ஆத்மா, அந்தராத்மா, மஹாத்மா, பரமாத்மா என்றெல்லாம் யோசிக்கும் வேளையில்… -1

This entry is part of 48 in the series 20060414_Issue

மலர் மன்னன்


எனக்குத் திண்ணை வாசகர்களிடமிருந்து வரும் மின் அஞ்சல்கள் பலவும் நான் ஆன்மிகம் குறித்தும் எழுத வேண்டும் எனப் பணிக்கின்றன. ஆன்மிகம் ஓர் அந்தரங்கமான விஷயம்; அதனை எழுத்தால் உணர்த்துதல் உசிதமல்ல, சாத்தியமும் அல்ல என்று அவர்களுக்குப் பதில் சொல்வது வழக்கம். இதுபற்றியெல்லாம் நான் எழுத முற்பட்டால் நானும் ஒரு Godman ஆக முயற்சி செய்வதாகவும் விமர்சனம் வரத் தொடங்கிவிடும் எனவும் சமாதானம் சொல்வதுண்டு. ஆனால் ஆன்மிகம் பற்றிப் பேசவும் ஒரு வாய்ப்பு இப்போது வந்து

விட்டிருப்பதாகத் தெரிகிறது! இது பரமாத்மா ஒரு ஜீவாத்மாவிடம் ஆடுகிற விளையாட்டு அல்லாமல் வேறென்னவாக இருக்க முடியும் ?

சரியை கிரியைகளுக்கு அப்பாற்பட்டதுதான் ஆன்மிகம். ஆனால் சரியையும் கிரியையும்தாம் ஆன்மிகப் பயணத்திற்கான ஆரம்பப் படிக்கட்டுகள். அவற்றில் ஏறிக்கடக்காமல் பயணம் தொடர்தல் சாத்தியமில்லை. இந்தச் சரியையும் கிரியையும் அழகானவை. மிகவும் லவுகீகமானவை. நம்மால் சட்டென்று இனங்கண்டு ஐக்கியமாகக் கூடியவை. அதனால்தான் அநேகமாக நம் அனைவருக்குமே அவற்றைத் தாண்டிப் பயணம் தொடர மனமின்றி, அந்தப் படிக்கட்டுகளின் எழிலில் மயங்கி அவ்வளவில் நின்றுவிடுகிறோம்.

பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரே கூட,”நான் சர்க்கரையாகிவிட விரும்பவில்லை. ஏனென்றால் நான் சர்க்கரையை ருசித்து அனுபவிக்க வேண்டும்” என்று கூறுவார்.

உப்பினால் செய்த பொம்மை ஒன்று கடலின் ஆழம் காணப் போகிறேன் என்று இறங்கியதாம். இறங்கிய மறுகணம் கரைந்து காணாமற் போயிற்றாம் என்றும் சொல்லிக் கைகொட்டிச் சிரிப்பார், பரமஹம்சர்.

பரமாத்மாவைக் காணப் போகிறேன் என்று ஜீவாத்மா ஆன்மிகப் பயணம் தொடங்கினால் அதுதான் கதி. ஆகவேதான் பெரியவர்களுங்கூட ஒரு கட்டத்திற்குமேல் ஆன்மிகப் பயணத்தைத் தொடர்வதில்லை, தங்களுக்கு இங்கே மக்கள் மத்தியில் வேலை இருப்பதாகக் கருதும் பட்சத்தில். இந்த நுட்பமெல்லாம் மிகச் சாமானியரான நமது அறிவுக்கு எட்டுவதில்லைதான்.

பல நுட்பமான பதப் பிரயோகங்கள் இப்படித்தான் நம்மால் சரியாகப் புரிந்து

கொள்ளப்படாமல் கொச்சைப் பட்டுப்போகின்றன. உடனே நினைவுக்கு வருவது தர்மம், கர்மம் ஆகிய சொற்கள்.

தர்மம் என்பது ஒருவர் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கம் அல்லது இயல்பு சார்ந்து இயங்குதலைக் குறிப்பது. ஆனால் அது பிச்சையிடுதல் என்பதாக அர்த்தங்கெட்டுப் போய்

விட்டிருக்கிறது. கர்மம் என்பது ஆற்றவேண்டிய வினையையும் ஆற்றிய வினையையும் குறிப்பது. நடைமுறையில் ஏதோ தீவினைப் பயன் என்பதாக அது மாறிப் போனது. கர்மம் செய்தல் என்றாலே அது ஏதோ இறுதிக் கடன் கழித்தல் என்பதுபோலவும் அர்த்தங்குன்றிப் போனது.

