கருப்பு M.G.R

This entry is part [part not set] of 26 in the series 20050923_Issue

கூத்தாடி


====

அரசியல் கட்சிகளுக்கு பஞ்சமில்லாத தமிழ்நாட்டில் இன்னும் ஒரு நடிகரின் புதிய கட்சி மதுரையில் தொடங்கப்பட்டுள்ளது.கழகங்களின் வரிசையில் புதியதாய் ஒன்றுக்கான தேவை இல்லாத நிலையில் தனிமனித ஆசையைத் தவிர வேறு ஏதும் புரட்சி இருப்பதாக தெரியவில்லை.விஜயகாந்த் திட்டமில்லாமல் T.R போல் உணர்ச்சி வேகத்தில் எதையும் செய்பவர் அல்ல என்பது அவரின் நடவடிக்கைகளை கவனித்து வருபவர்களுக்குத் தெரியும். அவரின் இந்த கட்சி தொடங்கலுக்கு காரணம் ‘ஒரு நடிகரின் முதல்வர் கனவு ‘,கனவு காண்பதை குறை சொல்லமுடியாது ,அதுவும் தங்கத் தமிழ் நாட்டில் !!

என்னுடைய பார்வையில் அவரின் அரசியல் ஆசைக்கு அவரின் M.G.R கனவும்,சோ ,சங்கராச்சாரியார்,பண்ருட்டி போன்றோரின்

பின்புலமுமே இவ்வுளவு சீக்கிரம் அவரை கட்சித் தொடங்க வைத்திருக்கிறது.கருணாநிதியின் வயதும்,அவருக்கு பின் திமுக வில் வரும் வெற்றிடத்தை ஸ்டாலினால் நிரப்ப முடியாததால் சிதறும் திமுக அநுதாபிகளின் வோட்டுக்களை கவரும் உத்தியும் இருக்கிறது(வை.கோ வும் இதற்காகத் தான் காத்திருக்கிறார்). அதைத்தவிர கொள்கை எல்லாம் சும்மா , கறுப்பு எம்.ஜி.யா ரின் பேட்டிகளிலோ,மாநாட்டு பேச்சிலோ எந்த ஒரு முதிர்ச்சியையோ,செயல் திட்டமோ,அரசியல்பார்வையையோ பார்க்க முடியவில்லை,சினிமா டயலாக் பேசியது மாதிரித்தான் இருந்தது , அதுவும் சங்கர் சினிமா ஏகப்பட்ட ஜிகினாக்களுடனும்,பிரச்சினைக்களுக்கு தீர்வான அலாவுதீன் பூதத்தை கொண்டுள்ள ஹீரோ.ஒரு திட்டம் ஒன்னு

வச்சிருக்கேன்னு பாட்டு வேற ..நல்ல செட்டு போட்டு எடுக்கப் பட்ட சினிமா நல்லாத்தான் இருந்தது.

தங்கக் கீரிடம் ,வெள்ளி செங்கோல் போன்றவை கழக கலாச்சாரத்தின் நகல்கள்.பாவம் அவரே M.G.R யின் நகலாகத் தானே இருக்கப்பார்க்கிறார்.அலங்கரிக்கப் பட்ட நாற்காலியை அகற்றி சாதாரண நாற்காலிக்கு தொண்டர்கள் முன் மாற்றுவது cheap ஆக செய்யப்பட்ட கொரியோகிராபி.குடும்ப அரசியலை விமர்சித்த அவரின் எந்த செயல்பாடுகளும் அதை வலியுறுத்துவதாய் தெரியவில்லை. வாழ்க அண்ணி ,வாழ்க மச்சான்..அண்ணனைப் பிடிப்பதற்கு இவர்கள் உதவுவார்கள்.

சோ ரஜினியை அரசியலுக்கு இழுக்க முயற்சி நடக்காததால் ,கறுப்பு M.G.R யை தூண்டிவிடுகிறார்,இது பி.ஜெ.பி யின் ஆசை வார்த்தைகளில் தெரிகிறது.குமுதம் தனது கருத்துக் கணிப்பில் 8 % ஆதரவு இருப்பதாக சொல்வது எவ்வுளவு தூரம் உண்மை ,ஆதரவை வோட்டுக்களாக மாற்றும் வித்தை அவர் ரசிகமணிகளுக்கு தெரியுமா என்பதல்லாம் இனிமேல் வரும் தேர்தலில் தெரியும்.அதுவரை பத்திரிகைகளின் அட்டைப்பட நாயகனாக தொடருவார் ..ஞாபகம் இருக்கிறதா வை.கோ,ரஜினி இப்படித்தான் அட்டைப்படங்களில் ஜொலித்தார்கள்.பாவம் அவர்களுக்கும் தொழில் நடக்க வேண்டாமா .

இன்றைய பார்வையில் விஜயகாந்த் எந்த சில திமுக,வைகோ வின் தெலுங்கு பேசும் ஓட்டுக்களை பிரிப்பதை தவிர வேறு எதுவும் செய்யமுடியுமா என்பது சந்தேகமே. ஆனால் வரும் காலங்களின் அவரின் செயல்பாடுகள் வெகுஜன சக்தியாக மாறமுடியும் அதற்கு சில நிகழ்வுகள் முக்கியம் ,அதில் முதலாவது கருணாநிதி இல்லாமையின்

வெற்றிடம் ,அதைப் பற்றிய எதேனும் கணிப்புகள் கூட அவரிடம் இருக்கக்கூடும் (ஆஸ்தான ஜோஸ்யர் யாரோ ! ) .ஜெ யை எதிர்த்து அவர் அரசியல் பண்ண முடியுமா என்பதற்கான பதில் வரும் மாதங்களில் தெரியும்.அதுவரை அவருக்கு நம் தேனிலவு வாழ்த்துக்களை தெரிவிப்போம்.

http://www.koothaadi.blogspot.com/

koothaadi@gmail.com

(நீக்கங்கள் உண்டு – திண்ணை குழு)

Series Navigation

கூத்தாடி

கூத்தாடி