பெண்களும், அறிவியலும்- அன்றைய ஹிப்பேஷியா முதல் இன்றைய ஹார்வார்ட் பல்கலை வரை-2

This entry is part of 26 in the series 20050923_Issue

K.ரவி ஸ்ரீநிவாஸ்


(இதன் ஒரு பகுதி உயிர்மை மே 2005 இதழில் வெளியானது. முழுக் கட்டுரை என் வலைப்பதிவில்

http://ravisrinivas.blogspot.com/ மே 3ம் தேதி இடப்பட்டது)

மேரி க்யுரி இருமுறை நோபல் பரிசு (1903,11) பெற்றவர், அவரது மகள் 1935ல் நோபல் பரிசு பெற்றார்.

ஆனால் இருவருமே பிரெஞ்ச் அறிவியல் அகாதமியில் உறுப்பினராகக் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இந்த அகதமிகளில் உறுப்பினர்களை பிற உறுப்பினர்களே தேர்ந்தெடுப்பார்கள்.1979ல்தான் பிரெஞ்ச் அறிவியல் அகதமியின் முதல் பெண் உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேரி க்யுரியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டு ஒட்டெடுப்பு நடத்தப்பட்டது.முதல் தடவை மேரி எதுவர்த் பிரான்லி என்பவரை விட ஒரு வாக்கே குறைவாகப் பெற்றிருந்தார்.பின்னர் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் பிரான்லியினை தேர்ந்தெடுத்தனர்.அப்போது அவருக்கு வயது 65, மேரிக்கோ 36தான். மார்கரெட் சோமர்வில்லின் கணித ஆய்வுகள் பெரும் மதிப்பினைப் பெற்றன,ஆனால் அவரை இங்கிலாந்தின் ராயல் சொசைட்டி உறுப்பினராகத்

தேர்ந்தெடுக்கவில்லை.கரோலின் ஹெர்ஷ்லின் ஆய்வுகளை அங்கீகரித்து ராயல் சொசைட்டி தங்கப் பதக்கம்

வழங்கியது.அவரை ராயல் ஐரிஷ் சொசைட்டி 1838ல் அவரது 88வது வயதில் வெளிநாட்டு உறுப்பினராகத்

தேர்ந்தெடுத்தது, ராயல் சொசைட்டி தேர்ந்தெடுக்கவில்லை. பிற அகதமிகளில் கிட்டதட்ட இதே போல்தான் இருந்தது.

அதே சமயம் சில ஆண் உறுப்பினர்கள் பெண்கள் உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதில் அக்கறை காட்டினர்.முதல் உலகப் போருக்குப் பின் இத்தகைய கோரிக்கைகள் வலுப்பெற்றன.ராயல் சொசைட்டியில் பெண் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என வற்புறுத்தியவர்களில் இடதுசாரி விஞ்ஞானிகளான ஜே.டி.பெர்னாலும், ஜே.பி.எஸ்.ஹால்டேனும் முக்கியமானவர்கள். 1943ல் ராயல் சொசைட்டி இந்தியாவிலிருந்து ஆறு ஆண் உறுப்பினர்களை தேர்ந்தெடுத்த போது பெண் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்காதது குறித்து ஹால்டேன் கேள்வி எழுப்பினார்.1940 முதல் 1945 வரை ராயல் சொசைட்டியின் தலைவராக இருந்த சர் ஹென்ரி டேலின் பெரு முயற்சியால் இரு பெண் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அமெரிக்காவில் 1925ல்தான் தேசிய அறிவியல் அகாதமியின் முதல் பெண் உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேரி க்யுரி உட்பட பல பெண் அறிவியலாளர்கள் பிற நாட்டு அறிவியல் அகாதமியில் அயல் நாட்டு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர், ஆனால் அவர்கள் பணியாற்றிய அல்லது தாய் நாட்டில் அந்த கெளரவம் தரப்படவில்லை.

1970களில்தான் நிலைமை மாறத் துவங்கியது.இதற்கு முக்கிய காரணம் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் பெண் உறுப்பினர்கள் ஒரளவேனும் இருந்ததால் அகாதமிகளில் பெண்களை தேர்ந்தெடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்தன.பெண் உறுப்பினர்களின் தெரிவுகள் கவனம் பெற்றன.

