விவேகானந்தர் பாறையும், ராணி மங்கம்மா கடிதமும், மைசூர் மூக்கறுப்புப்போரும்

This entry is part [part not set] of 47 in the series 20060224_Issue

கற்பக விநாயகம்


கற்பக விநாயகம் எனும் பேரில் யாரும் எழுதவில்லை. நானேதான் எழுதுகிறேன்.ஈ மெயில் ஐ டி உருவாக்கியபோது எனது நீண்ட பெயருக்குப் பதிலாக வெள்ளறம் என உருவாக்கியதால், அச்சந்தேகம் வந்திருக்கலாம். என் பெயரில் எவரும் எழுத வேண்டியதில்லை. சிந்திப்பது என்பதும் ஏதோ ஒரு குலத்துக்கு மட்டும் உரிய விசயம் இல்லை என்பதும் என் கருத்து.

கே என் பணிக்கர், தனது நூலில், விவேகானந்தர் நினைவு மண்டபம் குறித்து பின்வருமாறு எழுதுகிறார்.

1963ல் விவேகானந்தர் நூற்றாண்டு விழா கொண்டாடும் முகமாய், கன்னியாகுமரியில் காலம் காலமாய் மீனவர்கள் பயன்படுத்தி வந்த பாறையை மண்டபமாக்க முயற்சித்தார்கள். உள்ளூர் மீனவர்கள் அதை எதிர்த்ததால் அன்றைய காங்கிரசு அரசு அதற்கு அனுமதி கொடுக்கவில்லை. உடனே இதை அகில இந்தியப் பிரச்சினையாக ஆக்கினர். 235 எம் பிக்களிடம் இதை தேசியத்தலைவருக்கான மண்டபம் எனும் போர்வையில் கையெழுத்து வாங்கி, பார்லிமெண்டில் பிரச்சினை எழுப்பினர். அப்போது ஆர் வெங்கட்டராமன் போன்ற இந்துத்துவ ஆதரவு காங்கிரசு தலைவர்கள் மாநில அரசுக்கு நிர்ப்பந்தம் கொடுத்து, இம்மண்டப வேலைக்கு அனுமதி வாங்கித் தந்தனர்.

ஆர் எஸ் எஸ் தரும் விவேகாநந்தர் மண்டபம் சாட்சியம்:

****

ஓர் உள்ளூர் கமிட்டியே, இந்நினைவு மண்டபத்தைக் கட்ட முயற்சி எடுத்தது என்பது போன்ற தோற்றத்தை, நீல கண்டனின் கட்டுரை ஏற்படுத்த முயல்வதால் அதன் முழு வரலாறையும் சொல்லி விடுவது இப்போதைக்கு நல்லது.

1948ல் காந்தி ஆர் எஸ் எஸ் காரரால் கொல்லப்பட்டார். உடனடியாக அவ்வமைப்பு இந்தியாவெங்கும் தடை செய்யப்பட்டது.

அனைத்துத் தரப்பிலும் ஆர் எஸ் எஸ் வெறுக்கப்பட்டது. பல இடங்களில் காந்தி கொல்லப்பட்ட அன்று அதன் அலுவலகங்கள் மக்களால் தாக்கப்பட்டன. திருப்பூர் நகரில் அதன் அலுவலகம் நொறுக்கப்பட்டு அதன் உறுப்பினர்களும் தாக்குதலுக்குள்ளானார்கள் என்று திருப்பூர் தியாகி ராமசாமி தனது சுய சரிதையில் தெரிவித்துள்ளார். (இவர் 1970 வரை கம்யூனிஸ்ட் கட்சியிலும் பின்னர் காங்கிரசிலும் இருந்த சுதந்திரப் போர் தியாகி ஆவார்). தமிழ் நாட்டில் சுயமரியாதை இயக்கம் வேர் பிடித்து இருந்ததாலும், காந்தி கொலையாலும் ஆர் எஸ் எஸ் ஆல் தமிழகத்தில் 1950களில் நுழையவே முடியவில்லை.இதனை ‘தமிழ் நாட்டில் ஆர் எஸ் எஸ் மற்றும் இந்து எழுச்சியின் கதை ‘ எனும் ஆர் எஸ் எஸ் வெளியீட்டில் அவர்களே ‘1980 இன் ஆரம்பம் வரை மிகவும் பலவீனமான மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருந்தது ‘, என ஒப்புக் கொள்கிறார்கள்.

