போட்லாட்ச் (பெரு விருந்து) (potlatch) (அந்தஸ்துக்கான போட்டி) – 2

This entry is part of 33 in the series 20051125_Issue

மார்வின் ஹாரிஸ்


(Cows, pigs wars and witches புத்தகத்தின் 5ஆம் அத்தியாயம் – இரண்டாம் பகுதி)

அதிக உற்பத்தி இடங்களிலிருந்து அந்த அதிர்ஷ்டமில்லாத இடங்களுக்கு உணவு மற்றும் விலையுயர்ந்த பொருட்களை கொடுக்கும் ஒரு வழ்முறையாக இந்த போட்லாட்ச் ஒரு பழங்குடி சமூகத்தில் வேலை செய்து வந்திருக்கிறது என்பது விளங்கும். இன்னும் அழுத்தமாக எழுதுகிறேன். இப்படிப்பட்ட போட்டி அழுத்தத்தின் காரணமாகவே, இப்படிப்பட்ட பண்ட வினியோகம் சாத்தியமாக ஆகியிருக்கிறது. மீன்கள் தொகை, காட்டுப்பழங்கள், காய்கறி அறுவடை ஆகியவைகளின் நிச்சயமற்ற நிலையின் காரணமாக, இப்படிப்பட்ட கிராமங்களுக்கு இடையேயான போட்லாட்ச் மொத்த சமூகத்தையும் கணக்கெடுத்துப் பார்க்கும்போது சிறப்பானதொரு முறை. சென்றவருட விருந்து கொடுத்தவர்கள் இந்த வருட விருந்தாளிகளாக ஆகிவிடுகிறார்கள். போட்லாட்சின் படி, யாரிடம் இருக்கிறதோ அவர்கள் கொடுக்கிறார்கள். யாரிடம் இல்லையோ அவர்கள் பெறுகிறார்கள். இல்லாதவர்கள் நன்றாக சாப்பிட வேண்டுமெனில், அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம், விருந்து கொடுப்பவர்களே சிறந்த மனிதர்கள் என்று சொல்ல வேண்டியது மட்டுமே.

போட்லாட்சின் இப்படிப்பட்ட ஒரு நடைமுறை அடிப்படைனெப்படி ரூத் பெனடிக்டின் பார்வையிலிருந்து தப்பியது ? பசிபிக் வடமேற்கில் இருந்த பழங்குடியினர் ருஷ்யர்கள் ஆங்கிலேயர்கள் கனடியர்கள் மற்றும் இதர அமெரிக்க வியாபாரிகளுடன் வியாபார உறவு கொண்ட பின்னரே மானுடவியலாளர்கள் இந்த பழங்குடியினரை ஆராயப்புகுந்தார்கள். பழங்குடியினர் வந்தேறிய வியாபாரிகளுடன் கொண்ட உறவின் பயனாக பழங்குடியினர் சமூகத்தில் இருந்த பெரும்பாலோனோர் அம்மை மற்றும் இதர ஐரோப்பிய வியாதிகளால் இறந்தார்கள். உதாரணமாக, க்வாக்யுஇடில் சமூகத்தில் 1836இல் 23000 பேர்களாக இருந்தது 1886இல் வெறும் 2000 ஆக குறைந்து போனது. மக்கள்தொகை குறைப்பு இயற்கையாக மனித சக்திக்கான போட்டியை தீவிரப்படுத்தியது. அதே நேரத்தில் ஐரோப்பியர்கள் கொடுத்த கூலிகள் போட்லாட்ச்சின் உள்ளே ஏராளமான சொத்துக்களை குவித்தது. விலங்கு தோல்களுக்கு ஈடாக ஆயிரக்கணக்கான போர்வைகளை ஹட்சன் பே கம்பெனியிடமிருந்து பெற்றார்கள். போட்லாட்சில் உணவுக்கு இருந்த இடத்தை இந்த போர்வைகள் பிடித்தன. வெகுவாக குறைந்து போன மக்கள்தொகை காரணமாக, இவர்களுக்கு தேவையான போர்வைகளை விட அதிகமான போர்வைகளை கையில் வைத்திருந்தது. ஆயினும் இன்னும் அதிகமான மக்களை தங்கள் கிராமத்துக்குள் ஈர்க்கவேண்டிய தேவை மக்கள்தொஇகை குறைந்து போன கிராமங்களுக்கு இருந்தது. ஆகவே, போர்வைகளை அழிப்பதன் மூலம் தங்களது சொத்துக்களை விளம்பரப்படுத்த முடியும் அதன் மூலம் காலியான

கிராமங்களுக்குள் ஆட்களை கொண்டுவந்து நிரப்பமுடியும் என்ற வீண் நம்பிக்கை காரணமாகவே இந்த போர்வை எரிப்புகள் நடத்தப்பட்டன. ஆனால், இவை நவீன அரசியல் மற்றும் பொருளாதார நிலைகளை கணக்கில் எடுத்துக்கொள்ள முயலும் ஒரு அழிகின்ற கலாச்சாரத்தின் நடைமுறைகளே. இவைகளுக்கும் புராதன போட்லாட்சுகளுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை.

போட்டி விருந்து கொடுத்தலில் பங்கெடுப்பவர்கள் சிந்தித்த, நடைமுறைப்படுத்திய கற்பனை செய்த போட்டி விருந்து கொடுத்தல் என்பது, சமூக காரணங்களுக்காகவும், வாய்ப்புகளுக்காகவும் உருவான மாற்றம் என்று போட்டி விருந்துகொடுத்தலை பார்ப்பதிலிருந்து வேறுபட்டது.

