ஹர்ஷன், அவுரங்கசீப், ஐயா வைகுண்டர் மற்றும் விவேகானந்தர் பாறை நினைவாலயத்திற்கு திமுகவின் பங்கு

This entry is part [part not set] of 46 in the series 20060217_Issue

அரவிந்தன் நீலகண்டன்


1. ஹர்ஷரின் செயலை இஸ்லாமிய மேலாதிக்கம் என்று அரவிந்தன் சொல்லும் அளப்பிற்கு வருவோம்.ஹர்ஷரின் காலம் கிபி 606இல் இருந்து கிபி 647 வரை. முகமது நபியின் காலமோ கிபி 570 முதல் கிபி 632 வரை. அக்காலகட்டத்தில் இஸ்லாம் அரேபியாவைத் தாண்டி எங்கும் பரவிடாத சூழலில் ஹர்சன் எவ்வாறு இஸ்லாத்தில் அடைக்கலமானார் ? ஒரு சொல்லுக்கு இன்றைக்கு இருக்கும் அர்த்தத்தை வைத்துக் கொண்டு கிபி ஏழாம் நூற்றாண்டுக்குப் பொருத்துவது எவ்வித ஞானம் எனத்தெரியவில்லை. TURKS எனும் சொல் இஸ்லாமை கிபி 7ம் நூற்றாண்டில் குறித்ததா ? அக்காலகட்டத்தில் துருக்கியில் இஸ்லாமிய மதம் இருந்ததா என்று ஆராய்ந்து விட்டு கீ போர்டைத் தட்டுவது உத்தமமானது.

பதில்: உலகில் ஹர்ஷன் என்றாலே ஹர்ஷவர்த்தனன் மட்டும்தான் என நினைத்துக்கொண்டு கீபோர்டை தட்டுகிற புத்திசாலிக்கு வணக்கம். ‘காஷ்மீரத்தை ஆண்ட ஹர்ஷனிடம் இக்கொள்ளை நிறைவேற்றிடவே தனியொரு மந்திரி இருந்தார். ‘ எனத் தெள்ளத் தெளிவாக எழுதிய ஆசாமிக்கு அந்த ஹர்ஷன் ஹர்ஷவர்த்தனன் அல்ல எனும் அடிப்படை அறிவு இருக்கும் என நினைத்தது எனது தவறுதானையா. ஹர்ஷவர்த்தனன் வேறு காஷ்மீரத்தை ஆண்ட ஹர்ஷன் வேறு. பின்னவனின் காலம் சற்றேறக்குறைய ஆங்கில ஆண்டு 1089-1111 CE. இவன் தான் கோவில்களை இடிக்க தனி அமைச்சரகம் வைத்திருந்தவன். இவனைக் குறித்து ராஜதரங்கிணி கொடுக்கும் சித்திரம் ரோம நாட்டின் கலிகுலாவை போன்றது. ‘1149: துருக்க தளபதிகளை அவன் செல்வத்தால் ஆதரித்தான் அதே நேரத்தில் இந்த வக்கிரம் பிடித்த ராஜன் பன்றி மாமிசத்தை அவன் சாகும் வரையில் தின்றான். ‘, ‘அந்த துருக்க அரசன் ஹர்ஷனால் தீங்கிழைக்கப்படாத ஒரு ஆலயம் கூட நாட்டிலோ நகரிலோ கிராமப்புறத்திலோ இல்லை. ‘ என்றெல்லாம் அவனைக் குறித்து கூறும் தரங்கிணி அவன் தனது சொந்த சகோதரிகளிடம்கூட தகாத முறையில் நடந்து கொண்டவன் என்றெல்லாம் கூறுகிறது. ஆக, இந்த ‘காஷ்மீரத்தை ஆண்ட ‘, ‘கோவில்களை சூறையாடுவதற்கென்றே தனி அமைச்சு வைத்திருந்த ‘ கர்ஷன் வேறு ஹர்ஷவர்த்தனன் வேறு என்று கூட தெரியாமல் கீபோர்டை தட்டுவதென்ன கீபோர்டில் மத்தளம் கொட்டி முரசறைந்து உங்கள் அறியாமையை ஊருக்கு வெட்ட வெளிச்சம் ஆக்குங்கள் ஐயா. தங்கள் அறிவின் தரத்தை தரணிக்கு காட்டுவது உங்கள் பரிபூரண சுதந்திரம் அதில் நான் கட்டாயம் தலையிட மாட்டேன்.

அடுத்ததாக இந்த ராஜராஜ சோழன் விசயத்திற்கு வருவோம்.

