தத்துவார்த்தப் போர்கள்

This entry is part [part not set] of 34 in the series 20051209_Issue

இந்திரா பார்த்தசாரதி


இந்தியத் தத்துவ வரலாற்றில் ஸ்தாபனத்தை( Establishment) எதிர்த்து தொடர்ந்து எதிர்க் கருத்துக்கள் முன் வைக்கப்பட்டு வந்திருக்கின்றன.

‘ஸ்தாபனம் ‘ என்றால் என்ன ?

காலந்தோறும் மனிதச் சிந்தனைப் பரிணாமத்துக்கேற்ப நம் வாழ்க்கையைப் பற்றிய மதிப்பீடுகளும்(Value system) தொடர்ந்து மறு பரிசீலனைக்கு உட்பட்டாக வேண்டும். அவ்வாறு மாறாமல், எந்தச் சூழ்நிலையில், எந்த வரலாற்று நிர்பந்தத்துக்கிசைய உருவாகியனவோ, அவ்வளவிலேயே, அம்மதிப்பீடுகள் உறைந்து இறுகிவிடுகின்றன என்றால், அந்த மரபு எதேச்சதிகாரத்தையே ‘ஸ்தாபனம் ‘ என்கிறோம்.

‘ஸ்தாபனத்தை ‘ எதிர்த்து, இந்தியச் சிந்தனை வரலாற்றில் கொள்கைப் போர்கள் நிகழ்ந்து வந்திருக்கின்றன.

இந்திய ‘லோகாயதம் ‘ (Materialism ) பிரகஸ்பதி லெளக்கிய என்பவர் காலத்திலிருந்து தொடங்குகிறது.

இவர் தத்துவார்த்த ரீதியாக, வைதிக மதத்தை எதிர்த்தார். இவருடைய தொடக்கக் கால எதிர்ப்புக் கணைகளையே அடிக்கற்களாகக் கொண்டு, பிற்காலத்திய லோகாயவாதமும், சார்வாகக் கோட்பாடுகளும் உருவாகியன.

பிரா(ஹ்)மண நெறிச் சடங்குகள், இறைவன் பற்றிய கருத்து, பிறவித் தொடர்ச்சி, சரீரத்தினின்றும் வேறுபட்டதாக, ‘ஆத்மா ‘ என்று ஒன்று இருப்பதாகக் கொள்ளும் நம்பிக்கை ஆகிய அனைத்தும் கேள்விக்குரியனவாகின.

பிரகஸ்பதிக் கோட்பாடுகளைப் பின்பற்றியவர்கள் ஒருகாலத்தில் மிகவும் பரவலாக இருந்திருக்க வேண்டுமென்று தெரிகிறது. இதற்குச் சான்று தைத்ரீய பிரா(ஹ்)மணா தருகிறது.

‘ஒரு சமயம் பிரகஸ்பதி, காயத்திரியின் தலையில் ஓங்கி அடித்தார். தலையும், மூளையும் சுக்கு நூறாகச் சிதறின. ஆனால், காயத்திரி, அமரத்வம் வாய்ந்தவள்.அவள் மூளையின் ஒவ்வொரு சிறு பகுதியும் அழிவுறாமல் நித்தியமாயிருந்தது. ‘

இச்செய்தி எதைக் குறிக்கின்றது ?

பிரகஸ்பதி ‘ எதிர்ப்புணர்வின் உருவகம் ‘. காயத்திரி வைதிக மதம், அதாவது, ஸ்தாபனம். ஸ்தாபனத்தை அழிக்க முடியாது. புதிய கோலம் பூண்டு ஸ்தாபனமாகவே இருக்கும், புத்தரை விஷ்ணுவின் அவதாரமாக்கியது போல. மேல்கோட்டை சம்பத்குமார் கோயிலில், ராமானூஜர் செய்வித்த ஹரிஜனப் பிரவேசம், நாளாவட்டத்தில் ஒரு சமயச் சடங்காக மாறி, ஒடுக்கப்பட்டவர்கள் ஆண்டுக்கு மூன்று நாட்கள் மட்டும், கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டது போல.

