கோவா புனித விசாரணையும் தொடரும் புனித விசாரணைகளும் – 1

This entry is part of 32 in the series 20060407_Issue

அரவிந்தன் நீலகண்டன்


வதைக்கும் சிலுவையில் அவன் – அவனது அருகில் நின்றேன் நான்

இவ்வுலகு சாரா உணர்வில் வலி ஏதும் தாக்காது அவன் இருந்தான்

எனினும் முனங்கினான் ஆத்திரம் மேலோங்க கணக்கிட்டேன் நான்

எத்தனை கொலைகள் கொடுமைகள் அவன் பெயர் நடத்திட்டது

எத்தனை கொலைகள் அவனால் என் நாட்டில். நான் கூச்சலிட்டேன்

இளக்காரமாக

‘போ போ போய் விடு! ‘

-ஷெல்லியின் கிறிஸ்து எனும் கவிதை-

‘சில காலம் கோவாவில் வன்முறையை கிறிஸ்தவர்கள் செய்தது என்பது உண்மையே. அங்கு மாட்டுக்கறியை இந்துக்களின் வாயில் திணித்து கிறிஸ்தவராக்கினர். ஆனால் இம்முறையைக் கூடிய விரைவிலேயே கைவிட்டனர். ‘ என்கிறார் கற்பக விநாயகம். அப்படி என்ன வன்முறையைத்தான் கிறிஸ்தவர்கள் கோவாவில் செய்துவிட்டனர் ? மாட்டுக்கறியை இந்துக்கள் வாயில் திணித்தார்கள் அவ்வளவுதான். அதுவும் சிலகாலம். அப்புறம் அதையும் கைவிட்டுவிட்டார்கள். ஆனால் சவேரியார் என திருநாமம் சூட்டப்பட்டுள்ள பிரான்ஸிஸ் சேவியருக்கும் இதற்கும் என்ன தொடர்பு ? அவர் தமிழ்நாட்டில்தானே ‘ஊழியம் ‘ செய்து கொண்டிருந்தார் ? என்பது கற்பகவிநாயகத்தின் வாதமாக இருக்கிறது. எனவே கோவாவில் கிறிஸ்தவம் செய்த வன்முறையின் உண்மையான இயற்கை என்ன என்பதனை காட்டவும், இவ்வன்முறையின் பின்னாலிருக்கும் இறையியல் இன்றைக்கும் கிறிஸ்தவத்தில் தொடர்வதையும் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

கர்த்தரின் அன்பின் ராச்சியத்தை தமிழ்நாட்டில் பரப்பிட வந்த ப்ரிட்டோ பாதிரி இங்குள்ள அரச குடும்பத்தில் குழப்பத்தை உண்டாக்க முயற்சி செய்து தண்டிக்கப்பட்ட வன்முறை மீண்டும் மீண்டும் கற்பகவிநாயகத்தால் கூறப்பட்டுள்ளது. அதே காலகட்டத்தில் ஐரோப்பாவில் கத்தோலிக்க ஏசுவின் கருணையை லூத்தர அரசர்களுக்கு எடுத்தோதிய கத்தோலிக்க மதமாற்றிகளுக்கும் அவ்விதமே லூத்தேறிகள் என கத்தோலிக்கர்களால் அழைக்கப்பட்ட புரோட்டஸ்டண்ட் மதமாற்றிகளுக்கு கத்தோலிக்க ஐரோப்பிய அரசர்கள் காட்டிய வன்முறையும் ஒப்பிடுகையில், ஒரு ப்ரிட்டோ பாதிரிக்கு கொடுக்கப்பட்ட தண்டனையை திரு.கற்பக விநாயகம், ஏதோ ஹிந்து அரசர்கள் அனைவருமே இப்படித்தான் கிறிஸ்தவ பாதிரிகளை நடத்தியதாக கூறுவது தவறானது. அரசு அதிகாரத்தில் மதமாற்றத்தால் வெளிப்படையாக தெரியும்படியான குழப்பத்தை உருவாக்கிய பாதிரிகள் மட்டுமே வெகு அரிதாக தண்டிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் கிறிஸ்தவம் தனது முழு அதிகாரத்தையும் வெளிக்காட்டும் விதத்தில் கோலோச்சிய இடங்களில் அன்று முதல் இன்று வரை எவ்விதத்தில் பிற மதத்தவர்களை நடத்தியுள்ளனர் என்பதனை ஆராயலாம். குறிப்பாக கோவாவில் நிறுவப்பட்ட புனித விசாரணை எனும் இன்க்விசிசன் மற்றும் அதில் ‘புனிதராக ‘ கத்தோலிக்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சேவியரின் பங்கும் அவரது கருத்தாக்க தாக்கமும் என்ன என்பதனையும் சிறிது காணலாம்.