ஒரு பெரிய மனிதரின் அந்தஸ்து தேடும் பசியின் காரணமாக தோன்றும் போட்டி விருந்து என்பது அதில் பங்கெடுப்பவர்களின் பார்வையிலிருந்து உருவாவது. போட்டி விருந்து கொடுப்பது என்பதிலிருந்து உருவாவதுதான் அந்தஸ்து தேடும் பசி என்பது இந்த புத்தகத்தில் எடுக்கப்படும் பார்வை. எல்லா சமூகங்களிலுஇம் அங்கீகாரத்துக்கான தேவை (need for approval)யை உபயோகப்படுத்திக்கொள்கிறது. ஆனால் எல்லா சமூகங்களிலும் அந்தஸ்தை அது போட்டி விருந்தின் வெற்றியுடன் இணைப்பதில்லை.

போட்டி விருந்து கொடுத்தலை அந்தஸ்துக்கான வழியாக பார்ப்பதை பரிணாமவியலின் பார்வையில் புரிந்து கொள்ள வேண்டும். அடானா மற்றும் க்வாக்யுடில் தலைவர்கள் செய்வது பொருளாதாரவியல் வார்த்தையில் சொன்னால் மறுவினியோகம் எனலாம் (redistribution). அதாவது பல தனிமனிதர்களின் உற்பத்தி பொருட்களை ஒன்றிணைத்து அந்த சேர்க்கப்பட்ட சொத்தை வெவ்வேறு அளவுகளில் பல்வேறு மனிதர்களுக்கு மறுவினியோகம் செய்வது. நான் முன்னமே சொன்னது போல, கவோக்கா மறுவினியோகி மற்றவர்களை விட அதிகம் உழைக்கிறார்; அதிகம் கவலைப்படுகிறார்; குறைவாக தனக்கென எடுத்துக்கொள்கிறார். க்வாக்யுடில் மறுவினியோகியைப் பொறுத்தமட்டில் அது உண்மையல்ல. போட்லாட்ச் தலைவர்கள் இப்படிப்பட்ட போட்லாட்ச் செய்வதற்கு தேவையான மேலாண்மை வேலைகளையும் தொழில்முனைவோர் வேலைகளையும் செய்கிறார்கள். அவ்வப்போது மீன் பிடிக்க தலைமை தாங்குவதும், கடல் சிங்கம் வேட்டையாடப் போவதும் தவிர மற்ற கடினமான வேலைகளை தங்கள் கிராமத்தில் உள்ள மற்றவர்களிடம் கொடுத்திவிடுகிறார்கள். மாபெரும் போட்லாட்ச் தலைவர்கள் போரில் சிறைக்கைதியாக பிடிக்கப்பட்ட அடிமைகளை தனக்கென வேலை செய்யவும் வைத்திருக்கிறார்கள். தனக்கென எடுத்துக்கொள்ளும் விஷயங்களில் கவோக்க மாதிரி இல்லாமல், கொழுப்பு சதைகளை தனக்கென வைத்துக்கொண்டு எலும்பு காய்ந்த ரொட்டிகளை தன் பின்பற்றுபவர்களுக்கு கொடுக்கிறார்கள்.

அடானாவிலிருந்து தொடரும் பரிணாம பாதையில் தொடர்ந்து சென்றோமானால், தானே வேலை செய்து தொழில்முனைவனாக இருக்கும் ஏழையான ‘பெரிய மனிதன் ‘-இலிருந்து க்வாக்யுடில் தலைவர்களது பாதி-வம்சாவளி தலைமையின் வழியே அடுத்து, வம்சாவளி அரசர்களால் ஆளப்படும் அரசாங்கத்தில் எந்த விவசாயம், தொழிலும் செய்யாத, எல்லா சிறந்த பொருட்களையும் தனக்கென எடுத்துக்கொள்ளும் அரசர்களில் முடிகிறது. பேரரசு (இம்பீரியல்)களில் தெய்வீக உரிமை கொண்ட அரசர்கள் தங்களது பெருமைகளைக் காப்பாற்ற மாபெரும் அரண்மனைகளைக் கட்டுவதையும், கோவில்களைக் கட்டுவதையும், மாபெரும் ஞாபகார்த்த இடங்களைக் கட்டுவதையும் பார்க்கிறோம். தங்களது போட்டிகளை எதிர்கொள்ள அவர்கள் போட்லாட்ச்சை நாடுவதில்லை, போர்க்கருவிகளை நாடுகிறார்கள். இந்த திசையை திரும்பிப்பார்ப்பதன் மூலம், அரசர்களிடமிருந்து, போட்லாட்ச் தலைவர்களிடம் ச்ன்று அங்கிருந்து கிராமத்து பெரியமனிதனிடம் செல்லும்போது, சமத்துவ வாழ்வு முறையை (egalitarian lifestyle) நோக்கிப் போவதையும் போட்டி காட்சிகள் குறைவதையும், போட்டிபோட்டு பலரறிய அனுபவிப்பது காணாமல் போவதையும் பார்க்கிறோம்.