1949ல் ஆர் எஸ் எஸ் சின் மீதான தடை நீக்கப்பட்டது. அதே நூலில் குறிப்பிடப்பட்டுள்ள விசயம் என்ன என்றால் ‘சங்கப் பயிற்சிக்குழுக்கள் மீண்டும் பல இடங்களில் தொடங்கப்பட்டன. ஆனால் அவை விரிவடைய முடியவில்லை. பயிற்சிக்குழுக்கள் பரவவில்லை என்றாலும் சங்க சுயம் சேவக்குகள் பிற நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.அவை தேசிய நடவடிக்கைகளை முன்னேற வைத்தன.அப்படிப்பட்ட நடவடிக்கைகளில் ஒன்று, நமது தாய் நாட்டின் தெற்கு முனைக்கு அப்பால் உள்ள கடலில் விவேகானந்தர் நினைவுப்பாறையை நிர்மாணித்ததாகும்.சுவாமி விவேகானந்தர் அலைந்து திரியும் ஒரு சன்னியாசி என்கிற முறையில் கன்னியாகுமரி கோவிலுக்கு வந்தார். பிரார்த்தனை செய்துவிட்டு கடலில் நீந்திப் போய் கோவிலுக்கு முன்பு, கடலுக்கு நடுவில் எழுந்து நிற்கும் ஒரு பெரும்பாறையில் அமர்ந்தார். 1892 டிசம்பர் 25,26,27 ஆகிய மூன்று நாட்கள் தியானம் செய்தார். இந்தப்பாறை விவேகானந்தர் பாறை எனப் பெயரிடப் பட்டது. சுவாமிஜி பிறந்த நூற்றாண்டில் அதாவது 1963ல் அந்தப் பாறையின் மீது அவருக்கு ஒரு நினைவு மண்டபம் கட்டுவது என்னும் யோசனை ஆர் எஸ் எஸ் இன் பிராந்திய பிரச்சாரகர் சிறீ தாதாஜி திதோல்கருக்குத் தோன்றியது. சங்கம் அந்த யோசனையை ஏற்றுக்கொண்டது. விவேகானந்தா பாறை நினைவகக் கமிட்டி என்று ஒரு தனி அமைப்பு அந்த ஆண்டு நிறுவப்பட்டது ‘.

ஆக, அந்நினைவுச் சின்னம் அவ்வூர் மக்களின் கோரிக்கையே அல்ல. அது ஆர் எஸ் எஸ் ஆல் தீட்டப்பட்ட திட்டம் என்பதை அவர்கள் வெளியிட்ட நூலே தெளிவாகச் சொல்லி விட்டது. நினைவு மண்டபம் பற்றிய யோசனை சொன்னவரும் கன்னியாகுமரி ஆள் மாதிரி இல்லை. பேரை வைத்துப் பார்க்கையில் மராட்டியர் மாதிரித் தெரிகிறது. பாறைக்கு புதியதாக விவேகானந்தர் பெயரைச் சூட்டியதும் ஆர் எஸ் எஸ் தான்.

ஏற்கெனவே இம்மண்ணில் பார்ப்பனீய எதிர்ப்பு நிலவியதால் (இவ்வெதிர்ப்பையும் அந்நூலே ஒப்புக்கொண்டுள்ளது) அவர்கள் பார்ப்பனர் அல்லாதாரான விவேகாநந்தரை முன்னிறுத்தி நுழைய முயன்றனர். அவர் ஏற்கெனவே, சனாதன தர்மத்துள் பார்ப்பனர் அல்லாதாரையும் உள்ளிழுக்கும் வகையில் தர்மத்தை சீர்திருத்தம் செய்ய வேண்டும் எனப் பிரச்சாரம் செய்தவர்தாம்.

