இவை எழுதப்பட்ட காலங்கள்–1

This entry is part [part not set] of 41 in the series 20060421_Issue

காஞ்சனா தாமோதரன்


கடந்த பல மாதங்களிலான கத்ரீனா நிவாரணப்பணி இடங்களில் தொடர்புத் தொழில்நுட்ப வசதிகள் அதிகம் இல்லை. உடல் உழைப்பு தரும் நிறைவுடனும் அசதியுடனும் சாயும் பொழுதுகளில், மனிதமுள்ள மனங்களும் காத்திரமான புத்தகங்களும் பல்துறைச் சிந்தனைகளும் மட்டுமே துணை. குடும்பம் தவிரப் பிற உறவுகள் இற்றுப் போயிருக்கின்றன. காலப்பிரக்ஞை அறவே அற்றுப் போயிருக்கிறது.

தென்மாநிலங்களிலிருந்து வீடு திரும்புகையில், இலையுதிர்காலமும் பனிக்காலமும் முடிந்து வசந்தம் துளிர் விட்டிருக்கிறது. வாஷிங்டனில் செர்ரிமலர்த் திருவிழா. வீட்டைச் சுற்றிலும் ஹைக்கூ சொரியும் செர்ரிப்பூக்கள். செந்தாமரையும் வெண்டாமரையும் கரையேறிக் கரும்பச்சை மரத்தில் பூத்தது போன்ற மக்னோலியாக்கள். வானத்து நீலத்தை மறைக்கும் இளம்பச்சைத் தளிர்கள். பசும்புல்தரையில் நிதானமாய் நின்று கொறிக்கும் முயல்குட்டிகள். ஆரோகணக் கச்சேரிப் பறவைகள்.

இருபத்தியாறு ஆண்டுகளுக்குப் பின்னும், நான்கு பருவங்களாய் மாறிக் கழியும் காலத்தின் அதிசயம் நீர்க்கவில்லை எனக்கு. ஆழ்மனதில் உறையும் பனிப்பாறையை உடைத்து நம்மை மீட்பதில் பருவமாற்றங்களுக்குப் பங்கு உண்டு. ஒவ்வொரு பருவத்துக்கும் ஒவ்வோர் அழகு. கவிஞர்களால் அழகியலுடன் பாடப்பட்ட அழகு. உதிரும் இலை மௌனமாய்ச் சுட்டும் வசந்த மறுமலர்ச்சி என்று கிரேக்க ஹோமர் துவங்கி, லத்தீன் வர்ஜில், இத்தாலிய டான்டே, அமெரிக்க விட்மன் எனத் தொடர்ச்சியாய் நீளும் எழுதுகோலின் தத்துவார்த்தக் குறியீட்டு அழகு.

காலங்காலமாய் ஆகி வந்த படிமங்களும் தத்துவங்களும் மனதின் மூலையில் ஒதுங்கியிருக்கக் கூடும். பார்ப்பதைப் புரிந்து உணருவது எப்படி என உள்மனதுக்கு ரகசியமாய்ச் சொல்லித் தரக் கூடும். அறிதலின் மேல் படர்ந்திருப்பது எத்தனை நூற்றாண்டுகளின் நிழலோ. நிழலை விலக்கிப் பார்ப்பதில் — பார்ப்பதாய் நினைத்துக் கொள்ளுவதில் — ஒரு சுகம். கல்வியும் கலையும் இதற்குத்தான் போல.

சன்னலுக்கு வெளியே பச்சையாய் ஆடும் தளிர்க்கொத்து, இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பான ஒரு வசந்த கால நட்பை நினைவுபடுத்துகிறது.

அவருக்கு ஐம்பது வயதிருக்கலாம். அதற்குக் குறைந்தும் இருக்கலாம். நீண்ட செம்பட்டைத் தலைமுடியும் தாடியும் சடைகளாய்ப் புரளுவதால் பத்து வயது கூடித் தெரிந்திருக்கலாம். அவர் ஒரு குப்பை நுகர்வு நிபுணர். பிறர் குப்பையாய்க் கழித்ததைத் தீர ஆய்வு செய்தபின், அதிலிருந்து தேர்ந்தெடுத்துத் தன் வாழ்க்கைத் தேவைகளை நிறைவு செய்து கொள்ளுபவர். அமெரிக்கப் பொருளாதாரத்தின் விளிம்பில் நிற்கும் அமெரிக்கர்களில் ஒருவர்.