2. புத்தவிகாரங்கள் சோழ படையெடுப்பின் போது உடைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் ‘புத்தவிகாரங்களை உடைத்தவன் நான். புத்த சந்நியாசிகளின் இரத்தம் ஆறாக ஓட வைத்தவன் நான். புத்த துறவிகளின் தலைகள் வாளால் வீசப்பட்டு தரையில் நடனமாடின. சிவன் மிகப்பெரியவன் ‘ என சொல்லுகிற ராஜராஜ சோழனின் வரிகளை காட்டுகிறீர்களா ? உதாரணமாக, நெல்லூர் மாவட்ட உதயகிரியில் உள்ள மசூதியில் உள்ள பாரஸீக பட்டயம்

கூறுவது போல ‘காஸி அலி விக்கிரக ஆராதனை என்பதை வாளின் உக்கிரத்தால் அழித்தார், ஒரே நொடியில் விக்கிர ஆராதனையாளர்களையும் அவர்கள் விக்கிரகங்களையும் அழித்தார். ‘ என்பது போன்ற வரிகளை. அல்லது ஸகிருத்தீன் முகமது பாபர் பாதுஷா காஸி தன்னுடைய வார்த்தைகளிலேயே ‘தாரி-இ-பாபுரி ‘ இல் பிரகடனம் செய்த ‘நான் சந்தேரியை தாக்கி அல்லாவின் அருளால் ஹிஜ்ரா 934 இல் கைப்பற்றினேன். மாற்று மதத்தவர்களை கொன்று தாருல் ஹராபாக இருந்ததை தாருல் இஸ்லாமாக மாற்றினேன் ‘ என்பது போன்ற வரிகளை ? (அதாவது ராஜராஜன் இப்படி கல்வெட்டில் சொல்லியிருக்க வேண்டும்: ‘நான் அனுராதபுரத்தை சிவனின் அருளால் கைப்பற்றி அங்கிருந்த சைவர்களல்லாதவர்களை கொன்று சைவ ஒளி இன்றியிருந்த நாட்டை சைவ ஒளி நாடாக மாற்றினேன். ‘) அதே சமயம் இராஜராஜ சோழனின் கல்வெட்டுக்கள் இருங்கின்றதையா, அவன் படையெடுத்து சென்ற இலங்கையில் அவன் புத்தவிகாரம் கட்டுவித்தமைக்கு. வேல்கம் விகாரம் சோழ கலைஞர்களால் பொலிவூட்டப்பட்டது. அதன் தமிழ் பெயர் ராஜராஜ பெரும்பள்ளி என ராஜராஜ சோழன்கல்வெட்டுக்கள் பேசும். இந்த புத்த விகாரத்தில் விளக்கேற்ற 84 பசுக்களை தானம் செய்த விசயத்தை தமிழ் கல்வெட்டுக்கள் சொல்லும். அனுராதபுரத்திலும் ராஜராஜ சோழன் எழுப்பிய புத்த விகாரம் உண்டு. ஆனால் புத்தவிகாரங்களை ராஜராஜ சோழன் இடித்ததைக் கூறும் கல்வெட்டுக்கள் எனது சிற்றறிவுக்கு எட்டிய வகையில் இல்லை. அவை எவை என கூறுவது நலம். இலங்கையில் புத்த விகார உடைப்பு முழுக்க முழுக்க சிங்கள வரலாற்று ஏடுகளின் மிகைப்படுத்தல் என்றே கருத வேண்டியுள்ளது. சோழர் படையெடுப்பில் விகாரங்கள் சேதப்படுத்தப்பட்டிருக்கலாம். ஆனால் வேண்டுமென்றே அரச ஆணையின் பேரில் பெளத்தவிகாரங்கள் சைவைத்திருக்கோவில்களாக மாற்றப்படவில்லை என்பது மட்டுமில்லை வெற்றி கொள்ளப்பட்ட நாட்டின் மக்களின் வழிபாட்டுத்தலங்கள் பொலிவுபடுத்தப்பட்டதுடன் அவற்றிற்கு தானங்களும் அளிக்கப்பட்டன என்பதே கல்வெட்டுக்கள் தெளிவாக சொல்லும் சேதி. இசுலாமிய படையெடுப்புக்களின் போது நடந்த விவகாரங்களோ நேர் எதிரானவை.