குமரி மாவட்டத்தில் இந்து நாடார்கள் பெரும்பான்மையாகவும், கிறிஸ்தவ நாடார்கள் சிறுபான்மையாகவும், மீனவர்கள் முழுக்க கிறிஸ்தவர்களாகவும் உள்ளனர். இந்து நாடாருக்கும், கிறிஸ்தவ மீனவர்களுக்கும் இடையிலான வேற்றுமைகளை ஊதிப்பெருக்கிக் குளிர்காய நினைத்த சங் பரிவார், அதற்கு உகந்த இடமாய் குமரியைத் தேர்வு செய்தது. சமீப நூற்றாண்டுகளில்தான் குமரியில் கிறிஸ்தவ மதமாற்றம் பெருமளவில் நடந்துள்ளது. எளிதில் அங்கு கிறிஸ்தவர்களுக்கு எதிராய் இந்து மக்களை அணிதிரட்டிவிட முடியும் என்று கணக்குப் போட்டிருந்தது.

இந்தக்காரணங்களால் விவேகானந்தர் பாறை விசயத்தைக் கையில் எடுத்த ஆர் எஸ் எஸ், அதற்கு முன்பிருந்த பாறையின் நிலைமையை வெளிப்படையாய் பேசுவதைத் தவிர்த்தது. குமரி முனையை அங்குள்ள மீனவர்கள் மீன்பிடித்துறைமுகமாய்ப் பல நூற்றாண்டுகள் பயன்படுத்தி வந்துள்ளனர். அங்கிருந்து வெகு அருகாமையிலுள்ள பாறையை மீன்பிடி வலைகளைக் காயவைக்கவும், கடலுக்குள் சென்று விட்டு வரும் மீனவர்கள் உணவருந்தி ஓய்வெடுக்கவும் பயன்படுத்தி வந்தனர். ஆண்டுக்கொருமுறை நடக்கும் சிலுவை வைத்து வழிபடும் ‘குருந்தட்டி ‘ வழிபாட்டை நடத்தி வந்துள்ளனர். இருந்தும் அப்பாறையை அராஜகமாகக் கைப்பற்றி விவேகானந்தர் மண்டபம் அமைக்கும் பணியில் ஆர் எஸ் எஸ் இறங்கியது. ஆர் எஸ் எஸ் இன் அதே நூல் சொல்கிறது –

‘ஆர் எஸ் எஸ் இன் ஓய்வு பெற்ற பொதுச்செயலாளர் மானனீய ஏக்நாத்ஜி ராணடேயிடம் அதற்கான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் பெரிதும் சிறிதுமாகப் பல பொதுக்கூட்டங்கள் ஒழுங்கமைக்கப்பட்டன. இந்தக் கூட்டங்களில் சுவாமி விவேகானந்தரின் இந்து தேசியக் கருத்துக்கள் பரப்பப்பட்டன. சென்னை கடற்கரையில் ஒரு பெரிய பொதுக்கூட்டம் நடந்தது. சுவாமி சின்மயானந்தாவோடு, குருஜியும் அக்கூட்டத்தில் பேசினார். தமிழ்நாடு சட்ட மேலவைத் தலைவர் ம.பொ.சிவஞானம் அந்தப் பாறையில் ஒரு கல்வெட்டைத் திறந்து வைத்தார். அதில் 1892 இல் சுவாமிஜி அங்கு தியானம் செய்தார் என்ற அறிவிப்பு இருந்தது.அது, உள்ளூர் கிறித்தவ சபையின் தூண்டுதலின் பேரில் உள்ளூர் கிறித்தவ மீனவர்களால் உடைத்து அழிக்கப்பட்டது. அதோடு அங்கு ஒரு சிலுவையும் நிறுவப்பட்டது. பல தலையீடுகள், பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, சுவாமிஜிக்கு ஒரு மாபெரும் நினைவகம் எழுப்புவதற்காக விவேகானந்தா பாறை நினைவகக் கமிட்டியிடம் அந்தப் பாறையை இறுதியாக அரசாங்கம் ஒப்படைத்தது. நாடு முழுவதிலும் உள்ள முழு சங்கமும் இந்த வேலையில் ஈடுபட்டு, மாபெரும் நினைவகம் எழுப்பப்பட்டது. அது இப்பொழுது ஒரு பெருமைக்குரிய, மதிப்பிற்குரிய சுற்றுலா ஈர்ப்பு மையமாக மாறியுள்ளது ‘.

