சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 2. சமயம்

This entry is part of 43 in the series 20060602_Issue

குமரிமைந்தன்


தமிழகத்தில் இரு வேறு சமயப் போக்குகள் உள்ளன. அவற்றுக்குப் பெருநெறி, சிறுநெறி என்று மேலை மாந்தநூலார் பெயர் சூட்டினர். மேற்சாதியினர் பார்ப்பனர் மூலமாகக் கடவுளை வணங்கும் முறையைப் பெருநெறி என்றும் கீழ்ச்சாதியினர் தாமே நேரடியாகத் தம் தெய்வங்களை வணங்குவதைச் சிறுநெறி என்றும் வகுத்தனர்.[1] பெரும் கோயில்களில் தேர்த் திருவிழா, பார்ப்பனப் பூசாரிகளால் சமற்கிருதத்தில் போற்றி (அர்ச்சனை), ஆறுகால பூசை, நெய்வேதியம், வேள்வி, தேவரடியார்கள், காணிக்கை மற்றும் பெரும் நில மானியங்களோடுள்ள தெய்வங்களைப் பெருந்தெய்வங்களென்றும் குறிப்பிட்ட நாட்களில் மட்டும் பூசை, தெய்வமாடுதல், பலிகொடுத்தல், நேர்த்திக் கடன் செய்தல் ஆகியவற்றோடு வணங்கப்படும் தெய்வங்களைச் சிறு தெய்வங்களென்றும் கூறும் மரபு இன்று நம்மிடம் உள்ளது. ஆனால் இவ்விரு நெறிகளையும் கடைபிடிக்கும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால் இந்த வகைப்பாடு தலைகீழான தென்பது புலப்படும். பெரும்பான்மை மக்கள் வழிபடும் முறையைப் பெருநெறி என்றும் சிறுபான்மையினரின் நெறியைச் சிறுநெறி என்றும் அழைப்பது தான் சரியான நெறி. ஆனால் குழப்பத்தைத் தவிர்ப்பதற்காக வழக்கிலுள்ள வகைப்பாட்டையே இங்கு நாம் பின்பற்றுகிறோம்.

மேற்சாதிக் கடவுள்களாகச் சிவன், திருமால், முருகன், பிள்ளையார், சத்தி ஆகியோர் விளங்குகின்றனர். கீழ்ச்சாதிக் கடவுள்களாக மாரியம்மன், முத்தாரம்மன், காளி, இயக்கி, நீலி, திரவுபதை போன்ற பெண் தெய்வங்களும் அய்யனார், கருப்பசாமி, சுடலைமாடன், வண்ணாரமாடன், இயக்கிமாடன், கொம்பமாடன், பன்றிமாடன், மதுரைவீரன், முனியன், சடையன், சப்பாணி போன்ற ஆண் தெய்வங்களும் மற்றும் எண்ணற்ற குல தெய்வங்களும் குடும்பத் தெய்வங்களும் விளங்குகின்றன.

பெருந்தெய்வங்கள் எனப்படுபவை கூடச் சிறு தெய்வங்களாயிருந்து உருமாறியவையே. ஆண்குறி, பெண்குறி வணக்கங்கள் குறியியல் வடிவம் பெற்று இலிங்கமாக இணைந்தன. சங்க கால அகத்துறைத் தலைவியரின் கிண்டலுக்குள்ளாகிய, உயிர்ப்பலியுண்ட வேலன் இன்று முருகனாகிவிட்டான். இன்றும் இந்த நிகழ்முறை தொடர்கிறது. மாரியம்மன் இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. “பணக்கார” மாரியம்மன் கோயில்களெல்லாம் பெருந்தெய்வ வழிபாட்டு முறை நோக்கித் திரும்பிவிட்டன. சிறு தெய்வவழிபாட்டிலிருந்தே பெருந்தெய்வ வழிபாடு தோன்றிய தென்பதற்குப் பெருந்தெய்வக் கோயில்களிலேயே சான்றுகள் உள்ளன. எல்லாக் கோயில்களிலுமிருக்கும் பலிபீடம் அத்தகைய சான்றுகளில் ஒன்று. இப்பலிபீடத்துக்கு எத்தனையோ ஆதனிய (ஆன்மீக) விளக்கங்களை மதவாணர்கள் தந்தாலும் உண்மையை மறைக்க முடியாது. பல கோயில்களில் பலியிடுவதற்கென்றே கொண்டு வரப்படும் விலங்குகளும் பறவைகளும் ஏலத்தில் விற்கப்படுவதை நாம் காண முடியும். உயிர்ப்பலியிட்டு குருதி சிந்துவதை எலுமிச்சம் பழத்தை அறுத்துக் குங்குமத்தில் தோய்த்துப் பிழிவதன் மூலம் ஈடுசெய்வதைக் காணலாம். இந்து மத இயக்கத்தினர் பல ஊர்க்கோயில்களில் பெருந்தெய்வ வழிபாட்டைப் புகுத்த முயன்று கொண்டிருக்கின்றனர். ஆனால் இவர்கள் முயற்சி வெற்றிபெறாது. குமுக அடித்தளத்தில் பண்பியல் மாற்றம் நிகழாத நிலையில் கடந்த காலங்களில் போலவே இன்றும் புதிது புதிதாகச் சிறு தெய்வங்கள் தோன்றிக் கொண்டேயிருக்கின்றன.

