மதமாற்றம் எனும் செயல் குறித்து

This entry is part [part not set] of 35 in the series 20060127_Issue

கற்பக விநாயகம்


மதப்பிரச்சாரம் செய்ய அனைத்து மக்களுக்கும் உரிமை இருக்கின்றது. இதனை எதிர்கொண்டு எதிர்ப்பிரச்சாரம் செய்யவும் வழி இருக்கிறது. பிற மதத்தினரை எரித்துக் கொல்ல எந்த சாஸ்திரம் பரிந்துரைக்கிறது எனத்தெரியவில்லை.

இந்து மதக் கடவுளை நிந்தனை செய்துதான் அவர்கள் மதப் பிரச்சாரம் செய்கின்றனர் என்கிறார் மலர்மன்னன்.

நாமும் அதையே, இன்னும் பலபடி மேலே போய் செய்தோமே மறந்து விட்டதா ?

சமணர்களை அவர்கள் பேசும் மொழியை ‘ஞமன ஙொமன ‘ எனக் கிண்டல் செய்துதான் நம் அப்பர் சைவம் வளர்த்தார்.

சாக்கியப் பெண்களை எல்லாம் கற்பழித்திட சிவனிடம் உரம் வேண்டி நின்றார் அப்பர். (ஆதாரம்: அப்பர் பாடிய பதிகங்கள்)

எண்ணாயிரம் சமணர்களைக் கழுவில் ஏற்றித்தான் சைவம் வளர்த்தோம்.

அவர்களைக் கழுவேற்றிய இடந்தான் தென் மாவட்டத்தில் உள்ள கழுகு மலை. இன்னமும் சிவன் கோவில்களில் நடைபெறும் கழுவேற்ற வைபவமும் இதனை உறுதிப்படுத்துகின்றது.

உயிர் தப்பிக்க ஏனைய சமணத்துறவியர் ஓடி ஒளிந்த மலைக் குகைகள் நாகமலை,கழுகுமலை,சித்தன்னவாசல் ஆகிய இடங்களில் உள்ளன.

மத போதகர் அருளானந்தரை மதப்பிரச்சாரம் செய்ய வந்த ஒரே காரணத்திற்காக சித்திரவதை செய்து கொன்றோம்.

(சேதுபதி மன்னர் செய்த கொலை அது. அவரின் உறவினர் கிறிஸ்துவராகக் காரணாமாய் அருளானந்தர் இருந்தார். அருளானந்தரின் இயற்பெயர் ஜான் டி பிரிட்டோ)

ஈழத்து ஆறுமுக நாவலர் செய்யாத கிறிஸ்துவ தூசணையை விடவா பிறர் நம்மைத் தூசிக்கிறார்கள் ?

இந்து முன்னணியினர் கூட 80களில் ‘கற்பிற் சிறந்தவர் கதீஜாவா ? கன்னி மேரியா ? மணியம்மையா ? ‘ எனப் பட்டிமன்றம் ஏற்பாடு செய்தார்கள்தானே!!

வாதத்திற்கு எதிர்வாதமாய் நாம் வார்த்தைகளைத்தானே பயன்படுத்துகிறோம் ?

அவ்வாறுள்ளபோது குழந்தைகளோடு பாதிரியார் எரிக்கப்பட்டதை நியாயம் செய்வதென்பது அப்பர் செய்த உழவாரப்பணி (!!)யின் தொடர்ச்சிதானோ ? ?

அப்பருக்கு சூலை நோய் (அல்சர் ? ?) வந்தால் சமணத்தில் இருந்து சைவத்திற்கு மதம் மாறுவது சரி எனப்படுகையில், ஒரிஸ்ஸாவில் தொழுநோயாளிகள் கிறிஸ்துவ மதம் மாறுவது எவ்வாறு தவறாகும் ?

மதமாற்றம் என்பது நாம் நினைப்பது போல் கத்தி முனையிலோ, பால் பவுடரினாலோ நடந்து விடவில்லை.

தமிழகத்தில் தென்மாவட்டக் கிறிஸ்துவ மத மாற்றங்களை அலசிப் பார்த்தால் ஓருண்மை விளங்கும்.

தாழ்த்தப்பட்ட பெண்கள் மார்பை மறைக்கக்கூடாது என இந்து ஆதிக்க சாதி விதித்திருந்த கட்டுப்பாட்டை மீற நினைத்தபோது அடக்குமுறைக்கு ஆளானார்கள். இதனை மீறி குப்பாயம் அணிந்த ஒரு பெண்ணின் மார்பையே வெட்டி எறிந்திருக்கின்றனர்.

தாலி கட்டிக்கொள்வதும் அக்குலப்பெண்டிருக்கு மறுக்கப்பட்டது. மீறிய ஒரு பெண்ணின் தாலியை ஆதிக்க சாதியினர் அறுத்து எறிந்ததற்கு சாட்சியாய் கன்னியாகுமரி மாவட்டத்தில் ‘தாலி அறுத்தான் சந்தை ‘ எனும் ஊர் உள்ளது.

இவ்வுரிமைகளை எல்லாம் பெற்றிடப் புரோட்டஸ்டாண்டு மதம் போகினர்.

தஞ்சை மாவட்டத்தில் நடந்த முதல் மதமாற்றம், உடன்கட்டை ஏற மறுத்த அரசகுலப்பெண்ணைக் காப்பாற்றி அடைக்கலம் தந்த மத போதகரால் நிகழ்ந்துள்ளது. சம உரிமை மறுக்கப்பட்டபோதும், அடக்குமுறை ஆதிக்கசாதியினரால் கட்டவிழ்த்து விட்டபோதும் மதமாற்றம் நிகழ்ந்துள்ளது.

மீனாட்சிபுரம் தலித்கள் 80களில் கூண்டோடு இஸ்லாமுக்கு மாறியபோது அவர்கள் சொன்ன வலுவான காரணமே சமத்துவ வேட்கைதான்.

சிவகங்கை மாவட்டம் கண்டதேவியில் உள்ள தேரை இழுக்க அனைவருக்கும் சம உரிமை உண்டு என ஹைகோர்ட்டே தீர்ப்பு எழுதியும், இன்னும் தேரைத் தலித் மக்கள் தொட்டு இழுக்க முடியவில்லை. (கடந்த ரெண்டு வருடமாய் பேருக்கு ரெண்டு மூணு தலித்களை அருகே பேருக்கு வைத்து விட்டு நாட்டாரே இழுத்ததுதான் ஊருக்கே தெரியும்.)

கீரிப்பட்டி, பாப்பாப்பட்டி, நாட்டார் மங்கலம் ஆகிய ஊர்களில் இன்னும் தலித்தை பஞ்சாயத்துத் தலைவராக்கிட முடியவில்லை.

மேல வளவில் முருகேசன் தலைவரானபோது தலையை வெட்டி எறிந்துவிட்டனர்.

தேவ கோட்டையில் 1927ல் ஆதிக்க சாதியினர் மாநாடு கூட்டி தலித்கள் சட்டை அணியக்கூடாது, பூ வைக்கக்கூடாது. கணுக்கால் தெரியத்தான் சேலை கட்ட வேண்டும் எனப் பல கட்டுப்பாடுகளை விதித்து அவற்றை இன்னும் பின்பற்றச் சொல்லி வருகின்றனர்.

இக்கொடுமைகளையெல்லாம் களைந்திட இந்துத்துவவாதிகள் என்ன செய்திருக்கிறார்கள் ?

உள்ளுக்குள் இருக்கும் நோய்களைக் களையாமல், பிற மதத்தினரை வம்புக்கு இழுத்து பிரச்சினைகளைத் திசை திருப்புவதே வேலையாய்ப் போய் விட்டது.

(சாதி ஒடுக்குமுறை பற்றிப்பேசும்போது, ஒடுக்குமுறையால் மாண்ட மனிதர்கள் சிறுதெய்வமாய் ஆகிப் பல்வேறு அம்மன்களாக தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருப்பது நமக்கெல்லாம் நினைவிற்கு வருகின்றது. கொலை செய்யப்பட்ட தலித் பெண் ஒருவரின் கோவில் ஒன்று நெல்லை மாவட்டத்தில் உள்ளது. அதன் தலையை மட்டும் கோவில் உள்ளே வைத்து வழிபடுகின்றனர். வெட்டுண்ட உடல் கோவிலுக்கு வெளியே வழிபடப்படுகிறது. காரணம், தெய்வமான பிறகும் தலித் பெண்ணின் உடல் கூட தீட்டானதாம்.

மாண்ட மனித தெய்வங்களில் ஒருவரான மாடன் எந்த வகையில் பாரதியாரின் குலதெய்வமானார் என்பதை மலர்மன்னன் ஆராய்ந்து சொன்னால் வரலாற்றுக்கு புது வெளிச்சம் கிடைக்கும்.

நந்தனாரின் சிலை மீண்டும் நிறுவப்பட வேண்டும் என எண்ணுகிற மலர்மன்னன், அச்சிலையை கோவில் உள்ளேயே நிறுவச் செய்தால் மிக நன்றாய் இருக்கும். அத்தோடு சிதம்பரத்தில் கோவில் உள்ளே தமிழ்த் திருமுறை ஓதினால் 2003ல் நிகழ்ந்தது போன்ற தாக்குதல்களையும் நிறுத்த வேண்டுகோள் வைக்கலாம்தான்.)

வேற்று மதத்திலிருந்து வருபவர்களை எந்த சாதியிலும் சேர்க்காமல் ஆரிய சமாஜிகளாய் ஆக்கிவிடுவது மேம்போக்காகப் பார்த்தால் முற்போக்கான தீர்வு மாதிரி தெரியும்.

(இதே லாஜிக்கில்தான் கூத்தரம்பாக்கத்து (காஞ்சிபுரம் அருகே உள்ள ஊர்) தலித் மக்களை ஒரு கோவிலுக்குள் நுழைய ஆதிக்க சாதியினர் மறுத்தபோது,ஜெயேந்திரர், தனியாய் ஒரு கோவில் கட்டித்தருகிறேன், கும்பிடுங்கோ என்றார்.)

ஆனால் இதற்கு முன்உதாரணமான சில சீர்திருத்த இயக்கங்களைப்பார்த்தால் அதன் உண்மை நிலை தெளிவாகும்.

கன்னட நாட்டில் பசவணர் ஆரம்பித்த சாதி மறுப்பு இயக்கம் என்னவானது ? அவரின் கருத்தை ஏற்றுக்கொண்ட மக்கள் அனைவரும் ஒன்றாகி இன்று லிங்காயத் எனும் ஆதிக்க சாதியாய் மாறிப்போயுள்ளனரே!

ராமானுஜரின் தத்துவப்படி தலித் உட்பட அனைவரும் நாமதாரியாகி வைணவராகலாம். என்னவாயிற்று அதன் சமத்துவக் கொள்கை ?

பின்னால் வடகலை தென்கலை எனும் ஆதிக்கத்தில் வீழ்ந்துபோனதே!

பின்னாளில் ஒருவேளை ஆரிய சமாஜிகள் பெருகி ஒரு தனி சாதியாகப் பரிணமிக்கலாம். இந்து சாதிப்பட்டியலின் எண்ணிக்கையில் ஒன்று கூடும். அவ்வளவே!!

போலியாய் சில சீர்திருத்தங்களைச் செய்வது என்றுமே பலித்ததில்லை; மத மாற்றத்தைத் தடுக்க முடியவில்லை என்பதற்கு பாரதியாரின் பூணூல் புரட்சியே சான்று. புதுவையில் அவர் கனகலிங்கம் எனும் தலித்திற்கு பூணூல் அணிவித்து மந்திரம் சொல்லித் தந்தார். ஆனால் கனகலிங்கமோ பின்னாளில் கிறிஸ்துவராய் மாறி வாழ்ந்து மடிந்தார்.

சிவாஜி போன்ற அரசர்களை நம் இஷ்டம் போல இந்து தர்மத்தைப் புணரமைக்கப்பிறந்தவர் போல் சித்தரிப்பதும் ஏற்க இயலாத வாதம்தான். சிவாஜியின் திட்டங்களில் அதெல்லாம் கிடையாது. அவர் ஒரு பேரரசை எதிர்த்து சண்டை போட்டவர். அம்மட்டே.

அவர் இந்து மார்க்க ஆட்சி அமைக்கப் பிறந்தார் என்றால் ஏன் அவரின் படையில் முஸ்லிம் வீரர்களும் இருந்தனர் ?

அவரின் முக்கியப் படைகளை முஸ்லிம்களான இப்ராஹிம் கார்டியும்,சித்தி சம்பலும் (Ibrahim Gardi and Siddi Sambal) வழி நடத்தி உள்ளனரே!!

நம் மார்க்கத்தில் இருக்கும் சீர்கேடுகளை அகற்றிவிட்டு பிற மதங்களைப் பார்க்காமல், வதந்திகளையும் அவதூறுகளையும் பரப்புவதால் மதக்கலவரமே நிகழும். நீதிபதி வேணுகோபால் கமிஷன் அறிக்கை (1982 மண்டைக்காடு கலவரம் குறித்த நீதி விசாரணை) இப்படிப்பட்ட அவதூறுப் பிரச்சாரத்தால்தான் மண்டைக்காடு கலவரம் ஆரம்பமானது என்கிறது. (இந்துத்துவவாதிகள் ‘அவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தைக் கன்னி மேரி மாவட்டமாக்கத் திட்டமிட்டுள்ளனர் ‘ எனத் துண்டுப்பிரசுரம் வெளியிட்டனர் அப்போது).

ஏசு சொன்னதுபோல், உன் கண்ணில் உள்ள உத்திரத்தை எடுத்து விட்டு அயலான் கண்ணில் இருக்கும் துரும்பை எடுப்பதுதான் சரியான வழி என்பது எனது அபிப்பிராயம்.

****

vellaram@yahoo.com

Series Navigation

கற்பக விநாயகம்

கற்பக விநாயகம்