இதனால் பெண்கள் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்படுவது அதிகரித்தது.சில நாடுகளில் (உ-ம்: கிரீஸ்,ஸ்பெயின்,இத்தாலி) பெண்கள் முதன்முதலாக 1990களில்தான் உறுப்பினர்களாக அறிவியல் அகாதமிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பெண்கள் உயர்கல்வி கற்பது 1870களுக்குப் பின் பல நாடுகளில் சாத்தியமானாலும் அறிவியல் துறைகளில் பெண்களுக்கு உயர்பதவிகள் பெரும்பாலும் எட்டாக்கனிகளாகவே இருந்தன.பல பெண் அறிவியலாளர்கள் உரிய அங்கீகாரம் பெறாமல் பலவேறு சிரமங்கள், பிரச்சினைகளிக்கிடையேதான் அறிவியலில் ஈடுபட வேண்டியதாயிற்று. சிலர் போதுமான தகுதிகள் இருந்தும் அறிவியல் ஆய்வுகள் சார்ந்த வேலைகள் கிடைக்காததால் அறிவியலுடன் ஒரளவு தொடர்புடைய வேலைகளையே செய்ய வேண்டியதாயிற்று. மெளன

வசந்தம் என்ற புத்தகம் எழுதிய ராசேல் கர்சான் இதற்கு ஒரு உதாரணம். பெண் என்றே ஒரே காரணத்தினால் பொருத்தமான வேலை கிடைக்காமல் அல்லாடியவர்கள் பலர். ஆனால் தாங்கள் பெண்கள் என்பதற்காக பாரபட்சம் காட்டப்பட்டோம் என்பதை ஒப்புக்கொள்ள மறுத்தவர்களும் உண்டு. நோபல் பரிசு பெற்ற அறிவியலாளர் பார்பரா மக்ளிண்டாக்கின் வாழ்க்கை வரலாற்றினை எழுதிய எவ்லின் பாக்ஸ் கெல்லர்

மக்ளிண்டாக் சந்தித்த இடர்களை விரிவாக விளக்குகிறார்.மிகச் சிறந்த ஆய்வாளாராக இருந்த போதும்

நிலையான வேலை கிடைக்க அவர் சிரமப்பட வேண்டியிருந்தது. (குறிப்பு : மக்ளிண்டாக் குறித்து கெல்லர் எழுதியுள்ளவை சர்ச்சிக்கப்பட்டுள்ளன).

1970களில் கார்னிக் நூறு பெண் அறிவியலாளர்களை பேட்டி கண்ட போது பலர் அறிவியல் வாழ்வு குறித்து திருப்தியே தெரிவித்தனர், தாங்கள் நல்ல அறிவியல் செய்தததாகவே கருதுவதாகக் கூறினர். ஆனால் அவர்களில் பலருக்கு தாங்கள் ஒன்றாக குரல் கொடுத்திருந்தால் அல்லது முயற்சிகள் மேற்கொண்டிருந்தால் பாரபட்சங்களை குறைத்திருக்க முடியும் என்பது தோன்றவில்லை. அறிவியல் என்று வந்துவிட்டால் பிறவெல்லாம் இரண்டாம் பட்சம் என்று நினைப்பதில் தவறில்லை, ஆனால் அறிவியலில் ஈடுபடும் பெண்களின் பிரச்சினைகளைக் கூட அவர்களில் பலரால் அங்கீகரிக்க முடியவில்லை. இதனால் பெண் அறிவியலாளர்கள் கூட பெண்களை அறிவியலில் ஊக்குவிக்க வேண்டுமென்றால் அதற்கு தடையாக உள்ளவற்றை அகற்ற வேண்டும் என்ற உணர்வின்றி இருந்தனர். சமத்துவம் என்பது நடைமுறையில் எப்படி இருந்தது என்பதை

அவர்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

சர் சி.வி.ராமனின் ஆய்வுக்கூடத்தில் அறிவியல் ஆய்வில் ஈடுபட்டிருந்தவரும், இந்திய வானிலை ஆராய்ச்சி