1. ‘சில காலம்….அவ்வளவுதான் ‘:

கோவா இன்க்விசிசன் என்கிற புனித விசாரணை கிபி 1560 இல் கோவாவில் நிறுவப்பட்டது. பின்னர் கிபி 1774 இல் அது நீக்கப்பட்டது. நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் கிபி 1778 இல் அது மதப்பிடிப்புள்ள போர்த்துகீசிய அரசி மூன்றாம் மரியாவால் மீண்டும் கோவாவில் நிறுவப்பட்டது. இறுதியாக 1812 இல் ஆங்கிலேய அழுத்தத்தால் (ஐரோப்பிய புரோட்டஸ்டண்ட் கிறிஸ்தவர்கள் சிலரும் இதனால் பாதிக்கப்பட்டது ஆங்கிலேய அழுத்தத்துக்கு காரணமாக இருக்கலாம்) இதனை அவர்கள் கைவிட வேண்டி வந்தது. ஆக, 252 ஆண்டுகள் இந்த ‘புனித விசாரணை ‘ நிறுவனம் நீடித்தது.

2. பிரான்ஸிஸ் சேவியரின் ஊழியமும் பார்வையும்:

நமது மீட்பரின் ஆண்டான (Anno Domini) 1543 முதல் 1549 வரை பரிசுத்தவான்களில் ஒருவராக விளங்கும் கேட்டவரம் தரும் கோட்டாறு சவேரியார் என்கிற பிரான்ஸிஸ் சேவியர், போர்த்துகீசிய மன்னனுக்கும் தமது தலைவரான லயோலாவுக்கும், ஏசுசபையினருக்கும் எழுதிய கடிதங்களில் கோவாவில் இன்க்விசிசனை நிறுவ வேண்டிய அவசியத்தை, தாம் மதம் மாற்றியவர்கள் மீண்டும் நழுவிவிடாமல் இருக்க போர்த்துகீசிய அரசு எடுக்கவேண்டிய நடவடிக்கைகளை மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்.