தென் கோடியில் உள்ள அந்தப் பாறை மீனவர்களிடமிருந்து பறிக்கப்பட்டது மட்டுமல்லாமல், வெவ்வேறு பெயர்களில் முக்கால் வாசி கன்னியாகுமரி ஊரே ஆர் எஸ் எஸ் ஆல் ஆக்கிரமிக்கப்பட்டது. இதற்கு தமிழகத்தை ஆண்ட பக்தவச்சலமும், டெல்லியை ஆண்ட லால்பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி போன்றோர் நேரடியாகவும், காஞ்சி சங்கராச்சாரி மறைமுகமாகவும் உதவி புரிந்தனர். எதிர்த்த மீனவர்களை கேரளாவில் இருந்து இறக்கிய ஆர் எஸ் எஸ் காரர்களும் தமிழ்நாடு போலீசும் கவனித்துக் கொண்டனர்.

ஆர் எஸ் எஸ் இன் அதே நூல் ‘இந்த நினைவகம் செப். 2, 1970இல் புண்ணியாசனை செய்து வைக்கப்பட்டது. இது பிற்காலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்து எழுச்சிக்கான விதைகளாஇத் தூவிய ஒரு முக்கியத் திட்டமாக அமைந்தது. ஏக்நாத் ராணடே தலைமையில் விவேகானந்தா கேந்திரம் பரிணமிப்பதற்கு விவேகானந்தா பாறை நினைவகம் நிறுவப்பட்டது அடித்தளமாக அமைந்தது. குறிப்பாக தெற்கில் கிறித்தவ மதத்தின் விரிவாக்கம் மற்றும் ஆக்கிரமிப்புகளை எதிர்ப்பதற்குக்கூட இந்தக் கேந்திரம் பங்களித்துள்ளது ‘ என்று எல்லா விசயங்களையும் புட்டுப் புட்டு வைத்துவிட்டது. இந்து எழுச்சி என இவர்கள் குறிப்பிடுவது மண்டைக்காட்டில் கலவரம் செய்ததைத்தான்.

கடலும், கடலைச்சார்ந்த இடமும் யாருக்கு சொந்தம் ? நூற்றுக்கணக்கான ஆண்டுகளாய் ஆண்டு அனுபவித்துக் கொண்டு வாழும் மீனவர்களுக்குத்தானே அவை சொந்தமாகும் ? ஓரிரு நாளில் விவேகானந்தர் சென்று அங்கு தங்கி இருந்து விட்ட ஒரே காரணத்துக்காக அப்பாறையை, அம்மக்களிடம் இருந்து கைப்பற்றி விடுவது என்ன நாகரீகம் எனத் தெரியவில்லை ?

உடல் உழைப்பை உதாசீனம் செய்வது/இழிவுபடுத்துவது என்பது காலம் காலமாய் வைதீக சித்தாந்தத்தால் பின்பற்றப்பட்டு வந்துள்ளது. அத்தகைய தன்மையையே இச்செயலிலும் காண முடிகிறது. உடலுழைக்கும் மீனவரின் சொத்தை, அவர்களின் அன்றாட செயல்பாட்டில் இருந்து பறித்து மதவெறிப் பிரச்சார நூல்களை விற்கும் இடமாக்கி இருக்கின்றனர்.

விவேகானந்தர் மீது எனக்கு ஒரு கேள்வி உண்டு. அமெரிக்கப் பயணத்துக்கு ராம நாதபுரம் அரசரிடம் காசு வாங்கிக் கொண்டு இந்து சமயம் வளர்த்த அவர் அப்போது கமுதி ஊரில் நடந்த நாடார்களின் கோவில் நுழைவு பற்றி என்ன கருதினார் ?