3. தாம் எழுதிய பொய்யை (காசி விசுவநாதர் கோவிலை ஏன் இடித்தான் அவுரங்கசீப்) அக்குவேறு ஆணி வேறாக கழற்றிக்காட்டிய பின்னரும் அது குறித்து எள்ளளவு மனக்கிலேசமும் இன்றி இயங்கும் உங்கள் எபிடெர்மல் தாங்கு சக்திக்கு ஒரு வணக்கம். குமரகுருபரரை சந்தித்து அவரிடம் ஆசிபெற்று அவர் மடத்திற்கு உதவி வழங்கியவர் தப்பி பிறந்த ஒரு மொகலாய இளவரசர் – தாரா ஷூகோ. அவர் கொண்டிருந்த் சர்வ தர்ம சமபாவனைக்கு அவுரங்கசீப் கொடுத்த கொடூர தண்டனை அனைவருக்கும் தெரியும். (அதாவது கற்பக விநாயகம் என்கிற பெயரில் எழுதுகிற நபருக்கு தெரியுமோ தெரியாதோ ஒழுங்காக வரலாறு படித்தவர்களுக்கு தெரியும்.)

4. ஐயா வைகுண்டர் முத்துக்குட்டி சுவாமியின் சூடப்பட்ட பெயர் முடிசூடும் பெருமாள். அரசதன்மை கொண்ட பெயர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் வைக்ககூடாதென எதிர்ப்பு எழுந்தது. அவதார புருஷர் முத்துக்குட்டி ஐயா வைகுண்ட சாமி குறித்து அவரை மேல் சாதியினர் செய்த கொடுமை எவ்விடத்திலும் மறைக்கப்படவில்லை. மிக விரிவாகவே அக்கொடுமைகள் விவரிக்கப்பட்டிருந்ததை வாசகர்கள் கவனித்திருக்கலாம். ஆனால் எனது கேள்வி நேரடியானது எளிதானது. மிசிநரிகள் உண்மையிலேயே சமுதாய விடுதலைக்கு பாடுபடும் கூட்டமாக இருந்தால் அவர்கள் ஐயா வைகுண்டருடன் உடன் நின்றனரா ? இதற்கு அவர் ஒரு சான்று (இரண்டு அல்ல ஒன்று – ஒன்றே ஒன்று) தரட்டும். ஐயா வைகுண்டர் காலத்து மிசிநரி ஏதாவது ஒன்று அவர் இயக்கத்தை ஆதரித்து அளித்த ஒரு அறிக்கை வேண்டாம் ஒரு வாக்கியம் ? ஆனால் அவரை ‘நயவஞ்சகன் ‘ ‘ஏமாற்றுக்காரன் ‘ ‘சைத்தான் ‘ என்றெல்லாம் திட்டிய கும்பலல்லவா மிசிநரிக்கும்பல்.

அந்நேரத்தில் வேற்று சாதியில் பிறந்தும், அரசனுக்கு அணுக்கராக இருந்தும், தமதுயிரையும் பொருட்படுத்தாமல் ஐயா வைகுண்டர் பக்கம் நின்று தோள் கொடுத்த பூவண்டரின் கருத்தியல் எதன் அடிப்படையில் எழுந்தது ? பாகவத கிருஷ்ணனின் ஒளி பாய்ந்த கருத்தியல் அல்லவா அது ? ஐயா வைகுண்டர் அரசனையும் மேல்சாதிக் கொடுமையாளரையும் குறிப்பிட பயன்படுத்தும் வார்த்தை கலிநீசன் என்பது மிசிநரிகளை வெண்நீசன் என்கிறார். மட்டுமல்ல வெளிப்படையாகவே ‘ஒரு வேதம் தொப்பி உலகமெல்லாம் போடு என்பான் ‘ ‘மற்றொரு வேதம் சிலுவை வையமெல்லாம் போடு என்பான் ‘ எனக்கூறி அவர்கள் வீண்வேதம் என்கிறார். அவரது கருத்துகளில் அத்வைத ஒளியும் சமுதாயப்புரட்சி கனலும் உள்ளது. ஈவெராவோ இனவெறியை பரப்பிய சிறியார். அவதார புருஷர் ஐயா வைகுண்டரை ஈவெராவுடன் ஒப்பிடுவது கண்டிக்கத்தக்கதாகும். ஐயா வைகுண்டர் காணிக்கை வேண்டாம் என்று சொன்னாராம் அதனால் அவர் ஹிந்து மதத்தவர் அல்லவாம். மாடனுக்கு கோழி பலியிடுவதை நீக்கி ஹிந்துத்வ படுத்துகிறார்களாம். என்றால் ஐயா வைகுண்டர் கூறுகிறாரே:

