காசி விசுவநாதர் ஆலயம், காஷ்மீர கர்ஷன், கன்னியாகுமரி கலவரம்

This entry is part [part not set] of 48 in the series 20060203_Issue

எஸ் அரவிந்தன் நீலகண்டன்


அவுரங்கசீப் ஏன் காசி விசுவநாதர் ஆலயத்தை உடைத்தார் என்பதற்காக ‘மதச்சார்பற்ற ‘ (அதாவது தாலிபான் ஆதரவாளர்கள், ஸ்டாலினிச ஆதரவாளர்கள் மற்றும் எவாஞ்சலிக்கல் கிறிஸ்தவ ஆதரவாளர்களின் தழுக்குப் பெயர்) அறிவுஜீவிகள் கொடுக்கும் வழக்கமான கட்டுக்கதை மீண்டும் மீள்-கூறப்பட்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக எவ்வித ஆதாரமும் இல்லாத கட்டுக்கதை என்பது கூறப்பட்டவருக்கே தெரிந்திருக்காமலும் இருக்கலாம். ஆனால் வேண்டுமென்றே உருவாக்கி இவ்வாறு பரப்பப்பட்டு வந்துள்ள இக்கட்டுக்கதையினால் ஒரு பயன் இருக்கிறது. பகுத்தறிவு மூடநம்பிக்கையின்மை மதச்சார்பின்மை இத்யாதிகளின் பெயரால் அரசியல் நடத்திவரும் ஒரு கூட்டத்தின் ‘ஆவண ஆதாரம் ‘ குறித்த கறார் தன்மை எத்தனை நெகிழ்வுத்தன்மையுடன் -நெகிழ்வுத்தன்மை கூட இல்லை அப்பட்டமான மோசடியை நம்பத்தயராகும் மனநிலையுடன்- இருக்கிறது என்பதை வெளிப்படுத்த இந்த ‘காசி விசுவநாதர் ‘ ஆலயம் குறித்த வக்காலத்து விவரணம் ஒரு வாய்ப்பினை நல்குகிறது.

பெல்ஜிய இந்தியவியலாளர் முனைவர்.கொயன்ராட் எல்ஸ்ட் இந்தக் குறிப்பிட்ட விளக்கத்தினை மூடு வரை சென்று ஆராய்ந்தவர். ‘மதச்சார்பற்ற ‘ கும்பல்களின் வெறுப்பு வரிசையில் முன்னணி இடத்தையும் பெற்றவர். ‘அவுரங்கசீப் காசி விசுவநாதர் ஆலயத்தை ஏன் உடைத்தார் ? ‘ எனும் தலைப்பில் அவர் எழுதியுள்ள கட்டுரையின் அடிப்படையில் கீழ்காணும் பத்திகள் எழுதப்பட்டுள்ளன.

சுவாரசியமான விசயம் என்னவென்றால் சர்வதேச அளவிலும் இஸ்லாமிய அரசர்களின் கோவில்கள் உடைப்பிற்கு வக்காலத்து வாங்கும் இடதுசாரி வரலாற்றறிஞர்கள் (உ-ம்: ரொமிலா தப்பார், பெர்ஸிவல் ஸ்பியர்) உண்டு. ஆனால் அவர்கள் அங்கு இந்த வக்காலத்தினை முன்வைப்பதில்லை. மாறாக சமூக-பொருளாதார அடிப்படையில் வலிந்து உருவாக்கப்பட்ட பல விளக்கங்களை முன்வைப்பார்கள். ஆனால் உள்ளூரில் இந்த சரக்கே செல்லுபடியாகும் என அவர்களின் அடுத்த-நிலை வரலாற்றறிஞர்கள் மற்றும் அறிவுஜீவிகள் நினைக்கலாம். விசயத்துக்கு வரலாம்.

உதாரணமாக இடதுசாரி வரலாற்றறிஞர் கார்கி சக்ரவர்த்தியின் சான்று பகர்தல் இவ்வாறு:

‘காசி விஸ்வநாதர் ஆலயத்தை அழிக்க அவுரங்கசீப் அளித்த ஆணையைக் குறித்து மிகவும் கூறப்படுகிறது. ஆனால் ஆவண ஆதாரம் (Documentary evidence) இந்நிகழ்வுக்கு புதிய பரிமாணத்தை அளிக்கிறது. அவுரங்கசீப் வாரணாசி வழியாக வங்காளத்திற்கு சென்று கொண்டிருந்த போது வழியில் ஹிந்து ராஜாக்கள், தமது ராணிகள் கங்கையில் நீராடி காசி விசுவநாதர் ஆலயத்தினை தரிசிக்க வேண்டி ஒரு நாள் தங்கும்படி வேண்டினர். அவுரங்கசீப் இதற்கு உடனடியாக ஒத்துக்கொண்டான். இராணுவம் வாரணாசிக்கு ஐந்து மைல் தொலைவில் முகாம் அமைத்து தங்கியது. ராணிகள் பல்லக்கில் காசிக்கு சென்றனர். அவர்கள் ஆலயத்தில் வணங்கி திரும்பினர். ஒரு ராணி மட்டும் திரும்பவில்லை. அவர் கட்ச் பிரதேச ராணி. ஆலய வளாகங்கள் முழுமைக்கும் தேடுவதற்கு உத்தரவாயிற்று. எங்கு தேடிய பின்னரும் இராணி கிட்டவில்லை. அவுரங்கசீப் இதனை அறிந்ததும் கடும்கோபம் கொண்டார். அவர் தனது மூத்த அதிகாரிகளை ராணியைத் தேடப் பணித்தான். இறுதியாக அவர்கள் கணேச விக்கிரகம் எளிதில் நகர்த்துவதாக இருப்பதைக் கண்டனர். இந்த சிலை அகற்றப்பட்ட போது கீழே ஒரு பாதாள அறைக்கு படிக்கட்டுகள் இறங்குவதைக் கண்டனர். அங்கே அவர்கள் அதிர்ச்சியடையும்படி அந்த ராணி நகைகள் இல்லாமல் மானபங்கப் படுத்தப்பட்டு அழுதபடி மூலையில் இருப்பதைக் கண்டனர். இந்த பாதாள அறை ஜெகன்னாதர் சிலைக்கு கீழாக இருந்தது. ராஜாக்கள் இதனால் கடுமையாக கோபம் அடைந்தனர். இக்குற்றம் மிகவும் மோசமானது என்பதால் கடுமையான தண்டனை வழங்குமாறு அவர்கள் அவுரங்கசீப்பினைக் கேட்டனர். அவுரங்கசீப் கோவிலின் புனிதம் மாசடைந்தமையால் காசி விசுவநாதரை இடம் மாற்றுமாறு உத்தரவிட்டார். பின்னர் கோவில் இடித்து தரைமட்டமாக்கப்பட்ட பின்னர் தலைமைப் பூசாரியினை (மகந்த்) கைது செய்து தண்டித்தார். ‘

இந்த மகத்தான வக்காலத்தினை- ‘ஆவண ஆதாரத்தினை ‘- முன்வைத்தவராக கார்கி குறிப்பிடுவது யாரை என்று பார்த்தால் அவர் ‘காந்தி தர்ஷன் சமிதி ‘ சேர்மனாகவும் ஒரிசாவின் கவர்னராகவும் இருந்த பி.என்.பாண்டே. அவர் எந்த ‘ஆவண ஆதாரத்தினை ‘ ஆதாரமாகக் கொண்டு இதனை எழுதியுள்ளார் என்று பார்த்தால் பாண்டேயின் வார்த்தைகளில் ‘டாக்டர். பட்டாபி சீதாராமையா தமது புகழ்பெற்ற ‘The Feathers and the Stones ‘ எனும் நூலில் இந்நிகழ்ச்சியினை ஆவண ஆதாரத்துடன் கூறியுள்ளார். ‘ என்பதாக ‘ஆவண ஆதாரம் ‘ அளித்துள்ளார். அடிப்படையில் தமது சிறைநாட்குறிப்பாக விளங்கிய இந்நூல் இன்று கிடைப்பதற்கு அரியதாக உள்ளது. எனினும் முயன்றால் ஆராய்ச்சி மைய நூலகங்களில் கிடைக்காத ஒன்றல்ல. எனவே எல்ஸ்ட் முனைந்து அந்நூலினை தேடியெடுத்து அந்நூலில் உள்ள ஆவண ஆதாரத்தினைக் காண்கிறார். அந்நூலில் ‘பட்டாபி தோல்வி என் தோல்வி ‘ புகழ் காந்தியவாதியான பட்டாபி சீதாராமையா கூறுகிறார்:

‘அவுரங்கசீப் மதவெறியன் என பரவலான ஒரு எண்ணம் இருக்கிறது. என்றாலும் இது ஒரு அறிஞர் குழுவினரால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அவனது மதவெறி ஒரு சில நிகழ்ச்சிகளால் சித்தரிக்கப்படுகிறது. காசி விசுவநாதர் கோவில் இருந்த இடத்தில் மசூதி கட்டியது அதில் ஒன்று. மதுராவில் மசூதி கட்டியது மற்றொன்று. ஜசியா வரியினை மீண்டும் விதித்தது மற்றொன்று, இதில் முதல் நிகழ்ச்சி குறித்து விளக்க ஒரு கதை சொல்லப் படுகிறது.