மனுவுக்கும் பிரகஸ்பதிக்கும் நீண்ட சம்வாதம் நிகழ்ந்ததாக மஹாபாரதம் கூறுகிறது.மனுவின் சனாதனக் கொள்கைகளை பிரகஸ்பதி எதிர்த்துப் பேச, மனு அவரைத் தம் வழிக்குக் கொண்டு வந்ததாகக் கூறும் சம்பவம் இது. அதாவது, இது ஸ்தாபனத்தின் வெற்றி என்ற பொருள்.

விஷ்ணு புராணம், இவ்வெதிர்ப்பை வேறு வகையாகக் கூறுகிறது. அந்தக்காலத்தில் அசுரர்கள் வேத நெறியை ஏற்றுக்கொண்டு கடுமையாகத் தவம் செய்யத் தொடங் கினார்கள். இதனால், இந்திரன் அச்சம் அடைந்தான். தன் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்ற பயம். ஆகவே, அவன் வேண்டுகோளின்படி, மாயா மோஹன் சிருஷ்டிக்கப்பட்டு, அவன் அசுரர்களுக்கு பிரகஸ்பதியின் போதனைகளைக் கற்பித்தான். இதன் காரணமாக, அசுரர்களுக்கு, எது நல்லது, எது கெட்டது என்று தெரியாமல் போய்விட்டது. அவர்கள் நெறி பிறழ்ந்தார்கள். இந்திரனுக்கு அவர்களை அழிப்பதென்பது எளிதாயிற்று.

பிரகஸ்பதி, சுக்ராச்சாரியார் உருவத்தில் அசுர குருவாகி, அவர்களுக்கு தீய உபதேசங்களை நல்லவை என்று கூறிக் கற்பித்ததை மைத்ராயணி உபநிஷதம் கூறுகின்றது.

ஸ்தாபன எதிரியான பிரகஸ்பதி லெளக்கியர் ஒர் ஏமாற்றுக்காரர் என்பது கருத்து.

பைபிளில் வரும் சாத்தானைப் பற்றிய கதைகளுக்கும் இவைகளுக்குமிடையே பல ஒற்றுமைகளைக் காணமுடிகிறது. இறையாண்மயின் எதேச்சதிகாரத்தை எதிர்த்து, மனிதனுக்குத் தேர்ந்தெடுக்கும் உரிமையைக் கொடுத்த சாத்தான் தீய சக்தியாகச் சித்திரிக்கப்படுகிறான்.நெருப்பை(பகுத்தறிவு) உலகிற்குக் கொண்டுவந்த ப்ரொமிதீயஸ் தண்டிக்கப்பட்டான் என்று கிரேக்கப் புராணங்கள் கூறுகின்றன. ஆகவே, ஸ்தாபனத்துக்கும் அதை எதிர்ப்பவர்களுக்குமிடையே நிகழும் போராட்டங்கள், தொன்மைக் காலத்தவை.

‘சார்வாகம் ‘ என்றால் ‘இன்பத்தைத் தரும் பேச்சு ‘. தனி மனிதக் கருத்துச் சுதந்திரத்தை அடிப்படையாகக் கொண்ட கோட்பாடு.. இவர்களைப் பற்றி விஷ்ணு புராணம் கூறுகிறது: ‘இவர்கள் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று இருப்பவர்கள். இவர்களுக்கு நன்மை, தீது என்று எதுவும் கிடையாது. நிகழ்வன அனைத்தும் எதேச்சை என்பது இவர்கள் கருத்து. இவர்கள் கடவுளை மறுப்பவர்கள். அவனவன் தனக்கு விதித்துக் கொள்வதே தர்மம் என்று இவர்கள் கூறினார்கள் ‘.

ஸ்தாபனம், சார்வாகக் கொள்கைகளை நிறுவியவரையும், ‘சார்வாக ரிஷி ‘ என்று அழைக்கத் தொடங்கியதுதான் irony!

தனிமனிதனின் கருத்தை அரியாசனம் ஏற்றியதென்றளவில், சார்வாகம் வரவேற்கத்தக்கதாக இருந்தது. ஆனால், சமுதாயம் தடம் புரளாமலிருக்க வேண்டுமானால், தனிமனிதச் சுதந்திரத்தின் வரம்பைப் பற்றிய பிரக்ஞை தனிமனிதனுக்கு இருத்தல் வேண்டும். இன்பத்தைத் தரும் பேச்சு, கவர்ச்சிகரமான போதனைகளாக மாறி, (நாத்திகப் பிரச்சாரமும் திரைப்படக் கவர்ச்சியும் அரசியலும் தமிழ்நாட்டில் இணைந்தனபோல) சிற்றின்பங்களை நுகர்வதில் சமூகத்தடை எதுவும் இருக்கக்கூடாது எனும்போதுதான்,பிரச்னைகள் ஏற்படுகின்றன. சார்வாகத்தின் வீழ்ச்சிக்கும் இதுதான் காரணம்.