‘ஆடுகிடாய் கோழிபன்றி

ஆயனுக்கு வேண்டாம்

கொட்டு மேளம் குரவைத்தொனி

ஈசனுக்கு வேண்டாம்

அன்பு மனமுடன்

அனுதினமும் பூசை செய் ‘ என்று

உளத்தூய்மையுடன் ஒரு பூவோ இலையோ எனக்கு சமர்ப்பித்தால் போதும் எனக் கூறிய குருசேத்திர ஆயனின் குரல் அல்லவா இது. இதனை படிப்பவர்கள் சிந்திக்க வேண்டும். ஐயா வைகுண்டர் தென்னகத்தில் ஒரு மூலையில் ஒடுக்கப்பட்ட சாதியில் தோன்றினார். ஆனால் அவரது திருவாயிலிருந்து வெளியான ஒவ்வோர் திருவாக்கும் வேதமும் வேதத்தின் அந்தமும் பகவத் கீதையும் திருமந்திரமும் கூறியவற்றின் சாரத்தை எளிய மக்களிடம் கொண்டு செல்வதாக இருந்தது. இது எவ்வாறு ?என்பது குறித்து இன்றும் எனக்கு வியப்புதான். இது குறித்து ஒரு நீண்ட கட்டுரை எழுத வேணும். நேரம் வாய்க்கும் போது பார்க்கலாம். ஒரு சின்ன எடுத்துக்காட்டு மட்டும் இப்போது.

உதாரணமாக கீழ்காணும் வேத வாக்கியம் நம் அனைவருக்கும் தெரிந்ததுதான்: ‘சத்தியம் ஒன்றே அதனை ஞானிகள் பலவாறு அழைக்கின்றனர் ‘ அவ்வாறே பகவத் கீதையில் ‘யார் யார் என்னை எவ்விதம் தியானிக்கிறார்களோ அவர் அவர்களுக்கு அவ்வாறே காட்சியளிப்பேன், ‘ என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கூறியுள்ளார்.

‘எவ்வாறு காண்பான் அறிவு தனக்கெல்லை

அவ்வாறு அருள் செய்வான் ஆதிபரன் ‘ என்பது திருமூலர்.

ஐயா வைகுண்டரும் அதிசயிக்கதக்க விதத்தில் கூறுவதை கேளுங்கள்:

‘அவரவர் மனதில் ஆனபடி இருந்து

எவரெவரையும் பார்த்திருப்பேன் நான் ‘

தன் மதத்தை சாராதவர்களை சைத்தான் என வையும் மிலேச்சத்தனம் ஐயா வைகுண்டரிடம் இல்லை. அவரிடம் இருந்தது இம்மண்ணின் மரபிற்கே உரிய பிரபஞ்ச ஏற்புத்தன்மை (Universal Acceptance). அதுதான் ஐயா ஹிந்துத்வமும்.

ஆரிய -திராவிட இனவாதம் பேசும் கும்பலை சார்ந்த ஒருவருக்கு அருட்சோதி வள்ளலார் ஹிந்துதர்மத்திற்கு அயலானவராம்.

‘தேற்றிய வேதத்திருமுடி விளங்கிட

ஏற்றிய ஞான வியலொளி விளக்கே

ஆகம முடிமே லருலொளி விளங்கிட

வேகம தறவே விளங்கொளி விளக்கே

ஆரியர் வழுத்திய வருணிலை யனாதி

காரணம் விளக்குமோர் காரண விளக்கே ‘ என பாடியவர் ஜோதி இராமலிங்க வள்ளலார். ஆரிய எனும் பதத்திற்கு இனவெறி பொருள் கொடுத்து கூத்தாடிய ஈவெரா சிறியார் கும்பல் இராமலிங்க சுவாமிகளின் அருட்தன்மைக்கு அயலானது.(சுவாமிகளோ அனைவருக்கும் மனச்சிறியார் ஈவெரா முதல் உலகனைத்திற்கும் பொதுவானவர்) மாறாக ஆரிய என்பது இனப்பதம் அல்ல என தொடக்கம் முதல் கூறி வந்துள்ளவர்கள் ஹிந்து தேசியவாதிகள் என்பது ஒரு வரலாற்று உண்மை என்பதையும் கற்பக விநாயகம் எனும் பெயரில் எழுதும் நபர் சிந்திக்க வேண்டும் (சிந்திப்பது தங்களுக்கு சற்றே கடினமான வேலை என்பது எனக்கு தெரிந்த போதிலும் இவ்வாறு தங்களைக் கேட்பதற்கு மன்னிக்க வேணும்.)

