தனியார் மற்றும் உலகமயமாதலும், இந்திய கலாச்சார, தேசிய பாதுகாப்பு, அரசியல் ஸ்திரதன்மை பின்னடைவுகளும்

This entry is part [part not set] of 31 in the series 20051118_Issue

அருண்மொழி


இந்தியா பல்வேறு தேசிய-மொழி இனங்களை உள்ளடக்கிய மிகப்பெரிய ஜனநாயக கூட்டாட்சி அமைப்பு மட்டுமின்றி, தொழில் மற்றும் வர்த்தக அரங்கில் மற்ற நாடுகளுடன் போட்டியிட திறமை வாய்ந்த சந்தைப் பொருளாதாராமும் ஆகும். அதுமட்டுமன்றி உலக அமைதிக்காக விழையும் ஒரு முன்னோடி அரசியல் அமைப்பாகவும், மக்கள் உரிமைகளை மதிக்கும் ஒரு அமைப்பாகவும், பல தேசிய இனங்களின் ஒற்றுமைக்கு உதாரணமாக விளங்கும் ஒரு அரசாகவும், தற்காலத்திலும், எதிர்காலத்திற்கும் உலக மக்களின் மதிப்பையும், அன்பையும் பெறும் ஒரு நாடாகவும் இந்தியா திகழ வேண்டும் என்பதே பெரும்பாலான வல்லுனர்களின் கருத்து.

ஆனாலும், கடந்த 15 ஆண்டுகளாக இந்தியா பின்பற்றிவரும் பொருளாதாரக் கொள்கைகளினால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டாலும், உலக அரங்கில் இந்தியாவின் தனித்துவமும், கொள்கைகளும் பலவீனம் அடைய வாய்ப்பு உள்ளது. ஒரு 10% – 20% மேல்தட்டு மக்களின் விருப்பங்களுக்கும், ஆடம்பர தேவைகளுக்கும், அவர்களுடைய பொழுதுபோக்கையும், வேலை வாய்ப்பையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்ட ஒரு சந்தை பொருளாதார கோட்பாடு, இந்தியா போன்ற பெரிய மக்கள் தொகை உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் கொண்ட கூட்டாட்சி அமைப்பை நிலை குலைய வைத்துவிடும். முழு அளவில் ஒரு சந்தைப் பொருளாதார அமைப்பாகவும், அதில் வெற்றி அடைந்ததாகவும் உலகுக்கு பறை சாற்றும் அமெரிக்காவே நிறைய துறைகளில் சந்தை பொருளாதாராத்திற்கு எதிரான கொள்கைகளையும், கட்டுபாடுகளையும் வைத்துள்ளது. சந்தை பொருளாதாரமே எல்லா துறைகளிலும் சரியானது என்று கருதுவதும், குறிப்பாக இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பொருளாதார வளங்களை அமெரிக்காவின் வளங்களோடு ஒப்பிட்டு பேசுவதும் அபத்தம் ஆனது. அதே போல், சிங்கப்பூர், ஜப்பான், கொரியா போன்ற ஒருமுக-கலாச்சாரத்தை கொண்ட தொடர்ச்சியான வரலாற்றையுடைய சிறிய நாடுகளின் சந்தை பொருளாதாரத்தின் வெற்றியையும் உதாரணமாக காட்டுவதும் அபத்தம் என்றே கருதுகிறேன்.

