எதிர் குலக் கல்வி எனும் சிந்தனையின் அடியொற்றி…

This entry is part [part not set] of 34 in the series 20060113_Issue

மலர் மன்னன்


கோபால் ராஜாராம் ராஜாஜியின் கல்வித் திட்டம் குறித்து எழுதியுள்ள கட்டுரையை மிகவும் கவனமாகப் படித்தேன். எதிர்வினைகள் இவ்வாறு மறு பரிசீலனை, மறு சிந்தனைகளுக்கு

வாய்ப்பளிப்பனவாக இருந்தால் கடந்த கால நிகழ்வுகளை புரட்டிப் புரட்டிப் பார்த்து முடிவுகளுக்கு வருவது எளிதாகும். ஒருதலைப் பட்சமான பதிவுகளும் தவிர்க்கப்படும்.

ராஜாஜியின் கல்வித் திட்டம் குழந்தைகளுக்கு எண்ணையும், எழுத்தையும் அறிமுகம் செய்து அறிவுக்கண் திறந்துவிடும் ஆரம்பப் பள்ளிக்கான திட்டம்தான். கூடுதல் செலவு இன்றி, இருக்கும் வசதியைக் கொண்டே அதிக என்ணிக்கையிலான குழந்தைகளுக்கு அடிப்படைக் கல்வியை அளிப்பதுதான் அதன் நோக்கம். அரை நாள் பள்ளிக்கு வரும் பிள்ளைகள் மீதி அரை நாளில் தொழில் ஏதும் கற்றாக வேண்டும் என்பதாகத் தொடக்கத்தில் விதியேதும் அதில் இருக்கவில்லை. குழந்தைகள் மீதி நேரம் என்ன செய்வார்கள் எனக் கேள்வி எழுந்தபோது, அதற்கு யதார்த்தமாக ராஜாஜி சொன்னதுதான் அவர்கள் தம் பெற்றோருக்கு உதவியாக இருப்பதன் மூலம் சிறு பிராயத்திலேயே ஒரு தொழிலைக் கற்றுத் தேறலாம் என்பது. உடனே அவர் குலத் தொழில் செய்யச் சொல்கிறார் என்பதாகப் பிரசாரம் தொடங்கியது. ராஜாஜியின் கல்வித் திட்டம் ஆரம்பப் பள்ளிக்கானதுதான். எனவே ஆரம்பக் கல்விக்குப் பிறகும் படிப்பைத் தொடரும் பிள்ளைகள் டாக்டராகவோ, என்ஜினீராகவோ ஆவதற்கு அது தடங்கலாக இருக்கவில்லை. கையில் ஒரு தொழிற் பயிற்சியுடன், அது குலத் தொழிலாகவே இருப்பினும் அந்தப் பிள்ளைகள் மேற்படிப்பைத் தொடர்வதால் அவர்களுக்கு இழப்பு ஏதும் இல்லவும் இல்லை.

ராஜாஜியானவர் மலம் அள்ளும் தொழிலை ஜாதியின் அடிப்படையில் ஒரு பிரிவினர் மேற்கொள்ளும் நிலையினை அகற்ற வேண்டும் என்பதற்காகவே தமது திருச்செங்கோடு ஆசிரமத்தில், காந்திஜி சொன்ன பிரகாரம் அவரவர் அவரவரின் மலத்தைத் தாமே அப்புறப்படுத்தும் விதமாக மன்ணில் குழி தோண்டி, அதனுள் மலம் கழித்து அதன்பின் குழியை மணலால் மூடும் வழக்கத்தை நடைமுறைப் படுத்தியவராவார். இதன் மூலம் மலம் மண்ணுக்குள் மட்கி, நல்ல உரமாக மாறும் சாத்தியக் கூறும் உண்டு. இதனை எதுவும் வீணாகாது ஒன்றிற்கு ஒன்று பயன் தரும் வளையமாகத் தொடரும் இயற்கைச் சக்கரம் எனக் கொள்ளலாம். சீனாவில் இவ்வளையம் மனிதனின் கழிவு பன்றிக்கு உணவு, பன்றி மனிதனுக்கு உணவு என்பதாகப் பின்பற்றப்பட்டது. குழந்தைகள் வாந்தி தரையில் யெடுத்தால் அதனைச் சுத்தம் செய்ய வளர்ப்பு நாயைவிட்டு வாந்தியான உணவை உண்ணச் செய்யும் அருவருப்பான வழக்கமும் சீனர்களிடையே இருந்தது (பெர்ல் எஸ். பக்கின் நாவல்களில் இதற்கான குறிப்பைக் காணலாம்).

யோசிக்கும் வேளையில் நவீன கழிப்பிடம் தன்ணீரை விரையம் செய்வதாகவும் நிலத்தடி நீரைக் கெடுப்பதாகவும், ஒரு நல்ல உரத்தை வீணடிப்பதாகவும்தான் இருப்பது தெரியவரும். மேலும், மலம் அள்ளுகிற பிரிவு என ஒரு ஜாதி தொடக்கத்தில் ஹிந்து சமூகத்தில் இல்லை. அது முகமதியர் வரவால் உருவான பிரிவு. ஹிந்து சமூக ஆண்களும் பெண்களும், ஏழை பணக்காரர், மேல் ஜாதி, கீழ் ஜாதி என்ற பாகுபாடு ஏதுமின்றி, தமது சரீரத்தின் வாயிலாக வெளியேற்றும் உணவுச் சக்கையினை பூமிக்கே திருப்பிக் கொடுத்து அதன் சாரத்தைக் காப்பவர்களாகவே இருந்தனர். பிற்காலத்தில்தான் அதனை ஏதோ அருவருப்பான விஷயம் போலக் கற்பித்துக் கொண்டு உணவுச் சக்கையினை வீணடிக்கத் தொடங்கியதும் , மலம் அள்ளுவதற்கென ஒரு தனிப் பிரிவு கண்டதும் அந்நிய கலாசாரத் தாக்கத்தின் விளைவாக நம்மிடையே அறிமுகமாயின. உணவு வளையம் என்கிற ஓர் அருமையான ஏற்பாட்டை இவ்வாறாக ஒழித்துக்கட்டிவிட்டு அதற்காகப் பெருமையும் பட்டுக்கொள்கிறோம்.

கோ. ராஜாராம் தமது கட்டுரையில் முற்றிலும் புதுமையாக இன்னொரு விஷயமும் சொல்கிறார், எதிர்குலக் கல்வி என ஒன்றை ராஜாஜி சிபாரிசு செய்திருக்கலாம் என்பதாக. அப்படிச் செய்திருந்தால் ராஜாஜியின் கல்வித் திட்டத்திற்கு மேல் ஜாதியினரிடமிருந்தே மேலும் ஆக்ரோஷமான எதிர்ப்பு வந்திருக்கும் என்று அவர் கருதுவது சரிதான். தமது பிறப்பின் மகிமை குறித்து மேல் ஜாதியினருக்கு இருக்கும் பிரமை அபாரமானதுதான். திருநெல்வேலி சைவப் பிள்ளைமார், தஞ்சாவூர் பிராமணர், கேரளத்து நம்பூதிரிமார் ஆகியோரிடையே இதில் போட்டியே வைக்கலாம்! இதற்காக அவர்களை ஸ்ரீ ராமானுஜர், சுவாமி விவேகானந்தர், சுப்ரமண்ய பாரதி உள்ளிட்ட ஹிந்து சமயப் பெரியோர் பலர் கடுமையாகக் கண்டிக்கத் தவறியதில்லை. ஆனால் மேல் ஜாதியினரின் தாம் உயர்ந்தவர் என்ற சுயாபிமானத்தைச் சாக்கிட்டு ஹிந்து சமயத்தையும் ஹிந்து சமூகத்தையும் அவர்கள் தூற்றித் திரியவுமில்லை. ஹ

மேலும் காலத்திற்கு ஒவ்வாத, மனித நேயத்திற்கு முரணான வழக்கங்களை விட்டுத் தொலைக்க ஹிந்து சமூகம் தயாராகவே இருந்துவந்துள்ளது. சிறிது சிறிதாக, முனகிக் கொண்டேனும்! சமய நம்பிக்கையின் மீது பழி சுமத்தி எமது சம்பிரதாயத்தை, அது எவ்வளவுதான் காலத்திற்கு ஒவ்வாததாக இருப்பினும் அதனைக் கைவிடமாட்டோம் என அது முரண்டு பிடித்ததில்லை. கடந்த நூறு ஆண்டுகளில் ஹிந்து சட்டத்தில் சீர்திருத்தக் கண்ணோட்டத்துடன் ஏராளமான திருத்தங்களும் புதிய விதிகளும் இடம்பெற முடிந்துள்ளது. கிராமப் புறங்களில் இன்னமும் தீண்டாமையை யொட்டி வன்கொடுமைகளும் அக்கிரமங்களும் தொடரும் வெட்கக்கேடு இருந்துவருகிறது என்றாலும் துணிவு இருக்கும் பட்சத்தில் சட்டத்தின் துணையோடு அதனை எதிர்க்கவும் முடியும். ஜாதிப் பெயர் சொல்லித் திட்டியதாகப் புகார் செய்தாலேயே ஜாமீனில் வெளியே வரமுடியாதபடிக்கு புகாருக்கு உட்பட்டவரைச் சிறையில் தள்ளும் அளவுக்குப் புதிய சட்டத்தை இயற்றவும் அது அமுலில் இருக்கவும் ஹிந்து சமுதாயம் இணங்கியுள்ளது. சிலர் இந்தச் சட்டத்தைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, வேண்டாதவர் மீது பொய்ப் புகார் கொடுத்துவிடும் நிலை இருப்பினும், இச்சட்டம் தொடர்ந்து நடைமுறையில் இருந்துகொண்டுதான் வருகிறது; காலங் காலமாக ஒடுக்கப்பட்டும் தொடர்ந்து சில பகுதிகளில் துன்புறுத்தப்பட்டும் வருபவர்களுக்குப் பாதுகாப்பு அவசியம்தான், அவர்களது புகாரில் உண்மை இருக்கும் என்ற சந்தேகத்தின் பலன் அவர்களுக்குத் தரப்பட வேண்டும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில்!

ஆனால் தலித்துகளை வேறுபடுத்திப் பார்க்கும் வழக்கம் முகமதிய சமூகத்திலும் இருப்பதை குணசேகரனின் சுயசரிதைப் படைப்பான ‘வடு ‘ வும் கிறிஸ்துவ சமூகத்திலும் அது கடைப்பிடிக்கப்படுவதை ஆ. சுப்பிரமணியன் எழுதிய ‘கிறிஸ்துவத்தில் சாதியம் ‘ என்ற ஆய்வு நூலும் உறுதி செய்கின்றன (இரண்டும் காலச் சுவடு வெளியீடுகள்). எனவே தலித்துகளுக்கு இழைக்கப்படும் கொடுமைக்காக ஹிந்து சமூகத்தை மட்டும் குறை கூறுவது பொருத்தமாகப் படவில்லை.

அது எப்படியாயினும், ராஜாராம் சொல்வதுபோல எதிர்குலக் கல்வித் திட்ட யோசனை தெரிவிக்கப்பட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்பதைச் சிந்தித்துப் பார்க்கவே மிகவும் சுவாரசியமாகத்தான் உள்ளது. ஆனால் அடிப்படையில் பாதி நேரப் பள்ளி போக மீதி நேரத்தில் பிள்ளைகள் தம் பெற்றோரின் தொழிலைக் கற்கவேண்டும் என்பதாக ராஜாஜியின் திட்டத்தில் ஷரத்து ஏதும் இல்லை, அது யதார்த்தமாக ஒரு சமாதானம் போல் பின்னர் சொல்லப்பட்டதே யன்றி ஒரு விதியாக இடம்பெற்றதல்ல என்பதால் இப்படியொரு கேள்வி எழுவதற்கே சாத்தியமில்லாது போகிறது. ஒருவேளை எதிர்குலக் கல்வி கட்டாயப்

படுத்தப்பட்டிருந்தால், எப்படி ஜாதிப்பெயர் சொல்லித் திட்டியதாகப் புகார் தெரிவித்தாலேயே ஜாமீனில் வெளியே வரமுடியாத கைது என்ற சட்டம் தொடர்வதுபோலவே சிறு சலசலப்பிற்குப்பின் அதுவும் ஏற்கப்பட்டிருக்கக் கூடும்! எப்படிச் சொல்கிறேன் என்றால், பல ஆண்டுகளுக்கு முன் நான் மத்தியப் பிரதேசம் கட்னியில் ஓர் அசைவ உணவு விடுதியில் கோழியை அறுத்து இறைச்சியைச் சுத்தம் செய்யும் வேலையில் அமர்த்தப்பட்டிருந்த தமிழ் நாட்டு பிராமணச் சிறுவன் ஒருவனைச் சந்தித்தேன்! மேல் ஜாதி, கீழ் ஜாதி உணர்வுகளையும் மனத்தடைகளையும் தூக்கி மூலையில் எறியும் சக்தி வயிற்றுப்பாட்டு நிர்ப்பந்தங்களுக்கு உண்டு என்பதே அச் சந்திப்பின் மூலம் எனக்குத் தெரிந்த உண்மை. இதன் அடிப்படையில் யோசிக்கும் வேளையில் எதிர்குலக் கல்வி தொடக்கத்தில் எதிர்ப்புகளுக்கு உள்ளானாலும் பிறகு முணுமுணுப்புகளுடன் ஏற்கப்பட்டிருக்கலாம். மேல்ஜாதி வர்க்கமானது வறட்டு ஜம்பம் அடித்துக்கொள்ளுமே யன்றி வயிற்றுப் பிழைப்பு என்று வருகிறபோது பிரத்தியட்ச நிலைமைக்குத் தன்னைச் சமரசப்படுத்திக்கொண்டுவிடும்! எனக்குத் தெரிந்து பல பிராமணர்கள் வாணியம்பாடி, ஆம்பூர், சென்னை பெரம்பூர் ஆகிய இடங்களில் வயிற்றைக் குமட்டும் தோல் பதனிடுகிற தொழிலைச் செய்துகொண்டிருக்கிறார்கள். கட்டாய எதிர்குலக் கல்வி என எவ்வித நிர்ப்பந்தத்திற்கும் ஆளாக நேராமலேயே!

மயானத்தில் பிணங்களுக்கு எரியூட்டுவதற்கு மேல்ஜாதியினர் வரக்கூடுமா என்பது குறித்து ஏதும் அறுதியிட்டுக் கூறமுடியாது என்றாலும் அதற்குச் சமதையான சடங்குகளைச் செய்யும் பிராமணர் உள்ளனர், சவுண்டி என்பதாக! மேலும் புராணங்களில் மேல்ஜாதியினனான ஹரிச் சந்திரன் என்கிற க்ஷத்திரியன் வெட்டியான் தொழில் செய்தமைக்குக் குறிப்பு உள்ளது, அது எவ்விதமான கட்டாயத்தினாலாயினும்!

இறுதியாக இன்னொரு சொந்த அனுபவத்தையும் பதிவு செய்துவிடுகிறேன்: நான் மேற்கு வங்கத்தில் பல ஆண்டுகள் இருந்தவன், பல ஆண்டுகளுக்கு முன். அங்கு பள்ளிக்

கூடங்களில் ஒர் அணிப் பிள்ளைகள் காலையிலும் மற்றோர் அணிப் பிள்ளைகள் மதியமும் கல்விகற்கச் செல்வதைக் கண்டேன். ராஜாஜி அறிமுகம் செய்த திட்டத்திற்கும் இதற்கும் வேறுபாடு இல்லை. பெரும்பாலான பிள்ளைகள் வகுப்பு இல்லாத அரை நாளில் ஊர்சுற்றுவதும், வெட்டிப்போது போக்குவதுமாக இருப்பதையும் சில பிள்ளைகள் வீட்டுக்கு வேண்டிய குற்றேவல்களைச் செய்து உதவுவதுமாக இருப்பதைப் பார்த்தேன்.

மலம் அள்ளுதல் போலன்றி வேறு குலத் தொழில் ஏதும் அப்பிள்ளைகள் பழகியிருந்தால் அது குடும்பத்திற்கு உதவிகரமாகவே இருந்திருக்கும். பிள்ளைகள் மேற்படிப்புக்குச் செல்ல அது தடையாக இருந்திருக்காது என்பதோடு, மேற்படிப்புக்குத் தேவையான செலவுக்கு அது உதவியுமிருக்கலாம்!

—-

Series Navigation

மலர் மன்னன்

மலர் மன்னன்