‘சிறுகுழந்தைகளை மதமாற்றுவதிலும் அவர்களுக்கு மதப்பிரச்சாரம் செய்வதிலும் உள்ள நன்மை அபாரமானது. இந்த குழந்தைகள் மீது, அவர்கள் அவர்களது அப்பன்களை விட நல்லவர்களாக வருவார்கள் என எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இவர்களுக்கு புனித சட்டத்தின் மீது அதீத அன்பு உள்ளது. நமது புனித மதத்தினை ஏற்று அதனை பரப்புவதில் அதீத ஆர்வம் உள்ளது. விக்கிர ஆராதனையின் மீது அவர்களுக்கு உள்ள வெறுப்பு அற்புதமானது. அவிசுவாசிகளிடம் அவர்கள் இது குறித்து சண்டை பிடிப்பார்கள். அவர்களுடைய பெற்றோர்கள் விக்கிர ஆராதனை செய்தால் உடனே என்னிடம் வந்து அதனைத் தெரிவிப்பார்கள். விக்கிர ஆராதனை நடக்கிறதைத் தெரிந்து கொண்டவுடன் நான் உடனே அங்கே இந்த சிறுவர்களை ஒரு பட்டாளமாக அழைத்துக்கொண்டு சென்றுவிடுவேன். அங்கு சென்று அந்த ஆராதனை செய்யப்படும் பிசாசினை, அங்கு நடத்தப்படும் ஆராதனையைக் காட்டிலும் அதிகமாக, அக்குழந்தைகளின் பெற்றோர் சுற்றத்தாரிடமிருந்து அந்த பிசாசுக்கு கிடைத்த ஆராதனைகள் அனைத்தையும் விட அதிகமாக, அவமரியாதையாகவும் அசிங்கமாகவும் திட்டுவோம். சிறுவர்கள் அந்த விக்கிரகத்திடம் ஓடிச்செல்வார்கள் அதனை கீழே தட்டி விழவைப்பார்கள். அதன் மீது துப்பி தூசியில் புரட்டுவார்கள். அதனை மிதிப்பார்கள். அதன் மீது அனைத்துவித அத்துமீறல்களையும் செய்வார்கள்….இந்தியர்கள் கறுப்பாக இருப்பதால் தமது நிறமே உயர்ந்ததென நினைக்கின்றனர். அத்துடன் தமது கடவுளரும் கறுப்பாக இருப்பதாக நம்புகின்றனர். இதனால் பெரும்பாலான அவர்களது சிலைகள் கறுப்பு எத்தனை கறுப்பாக இருக்குமோ அந்த அளவு கறுப்பாக இருக்கின்றன. இதற்கும் மேல் அவர்கள் அதன் மீது ஒரு எண்ணெயைத் தடவுகின்றனர். அதனால் அச்சிலைகள் நாற்றமடிக்கின்றன. அழுக்காகவும் பார்ப்பதற்கு அருவெறுப்பானதாகவும் இருக்கின்றன. ‘ (St. Francis Xavier ‘s Letter from India, to the Society of Jesus at Rome, 1543)

பிரான்ஸிஸ் சேவியர் இக்கடிதத்தில் முழு கிராமங்களையே மதமாற்றினேன். ஞானஸ்நானம் கொடுத்து எனக்கு கையெல்லாம் வலிக்கிறது என்றெல்லாம் (1543 இல்) எழுதினாலும் பின்னாளில் அவரது கடிதங்கள் தமது மதமாற்ற முயற்சிகளில் அவர் விரக்தி அடைந்த நிலையை பிரதிபலிக்கிறது.1545 இல் போர்த்துகீசிய அரசன் மூன்றாம் ஜானுக்கு எழுதிய கடிதத்தில் அவர் புனித விசாரணை எனும் இன்க்விசிஷனை கோவாவில் நிறுவக்கோரினார். 1549 இல் அவர் ஏசுசபை நிறுவனரான இக்னேசியஸ் லயோலாவுக்கு எழுதிய கடிதத்தில் அவரது தொனி முழுமையாக மாறிவிட்டது:

‘முதல் விஷயம், இந்திய இனமே, நான் பார்த்த வரைக்கும், காட்டுமிராண்டித்தனமானது. அவர்கள் தங்கள் நடவடிக்கைகள், தங்கள் பாரம்பரியம் ஆகியவற்றிற்கு முறம்பான விஷயங்களுடன் ஒத்துப்போவதில்லை.அவர்களுடைய நடவடிக்கைகளும், பாரம்பரியமுமோ நான் கூறியது போல காட்டுமிராண்டித்தனமானது. இந்த பாரம்பரியமானது, தேவ விசயங்களைக் குறித்தோ மீட்பு குறித்தோ அறிந்து கொள்ள எவ்வித ஆர்வமும் காட்டாதது. பெரும்பாலான இந்தியர்கள் மோசமான நாட்டத்தைக் கொண்டவர்கள் என்பதுடன் நல்லவற்றில் வெறுப்பு உடையவர்கள். அவர்கள் ஸ்திரத்தன்மை, மென்மை மற்றும் மனதிடம் இல்லாதவர்கள். அவர்களுக்கு நேர்மை என்பதே கிடையாது. அவர்களிடம் நிரம்பிக்கிடக்கும் குணம் பாவ காரியங்களும் ஏமாற்றுத்தனமும்தான். இங்கு நாம் மதமாற்றியவர்களை தரத்தில் வைத்துக்கொள்ளவும், அவிசுவாசிகளை மதம் மாற்றவும் கடுமையாக உழைக்கவேண்டியுள்ளது….இந்த தேசவாசிகள் கயமைத்தன்மை வாய்ந்தவர்கள் என்பதால் கிறிஸ்தவ மதத்தினை ஏற்றுக்கொள்கிற மனப்பாங்கு அவர்களுக்கு இல்லை. எனவே அவர்கள் அதனை வெறுக்கின்றனர். ஆகவே நமக்கு அவர்களை நாம் பிரசிங்கிக்கிற விசயங்களை கேட்க வைப்பதே ரொம்ப கடினமாக உள்ளது. அவர்கள் கிறிஸ்தவர்கள் ஆவதென்பதை ஏதோ சாவது போல பார்க்கின்றனர். எனவே இப்போதைக்கு நாம் கிடைத்த மதம்மாறிகளை நழுவாமல் வைத்துக்கொள்வதில்தான் முழு கவனம் செலுத்த வேண்டும். ‘ (St.Francis Xavier ‘s Letter on the Missions, to St. Ignatius de Loyola, 1549)

1543 இல் எழுதிய கடிதத்தில் அந்தணர்கள்தாம் தமது மதமாற்றத்திற்கு பெரிய தடை எனவும் அவர்கள் இங்குள்ள மக்களை ஏமாற்றுகிறார்கள் என்றும், ஆனால் அவர்களுக்கு என்று ஒரு இரகசிய கல்விச்சாலை இருப்பதாகவும் அங்கு அவர்கள் மட்டும் கடவுள் ஒருவனே என படித்துக்கொள்வதாகவும் அதனை ஒரு அந்தணரே இவரிடம் ஒத்துக் கொண்டதாகவும் அந்தணர்களின் அறிவு என்பது ஒரு சிறிய துளிதான் என்றும் எழுதிய மிசிநரி சவேரியார், 1549 இல் ஒட்டுமொத்தமாக இந்தியர்களின் குணக்கேடுதான் அவர்கள் கிறிஸ்தவத்தை ஏற்க தடையாக இருப்பதாக பிரகடனம் செய்துவிட்டார். (மிசிநரி சேவியரின் கடிதங்கள் எடுக்கப்பட்ட நூல்: ஆக்ஸ்போர்டு யூனிவர்ஸிட்டி பிரஸ் வெளியிட்ட ‘Modern Asia and Africa, Readings in World History ‘ பாகம் 9 பக். 4-13 தொகுப்பாசிரியர்கள் வில்லியம் மெக்நெயில் மற்றும் மிட்ஸுகோ இரியி, 1971.)

கோவாவில் இன்க்விசிசன் சேவியர் கேட்டுகொண்ட காலத்திலேயே கோவாவில் நிறுவப்பட முடியாமல் போனது. என்ற போதிலும், சேவியர் கோவா வந்து சேர்ந்த காலகட்டத்திலேயே ஹிந்துக்களுக்கு எதிரான ‘சில கால ‘ வன்முறை ஆரம்பித்துவிட்டது. ‘குறைந்த பட்சம் 1540 முதல், கோவாவில் அனைத்து ஹிந்து விக்கிரகங்களும் உடைக்கப்படலாயின. கோவில்கள் உடைக்கப்பட்டு அந்த கட்டுமான பொருட்களால் சர்ச்சுகள் கட்டப்பட்டன. ஹிந்து ஆராதனைகள் தடைப்படுத்தப்பட்டன. ஹிந்து பூசாரிகள் போர்த்துகீசிய பிரதேசங்களிலிருந்து துரத்தப்பட்டனர். ‘ என்கிறார் முனைவர் டிஸோஸா. (Western Colonialism in Asia and Christianity, பக். 85, தொகுப்பாசிரியர் எம்.டி.டேவிட், Himalaya Publishing House,Bombay,1988.)