அக்கோவில் நுழைவை எதிர்த்து வழக்கு நடத்திய அதே அரசரின் நிலைப்பாடு குறித்து என்ன சொன்னார் ?

(கோவிலுக்குள் நாடார்களை நுழைவதற்குத் தடை வேண்டி வழக்கு நடத்திய ராம நாதபுரம் அரசர் கொடுத்த காசை வாங்கிகொண்ட விவேகானந்தர், அரசர் இந்த வழக்கை நடத்துவது குறித்து தமது எதிர்ப்பைக் காட்டி இருந்தால்தானே அது நாணயமான விஷயம் ?) என்பதை நீலகண்டன் தெளிவுபடுத்த வேண்டும்.

விவேகானந்தர் இறப்பதற்கு முன்பே இவ்வழக்கு ஆரம்பமாகியது என்பதையும் இப்போதே சொல்லி வைக்கிறேன்.

****

உழைக்கும் மக்களை இந்து சமய பக்தி மார்க்கவாதிகள் பார்த்த பார்வையைப் பார்ப்போம்.

அப்பர் தமது தேவாரத்தில் இவர்களை ‘ஆவுரித்துத் தின்றுழலும் புலையர் ‘ என்றும், திருமங்கையாழ்வார் ‘நலம் தாங்கு சாதிகள் நாலிலும் இழிந்த குலந்தாங்கு சண்டாள சண்டாளர் ‘ என்றும், தொண்டரடிப் பொடியாழ்வார் ‘இழிகுலத்தவர் ‘ என்றும், ஆண்டாள் ‘அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலம் ‘ என்றும் வெகு உயர்வாய்ச் சிறப்பித்தனர். இதன் தொடர்ச்சியாகவே ‘திண்ணை ‘யின் காலத்திலும் எம்மை ‘சிந்தனை என்பது கஷ்டமான விசயம் ‘ என்று சிறப்பிக்கின்றார்கள். சிலர் மட்டும் பிறப்பால் உயர்வானோர் என்ற ஒரே விசயத்தைத்தான் வேத காலம் தொட்டு இன்று வரை பிரச்சாரம் செய்கின்றனர். ஆனால் அன்றிலிருந்து இன்று வரை நாம் ‘பிறப்பொக்கும் எவ்வுயிர்க்கும் ‘ என்றே பன்னிப் பன்னி சொல்லி வருகின்றோம்.

எனது முந்தைய கட்டுரையில் ஹர்ஷனையும், ஹர்ஷவர்த்தனையும் ஒன்றாகக் குழப்பி இருந்தேன். நீலகண்டன் தெளிவுபடுத்தி இருக்கிறார். எனது தவறுக்கு வருந்துகிறேன். இருப்பினும் கோவிலைக் கொள்ளை அடித்த ஹர்சன் இந்து மன்னனா இல்லையா ? என்பதற்குப் பதில் சொல்லாமல், அவனின் துருக்கியத் தொடர்புகள் எல்லாவற்றையும் சொல்லி அதற்குப் பதவுரை, விளக்கவுரை எழுதுவதால் எல்லாம் சமாதானம் சொல்லி விட முடியாது. (கற்பக விநாயகம் இந்து மதத்தை விமர்சிக்கக் காரணம், அவர் இசுமாயில் எனும் நபருடன் ஒன்றாக பிரியாணி சாப்பிட்டார் என்று சொல்லும் லாஜிக்தான் அதில் இருக்கின்றது)

நான் சொல்ல வருவது என்ன என்றால், மன்னர்கள் எவருமே மக்களுக்கான அரசை ஏற்படுத்தி, தேனாறையும், பாலாறையும் ஓட விட்டவர்கள் கிடையாது. அவர்கள் எப்போதுமே உழைக்கும் மக்களை ஒட்டச் சுரண்டி, அந்தப்புரத்தில் உல்லாசமாய் வாழ்ந்தவர்கள்தான்.