மானுடவியலாளர்களால் மிகவும் நீண்டகாலம் கவனித்து ஆராயப்பட்ட, உண்மையான சமத்துவ வாழ்வு முறையை (egalitarian lifestyle) பின்பற்றும் சமூகங்களில், போட்டி விருந்து மூலம் மறுவினியோகம் நடப்பதில்லை. பதிலாக, பதிலீடு (reciprocity) என்ற முறை காணப்படுகிறது. பதிலீடு என்ற பொருளாதார வார்த்தைக்கு நேரடியான பொருள், இரண்டு ஆட்களுக்கு இடையே, இரண்டு தரப்பினராலும், எதை எதிர்பார்க்கிறார்களோ அதனையும் எது கொடுக்கப்படுகிறதோ அதனையும் துல்லியமாக நிர்ணயம் செய்யாமல் நடக்கும் ஒரு பரிமாற்றம். (Reciprocity is the technical term for an economic exchange that takes place between two individuals in which neither of them specifies precisely what is expected in return nor when they expect it) மேலோட்டமாக பார்க்கும்போது இந்த பரிமாற்றம் ஒரு பரிமாற்றம் போலவே காணப்படுவதில்லை. ஒருதரப்பின் எதிர்பார்ப்பும் மற்றவரின் கடன்பாடும் பேசப்படுவதில்லை. ஒரு தரப்பிலிருந்து மறுதரப்பு தொடர்ந்து எடுத்துக்கொண்டே இருக்கலாம். இது இரு தரப்புக்கும் எந்த விதமான சங்கடத்தையோ எதிர்ப்பையோ உருவாக்குவதில்லை. இருப்பினும் இந்த பரிமாற்றம் சுத்தமான பரிசு என்று கருதப்பட முடியாது. இரண்டு ஆட்களுக்கு இடையே ஆழத்தில் ஒரு எதிர்பார்ப்பு இருந்துகொண்டே இருக்கிறது. ஒரு ஆள் தொடர்ந்து எடுத்துக்கொண்டே இருந்தால், சமன்பாடு சீர்குலைந்து கொடுப்பவர் முனகவும், புறம்

பேசவும் ஆரம்பிக்கிறார். எடுப்பவரின் உடல்நிலை ஆரோக்கியம் ஆகியவை கரிசனமாக பார்க்கப்படும். நிலைமை சீரடையவில்லை என்றால், எடுப்பவர் மீது பேய் உட்கார்ந்திருக்கிறது அல்லது எடுப்பவர் சூனியவேலை செய்கிறார் என்ற சந்தேகம் சமூகத்தில் வலுப்படும். சமத்துவ வாழ்வுமுறை சமூகங்களில் பதிலீடு என்ற முறையின் எழுதாத சட்டங்களை மதிக்காதவர்கள் பெரும்பாலும் உண்மையிலேயே மனப்பிறழ்வு அடைந்தவர்களாகவும், தாங்கள் இருக்கும் சமூகத்திற்கு மோசம் செய்பவர்களாகவும் இருப்பார்கள்.

பதிலீடு பரிமாற்றம் என்பதை நாம் எவ்வாறு மிக நெருங்கிய நண்பர்களிடமும் உறவினர்களிடமும் பண்ட பரிமாற்றம் செய்துகொள்கிறோம் என்பதை வைத்து புரிந்து கொள்ளலாம். சகோதரர்கள் தங்களுக்குள் நடக்கும் பரிமாற்றத்துக்கு சரியான ரூபாய் கணக்கு பார்ப்பதில்லை. தன் சகோதரர்களுக்கு செய்யும் எல்லாவற்றுக்கும் கணக்கு பார்ப்பதில்லை. தன் சகோதரர்களிடம் தயங்காமல் உதவி கேட்பதும், அடுத்தவர் சட்டையை போட்டுக்கொண்டு போவதும் நடக்கும். சகோதரத்துவத்திலும், நட்பிலும் ஒருவர் இன்னொருவரிடமிருந்து எடுப்பதை விட கொடுப்பது அதிகமாக இருந்தாலும், அது ஒற்றுமையைபாதிக்காது. ஒரு நண்பர் தன் நண்பரை சாப்பாட்டுக்கு அழைத்துவிட்டு அந்த சாப்பாடு பதிலீடு செய்யப்படவில்லை என்றாலும் அடுத்த சாப்பாட்டுக்கும் அதற்கடுத்த சாப்பாட்டுக்கும் அழைப்பதுஇ அடிக்கடி நடக்கும் விஷயம். இருப்பினும், இப்படிப்பட்ட பரிமாற்றத்துக்கு ஒரு எல்லை உண்டு. ஒரு காலத்துக்குப் பின்னர், இவ்வாறு பதிலீடு செய்யப்படாத விஷயங்கள், ஒருவர் மற்றவரை சுரண்டுவது போல காட்சியளிக்க ஆரம்பித்துவிடுகின்றன. வேறு வார்த்தைகளில் சொல்வது என்றால், எல்லோரும் பரோபகாரி என்று அழைக்கப்பட விரும்புகிறார்கள், ஆனால் ஒருவரும் ஏமாளி என்று அழைக்கப்பட விரும்புவதில்லை. கிரிஸ்துமஸ் அன்று நாம் பரிசுப்பொருள் கொடுக்க போடும் பட்டியலின் போது இதே குழப்பத்தைத்தான் அடைகிறோம். நாம் கொடுக்கும் பரிசு ரொம்பவும் மலிவானதாக இருக்கக்கூடாது அதே வேளையில் அதிக விலையுள்ளதாகவும் இருக்கக்கூடாது. இருப்பினும்

நமது கணக்கு தெரியாமல் இருக்கவேண்டும் என்று விரும்பி அந்த விலை துண்டு சீட்டை எடுத்துவிடுகிறோம்.