ஆகவே, சம்ஸ்கிருதம் என்றதுமே, அதை ஹிந்து சனாதன மதத்தோடு மட்டும் இணைத்துப் பார்ப்பது கொச்சைத்தனமான அணுகுமுறை. ஸ்தாபனாக இறுகத் தொடங்கிய எந்தக் கருத்துத் தளத்தையும் எதிர்த்த கோட்பாடுகள் யாவும் சம்ஸ்கிருத மொழியில் எழுதப்பட்டிருக்கின்றன. சம்ஸ்கிருத மோழியில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்த காரணத்தினால்தான், ஜாபாலி முனிவரிலிருந்து அம்பேத்கார் வரை எல்லா அறிஞர்களாலும் ஸ்தாபனத்தை எதிர்க்க முடிந்திருக்கிறது.

சம்ஸ்கிருதமும் தமிழும் இந்தியாவின் ஆதி மொழிகள். இருப்பினும், சம்ஸ்கிருதத்தில் இருப்பன போன்று, ஸ்தாபன எதிர்ப்பைக் குறிக்கும், தத்துவக் கோட்பாட்டுப் போராட்டாங்கள், தமிழ்மொழி தொடக்கக் கால வரலாற்றில் இருந்தன என்பதற்குச் சான்று ஏதுமில்லை..

தமிழ் மொழியில் இல்லை என்றால் தமிழில் தத்துவ விவாத மரபு என்று எதுவும் கிடையாதா ?

சம்ஸ்கிருதம் ஆரியர் மொழி, தமிழ் திராவிடர் மொழி என்றும் ஐரோப்பியப் பாதிரிகள் சொன்னதை நாம் ஒரு நூற்றாண்டாக ஏற்றுக் கொண்டதின் விளைவாகத்தான் நமக்கு இந்தக் கருத்துக் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.

சம்ஸ்கிருதம் ஒரு குறிப்பிட்ட இனத்துக்கு மட்டும் சொந்தமான மொழி என்று சொல்ல இயலாது. அது எந்தக் காலத்திலும் ஒரு குறிப்பிட்ட இனம் பேசிய மொழியாகவும் இருந்ததில்லை. அறிஞர்களுக்கிடையே கருத்துப் பரிமாற்றத்துக்காக ‘செய்யப்பட்ட மொழி ‘ சம்ஸ்கிருதம். நுண்மையான (abstract) கருத்துக்களைச் சொல்வதற்கான ஓர் இயல்பான வசதி இம்மொழியில் ஏற்பட்டுவிட்ட காரணத்தினால், தத்துவ ரீதியான விவாதங்கள் இம்மொழியில் அகில இந்திய ரீதியாக அக்காலத்தில் நிகழ்ந்து வந்திருக்கின்றன. ஆகவே ஸ்தாபனத்துக்கு எதிராகக் கோட்பாடுகளை முன் வைத்தவர்களில் தமிழர் யாருமில்லை என்று எப்படி சொல்லமுடியும் ? தமிழ் மொழியில் இல்லை என்பதால் தமிழர் யாருமில்லை என்று சொல்லமுடியாது.

பிற்காலத்திய வரலாற்றினின்றும் இதை நம்மால் உறுதி செய்யமுடியும். கேரளாவில் பிறந்த சங்கரரும், தமிழகத்தில் தோன்றிய ராமாநுஜரும், கர்நாடகத்தைச் சார்ந்த மத்துவரும், தங்கள் தங்கள் கோட்பாட்டு விவாதங்களை சம்ஸ்கிருதத்தில் ஏன் எழுத வேண்டும் ? தங்கள் கருத்துக்கள் அறிஞர்களைப் போய்ச் சேர்வதற்கான ஊடகப் பொதுமொழி சம்ஸ்கிருதம் என்பதால்தானே ? இக்காலத்தில், அகில இந்திய நிலையில், அறிஞர்களுக்கிடையே ஆங்கிலந்தானே கருத்துப் பரிமாற்றப் பொதுமொழி ? இந்திய கலாசார மரபில், கருத்துகளுக்கும், படைப்புக்களுக்குந்தான் முக்கியத்துவம் இருந்ததே தவிர, அவற்றின் ஆசிரியர் யாரென்பதைப் பற்றி அக்கறை இருந்ததாகத் தெரியவில்லை. உபநிஷதங்களின் ஆசிரியர்கள் யார் சொல்லமுடியுமா ? ஆசிரியர் தெரியாத நூல்களுக்கெல்லாம் வியாஸர், அகத்தியர் பெயரை வழங்கிவிட்டார்கள் என்று நினைக்க வேண்டியிருக்கிறது.