3. சேவியரின் கனவு நனவாகிறது:

சேவியர் 1552 இல் இறந்தார். அதற்கு எட்டு ஆண்டுகளுக்கு பின்னரே அவரது கனவு நனவாயிற்று. புனித விசாரணையின் போக்கில் சேவியரின் அதே மனப்பாங்கினை மீள் காணமுடியும்.இதே காலகட்டத்தில் ஐரோப்பாவில் கத்தோலிக்க ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசங்களில் இன்க்விசிசன் கத்தோலிக்க தெய்வீக அதி உயர் நிலையையும் அதன் நம்பிக்கைகளையும் எதிர்த்தவர்களைக் கடுமையாக தகித்துக்கொண்டிருந்தது. 1560 இல் இறுதியாக கோவாவில் நிறுவப்பட்டது. அக்காலம் தொட்டு நடந்த வன்முறைகளை கீழே காணலாம்.

1560: 200 அறைகள் கொண்ட மாளிகை புனித விசாரணைக்காக சீரமைக்கப்பட்டது. முதல் விசாரணையாளர் வாசஸ்தலம், இரகசிய அறை, புனிதக்கோட்பாட்டின் அறை, சித்திரவதைகளுக்கான அறைகள், சிறை அறைகள், நிரந்தர சிறை அறை என பல அமைக்கப்பட்டன. கோவாவில் வைஸிராயின் அதிகாரத்தைக் காட்டிலும் அதிக அதிகாரம் கொண்டதாக புனிதவிசாரணை நிறுவப்பட்டது.

ஏப்ரல்-2 1560: அரச பிரதிநிதி டி கான்ஸ்டண்டைன் டி பிராகான்கா அனைத்து அந்தணர்களும் கோவாவினையும் போர்த்துகீசிய பிரதேசங்களையும் விட்டு வெளியேற உத்தரவிட்டார்.

பிப்ரவரி-7 1575: ஆளுநர் அண்டோனியோ மோரெஸ் பாரெட்டோ கிறிஸ்தவத்திற்கு விரோத மனப்பாங்கு கொண்டதாக அறியப்படும் அனைத்து ஹிந்துக்களின் சொத்தையும் பறிமுதல் செய்ய உத்தரவிட்டார். 1585 இல் மூன்றாவது பிரதேசங்களின் பேராயர்கள் கூடுதலில் கோவாவில் புனிதப்பணி நடந்தேறியுள்ள விதம் ஆய்வு செய்யப்பட்டது. அங்கு நிறைவேற்றப்படுகிற தீர்மானம் அந்தணர்களுடன் மருத்துவர்களும் கிறிஸ்தவத்தின் பரவுதலுக்கு இடையூறாக இருப்பதால் அவர்கள் போர்த்துகீசிய பிரதேசங்களிலிருந்து அகற்றப்பட வேண்டும் எனும் கோரிக்கையை வைத்தது. உள்ளூர் கிறிஸ்தவ பாதிரிகளுடனும் மிசிநரிகளுடனும் போர்த்துகீசிய அதிகாரிகள் கலந்தாலோசித்து அந்தந்த இடங்களில் இத்தகையவர்களின் பெயர்பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்கள் நீக்கப்பட வேண்டுமெனக் கூறியது. முதலில் அந்தணர்கள் தான் கிறிஸ்தவம் பரவ தடை எனக்கருதப்பட்டு அவர்களை வெளியேற்றியது புனிதவிசாரணை. பின்னர் இதர ஹிந்துக்கள் மீது தாக்குதல் பாய்ந்தது.

