பங்குச் சந்தை வீழ்ச்சி

This entry is part [part not set] of 31 in the series 20051021_Issue

கே.ஜே ரமேஷ்


நேற்று சிங்கப்பூர் மற்றும் தென்கிழக்கு ஆசிய வட்டாரப் பங்குச் சந்தையில் ஏற்பட்ட பங்குச்சந்தைக் குறியீட்டின் கணிசமான வீழ்ச்சி முதலீட்டாளர்களின் முதுகுத் தண்டுகளை ஜிலீரிட வைத்தது. 1987ம் ஆண்டு இதே நாளில் (அக்டோபர் 19) தொடங்கிய வீழ்ச்சி ஏற்படுத்திய பாதிப்புகளை மக்களால் அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியாது. ஆனால் பொருளாதாரத் துறையில் பெற்றிருக்கும் அனுபவமும் சிங்கப்பூர் அரசின் வலுவான பொருளாதாரக் கொள்கைகளும் இம்முறை சிங்கப்பூர் பங்குகளில் முதலீடு செய்தவர்களை பீதியடையாமலிருக்கச் செய்யும் என்று நம்புவோம்.

பொருளாதார வீழ்ச்சி பற்றிய எந்த செய்தியும் 1929ம் ஆண்டு தொடங்கி பத்தாண்டுகளுக்கும் மேலாக தனது கோரப்பிடியில் உலகையே ஆட்டிப் படைத்த மாபெரும் வீழ்ச்சியைப் பற்றிய (The Great Depression) நினைவுகளைக் கிளறாமல் விட்டு வைக்காது.

1929ம் ஆண்டு இதே அக்டோபர் மாதத்தின் ஒரு கருப்பு வெள்ளியன்று (அல்லது செவ்வாய் ?) தொடங்கிய வீழ்ச்சி 1932ம் ஆண்டிற்குள் பங்கு மதிப்புகளை 100%லிருந்து 20%ஆகக் குறைத்து, பல ஆயிரக்கணக்கான முதலீட்டார்களை நடுத்தெருவுக்கு கொண்டு வந்து நிறுத்தி விட்டது. அந்த ஒரே நாளில் சுமார் 16 மில்லியன் பங்குகள் கைமாறி 30 பில்லியன் டாலர்களை கண்ணுக்குத் தெரியாமலேயே கரைத்து விட்டது. அமெரிக்காவின் தடகள வீரர்களில் மில்லியரான முதல் வீரர் ஜேக் டெம்ப்ஸி. அவர் அந்த ஒரே நாளில் 3 மில்லியன் டாலர்களை இழந்தார். அமெரிக்காவின் 25000 வங்கிகளில் 11000 வங்கிகளை முற்றிலுமாக முடக்கிச் செயலிழக்கச் செய்து திவாலாக்கி விட்டது. அவ்வளவு பெரிய எண்ணிக்கையில் வங்கிகள் தோல்வியடையவும் மக்களின் பொதுவான நம்பகமில்லாதண்மையும் சேர்ந்து கொண்டு மக்களின் வாங்கும் பலத்தைப் பலவீனப்படுத்தி விட்டன. அதனைத் தொடர்ந்து வீழ்ச்சியடைந்த தேவைகள் தொழிற்சாலைகளின் உற்பத்திக் குறைப்புக்கு இட்டுச் சென்று ஒரு பெரும் சுழற்சியாக பொருளாதாரத்தை அதலபாதாளத்திற்குத் தள்ளியது.

மூன்றே வருடத்திற்குள் உற்பத்தி பாதியாகக் குறைந்து சுமார் 15 மில்லியன் மக்கள் வேலையிழந்தனர். அமெரிக்காவில் தொடங்கிய வீழ்ச்சி ஐரோப்பாவிலும் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. முதல் உலகப் போருக்குப் பின் சிதிலமடைந்த ஐரோப்பியப் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தும் பொருட்டு அமெரிக்கா மிகப் பெரிய அளவில் பிரிட்டன், ஜெர்மனி போன்ற நாடுகளில் முதலீடு செய்திருந்தது. அதனால் அமெரிக்காவில் ஏற்பட்ட வீழ்ச்சி ஐரோப்பாவையும் விட்டு வைக்கவில்லை.

ஜெர்மனியில் ஏற்பட்ட பொருளாதாரத் தாக்கம் 1933ல் ஹிட்லர் பதவியைப் பிடிக்கப் பெருமளவில் உதவியது. ஹிட்லர் ஆட்சியில் அறிமுகப்படுத்தப் பட்ட ஆக்கப்பூர்வமான பொருளாதாரக் கொள்கைகளும் ஆயுத உற்பத்திப் பெருக்கமும் 1936ம் ஆண்டு ஜெர்மனி வீழ்ச்சியிலிருந்து வெளிவர உதவியது.