துறையில் உயர் பதவி வகித்தவருமான அன்னா மணி தன் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் போது ராமன் தன் ஆய்வுக்கூடத்தில் ஆண்களும் பெண்களும் சேர்ந்து பழகுவதையும், விவாதிப்பதையும் எதிர்த்தார் என்று கூறியிருக்கிறார்.தான் பெண் என்பதால் எந்தவிதத்திலும் பாகுபாட்டினை எதிர் நோக்கவில்லை என்று கூறியிருக்கிறார். ஆனால் அவரே ஒரு ஆய்வாளருடன் ஒரு விரிவான உரையாடலுக்குப் பின் தான் பெண்களை தேர்ந்தெடுத்திருந்தால் ஒரு முன் மாதிரியாக இருந்திருக்கக் கூடும் என்பதை ஒப்புக்கொண்டார். ஆனால் அதற்கான தேவையை அவர் அப்போது உணர்வில்லை. சமத்துவம் என்பது நடைமுறையில்

இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது பெண்கள் அறிவியலில் ஈடுபடவும், ஈடுபட்டுள்ள

பெண் அறிவியலாளர்களை ஒன்றுதிரட்டவும் தேவை இருப்பதை அவர் போன்றவர்கள் உணரவில்லை. மாறாக தாங்கள் பெண் என்பதால் எந்த விசேஷ சலுகையும் கோரக்கூடாது, அதற்கு தேவையுமில்லை, ஏனெனில் அறிவியலில் ஆண்-பெண் பாகுபாடு இல்லை என்று கருதினர். ஆனால் வரலாறு இந்த சமத்துவம் எத்தனை போலியானது என்பதை நமக்குக் காட்டுகிறது.

ஆண்கள் முன்னிறுத்தும், சமூகத்தில் நிலவும் விழுமியங்களை பெண்கள் கேள்விக்குட்படுத்தாது ஏற்கும் போது பிற பெண்களின் பிரச்சினைகளை உணரத் தவறுகிறார்கள்.ஏன் நானும் பெண்தானே, அப்புறம் உனக்கு மட்டும் எதற்கு சலுகை அல்லது விதிவிலக்கு என்று ஒரு துறைத்தலைவர், கருத்தரித்துள்ள அல்லது சிறு வயது குழந்தைகளை வைத்துக் கொண்டு சிரமப்படும் பெண்ணின் கோரிக்கைகளை செவிமடுக்கவே தயாராக இல்லாத போது அவர் இப்பிரச்சினைகள் எந்த அளவிற்கு பெண்கள் அறிவியலில் ஈடுபட தடையாக உள்ளது என்பதை புரிந்து கொள்ள மறுக்கிறார்.எனவே பெண் அறிவியலாளர்கள் பலர் தடைகளை எதிர்கொண்டாலும் ஒரு பெண்ணியக் கண்ணோட்டத்தில் அதை அணுகாத போது, தாங்கள் பெண்கள் அறிவியலில் ஈடுபடுவதை ஊக்குவிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படாமல், சமத்துவம் முழுமையாக நிலவுகிறது என்று நம்பும் போது தாங்கள் விரும்பியோ, விரும்பாமலோ பிற பெண்கள் அறிவியலில் ஈடுபட அவர்கள் உதவிகரமாக இருப்பதில்லை. இதற்கு பெண் என்பதற்காக தாங்கள் சலுகைகள் காட்டுகிறோம் என்று விமர்சிக்கப்படுவோமோ என்ற அச்சமும் ஒரு காரணம்.

பெண்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கும் போது அவர்களின் இருப்பே அங்கீகாரம்

பெறாது, அவர்கள் குரல்களும் உரிய கவனம் பெறாது. ஆனால் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது இது மாறும் வாய்ப்புண்டு. உதாரணமாக பெண்களின் எண்ணிக்கை 1% அல்லது 3% என்று இருக்கும் போது அவர்கள் மிகச்சிறுபான்மையினராகவே இருப்பர். அதே சமயம் அது 20% அல்லது 30%