பதிலீடு (reciprocity) எவ்வாறு நடைமுறையில் இருக்கிறது என்பதைப் பார்க்க, எந்த பணமும் இல்லாத, எந்த பொருளையும் வாங்கவோ எந்த பொருளையும் விற்கவோ முடியாத ஒரு சமத்துவ சமூகத்திற்குள் வாழ்ந்து பார்க்கவேண்டும். பதிலீடு பரிமாற்றத்தில் உள்ள அனைத்தையும் சரியாக எண்ணவோ, அல்லது ஒருவர் இன்னொருவருக்கு என்ன கொடுக்க வேண்டும் என்ற கணக்கோ செய்யவே கூடாத ஒரு நடைமுறை நிலவுகிறது. பொருள்களையும் சேவையையும் ஒருவரிடமிருந்து மற்றவர் பெறுவதற்கு நன்றி செலுத்துவது இங்கிதமற்றது. மத்திய மலாயாவில் இருக்கும் செமெய் (Semai) இனத்தாரிடையே யாரும் யாருக்கும் நன்றி சொல்வதில்லை. வேட்டையாடி கொண்டுவந்த இறைச்சியை சரிசமமாகப் பங்கிட்டு வினியோகிக்கும் வேட்டையாடியவனுக்கு உண்பவர்கள் எந்தவித நன்றியும் சொல்வதில்லை. நன்றி சொல்வதன் உட்பொருள், உங்களுக்கு கொடுக்கப்பட்ட இறைச்சியின் அளவை கணக்கிடுகிறீஇர்கள் என்பதோ அல்லது வேட்டையாடியவரின் வெற்றியையும் அவரது வள்ளல்தன்மையையும் நீங்கள் பார்த்து ஆச்சரியப்படுகிறீர்கள் என்றும் ஆகும் என்று செமெய் இனத்தாரினுள் வாழ்ந்த ராபர்ட் டெண்டன் கூறுகிறார்.

கவோக்க பெரிய மனிதர்கள் பகிரங்கமாக தங்கள் வள்ளல்தன்மையை காட்டுவதற்கு நேர்மாறாக, போட்லாட்ச் தலைவர்களின் பகிரங்கமாக தங்களைப் பற்றி பேசிக்கொள்வதற்கு எதிர்மாறாக, நம் மக்கள் தங்கள் அந்தஸ்து காட்டும் பொருட்களை பகிரங்கமாக காட்டி பெருமைப்பட்டுக்கொள்வதற்கு எதிர்மாறாக, மிகவும் வெற்றி பெற்றவர்கள் தங்களை மிகவும் மறைத்துக்கொள்கிறார்கள். அவர்களது சமத்துவ வாழ்வு முறையில், போட்டி போட்டுக்கொண்டு மறு வினியோகம் செய்வதும், பகிரங்கமாக பொருட்களை அனுபவிப்பதும், பகிரங்கமாக பொருட்களை வீணடிப்பதும் நினைத்துக்கூட பார்க்கமுடியாதது. சமத்துவ வாழ்வு முறையில் வாழும் மக்கள், அவர்கள் வள்ளல்தன்மையுடன் இருக்கிறார்கள் என்று கூறுவதையோ அல்லது ஒருவர் மற்றவரை விட சிறந்தவர் என்று கூறுவதையோ நினைத்து பயந்து வெறுக்கிறார்கள்.

டோரண்டோ பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர் ரிச்சர்ட் லீ அவர்கள், சமத்துவ சமூகத்தில் வாழும் வேட்டையாடுபவர்கள், சேகரிப்பவர்கள் பற்றிய ஒரு கதையை அடிக்கடி சொல்வார். பல மாதங்கள் காலஹாரி பாலைவனத்தில் புஷ்மன் (Bushmen) இனத்தாருடன் நடந்து சென்று அவர்கள் கொடுப்பதை உண்டு வாழ்ந்தார். புஷ்மன் மனிதர்கள் அவருக்கு ஒத்துழைத்தனர். அதற்காக நன்றிக்கடனாக லீ அவர்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டுமென்று நினைத்தார். வியாபாரம் மூலமாக சில வேளைகளில் இறைச்சியை வாங்கி உண்ணும் வழக்கம் இருப்பதையும் கிரிஸ்துமஸ் காலத்தில் அவர்கள் ஒரு கிராமத்தின் அருகே கூடாரம் போட இருப்பதையும் அறிந்தார். கிரிஸ்துமஸ் பரிசாக அவர்களுக்கு ஒரு எருதை பரிசாக அளிக்க விரும்பி அவரால் வாங்க முடிந்த சிறந்த எருஇதை வாங்க கிராமம் கிராமமாக தன் ஜீப்பில் சென்று பார்த்தார். ஒரு அனாமத்தான கிராமத்தில் ஒரு கொழுத்த எருதைப் பார்த்தார். அதில் ஏராளமாக கொழுப்பு அடைந்து பெரிய உருவத்துடன் இருந்தது. எல்லா பழங்குடி மக்களைப் போலவும் புஷ்மன் மனிதர்களும் கொழுப்பை விரும்பிச் சாப்பிடுவார்கள். ஏனெனில் வேட்டையாடி கிடைக்கும் விலங்குகள் பெரும்பாலும் இஒல்லியாக எலும்பும் தோலும் மட்டுமே இருப்பதாக இருக்கும். தன் கூடாரத்துக்கு திரும்பி வந்த லீ தன் புஷ்மன் நண்பர்களை ஒவ்வொருவராக அழைத்து தான் ஒரு கொழுத்த எருதை வாங்கியிருப்பதாகவும் அதனை கிரிஸ்துமஸ் சமயத்தில் வெட்டி பகிரப்போவதாகவும் சொன்னார்.