கீழ்ச்சாதி மக்களின் சமய நெறியாகிய சிறு தெய்வ வழிபாடு அந்த மக்களின் வாழ்க்கை முறையாகிய பண்டப் படைப்போடு நெருங்கிய தொடர்புடையது. தாங்கள் படைத்த பண்டங்களைப் படையல் செய்து அவற்றை உண்டு வழிபட்டு தொடர்ந்து வரும் தங்கள் உழைப்புக்கு உரிய பலன் வேண்டி கூட்டாக வணங்குவது அவர்களது வழிபாட்டு முறை. தாங்கள் பலி கொடுக்கும் விலங்குகளையும் படையலிட்ட உணவையும் தங்கள் உறவினர்களுடன் உண்டு களிக்கின்றனர். வழிபாட்டைத் தாங்களே கலை வடிவில் நிகழ்த்துகின்றனர். அவர்களது வழிபாட்டில் பண்டங்களின் அழிவு மிகக் குறைவு. வழிபாட்டின் போதே தொடர்ந்து பருவ நிலைகள், செழுமை போன்றவற்றை அறிவதற்காகச் சில சடங்குகளை மேற்கொள்கின்றனர். (இவை எந்த அளவுக்கு அறிவியலுக்கு உகந்தவை என்ற ஆராய்ச்சியை மேற்கொள்ள வேண்டும் என்று நம் நாட்டில் “அறிவியல்” பயின்று விட்டதாகக் கொட்டமடிக்கும் எந்த மேதையும் இன்று வரை கருதியதில்லை. ஒருபுறம் அவற்றை வெறும் மூடநம்பிக்கைகள் என்று ஒதுக்குவோரும் மறுபுறம் அவற்றில் தெய்வீக ஆற்றல் வெளிப்படுகிறது என்று போற்றி ஒதுங்குவோருமே உள்ளனர்.) கீழ்ச்சாதியினர் தம் தெய்வத்திடம், அதாவது தெய்வமாடியாகிய ஒரு மனிதனின் மீது ஏறி அவனை ஆட வைப்பதாகத் தாங்கள் நம்பும் தெய்வத்திடம் தம் தாய்மொழியில் முறையிடவோ சண்டையிடவோ அல்லது அதைத் தூற்றவோ கூடத் தயங்குவதில்லை. அவர்களது வேண்டுதல்கள் எப்போதும் இவ்வுலகைப் பற்றியவையே. மேற்ச்சாதியான் தன் வளமையை உலகுக்குக் காட்டவும் தனக்கும் தன் குடும்பத்துக்கும் மட்டும் இவ்வுலகிலும் மேலுலகிலும் அனைத்தும் கிடைக்க வேண்டுமென்றும் அல்லது மக்களை ஏமாற்றிக் கோயிற் சொத்துகளையும் ஊராரையும் கொள்ளையடிக்கவும் “பெருந்தெய்வங்”களுக்குக் காணிக்கைகளும் “திருப்பணி”களும் வேடிக்கைகளும் செய்கிறான். சுரண்டப்பட்ட மனித உழைப்பும் நேரடியான மனித உழைப்பும் அளவற்று வீணடிக்கப்படுகின்றன. தனது “வேண்டுகோள்களை” இறைவனுக்குச் சொல்வதற்கென்று இடைத்தரகர்களை வைத்துத் தனக்குப் புரியாத மொழியில் அவர்கள் கூறுவதைக் கேட்டுப் பூரித்துப் போகிறான். மேலுலகில் முடிவில்லாத இன்ப விளையாட்டே அவனது இறுதிக் குறிக்கோள்.