5. ‘கிருஸ்துவர்களின் வழிபாட்டுத் தலம் ஒன்றும் அந்தப்பகுதியில் உள்ளது. அவர்கள் புதன்கிழமை தோறும் நடத்தும் பூசை வேளையில் சர்ச்சை நோக்கி ஒலிபெருக்கி ஒன்று திருப்பப்பட்டு இரைச்சல் அதிகமாய்ப் பாடல் ஒலித்தது இந்துத் தரப்பிலிருந்து. சத்தத்தைக் குறக்கச் சொல்லும் வேண்டுகோளை வல்லாந்திரமாய் மறுத்த தரப்பு கலவர விதையை ஊன்றியது. ‘

பதில்: ஹிந்துக்கள் வணங்கும் இடங்களுக்கு அருகில் வேண்டுமென்றே வீம்புக்கு சர்ச் கட்டும் சில்லறைத்தனம் மிசிநரிக்கும்பலுக்கு உண்டு. உதாரணமாக 4-1-1978 தேதியிட்ட கல்குளம் தாசில்தார் ரிப்போர்ட் (B2-42690-77) சர்ச் கட்ட தீர்மானித்த இடத்தின் தன்மையை விளக்கி அனுமதி மறுத்தது.

The site proposed for the construction of a church at Manali (Karaikandarkonam) is on the southern side of the Manali-Mekkamandapam Road and at the distance of 50 feet from the main road. The old church which is now used by the Christian community is about one furlong east of the proposed site. My enquiry reveals that the inhabitants of the locality are predominantly Hindus and then there are places of worship for them like Narayanaswamy temple at a distance of 150 feet from the proposed site and Esakiamman temple at a distance of 250 feet from the proposed site. There is also an Esakkiamman temple just opposite to the proposed site.

மண்டைக்காடு குருசடியும் அவ்வாறு கட்டப்பட்டதுதான். வேண்டுமென்றே ஹிந்துக்கள் புனித நீராடும் பாதையில் அண்மைக்காலத்தில் கட்டப்பட்ட சிமெண்ட் காங்கிரீட் குருசடி இது. இந்த குருசடி தவிர, கிறிஸ்தவர்கள் தேவன் என நம்புகிற ஏசுவின் பெயரில் ஒரு பெரிய வழிபடும் தலம் உண்டு. எனவே இந்த குருசடியை வழிபாட்டு தலம் எனக் கூறுவது மிசிநரி தொண்டரடிபொடிகளால் மட்டுமே இயலக்கூடிய விசமத்தனமன்றி வேறில்லை. உதாரணமாக மணவாளக்குறிச்சி உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் கூறிய வாக்குமூலம்: ‘மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் 10 நாள் திருவிழா நடப்பது வழக்கம். நேர் எதிர்த்தாற் போல் மண்டைக்காடு புதூர் மீனவர் கிராமம் இருக்கிறது. வரும் பக்தர்கள் முதலில் கடலில் குளித்துவிட்டு பின்னர் ஏவிஎம் கால்வாயிலும் குளிப்பது வழக்கம். கொஞ்சநாளாவே ஹிந்து கிறிஸ்தவர் தராறு இருந்துகிட்டுருக்குது. ஹிந்துக்கள் கடலில் குளிப்பது அங்குள்ள கிறிஸ்தவர்களுக்கு விருப்பம் இல்லை. சம்பவம் நடந்த ராத்திரி 8 மணி இருக்கும். மண்டைக்காடு புதூர் கிராமத்தைச் சார்ந்த சுமார் 3000 பேர் கூட்டமாக வந்து கோயிலுக்கு வந்த பக்தர்களை தாக்கினாங்க. கடைகளை சூறையாடினாங்க. காவலுக்கு நின்னுட்டிருந்த போலிஸ்காரங்க, நானு, ரிசர்வ் சப் இன்ஸ்பெக்டர் உட்பட 23 பேர் காயமடைஞ்சோம். நிலைமை சமாளிக்கமுடியாமல் போகவே துப்பாக்கி பிரயோகம் நடந்தது. 6 பேர் செத்து போனாங்க. 15 பேர் காயமடைந்து ஆஸ்பத்திரில அனுமதிக்கப்பட்டிருக்காங்க. ‘ மேலும் புதூர் கத்தோலிக்க பங்கின் பூசாரி செபாஸ்டியன் பெர்னாண்டோ காவல்துறை அதிகாரி தன்னிடம் ஸ்பீக்கர் சத்தத்தைக் குறைக்க கூறியதை ஒப்புக்கொண்டுள்ளார். மண்டைகாடு பகவதி அம்மன் கோவில் பக்தர்கள் நீராட போகும் பாதையில் குருசடி கட்டுவார்களாம். தாழ்த்தப்பட்ட மக்களின் வீதிகளூக்கு செல்லாதீர்கள் என்றும், வெள்ளைத்தோல் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டு அடிமைகளாக வாழுங்கள் என்றும் போதித்த அவர்களின் தேவன் என நம்பும் ஏசுவுக்கு ஊருக்குள் பிரம்மாண்டமாக வெள்ளைக்காரன் வீசின பணத்தில் கோவில் கட்டினாலும் சரியாக மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் அருகே உள்ள குருசடியில் திருவிழா நேரத்தில் ஸ்பீக்கர் போட்டு ‘பூசை ‘ நடத்துவார்களாம். இத்தனையும் பதிவான பிறகு ஒரு இருபது வருடத்தில் ஒரு மிசிநரி தொண்டரடிபொடியும் இதர மதச்சார்பற்றதுகளுமாக இதனை அப்படியே ‘உல்டா ‘ பண்ணி பிரச்சாரமும் பண்ணுவார்களாம். எப்படி இருக்கிறது மதச்சார்பின்மையின் உண்மை லட்சணம்!