இந்த நல்ல செய்தியைக் கேட்ட முதல் மனிதன் மிகவும் பயந்து போனார். எங்கே இந்த எருதை வாங்கினார் என்று கேட்டார். என்ன வண்ணம், என்ன உசரம், கொம்புகளின் நீளம் என்ன என்று கேட்டார். அதனைச் சொன்னபின்னால், அவர் தன் தலையை ஆட்டி, ‘எனக்கு அந்த எருதைத் தெரியும். அதில் தோலையும் எலும்பையும் தவிர ஒன்றும் இல்லை. அந்த எருதை வாங்கியிருக்கிறாயே. நீ நிச்சயம் குடித்துவிட்டுத்தான் எருதைப் பார்த்திருப்பாய் ‘ என்று சொன்னார். இந்த நண்பருக்கு அந்த எருதைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை என்று நினைத்துக்கொண்டு தன் மற்ற நண்பர்களிடமும் ஒவ்வொருவராகச் சொன்னார். ஒவ்வொருவரும் அதே ஆச்சரியமான பதிலையே சொன்னார்கள். ‘அந்த வீணாய்ப்போன விலங்கை வாங்கினாயா ? சரி வாங்கிவிட்டாய். அதனை நாங்கள் சாப்பிடுவோம் ‘ என்று சொன்னார்கள். ‘இருப்பினும் எங்கள் வயிறு நிறையாது. வயிறு கத்திக்கொண்டேதான் வீட்டுக்குப் போகும் ‘ என்று சொன்னார்கள். கிரிஸ்துமஸ் வந்ததும், அந்த எருது வெட்டப்பட்டது. அந்த எருதிலோ நிறைய கொழுப்பு நிறைந்து ததும்பியது. அதனை மிகவும் ஆர்வத்துடன் அந்த புஷ்மண் நண்பர்கள் உண்டார்கள். தன் நண்பர்களிடம் சென்று, அப்படி முன்னால் சொன்னதற்கு பதில் சொல்ல வேண்டும் என்று வற்புறுத்தினார். ஒரு வேட்டையாள் சொன்னார், ‘ஆமாம் இந்த விலங்கு இப்படி இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், ஒரு இளைஞன் தான் பெரிய ஆள் என்றோ பெரிய மனிதன் என்றோ நினைத்துக்கொண்டால், நாங்கள் எல்லோரும் அவனுக்கு வேலையாள் அவனுக்குக் க

ீழானவர்கள் என்று நினைத்துக்கொள்வான். அதனை நாங்கள் அனுமதிக்க முடியாது. ஆகவே தன்னைப் பற்றி பீற்றிக்கொள்பவனை நாங்கள் நிராகரிக்கிறோம். ஏனெனில் அவனது தற்பெருமை ஒருநாள் அவனை இன்னொருவனை கொல்ல வைத்துவிடும். ஆகவே நாங்கள் எப்போதுமே இறைச்சியை பிரயோசனமற்றது என்று கூறுகிறோம். அது அவனது இதயத்தை மென்மையாக்கும். அவனை இங்கிதம் தெரிந்தவனாக ஆக்கும் ‘

தாராளமாக பரிசு தருபவர்களைப் பற்றியும் தங்களைப் பற்றி தற்பெருமை கொள்பவர்களைப் பற்றியும் எஸ்கிமோக்கள் ஒரு பழமொழி வைத்திருக்கிறார்கள். ‘சவுக்குகள் நாய்களை உருவாக்குவது போல பரிசுகள் அடிமைகளை உருவாக்குகின்றன ‘. துல்லியமாக நடந்தது அதுதான். பரிணாம பார்வையில், பரிசு கொடுப்பவர்கள் முதன்முதலில் தான் அதிகப்படியாக வேலை செய்து உருவாக்கிய பரிசுகளைக் கொடுத்தார்கள். வெகு விரைவில், பதிலீடு செய்ய வேண்டி, மக்கள் தாங்கள் இன்னும் அதிகப்படியாக வேலை செய்யவேண்டியதை கண்டார்கள். இப்படியே சென்று, பரிசு கொடுப்பவர்கள் மிகவும் சக்தி வாய்ந்தவர்களாக ஆனார்கள். சக்தி வாய்ந்தவர்களாக ஆனபின்னால், அவர்கள் பதிலீடு செய்வதின் சட்டங்களை மதிக்க வேண்டாத அளவுக்கு சக்தி வாய்ந்தவர்களாக ஆனார்கள். தங்களது கிடங்குகளிலும் அரண்மனைகளிலும் இருக்கும் பொருஇட்களை மறுவினியோகம் பண்ண வேண்டிய தேவை இல்லாமலேயே தங்கள் தொடர்ந்து வரிகளையும் மற்றவர்களை வேலை வாங்க வைக்கவும் முடியும் என்று கண்டார்கள். ஆனாலும், அவ்வப்போது, நவீன பெரிய மனிதர்களும், அரசியல்வாதிகளும், ‘அடிமைகள் ‘ உங்களுக்கு வேலை செய்யவேண்டுமென்றால், அவ்வப்போது ‘பெரிய விருந்து ‘ வைப்பது, அவர்களை தொடர்ந்து சவுக்கால் அடித்துக்கொண்டிருப்பதைவிட வலுவானது என்பதை உணர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.