என்றிருக்கும் போது அவர்களை புறக்கணிக்கப்பது கடினம். அதுவே 40%, அதற்கு மேல் என்றிருக்கும் போது தீர்மானிக்கும் சக்தி அவர்களிடமிருக்கும். எனவே பெண்களின் எண்ணிக்கை குறிப்பிட்ட அளவிற்கு உயராத போது அவர்களை புறக்கணிப்பது எளிது. ஆனால் எண்ணிக்கை மட்டும் போதுமானதல்ல,

நிறுவனங்களும் தங்கள் பங்கினையாற்ற வேண்டும் என்ற வாதம் முன்வைக்கப்படுள்ளது. சிறு குழந்தை

கவனிப்பு வசதி, பிரசவகால விடுப்பு,பெண்களை பணி நிரந்தரம் செய்வதில் சில மாறுதல்கள், பெண் அறிவியலாளர்களை பணிக்கெடுப்பதில் ஊக்குவிப்பு போன்றவற்றை அறிவியல் ஆய்வுக்கூடங்கள், பல்கலைகழகங்கள் கடைப்பிடித்தால் பெண்கள் அறிவியலில் பங்கேற்பது அதிகரிக்கும். இதற்கு உதாரணமாக கிழக்கு ஐரோப்பிட்ய நாடுகளைக் கூறலாம். சோசலிச அரசுகள் சிறு குழந்தை கவனிப்பு வசதியினை அளித்தன. பின்னர் அரசியல் மாற்றம் ஏற்பட்டபின்னும் கூட அரசு இவ்வசதியைத் தரும் அல்லது அதற்கான மான்யம் வழங்கும் முந்தையைய கிழக்கு ஜெர்மனியில் பெண்கள் அறிவியலில் பங்கேற்பது அதிகமாக உள்ளது. அவர்கள் உயர்பதவிகளில் அதிகமாக இல்லை என்பது வேறி விஷயம்.

பெண்கள் அதிகமாக அறிவியலில் ஏன் இல்லை, அவர்கள் பங்கேற்ப்பினை ஏன், எப்படி அதிகரிக்க வேண்டும் என்பது குறித்த விவாதங்கள் 1960களின் பிற்பகுதியில், 1970களில்தான் பரவலாகத் தொடங்கின.

இது குறித்து விரிவான ஆய்வுகள் செய்யப்பட்டன. இவற்றின் அடிப்படையில் பெண்கள் அறிவியலில் பங்கேற்ப்பினை அதிகரிக்க உதவும் வகையில் சில கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. இருப்பினும்

பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. மேலும் அறிவியலில் உயர்கல்வி பெறும் பெண்களில் எத்தனை பேர் அறிவியலினை ஒரு தொழிலாக தேர்வு செய்கிறார்கள், அவர்கள் அதில் எந்த அளவு முன்னேறுகிறார்கள் என்பது குறித்தும் ஆய்வுகள் செய்யப்பட்டன. அமெரிக்கவை மட்டும் எடுத்துக் கொண்டால் புள்ளிவிபரங்கள் பெண்கள் இன்னும் கடக்க வேண்டிய தூரம் அதிகம் என்றே காட்டுகின்றன.

Ph.Ds earned by women in 2002 – U.S. ciitizens at all institutions

% total

physical sciences 29% 2997

engineering 19% 1890

life sciences 50% 5327

social sciences 60% 4901

humanities 50% 4139

education 67% 5265

total 51% 25935

Total is for men and women, excluding phds in business, management,and

other professional fields

Source – The Chronicle of Higer Education 3rd Dec 2004

ஆனால் பல்கலைகழகங்களில், ஆய்வுக்கூடங்களில் பெண்கள் ஆசிரியர்களாக, பேராசிரியர்களாக உள்ள