இந்த பாணி சேவியரின் கடிதங்களில் காணமுடிந்த ஒன்றுதான். பலவந்தமாக கிறிஸ்தவர்களாக மாற்றப்பட்ட ஹிந்துக்கள் தமது விக்கிரக ஆராதனை, மணச்சடங்குகள் மற்றும் ஈமச்சடங்குகள் போன்ற ஹிந்து வழிபாடுகளை தொடர்வதாக கண்டறியப்பட்டால் அவர்கள் புனிதவிசாரணையின் ஆக்ஞைக்கு உட்படுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டு உயிரோடு எரிக்கப்பட்டனர். எல்லா ஹிந்து மதச் சடங்குகளும் சைத்தான் வழிபாடு எனக் கருதப்பட்டன. இவ்வாறு கொல்லப்பட்டவர்கள் பெரும்பாலும் பலவந்தமாக மதமாற்றப்பட்ட ஹிந்துக்களும் யூதர்களுமாவர். கத்தோலிக்க ஆளுகைக்குட்பட்ட உலகின் ஐந்து மாகாணங்களிலும் கோவாவின் புனித விசாரணை அதன் கடுமையில் மிகவும் கொடியதாக விளங்கியது என்பதனை அனைத்து சர்வதேச எழுத்தாளர்களும் ஒத்துக்கொள்கிறார்கள். “…. இப்புனித விசாரணை இந்த அக்னி சோதனை இப்பூவுலகின் மீது மானிடத்துக்கு அனுப்பப்பட்ட கொடுமை, இந்த கொடூர நிறுவனம் – அதனை செய்தவர்களை வெட்கத்தால் தலை குனிய செய்யும் அமைப்பு, வளமையான ஹிந்துஸ்தானத்தின் மீது அதன் மிருகத்தன்மை கொண்ட அதிகாரத்தை நிலைநாட்டியது. இக்கொடூர அரக்கனை கண்ட மக்கள் -முகலாயர்கள், அராபியர்கள், பாரசீகர்கள், அர்மீனியர்கள், யூதர்கள்- அனைவரும் சிதறி ஓடினர். சமயப்பொறுமை கொண்ட சமாதான பிரியர்களான இந்தியர்களுக்கோ கிறிஸ்தவத்தின் தேவன் முகமதின் தேவனைக் காட்டிலும் கொடூரத்தில் மிஞ்சி நிற்பதை கண்டு அதிர்ச்சியடைந்த போர்த்துகீசிய ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களிலிருந்து வெளியேறினர். ‘ (Memoirs of Judges Magalhaes and Lousada: ( Vol 2, Annaes Maritimos e Coloniais, page 59, Nova Goa 1859, ஆல்ப்ரெடோ டிமெல்லோவின் ‘Memoirs of Goa ‘) ஆல்ப்ரட் டி மெல்லோ மேலும் கூறுகிறார்: ‘ உதாரணமாக, ஏப்ரல் ஒன்று 1650 இல் நான்கு பேர் உயிருடன் எரிக்கப்பட்டனர். அடுத்த புனித விசாரணையின் பகிரங்க தண்டனையில் (Auto da fe) டிசம்பர் 14, 1653 இல் 18 பேர் தீயால் எரிக்கப்பட்டனர். இது கத்தோலிக்க சமயத்திற்கு எதிரான குற்றத்திற்காக (crime of heresy). பின்னர் ஏப்ரல் 8 1666 முதல் 1679 வரை தெலோன் எனும் பிரஞ்சு மருத்துவரின் சிறைக்காலத்தில் – புனித விசாரணையின் பகிரங்க தீர்ப்புகள் 8 நிறைவேற்றப்பட்டன. இதில் 1208 பேர் தண்டனையளிக்கப்பட்டனர். நவம்பர் 22, 1711 41 பேர்களுக்கு புனித விசாரணையின் பகிரங்க தீர்ப்பு வழங்கப்பட்டது. மற்றொரு மைல் கல் டிசம்பர் 20, 1736, அன்று எட்டப்பட்டது,. அன்று ஒரு குடும்பம் முழுமையாக எரிக்கப்பட்டது. ‘