‘தமது அதிகாரத்தின் உச்சத்தில் மற்றெந்த வேற்றுநாட்டு மன்னரையும் போலவே அவுரங்கசீப்பும் ஹிந்து பிரபுக்களால் சூழப்பட்டிருந்தான். ஒரு நாள் அவர்கள் அனைவருமாக வாரணாசியில் உள்ள புனிதக் கோவிலை பார்க்க கிளம்பினர். அவர்கள் மத்தியில் கட்ச் பிரதேச ராணியும் இருந்தார். அவர்கள் தரிசனம் முடித்து திரும்புகையில் கட்ச் தேச ராணியைக் காணவில்லை. அவர்கள் அவளை நாலாதிசைகளிலும் தேடியும் கிடைக்கவில்லை. மிகவும் நுணுக்கமாக அவர்கள் தேடியபோது கோவிலுக்குள் ஒரு பாதாள அறை ஒருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அது ஒரு கதவில் முடிவடைந்த போது அதை உடைத்து உள்ளே சென்றனர். உள்ளே அச்சத்தால் வெளுத்து போன ராணி நகைகளை இழந்து காணப்பட்டார். அங்குள்ள மகந்துக்கள் யாத்ரீகர்களினை கோவிலுக்குள் சென்று காட்டுவதாகக் கூறி அவர்களினை பாதாள அறைக்குள் தள்ளி கொள்ளையடிப்பது வழக்கமாக இருப்பது தெரிய வந்தது. அவுரங்கசீப் இத்தகைய கொடுந்செயல்கள் நிகழும் இடம் இறைவனின் ஆலயமாக இருக்கக் கூடாது என்பதற்காக அதனை இடிக்க உத்தரவிட்டார். இடிபாடுகள் அங்கேயே விடப்பட்டன. ஆனால் காப்பாற்றப்பட்ட ராணி அங்கு ஒரு மசூதி எழுப்பப்பட வேண்டும் என வேண்டிக்கொண்டதன் பேரில் அங்கு மசூதி கட்டப்பட்டது. இவ்வாறுதான் விசுவநாதர் ஆலயத்தின் -ஆலயம் என்று கூட சொல்லக்கூடாது சிவலிங்கம் வைக்கப்பட்ட ஒரு குடில் அவ்வளவுதான்- அருகில் இந்த மசூதி வந்தது. மதுரா மசூதி கட்டப்பட்டதன் காரணம் தெரியவில்லை. இந்தக்கதை லக்னோவில் ஒரு அரிய பத்திரத்தில் இருப்பதாகவும், அப்பத்திரம் ஒரு மதிக்கப்படும் முல்லாவிடம் இருப்பதாகவும் அவர் அதனை படித்துவிட்டு அதனை ஒரு நண்பரிடம் கொடுப்பதாகவும் கூறியதாகவும், ஆனால் அதனை கொடுப்பதற்கு முன்னர் அவர் துரதிர்ஷ்டவசமாக இறந்துவிட்டதாகவும் தெரிகிறது. ஆனால் அவுரங்கசீப்பிற்கு எதிரான பார்வை இன்னமும் நிலவுகிறது. ‘

ஆக இதுதான் ‘ஆவண ஆதாரம் ‘. ஒருபெயர் தெரியாத நண்பரிடம் பெயர் தெரியாத முல்லா கூறிய கதையின் பதிவு. உண்மையில் இந்த கோவிலுக்குள் அரசகுடும்பத்தை சேர்ந்தவர்கள் கைது செய்து வைக்கப்படும் கற்பனை ஆர்மினிய நாடோடிக்கதையான ‘அனயீத் ‘ ஏறக்குறைய மேற்கண்ட கற்பனையின் பிரதிபிம்பமாக இருப்பதைக் காணலாம். ஆனால் அவுரங்கசீப் காசி விசுவநாதர் ஆலயத்தை அழிக்க அளித்த பிரகடனம் இன்றும் உள்ளது. அது தெள்ளத்தெளிவாக தனது காரணங்களை ஐயமற முன்வைக்கிறது:

‘இறைநம்பிக்கையை விரும்பி பாதுகாப்பவரான பேரரச பிரபு, தத்தா முல்தான் மற்றும் குறிப்பாக வாரணாசி ஆகிய பிரதேசங்களில் இறைநம்பிக்கையில்லாத பிராமணர்கள் தமது மையங்களில் தமது பொய் நூல்களின் மூலம் பிரச்சாரம் செய்து வருவதையும், அதனைக் கேட்க ஹிந்துக்களும் முஸ்லீம்களும் வெகுதொலைவுகளிலிருந்து வந்து இந்த பிரசங்கங்களைக் கேட்டு அதனால் மார்க்கப்பாதையிலிருந்து மாற்றப்படுவதையும் அறிந்தார். மேன்மைதங்கிய அரசர் இதனை அறிந்ததும் இஸ்லாமினை நிலைநிறுத்த ஆவலுண்டானவராக, இப்பிரதேச ஆளுநர்களுக்கு இப்பகுதிகளிலுள்ள இஸ்லாமிய நம்பிக்கையற்றவர்களின் கல்வி நிறுவனங்களையும், ஆலயங்களையும் இடித்தொழிக்கும் படி உத்தரவிட்டார். தலையாயக்கடமைகளாக இஸ்லாமியரல்லாதவர்களின் மதப்பிரசங்கங்களையும், அவர்கள் பகிரங்கமாக தமது மதங்களை பின்பற்றுவதையும் இல்லாமலாக்க உத்தரவிட்டார். ‘ (முகியுத்தீன் முகமது அவுரங்கசீப் ஆலம்கீர் பாதுஷா காஸியின் பொதுப்பிரகடனம், மாஸிர்-இ-ஆலம்கிரி பக்.51-52)

ஆக, காசி விசுவநாதர் ஆலயத்தை ஏன் அவுரங்கசீப் இடித்தார் ? என்பது தெளிவுபடுகிறது. ஆனால் அதைவிட முக்கியமாக, இந்த ஆலய இடிப்புக்கு ‘பட்டாபி தோல்வி-என் தோல்வி ‘ புகழ் பட்டாபி சீதாராமையா – சத்தியத்தை தலையானதாகக் கொண்டதாக தம்மை ஹிந்துஸ்தான மக்களிடம் அறிமுகப்படுத்திக்கொண்ட ஒரு அரசியல் கோட்பாட்டின் அடிப்படையில் அரசியல் செய்த முதல் தலைமுறை காந்தியவாதியான பட்டாபி சீதாராமையா- ஏன் இப்படி ஒரு சத்தியமற்ற வக்காலத்தினை அவுரங்கசீப்பின் ஆலய அழிப்பிற்கு அளித்தார் ? இக்கேள்விக்கான விடை பல கசப்பான உண்மைகளை கூறும் ஒன்று.