அமெரிக்கா நில அளவில் இந்தியாவை விட மூன்று மடங்கு பெரியதும், மக்கள் தொகையில் இந்தியாவை விட மூன்று மடங்கு சிறியதும் ஆனது. உதாரணமாக, அமெரிக்காவில் உள்ள சில ஏரிகளே இந்தியாவில் சில மாநிலங்களின் பரப்பை விட பெரியது. வரலாற்று தொடர்ச்சியில் அமெரிக்கா ஒரு இளம் நாகரீகம். பல்வேறு நிற இன மொழி மக்கள் இருப்பினும், அரசியல் ஆட்சி நிர்வாகத்தில், தொழில்நுட்பத்தில் உயர்ந்து இருப்பினும் அமெரிக்காவுக்கென்று ஒரு தனித்துவமான ஆழமான நாகரீகம் இன்னும் வேர் கூட பிடிக்கவில்லை என்பதுதான் உண்மை. அமெரிக்க நாகரீகம் தொடர்ந்து மாற்றங்களை சந்தித்துக்கொண்டு இன்னும் நிரந்தர முழுமையடையாத பரிணாம வளர்ச்சி படிகளில்தான் உள்ளது. அமெரிக்காவின் இலக்கிய, கலாச்சார படைப்புகளில், மற்ற மேற்கத்திய நாகரீகங்களில் உள்ளது போலவோ (ப்ரான்ஸ், ஜெர்மனி), அல்லது கீழை நாகரீகங்களில் உள்ளது போலவோ (இந்திய, சீன, ஜப்பானிய) ஆழமோ(depth), நுணுக்கமோ(subtlety) கிடையாது. பெரும்பாண்மை அமெரிக்க மக்களும் அவர்களது மனித உறவுகளும், சமூக உறவு அமைப்புகளும் அப்படித்தான். இதை ஆங்கிலத்தில் low context society என சொல்வார்கள். இதன் பொருள் அமெரிக்காவினர் வெகுளி என்றோ, நாகரீகம் அற்றவர்கள் என்றோ இல்லை. இதன் பொருள் ஒரு தேசீய கலாச்சார தளத்தில் பெரும்பாலான அமெரிக்கர்கள் சீரான எளிமையான மனிதர்கள் (plain and simple). சமூக மற்றும் மனித உறவுகளையும் ‘அனேக

‘(எல்லோரும் அல்ல) அமெரிக்கர்கள் ஒரு எளிமையான பொருளாதார உறவாக எடுத்துக்கொள்ள முடியும். ஆச்சாரம் மிக்க இந்திய வைதீக குடும்பங்களைக் காட்டிலும் மிகவும் ஆச்சாரங்களை கடை பிடிக்கும் அமெரிக்கர்களும் இருக்கிறார்கள்தான். ஆனால், அவர்களின் சதவிகிதம் வெகு குறைவு.

சமூக தளத்தில் நிலவும் இந்த கலாச்சார நிலையின்மைதான் அமெரிக்காவின் சந்தை பொருளாதாரத்தின் வெற்றிக்கும் , தொழில்னுட்ப வளர்ச்சிக்கும் அடிப்படை பலமாக உள்ளது. சமூக உறவுகள் பொருளாதார உறவுகளில் பொதிந்து கிடக்கின்றன அமெரிக்காவை பொறுத்தவரை. ஆனால் நீண்ட மரபுகள் உள்ள இந்தியா போண்ற நாடுகள் மிகவும் ஆழமான சமூக உறவுகள் கொண்ட அமைப்புகளை கொண்ட சமூகங்கள் (High context societies). இந்தியாவிலோ பொருளாதார உறவுகள் சமூக உறவுகளில் அழுந்தியிருக்கின்றன. ஆதலால் அமெரிக்காவைப் போலவே பொருள் வளத்தை மட்டுமே குறிவைத்து செயல்படும் திட்டங்கள்,

கொள்கை திணிப்புகள் இந்தியா மாதிரி நாடுகளில் மிகவும் பத்தான விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. அதுவும் மக்களுடைய அன்றாட அடிப்படை வசதிகளை நிறைவேற்றாத, பொருளாதார கொள்கைகள் பாழ்தான். இதில் அரசியல்வாதிகள் சரியலாம். கட்சிகள் விழலாம். வியாபார நிறுவனங்கள் ஆட்டங்கண்டு விடும். மக்கள் தேவைகளையும், உணர்வுகளையும் பொருட்படுத்தாமல், அரசியல்வாதிகளின் அழைப்பை மட்டுமே நம்பி இந்தியாவில் களம் இறங்கிய என்ரான் (Enron Project) என்ன ஆயிற்று என்பது இது பற்றி படித்தவர்களுக்கு தெரியும். என்ரான் வீணாய்ப்போனது இந்திய முதலீட்டினால் மட்டுமல்லதான்; ஆனால் இந்தியாவில் மட்டும் அவர்களின் கணக்குபடி அதன் முதலீட்டு அளவு $300 – $400 millions (Once Enron was in Top Ten in Fortune 100 list; its current share price is less than 20 cents; Some of its executives are in trouble too!!). சமீபத்தில் அர்ஜெண்டினாவில் நடந்த பொருளாதார மாநாட்டை மக்கள் செயழிலக்க செய்திருக்கிறார்கள்!!

