‘நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு ‘ – அத்தியாயம் ஏழு: ‘கோட்டை வாசலும், கோட்டையடியும் வெயிலுகந்தபிள்ளையார் ஆலயமும் ‘
வ.ந.கிரிதரன்
அத்தியாயம் ஏழு: ‘கோட்டை வாசலும், கோட்டையடியும் வெயிலுகந்தபிள்ளையார் ஆலயமும் ‘
முத்திரைச் சந்தையை மையமாக வைத்துப் பார்க்கும்போது தற்போதைய நல்லூர்ப் பகுதியில் காணப்படும் ஒருவிதமான ஒழுங்கு நிறைந்த அமைப்பு பழைய நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு முறையைக் குறிப்பாக உணர்த்திக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. இதே சமயம் நல்லூர் இராஜதானியின் மேற்கு, வடக்கு வாசல்களைப் பற்றி வரலாற்று நூல்கள் கூறுவது நினைவுக்குவரவே, இராஜதானியின் கிழக்கு, தெற்கு வாசல்களைப்பற்றி ஏதாவது தகவல்களைத் தற்போது காணப்படும் நல்லூர் நகர அமைப்பில் அறிய முடியுமா என முயன்றபோது மேலும் சில தகவல்கள் கிடைத்தன. வெயிலுகந்த பிள்ளையார் ஆலயத்திற்கு அண்மையில் உள்ள காணித்துண்டொன்றிற்குப் பெயர் ‘கோட்டைவாசல் ‘ என்பதாகும். தென்கிழக்குப் பகுதியிலுள்ள இன்னொரு காணித்துண்டின் பெயர் ‘கோட்டையடி ‘ என அழைக்கப்படுகிறது. வெயிலுகந்த பிள்ளையார் கோயிலிற்கண்மையில் ‘கோட்டைவாசல் ‘ என்ற பெயருள்ள காணித்துண்டொன்று காணப்படுவது அப்பகுதியில்தான் நல்லூர் இராஜதானியின் கிழக்குவாசல் இருந்திருக்க வேண்டுமென்ற சிந்தனையைத் தோற்றுவிக்கிறது. இதுபோல் ‘கைலாசநாதர் ‘ ஆலயத்திற்கண்மையில் ஏதாவது ‘கோட்டையை ‘ ஞாபகப்படுத்தும் காணித்துண்டேதாவதிருக்கிறதா என ஆராய்ந்தபோது முயற்சி வெற்றியளிக்கவில்லை. அப்போதுதான் சிந்தையிலொரு பொறி பறந்தது. முத்திரைச்சந்தைதான் நல்லூர் இராஜதானியின் முக்கியமான மையமாக இருந்திருந்தால், நிச்சயமாக இராஜதானியின் இருபெரும் வீதிகளான வடக்கு-தெற்கு, கிழக்கு-மேறு வீதிகளிரண்டும் சந்தைக்கண்மையில்தான் ஒன்றையொன்று சந்தித்திருக்க வேண்டும். அப்படியென்றால் வடக்கிலிருந்து முத்திரைச்சந்தையை நோக்கிவரும் வீதி (தற்போதிருப்பதைப்போல் நல்லூர் ஆலயம் நோக்கி வளையாமல் நேராகச் சென்றிருக்க வேண்டும். இதே போல் மேற்கிலிருந்து முத்திரைச் சந்தை நோக்கி வரும் வீதியும் நேராகச் சென்றிருக்க வேண்டும். தற்போது காணப்படும் வெயிலுகந்த பிள்ளையார் ஆலயத்திற்கருகாகச் செல்லும் வீதி கிறித்தவ ஆலயத்திற்கண்மையில் வளைந்து வந்து பருத்தித்துறை வீதியைச் சந்திக்கிறது. ஆனால் அந்த வீதி நேராக வந்திருக்கும் பட்சத்தில் சரியாக முத்திரைச் சந்தையை ஊடறுத்து மேற்காகச் சென்றிருக்கும் சாத்தியம் அவதானத்திற்குரியது. [பொதுவாக பண்டைய நகரங்கள் பல சந்தையை மையமாக வைத்து அமைக்கப்பட்டுள்ளதைக் காணலாம். இலங்கையின் பண்டைய நகர்களிலொன்றான அனுராதபுரம் எவ்விதம் சந்தையை மையமாக வைத்து அமைக்கப்பட்டிருந்ததென்பதை ரோலன் டி சில்வாவின் பண்டைய அனுராதபுர நகர் அமைப்பு பற்றிய ஆய்வுகள் புலப்படுத்துவன.]