அடுத்ததாக, காஷ்மீர கர்ஷனுக்கு வருவதற்கு முன்னால் ஒரு சிறிய பின்புலத்தகவல். பொதுவாகவே ஹிந்து மன்னர்களில் ஒரு சில வழிதவறல்களையும், ஒரு சில நிகழ்வுகளையும், இஸ்லாமிய மன்னர்களின் பொதுவான கோவில் இடிப்புகளையும் ஒப்பிடுவதென்பது இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் ‘மதச்சார்பற்ற ‘ வக்காலத்து வாங்கிகளின் வாதிடும் முறைகளில் ஒன்றாகும். அவ்விதத்தில் கடந்த ஐம்பதாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு அரசன் தான் காஷ்மீர மன்னன் கர்ஷன். அவனது இந்த கோவில் இடிப்புச்செயல்களைக் குறித்து வருகிற செய்திகளை காஷ்மீர அரசவம்ச நூலான ராஜதரங்கிணி கூறுகிறது. இந்நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு ரஞ்சித் சீதாராம் பண்டிட் என்பவரால் செய்யப்பட்டு நேருவின் முன்னுரையுடன் சாகித்திய அகாடமியால் வெளியிடப்பட்டு ஆண்டுகள் நாற்பதைக் கடந்துவிட்டன. ராஜதரங்கிணி முழுமையாக மேற்கோள் காட்டப்படுமானால் அவனது முழு இயல்பும் வெளிப்பட்டிருக்கும். அவன் இஸ்லாமிய மேலாதிக்கத்திற்கு தன்னை முழுமையாக அடிமைப்படுத்திக்கொண்டவன் என்பதனை ராஜதரங்கிணியின் 7:1149 ஆவது பாடல் கூறுகிறது. ( ‘he ever fostered with money the Turks, who were his centurions ‘) மேலும் 1095 ஆவது பாடல் அவனையே ‘துருக்க அரசன் ‘ என்று கூறுமளவுக்கு அவன் இஸ்லாமிய படையெடுப்பாளர்களுடன் ஒன்றிவிட்டான். மேலும் அவன் அழித்தது அவன் இன்னமும் சார்ந்திருந்த மதத்தினைச் சார்ந்த இந்து ஆலயங்களை. அவுரங்கசீப்பும் முகமது கஜினியும் அழித்தவை அவர்கள் சார்ந்திராத இந்து ஆலயங்களை. (பிஜப்பூர் கோல்கொண்டா ஆகிய இடங்களில் கூட அவுரங்கசீப் அழிக்க உத்தரவிட்ட மசூதிகள் ஷியா பிரிவினைச் சார்ந்தவை.)

இறுதியாக கன்னியாகுமரி கலவரங்களுக்கு வரலாம். தாழ்த்தப்பட்டவர்கள் என குறிப்பிடப்படும் நாடார் சமுதாயத்தவர்கள் ஷத்திரிய வம்சத்தினைச் சார்ந்தவர்கள் தாம். தென்னாடு என்றில்லை பாரதம் முழுவதுமே வர்ண அமைப்பு ஒரு மிக நெகிழ்வான சாதிக்குடிகள் அங்குமிங்கும் செல்லும் தன்மைத்ததாகவே இருந்திருக்கிறது. அது இறுக்கமுடையதானதற்கு வெளிநாட்டு படையெடுப்புகளும், மூலதன வெளியேற்றமுமே முக்கிய காரணங்களாகும். குயவனான சாதவாகனன் ஷத்திரியன் தாம். நாயர்கள் சூத்திரராக இருந்து ஷத்திரியர்கள் ஆனவர்கள்தாம் (அவர்கள் கிறிஸ்தவ மிஷிநரிகளின் இலக்கியங்களில் நாயர்கள் சூத்திரர் என்றே குறிப்பிடப்படுவதைக் காணலாம்.) தோள்சீலை போராட்டத்திலும் பங்கெடுத்தவர்கள் மதம் மாறாத நாடார்கள்தாம். பின்னர் அவர்கள் குறிவைத்து மதம் மாற்றப்பட்டனர். எனினும் மதமாற்றி மிசிநரிகள் உண்மையில் பாரத சமுதாய சமத்துவ எழுச்சிகளில் உண்மையில் எத்தகைய பங்காற்றினர் என்பதனை ஒரு உதாரணம் மூலம் காணலாம்.

ஐயா வைகுண்டர் சாதீயக் கொடுமைச்சூறாவளியின் நடுநாயகக் கண்ணில் நின்று தர்மத்திற்காகப் போராடினார். ஏசி அறைகளில் இருந்தபடி சமுதாயம் குறித்து சித்தாந்த கோட்பாடுகளை முன்வைக்கும் சித்தாந்தி அல்ல அவர். அல்லது எடைக்குஎடை பொருட்கள் வாங்கி சொத்து சேர்த்து, வெள்ளைக்காரன் தூக்கிப்போட்ட அறிவியல் அடிப்படையற்ற இனவெறிக்கோட்பாடுகளால் சுகம் கண்டு, மடையர்களே எனக்கு சீடர்களாக இருக்கவேண்டும் என வேண்டிய போலி-பகுத்தறிவின் தந்தையான சிறியார் ஈவெரா அல்ல அவர். இத்தகைய போலிகளால் அவரது காலடி மண்ணையும் தொட இயலாது. உயர்ந்த உத்தம அவதார புருஷர் என இன்றும் வணங்கப்படும் ஐயா வைகுண்டர் இயக்கம் சாதீய கொடுமைகளுக்கு எதிராக தூயத்துவராடை வெள்ளைத்திருமண் பொறிக்கப்பட்ட காவிக் கொடியினை அன்புக்கொடியாக ஏந்திப்பிடித்து போராடிய வரலாறு ஹிந்துத்வ வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டியது.

இன்றைக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் மதமாற்றிகளுக்கும், சாதீய வாக்குவங்கி நடத்தி தர்மத்தின் மக்களை பிரிக்கத்தூண்டும் போலி மதச்சார்பற்ற அரசியல்வியாதிகளுக்கும் எதிராக போராடும் சமுதாய இயக்கங்களின் சமத்துவ போராட்டத்தின் அடிநாதமாக விளங்குவது. இந்த மகத்தான இயக்கத்துடன் கிறிஸ்தவ மிசிநரிகள் என்னவித உறவினைக் கொண்டிருந்தார்கள் என்பதை பார்க்க, கிறிஸ்தவ மதமாற்றத்தின் உண்மை தன்மைகள் விளங்கும்.

ஐயா வைகுண்டரை பொதுவாக ஒரு சாதிக்கு உரியவர் என சிலர் நினைத்தாலும், அவர் முழுமையான ஹிந்துசமுதாயத்தினை ஒருங்கிணைக்கும் பார்வையினைக் கொண்டிருந்தார் என்பதே உண்மை.

‘சாணா ரிடையர் சாதி வணிகருடன்

நாணாத காவேரி நல்ல துலுப்பட்டர் முதல்

சூத்திரர் பிரமர் தொல் வாணியர் பறையர்

உத்திர நீசர் உழவருடன் குறவர்

கம்மாளரீழர் கருமறவர் பரவர்

வெம்மா நசுறாணி வேகவண்ட ரிடலையர்

சக்கிலியரோடு சாதி பதினெட்டுகளும் ‘ (அகிலத்திரட்டு அம்மானை:327)

ஐயா வைகுண்டரின் தர்ம பார்வையில் ஒன்றாகவே இருந்தன.

அவர்களை ஒரே இடத்தில் நீர் அருந்தச் செய்தார் ஐயா வைகுண்டர். அவர்களை ஒரு தாய் மக்களாக உறவாட வைத்தார்.

‘சாதி பதினெண்ணும் தலமொன்றிலே குவிந்து

கோரிக் குடிக்கும் ஒரு கிணற்றில் ‘ (329)

சாதீய வெறி, மிஷிநரி ஆதரவு ஆகியவை மேலோங்கிய திருவாதாங்கூர் மேல்வர்க்கத்தினர் கடும் சித்திரவதைகளை ஐயா வைகுண்டர் மீது சுமத்தியதை அமைதியாக தாங்கிக்கொண்டார் அம்மகான்:

‘குண்டியிலே குத்தி குனியவிடு வானொருத்தன்

நொண்டியிவ னென்று அடித்தடித்து தானிழுப்பான்

சாணாருக்காக சமைந்தாயோ சுவாமியென்று

வாணாளை வைப்போமோ மண்டிப்பதனிக்காரா

பனையேறி சுபாவம் பட்டுதில்லையென்று சொல்லி

அனைபேரையும் வருத்தி ஆபரணந் தேடவென்றோ

சமைந்தாயோ சாமியென்று சாணாப்பனையேறி

உனைச் சாமியென்று உன் தேகத்தைப் பார்த்தால்

பனைச் சிரங்கின்னம் பற்றித் தெளியலையே

உனைச் சாமியென்றால் ஒருவருக்கு மேராதே

ஆளான ஆளோ நீ ஆளில் சிறியவனாய்த்

தாழக்கிடந்து சாமியென்று வந்தாயோ ‘ (அகிலத்திரட்டு: 11354-11366)

என்றெல்லாம் அவரை சித்திரவதை செய்தனர்.

சரி. மிசிநரிகள் இந்த சமுதாய போராட்டத்தில் எந்த இடத்தில் இருந்தனர் ? ஆகா, இதோ சமுதாய தலைமையை ஏற்று சமத்துவம் ஏற்படுத்த நல்ல கருத்துக்களுடன் ஒருவர் தாழ்த்தப்பட்ட மக்களிடமிருந்தே எழுந்துவிட்டார் எனவே அவரை ஆதரிப்போம் என ஐயா வைகுண்டருக்கு தோள் கொடுத்தார்களா மிசிநரிகள் ? கிறிஸ்தவம் சமுதாய சமத்துவத்தை ஆதரித்ததெனில், தாழ்த்தப்பட்ட நாடார்களின் மிகச்சிறந்த எழுச்சியாக்கமான ஐயா வைகுண்டருக்கு எதிராக கட்டுக்கதைகளையும், அவதூறுகளையும் பரப்பியதுமில்லாமல், அவரை ‘எதிரி ‘ ‘சாத்தான் ‘ என்றெல்லாம் தமது மேலதிகாரிகளுக்கு எழுதியது ஏன் ? அரசனை இம்மகானை விடுவிக்கவும் தார்மீக சமுதாய புரட்சியினை ஏற்கவும் வகை செய்தது யார் ? மிசிநரிகளா இல்லையே. மாறாக, மண்டைக்காடு கலவரத்தின் போது மிசிநரிகள் தம் முதல் எதிரியாக கண்ட கிருஷ்ணவகை (இடையர்) குடியினைச் சார்ந்த பூவண்டர் என்பவரே ஆவார்.

மிசிநரிகளோ ஐயா வைகுண்டரை ‘ஏமாற்றுக்காரன் ‘ ‘சாத்தான் ‘ ‘வஞ்சகன் ‘ என்றெல்லாம் தூற்றினரே தவிர அவருடன் கைகொடுத்து சமுதாய ஏற்றம் செய்ய முன்வரவில்லை. மாறாக பூவண்டன் ஹிந்து சமய அடிப்படையிலேயே சமத்துவ பார்வையினைப் பெற்று மன்னருக்கு அறிவுரை பகர்ந்தார்.

‘போற்றி நம்பூரி பிராமண சூத்திரர் குலத்தில்

ஏற்றிப் பிறக்க இயல்பில்லாமல் இந்த

பிறர் தீண்டாச் சாணார் குலத்தில் அவதரித்து

பிறக்க வருவாரோ பெரிய நாராயணரும் ‘ எனும் அரசன் கேள்விக்கு பூவண்டர் பகர்ந்த விடை சாதீய இருளும், மதமாற்ற நோயும் சூழ்ந்திருந்த அன்றைய காலகட்டத்திலும் தர்மத்தின் சமுதாய சமத்துவ ஒளி அணையாது வீசியதனைக் காட்டுகிறது. பூவண்டர் பகிர்ந்தார்:

‘சாணெனக் குலத்தில் மாயன் சார்வரோ வென்றெண்ண வேண்டாம்

பாணெனத் தோன்றி நிற்பார் பறையனாய்த் தோன்றி நிற்பார்

தூணெனத் தோன்றி நிற்பார் தோலனாய்த் தோன்றி நிற்பார்

ஆணெனத் தோன்றி நிற்பார் அவருரு கேட்டிலீரோ

குசவெனக் குலத்தில் வந்தார் குறவெனக் குலத்தில் வந்தார்

மசவெனக் குலத்தில் வந்தார் மாடெனக் குலத்தில் வந்தார்

விசுவெனக் குலத்தில் வந்தார் வேடெனக் குலத்தில் வந்தார்

அசுவெனக் குலத்தில் வந்தார் அவருருக் கேட்டிலீரோ ‘ (அகிலத்திரட்டு 11062-11069)

ஆனால் இத்தகைய சமுதாய சமத்துவ கருத்தாக்கம் கிறிஸ்தவ இறையியலில் எழ சாத்தியமே இல்லை என்பதனை நாம் நினைவுகொள்ளவேண்டும். ஏனெனில் ஏசு குறித்த இறை-முன்னறிவிப்பே அவர் தாவீது அரசரின் வம்சத்தவர் என்பதுதான். அந்த வம்சாவளியில் ஏசுவை நுழைத்திட பொய்யான இரு வேறு வம்சாவளி வரலாற்றினை மத்தேயு ஒன்றாம் அதிகாரத்திலும் லூக்கா மூன்றாம் அதிகாரத்திலும் காண இயலும். அது போலவே ஒரு குறிப்பிட்ட மக்கள் வாழும் பகுதி நுழையத்தக்கதல்ல எனும் கருத்தாக்கம் ஸ்மிருதிகளில் காணப்பட்டாலும் கூட, அதனை ஸ்மிருதிதான் என தூக்கி எறிந்து விடும் சுதந்திரம் ஹிந்துவுக்கு உண்டு. ஆனால் கிறிஸ்தவ விவிலியத்தில் அவ்வாறல்ல. மேலும் அவ்வாறு கூறியது பரமபிதாவின் ஒரே மகனும் கூட. சரி, மிசிநரிகள் ஐயா வைகுண்டருக்கு ஆற்றிய எதிர்வினை என்ன ?

‘எளியாரைக் கண்டு இரங்கியிரு என்மகனே

வலியாரைக் கண்டு மகிழாதே என்மகனே

தாழக்கிடப்பவரை தற்காப்பதே தர்மம் ‘ என்று எடுத்துரைத்த எம்பிரானை ‘மக்களை வஞ்சிப்பவன் ‘ எனக் கூசாமல் ஏசினான் சாமுவேல் சகரியா எனும் கிறிஸ்தவ வெறிபிடித்த வெள்ளைத்தோல் பிரச்சாரகன் (1843). (இன்றைக்கும், நலிந்த சமுதாய முன்னேற்றத்துக்கு பாடுபடும் ஆன்மிக அருளாளர்களை வைவதை முற்போக்காக காட்டும் சகரியாக்களுக்கு பஞ்சமில்லைதான்.)

‘காணிக்கை வேண்டாதுங்கோ கைக்கூலி கேளாதுங்கோ ‘ என்று கூறிய மகான் மிசிநரி பார்வையில் ‘எதிரி ‘யானார் (1869-ஜேம்ஸ் டவுண் மிசிநரிஅறிக்கை).

‘ஞாயமுறை தப்பி நன்றி மறவாதுங்கோ ‘ என்று எடுத்துரைத்த மகான் மிசிநரி பார்வையில் ‘சாத்தான் ‘(1875 நாகர்கோவில் மிசிநரி அறிக்கை) ஆனார்.

மேலும் ஐயா வைகுண்டர் உண்மையில் ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் கடைநிலை ஊழியம் செய்தவர் என்பது போன்ற பச்சைப்பொய்களையும் பரப்பினர். இந்த அவதூறு பிரச்சாரம் கிறிஸ்தவ சபைகளால் 1980கள் வரைக்கும் கூட வெளிப்படையாக நடந்தன.

ஐயா வைகுண்டரே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மிசிநரிகளின் நோக்கம் சமுதாய விடுதலையன்று, மாறாக சமுதாய தீமைகளை பயன்படுத்தி நடத்தும் மதமாற்றமே எனும் உண்மையை நமக்கு உணர்த்துகிறார். மிசிநரிகளின் போலி புனுகல்களை பார்த்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அவர்களை தெளிவாக ‘மாநீசர்கள் ‘ என அடையாளம் காட்டினார். தருமத்திற்கும் தம்மக்களுக்கும் எதிராக இந்த மாநீச மிசிநரிகள் நடத்தும் அநியாயங்களையும் தம் மக்களுக்காக பாடுபடும் தம்மை ‘ஏமாற்று வேலைக்காரன் ‘ என்று அழைத்த மிசிநரி பிரச்சாரங்களையும் ஐயா வைகுண்டர் எதிர்த்தார். இந்த பரவுத்தன்மை கொண்ட அந்நிய மதக்கண்டனத்தினை, சாதீய வெறியர்களுக்கு எதிராக அவர் நடத்திய போராட்டங்களுடனேயே அதே உக்கிரத்துடன், சிம்மகர்ஜனையாக வெளியிட்டார்:

‘நான் பெரிது நீ பெரிது நிச்சயங்கள் பார்ப்போ மென்று

வான் பெரிதென்றறியாமல் மாள்வார் வீண் வேதமுள்ளோர்

ஒரு வேதந் தொப்பி உலகமெல்லாம் போடுவென்பான்

மறுத்தொரு வேதஞ் சிலுவை வையமெல்லாம் போடுவென்பான்

அத்தறுதி வேதமொன்று அவன் சவுக்கம் போடுவென்பான்

குற்றமுரைப்பான் கொடுவேதக் காரனவன்

ஒருத்தருக்கொருத்தர் உனக்கெனக் கென்றேதான்

உறுதியழிந்து ஒன்றிலுங் கை காணாமல்

குறுகி வழிமுட்டி குறை நோவு கொண்டுடைந்து

மறுகித்தவித்து மடிவார் வீண்வேதமுள்ளோர் ‘ (அகிலத்திரட்டு அம்மானை 283)

கிறிஸ்தவ சமயத்தினால் சமுதாய மேன்மையா ஏற்பட்டது ? தாழ்த்தப்பட்ட மக்களிடையே பகைமை ஏற்பட்டது. ஐயா வைகுண்டரின் அருள்வாக்கு உண்மை வரலாற்றினை விளக்குகிறது:

‘விருச்சமுள்ள நீசன் வேசை நசுறாணியவன்

வையகங்களெல்லாம் வரம்பளித்த மாநீசன்

நெய்யதியச் சான்றோரின் நெறியெல்லாந் தான் குலைத்துப்

பேரழித்துத் தானம் பூப்பியமுந் தானழித்து

மார்வரையைக் கூடும் மைப்புரசு சஞ்சுவம் போல்

தானமழித்து சான்றோரின் கட்டழித்தான். ‘

(வையகங்களெல்லாம் வரம்பளித்த மாநீசன் என்பதில் அனைத்துக்கண்டங்களிலும் மிசிநரிகள் நடத்திய நச்சுவேலைகளையும் இனக்கருவறுப்புகளையும் வெளிப்படுத்துகிறார் ஐயா வைகுண்டர்.)

ஐயா முத்துக்குட்டி வைகுண்டசுவாமிகளின் சமுதாய சமரசப் புரட்சி காட்டும் உண்மை என்னவென்றால், சமுதாய ஏற்றம் பெற ஒரே நேரத்தில் சாதீய ஏற்றத்தாழ்வுகளையும், ஆன்ம அறுவடை செய்யும் அன்னிய விரிவாதிக்க சித்தாந்தங்களையும் எதிர்க்க வேண்டும். அதனையே ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கமும் அதன் குடும்ப அமைப்புகளும் செய்கின்றன.