சரியையும் கிரியையும் அனுசரிக்க எளிதானவை, காணவும், ஈடுபடவும் சுகம் தருபவை என்பதால்தான் அத்வைதம் பேசிய ஆதி சங்கரர்கூட மக்களுக்காக வேண்டி கனகதாரா ஸ்தோத்திரம் என்றும் பஜகோவிந்தம் என்றும் இயற்றிக்கொண்டிருந்தார். நம் யுகத்திற்கு

ஏற்ற பகவானின் அவதாரம் அர்ச்சாவதாரம் என்று மகிழ்வார்கள், வைணவர்களும். அம்மையையும் அப்பனையும் தம் குழந்தைகளாகவே பாவித்துக் காலையில் துயில் நீக்கி, நீராட்டி, ஆடை அணிகலன் அணிவித்து, அமுதூட்டி, சமயங்களில் திருக்கலியாணமும் செய்வித்து, பள்ளியறைக்கும் எழுந்தருளப் பண்ணுவார்கள். யோசிக்கும் வேளையில் இவையெல்லாம் மிகவும் அபத்தமாகவும் சிறுபிள்ளைத்தனமாகவும் தோன்றலாம். ஆனால் கடைப்பிடிக்க இது சவுகரியமானதும் சந்தோஷமானதுமேயாகும் அல்லவா ? வாழ்க்கை அனுபவிக்கத் தக்கது எனவும் மகிழ்ச்சிகரமானதுதான் எனவும் நம்மை உணரச் செய்வதல்லவா ?

அன்றாடச் சில மணிநேர பூஜையுங்கூட மனக் கட்டுப்பாட்டிற்கும் உடல் ஆரோம்க்கியத்

திற்கும் உதவுவதே அல்லவா ?

சிறு விக்கிரகம் ஒன்றைக் கடவுளாக வரித்து, அக்கடவுளுக்கு நிவேதனமாக மலர்களும் தின்பண்டங்களும் அளிப்பது உண்மையில் நமது மகிழ்ச்சிக்காகவே அல்லவா ? இந்தப் பிரபஞ்சத்தையே படைத்துக் காத்து அழிக்கவிருக்கும் இறைக்கு அவை அவசியம் என்றா அளிக்கிறோம் ? ஆனால் நாம் அவ்வாறு அளிப்பதை நமது மகிழ்ச்சிக்காக அந்த இறைச் சக்தி ஏற்கத் தவறுவதில்லை என்பதை மெய்யாகவே மெய்யாகவே அறிந்துள்ளேன்.

இடுப்பில் உள்ள குழந்தைக்குத் தாய் சோவுட்டுகையில், அந்தக் குழந்தையும் ஏதோ நினைத்துக்கொண்டு தன் சிறு கையைக் கிண்ணத்தில் தோய்த்தெடுத்துக் கையில் கிடைத்த உணவைத் தாயின் வாயில் திணித்துவிட்டுச் சிரிப்பதில்லையா ? தாயும் அதனை மிக்க மகிழ்ச்சியுடன் உண்பதுதான் வழக்கமேயன்றி உன் சோற்றுக்கு வழிசெய்வதே நான்தான்; நீயென்ன எனக்கு நான் கொடுத்ததிலிருந்தே கொஞ்சம் எடுத்துத் தருவது என்று ஏளனமாய்க் கேட்பதுண்டா என்ன ?

ஆக, சரியையும் கிரியையும்தான் மக்களுக்கு மன மகிழ்ச்சியையும் ஆறுதலையும் தேவைப்படும் தருணங்களில் தைரியத்தையும் நம்பிக்கையையும் சோதனைகள் வருகையில் அவற்றைத் தாங்கிக் கொள்ளும் சக்தியையும் தருபவை. வறட்டு வேதாந்தம் சோர்வூட்டுவதுதான், பக்குவம் வராதவரையிலும்.

சுவாமி விவேகனந்தரும் கூட இப்போது உங்களுக்குத் தேவை கால் பந்துதான் கீதை அல்ல என்று இளைஞர்களிடம் சொன்னாராமே!

ஆனந்த விகடனிலிருந்து விலகிய மணியன் இதயம் பேசுகிறது என்கிற வார இதழைத் தொடங்கியபின் சில ஆண்டுகள் கழித்து ஞானபூமி என்கிற மாத இதழைத் தொடங்கத் திட்டமிட்டார். மாதிரி இதழ் ஒன்றைத் தயாரித்துத் தருமாறு என்னிடம் கேட்டுக்கொண்டார். பத்திரிகைத் துறையில் அதற்கு டம்மி என்பார்கள். அதாவது பத்திரிகையின் ஒவ்வொரு இதழும் பொதுவாக என்னென்ன அம்சங்களை வழக்கமாகக் கொண்டிருக்க வேண்டும் என்பதை புலப்படுத்துவதற்கான ஒரு மாதிரி இதழைத் தயாரித்துக் கொடுத்தல். மக்களுக்குப் பிரீதியான சரியை கிரியைகளுக்கு முதலிடம் கொடுத்து மாதிரி இதழைத் தயாரித்துக் கொடுத்தேன். மணியன் அந்த மாதிரி இதழை அப்படியே பின்பற்றி ஞான பூமியை நடத்தி வெற்றியும் பெறலானார். வெகு விரைவிலேயே இதயம் பேசுகிறதைக் காட்டிலும் அதிக விற்பனையும் வாசகர் எண்ணிக்கையும் உள்ள பத்திரிகையாகிவிட்டது, ஞானபூமி! இன்று சரியான கவனிப்பு இல்லாததால் அது பலவீனப் பட்டுப்போயிற்றே தவிர, ஆன்மிக இதழ் தொடங்கும் துணிவைப் பலருக்கும் அளிப்பதாகத்தான் அதன் தொடக்க காலம் இருந்தது!