எஸ்கிமோ, புஷ்மன், செமெய் ஆகியோர்கள் பரிசுகொடுப்பதன் ஆபத்துகளை உணர்ந்தவர்களாக இருக்கும்போது, எப்படி மற்ற இனத்தினர் இவ்வாறு பரிசு கொடுப்பதை பெருமளவுக்கு ஆதரித்தார்கள் ? தங்களுக்கு வேலை செய்து தங்களது பெருமைகளை பறை சாற்ற உதவும் மக்களையே அடிமைப்படுத்த ஏன் பெரிய மனிதர்களை அனுமதித்தார்கள் ? மீண்டும், நான் எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் விளக்க முனைகிறேன் என்று தெரிகிறது. ஆனால் ஒரு சில விஷயங்களைச் சொல்ல அனுமதியுங்கள்.

பதிலீடு (reciprocity) என்னும் பொருளாதார பரிமாற்றம், எந்த சூழ்நிலைகளில் தனி மனிதரின் அதிக உழைப்பு மொத்த குழுவின் தொடர்ந்து உயிர்த்திருத்தலுக்கு ஆபத்தானதோ அந்த சூழ்நிலைகளில் நடைமுறைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. எஸ்கிமோ, செமெய், புஷ்மன் இன்னும் பல வேட்டையாடிகள், சேகரிப்பவர்களின் சமூகங்களில் இப்படிப்பட்ட சூழ்நிலை காணப்படுகிறது. இவர்களது தொடர்ந்த உயிர்ப்பு அவர்கள் வாழும் சூழ்நிலையில் இருக்கும் தாவரங்கள், விலங்குகளின் ஆரோக்கியத்தின் மீது அமைக்கப்படுகிறது. வேட்டையாடுபவர்கள் திடாரென்று இணைந்து நிறைய விலங்குகளையும் நிறைய தாவரங்களையும் வேரோடு பிடுங்கி உண்ண முயன்றால், தங்களது தொடர்ந்த இருப்புக்கும் தங்களுக்கு தொடர்ந்து கிடைக்கும் இறைச்சியையும் நிரந்தரமாக அழித்துவிடும் அபாயம் உள்ளது.

உதாரணமாக, ஒரு வாரத்தில் சுமார் 10 அல்லது 15 மணி நேரங்களே புஷ்மன் இனத்தார் தங்கள் உணவுக்காக வேலை செய்கிறார்கள் என்று லீ கண்டார். நவீன தொழில்மயமான சமூகத்தில் வாழும் நாம் முன்னெப்போதையும்விட அதிக ஓய்வு நேரம் எடுத்துக்கொண்டிருக்கிறோம் என்ற மாயையை இந்த கண்டுபிடிப்பு உடைத்தெறிந்துவிட்டது. நாம் வேலை செய்வதை விட – எந்த விதமான தொழிற்சங்கத்தின் ஆதரவும் இல்லாமலேயே – பழங்குடிகளின் வேட்டையாடுபவர்களும் சேகரிப்பவர்களும் குறைவாகவே வேலை செய்கிறார்கள். ஏனெனில், அவர்கள் வாழும் சுற்றுச்சூழல் வாரக்கணக்கில் அல்லது மாதக்கணக்கில் அவர்கள் தொடர்ந்து தீவிர வேலை செய்வதை தாங்காது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், புஷ்மன் இனத்தாரிடையே ஏதேனும் ஸ்டகானோவைட் ஆட்கள் தங்கள் நண்பர்களையும் உறவினர்களையும் அதிக வேலை செய்யவைத்து பெரு விருந்து படைக்கிறேன் என்று ஆரம்பித்தால், அவர்கள் உண்மையிலேயே இந்த சமூகத்துக்கு தீவிரமான ஆபத்தாகத்தான் இருப்பார்கள். கவோக்கா மக்களைப் போல இந்த புஷ்மன் இனத்தாரையும் அதிக வேலை செய்யவைத்து, மைல்கள் சுற்றளவில் இருக்கும் எல்லா விலங்குகளையும் கொன்று தள்ள வேட்டையாட ஆரம்பித்து அங்கிருக்கும் விலங்குகளை துரத்திவிடும் ஒருவன் அங்கிருக்கும் அனைத்து புஷ்மன் மனிதர்களையும் வருட இறுதிக்குள் பட்டினிக்குள் தள்ளிவிடுவான். ஆகவே, பதிலீடு என்பதுதான் முன்னிருத்தப்படும். மறுவினியோகம் வெறுக்கப்படும். தன்னைப்பற்றி பெருமை பேசாமல் அமைதியாக நம்பிக்கையானவனாக இருக்கும் ஒரு வேட்டைக்

காரன் மேல் மரியாதை குவியும். தான் கொன்ற விலங்கை எந்த விதமான பெருமையும் பேசாமல் தான் பரிசாகக் கொடுக்கிறோம் என்று பேசாத ஒருவன் மீதுதான் மரியாதை குவியும்.