இந்த தாராளமயம் மற்றும் உலகமயமாதலால் இந்தியா போன்ற கீழை நாகரீகங்களில் ஏற்பட போகிற பொருளாதார ஏற்ற தாழ்வு இடைவெளிகளை கூட மக்கள் சகித்து கொள்ள கூடும்; ஆனால் கலாச்சாரம், பண்பாடு, மற்றும் மத நம்பிக்கைகளின் மீது தெரிந்தோ, தெரியாமலோ இந்த பொருளாதார மாற்றமும், பண்ணாட்டு நிறுவனங்களும், அவைகளின் இந்திய கூட்டு நிறுவனங்களும் ஏற்படுத்தும் பாதிப்பை மக்கள் சகித்துக் கொள்ள மாட்டர்கள் என்பது சரித்திரம். சிப்பாய் கலகமும், ஈரானிய மதவாத கிளர்ச்சிகளும், தென் அமெரிக்க நாடுகளில் 30 ஆண்டுகளாக தொடரும் அரசியல் கிளர்ச்சிகளில் இருந்து உலகு தழுவிய வியாபார நிறுவனங்களும், பொருளாதார அமைப்புகளும் கற்று கொள்ல வேண்டிய பாடங்கள் நிறைய. இந்திய மக்களின் பண்பாட்டை கேலிக்குரியதாக்கும் வகையில் நடத்தப்படும் கேளிக்கைகளோ, தொழில்களோ ஒரு மோசமான எதிர்வினையை உருவாக்ககூடும். அதிலும் அப்பாவி பெண்கள் இந்த துறையில் விழும்பொழுது, அதனால் ஆபத்துகள் ஏற்படும் பொழுது, பொதுமக்களின் எதிர்வினை கட்டுக்குள் அடங்காமல் போய்விடும். இந்த வகையில், உதாரணமாக, சமீபத்தில் நடிகை குஷ்புவின் கருத்துகளுக்கு நேர்ந்த எதிர்வினை ஒரு சாதாரண அரசியல் நிகழ்வு இல்லை என்றே கருதுகிறேன். இதைப்பற்றி திண்ணையில் மாதவி ஸ்ரீப்ரியா என்பவர் எழுதியது போல, இது போன்ற எதிர் வினைகளையும், மக்கள் கோபத்தையும், அதனால் ஏற்படக்கூடிய பொருளாதார இழப்புகளையும், தங்கள் கவனக்குறைவினாலொ, போராசையாலோ பன்னாட்டு நிறுவனங்களும், அவர்களது இந்திய கூட்டு நிறுவனங்களும் கூட சந்திக்க நேரிடும். ஆதலால், இந்த நிறுவனங்களும் அவர்களது இந்திய அலுவலர்களும், மேலாளர்களும் இந்த பிரச்சணைகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப தங்களது விளம்பர உத்திகளையும், கணக்கு வழக்குகளையும், பொருட்களின் விலைகளையும், தொழிலாளர் நல திட்டங்களையும், ஏன் ‘அந்தரங்க பொழுது போக்கு நடவடிக்கைகளையும் ‘ கவனித்து கட்டுப்பாடாக வைத்திருப்பது நலம். குஷ்புவுக்கு ஏற்பட்ட சரிவு போல, பத்திரிக்கைகளுக்கும், சினிமா துறைக்கும், தொலக்காட்சி நிறுவனங்களுக்கும், வியாபார உலகிற்கும், மேலாளர்களின் மதிப்பிற்கும், அவர்களது பங்குகளின் விலைக்கும் (Stock price) கூட இத்தகைய சரிவு ஏற்படலாம். பொறுப்பற்ற நடவடிக்கைகளினால், தீவிரவாதமே தேவையில்லை, இவர்களே தங்களுக்கு தாங்களே குழி தோண்டிக் கொள்ள வேண்டியதுதான்.