இந்த இரண்டு முறைகளில் நாம் ஏன் கீழ்ச்சாதி மக்களின் சிறு தெய்வ வழிபாட்டின் பக்கம் நிற்க வேண்டும் என்ற கேள்விக்கு விடை காண்போம். உலகில் மனித வடிவில் வணங்கப்படும் தெய்வங்களில் பெரும்பாலானவை வீர வணக்கத்திலிருந்து உருவானவையே. கட்டுத்திட்டமான நெறிமுறைகளை உடைய யூத மதத்தின் யகோவா வணக்கம் மோசேயைச் சிந்திக்காமல் நடைபெறுவதில்லை. அதே போல் முகமது நபி இல்லாமல் அல்லா இல்லை. இயேசு ஆகிய மகன் இன்றி ஆண்டவர் ஆகிய “தந்தை” இல்லை. இவையெல்லாம் வீர வழிபாட்டின் திரிந்த வடிவங்களே.

தமிழகத்திலும் வீர வழிபாடு நினைவுக் கெட்டாத காலந்தொட்டு வருவது. வீரச்செயல் புரிந்தோருக்கு நடுகல் நடுவது நமது மரபு.

காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் (தொல். பொருள் 60)

என்று அதற்கு இலக்கணமும் வகுக்கப் பட்டிருக்கிறது.

பெயரும் பீடும் எழுதி அதர்தொறும்
பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல் (அகம் 131)

போன்ற விளக்கங்களும் காணக்கிடக்கின்றன.

இயற்கையை வெற்றி கொள்வதற்கு மக்களுக்கு வழிகாட்டியோர், எதிரிகளிடமிருந்து அவர்களைக் காத்தோர், மக்களுக்குத் தொண்டாற்றியோர், பெருமைக்குரிய முன்னோர், செயற்கரிய செய்தோர், போர்க்களத்தில் வீரமரணம் எய்தியோர், இயற்கையல்லா முறையில் இறந்தோர் சிறு தெய்வங்களாயினர். வன்கொலையாக இளம் பருவத்தில் வாழ்க்கையை நுகரா நிலையில் மாண்டோர், சூலியாக மாண்ட பெண்கள், கொல்லப்பட்டோர் ஆகியோர் பேய் வடிவில் தம் கொலைக்குக் காரணமானவர்களை அல்லது தொய்வுறாத தமது இளமைத் துடிப்பு காரணமாக பொதுமக்களைத் துன்புறுத்துவர் என்ற அச்சத்தாலும் வணங்கப்பட்டனர். மற்றும் நன்மை அல்லது தீமை செய்யும் விலங்குகள், மரங்கள் போன்று உயிருள்ளவையும் உயிரற்றவையாகிய ஆறுகள், மலைகள், கடல்களும், கோள்கள், நாண்மீன்கள் போன்ற வான் பொருட்களும் கூட வணக்கத்துக்கு உரியவையாகின்றன.

இவ்வாறு வீர வணக்கத்திலிருந்து தோன்றி அவற்றின் தோற்றச் சூழலிலிருந்து அயற்பட்டும் அயற்படுத்தப்பட்டும் பல சிறு தெய்வங்கள் “பதவி உயர்வு” பெற்றுப் பெருந் தெய்வங்களாகியுள்ளன. இந்தப் பதவி உயர்த்தம் அனைத்தும் அவற்றை வணங்குவோர் பொருளியலில் அல்லது அரசியலில் உயர்வடைந்ததன் விளைவாகவோ அல்லது அத்தகைய முயற்சிகளுக்குத் துணையாகவோ நடைபெற்றுள்ளன என்பது அவற்றின் வரலாறுகளைக் கூர்ந்து ஆராய்ந்தால் புலப்படும். அரசியல் காரணியே முனைப்பாகச் செயற்பட்டுள்ளது பெரும்பான்மை.