பல்கலைக்கழக நூலகத்தில் அன்றாட ஆய்வு வேலைகளை முடித்து வீடு திரும்பும் வழியில் இந்த நண்பருடன் பேசுவது வழக்கமாய்ப் போயிற்று. பயம் இல்லை. பயப்பட வேண்டுமென்று தோன்றவில்லை. அப்போதைய வர்த்தக மேலாண்மை பிஎச்.டி. மாணவியான என்னிடம், குப்பை நுகர்வின் பொருளாதாரம், அறிவியல், அறவியல், சமூகவியல், மற்றும் அரசியல் பற்றிப் பகிர்ந்து கொள்ளுவார். முதலில் கேட்க நினைத்துத் தயங்கியதைக் கேட்கச் சில மாதங்களாயிற்று. “நீங்கள் எப்படி……இப்படி?”

தொழிற்சாலை வேலையும், வங்கிக் கடனில் வீடும், கடன் அட்டைகளும், மனைவியும், பிள்ளையும் என்றிருந்த சராசரிக் கீழ்மத்தியவர்க்க வாழ்க்கை. தொழிற்சாலை இழுத்து மூடப்பட்டதும் வீதிக்கு வரச் சில மாதங்களே ஆயிற்று. (சில வருடங்கள் கழித்து அவர் வேலை பார்த்த நிறுவனத்தின் பெரிய தொழிற்சாலை ஒன்று மெக்ஸிகோவில் தொடங்கப்பட்டது.) பிள்ளையுடன் மனைவி விலக இன்னும் சில மாதங்கள். ‘ஸ¥ப் கிச்சன்’ என்னும் தர்மசத்திரத்து அரைவயிற்றுச் சாப்பாட்டுடன் அல்லது பட்டினியுடன் வேலை தேடியலைந்த சில வாரங்கள். இருட்டிய பின், ஒளிந்து மறைந்து குப்பைத்தொட்டியைக் குடைந்து, சுயவெறுப்பிலும் சுயபரிதாபத்திலும் குடியிலும் மூழ்கிய சில வாரங்கள். பிறருக்குத் தேவையில்லாததிலிருந்து தன் தேவையைப் பூர்த்தி செய்வது ஒரு கலையென்றும் ஆய்வென்றும் தெளிய இன்னும் சில வாரங்கள்.

“நான் ஒரு கலைஞன். உங்களைப் போலவே ஓர் ஆய்வாளன். என் ஆய்வு முடிவுகள் நேரடியாய் என் வயிற்றுக்குப் போய்விடுகின்றன. உங்கள் ஆய்வு எப்படியோ?”

இப்படி எந்நிலையிலும் நகைச்சுவை உணர்வை இழக்காதிருக்க முடியுமா. ஆச்சரியம். மானுட மனதின் வலிமையும் வாழ்வின் நுட்பமும் இன்னும் பிடிபட்டிராத முதிரா இளமைப்பருவம் அது.

அன்றைய ‘மூடினகதவு’ இந்தியக் குப்பைகளுக்கும் நுகர்வுக் கலாச்சார அமெரிக்கக் குப்பைகளுக்கும் இடையேயான வேறுபாடுகளைப் புரிந்து கொள்ள எனக்கு உதவியவர் இந்த நண்பரே. அந்தப் பெரிய குப்பைத் தொட்டியில் எறியப்படும் பல பொருள்களும் இன்னும் பல காலத்துக்கும் பயன்படக் கூடியவை. தொட்டியிலிருந்து நண்பர் பெற்றுக் கொண்டவற்றில் சில: ஸ்டீரியோ பெட்டி, மெழுகுதிரிகள், படுக்கை விரிப்புகள், இஸ்திரிப் பெட்டி, கழிப்பறைக் காகிதங்கள், புத்தகங்கள், தட்டச்சு இயந்திரம், ‘நைக்கி’ காலணிகள், ஜீன்ஸ், சட்டைகள், பல டாலர்கள் மதிப்புள்ள உதிரி நாணயங்கள், மருந்துகள், உணவுப் பொருள்கள்.

