மழை

This entry is part of 33 in the series 20051125_Issue

டி.ஜி.கே. கோவிந்தராஜன்


கடந்த மாதம் வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்த ஒரு நாளில் தான் , நான் பணி நிமித்தம் நியூயார்க நகருக்கு பயணமானேன்..

படப்பிடிப்பு தொடர்ந்து ( வேட்டையாடு விளையாடு படத்தில் உதவியாளராக பணி ) நடந்ததால் தமிழக மழை பற்றிய செய்தி காது வழி விஷயமாச்சு….

23ம் தேதி தமிழகத்தில் மழை தொடரும் ஒரு நாளில் தான் மீண்டும் கால் வைத்தேன்…

சிதிலமடைந்த தார்ச்சாலைகள், செம்மலர் பூத்தாற் போல் வண்ணமுடன் குண்டு குழிகள், தேங்கிய நீர்கள், உடைந்த மரக்கிளைகள் என காட்சிகள்.

நசநசப்பும், சகதியுமாக ஊரில் பல பகுதிகள்.

மழை இந்த மாதிரி பெய்ததில்லை… பலத்த சேதம்… நாசம்… எனப் பேச்சுகள்.

எப்போது முடியும் என்று கட்டியம் கூறும் தின, வார பேப்பர், தொலைக்காட்சி செய்திகள்…

மழை சார் அது தான் கூட்டம் இல்லை… என்பது, ஹோட்டல், திரை மற்றும் அனைத்து வர்த்தக இடங்களின் விஷயமானது…

கண்மாய் உடைந்தால்…. பூண்டி ஏரி திறந்து விட்டதால், காவிரி, வைகை, தாமிரபரணி கரை புரண்டு ஊர் புகுந்தால் , பயிரிகள் தண்ணீரில் மூழ்கி நாசமடைந்ததால்.. என அழிவைப் பற்றியே பேச்சு…

புதனன்று என் குழந்தையின் பள்ளியில் இயற்கை பேரழிவு பற்றிய குழந்தைகள் பங்கேற்ற கண்காட்சி…

புயல், வெள்ளம், பூகம்பம் பற்றிய மாணவ மணிகள் அழிவு ஏன் .. எப்படி காப்பாற்றிக் கொள்வது என படம் மற்றும் மாதிரி வடிவங்களால் ஒப்பித்து விளக்கினார்கள்..

ஆம், அது தான் வளர்ந்த மனிதன் இயற்கை பற்றிய நம்பிக்கையின்மையின் தனது மனநிலையை குழந்தகளிடம் விதைக்கும் போக்கை வெளிச்சம் போட்டுக் காட்டியது….

இதற்கு முந்தி இருபது ஆண்டுகள் என்றும் ஐம்பது ஆண்டுகள் முன் தான் இப்படி மழை நாசம் என்று ஜோதிடம் கூறியது செய்திகள்…

எனக்குத் தோன்றியது… ஐம்பது ஆண்டுகளாய் வறண்ட பூமியில் என்ன செய்தார்கள் மனிதர்கள்.

கண்மாய், ஏரி , குளம், ஆறு இவற்றை தயார் நிலையில் மழை நீர் சேகரிப்புக்கு ஏற்பாடு செய்திருக்கலாமே…

ஆற்றில் முள்செடி வளரவிட்டு கழிப்பிட மறைவாய் கொண்டது மனிதன் தானே..

கண்மாய் அசூர வளர்ச்சி மரம் கண்டு அது நீர் ஆவியாகாமல் காக்க என்று சொல்லி அவை வளர நீர் உறிஞ்ச ஏலம் விட்டது நாம் தானே..

கெண்டையும், கெழுத்தியும் வில் எய்தி பிடித்த மனிதர்கள் சகதி தண்ணியில் தலைப்பிரட்டையை காலால் இடறியது நமது குணம் தானே…. ? ? ?

நாட்டிய நிகழ்ச்சிக்கு மேடையின் வலிவை சரிபார்ப்பவன், கிரிக்கெட் மைதானத்தை கோடிகள் கொட்டி தடவி தடவி தயார் செய்யும் நாம் …. மழை நீர் சேகரிக்க குளம் , ஏரி, ஆற்றை தயார்படுத்த என் செய்தோம்… ?

பின் ஏதோ, மழை நாசம் செய்ய வந்தது போல் செய்திகளை பறிமாறிக் கொள்கிறோம்.. ?

ஊர் புகுந்து குலம் அழித்த சுனாமியை , நிலம் பிளந்து கட்டிடங்கள் முழுங்கிய பூகம்பத்தை திட்டியவன் இதோ, மழையை ‘ இன்று இவ்வளவு நாசம் ‘ எனும் தலைப்புச் செய்தியுடன் வசவுபாடிக்கொண்டு..

என்ன வேண்டும் மனிதா.. ? மழையால் எத்துனை நாசம் செய்ய முடியும் என்ற புள்ளிவிவரம் வேண்டுமா… ?

அட மூடா… ?

இவ்வளவு அள்ளித் தரும் வானத்து வரவை பயன்படா நீராக மாறுவது நம்மால் அன்றோ..

அனைத்து நாசமும் நம்மால் தான்..

மழையே…. இருகரம் நீட்டி அழைக்கிறேன்.. வா…. பெய்யென பெய்வது தாண்டி.. இவர்கள் பொய்யென வாழ்பவர்கள் என உணர்த்தி நடனமாடு…

கணுக்கால் மழை நீரில் காகிதக் கப்பல் விட்ட ரசிகர்கள் தொலைந்து போய் , கழுத்தளவு மழைக்கு குளம், கண்மாய் என வசிப்பிடம் தந்திருந்த சமூகமும் போய், கிடைத்த நிலத்திலெல்லாம் கான்கிரீட் வனம் அமைத்து மழையை தொந்தரவாய் டிவி முன் அமர்ந்து விமர்சிக்கும் மனித குலம் என்னாகும் … ? யோசிப்போம்….

—-

gocha2003@yahoo.com

Series Navigation