வாழும் சுற்றுச்சூழல் மீது எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாதபோதுதான் அங்கு மறுவினியோகம் என்ற பொருளாதார பரிமாற்றம் தோன்றுகிறது.காட்டில் கிடைக்கும் உணவுக்கு பதிலாக, மனிதர்களால் பல்வேறு காரணங்களுக்காக தாவரங்களும் விலங்குகளும் வளர்க்கப்படும்போதுதான் அப்படிப்பட்ட மறுவினியோகம் என்ற பொருளாதார முறை தோன்றுகிறது. பரந்த எல்லைகளுக்குள், இவ்வாறு Domesticated தாவரங்களும் விலங்குகளும் இருக்கும்போதுதான், அதிக வேலை செய்வது அதிக உற்பத்தியை கொண்டுவருகிறது. இதில் ஒரே பிரச்னை மனிதர்கள் தேவைக்கு அதிகமாக எப்போதும் வேலை செய்வதில்லை. இதனைத் தீர்க்கவே மறுவினியோகம் என்ற பொருளாதார பரிமாற்றம் உருவாகிறது. அந்தஸ்து தேடும், மிகவும் ஆர்வமிக்க உற்பத்தியாளர்களுடன் பதிலீடு செய்ய மக்கள் அதிகமாக வேலை செய்வதனால் மறுவினியோக முறை தோன்றுகிறது. பதிலீடாக கொடுக்கப்படும் பொருட்கள் சமச்சீரின்றி போகும்போது அவை பரிசுப்பொருட்களாக ஆகின்றன. பரிசுகள் அதிகரிக்க அதிகரிக்க, கொடை அளிப்பவர்களின் மீது மரியாதை அந்தஸ்து ஆகியவை பதிலீடான பரிசாக வழங்கப்படுகின்றன. வெகு விரைவில், மறுவினியோகம் பதிலீடு முறையை அமுக்கிவிட்டு, மிகவும் அதிகமாக பெருமை பேசுபவருக்கும், மிகவும் கணக்குப்பார்த்து பரிசு கொடுப்பவருக்கும், மற்றவர்களை அவமானப்படுத்தி அதிக வேலை வாங்குபவருக்கும் அந்தஸ்து செல்கிறது.

க்வாக்யுடில் உதாரணம் சொல்வது போல, விவசாயத்தை அடிப்படையாகக் கொள்ளாத சமூகங்களிலும் இப்படிப்பட்ட போட்டி விருந்தும், மறுவினியோகமும், சுற்றுச்சூழல் சரிவர அமையும்போது தோன்றுகின்றன. பசிபிக் வடமேற்கில், சால்மான் மீன்கள், மெழுகு மீன்கள் ஆகியவை விவசாய அறுவடைகளுக்கு சரியான மாற்றாக அமைகின்றன. சால்மான் மீன்கள் மெழுகு மீன்கள் ஆகியவை மிக அதிக எண்ணிக்கையில் இருப்பதனால், மக்கள் அதிகமாக வேலை செய்யும் போது அதிகமான அறுவடையை பார்க்கலாம். மேலும், பழங்குடி மீன்பிடி சாதனமான ஆழ்வலை மூலமாக மீன் பிடிக்கும் வரைக்கும் அவர்களால், மீன் வளர்ச்சியை நிறுத்தும் அளவுக்கு மீன் பிடிக்கவோ, அல்லது அடுத்த வருட மீன் அளவை பாதிக்கவோ முடியாது.

பதிலீடு முறையையும், மறுவினியோக முறையையும் ஆராயும் நமது ஆராய்ச்சியிலிருந்து சற்றே பின்வாங்கி, பொதுவாக எல்லா அரசியல் பொருளாதார அமைப்புகளும் அந்தஸ்து என்பதை ஒரு தனிப்பட்ட முறைகளில் பயன்படுத்திக்கொள்கின்றன என்று கூறலாம். உதாரணமாக, மேற்கு ஐரோப்பாவில் முதலாளித்துவம் வளர்ந்தபோது, பெரியமனிதனாக ஆவதற்கு முக்கியமான அங்கமாக மிக அதிகமான சொத்து சேர்ப்பது ஆனது. இந்த முறையில், யார் அடுத்தவரின் சொத்தை அபகரிக்கிறாரோ, யார் மிக அதிகமான சொத்தை தன் கையில் வைத்திருக்கிறாரோ அவர் மிகப்பெரிய மனிதராக கருதப்பட்டார். முதலாளித்துவத்தின் ஆரம்பத்தில், யாரிடம் மிக அதிகமான சொத்து இருக்கிறதோ அவர் மிகவும் செலவுகளை குறைத்துக்கொண்டு எளிமையாக வாழ்ந்தார். அவர்களது சொத்துக்கள் மிகவும் பாதுகாப்பானவையாக ஆனபின்னால், மிகவும் ஆடம்பரமான வழிகளில் மிகவும் பகிரங்கமாக சொத்துக்களை அனுபவித்தலும், மிகவும் பகிரங்கமாக சொத்துக்களை வீணடித்தலும் தங்கள் போட்டியாளர்களை வெட்கமுறச்செய்ய உபயோகப்பட்டன. மிகவும் பெரிய மாளிகைகளில் வாழ்வதும், மிகவும் விலையுயர்ந்த உடைகளை உடுத்திக்கொள்வதும், மிகவும் அலங்காரமான நகை ஆபரணங்களை பூட்டிக்கொள்வதும், ஏழை மக்களை கேவலமாகப் பேசுவதும் அதிகரித்தது. அதே வேளையில், நடுத்தர வர்க்கமும் கீழ்வர்க்கமும், கடினமாக உழைப்பவர்களுக்கும், குறைவாக செலவழிப்பவர்களுக்கும், ஆடம்பரமாக சொத்துக்களை அனுபவிக்காதவர்களுக்கும், ஆடம்பரமாக சொத்துக்