இந்த தொடரும் பிரச்சனைகளுக்கிடையில், தீவிரவாத இயக்கங்களும், அவைகளை கட்டுபடுத்துகிறேன் என்ற பெயரில் மக்கள் உரிமைகளில் கைவைக்க கூடிய அரசாங்கங்களின் செயல்களும் மிகப்பெரிய எதிர்வினைகளை ஏற்படுத்தலாம். இது மட்டுமல்லாது, தனியார்மயமாதல் என்ற பெயரில், பாதுகாப்பு, தகவல் சேமிப்பு, காவல் துறை போன்ற நிறுவன அமைப்புகளின் செயல்பாடுகளும் உலகு தழுவிய தனியார் நிறுவனங்களின் கைகளில் போய் விழுந்து மக்கள் உரிமைகள் மீறப்படலாம். உதாரணமாக, அமெரிக்காவில் வசிக்கும், ஒரு இந்திய குடிமகனின் தொலைபேசி உரையாடல்களையும், வங்கி கணக்குகளையும், மின்னஞ்சல்களையும், அன்றாட வங்கி அட்டை (credit card) உபயோகத்தையும், இந்தியாவில் உள்ள ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனமோ (சாட்டிலைட் தொடர்புகளினால்), தொலைபேசி மையங்களோ (call centers) பார்த்துகொண்டோ, ஒட்டு கேட்கவோ வாய்ப்பு இருக்கிறது. இது தற்போதே நடந்து கொண்டுதான் இருக்கிறது என்பது….என் கணிப்பு. இதில் உள்ள வருமான வாய்ப்பை கொண்டு, சாதாரண மக்களையும் ஏதாவது ஒரு சந்தேக பட்டியலில் சேர்த்துகொண்டு அவர்களது உரையாடல்களையும் கேட்கவும், மொழிபெயர்க்கவும் ஒரு வர்த்தகமே உருவாகி உள்ளது. இங்கு எழுதிக்கொண்டிருப்பவர்களின் தொலைபேசி பேச்சுகளையும் சென்னையில் உள்ள call centers (whoever owns!….) கேட்டுகொண்டிருக்கலாம். ஏன் (satellite receivers) மூலமாக, நம் வீட்டில் நடக்கும் உரையாடல்களையும் கே ட்பதற்கு வாய்ப்பு உண்டு. இதன் மூலம் அப்பாவி மக்கள் பெரும் தொல்லைகளுக்குள்ளாக நேரிடலாம்.

அமெரிக்கா போன்ற நாடுகளில் சட்டம் ஓரளவுக்கு சாதாரண மக்களின் உரிமைகளுக்கு குரல் கொடுக்கும்; மீறல் இருப்பின் தண்டனையும் கொடுக்கும். னால் இந்தியா போண்ற நாடுகளில் சாதாரண மக்களுக்கு எந்த அடிப்படை உரிமைகளுக்கும் உத்தரவாதம் இல்லை. வீரப்பனை பிடிப்பதற்கு ஆன செலவு, நேர விரயம் ஹர்ஷத் மேத்தாவின் கூட்டாளிகளுக்கு தண்டனை வாங்கி தருவதில் இல்லை. வீரப்பனை சுட்டுதள்ள புறப்பட்ட வேகம், காட்டில் வாழும் அப்பாவி மக்களுக்கு நேர்ந்த மான பங்கம், மனித உரிமை மீறல்களுக்கு ஏன் தண்டணை தரப்படவில்லை. இந்த சட்ட, ஒழுங்கு நிறுவனங்களை சீர் செய்யாது அரசும், தனியார் நிறுவனங்களும் இந்த மாதிரி காரியங்களில் ஈடுபட்டால், மக்களின் கோபம் வியாபார உலகிற்கு எதிரான வகையில் தான் வெளிப்படும் என நினைக்கிறேன். பொதுமக்களின் கோபம் மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.