எதையும் பொத்திப் பொத்திச் சேமிக்கும் காலத்திலிருந்தும் இடத்திலிருந்தும் வந்திருக்கும் எனக்கு இது அதிர்ச்சியாய் இருக்கிறது–“ஏன் இப்படி எல்லாவற்றையும் தூரப் போடுகிறார்கள்? ஸால்வேஷன் ஆர்மி போன்ற தருமசாலைகளுக்காவது கொடுக்கலாமே?”

“ஆசை. அவசரம். வசதி. மாற்றம். மறதி.”

“மருந்துகளும் உணவுகளும் கெட்டுப் போகாதா?”

“இல்லை. முகர்ந்தும் தொட்டும் லேசாய்ச் சுவைத்தும் பார்த்தால் எந்தெந்த உணவுப் பொருள்களை எடுத்துக் கொள்ளலாம் என்பது தெரியும். டப்பாக்களில் அடைத்தவை பொதுவாகக் கெடுவதில்லை. ‘ஸீல்’ உடையாமலிருந்தால் மருந்துகள் கெடுவதில்லை. பிஸ்கட், ஸீரியல், உருளை வறுவல் போன்ற உலர்ந்த உணவுகள் கெடுவதில்லை. ப்ளாஸ்டிக் குவளைகளில் அடைத்த இனிப்புத் தயிரும் கெடுவதில்லை. காய்கறிகளிலும் பழங்களிலும் சொத்தையான இடங்களை வெட்டி விட்டு மிச்சத்தைப் பயன்படுத்தலாம். இவ்வளவு கவனமாய் இருந்தும் அவ்வப்போது வயிற்றுப்போக்கு ஏற்படும்.”

நண்பருக்கு முழுமையான உடல் ஆரோக்கியம் இல்லை என்பது தெரிந்தது. உடலில் அங்கங்கே வெடித்திருந்த புண்களைச் சுற்றியிருந்த துணிகள் ஒரு காலத்தில் வெண்மையாய் இருந்திருக்கக் கூடும். ஆனால், நடைபாதையில் வாழுபவரது புண்கட்டுகள் எப்போதும் வெண்மையாய் இருக்க வேண்டுமென நினைப்பது தவறுதானே.

நடைபாதையில் வீடு கட்டுவது பற்றி நண்பரால் ஒரு கருத்தரங்கே நடத்திவிட முடியும். திடமான அட்டைப்பெட்டியில் தம் பொருள்களை அனுப்பும் நிறுவனங்களை அவருக்குப் பிடித்திருந்தது — ப்ராக்டர் & காம்பிள், காம்பாக், க்ளோராக்ஸ் இத்யாதி. அட்டைப்பெட்டிகள் எங்கெங்கே கிடைக்குமென்று அவருக்குத் தெரியும். பெட்டிகளைக் கவனமாய்ப் பிரித்து அட்டைச் சுவர்கள் கட்டலாம். பிரிக்காத பெட்டிகளை மேசை, இருக்கை ஆக்கலாம். வாஷிங்டன் போஸ்ட், நியூயார்க் டைம்ஸ் நாளிதழ்களைக் கம்பளமாய், மேசைவிரிப்பாய், திரைச்சீலையாய், படுக்கைவிரிப்பாய்ப் பயன்படுத்தலாம்.

“எனக்கு நியூயார்க் டைம்ஸின் ஞாயிறு இதழைப் பிடிக்கும் — விரிப்பதற்கு நிறைய பக்கங்கள். ம்ம், நாளிதழ்களை விரித்து ஒருக்களித்துப் படுப்பதில் ஒரு வசதி.”

“என்ன?”

“கண் திறந்ததும் நாட்டு நடப்புகளுக்கு மிகவும் நெருக்கமாய் இருப்பது போல். ஒரு ஜனநாயகத்தின் உண்மைக் குடிமகன் போல்.” சிரிக்கிறார்.

குப்பை நுகர்வோருக்குள் எழுதப்படாத ஒப்பந்தங்கள் இருந்தன. நண்பரது தொட்டியையும் சுற்றுப்புறத்தையும் பிறர் நெருங்க மாட்டார்கள். அவரும் அப்படியே. பகிர்ந்து கொள்ளவும், பண்டமாற்று செய்யவும், பனிக்காலத்தில் தீ மூட்டிக் குளிர்காயவும் என்று பலவற்றுக்காகவும் குழுமிக் கொள்ளுவார்கள்.