களை வீணடிக்காதவர்களுக்கும் மிக அதிகமான அந்தஸ்தை அளித்தன. தொழிற்சாலைகளிலிருந்து பொங்கும் பொருட்கள், வாங்குபவர்களின் சந்தையை நிரப்ப நிரப்ப, நடுத்தர வர்க்கமும், கீழ்வர்க்கமும் தங்களது கஞ்ச வழிகளை விட்டுவிட்டு ஆடம்பரத்தில் இறங்கத்தொடங்கின. விளம்பரங்களும், ஊடகங்களும் இணைந்து நடுத்தர வர்க்கத்தையும் கீழ்வர்க்கத்தையும் சேமிக்கும் குணத்தை விட்டொழித்து வாங்கும் குணத்தை வளர்த்துக்கொள்ளச்சொல்லி அறிவுரை செய்தன. மிகவும் அதிகமாக பொருட்களை வாங்கி மிகவும் அதிகமாக பொருட்களை வீணடித்து மிகவும் அதிகமாக இன்னும் அதிகமாக பொருஇட்களை வாங்க கட்டாயப்படுத்தின. இப்போது நடுத்தர வர்க்கத்தில் யார் மிகவும் அதிகமாக பொருட்களை வைத்திருக்கிறாரோ அந்தப் பொருட்களை காட்டுகிறாரோ அவரிடம் அந்தஸ்து சேர்கிறது.

இதே நேரத்தில், தங்களது சொத்துக்களை மறுவினியோகம் செய்ய பலவிதங்களில் வரிகள் விதிக்கப்படுவதை பணக்கார வர்க்கம் பார்க்கிறது. ஆகவே, இப்போது பகிரங்கமாக சொத்துக்களை அனுபவிப்பது ஆபத்தானது. ஆகவே, யாரிடம் பணம் அதிகமாக இருக்கிறதோ அவர் தன்னிடம் மிகவும் குறைவாக இருக்கிறது என்று காட்டிக்கொள்வது ஆரம்பிக்கிறது. தன்னை ஆடம்பரமாக காட்டிக்கொள்வது பணக்கார வர்க்கத்திடம் குறைந்ததும், நடுத்தர வர்க்கத்தில் தன்னை ஆடம்பரமாக காட்டிக்கொள்ளும் அழுத்தமும் குறைகிறது. நடுத்தர வர்க்கத்து இளைஞர்கள் தற்போது கிழிந்த ஜீன்ஸ்களை போட்டுக்கொள்வதும், ஆடம்பரமாக செலவு செய்யாது இருப்பதுவும் மேல்தட்டு வர்க்கத்தை பார்த்து அடிக்கும் காப்பியே அன்றி கலாச்சார புரட்சி ஏதும் இல்லை என்பது என் கருத்து.

இறுதியாக ஒரு விஷயம். ஒரு இடத்தில் அதன் சுற்றுச்சூழலுக்கு ஏற்ப பதிலீடு முறையை மாற்றி அங்கு மறுவினியோகத்தை கொண்டுவந்து அதன் அந்தஸ்து தேடும் நோக்கத்தின் ஊடாக பெரும் மனித கூட்டம் வாழ்வதற்கு வளமாக வளர்வதற்கும் உறுதுணையாக இருந்திருக்கிறது என்று காட்டியிருக்கிறேன். இந்த முழு முறையையும் ஒருவர் கேள்வி கேட்கலாம். எஸ்கிமோ அல்லது புஷ்மன் மனிதர்கள் வாழ்வதைவிடவும் கடினமாக வேலை செய்து குறைவான ஓய்வு பெற்று அதனைவிட குறைவான பொருளாதார வளம் பெற்று வாழ ஏமாற்றப்பட்டதாக தோன்றலாம். பல பழங்குடி இனத்தினர் தங்களது உற்பத்தி வேலைகளை அதிகரிக்காமல் இருப்பதன் காரணம் அவர்கள் அந்த தொழில்நுட்பங்கள் தங்கள் வேலைகளை அதிகரித்து தங்கள் வசதிகளை குறைக்கின்றன என்று கண்டறிந்ததாகக் கூட இருக்கலாம். ஆனால், எல்லா பழங்குடி மக்களின் வாழ்வும் அதில் ஏதேனும் ஒருவர் அந்த எல்லையைக் கடந்து மறுவினியோகத்தில் இறங்கிய உடனே முடிந்து விடுகின்றது. உடனே படிநிலை அமைப்புகளும், மேல்வர்க்கம் கீழ்வர்க்கம் நடு வர்க்கம் என பல்வேறு வர்க்கங்களாக பிரிவதும் நடந்துவிடுகின்றது. எந்த சமுதாயங்கள் தங்களது உற்பத்தித் திறனை அதிகரித்துக்கொள்கின்றனவோ, எந்த சமூகங்கள் அதன் மூலம் தங்கள் மக்கள்தொகை நெருக்கத்தை அதிகரித்துக்கொள்கின்றவோ, இதன் மூலம் தங்களை ஒழுங்கு படுத்திக்கொள்ள ஆளும் வர்க்கங்களையும் சட்டங்களையும் உருவாக்கிக்கொள்கின்றனவோ அவைகள் தாங்கள் வாழும் இடங்களை அதிகரித்து இந்த பழங்குடி சமூகங்களை அழித்தோ அல்லது விளிம்

பு நிலைக்கு துரத்தியோ விடுகின்றன. இறுதியில் இந்த மாற்றம், பெரிய மக்கள்தொகை நெருக்கம் கொண்ட நன்றாக ஒழுங்கு செய்யப்பட்ட சமூகங்கள் எளிய வேட்டையாளர்களையும் சேகரிப்பவர்களையும் கொண்ட சமூகத்தை ஆயுதம் தாங்கிய போரில் தோற்கடித்துவிடுவதைத்தான் சொல்கின்றன.

கடினமாக உழை அல்லது அழிந்துவிடு என்பதுதான் இறுதி விளக்கம்.

(போட்லாட்ச் அத்தியாயம் முற்றும்)

Series Navigation