இதைப் போல இந்திய குடிமகன்களின் (அரசியல்வாதிகள், அதிகாரிகள் உட்பட…) நடவடிக்கைகளையும் மற்ற நாடுகளில் உள்ள அரசு இயந்திரங்கள் தனியார் நிறுவனங்கள் அன்றாடம் கண்காணிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் எதிலும், எப்பொழுதும் எளிய மனிதர்களுக்கு எதிராகவே செயல்படும், ஒரு நிலையற்ற அரசியல், சட்ட, நிர்வாக இயந்திரங்களை கொண்ட, ஊழல் அரசியல் அதிகாரிகள் நிறைந்த இந்தியா மாதிரி நாடுகளின் ஸ்த்திரதன்மையும், பாதுகாப்பும், மக்கள் நலனும் எளிதில் குலைக்கப்படும். தாரளமயமான அமெரிக்காவிலேயே, Clinton-Monica விஷயம் அரசாங்கத்தை ஸ்தம்பிக்க வைக்கும் பொழுது, பலகட்சி கூட்டாட்சி அமைப்புள்ள, ஊழல் நபர்கள் மிக்க இந்திய அரசியல் எம்மாத்திரம். இவைகளை தடுப்பதும், பொது மக்களை காப்பதும், நேர்மையாக உள்ள ஒரு சில நீதிபதிகள், ஆட்சிதுறை அதிகாரிகள், காவல் துறையினர் கைகளிலும்தான் இருக்கிறது. இதை செய்யாவிட்டால், இவர்களும் மாட்டிக்கொள்ளுவார்கள் இந்த வலையத்தில். சாதாரண மக்கள் மட்டுமா, நீங்களும் இந்த நரகலில்தானே சிக்கியுள்ளீர்கள். அரசியல்வாதிகள் வருவார்கள், போவார்கள்..மக்களின் கோபத்திற்கு அதிகாரிகளும் நீதித் துறையும்தான் பதில் சொல்ல வேண்டிவரும்….

பொதுமக்களும் இந்த மாற்றங்களை கருத்தில் கொண்டு, மிகவும் கவனமாக இருத்தல் நலம். உங்கள் உரிமைகள் மீறப்படுவதாக சந்தேகம் இருந்தால் சட்ட உதவியை நாடவும். நீங்கள் அமெரிக்காவில் இருப்பின் இது மாதிரி உங்கள் உரிமைகள் மீறப்படின், அமெரிக்க சட்ட நீதி நிறுவனங்களுக்கு எந்த ஒரு வியாபார அரசியல் நிறுவனமும் பதில் சொல்ல வேண்டி வரும், அவைகள் இந்தியாவில் இருப்பினும்; அதனால் இந்த உரிமை மீறல்களில் ஈடுபடுபவர்கள் தண்டனையோ, வியாபார இழப்பையோ சந்திக்க நேரிடும்….இப்படி சிக்கல்களில் இந்திய நிறுவனங்கள் மாட்டினால், அமெரிக்க கோர்ட்டுகள் கொடுக்கும் தண்டனையில் (financial penalty) தாங்கள் சேர்த்த செல்வத்தையெல்லாம் அவர்கள் ஒரே நாளில் இழந்து விட வாய்ப்புள்ளது. அமெரிக்காவில் உள்ள சட்ட நீதி நிறுவனங்களை அவ்வளவு எளிதாக நீங்கள் வாங்கிவிட முடியாது இந்திய வியாபார, அரசியல், அதிகார திலகங்களே….

—-

Series Navigation

அருண்மொழி

அருண்மொழி