5. சங் பரிவார் அமைப்பினர் அப்பாறையைக் கையகப்படுத்த, விவேகானந்தர் அப்பாறையில் தியானம் செய்தார் எனும் செய்தியைப் பரப்பி அரசிடம் அவ்விடத்திற்கு உரிமை கோரினர். மீனவர் தரப்பில் இருந்து எதிர்ப்பு. உடனே சங் பரிவார் இவ்விசயத்தை மதப் பிரச்சினை ஆக்க முனைந்தார்கள். (ஏனென்றால் கன்னியாகுமரி மீனவர்கள் கத்தோலிக்க மதத்தினர்). திமுக அரசு சட்டம் ஒழுங்கு பிரச்சினையை முன்னிட்டு அப்பாறையில் கட்டுமானம் கட்டத் தடை போட்டது. சங் பரிவார் தில்லியில் உள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி ஆர்.வெங்கட்டராமன் போன்றோரின் ஆசியுடன் நெருக்குதல் தந்து அப்பாறையை மீனவர்களிடம் இருந்து பறித்து விட்டனர். (ஆதாரம்: சங் பரிவாரின் சதி வரலாறு – விடுதலை ராசேந்திரன்)

வாஸ்தவத்தில் அப்பாறைகளின் உரிமை (அங்கு ஸ்ரீ பாதம் இருந்ததால்) தேவஸம் போர்டிடம் இருந்தது. 1962 இல் ஒரு உள்ளூர் கமிட்டி (திரு வேலாயுதன் பிள்ளை தலைவர், திரு பாண்டியன் நாடார் துணைத்தலைவர்- இருவருக்குமே அப்போது ஆர்.எஸ்.எஸ் என்றால் என்ன என்றே தெரியாது.) விவேகானந்தர் நினைவுச்சின்னம் அமைக்க உருவாக்கப்பட்டு அப்பாறையில் விவேகானந்தர் நினைவுச்சின்னம் அமைக்க அனுமதி தருமாறு கேட்டது. இந்நிலையில் ஏப்ரல் 4 இல் அங்கு ஒரு சிலுவை நிறுவப்பட்டிருந்தது. கரையிலிருந்து பார்த்தால் தெரியும்படியான சிலுவை அது. பழைய புகைப்படங்களை பார்த்தால் அதில் சிலுவை இருக்காது. அரசாங்கம் ஒரு விசாரணை நடத்தி இச்சிலுவை சட்டவிரோதமானது என வருவாய் துறையிடம் (Revenue Department) அதனை அகற்ற உத்தரவிட்டது. ஒரு நாள் காலையில் அச்சிலுவை அகற்றப்பட்டது. திருவிதாங்கூரிலிருந்து வெளிவரும் கிறிஸ்தவ பத்திரிகைகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. 1962 இல் பேச்சுக்கள் ஆரம்பிக்கையில் சென்னை அரசாங்கத்தில் முதலமைச்சராக இருந்தவர் திரு. காமராசர் ஆவார். பின்னர் திரு.பக்தவத்சலம் முதலமைச்சர் ஆனார். 1963 இல் சுவாமிஜியின் நூற்றாண்டு விழா. எனவே அதைத் தொடர்ந்து அங்கே நினைவாலயம் எழுப்ப கோரிக்கை வைத்தபோது திரு.பக்தவத்சலம் மறுத்துவிட்டார், ‘அது விவேகானந்தர் பாறை என்பது உண்மைதான். என்றாலும் கூட அது குறித்து குழப்பம் நிலவுவதால் அங்கு நினைவாலயம் எழுப்பக்கூடாது. வேண்டுமென்றால் ஒரு கல்வெட்டு மட்டும் வைத்துக்கொள்ளலாம். ‘ கமிட்டிக்கு இது இஷ்டப்படவில்லை என்றாலும் கூட அரைமனதுடன் இதற்கு சம்மதித்தனர். 17 ஜனவரி 1963 அன்று ஒரு நினைவு கல்வெட்டு மட்டும் அங்கு வைக்கப்பட்டது. இந்நிலையில்தான் இந்த உள்ளூர் கமிட்டி அகில இந்திய கமிட்டியாக மாற்றப்பட்டது. சுவாமி சின்மயானந்தர், மன்னத்து பத்மநாபன், டி.எம்.பி.மகாதேவன் ஆகியோரும் இன்னும் சிலரும் இடம் பெற்றனர். 16-5-1963 அன்று கல்வெட்டு கிறிஸ்தவர்களால் உடைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பதட்டம் நிலவியது. இந்த சூழலில்தான் குருஜி, மானனீய ஏக்நாத் ரானடே அவர்களை கன்னியாகுமரிக்கு சென்று சுவாமி விவேகானந்தர் நினைவாலயத்தை நனவாக்கிட பணித்தார். 26-7-1963 இல் ஏக்நாத்ஜி கன்னியாகுமரி வந்தார். 