கண்ணகியின் சிலை பற்றிக் கருத்துகள் சில

This entry is part [part not set] of 39 in the series 20060609_Issue

ஜோதிர்லதா கிரிஜா



கண்ணகியின் சிலை மாண்பு மிகு முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களால் மறுபடியும் அதே இடத்தில் பதிக்கப்பட்டு விட்டது. தாம் வைத்த சிலையைத் தமக்கு அடுத்துப் பதவிக்கு வந்த அப்போதைய மாண்புமிகு முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் அகற்றியதால் தம்முள் விளைந்திருந்த கசப்பைக் கலைஞர் அவர்கள் போக்கிக்கொண்டு விட்டார். அவரது கவுரவப் பிரச்சினைக்கு ஒரு முடிவு ஏற்பட்டுவிட்டது. (இரு கழகத்தினரையும் மாற்றி மாற்றிப் பதவியில் அமர்த்துகிற வழக்கத்தை அடுத்த தேர்தலில் மக்கள் கடைப்பிடித்தால், அடுத்து முதலமைச்சராகக் கூடிய ஜெயலலிதா கண்ணகியின் சிலை மீண்டும் பதிக்கப்பட்டதைத் தமது கவுரவப் பிரச்சினையாய்க் கருதினால், அது திரும்பவும் அகற்றப்படுமா என்று யாருக்கும் இப்போது தெரியாது.)

கலைஞர் வைத்த சிலையை ஜெயலலிதா அகற்றியதற்குக் காற்று வாக்கில் ஏதேதோ காரணங்கள் மிதந்து வந்தன. கடற்கரைக்கு அருகே தலைவிரிகோலமாய்க் கோவாவேசத்தோடு ஒரு பெண் நிற்பது தமிழகத்து மக்களுக்கு நல்லதன்று என்று ஒரு பிரபல சோதிடர் கூடக் கருத்துத் தெரிவித்துள்ளார். கண்ணகியின் சிலை அகற்றப்பட்டதற்கான காரணங்கள் பற்றிய வதந்திகள் உண்மையோ, பொய்யோ நாமறியொம்.

எனினும், எது எப்படி இருந்தாலும், கண்ணகிக்குச் சிலை வைப்பதைப் பற்றி எம்மைப் போன்ற பெண்களுக்கு ஒரு தனிப்பட்ட கருத்து உண்டு. இராமாயண, மகாபாரதக் கதைகளை அறிந்துள்ளது போன்றே, கோவலன் – கண்ணகி கதையையும் தமிழ் மக்கள் நன்கு அறிந்துள்ளார்கள். கண்ணகியைக் கைவிட்டு விட்டு மாதவியின் பின்னால் சென்ற கோவலன், மாதவியோடு விளைந்த பிணக்கினால் மறுபடியும் கண்ணகியிடம் திரும்பி வந்ததும், கண்ணகி அவனை ஏற்றுக்கொண்டதும் நமக்குத் தெரியும்.

வறுமையின் காரணத்தால், கண்ணகி தன் காற்சிலம்புகளில் ஒன்றைக் கோவலனிடம் கொடுத்து வயிற்றுப்பாட்டுக்காக அதை விற்று வருமாறு கூறி யனுப்புகிறாள். காற்சிலம்பை விற்க முனைந்த கோவலனுக்குத் திருட்டுப் பட்டம் சூட்டப்படுகிறது. அந்நேரம் பார்த்து மதுரை மகாராணி, மன்னன் பாண்டியனின் மனைவியின் காற்சிலம்புகளுள் ஒன்று திருட்டுப் போய்விட்டிருந்ததும், கோவலன் விற்கக் கொண்டு வந்த காற்சிலம்பு அரசியினுடையது போன்றே இருந்ததும்தான் அவன் சந்தேகிக்கப்பட்டதற்குக் காரணங்கள்.

அரசவைக்குக் கொண்டுவரப்பட்ட கோவலனிடமிருந்த சிலம்பு தன்னுடையதே என்று அரசி சொல்ல, பாண்டிய மன்னன் அவனுக்கு மரண தண்டனை விதிக்கிறான். கோவலனுக்கு நேர்ந்ததை யறிந்து அடங்காச் சினங்கொண்டு பொங்கி யெழும் கண்ணகி தன் மற்றொரு காற்சிலம்பை எடுத்துக்கொண்டு பாண்டிய மன்னனின் அவைக்கு வருகிறாள். மன்னனின் அவையில் தன் காற்சிலம்பினுள் இருந்த பரல்கள் அரசியின் காற்சிலம்புகளின் பரல்களினின்று வேறுபட்டவை என்பதைக் கண்ணகி அதை மன்னனுக்கு முன்னால் போட்டு உடைத்து மெய்ப்பிக்கிறாள். கண்ணகி கொண்டு வந்து உடைத்த சிலம்பின் பரல்களும் தன் மனைவியின் ஒரு காற்சிலம்பின் பரல்களும் ஒத்திருந்தது கண்டு பாண்டிய மன்னன் தான் கோவலனுக்கு இழைத்து விட்ட அநீதியை உணர்ந்து மனச்சாட்சியின் உறுத்தலால் மயங்கிச் சாய்கிறான். அக்கணமே மாண்புமிகு மன்னனின் உயிர் பிரிந்துவிடுகிறது.

ஆனால் கணவனை அநியாயமாய் இழந்துவிட்டிருந்த கண்ணகிக்குச் சமாதானம் ஏற்படவில்லை. பாண்டிய மன்னன் உறுத்தல் தாளாது உயிரிழந்ததால் தன் கணவன் திரும்பி வுருவானா என்ன எனும் கோபாவேசம் நிச்சயமாய்க் கண்ணகிக்கு வந்திருக்கும். அந்தக் கோபாவேசம் மிகவும் நியாயாமானதுதான். அவளுடைய உணர்ச்சிகள் புரிந்துகொள்ளப்படக் கூடியவைதான்.