புராணங்களில்(பாகவதம் உட்பட) பெரும்பான்மையானவை தென்நாட்டில்தான் எழுதப்பட்டன என்று அறிஞர்கள் கருதுகிறார்கள். பாகவதச் செய்திகள் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் வருவன போல், வடநாட்டில் அக்காலக்கட்டத்தில் வழங்கிய வட்டார மொழிகளில் இல்லை என்பது வரலாற்றுண்மை. ஆகவே, இன வழியில், சம்ஸ்கிருதத்தை ஆரியரோடு இணைத்தும், சனாதன மதத்தின் குரலாகமட்டும், அதைக் காண்பது தவறு.

பக்தி இயக்கம் பரவுவதற்குக் காரணமான புராண இலக்கியங்கள் ஒருவகையில் பார்க்கப்போனால், ஸ்தாபனத்தை ஜனரஞ்சகமான வழியில் எதிர்த்தன என்றுதான் சொல்லவேண்டும். உபநிஷத ‘ தனிப்பட்டவனின் மோட்சம் ‘ (individual salvation) என்பதை எதிர்த்து, சமூகத்தின் நல்வாழ்வு என்று புதியதொரு கருத்தை வற்புறுத்துவத்துவதற்காக, சுவாரஸ்யமான பல கதைகளை வழங்கின.. ‘நான் அதுவாக ஆவதற்கு ‘ ( ‘தத் வ மஸி ‘ )பதிலாக, ‘அதுவே ‘ இவ்வுலகில், மனிதனாக அவதாரம் எடுத்து, மனிதனோடு உடன் வாழ்ந்து, ‘இந்திர லோகம் ஆளும் அச்சுவைப் பெறினும் வேண்டேன் ‘ என்று மனிதனைச் சொல்ல வைத்தது! தத்துவார்த்தப் போர்களைக் காட்டிலும், கதை சொல்லி மக்களை ஈர்ப்பது எளிதாக இருந்ததால்தான், பக்தி இயக்கம் மக்கள் வழங்கும் மொழியைச் சாதனமாகக் கொண்டு வெற்றி அடைந்தது.

அதனால்தான், அத்வைதத்துடன் கோட்பாட்டு விவாதங்களை சம்ஸ்கிருத மொழியில் நிகழ்த்திய ராமானுஜர், தம் கருத்துக்கள் சாதாரண மக்களையும் போய்ச் சேர வேண்டுமென்பதற்காக, தமிழில் எழுதப்பட்ட ஆழ்வார் பாடல்களைத் தம் பிரசாரத்தின் ஒரு முக்கியப் பகுதியாகக் கொண்டார். சம்ஸ்கிருதம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் தேர்ச்சி இருந்தாலொழிய ஒருவரை வைணவ அறிஞர் என்று கூற இயலாது. இதனால்தான், வைணவ அறிஞர்களுக்கு, ‘ உபய வேதாந்திகள் ‘ என்ற பெயர் வந்தது. ( ‘உபய ‘ என்றால் ‘இரண்டு ‘ ). ராமாநுஜ இயக்கம் அவர் காலத்திய ஸ்தாபனத்துடன் (Establishment) நடத்தப்பட்ட தத்துவார்த்தப் போர் என்று கூறலாம்.

இவ்வாறு தொடர்ந்து நிகழும் அறிவு சார்ந்த விவாதங்கள்தாம், ஒவ்வொரு இனத்துக்கும் அதன் கலாசார அடையாளத்தைத் தந்து, மனித வாழ்க்கையைச் சுவாரஸ்யமாக்குகின்றன..


ps0710@yahoo.com

Series Navigation

இந்திரா பார்த்தசாரதி.

இந்திரா பார்த்தசாரதி.