாய், ஆனால் அன்றைய நீதி வரையறைகளுள் அடங்குவதாய்க் கருதி இளங்கோ சித்தரித்திருக்கலாம். “Retributive justice” என்னும் கருத்தாக்கம் பிற பண்டைய கலாச்சாரங்களின் இலக்கியத்தில் மட்டுமல்லாமல் சரித்திரத்திலும் புழங்குவதைக் காணலாம்.

கண்ணகி காலத்து அறமும் மறமும் இன்றிலிருந்து வேறுபடலாம். இரண்டையும் அக்காலத்துடன் பொருத்தி வாசிப்பது ஒரு வகை விமரிசனம். இக்காலத்து மதிப்பீடுகளுடன் பொருத்தி வாசிப்பது மற்றொரு வகை விமரிசனம். எவ்வகை வாசிப்புக்கும் தமது கதவுகளைத் திறந்து வைத்திருப்பதாலேயே பன்மொழிக் காப்பியங்களும் இன்றுவரை உயிர்த்திருக்கின்றன.

படைப்புரீதியாக, எரிந்து புகையும் பெருநகரங்கள் உலகக் காப்பியங்களுக்குப் புதிதல்ல. புனைவும் வரலாறும் இணைந்து சரித்திரமாகவோ காப்பியமாகவோ வடிவம்பெற்ற பண்டைய காலத்து எழுத்தில், எது புனைவு எது வரலாறு என்று அறுதியிட்டுச் சொல்ல முடியாது. மதுரை எரிபடுதல், கதையையும் கண்ணகியையும் வேறு தளத்துக்கு எடுத்துச் செல்ல உதவுகிறது என்பது உண்மை. மன்னனின் வீழ்ச்சியை அடிக்கோடிடும் நிகழ்வு அது. மலைவாழ் மக்கள் கண்ணகியைக் கொண்டாடுவதற்கு ஒரு சமூக-அரசியல்ரீதியான அடிப்படையை அது சுட்டுகிறது. இத்தகைய எதிர்க்கலாச்சாரத் தொனியுடன் தன் காப்பியத்தை முடிப்பவர் வேற்றுநாட்டு மன்னரின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

*

மொத்தத்தில், கண்ணகி என்னும் பெண் தொன்மத்துக்கு, தமிழின் தலைசிறந்த பெருங்காப்பியத்தின் முக்கிய நாயகியென்ற கூடுதல் அடிப்படையில், ஒரு மொழி-கலாச்சார மாநாட்டின் சார்பில் அதன் பொருளியல் அனுமதித்த பட்சத்தில், 1968-இல் சிலை வைத்தது பொருத்தமாய்த்தான் தெரிகிறது. பின்புலம் பற்றிய தெளிவுடன், திறந்த மனதுடன், பல்வேறு கோணங்களில், தர்க்கபூர்வமான வாதங்களுடன், இலக்கியம் உள்பட எந்தத் துறையையும் அணுகும் அறிவுபூர்வச் சுதந்திரம் உள்ள கல்விமுறை அத்தியாவசியம் (என்று தமிழகத்தில் பல முறை சொன்னதை இங்கும் சேர்த்துக் கொள்கிறேன்).

இறுதியாக: தமிழோ கிரேக்கமோ லத்தீனோ, பன்முகச் செறிவுள்ள பண்டைய இலக்கியங்கள் பொதுவெளியில் உள்ளவை. வாசிப்பு என்பது விலைமதிப்பற்ற தனிமனிதத் தேர்வு. வாசித்ததை நிறுத்துத் தெளிவதும், தெரிந்ததைப் பகிர்ந்து கொள்ளுவதும், தெரியாததைத் தொடர்ந்து தேடுவதும் இன்றைய வாசகரான நமக்கு இயல்பு.

(புத்தகங்கள் தற்போது கைவசம் இல்லாததால், தகவல்களை நினைவிலிருந்து எழுதியிருக்கிறேன். பிழையிருந்தால் திருத்தவும், நன்றி — காஞ்சனா. ஜூன் 8, 2006)

kanchanathamodaran@yahoo.com

Series Navigation

காஞ்சனா தாமோதரன்

காஞ்சனா தாமோதரன்