ஆனால், அதற்காக, ஒரு மாநகரத்தையே அவள் எரித்தது சரிதானா? தன் கணவன் அநியாயமாக உயிரிழந்தான் என்பதற்காக, ஆயிரக் கணக்கான உயிர்களை ஒருத்தி அழிப்பது முறைதானா? ஆத்திரம் அறிவை மறைக்கும் என்பதால் அவளது நடவடிக்கை இயல்பானதுதான் என்று சிலர் சப்பைக்கட்டுக் கட்டக்கூடும். ஆனால் அத்தகைய ஒரு பெண்ணுக்குச் சிலை வைக்கலாகுமா என்பதே நமது கேள்வி.

இது போன்ற எண்ணிறந்த ஆண்-பெண் கதைமாந்தர்க்கு நம் பண்டைய இலக்கியங்களிலும் புராணங்களிலும் பஞ்சமே இல்லை. மகாபாரதத்துக் காந்தாரி என்ன செய்தாள்? தன் கணவன் மன்னன் திருதராஷ்டிரன் பிறவிக் குருடன் என்பதால், தானும் ஒரு குருடியாக வாழ்வதே பத்தினித்தனம் என்று முட்டாள்தனமாய் எண்ணித் தன்னிரு கண்களையும் ஒரு துணியால் இறுகக் கட்டிக்கொண்டாள். தன் கணவன் எதையும் பார்க்க முடியாத போது தானும் எதையும் பார்க்கும் வசதி பெற்றவளாக இருக்கக்கூடாது என்பதற்காக அந்தத் தியகமாம் (!) இதென்ன அசட்டுத் தியாகம்! தன் கணவனுக்கு உதவியாக இருப்பதை விடுத்துத் தானும் குருடி போல் வளைய வந்தவளை என்னவென்று சொல்ல!

அடுத்து, நளாயினி என்பதாய் ஒரு மக்கு. விலை மகள் ஒருத்தியிடம் போக விரும்பிய தன் தொழுநோய்க் கணவரை (அவர் ஒரு முனிவராம்! வெட்கக்கேடு!) ஒரு பெரிய கூடையில் வைத்துச் சுமந்துகொண்டு அவரது விருப்பத்துக்கிணங்க அங்கே போகிறாளாம். இவர்கள் அனைவரும் பதிவிரதைகள் என்று கருதப் படுகிறார்கள்.

இந்த இலக்கியங்கள் யாவும் ஆண்களால் படைக்கப்பட்டுள்ள காரணத்தால் பதிவிரதை என்பதற்கு இத்தகைய அபத்தமும், அநியாயமும் நிறைந்த விளக்கங்கள்.

.

ஆக, சோரம் போன கணவனைத் திரும்ப ஏற்றமைக்காகவும், அவன் திரும்பி வுந்த நாள் வரையில் தான் சோரம் போகாதிருந்தமைக்காகவும் கண்ணகி “கற்புக்கரசி” என்று போற்றப்படுகிறாள்.

சிலப்பதிகாரம் ஒரு தகவல் களஞ்சியம் என்று போற்றப்படுகிறது. அதனால் நாம் பயனடைய வேண்டியதுதான். ஆனால், தன் கணவன் அநியாயமாய்க் கொல்லப்பட்ட காரணத்துக்காக ஒரு மாநகரத்தையே எரித்துச் சாம்பலாக்கிய கண்ணகியை நாம் கொண்டாடாதிருப்போமாக. தந்தை பெரியாரின் வழி வந்துள்ள கலைஞர் அவர்கள் பெரியாருக்கு நிச்சயம் ஏற்புடையதாக இருக்க முடியாத ஒரு நிலைப்பாட்டை எடுத்திருப்பது வியப்பை அளிக்கிறது.

சோரம் போன கணவனைத் திரும்ப ஏற்பதும், அவன் திரும்பும் வரை தான் சோரம் போகாதிருப்பதும் ஒரு கற்புக்கரசிக்குரிய இலக்கணமெனில், நம் நாட்டில் இலட்சக்கணக்கான கண்ணகிகள் இன்றும் கூட இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் யார் சிலை வைப்பது?

எனவே, கற்புக்கரசி என்கிற பட்டத்துக்குப் பிற பெண்களினின்று மாறுபட்ட சிறப்பியல்பு ஏதும் இல்லாததோடு, ஆத்திரத்தில் ஒரு நகரத்தையே எரித்துச் சாம்பலாக்கி எண்ணற்ற உயிர்களைக் கொன்று குவித்த கண்ணகிக்குச் சிலை வைப்பது சரியா என்பதே எம்மைப் போன்றோரின் கேள்வி.

இப்போதும் ஒன்றும் மோசமாகிவிடவில்லை. கலைஞர் அவர்கள் கண்ணகி சிலை விஷயத்தை மறு பரிசீலனை செய்து மேற்சொன்ன காரணங்களின் அடிப்படையில் தாமே சிலையை அகற்றி அருங்காட்சியகத்தில் வைக்கலாம். அது அவரது உண்மையான கவுரவத்துக்குச் சிறப்பைச் சேர்ப்பதோடு, போலிக் கவுரவம் பார்க்காதவர் என்கிற பேரையும் பெற்றுத் தரும்.

சிலப்பதிகாரத்துக் கதைமாந்தருள் எவருக்கேனும் சிலை வைத்தேயாக வேண்டுமெனில், அது உறுத்தல் தாங்காது உயிரை விட்ட பாண்டிய மன்னனுக்காகவே இருக்க வேண்டும்.

*********
jothigirija@vsnl.net

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா