நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு – 1

This entry is part of 48 in the series 20060203_Issue

வ ந கிரிதரன்


( தமிழகத்தில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாக 1996இல் வெளிவந்த நூலிது. இது பற்றிக் கணையாழி இதழில் நா.இராமசந்திரன் நூல் மதிப்புரையொன்றும் எழுதியுள்ளார்.)

ஈழத்தமிழர்களின் நகர அமைப்புக் கலை பற்றிய ஆய்வு நூல்கள் பற்றி நானறிந்த வரையில் எனது ‘நல்லூர் ராஜதானி: நகர அமைப்புக் கலை ‘ , தமிழக ஸ்நேகா / கனடா மங்கை பதிப்பக வெளியீடாக டிஸம்பர் 1996இல் வெளிவந்த நூல்தவிர வேறெந்த நூலும் இதுவரையில் வரவில்லை. அந்த வகையில் ‘நல்லூர் ராஜதானி: நகர அமைப்பு ‘ நூலுக்கு ஒரு முக்கியத்துவமும் தகுதியும் உண்டு. இந்தத் துறையில் ஆய்வு செய்ய விளையும் மாணவர்களுக்கு முதனூலாகவும் உதாரணப் பிரதியாகவும் நிச்சயம் இந்த நூலிருக்கும். நான் மொறட்டுவைப் பல்கலைக் கழகத்தில் கட்டடக் கலை பயின்று கொண்டிருந்த காலத்தில் ‘கட்டடக் கலையின் வரலாறு ‘ என்னும் பாடத்திற்காக இறுதியாண்டில் சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரையினை மேலும் விரிவாக்கி எழுதிய ஆய்வுக் கட்டுரைத் தொடரே மேற்படி நூலாக வெளிவந்தது. ‘நல்லூர் இராஜதானி: நகர அமைப்பின் ‘ அடுத்த பதிப்பு வெளிவரும் சமயத்தில், இந்நூலினை மேலும் அதிகமான விளக்கச் சித்திரங்களுடன், கனமான ஆய்வுடன் வெளியிடும் எண்ணமுண்டு.

இந்நூலின் முன்னுரையில் கூறியிருப்பது போல் எனக்கு நல்லூர் நகர அமைப்பு பற்றி ஆராய வேண்டுமென்னும் ஆவல் ஏற்பட்டதற்குப் பல காரணங்களுண்டு. சிறு வயதில் நான் படித்த நாவல்கள் குறிப்பாகக் கல்கி , ஜெகசிற்பியன் போன்றவர்களின் நாவல்கள் தமிழர்களின் அன்றைய தலைநகர்களான தஞ்சாவூர், காஞ்சி போன்றவற்றின் நகர் அமைப்பு பற்றி அறியும் ஆர்வத்தினை அதிகரிக்க வைத்தன. நல்லூர் ராஜதானியைப் பொறுத்தவரையில் அண்மையில் புகழ்பெற்று விளங்கிய நகர். இருந்தும் இந்நகர் பற்றிய போதிய வரலாற்றுச் சின்னங்கள் பாதுகாக்கப் படவில்லை. நல்லூர் இராஜதானி புகழ்பெற்று விளங்குவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் புகழ் பெற்ற தலைநகர்களாக விளங்கிய நகர்கள் அநுராதபுரம், யாப்பகூவா போன்ற தென்னிலங்கை நகரங்கள். அவை பற்றியெல்லாம் விரிவான நூல்கள், ஆய்வுகள் வெளிவந்திருக்கும் போது நல்லூர் இராஜதானியின் நகர் அமைப்பு பற்றிய ஆய்வுகளெதுவும் வெளிவராதது துரதிருஷ்ட்டமானது. யாழ்ப்பாண வைபவமாலை போன்ற நூல்கள், போர்த்துக்கீசரின் குறிப்புகள் போன்றவற்றில் நகர் பற்றிய தகவல்கள் ஆங்காங்கு காணப்படுகின்றன. அவை தவிர ஆய்வுகள் ஏதும் இதுவரையில் வெளிவந்திருக்கவில்லை எனது இந்த நூல் தவிர. மொறட்டுவை பல்கலைக் கழகத்தில் பயின்று கொண்டிருந்த காலத்தில் ‘பாரம்பர்யக் கட்டடக் கலை ‘ (Traditional Architecture) பற்றி நிமால் டி சில்வா என்னும் சிங்களப் விரிவுரையாளர் விரிவுரைகள் நடாத்திக் கொண்டிருந்தார். அப்போது அவர் ரோலன் டி சில்வாவின் ‘பண்டைய அநுராதபுர நகர் அமைப்பு ‘ பற்றிய ஆய்வுக் கட்டுரையினை எமக்கு ஒரு விரிவுரையில் அறிமுகப்படுத்தினார். அதுவும் எனக்கு நல்லூர் இராஜதானி நகர் அமைப்பு பற்றி அறியும் ஆர்வத்தினை ஏற்படுத்தியது. அச்சமயம் கட்டடக் கலை இறுதியாண்டில் பயின்று கொண்டிருந்த நண்பர் தனபாலசிங்கம் தானும் இந்நகர் பற்றி ஆய்வு செய்ய விரும்பியதாகவும் போதிய தகவல்களைப் பெற முடியாத நிலையில் அவ்வெண்ணத்தினைக் கைவிட நேர்ந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். அதுவும் எனக்கு நல்லூர் நகர் அமைப்பு பற்றி அறியும் ஆர்வத்தினை அதிகரித்தது.

இதன் காரணமாக யாழ்ப்பாணத்தில், வடபகுதியில் காணப்படும் பழமையின் சின்னங்கள் ஆதரிப்பாரற்றுக் கிடக்கும் நிலை பற்றி அறியத் தரும் முகமாகச் சில கட்டுரைகளை யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த ‘ஈழநாடு ‘ பத்திரிகையின் வாரமலரில் எழுதினேன். ‘நல்லூர் ராஜதானி ‘ ‘, ‘நல்லூர் ராஜதானி நகர அமைப்பு ‘, ‘பழைமையின் சின்னங்கள் பேணப்படுதலின் அவசியம் ‘ என்னும் தலைப்புகளில் ஈழநாடு பத்திரிகை அவற்றினை பிரசுரித்திருந்தது. அக்காலகட்டத்தில் தகவல்களைப் பெறும் முகமாக , யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்றில் விஞ்ஞான பிரிவில் பயின்று கொண்டிருந்த நண்பர் ஆனந்தகுமாருடன் பேராசிரியர் கா.இந்திரபாலவைச் சந்தித்தேன். அவர் சுவாமி ஞானப்பிரகாசரின் ‘கோப்பாய்க் கோட்டை ‘ பற்றிய கட்டுரை பற்றிக் குறிப்பிட்டிருந்தார். அதன் விளைவாக அது பற்றிக் ‘கோப்பாய்ப் பழைய கோட்டையின் கோலம் ‘ என்னும் கட்டுரையினை வீரகேசரியில் எழுதினேன். அதற்குச் சன்மானமாக அவர்கள் முப்பத்தைந்து ரூபா அனுப்பியிருந்தார்கள். மேலும் இவ்வாய்வு சம்பந்தமாக அப்போது யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவர் தலைவராகவிருந்த கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனைச் சந்தித்தேன். அவர் தன்வசமிருந்த ‘யாழ்ப்பாண வைபவமாலை ‘யினைத் தந்துதவினார். அக்காலகட்டத்தில் ‘பழைமையின் சின்னங்கள் பேணப்படுதலின் அவசியம் ‘ பற்றி ஈழநாடு பத்திரிகையில் வெளிவந்த எனது கட்டுரையில் யாழ் சந்தையில் அமைந்திருந்த ‘கங்கா சத்திரம் ‘ போன்றவற்றைப் பேணூதலின் அவசியம் பற்றிக் குறிப்பிருந்தேன். அக்கட்டுரை வெளிவந்த சிறிது காலத்தின் பின் அச்சத்திரத்தினை யாழ்மாநகரசபையினர் உடைத்து விட்டனர். அக்காலகட்டத்தில் முழங்காவில் பகுதியில் அமைந்திருந்த ‘பல்லவராயன் கட்டுக் ‘ காட்டுப் பகுதியில் ஒரு நாள் முழுவதும் இடிபாடுகளைத் தேடி அலைந்து திரிந்தது மறக்க முடியாத அனுபவம். இதே சமயத்தில் நல்லூர் பற்றி அதிகம் எழுதிய ஈழத்துப் படைப்பாளிகளில் முக்கியமானவர் கலாநிதி குணராசா (செங்கை ஆழியான்). இவரது ‘நந்திக்கடல் ‘ வரலாற்று நவீனம் ஈழத்திலிருந்து வெளிவந்த வரலாற்றுப் புதினங்களில் குறிப்பிடத்தக்கது

வடக்கில் மட்டுமல்ல, கிழக்கிலும் திருமலை, மட்டக்களப்பு போன்ற மாவட்டங்களில் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டிய சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்கள், விடயங்கள் உள்ளன. இவை பற்றியும் ஆய்வுகள் விரிவாக நடத்தப்படவேண்டும் என்பதுமென் அவா. ஈழத்தில் திராவிடர்களின் நகர் அமைப்புக் கலை பற்றிய வரலாற்றின் பரிணாம வளர்ச்சியினை அறிந்து கொள்ளுதற்கு நகர் அமைப்புக் கலையில், கட்டடக் கலையில் பாண்டித்தியம் பெற்றவர்கள், வரலாற்றறிஞர்கள், தொல்பொருள் ஆய்வாளர்களுடன் இணைந்து விரிவான ஆய்வுகள் எதிர்காலத்தில் செய்வார்களென நான் திடமாக நம்புகின்றேன். இதுவரை காலமும் தொல்பொருள் ஆய்வாளர்களும், வரலாற்றுப் பட்டதாரிகள் மட்டுமே நகர் அமைப்புக் கலை அல்லது கட்டடக் கலை பற்றிய போதிய அடிப்படை விடயங்கள் பற்றிய அறிதலோ புரிதலற்று தம் வழியில் ஆய்வுகளை மேற்கொண்ட காரணத்தினால் தான் திராவிடர்களின் நகர் அமைப்புக் கலை பற்றியோ, அல்லது கட்டடக்கலை பற்றியோ விரிவாக ஆய்வு ரீதியில் தமது கவனத்தைப் போதிய அளவில் செலுத்தவில்லையென நான் கருதுகின்றேன். அந்நிலை மாறுவதற்கு அனைத்துப் பிரிவினரும் ஆய்வுகளில் பூரண பங்களிப்பினை வழங்க வேண்டியதன் தேவை முக்கியம்.

பேராசிரியர் கா.இந்திரபாலா இந்த விடயத்தில் விதிவிலக்கானவர். அவர் ஈழத்துத் திராவிடக்கலை பற்றிக் கட்டுரைகள் பல எழுதியிருக்கின்றார். அவரும் கூட ஈழத்துத் தமிழ் மன்னர்கள் காலத்தில் புகழ்பெற்று விளங்கிய இராஜதானிகள் பற்றிய விரிவான நகர் அமைப்பு பற்றியெதுவும் எழுதவில்லை. ஏனைய வரலாற்றுத்துறைப் பேராசிரியர்களால் வரலாறு பற்றிய ஆய்வுகளைச் செய்ய முடிந்ததே தவிர அதற்கு மேல் அவர்களாலும் செல்ல முடியவில்லை. பொ.ரகுபதி போன்ற தொல்லியர் துறை ஆய்வாளர்களும் அகழ்ந்தெடுத்ததைத்தான் ஆய்வு செய்தார்கள். போதிய ஆதாரங்கள் இல்லாத விடயத்தில் கை வைக்கத் துணியவில்லை. இந்த விடயத்தில் ஈழத்தில் பட்டம் பெறும் கட்டடக் கலைஞர்களின் பட்டப்படிப்பிலுள்ள முக்கிய குறைபாடுகளிலொன்று அவர்களுக்குத் திராவிடக்கட்டடக்கலை பற்றியெதுவும் விரிவாகக் கற்பிக்கப்படுவதில்லை. பெரும்பாலான பட்டதாரிகள் பட்டம் பெற்று வரும் பொழுது திறமையான வரைபடஞர்களாகத்தான் வெளிவருகின்றார்களே தவிர கட்டக்கலைத் துறையிலோ, அல்லது நகர அமைப்புத் துறையிலோ அவற்றின் பலவேறு காலகட்ட பரிணாம வளர்ச்சியினை நன்கு புரிந்து கொண்ட ஆழ்ந்த புலமை மிக்கவர்களாகவோ வெளிவருவதில்லை. அவர்கள் தங்களது பட்டப்படிப்புக்குத் தேவையான ஆய்வுகளுக்குரிய கருப்பொருட்களாக ஏற்கனவே இருக்கும் கோட்டைகள், மாளிகைகள், மடங்கள், கிறிஸ்தவ ஆலயங்கள் போன்றவற்றைத்தான் எடுத்துக் கொள்கின்றார்கள். இந்நிலை மாறி ஈழத்தமிழர்களின் வரலாற்றில் தெளிவற்றுக் கிடக்கும் விடயங்களை தெளிவுபடுத்தும் விடயங்களை மையமாக வைத்து, உதாரணமாக சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நகர்களின் நகர அமைப்பு, காணப்படும் சிதைவுகளின் , வரலாற்றுத் தகவல்களின் அடிப்படையில் நிலவிய கட்டடக்கலை போன்ற விடயங்களை மையமாக வைத்து ஆய்வுகளைச் செய்ய முன்வரவேண்டும். சித்தியடைவதை மட்டுமே சிந்தனையாகக் கொண்டு ஆய்வுக்குரிய விடயங்களைத் தெரிவு செய்வதை அவர்கள் குறைத்துக் கொள்ள வேண்டும். நல்லூர் இராஜதானி பற்றி நான் ஆராய விளைந்ததற்கு இதுவுமொரு முக்கிய காரணங்களிலொன்று. தமிழ்ப்பகுதிகளிலுள்ள பல்கலைக்கழங்களில் கட்டடக்கலை பற்றிய பட்டப் படிப்பினை ஆரம்பிக்க முயற்சிகளெடுக்க வேண்டும். திராவிடக்கட்டக்கலை/ நகர அமைப்பு பற்றிய ஆய்வுகள் அதிகரிப்பதற்கிது உதவும். மேலும் முன்பே குறிப்பிட்டுள்ளதுபோல் கட்டடக்கலை/நகர அமைப்புத் திட்டமிடும் வல்லுனர்கள், வரலாற்றுப் பேராசிரியர்கள், தொல்லியல் ஆய்வாளர்கள் ஆகிய அனைத்துப் பிரிவினரும் ஒன்றிணைந்து இயங்குவதன் மூலம் ஈழத்தமிழர்களின் கட்டடக்கலை, நகர அமைப்புக் கலை பற்றிய பல ஆய்வுகளைத் துரிதமாக்க முடியும். இது ஈழத்துக்கு மட்டுமல்ல தமிழகத்துக்கும் கூடப் பொருந்தும். அங்கும் பண்டைய தமிழர்களின் இராஜதானிகள் அல்லது புகழ்பெற்ற புராதன நகர்கள் பற்றிய விரிவான ஆய்வுகளேதும் வந்ததாக நானறிந்த வரையில் தெரியவில்லை. திராவிடக்க கட்டடக்கலை பற்றிக் கூடத் தமிழில் பிரெஞ்சு அறிஞரான ழுவோ துப்ருயல் முயன்ற அளவுக்கு வேறு யாரும் முயன்றதாகத் தெரியவில்லை. பிரபல நாவலாசிரியர் மறைந்த நா. பார்த்தசாரதி தமிழர்களின் நகர் அமைப்புக் கலை பற்றிச் சங்க இலக்கியங்களில் கூறப்படும் தகவல்கள் அடிப்படையில் பொதுவானதொரு நூலொன்றினை எழுதியிருக்கிறார்; ஆனால் வேறு யாரும் ஏதாவதொரு நகர் பற்றி விரிவாக ஆய்வு பூர்வமாக எழுதியதாகத் தெரியவில்லை. இந்நிலை மாற வேண்டும். இத்தகையதொரு சூழலில்தான் இந்த ‘நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு ‘ என்னுமிந்த நூலுக்கொரு முக்கியமுண்டு. காணப்படும், வீதி/காணிப் பெயர்கள், சரித்திர சின்னங்கள், பண்டைய இந்துக் கட்டடக்கலை/ நகர அமைப்பு பற்றிய ஆய்வுகள், வரலாற்று நூல்கள்/குறிப்புகள் போன்றவற்றின் அடிப்படையில் ஆய்ந்து பெற்ற முடிவுகளின் அடிப்படையில் தர்க்கபூர்வமாக எழுதப்பட்டுள்ள முதனூலென்ற பெருமை இதற்குண்டு. இந்நுலினை வாசிப்பவர்கள் இதிலுள்ள குறை நிறைகளை எமக்கு அறியத்தருவதன் மூலம் எதிர்காலத்தில் இந்த ஆய்வு விரிவாக்கப்பட்டு மேலும் கனமாக நீங்கள் உதவி செய்தவர்களாகின்றார்கள்.

அத்தியாயம் ஒன்று: நல்லூரும் சிங்கை நகரும்!

ஆரியச் சக்கரவர்த்திகள் காலத்தில் தலைநகராக விளங்கிய நகர்களாக ‘சிங்கை நகர் ‘, நல்லூர் ஆகியவற்றைக் கூறலாம். நாக அரசர்களின் காலகட்டத்தில் கதிரமலை என அழைக்கப்பட்ட கந்தரோடை ராஜதானி அந்தஸ்தினை வகித்து வந்தது. அதன்பின் அந்த நிலையினை அடைந்தவை மேற்கூறப்பட்ட சிங்கை நகர், நல்லூர் ஆகிய நகர்களே. வரலாற்று ஆய்வாளர்கள் மத்தியில் மேற்படி சிங்கைநகர், நல்லூர் பற்றிய விடயத்தில் ஒரு குழப்பநிலை நிலவுவதை அவதானிக்க முடிகிறது. ஒரு சாரார் சிங்கை நகரும் நல்லூரும் ஒன்றேயெனெக் கருதுகின்றார்கள். மறுசாராரோ நல்லூரும் சிங்கை நகரும் ஒருவேறு காலகட்டங்களில் இராஜதானிகளாக விளங்கிய இருவேறு நகர்களெனக் கருதுகின்றனர். கலாநிதி சி.க.சிற்றம்பலத்தின் கருத்துப்படி நல்லூரும் சிங்கை நகரும் ஒன்றே.

‘பொதுவாக நல்லூரே சிங்கைநகரென அழைக்கபப்ட்டு வந்தது எனலாம்.. ‘(கட்டுரை: யாழ்ப்பாண இராச்சியம்; ஈழமுரசு(கனடா) 25-02-1994).