ஹிந்து மதத்து ‘ஹர்ஷன் ‘ ஆகட்டும் முஸ்லிம் மதத்து ‘கஜினி ‘ ஆகட்டும், தத்தம் சுய நலத்தால் பொருள் வேட்கையில் கோவிலைக் கொள்ளை அடித்திருக்கின்றனர். எந்த ஒரு படை எடுப்பிலும் கொள்ளையும் கற்பழிப்பும் மன்னன் நடத்தி வந்திருக்கிறான். அவற்றினைப் புகழ்ந்து முதுகு சொறிய புலவர்கள் இருந்திருக்கிறார்கள்.

சேர, சோழ, பாண்டியர்களின் படை எடுப்புக்களில் ஆநிரை கவர்தலும், தோற்ற மன்னனின் நாட்டுப் பெண்டிரைக் கவர்ந்து வந்த சேதியும் புலவர்களால் பாடப்பட்டுத்தானுள்ளன.

சோழ மன்னர்கள் (சடையவர்ம சோழ பாண்டியன், விக்கிரம சோழன், ராசேந்திர சோழன்) நிகழ்த்திய போர்களில் தோற்றுப்போன மன்னர்களின் மனைவியரையும் மற்றப்பெண்களையும் சிறைப்பிடித்து வந்து தங்களுடைய உடமைகளாகப் பயன்படுத்தினர்.

இடிக்கப்பட்ட கோவில் மற்றும் மடம்:

****

முனைவர் தெ.வே.ஜெகதீசனின் ‘பத்திரகாளியின் புத்திரர்கள் ‘ எனும் நூலில், சோழர்களின் கல்வெட்டுக்களில் குறிக்கப்படும் குகை இடிக்கலகம் (முதலாம் குலோத்துங்கனின் 22ஆம் ஆட்சி ஆண்டில் நடந்த விசயம்) தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. குகை என்பது துறவிகள் வாழும் மடத்தைக் குறிப்பது. சோழர்கள் காலத்தில் சில சைவ மடங்கள் (குகைகள்) தொடர்ந்து இடிக்கப்பட்டிருக்கின்றன. திருத்துறைப்பூண்டிக் குகை, திருமுறைத் தேவாரச் செல்வன் குகை, திருத்தொண்டர் தொகையான் குகை ஆகிய மடங்கள் மட்டுமின்றி இம்மடங்களின் சொத்துக்களும் பாழ்படுத்தப்பட்டன. ஒரே வழிபாடு, ஒரே தத்துவம் சார்ந்த துறவிகளாக இருந்தாலும் வட நாடு, தென் நாடு எனும் பிரிவின் காரணமாய் துறவிகளுக்கிடையே இக்கலகம் மூண்டிருக்கின்றது.

முதலாம் குலோத்துங்கனின் 11ஆம் ஆட்சி ஆண்டில் வலங்கை, இடங்கைக் கலகம் நிகழ்ந்ததை திருவரங்கம் கல்வெட்டு (கி பி 1081) சொல்கிறது. பாபநாசம் தாலுக்கா ராஜ மஹேந்திர சதுர்வேதி மங்கலம், போராட்டக்காரர்களால் முற்றுகை இடப்பட்டு கோவில்களும் பிராமணர்களின் வீடுகளும் இடிக்கப்பட்டன. கோவில் கஜானா கொள்ளை அடிக்கப்பட்டது. பின்னர் கோயில் சபை 50 களஞ்சி பொன்னை வேறொரு கோயிலிடமிருந்து வாங்கி அக்கோயிலைச் சீர்செய்தது.

1692 நவம்பர் 5ம் தேதி சென்னை ஜார்ஜ் கோட்டை அருகில் வலங்கை, இடங்கைக் கலகம் பேரளவில் நடந்தது. கலகத்துக்குக் காரணம், செட்டியார்கள் விநாயகர் சிலைக்கு முன் சமஸ்கிருத மந்திரம் ஓதியது. இதை எதிர்த்துப் பிராமணர்கள், வன்னியர் உதவியுடன் கலகம் செய்திருக்கின்றனர்.