குப்பை நுகர்வோரை அப்புறப்படுத்த நகர மேயர் எத்தனையோ முயற்சிகள் செய்தார். அறிக்கைகள் விட்டார். அன்புடன் உருகினார். பரிசுகள் அறிவித்தார். விட்டால் அனைவரையும் நாய்வண்டியில் அள்ளிப் போட்டு ஓட்டியிருப்பார் என்பதே உண்மை. நண்பரும் இதரக் குப்பை நுகர்வோரும் மேயரை நம்பத் தயாராக இல்லை. தம் வாழ்க்கையை இன்னொரு முறை மாற்றிக் கொள்ள அவர்கள் தயாராக இல்லை.

குப்பைத் தொட்டி வழியே வாழ்க்கை கழிவதை நண்பர் நிதானமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தார். கை பிய்ந்து போன ஒரு துணிப்பொம்மையைப் பார்த்ததும் தனக்கு இல்லாது போன பிள்ளையின் ஞாபகம் வந்ததாயும், பிள்ளையின் உருவம் மனதில் இல்லாததால் அழ இயலவில்லை என்றார். பாதியாய்க் கிழிக்கப்பட்ட ஒரு திருமணச் சான்றிதழையும் ஒரு பல்கலைக்கழகப் பட்டச் சான்றிதழையும் தொட்டியில் கண்டபோது அவர் ஆச்சரியப்படவில்லை. தொட்டியிலிருந்து எடுத்த புத்தகங்களையும் வாசித்து அவற்றில் பலவும் தொட்டிக்குப் பொருத்தமானவையே என்று விமரிசித்தார்.
“உங்களுக்குத் தெரியுமா? குப்பைக்கலை என்று ஒன்று இருக்கிறது. குப்பையிலிருந்து ஒரு பொருளை எடுத்து அதைச் சுற்றி நவீனச் சிற்பங்களையோ ஓவியங்களையோ வடிவமைப்பது. குப்பைக்கலையைப் பெரும் விலைக்கு வாங்குவதற்கும் ஒரு சிறு கூட்டம்.”

தொட்டியிலிருந்து பெற்ற தட்டச்சு இயந்திரத்தில் நிறைய எழுத வேண்டுமென அவருக்கு ஓர் ஆசை. குப்பை நுகர்வு அனுபவங்களிலிருந்து சில அடிப்படைப் பாடங்களைக் கற்றிருப்பதாய்ச் சொன்னார். ஒன்று, அவருக்குப் பயனில்லாத பொருள் எவ்வளவு உயர்ந்ததானாலும் அவரைப் பொறுத்தவரை அது மதிப்பற்றது. இரண்டு, அவருக்குப் பயன்படுமென்று இன்று அவர் தேர்ந்தெடுப்பது கூட நாளை குப்பையாய்க் கழியப் போவதே.

இறுதியாக அவர் சொன்னதாய் என் நாட்குறிப்பில் பதிந்து வைத்திருப்பது: “எனக்கும் அதிபெரும்பணக்காரனுக்கும் இடையே ஓர் ஒற்றுமை உண்டு. என்னிடமும் அவனிடமும் இருப்பது எங்கிருந்து வந்ததோ, அங்கிருந்து அள்ளுவதற்கு இன்னும் நிறைய இருப்பது எங்கள் இருவருக்குமே தெரியும். எனக்கும் அவனுக்கும் இடைப்பட்ட வெளியில் கோடிக்கணக்கான மக்கள். பொருள்களையே தம் அடையாளமாய் நம்பி, எதைத் தொலைத்தோம் என்று கூடப் புரியாமல் நூறாயிரம் சானல்களில் துழாவித் தேடிக் கொண்டிருக்கும் மக்கள். அவர்களுக்காகக் கவலைப்படுகிறேன்.”

பல்கலைக்கழக உதவிப்பணத்தில் மிச்சம் பிடித்துத் தாயகம் போய்த் திரும்புவதற்குள் நண்பர் காணாமல் போயிருந்தார். நகர வளர்ச்சிக்காகவும் மேம்பாட்டுக்காகவும் மேயர் அரும்பாடுபட்டு வருவதாய்த் தொலைக்காட்சிச் செய்தியாளர் சொன்னார்.

ஒரு வசந்தகால நட்பு மௌனமாய் உதிர்ந்து போனது.
—————————————————————————–

kanchanathamo@aol.com

Series Navigation

காஞ்சனா தாமோதரன்

காஞ்சனா தாமோதரன்