‘..குவேறா சுவாமிகளின் சான்றுப்படி கரையிலிருந்து நல்லூருக்கு வரும் வழியில் சுங்குநயனார் (chungainayanar) அதாவது சிங்கைநகர் எனும் பலமான அரணுள்ள இடம் பற்றிக் குறிப்பு வருகின்றது. இதுவே தமிழ் நூல்களிலும்ம் கோட்டகத் தமிழ்ச் சங்கத்திலும், தமிழகக் கல்வெட்டிலும் வரும் சிங்கைந்கர் அல்லது நல்லூராகும்… ‘(ஈழமுரசு, கனடா, 11-03-1994).

முத்துக்கவிராசர் என்பவரால் கி.பி.16ஆம் நூற்றாண்டின் முடிவில் அல்லது 17ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் கைலாயமாலையும் முதலாவது சிங்கை ஆரியன் நல்லூரைத் தலைநகராக அமைத்த வரலாற்றைக் கூறும். சுவாமி ஞானப்பிரகாசர், முதலியார் செ.இராசநாயகம், கலாநிதி க.செ.நடராசா போன்றவர்களின் கருத்துப்படி நல்லூரும் சிங்கை நகரும் இருவேறு வேறான இரு நகரங்கள்.

‘யாழ்ப்பாணத்தில் ஆரியச் சக்கரவர்த்தியின் ஆட்சி கி.பி.13ஆம் நூற்றாண்டில் ஆரம்பித்ததென்பர் வரலாற்றாசிரியர்கள். அம்மன்னர் செகராசசேகரன், பரராசசேகரன் என்ற பட்டப்பெயர்கள் ஒருவர் பின் ஒருவர் ஒருவராகச் சூடிக்கொண்டு சிலகாலம் சிங்கை நகரிலிருந்தும் பின்னர் நல்லூரிலிருந்தும் அரசு செலுத்தினர்.. ‘(க.செ.நடராச்வின் ‘ஈழத்தமிழ் இலக்கிய வளர்ச்சி ‘, பக்கம் 6).

‘பராக்கிரமபாகுவின் கபடசிந்தையை அறியாத செண்பகப்பெருமாள் யாழ்ப்பாணம் போய்ப் பழைய தலைநகர் பாழாய்ப்போய் விட்டமையினால் நல்லூரிலே கி.பி.1450இல் ஒரு புது நகரெடுப்பித்துச் ஸ்ரீசங்கபோதி புவனேகபாகு என்னும் சிங்கள நாமத்தோடு பதினேழு வருடங்களாக அரசு செய்து வந்தான்.. ‘(முதலியார் இராசநாயகத்தின் ‘யாழ்ப்பாணச் சரித்திரம் ‘, பக்கம் 75).

கைலாயமாலை, வையாபாடல் போன்ற நூல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட யாழ்ப்பாண வைபவமாலையில் மயில்வாகனப் புலவரோ சிங்கையாரியராசன் (முதல் ஆரியராசன்) நல்லூரிலேயே தனது அரசிருக்கையை ஸ்தாபித்ததாகக் கூறுவார்.

இவ்விதமாக நல்லூர் பற்றியும் சிங்கைநகர் பற்றியும் நிலவுகின்ற இருவேறான கருத்துக்களில் சுவாமி ஞானப்பிரகாசர், முதலியார் செ.இராசநாயகம், க.செ.நடராசா போன்றோர் கருதுவது போன்று நல்லூரும் சிங்கை நகரும் இருவேறு நகரங்கள் என்பதே ஏற்கக் கூடியதாக உள்ளது. இவற்றிற்கு ஆதாரங்களாகப் பின்வருவனவற்றைக் கூறலாம்.

1. கேகாலையில் கொட்டகமா என்னுமிடத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டொன்று பின்வருமாறு கூறுகிறது.

‘..கங்கணம் வேற் கண்ணிணையாற் காட்டினார் காமர்வளைப் பங்கயயக்கை மேற்றிலதம் பாரித்தார்- பொங்கொலி நீர்ச்சிங்கைநகராரியனைச் சேராவனுரேசர் தங்கள் மடமாதர்தாம்… ‘.