மூக்கறுப்பு சண்டை:

****

எஸ். ராமநாதன் பிரசுரித்த ‘ராணி மங்கம்மாள் ‘ எனும் நூலில், திருமலை நாயக்கர் காலத்தில் நடந்த மூக்கறுப்புப் போர் பற்றிய செய்தி உள்ளது. கிபி 1656ஆம் வருடம் மைசூர் படைகள் மதுரை நோக்கிப் புறப்பட்டன – ஹெம்பையா தலைமையில்.

முதலில் சத்திய மங்கலம் பகுதியைக் கைப்பற்றினர். அவர்களை எதிர்த்த பாளையக்காரர்கள் முறியடிக்கப்பட்டனர். தளபதி ஹம்பையா கிராமங்களைச் சூறையாடினான். மக்கள் பீதியால் வீடு வாசல்களை விட்டு விட்டு ஓடினர். மைசூர் படை வருகின்றதென்றால்,அந்தக் கிராமமே சூனியமாகி விடும். அவ்வளவிற்குப் பீதியையும், கொடுமையையும் உருவாக்கிக் கொண்டு வந்தான் ஹம்பையா. அகப்பட்டதைக் கொளுத்தினான். தனக்குக் கீழ்ப்படிய மறுத்தவர்களைச் சித்திரவதைக்குள்ளாக்கினான். அவர்களின் மூக்கினை அறுத்து எறியவும் உத்தரவிட்டான். கிழவர், யுவதி, குழந்தை என்ற பாரபட்சம் பார்க்காமல் அனைவரது மூக்கினையும் துண்டிக்கச் செய்தான். அக்காலகட்டத்தில் மறைப்பணி ஆற்றி வந்த ஜெஸ்ஸூட் (இயேசு சபை) பாதிரிகளின் கடிதங்களில் இச்சம்பவங்கள் விவரிக்கப்பட்டுள்ளன.

இதற்குப் பழி வாங்கிட திருமலை நாயக்கர், மறவர் சீமையின் ரகுநாத சேதுபதியின் உதவியை வேண்டினார். சேதுபதியும் திருமலையின் மகன் குமாரமுத்துவும் இணைந்து திண்டுக்கல்லில் மைசூர்ப் படையை எதிர்கொண்டனர். ஹம்பையா முறியடிக்கப்பட்டான். ஏராளமான கன்னடப் போர்வீரர்கள் மாண்டனர். எஞ்சிய சிறு சைனியத்துடன் ஹம்பையா தப்பிச் சென்றான். மைசூருக்குப் பின்வாங்கிய அவனது படைவீரர்கள் அத்தனை பேரின் மூக்கையும் திருமலையின் படைகள் அறுத்துப் போட்டனர். ஹம்பையாவின் மூக்கும் தப்பவில்லை.

(தமிழ்ச்சொற்கள் குறித்து ஆராயும் ஆய்வாளர்கள் கவனிக்க வேண்டிய செய்தி இது. மூக்கறுபடல் எனும் வழக்கு இப்போரின் விளைவால் தமிழில் சேர்ந்திருக்கும் என்பது என் கணிப்பு. எனினும் இது முடிந்த முடிபல்ல.)

இப்படித்தான் போர்களில் காட்டுமிராண்டித்தனத்தை வெளிப்படுத்தி இருக்கின்றனர். இப்போரில் மோதிய இரு தரப்புமே இந்துக்கள்தான்.

போரில் செய்யும் கொடூரங்களுக்கும், கொள்ளை, கற்பழிப்புக்களுக்கும் இன,மொழி,மத பேதங்கள் கிடையாது. இந்த விசயத்தில் ‘வேற்றுமையில் ஒற்றுமை ‘ கண்டவர்கள்தாம் எல்லா மன்னர்களும்.