எமது வெளிக்கள ஆய்வில் இன்னுமொன்றையும் அறிய முடிந்தது. முத்திரைச்சந்தையிலிருந்து அண்ணளவாக சமமான தூரத்தில் வெயிலுகந்த பிள்ளையர் ஆலயமும், சட்டநாதர் ஆலயமும் இருப்பதை அறிய முடிந்தது. கிடைக்கப்பெறும் வரலாற்று, வெளிக்கள ஆய்வுத்தகவல்களை வைத்துப் பார்க்கும்போது நல்லூர் இராஜதானி ஒருவித ஒழுங்கான வடிவில் இருந்திருக்க வேண்டுமென்றே படுகிறது. பண்டைய இந்துக்களின் கட்டட மற்றும் நகர அமைப்புக்கலைக் கோட்பாடுகள் இத்தகையதொரு ஒழுங்கிற்கு எவ்விதம் காரணமாகவிருந்திருக்கக் கூடுமென்பதை நாம் பின்னர் அவை பற்றி ஆயும்போது அறிந்து கொள்ள முயல்வோம். ஆக, முத்திரைச்சந்தையிலிருந்து அண்ணளவாகச் சமமான தூரத்தில்தான் நான்கு கோயில்கலுமே இருந்திருக்க வேண்டுமென்றே படுகிறது.
போத்துகேயர் காலத்தில் இடிக்கப்பட்ட ஆலயங்களில் நல்லூர்க்கந்தன் ஆலயம் ஏற்கனவே ஆலயமிருந்த பகுதியில் கிறித்தவ ஆலயம் கட்டப்பட்டு விட்டதால், குருக்கள்வளவு என்னும் பகுதியில் மீண்டும் அமைக்கப்பட்டது. இதனை மையமாக வைத்துத்தான் பின்னர் கட்டப்பட்ட கைலாசநாத ஆலயமும், வீரமாகாளியம்மன் ஆலயமும் அமைக்கப்பட்டன போலும். ஏனென்றால் இவ்விரு ஆலயங்களுமே இன்றுள்ள கந்தன் ஆலயத்திலிருந்து அண்ணளவாகச் சமமான தூரத்திலிருக்கின்றன. இன்னுமொரு ஆச்சரியமென்னவென்றால் மேற்படி தூரமானது முத்திரைச் சந்தையிலிருந்து வெயிலுகந்த பிள்ளையார் ஆலயம், சட்டநாதர் ஆலயம் ஆகியன அமைந்துள்ள தூரங்களுக்கு ஏறக்குறையச் சமமாகவிருக்கின்றதென்பதுதான். இவற்றின் முக்கியத்துவம் பற்றிப் பின்னர் பண்டைய இந்துக்களின் கட்டடக்கலை பற்றி ஆயும்போது இன்னும் சிறிது விரிவாகப் பார்ப்போம்.
முத்திரைச்சந்தையானது நல்லூர் இராஜதானியின் மையப்பகுதியாக இருந்திருக்கலாமென்பதை ஏற்றுக்கொண்டு பார்க்கையில் மேற்படி சந்தையிலிருந்து நான்கு திக்குகளிலுமிருந்த ஆலயங்கள் ஓரளவு சமமான தூரத்தில் இருந்திருக்க வேண்டுமென்ற முடிவுக்கு வர முடிகிறது. ஆனால் தற்போது காணப்படும் வெயிலுகந்த பிள்ளையார் ஆலயமும், சட்டநாதர் ஆலயமும் முத்திரைச்சந்தையிலிருந்து அண்ணளவாகச் சமமான தூரத்திலிருப்பதைப் பார்க்கும்போது இடிக்கப்பட்ட அவ்வாலயங்கள் மீண்டும் அமைக்கப்பட்டபோது பழைய இடத்தில், அல்லது அதற்கண்மையில் கட்டப்பட்டிருக்க வேண்டும் போல் படுகிறது. இதற்கு வெயிலுகந்த பிள்ளையார் ஆலயமிருக்கும் பகுதிக்கண்மையிலுள்ள கோட்டை வாசல் மற்றும் கோட்டையடி ஆகிய காணித்துண்டுகளின் பெயர்களிருப்பது ஓரளவுக்குச் சாதகமாகவுள்ளது. அதே சமயம் இன்றுள்ள நல்லூர் கந்தன் ஆலயத்தை மையமாக வைத்து, ஓரளவு சமமான தொலைவில், மற்றைய இரு ஆலயங்களான கைலாசநாதர் ஆலயம், வீரமாகாளியம்மன் ஆகிய ஆலயங்கள் இருப்பதைப் பார்க்கும்போது, அவை மீண்டும் கட்டப்பட்டபோது புதிதாக அமைக்கப்பட்டிருந்த நல்லூர்க் கந்தன் ஆலயத்தை மையமாக வைத்துக் கட்டப்பட்டன போலும்.