நம் நாட்டில் சிறு தெய்வ வழிபாட்டை ஒழித்துப் பெருந்தெய்வ வழிபாட்டை மேற்கொள்ள அல்லது சிறு தெய்வங்களைப் பெருந்தெய்வங்களாக்கப் பல முயற்சிகள் நடந்துள்ளன. புதிய சமயங்களின் பின்னணியில் புதிய ஆளும் வகுப்புகள் உருவான காலங்களில் அவற்றின் தலைவர்களும் ஒடுக்கப்பட்ட சாதிகளிலிருந்து செல்வத்தில் அல்லது செல்வாக்கில் வளர்ச்சி பெற்றவர்கள் குறிப்பிடத்தக்க அளவில் உருவாகிவிட்ட நிலையில் தோன்றிய தலைவர்களும் பொதுச் சீர்த்திருத்தத் தலைவர்களும் இம்முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். சிறு தெய்வங்களைச் சிவன், காளி, திருமால் ஆகியோரோடு உறவுபடுத்துவதன் மூலம் இந்த நோக்கத்தை எய்த அவர்கள் முனைந்திருக்கிறார்கள். ஆனால் அவையனைத்தும் தோல்வியையே தழுவின. புதிய கதைகளும் புராணங்களின் கட்டற்ற பெருக்கமுமே ஒரே பயனாக இருந்துள்ளது. பழைய தெய்வங்கள் தொடர்ந்து வாழ்ந்து வரும் போது புதுப் புதுத் தெய்வங்களும் புதுப்புதுப் புராணங்களும் தோன்றிக் கொண்டேயிருக்கின்றன. நம் நாட்டிலுள்ள ஒவ்வொரு கோயிலையும், ஒவ்வொரு தெய்வத்தின் வரலாற்றையும் அணுகி ஆய்வோருக்கு அவற்றின் மீது படிந்திருக்கும் சமய, அரசியல் சுவடுகள் தெளிவாகவே தெரியும். வரலாற்றிலிருந்து தெய்வங்களையும் தெய்வங்களிலிருந்து வரலாற்றையும் தெளிவாகப் புரிந்துகொள்ள இந்த அணுகல் உதவும்.

நாகரீகத் தொடக்கத்தில் மனிதன் இயற்கையையும் பிற மனிதக் கூட்டங்களையும் எதிர்த்து இடைவிடாத போராட்டம் நடத்த வேண்டியிருந்த சூழ்நிலையில் அவனுக்கு இரு வகைகளிலும் அருந்தொண்டாற்றியவர்களின் நினைவை அவன் போற்றியதில் தவறேதுமில்லை. இன்றும் பொருளியலிலும் அதனால் அறிவு வாய்ப்பிலும் மாபெரும் ஏற்றத்தாழ்வுகளும், இயற்கை ஆற்றல்களை விட மனிதனின் கட்டுப்பாட்டை மீறிவிட்ட குமுக ஆற்றல்களின் முன் ஈடு கொடுத்து நிற்க முடியாத குமுகச் சூழல்களும் தலைவர் வழிபாட்டை உருவாக்கியது தவிர்க்க முடியாததாகிறது. ஒவ்வொரு நிகழ்விலும் தொடக்கத்தில் மக்களுக்கும் தனியாட்களான தலைவர்களுக்கும் இடையிலுள்ள முரண்பாடு நட்பு முரண்பாடாக இருந்து, பின்னர் அது பகை முரண்பாடாகவும் ஆனால் அகவறுமை காரணமாக மக்களால் புரிந்து கொள்ள முடியாமலும் மாறுகிறது. மக்களிடையில் பொருளியல் ஏற்றத்தாழ்வுகள் குறையுந் தோறும், அதன் விளைவாகவும் காரணமாகவும் மக்களிடையிலுள்ள உறவுகள் மேம்படுந்தோறும் இந்தப் பகை முரண்பாடு மீண்டும் நட்பு முரண்பாடாக மாறும். அப்போது இந்தத் தலைவர் வழிபாடு என்பது சிறந்தோரைப் போற்றுதல் என்பதாக மாறும். இன்று பொருள் குவிப்பதையே குறிக்கோளாகக் கொண்டிருக்கும் குமுக அமைப்பிலிருந்து விடுபடும் போது மனிதனை இயக்கும் விசை குமுக ஏற்பு என்ற குறிக்கோளாகவே அமையும். எனவே அப்போது சிறந்தோரைப் போற்றுதல் என்பது குமுகத்தின் நலனுக்கு எதிராக இருக்க முடியாது.