11-ஆகஸ்ட்-1963 அவர் விவேகானந்தர் பாறை நினைவுச்சின்ன கமிட்டியின் செயலாளர் ஆனார். இதற்கிடையில் பக்தவத்சலத்துக்கு நெருக்கமான அன்றைய கலாச்சார அமைச்சராக இருந்த ஹுமாயூன் கபீர் இம்முயற்சிக்கு தடை விதித்தார். கபீர் வங்கத்தை சேர்ந்தவர். சுவாமி விவேகானந்தர் நினைவுச்சின்னத்திற்கு கபீர் இடையூறு செய்வது வங்க பத்திரிகைகளுக்கு பெரும் சினத்தை ஏற்படுத்தியது. விளைவாக அவர் அந்த நிலைபாட்டிலிருந்து பின்வாங்கிக் கொண்டார். இந்நிலையில் லால்பகதூர் சாஸ்திரி அவர்களின் யோசனையின் படி ஏக்நாத்ஜி முதலமைச்சர் பக்தவத்சலத்தை சந்தித்தார். பக்தவத்சலம் நழுவிடப்பார்த்தார். 12-11-1963 இல் நடந்த அந்த சந்திப்பில் பக்தவத்சலம் ஏக்நாத் ரானடேயிடம் கடுமையாக நடந்து கொண்டார். பாறை நினைவாலயம் கட்டுவதற்கான மனுவினை தயாரித்து ஏக்நாத்ஜி அனைத்து கட்சிகளின் முக்கிய உறுப்பினர்களிடமிருந்தும் இரு மனுக்களில் (ஒன்று பக்தவத்சலத்துக்கு மற்றொன்று நேருவுக்கு) ஒவ்வொரு கையெழுத்து பெறுவதென்று முடிவு செய்தார். மூன்றே நாட்களில் 323 கையெழுத்துக்கள் கிட்டின. கம்யூனிஸ்ட் எம்பி ரேணு சக்ரவர்த்தி வங்க கம்யூனிஸ்ட் எம்பிக்களின் கையெழுத்துக்களை வாங்கினார். இக்காலகட்டத்தில் ஏக்நாத் ரானடே அவர்கள் அண்ணாதுரையை டில்லியில் சந்தித்தார். ஒரு வீட்டில் விரைவில் வரப்போகும் தேர்தல்களை சந்திக்க திமுகவினர் கூடியிருந்தனர். நெடுஞ்செழியன், கருணாநிதி ஆகியோரும் இருந்தனர். அண்ணாதுரையிடம் பிரச்சனைகளை ரானடே எடுத்துக்கூறினார். அண்ணா உடனடியாக தமது கையெழுத்தினை வழங்கினார். அண்ணாதுரை சுவாமி விவேகானந்தரை வெகுவாக மதிப்பதை ரானடே அறிந்தார். எனவே, ரானடே தமிழ்நாட்டு நினைவாலய கமிட்டியின் துணைத் தலைவராகும் படி அண்ணாதுரையை கேட்டுக்கொண்டார். அண்ணா டெல்லியில் தாம் இருப்பதால் தம்மைக் காட்டிலும் நெடுஞ்செழியனே நல்ல தேர்வாக இருக்கமுடியும் எனக் கூறினார். இவ்வாறாக நெடுஞ்செழியன் விவேகானந்தர் பாறை நினைவாலயத்தின் தமிழ்நாடு கமிட்டியின் துணைத்தலைவரானார். ‘வேறென்ன வேண்டும் ? ‘ என ரானடேயிடம் அண்ணாதுரை வினவினார். ரானடே அண்ணாவிடம் அகில இந்திய விவேகானந்தர் பாறை நினைவாலய கமிட்டியின் பொதுக்குழு உறுப்பினராக வேண்டும் என கோரினார். அண்ணா முழுமனதுடன் சம்மதித்து பொதுக்குழு உறுப்பினரானார். பின்னர் வேறுவழியின்றி பக்தவத்சலம் கொப்பை விட்டிறங்கினார். விவேகானந்தர் பாறை நினைவுச்சின்ன வேலைகள் நடந்து கொண்டிருந்தன. மாநிலத்தில் அப்போது முதலமைச்சர் திரு.மு.கருணாநிதி. அப்போது ஒரு பிரச்சனை வரத்தான் செய்தது. ஆனால் விடுதலை ராசேந்திரன் எழுதியுள்ள அண்டபுளுகு பிரச்சனையல்ல அது. ராமநாதபுரம் அரசரின் சிலையும் இந்த நினைவாலயத்தில் நிறுவப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்தது. 22 ஆகஸ்ட் 1970 இல் தமிழ்நாட்டில் எழுப்பப்படும் நினைவாலயத்தில் தமிழரசருக்கு சிலை வைக்க மறுப்பது தமிழருக்கு அவமானம் என கோஷம் எழுந்தது. முதலமைச்சருக்கு மனு கொடுக்கப்பட்டது. 27 ஆகஸ்ட் 1970 அன்று ‘இன்னமும் 15 நாட்களில் நான் கன்னியாகுமரி செல்கிறேன். என்ன செய்யலாம் என கவனிக்கிறேன். ‘ என்றார் மு.கருணாநிதி. முதன்முறையாக பாறை நினைவாலயத்தை பார்வையிட்டார் முதலமைச்சர். அங்கு செய்யப்பட்டிருந்த பணி அவரது மனதினை முழுமையாக கவர்ந்தது. திருநெல்வேலியில் ராமநாதபுரம் ராஜாவின் சிலை குறித்து கேள்விகள் எழுந்தபோது அவர் கூறினார், ‘அந்த பாறையில் சுவாமி விவேகானந்தரின் சிலையை தவிர வேறெவருடைய சிலையும் நிறுவப்படுவது சரியல்ல. ராமநாதபுரத்தில் அம்மன்னருக்கு சிலை நிறுவப்படலாம். ‘ இது அந்த பிரச்சனைக்கு சுமுகமான முற்றுப்புள்ளியாக அமைந்தது.