இன்னுமொரு விடயத்தையும் வெளிக்கள ஆய்வின்போது அறிய முடிந்தது. ஆனைப்பந்தி போன்ற போருடன் சம்பந்தப்பட்ட பகுதியில் தமிழர்களின் போர்க்கடவுளான கொற்றவையின் ஆலயமான வீரமாகாளியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. வயல்கள் மலிந்த செம்மணியை அண்மித்த பகுதியில் உழவர்களின் காவற் தெய்வமான வெயிலுகந்த பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ளது. இராஜதானியின் பாதுகாப்பிற்காக ஏனய இரு ஆலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நல்லூர் இராஜதானி பற்றிய வெளிக்கள ஆய்வுத்தகவல்களை, விளைந்த ஊகங்களைப் பண்டைய இந்துக்களின் நகர் அமைப்புக் கோட்பாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தபோது மேலும் பல உண்மைகளை அறிய முடிகிறது.
[தொடரும்]
- கடிதம் ஆங்கிலம்
- ஸ்டாலின் முதலமைச்சர் ஆனால் என்ன தப்பு ?
- புலம் பெயர் வாழ்வு (6)
- ‘நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு ‘ – அத்தியாயம் ஏழு: ‘கோட்டை வாசலும், கோட்டையடியும் வெயிலுகந்தபிள்ளையார் ஆலயமும் ‘
- தொ ட ர் க தை- ராகு கேது ரங்கசாமி -3
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 14
- ஒரு மயானத்தின் மரணம்
- வேம்பு
- அறிவியல் புனைக்கதை : என்னை யாரென்று எண்ணி எண்ணி
- சிறு தெய்வங்களுக்கு நேர்ந்துள்ள அபாயம்
- தமிழகக் குடும்ப வாழ்க்கை (நேற்று – இன்று – நாளை)
- வாசிப்புக் கலாசாரம்
- வெண்ணிலவை நோக்கி மீண்டும் விண்வெளிப் பயணங்கள்!
- நினைவலையில் காற்றாலை
- முதலாம் பிசாசின் நடத்தை
- அலறியின் கவிதைகள்
- கவிதைகள்
- பெரியபுராணம் – 82 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- கவிதை
- கீதாஞ்சலி (66) எனது கடைசிக் காணிக்கை! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- இறை மறுப்பாளர் நீட்சேயின் இன்ப அறிவியல் (GAY SCIENCE BY FREDRICH NIETZSCHE)
- உயிரா வெறும் கறியா ?
- சூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது -3 (சென்ற வாரத் தொடர்ச்சி)
- “ஹால் டிக்கெட்”
- உலகமயமாக்கலில் எழும் சில சந்தேகங்கள்
- நேரம் கேட்டால்கூடச் சொல்லாதே!
- தொகுதிப் பங்கிடு-ஒரு கற்பனை
- அலையாத்திகாடுகளில் நுழைந்து திரியும் பட்டாம்பூச்சிகள் : முனைவர் வறீதையா கான்ஸ்தந்தின் அளித்த ‘நெய்தல் மண்ணுக்கோர்சாசனம் ‘
- மாற்று அரசியலில் கட்டுடையும் பெண்ணியம்
- கொற்றவை – ஒரு பச்சோந்திப் பார்வை
- புராண நிகழ்வை பிறிதொரு தளத்தில் விரிவடையச் செய்யும் புத்துருவாக்கம்
- மஸ்ஸர்ரியலிசம்(MASSURREALISM)இலக்கியத்தில்
- பின்நவீனத்துக்குப் பின்:அதிநவீனத்துவம் (Hypermodernism) சில குறிப்புகள்
- தீம்தரிகிட மாத இதழ் இணைய இதழாகிறது
- நால்வருடன் ஐவரானேன்
- வனப்பிரஸ்தம் – குந்தியின் தனிமையும், தேடலும்
- கடிதம்
- கடிதம் ஆங்கிலம்
- கடிதம் – ஆங்கிலம்
- சான்றோர் சமூகமும் கோவில் நுழைவுப் போராட்டமும்
- தேயும் விரல்களும், தோய்ந்த நஞ்சும்
- யேல் பல்கலைக் கழகத்தில் தமிழ்த் திரைப்படங்கள்
- இந்திரா பார்த்தசாரதியுடன் ஒரு நாடகப் பயிற்சி முகாம்
- நம்பமுடியாமல்…
- பெரியாரும், சிறியாரும்
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-14) (Based on Oscar Wilde ‘s Play Salome)