சிறந்தோரைப் போற்றுதல் என்பதிலிருந்த சிறு தெய்வ வழிபாடாகி முழு முதற் கடவுள் வழிபாட்டிற் சென்று நிற்கும் இன்றைய நிலையிலிருந்து சிறந்தோரைப் போற்றுதல் என்ற நிலையைப் புதிய சூழ்நிலைகளில் எய்த வேண்டுமாயின் சிறு தெய்வ வழிபாட்டை நம் தொடக்கப் புள்ளியாகக் கொள்ளலாம். ஆனால் அதே நேரத்தில் ஒவ்வொரு சிறு தெய்வத்தின் தோற்றத்தையும் ஆய்வு செய்து அதன் உண்மையான குமுகக் குறிதகவை மக்களுக்கு எடுத்து விளக்கி அவர்களது பண்பாட்டை உயர்த்த வேண்டும். ஆய்வு நிலையில் பேரா.நா. வானமாமலை சில அடிப்படைப் பணிகளைப் புரிந்து (சில தவறுகள், முற்கோள்கள்[2] இருந்தாலும்) வழிகாட்டியிருக்கிறார். ஆனால் அந்த மக்களின் உண்மையான சிக்கல்களைக் கையிலெடுத்து அவற்றின் மெய்யான தீர்வுக்குச் சரியான வழிகாட்டி அவர்களை வழிநடத்தி அவர்களின் நம்பிக்கையைப் பெற்ற ஓர் இயக்கத்தால் தான் இப்பணியை முழுமையாக்கி நடத்தி வெற்றி பெற முடியும்.

இந்த இடத்தில் வரலாற்றில் “உயர்நிலை”த் தெய்வங்களைக் கைவிட்டு வீர வழிபாட்டுக்கு மாறிய ஒரு மக்களைப் பற்றி அறிந்து கொள்வது நல்லது. சப்பானியர் சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் மேற்கொண்ட “பேரரசு மீட்பியக்கம்” (Meiji Restoration) அதுவரை அங்கு செல்வாக்குப் பெற்றிருந்த மேற்சாதி மதமான புத்தத்தைப் புறக்கணித்து விட்டு வீர வழிபாட்டுச் சமயமான சிண்டோயியத்தை (Shintoism)த் தேசியச் சமயமாக்கியது. அதன் விளைவாக அதுவரை இழிவுபடுத்தப்பட்டு வந்த பெரும்பான்மையான கீழ்ச்சாதி மக்களுக்குத் தன்னம்பிக்கையும் தன்மான உணர்வும் உடலுழைப்பின் மீது மதிப்பும் உருவாகி இன்றைய புதிய சப்பான் உருவாவதற்கு அடிப்படையான உளவியல் சூழ்நிலை ஏற்பட்டது. நம் நாட்டில் இத்தகைய வீர வழிபாடான சிறு தெய்வங்கள் கீழ்ச்சாதிகளிலிருந்து அல்லது அவர்களது வாழ்வில் தொடர்பு கொண்ட தனி மனிதர்களிலிருந்து உண்டானவை. எனவே அவ்வழிபாட்டை உயர்த்திப் பிடிப்பதென்பது அவர்களை ஏற்றுக் கொள்வதாகவும் அவர்களையும் அவர்களது உழைப்பையும் மதிப்பதாகவும் பொருள்படும். அதனால் அவர்களுக்குத் தன்னம்பிக்கையும் தன்மதிப்பும் உருவாகும். அதிலிருந்து புதிய குமுகத்தைப் படைப்பதில் அவர்களது முழு ஒத்துழைப்பும் பங்களிப்பும் கிடைக்கும்.

ஆனால் பழைய மதங்களை நாம் அப்படியே என்றென்றும் கொண்டிருக்க வேண்டுமென்பதில்லை. சமயமில்லா, கடவுளில்லா, மூடநம்பிக்கைகளில்லா ஒரு குமுகத்தைப் படைக்க வேண்டுமென்பதே நம் இறுதிக் குறிக்கோள். ஆனால் அதை எய்துவதற்குள் சில இடைநிலைகளைத் தாண்ட வேண்டியிருக்கும். இயற்கையாற்றல்களும் குமுக விசைகளும் மனிதனின் கட்டுக்குள் இல்லாமலிருக்கும் வரை கடவுள் நம்பிக்கை ஏதோவொரு வடிவத்தில் இருந்து கொண்டுதானிருக்கும். ஆனால் அது குமுக வளர்ச்சிக்குத் தடையாயில்லாத வகையில் இருக்க வேண்டும்.