இவ்வெண்பாவில் ‘பொங்கொலிநீர்ச் சிங்கைந்கராரியர்.. ‘ என சிறப்பித்துக் கூறப்படுவதுபற்றி முதலியார் செ.இராசநாயகம் பின்வருமாறு கூறுகின்றார்:

‘..இச்சிங்கைநகர் அடியடியாகப் பலவாரியச் சக்கரவர்த்திகளுக்கு மகோன்னதவிராசதானியாகவதற்கு முதன் முதலடியிட்டவன் இவ்வுக்கிரசிங்கனே. ‘பொங்கொலி நீர்ச் சிங்கை நகர் ‘ எனச் சிறப்படை கொடுத்து விதந்தோதப்பட்டிருப்பதால், சிங்கை நகர் பொங்கியெழும் திரையொலியையுடைய சமுத்திரக் கரையோரமென்பது நிதர்சனமாயிற்று. அவ்வாறமைந்துள்ளவிடம் வல்லிபுரக் கோயிலைச் சார்ந்த கடலோரத்தில் மணற்றிடரிற் புதைந்து ஆங்காங்கு கிடக்கும் அனேக பாரிய கட்டடங்களாலும் வலியுற்று வெலிவுற்று உறுதி பெற்றொளிர்கின்றவென்க.. ‘

(யாழ்ப்பானச்சரித்திரம் 235-236). சுவாமி ஞானப்பிரகாசரின் கருத்தும் இதுவே.

2. புகழ்பெற்ற முஸ்லீம் பயணியான இபின் பதூத்தா தனது குறிப்புகளில் ஆரிய மன்னனை ‘இலங்கையின் சுலதானெனவும் ‘, பல கப்பல்களுடன் விளங்கிய கடற்படையை அவன் வைத்திருந்தது பற்றியும் தெரிவித்திருக்கின்றான். வலிய கடற்படையையை வைத்திருந்த ஆரியமன்னர்கள் தலைநகரான சிங்கைநகரைத் துறைமுகத்திற்கண்மையில் தான் வைத்திருக்க வேண்டும். இவ்வகையில் நல்லூரைவிட வல்லிபுரமே துறைமுகப் பொலிவு மிக்கதொரு நகர்.

கைலாயமாலை நல்லூரினை ‘நல்லைமூதூர் ‘ என அழைக்கின்றது. நல்லூரின் தொன்மையினை இது சுட்டிக் காட்டுகிரது. முதலாம் இராசேந்திர சோழன் காலத்திலேயே நல்லூர் ஓர் ஆலயமமைந்த புனித ஸ்தலமாக விளங்கியதை அறிய முடிகின்றது. யாழ் கோட்டையிலிருந்து பெறப்பட்ட முதலாம் இராசேந்திர சோழனின் கல்வெட்டொன்றைப் பற்றிய ஆய்வுகளை ஏற்கனவே கலாநிதி கா.இந்திரபாலா நடத்தியுள்ளார். இது பற்றிக் கலாநிதி சி.க.சிற்றம்பலம் பின்வருமாறு கூறுகின்றார்:

‘…இக்கல்வெட்டில் தானத்தை அளித்தவராக சாந்தன் காணப்படுகின்றான். நல்லூரிலமைந்த இந்துக் கோயிலுக்கு இவன் அளித்த மிருகங்கள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன… ‘ ( ‘சிந்தனை ‘- யாழ் பல்கலைக்கழகக் கலைபீட வெளியீடு; ஆடி 1984, பக்கம் 121).

ஏற்கனவே புகழ்பெற்று விளங்கிய தொன்மை வாய்ந்த நல்லூரைச் சிங்கைநகரென அழைத்திருப்பார்களாவென்பது சந்தேகத்துக்குரியது. இவற்றையெல்லாம் நோக்கும்போது நல்லூரும், சிங்கைநகரும் இருவேறான நகரங்களென்பதே ஏற்கக் கூடியதாகப் படுகின்றது.

—-

ngiri2704@rogers.com

Series Navigation