எடின்பரோ குறிப்புகள் – 6

This entry is part [part not set] of 34 in the series 20060113_Issue

இரா முருகன்


லண்டனில் இந்த வருடம் குளிர் அதிகம். இங்கிலாந்து முழுக்கவுமே இதுதான் நிலவரம். ஆனாலும் tabloid டேப்லாய்ட் பத்திரிகைகள் அக்டோபரில் அலறியதுபோல், ‘ஐம்பது வருடத்தில் மிகக் கடுங்குளிர் காலம்’ எல்லாம் இல்லை. கிறிஸ்துமஸ் சமயத்தில் சுருக்கமாகப் பனி பெய்து, வெல்லப் பிள்ளையார் பிடிப்பதுபோல் செண்ட் ஜேம்ஸ் பார்க் பெஞ்சில் சிறுவர்கள் அவசர அவசரமாக ஒண்ணரை இஞ்ச் பனிமனிதன் பொம்மை செய்வதற்குள் நின்றுவிட்டது.

ஒற்றைப் பூச்செடி கூட இல்லாத செண்ட் ஜேம்ஸ் பூங்கா அறிவிப்புப் பலகையில் மாற்றம் தெரிகிறது. மாநகராட்சியின் பழைய விதிமுறைகளின்படி, கையில் நாயைப் பிடித்துக் கூட்டிக்கொண்டு பார்க்கில் நடைபயில வருகிறவர்கள், அந்த நாலுகால் பிராணி பூங்காப் புல்தரையில் அசுத்தம் செய்யாமல் கவனித்துக் கொள்ள வேண்டும். அசுத்தமாக்கிப் போட்டால் அபராதம். புது விதிமுறை வளர்ப்பு மிருகங்கள் மேல் பரிவு கொண்டவர்கள் விதித்தது. கூட்டி வந்த பிராணி அசுத்தம் செய்யலாம். அதை அகற்றாவிட்டால்தான் அபராதம்.

ஓட்டல் மெனுகார்டுகளில் பிரஞ்சு மொழி அதிகம் தட்டுப்படுகிறது. ஒரு வார்த்தை இங்கிலீஷிலும் அடுத்தது பிரஞ்சிலுமாக இங்கிலீஷ்காரர்கள், பிரஞ்சுக்காரர்கள் இரண்டு தரப்புக்கும் புரியாத கலப்பு மொழியில் எழுதிய சாப்பாட்டு அறிவிப்புகள் சர்வ சாதாரணமாகப் புழங்குகின்றன.

லண்டன் கண் London Eye ராட்சத வளையங்களில் ஏறி ஊரை விடியோ காமிராவில் படம் பிடிக்க தேம்ஸ் நதி தீரத்தில் நிற்கும் டூரிஸ்ட்களின் க்யூ இன்னும் தீர்ந்தபாடாக இல்லை.

சிவப்பு ரூட்மாஸ்டர் பஸ்கள் காணாமல் போய்விட்டன. கண்டக்டர் டிக்கட் கிழித்துக் கொடுக்கிற இந்த பழைய மாடல் பஸ்கள் அவ்வப்போது பிளாட்பாரத்தில் ஏறினாலும், எண்பது சில்லறை வருடமாக லண்டன் பொதுமக்களுக்கு தொடர்ந்து சேவை செய்து வந்தவை. பழைய பஸ்களை வெளிநாட்டுக்காரப் பணம் படைத்தவர்கள் நிறையக் காசு கொடுத்து வாங்கி வீட்டு வாசலில் பாஷனாக நிறுத்திக்கொள்வதாகக் கேள்வி.

டிசம்பரில் ஆணும் ஆணும் அல்லது பெண்ணும் பெண்ணும் என ஒரே இனக் கல்யாணங்களுக்கு பிரிட்டன் அனுமதி கொடுத்துவிட்டதன் விளைவாக தெருமுனனயில் தீப்பிடிக்கத் தீப்பிடிக்க முத்தம் கொடுத்துக் கொண்டிருக்கும் ஜோடிகளில் இந்த ரகக் காதலர்களும் இருப்பதைப் பார்க்க, இன்னும் நாலைந்து வருடம் போகலாம். பிரபல பாப் பாடகரும் எலிசபெத் மகாராணியால் சர் பட்டம் பெற்றவருமான எல்டன் ஜான் போன்ற பெருந்தலைகள் சேம் செக்ஸ் கல்யாணங்களுக்குப் புது மரியாதையைக் கொண்டு வந்திருக்கிறார்கள். எல்டன் ஜான் திருமணத்துக்கு சார்லஸ் இளவரசர் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டதாம்.

பாதாள ரயில் நிலைய வழியில் பாடியோ, இசைக்கருவிகளை வாசித்தோ தரையில் துண்டு விரித்துக் காசு வசூலிப்பதற்கு இருந்த தடை நீக்கப்பட்டு இருக்கிறது. இப்படி busking அனுமதிக்கப்பட்டாலும், ?ால்பர்ன் ஸ்டேஷனை விட்டு வெளிவரும்போது நாராசமான வயலின் சத்தம். பக்கத்தில் போக, கடமையே கண்ணாக ஒரு புத்தகத்தைப் பார்த்து வாசித்துப் பழகும் லித்துவேனிய இளம்பெண். அவள் கண்ணின் சோகம் காசு போட வைக்கிறது.

டிரபால்கர் சதுக்கத்தில் காலியாக இருந்த நாலாம் மூலையிலும் சிற்பம் வைத்துவிட்டார்கள். புத்தலைச் சிற்பமாக, கைகள், கால்கள் இல்லாத நக்னமான கர்ப்பிணிப் பெண்ணின் சிலை. ‘பிள்ளைத்தாச்சி அலிசன் லாப்பர்’ Allison Lapper Pregnant என்ற இந்தப் படைப்பின் சிற்பி மார்க் க்வின்.

ஸ்ட்ராண்டில் நடந்து வரும்போது, பிரதமர் டோனி பிளேரின் பத்து-டவுணிங் தெரு இல்லம் அமைதியாக உள்ளொடுங்கி வாசலில் கிறிஸ்துமஸ் மரத்தில் விளக்குகள் அலங்கரித்துத் தெரிகிறது. முன்பெல்லாம் அந்தப் பிரதேசத்தில் யாராவது தெருவில் நடத்தும் ஆர்ப்பாட்டம், ஊர்வலம், டோனி பிளேரை விமர்சித்து விளக்குக் கம்பத்தில் தட்டி வைத்துக் கட்டுதல் என்று பார்த்த காட்சிகள் இனி காணக் கிடைக்காது. அக்டோபர் மாதம் டவுணிங் தெருமுனையில் நின்று ஈராக் போரில் இறந்த பிரிட்டாஷ் படைவீரர்களின் பெயர்களை உரக்கப் படித்த மாயா அன்னீ ஈவான்ஸ் என்ற பெண்மணி கைது செய்யப்பட்டதில் தொடங்கி அரசியல் எதிர்ப்பை ஒடுக்க, போலீஸ் நடவடிக்கை தீவிரமாகி இருக்கிறது. பிளேரின் தொழிற்கட்சி மாநாட்டில் அவர் பேசும்போது நான்சென்ஸ் என்று பொறுக்க முடியாமல் சத்தம் போட்ட 82 வயது கட்சிப் பிரமுகர் தீவிரவாதத் தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பது பிளேரும் புஷ் போகும் சர்வாதிகாரப் பாதையில் அடியெடுத்து வைத்திருப்பதைச் சொல்கிறது.

புதுவருடம் பிறக்கும்போது பாதாள ரயில் ஊழியர் தொழிற்சங்கம் முழுநாள் வேலலநிறுத்தத்தை அறிவித்திருப்பது அங்கங்கே முணுமுணுப்பை வரவழைக்கிறது. தொழிற்சங்கத் தலைவர் பென் க்ரோ எகிப்தில் ஓய்வெடுத்துக் கொண்டபடி, ஸ்ட்ரைக் நிச்சயம் நடக்கும் என்று அறிக்கை விட்டிருப்பது அதிருப்தியைச் சம்பாதித்த நடவடிக்கை.

தேம்ஸ் நதியில் சாவகாசமாகப் படகில் போய், வெஸ்ட்மினிஸ்டர் ஸ்டேஷன் பக்கம் பாலக்கரையில் படியேற, பான்கேக் விற்கிற பெண்மணி வரவேற்கிறார். ‘உங்க ஊர் தோசை தான்பா’ என்றார் சுடச்சுட வார்த்துக் காகிதக் கூம்பில் அடைத்துக் கொடுத்தபடி. தோசை மகத்துவம் ஒரு வழியாக லண்டனை அடைந்ததற்கு சரவணபவன் லண்டன் கிளைகளும் காரணமாக இருக்கலாம்.

ஈஸ்ட் ஹாம் கடைவீதி முழுக்க முழுக்கத் தமிழும் புளித்த இட்லி மாவும் மணக்கிற இடமாக மாறியிருக்கிறது. புடவை கட்டிய ஜவுளிக்கடை பொம்மைகள் வணக்கம் சொல்லி வரவேற்கின்றன. சரவண பவன் கும்பலுக்குப் பயந்து மற்ற சாப்பாட்டு ஓட்டல்களில் படியேறினால், காலைச் சாப்பாடு ரெண்டரை பவுண்ட். நாலு இட்லி, தோசை, பொங்கல், வடை, காப்பி என்று இத்தனையும் அதில் அடக்கம்.

ஓட்டலுக்குள் சாப்பிட்டபடி பார்க்க, சன் டிவியில் தமிழ்ப்படம். கேபிள் டிவி கனெக்ஷனைப் புதுப்பிக்கிறவர்களுக்கு ஒரு எம்பி த்ரீ ப்ளேயர் இலவசம் என்று அறிவிப்பு படத்தோடு கூட ஓடிக்கொண்டே இருக்கிறது.

பெரிய சைஸ் பெட்டிக்கடைகளில் தமிழ் சினிமா பாட்டு காசெட், டிவிடி, விகடன், குமுதம், சினிக்கூத்து. தீராநதி விலை ஏறிவிட்டது. ஒண்ணரை பவுண்ட்.

செயிண்ட் பால் கதிட்ரல் பக்கம் அற்ப சங்கைக்கு ஒதுங்கக் கட்டணம் அரை பவுண்டாகி இருக்கிறது. நாற்பது ரூபாய் கொடுத்து ஒதுங்கிய மூத்திரப் புரை, உபயோகித்து முடித்ததும் காரைக் கழுவுவதுபோல் அதிவேகத்தில் தண்ணீர் அடித்து, டெட்டால் போட்டுச் சுத்தமாகி அடுத்த ஐம்பது காசுக்காக கதவு திறக்கிறது.

பிகடலி சர்க்கிள் கடைகலின் நியான் விளக்கு அட்டகாசங்கள் பண்டிகைக் கால வாடிக்கையாளர்களைக் குறைவாகவே ஈர்த்ததாகத் தெரிகிறது. நாடு முழுக்கவே கிறிஸ்துமஸ் விற்பனை கொஞ்சம் டல் தான். அமெரிக்க வால் மார்ட்டின் பிரிட்டாஷ் கிளையான ஆஸ்டா விற்பனைச் சரிவை இயல்பாக எடுத்துக் கொண்டது போல், நூறு இருநூறு வருட பிரிட்டாஷ் நிறுவனங்கள் எடுத்துக் கொள்ளாது என்பது நிச்சயம்.

ஹை ஸ்ட்ரீட் கடைகளுக்கும் மேட்டுக் குடியினரின் ஹாரட் சூப்பர் மார்க்கெட்டுக்கும் போக வேண்டாமல், இணையம் மூலம் கிறிஸ்துமஸ் பரிசுகள் நிறைய விற்பனையானதும் வியாபார வீழ்ச்சிக்கு ஒரு காரணம். ஆப்பிரிக்க கிராமங்களுக்கு ஆட்டுக் குட்டி வாங்கி அனுப்பும் பரிசு வியாபாரம் சக்கைப் போடு போட்டதாக செய்தி. ஏழெட்டு அடி பூமாலைகளை ஆர்டர் செய்தால் கஷ்டப்பட்டு உலகம் முழுவதும் தேடி டெலிவரி செய்ததாக ஒரு பரிசுப்பொருள் நிறுவனம் செய்தித்தாளில் பெருமை அடித்துக் கொண்டதை ?ால்பர்ன் ஸ்டேஷனில் ரயிலுக்குக் காத்திருந்தபோது படித்தேன். என்னத்துக்குக் கஷ்டப் படணும் ? சொல்லியிருந்தால், மாம்பலம் பாண்டி பஜார் பிளாட்பாரம் பூக்கடையில் ஒன்றை அடையாளம் காட்டியிருக்க மாட்டேனா ?

—-

Series Navigation

இரா.முருகன்

இரா.முருகன்