பெருந்தெய்வ வழிபாடு முழுக்க முழுக்க மன்னராட்சி மற்றும் நிலக்கிழமை மற்றும் வருணக் குமுக அமைப்பின் எதிரொளிப்பாகவும் அதற்கு வலுவூட்டுவதுமாகவே உள்ளது. மன்னர்களுக்குச் செய்யும் 16 வகைப் பணிவிடைகள் (சோடச உபசாரம்) தேர் ஊர்தல், வாகன உலா, கொடியேற்றுதல் முதலிய அனைத்தும் அக்குமுக அமைப்பையே எதிரொளிக்கின்றன. அதன் அடிப்படையில் தான் இன்று அரசியல் தலைவர்களுக்கும் மதிப்பு வழங்கப்படுகிறது. அத்துடன் பூசகருக்குக் கருவறை, அரசர்களுக்கும் அதிகாரிகளுக்கும் உள்மண்டபம். வணிகருக்கும் வேளாளருக்கும் திருச்சுற்று, பிற்படுத்தப்பட்டோருக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் வெளிப்புறம் என்று வருண முறையிலேயே அவை அமைக்கப்பட்டிருக்கின்றன.

நிறைய சொத்துகளும் பெரும் உண்டியல் வருமானமும் உள்ள கோயில்களில் கூட திருவிழாவின் போது பெரும்பான்மை நாட்களும் பல்வேறு தரப்பு மக்களால் திருப்பணி(உபயம்)யாகவே விழா நடைபெறுகிறது. கோயில் வருமானத்திலிருந்து செய்யப்படும் செலவு மிகக்குறைவே. கோயில் வருமானத்தை தக்கார், அறங்காவலர்கள், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், அமைச்சர்கள், இறுதியில் ஏதாவதிருந்தால் பூசகர் ஆகியோர் கொள்ளையிட்டுக் கொள்கின்றனர்.

தமிழ்நாட்டிலுள்ள நன்செய் நிலங்களின் பரப்பில் நான்கிலொரு பங்கு திருக்கோயில்களுக்கும் மடங்களுக்கும் உடைமையாயிருக்கின்றன என்று ஒரு புள்ளிக் கணக்கு குறிப்பிடுகிறது. இவற்றின் பயன்பாடு குத்தகையாளான் முழு ஆதிக்கத்தினுள் சென்றால் வேளாண்மைச் செல்வம் பெருகும். அது போலவே பெரும்பரப்புகளில் கோயில்களுக்குச் சொந்தமான புன்செய் நிலங்களும். “ஊர் கூடித் தேரிழுத்தல்” என்ற ஒரு சொலவடையை பழமையாளர்கள் ஒன்றுபட்ட முயற்சிகளுக்கு உவமையாகப் பயன்படுத்துவர். ஆனால் உண்மையில் தேரிழுக்கும் போது வெளிப்படுவது நம் மக்களின் ஒற்றுமையல்ல, வேற்றுமைகளே. தேர் என்னும் பெயரில் மரக்கட்டைகளின் ஒருபெரும் குவியல் மீது ஒரு பொம்மையை வைத்து இழுக்கும் கேலிக்கூத்தே தேரோட்டம். இதில் பூணூலணிந்த பார்ப்பான் தேரில் வைத்து இழுக்கப்படுவான். முதல் வரிசை (மரியாதை)க்காரரென்றும் அறங்காவலரென்றும் தக்காரென்றும் அறநிலையத்துறை செயல் அலுவலர் என்றும் மேன்மக்கள் வடத்தைத் தொட்டு “இசைவு” வழங்குவர். பிற மக்கள் உடல் வருந்தி இழுப்பர். கட்டை போடுவதற்கென்று தனிச் சாதியார். பெரும்பாலும் மேற்சாதியினர், போற்றி(அர்ச்சனை)த் தட்டைக் காணிக்கையுடன் நீட்டுவர். இவ்வாறு தேரிழுக்கும் நடைமுறையில் நம் குமுகத்தில் நிலவும் அனைத்துச் சாதி, வகுப்பு வேறுபாடுகளும் வெளிப்படுகின்றன.