மங்கம்மாவின் கடிதம்:

****

மதப்பிரச்சாரம் செய்து வந்த பாதிரியார்கள், ராணி மங்கம்மாள் காலத்தில் தஞ்சாவூரை ஆண்டு வந்த மராத்திய மன்னன் ஷாஜியால் எச்சரிக்கப்பட்டனர். மக்கள் அப்பாதிரிகளால் மதம் மாற்றப்பட்டால், அக்கணமே அப்பாதிரிகளை நாடு கடத்த உத்தரவிட்டான். (ஜெயலலிதாவின் முன்னோடி) கிறித்துவர்கள் மன்னனின் உத்தரவை மீறினர். ஷாஜி கோபமுற்று, மதம் மாறியவர்கள் மீது புது வரிகளை சுமத்தினான். பாதிரிகளை பலவந்தமாய் நாட்டை விட்டுத் துரத்தினான். வல்லத்தில் ஒரு பாதிரியார் கொல்லப்பட்டுள்ளார். (ஆதாரம்:வீரமாமுனிவர் கட்டிய திருக்காவலூர் (ஏலாக்குறிச்சி) கோவில் வரலாறு- கையேடு). வேடிக்கை என்னவென்றால், பின்னால் அதே மன்னனின் வம்சத்தில் வந்த ஒருவர் அரசுரிமை இழந்தபோது கிழக்கிந்தியக் கம்பெனியில் தம் செல்வாக்கைப் பயன்படுத்தி, அம்மராத்திய இளவரசுக்கு அரசுரிமை கிடைக்க உதவியவர் ஸ்வார்ட்ஸ் எனும் கிறித்துவ பாதிரியார்.

ஷாஜி தனது செயலை ஆதரிக்கும்படி மற்ற நாட்டு மன்னர்களுக்குக் கடிதம் எழுதினான். அக்கடிதத்தில் ‘கிறிஸ்தவர்களை விரோதிகளாய்ப் பாவித்து, அம்மக்களின் பாதிரியார்களை நாட்டை விட்டுத் துரத்தும்படி ‘, வேண்டி இருந்தான்.

உடையார்பாளையம் அரசன் இதை ஆதரித்தான். மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த 4 பாதிரிகளைப் பிடித்துச் சிறையில் போட்டான். அக்கைதிகளின் மீது அன்பு கொண்டிருந்த காவலர்கள் அவர்கள் தப்பிச் செல்ல உதவினர். அந்த 4 பேரின் சொத்துக்களும் உடையார்பாளையம் அரசனால் பறிமுதல் செய்யப்பட்டது.

ராணி மங்கம்மாள், தஞ்சை மன்னனின் இக்கடிதத்தைக் கண்டித்துப் பதில் எழுதி இருக்கிறார்.

அதில் ‘…நாட்டில் ஒரு பகுதியினர் அரிசியை உணவாகவும், மற்றொரு பகுதியினர் மாமிசத்தை உணவாகவும் எவ்விதம் கொண்டிருக்கின்றனரோ, அவ்விதம் நாட்டு மக்களில் ஒரு சிலர் இந்து மதத்தையும், மற்றொரு பகுதியினர் கிறித்துவ மதத்தையும் சார்ந்திருக்கின்றனர். எல்லோரும் அரிசியையே உணவாகக் கொள்ள வேண்டும் என்றோ, அன்றி, மாமிசத்தையே உணவாகக் கொள்ளவேண்டும் என்றோ நாம் கட்டாயப்படுத்த முடியாது. அவ்விதம் நாம் அதிகாரத்தைப் புகுத்த முற்படுவது முட்டாள்தனமான காரியமாகும். ஆகவே இந்து மதத்தைப் பிரச்சாரம் செய்ய இந்துக்களுக்கு இருக்கும் உரிமை போன்று, கிறித்துவ மதத்தைப் பிரச்சாரம் செய்ய கிறித்தவ மதத்தினருக்கும் உரிமை உண்டு. அதை மறுக்க முடியாது. கிறிஸ்துவ மதத்தை விரும்பாத மக்கள் அதைப் பரவாதிருக்கச் செய்ய வேண்டுமானால், பலாத்காரமான முறையில் அழிக்க முற்படுவது சரியல்ல. தங்கள் மதத்தைப் பற்றி நன்கு பிரச்சாரம் செய்ய முற்படலாமே!.. ‘ என்று மங்கம்மா எழுதி இருக்கிறார்.

****

vellaram@yahoo.com

Series Navigation

கற்பக விநாயகம்

கற்பக விநாயகம்