கன்னியாகுமரி மாவட்டத்தை கன்னிமேரி மாவட்டமாக்க நடந்த முயற்சிகள் இன்னமும் நீறு பூத்த நெருப்பாக இருந்து வருகின்றன என்றே கூறவேண்டும். கன்னியாகுமரி சாந்தோம் மையம் தனது பிரசுரங்களில் விவேகானந்தர் பாறையை இன்னமும் ‘பிரான்ஸிஸ் சேவியர் ‘ பாறை எனக்கூறுவதையும் குறிப்பிட்டாகவேண்டும். வேணுகோபால் கமிசன் அறிக்கையை குறிப்பிடுபவர்கள் அந்த அறிக்கையை முழுமையாக படித்துப்பார்க்கவேண்டும். அந்த அறிக்கை மதமாற்றத்தினை கலவரங்களுக்கு ஒரு முக்கிய காரணமாக காட்டியது என்பதும் கன்னியாகுமரி மாவட்டத்தில் மதத்தலங்கள் கட்ட கலெக்டர் அனுமதி பெற வேண்டும் என பரிந்துரை செய்தது என்பதும், அப்பரிந்துரை இன்றும் மாவட்டத்தில் அமுலில் உள்ளது என்பதால் கிறிஸ்தவ மிசிநரிகள் பல ஏமாற்று வித்தைகளை கையாள்கின்றனர் என்பதும் அவ்வாறு அறிக்கைகளை படிக்காமல் பேசுபவர்கள் நினைவில் கொள்ளவேண்டும். உதாரணமாக குமரி மாவட்ட பிஷப் லியோன் தருமராஜ் 14-04-2000 தேதியிட்ட கடிதத்தில் வேணுகோபால் கமிசன் பரிந்துரைகள் அமுலில் இருப்பதால் சர்ச் கட்ட பின்வருமாறு கூறுகிறார்: ‘ இதனால் சில இடங்களில் சமூகக்கூடம் என்ற பெயரில் அனுமதி பெற்று அக்கூடங்களில் வழிபாடு நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். ‘ இன்றைக்கும் Kanyakumary என கன்னியாகுமரி மாவட்டத்தினை சில கத்தோலிக்க இதழ்களில் குறிப்பிடுவதையும் காட்டமுடியும்.

ஆக, ஆரியசமாஜமாகட்டும், சுவாமி விவேகானந்தராகட்டும், அய்யன் காளியாகட்டும், ஸ்ரீ நாராயணகுருவாகட்டும், ஏன் மகாத்மா காந்தியேயாகட்டும், மிசிநரிகள் பாரத தர்ம நெறி நின்று சமுதாய புரட்சி கண்ட செம்மல்களையும் இயக்கங்களையும் எதிர்த்துள்ளனர், நசுக்கி அழிக்க முயற்சித்துள்ளனர். உதாரணமாக சர்.ஹெர்கோர்ட் பட்லர் அவுத் மற்றும் வடமேற்கு மாகாணங்களின் லெப்டினண்ட் கவர்னர் 1-12-1907 தேதியிட்ட அறிக்கையில் கூறுகிறார்: ‘அரசாங்கம் தலையிடவில்லை என்றால் ஆரியசமாஜத்தினால் பெண்களுக்கு கல்வி அளிக்கப்பட்டுவிடும். நமது பெண்கள் இங்கிலாந்திலிருந்து பெருமளவுக்கு வரவழைக்கப்பட்டு அவர்களே பெண்கல்வி அளிக்கும் படிக்கு பார்த்துக்கொள்ள வேண்டும்..ஆரிய சமாஜம் மிகவும் ஆபத்தான இயக்கம். அது தேசிய சிந்தனையையும் கீழ்ஜாதி மக்களை மேம்படுத்துவதையும் ஒருங்கிணைக்கிறது. ‘( ‘Servant of India ‘ by Martin Gilbert). சுவாமி விவேகானந்தர் அனைத்து மக்களுமான சமஸ்கிருத கல்விசாலையை நிறுவ எடுத்துக்கொண்ட முயற்சிகள் மிசிநரி தூண்டுதலால் அரசாங்கத்தால் தடைபடுத்தப்பட்டன. இவ்வாறு முன்னூறு ஆண்டுகள் தேசியவாத சமுதாய சீர்திருத்தவாதிகளை முட்டுக்கட்டை போட்ட காலனிய அரசாங்கம், மறுபக்கம் தமது மேலாதிக்கத்தை ஏற்றுக்கொள்ள தயங்காத சில சிறியோரை பெரியாராக சமுதாய சீர்திருத்தவாதிகளாக உலாவர செய்தது. ஏன்..இன்றைக்கும் காலனிய மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்ட சிந்தனையான மார்க்சியத்தின் அடிப்படையில் சிந்திக்கும் இடதுசாரிகள், ஹிந்து தேசியவாதிகளின் நலிவுற்ற சமுதாய மேம்பாட்டு முயற்சிகளுக்கு இதர கிறிஸ்தவ இஸ்லாமிய அடிப்படைவாதிகளுடன் இணைந்து முட்டுக்கட்டைகள் போடுவதைக் காணலாம்.

உண்மைகள் இவ்வாறிருக்க பூசி முழுகும் பிரச்சார புனுகு வேலைகள் சில அறிவுஜீவிகள் என தம்மை காட்ட விரும்புவோருக்கு தேவைப்படுவதில் ஆச்சரியமென்ன ? ஆம். அவர்கள் தங்கள் கண் உத்திரத்தை அறியாதவர்கள்.

—-

aravindanneelakandan@yahoo.co.in

Series Navigation

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்