ஆண்டுக்கு இரண்டு முறை எல்லாக் கோயில்களிலும் “ஊர் கூடித் தேரிழுத்து” வந்த மக்கள் அதன் மூலம் தங்களுக்குள் ஒற்றுமைப் பட்டிருப்பார்களானால் வாணிகத்துக்காக இந்நாட்டினுள் நுழைந்த ஐரோப்பியக் குழுக்கள் ஒவ்வொன்றுக்கும் இந்நாட்டைக் கைப்பற்றி ஆளலாமென்ற எண்ணமும் அதன் அடுத்த கட்டமாக ஆளவேண்டுமென்ற அவாவும் அதனடிப்படையில் அதற்கான முயற்சிகளும் அதன் விளைவாக இருநூறாண்டு அடிமைத்தனமும் விளைந்திருக்காது. இது நிகழ்ந்து கொண்டிருந்த ஏறக்குறைய 250 ஆண்டுக்காலம் (1600 – 1850) “ஊர் கூடித் தேரிழுத்த நம் “ஒற்றுமை” எங்கே போய் ஒளிந்து கொண்டது?

பல நூறு தன்கள் எடையுள்ள மரத்தைத் தேர் என்று சொல்லி அதில் ஒரு பொம்மையையும் பார்ப்பனர்களையும் வைத்து இழுப்பதும், மக்களுக்கு உண்மையான ஆர்வமில்லா நிலையில் பாரதிய சனதா கட்சி, இந்து முன்னணி, இரா.சே.ச. போன்ற பழமையாளர்கள் தெருத் தெருவாக மக்களைக் கெஞ்சித் திரிவதும் தேவையற்ற கிறுக்குத் தனங்கள். தேர் மரத்தைப் பயனுள்ள வகையில் செலவிட்டு விட்டுத் தேர்த் திருவிழாக்களை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.

சிறு தெய்வ வழிபாட்டிலும் சாதி முறை நிலவுகிறது. அத்துடன் தனித்தனிச் சாதிகளுக்கு ஒரே தெய்வத்துக்குத் தனித்தனிக் கோயில்கள் உள்ளன. பொதுக் கோயில்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தனியிடமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்த போராட்டங்கள் பல இடங்களில் தோன்றியுள்ளன. சில இடங்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு என்றும் ஒரே கோயிலில் தனித்தனித் திருவிழாக்கள் அல்லது கொடைவிழாக்கள் நடத்தப்படும் அளவுக்கு இப்போராட்டங்கள் முன்னேறியுள்ளன.

மொத்தத்தில் நம் குமுகத்திலுள்ள வழிபாட்டு முறையே சாதிகளற்ற ஒரு மக்களாட்சிக் குமுகத்துக்கு உகந்ததாயில்லை. எனவே அனைத்து மக்களும் சமத்துவத்துடன் அமைதியாகக் கலந்து எளிமையாகத் தம் மன அமைதியைத் தேடும் வகையில் கிறித்தவம், முகம்மதியம் போன்ற சமயங்களில் உள்ளவாறு அகன்ற, காற்றோட்டமும் வெளிச்சமுமுடைய தூய வழிபாட்டு மண்டபங்களில் வழிபாடு செய்யும் வகையில் உள்நாட்டு மதத்தை மேம்படுத்த வேண்டும். அத்தகைய கருத்துகளைப் பரப்பும் “ஆன்மிக”த் தலைவர் எவராவது உருவானால் அவருடன் தோளோடு தோள் நின்று அந்த இயக்கத்தை வளர்க்க வேண்டும்.