‘புனித விசாரணை ‘ நடத்திய பாதிரிகள் பெண்களிடம் தமது இச்சைகளை தீர்த்துக் கொள்ளவும் இந்த புனித விசாரணை உதவியது. ‘புனித விசாரணை அதிகாரிகள் தமது ஆசைக்கு இணங்காத பெண்களை சிறைப்படுத்தி அவர்களிடம் தமது விலங்கு இச்சைகளை தீர்த்துவிட்டு பின்னர் அவர்களை கத்தோலிக்க மதத்திற்கு விரோதமானவர்கள் என எரித்தார்கள். ‘ ( ‘A India Portuguesa, Vol.11, Nova Goa ‘, 1923, p.263 – மேற்கோள் காட்டப்பட்ட நூல் ‘The Goa Inquisition ‘ பக்.175, பிர்லோகர், 1961)

(இடைக்குறிப்பு: வெளிநாட்டு கிறிஸ்தவ பாதிரி ஒருவருக்கு கிடைத்த தண்டனையைக் குறித்து விவரித்து எழுதிய நண்பருக்கு தமது சக இந்தியருக்கு நடத்தப்பட்ட இத்தனைக் கொடுமைகளையும் அவை நடந்தேறிய 252 ஆண்டுகளையும், ‘சில காலம் கோவாவில் வன்முறையை கிறிஸ்தவர்கள் செய்தது என்பது உண்மையே. அங்கு மாட்டுக்கறியை இந்துக்களின் வாயில் திணித்து கிறிஸ்தவராக்கினர். ஆனால் இம்முறையைக் கூடிய விரைவிலேயே கைவிட்டனர். ‘ எனும் வார்த்தைகளால் பூசி முழுகிவிடமுடிகிறது என்பது குறித்து மகிழ்ச்சி. மீண்டும் மீண்டும் போலி மேற்கோள்கள், தவறான வரலாற்று தகவல்கள் என்பவற்றால் ஹிந்து மதத்தினருக்கு எதிரான அனைத்து வெறுப்பியல் வாதங்களையும், அவர்களுக்கு எதிரான கொடுமைகளையும் நியாயப்படுத்தி வருகிறார் திரு.கற்பகவிநாயகம். அத்தகைய மனிதர் ‘சிலகாலம் வன்முறை நடந்தது ‘ என ஒத்துக்கொள்வதே ஒரு பெரிய தாராள மனப்பாங்குதான். அடுத்ததாக ஸ்டெயின்ஸ் பாதிரி கொல்லப்பட்ட அதே காலகட்டத்தில் ஹிந்துக்களுக்கு எதிராக கிறிஸ்தவர்கள் இழைத்த கொடுமைகளை காணலாம். எப்படி திரு.கற்பகவிநாயகம் கோவா படுகொலைகளை பூசி மொழுகி ஒரு மேற்கத்திய பாதிரியின் மரணத்தை நெகிழ நெகிழ எடுத்தோதினாரோ அப்படியே ஹிந்துக்களுக்கு எதிரான கொடுமைகள் பலவும் பூசி மொழுகப்பட்டு, ஒரு மேற்கத்திய மதமாற்றியின் கொலை மட்டும் பெரிதாக்கப்படுகிறது என்பதனை இங்கு காணலாம். அதே நேரத்தில் இதன் மூலம் இக்கட்டுரையாளன் ஸ்டெயின்ஸ் படுகொலையை எவ்விதத்திலும் ஆதரிக்கவோ அல்லது நியாயப்படுத்தவோ இல்லை.)

(தொடரும்)

—-

aravindan.neelakandan@gmail.com

Series Navigation