அதே சமயம் 1932ம் ஆண்டு அமெரிக்காவின் ஆட்சியைப் பிடித்த ரூஸ்வெல்ட் தனது புதிய கொள்கைகளாலும் அரசாங்கத்தின் நேரடி கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடுகளினாலும் ஓரளவுக்கு வேலையில்லாத் திண்டாட்டத்தைக் குறைத்தார். ஆனாலும் சுமார் 7 மில்லியன் மக்கள் வேலையிழந்து தவித்தனர். மாபெரும் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீட்சி இரண்டாம் உலகப் போர் தொடங்கியவுடன் தான் சாத்தியமாயிற்று (இது உண்மை. ஆனால் இது ஒரு தவறான அர்த்தத்தைக் கொடுத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல !!). பொருளாதாரம் முழுமையாக மீட்சியடையும் முன் மக்கள் பட்ட வேதனைகளையும் கொஞ்சமாகப் பார்ப்போம்.

1933 வாக்கில் அமெரிக்காவில் ரொட்டிக்காகக் காத்திருப்போரின் நீண்ட வரிசை ஒரு வழக்கமான காட்சியாகிவிட்டிருந்தது. பல நூறாயிரம் மக்கள் தங்கள் இடங்களை விட்டு உணவைத் தேடி மற்ற நகரங்களுக்கு இடம் பெயர்வது சாதாரணமாக நிகழ்ந்து கொண்டிருந்தது. உணவுக்காகப் பிச்சையெடுப்பதும் அரிதான காட்சி என்ற அந்தஸ்த்தை விட்டுக் கொடுக்க வேண்டியதாயிற்று. செல்வச் செழிப்பு மிக்க இன்றைய அமெரிக்கர்களை மட்டுமே பார்ப்பவர்களுக்கு அமெரிக்கர்கள் பிச்சையெடுத்தார்கள் என்ற செய்தி தமிழ்ப் படம் ஒன்றில் விவேக் நன்றாக இருக்கும் காலை மடித்துக் கொண்டு பிச்சை எடுத்த காட்சி நினைவுக்கு வரலாம். ஆனால் கந்தலானாலும் கசக்காத அழுக்கு உடையுடனும் பட்டினியால் வாடிய முகத்துடனும் இருக்கும் அமெரிக்கர்களின் புகைப்படத்தைப் பார்த்தால் அந்நாளின் கொடுமை விளங்கும். (நண்டும் சிண்டுமாகக் காற்சட்டை கூட இல்லாமல் இருக்கும் குழந்தைகளை நான் ஆசியாவிலும் தென் அமெரிக்கப் பகுதிகளிலும் எடுத்த புகைப்படங்களில் மட்டுமே பார்த்திருக்கிறேன்)

1930களில் நியூயார்க் நகர ஹோட்டல்களில் வரும் விருந்தினர்களிடம், “உங்களுக்கு தூங்குவதற்காக அறை வேண்டுமா அல்லது அங்கிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொள்வதற்காக வேண்டுமா” என்று கேட்கப் பட்டதாக ஒரு செய்தியும் உண்டு. அந்த அளவிற்கு மக்கள் நிலைகுலைந்துப் போயிருந்தனர். அந்த மோசமான நிலையிலும் லாபகரமாக நடந்த மிகச்சில தொழிற்களில் சினிமாத் தொழிலும் ஒன்று (அமெரிக்கர்கள் நம்மவர்களை மிஞ்சி விட்டார்கள் போலும் !!). 1930ம் ஆண்டின் கடைசியில் சுமார் 3 மில்லியன் குழந்தைகள் பள்ளிப் படிப்பை விட்டு நின்று விட்டதால் பல பள்ளிகளை மூட வேண்டியதாகி விட்டது.

அந்த மாபெரும் பொருளாதார வீழ்ச்சிக்கு பொருளாதார் நிபுணர்கள், வரலாற்று ஆராய்ச்சியாளர்கள், அரசியல் கணிப்பாளர்கள் என்று பலர் பலவிதமான காரணங்களைக் கூறினாலும் இன்று பலராலும் ஒத்துக் கொள்ளப்பட்ட காரணம் தவறான பொருளாதாரக் கொள்கைகளும் அரசாங்கங்கள் நிதி நிலைமையை சரிவர கையாளாததும் என்பதே.

இன்றைய அரசுகள் இந்த இரண்டு விஷயத்திலுமே மிகுந்த கவனம் செலுத்தி வருவதால் அன்று ஏற்பட்ட நிலை இனி ஏற்படாது என்ற நம்பிக்கையுடன் இருப்போம்.

கே.ஜே ரமேஷ்

Kalelno5@yahoo.com

Series Navigation

கே.ஜே.ரமேஷ்

கே.ஜே.ரமேஷ்