கிட்டத்தட்ட 6-ம் நூற்றாண்டு தொடங்கி பத்தாம் நூற்றாண்டுக்குள் தமிழகத்தில் பெருங்கோயில்கள் எடுத்து அவற்றுக்கு நிறைய நிலங்களும் எழுதி வைக்கும் பழக்கம் மன்னர்களிடையில் வேர் கொண்டது. சோழப் பேரரசின் காலத்தில் அரசின் ஓர் உறுப்பாகவே கோயில்கள் செயற்படத் தொடங்கிவிட்டன. மக்களிடம் வரி தண்டுவதிலிருந்து நலப்பணிகள் செய்வது, படையணிகள் பராமரிப்பது வரை அனைத்துப் பணிகளிலும் கோயில்கள் ஈடுபட்டன. இன்றோ அத்தகைய பணிகள் எதுவுமில்லை. கடவுளுக்குப் படையல் செய்வது, இசை நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள் நிகழ்த்துவது என்ற அளவில் சிறிய பணிகளே மேற்கொள்ளப்படுகின்றன. அதிலும் பெரும் பணம் சுரண்டப்படுகிறது. எனவே இயல்பாகவே நிலங்கள் குத்தகையாளர்களிடம் சென்றடைந்து விட்டன. இந்நிலங்களை கோயில்களுக்கு மீட்க வேண்டும் என்ற குரல் வலுவாகக் கேட்டுக் கொண்டிருக்கிறது. இதற்கு எதிர்க்குரல் கொடுப்பவர் எவருமில்லை.

மன்னராட்சிக் காலத்தில் அரசின் அனைத்துப் பணிகளுமே கோயில்கள் மூலம் செய்யப்பட்டதால் அதற்குத் தேவையான பொருளியல் அடிப்படைக்கு நிலங்கள் தேவைப்பட்டன. இன்றோ வழிபாடு தவிர கோயில்கள் வேறெந்த நோக்கத்தையும் நிறைவேற்றவில்லை.

பண்டைக் கோயில்களில் பெரும்பாலானவை முன்பு கருவறை மட்டும் இருந்து பின்னர் வெவ்வேறு மன்னர்கள் காலத்தில் ஒவ்வொரு சுற்றாக விரிவாக்கப்பட்டு வந்துள்ளன. எனவே கட்டிட வடிவமைப்பு ஒழுங்கற்றதாகவும் உள்ளே செல்லச் செல்ல காற்றும் வெளிச்சமும் புக முடியாத நிலையில் இருளடைந்து வெளவால்களின் உறைவிடமாகி ஈரமும் நாற்றமும் கொண்டு விளங்குகின்றன. ஒரு நலமான வழிபாட்டுக்கு இவை தகுதியற்றவையாகிவிட்டன. எனவே இக்கோயில்களைத் தகர்த்து விடலாம். கோயிலின் சொத்துக்களைக் குத்தகையாளருக்குச் சந்தை விலையில் பாதி விலையை வாங்கிக் கொண்டு கொடுத்துவிடலாம். பொதுமக்களின் குத்தகைச் சொத்துகளில் இந்நடைமுறையே கையாளப்படுகிறது. இதன் மூலம் நிலங்களின் விளைப்புத் திறன் உயரும். அந்நிலங்களில் பயிரிட்டு வரும் கீழ்ச்சாதி மக்கள் இதனால் பயன் பெறுவர். ஆங்காங்கிருக்கும் சிறு தெய்வக் கோயில்களைக் கூட இடித்துவிட்டு ஒவ்வொரு பகுதிக் கென்று மக்கள் எண்ணிக்கை அடிப்படையில் வெறும் வழிபாட்டு மண்டபங்களை மட்டும் கொண்ட கோயில்களைக் கட்டலாம். கோயில் பராமரிப்புச் செலவை அவ்வப்பகுதி மக்களிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். இதை அடுத்த கட்டமாக வைத்துக் கொள்ளலாம். நாள் செல்லச் செல்ல, குமுகம் முன்னேற முன்னேற இந்தக் கோயிலும் செல்வாக்கிழந்து கோயிலில்லா, கடவுளில்லா குமுகம் உருவாகும். கோயில்களைப் பராமரிக்க பணம் செலுத்துவதில் மக்கள் காட்டும் ஆர்வம் அல்லது ஆர்வமின்மையே சமயத்தின் அல்லது கோயிலின் தேவை அல்லது தேவையின்மையை அளக்கும் அளவு கோலாகிவிடும்.

(தொடரும்)

அடிக்குறிப்புகள்:

[1] மிலட்டன் சிங்கர் எனும் மேனாட்டு அறிஞர் இக்கோட்பாட்டை உருவாக்கியவர் என்று தெரிகிறது.
[2] முற்கோள் : Prejudice

குமரிமைந்தன்
kumarimainthan@sify.com
htpp://kumarimainthan.blogspot.com

Series Navigation