இப்போது விடுதலை ராசேந்திரன் விட்டிருக்கும் புளுகின் ஆழமும் அழுக்கும் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். மிகவும் சமத்காரமாக உருவாக்கப்பட்ட புளுகு (with all the right ingredients for an anti-Brahminical naarative- மீனவர்கள் திமுக அரசு ஒரு பக்கம், ஆர்.எஸ்.எஸ் மற்றும் அந்தணரான வெங்கட்ராமன் மற்றொரு பக்கம்) இது. ஆனால் உண்மை என்னவென்றால் அன்று மிசிநரியால் தூண்டப்பட்ட கிறிஸ்தவ வெறியர்களும், நவீன எட்டப்பன் பக்தவத்சலமும் ஒரு பக்கம் நிற்க, விவேகானந்தர் பாறை நினைவாலய அணியில் நின்றவர்கள் திமுகவின் அண்ணாதுரையும், நெடுஞ்செழியனும் – கருணாநிதியும் கூட.

அடுத்த வாரத்தில் கற்பக விநாயகம் பதில் என்கிற பெயரில் இன்னமும் சில செக்யூலர் புளுகுகளை தந்து அதற்கு அடுத்த வாரம் தோலுரிக்கும் வேலையை எனக்கு தருவார் என்கிற நம்பிக்கையுடன்,

அரவிந்தன் நீலகண்டன்

aravindan.neelakandan@gmail.com

Series Navigation

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்