சரியயும் கிரியையும் நான் கடந்துவிட்ட படிக்கட்டுகள்தான். அதற்காக அவற்றுக்கு இரண்டாம் இடத்தை நான் கொடுத்துவிடவில்லை. ஏனென்றால் அவைதாம் பெரும்பாலானவர்களுக்கு மன நிறைவும், மனோதிடமும் மன, உடல் கட்டுப்பாடுகளுக்கான பயிற்சியும் தருபவை. நுண்கலைகளும் இலக்கியமும் செழித்து வளரக் காரணமாய் இருப்பவையும் அவைதாம்.

ஒரு சில ஆண்டுகளுக்குப் பின் ஞான பூமியின் ஆசிரியர் குழுவிலேயே நான் இடம்பெற வேண்டும் என்று மணியன் விரும்பினார். உடன்பட்டேன். சில ஆண்டுகள் ஞானபூமியில் கழிந்தன. பத்திரிகையில் சரியைகிரியையைக் குறையுங்கள் என்று ஆன்மிகத்தில் முன்னேறிச் செல்பவர்கள் என்னிடம் வலியுறுத்துவார்கள். பள்ளியிறுதி வகுப்பில் உள்ளவர்கள் ஆரம்பப் பள்ளிக்கு அவசியம் இல்லை எனலாகாது என்பேன்.

ஆக, சரியை, கிரியை நிலையில் உள்ளவரையிலும் பல பதப் பிரயோகங்களுக்கு மிகவும் எளிமையான பொருள் கொள்கின்ற அளவுக்குத்தான் பக்குவமும் இருக்கும். சிலருக்கோ முன் சொன்ன மாதிரி தருமத்திற்கும் கருமத்திற்கும் அர்த்தமே பிறழ்ந்து போயிருக்கும். இவற்றையெல்லாம் அனுசரித்துத்தான் மிகவும் ஆழமாகப் போகாமல் ஆன்மிகம் சம்பந்தமான பதப் பிரயோகங்களுக்கு விளக்கமும் தரவேண்டியிருக்கும்.

முதலில் இந்த ஆத்மா, அந்தராத்மா என்கிற இரண்டையே எடுத்துக்கொள்வோம். மிகவும் நுட்பமாக இவைபற்றிப் பேசலாம்தான். ஆனால் எவ்வளவுக்கு அதனால் பலன் இருக்கும் ?

ஒரு தகாத காரியத்தைச் செய்யுமாறு நமக்குத் தூண்டுதல் எழுவதாக வைத்துக் கொள்வோம். அவ்வாறான தூண்டுதலை எழுப்புவதுதான் ஆத்மா. அந்தக் காரியத்தை மேற்கொள்வதால் வரக் கூடிய பின் விளைவுகளை நினைவூட்டி, வேண்டாம் அந்தக் காரியம் என்று தடுப்பதுதான் அந்தராத்மா. இப்படி எளிதாகச் சொல்லிவிட்டுப் போவதுதான் பலன் தருவதாக இருக்கும். மது அருந்துதல் பாவம் என்பதுபோன்ற பேதமையான சீலங்கள் மரபணுவிலேயே பதியப்பட்டிருக்கும் மக்களிடையே தத்துவ நோக்கில் விசாரம் செய்வதால் என்ன பயன் கிட்டும் ?

இருப்பினும் ஆத்மாவையும் அந்தராத்மாவையும் விவரித்ததுபோலவே எளிமையாக மஹாத்மாவையும் பரமாத்மாவையும் அடையாளம் காட்ட முடிகிறதா பார்க்கலாம்!

இன்றைய சூழலில் மஹாத்மாவும் பரமாத்மாவும் தர்மமும் கர்மமும் அர்த்தங்கெட்டுப் போன அளவுக்குத்தான் மலினப்பட்டுள்ளனவா அல்லது அதற்கும் கூடுதலாகவா என்பதை அடுத்த வாரம் அறிய முயற்சிப்போம்.

—-

malarmannan79@rediffmail.com

Series Navigation