விகிதம் குறைவாகவே உள்ளது. ஆராய்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் பல்கலைகழகங்களில் ஆண் பேராசிரியர்களின் விகிதம் 70%க்கும் அதிகம்.புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் உதவிப் பேராசிரியர்களில் 60% ஆண்கள். எனவே முனைவர் பட்டம் பெற்றப் பெண்கள் அதே விகிதத்தில் பல்கலைகழகங்களில் ஆசிரியர் வேலைகளில் ஏன் இல்லை என்ற கேள்வி எழுகிறது.ஹார்வார்ட் தலைவருக்கு கடிதம் எழுதிய மூத்த பெண் ஆசிரியர்கள், கலை மற்றும் அறிவியல் புலங்களில் பணி நிரந்தம் செய்யப்ண்ட்ட 32 பேரில் 4 பேர்தான் பெண்கள் என்று குறிப்பிட்டனர்.கலிபோர்னியா பல்கலைகழத்தில் பெண்கள் பணிக்கு சேர்க்கப்படுவது 1990களில் வெகுவாக குறைந்த போது பெண் பேராசிரியர்கள் குரல் எழுப்பினர், மாநில சட்டசபை இது குறித்து கருத்தறிந்தது.தற்போது பெண்கள் அதிக அளவில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.பெண் ஆசிரியர்கள், பேராசிரியர்கள் பெறும் ஊதியமும் ஆண் ஆசிரியர்கள், பேராசிரியர்களை விட குறைவாக உள்ளது.ஆராய்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் பல்கலைகழகங்களில் பெண் துணைப் பேராசிரியர்களை விட ஆண் துணைப்பேராசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட 23% அதிக வாய்ப்புள்ளது. அது போல் பணி நிரந்தரமான பின் பெண்களை விட ஆண்கள் பேராசிரியர்களாக நியமிக்கப்படும் வாய்ப்பும் அதிகம். பல்வேறு கோணங்களில் இப்பிரச்சினைகளை விவாதிக்க வேண்டும். ஏனெனில் பாலியல் ரீதியான வெளிப்படையான பாரபட்சம் இல்லாதது போல் தோன்றினாலும் பெண்களுக்கு எதிரான பல காரணிகள் உள்ளன. அவற்றுள் முக்கியமான ஒன்று பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் போது ஆண், பெண் எப்படி கருதப்படுகிறார்கள் என்பது.

மிச்சிகன் பல்கலைகழகத்தில் பணிக்குத் தேர்ந்தெடுக்கும் போது எப்படிபட்ட பாரபட்சங்கள், அவை நேரடியாகத் தெரியாவிட்டாலும் மறைமுகமாக உள்ளன என்பது குறித்து பேராசிரியர்களுக்கு விளக்கப்பட்டது. இதை எப்படித் தவிர்ப்பது என்பது குறித்து பயிலரங்குகள் நடத்தப்பட்டன. தேர்ந்தெடுக்கும் போது பொதுவான மதிப்பீடிற்குப் பதிலாக குறிப்பிட்ட அளவுகோல்களின் படி , உ-ம் பாடங்கள் கற்பிக்கும் திறன், ஆய்வுத் திறன் மதிப்பீடு செய்யுமாறு கோரப்பட்டது. இதன் விளைவாக பெண்களை தேர்ந்தெடுப்பது அதிகரித்துள்ளது. அறிவியல் மற்றும் பொறியியலில் 2001 ல் தேர்ந்தெடுக்கப்படவர்களில் பெண்களின் சதவீதம் 13 ஆக இருந்தது, 2003/2004ல் அது 39% ஆக உயர்ந்தது.

M.I.T யில் 2002-2004ல் பொறியியல் புலத்தில் 17 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர், இது 44% ஆகும். பெண்களைத் தேர்ந்தெடுக்க தொழிற்த்துறை, தேசிய ஆய்வகங்கள் போன்றவற்றில் தேடுதல் செய்யப்பட்டது.M.I.T யில் 1999ல் பெண்களின் எண்ணிக்கை அறிவியல் புலங்களில் குறைவாக இருக்கிறது குறித்த அறிக்கை வெளியான பின் பெண்கள் பணிக்கு எடுக்கப்படுவது அதிகரித்துள்ளது. பல பல்கலைகழகங்களில் பெண்களை தேர்ந்தெடுப்பதை ஊக்குவிக்கும் சிறப்பு திட்டங்கள், நிதி உதவியுடன் நடைமுறையில் உள்ளன. பல பல்கலைகழகங்கள் ஆண்டுதோறும் தங்கள் பல்கலைகழகங்களில் பல் வேறு தரப்பினர் இடம் பெறுவது குறித்து அறிக்கைகளை, புள்ளிவிபரங்களுடன் வெளியிடுகின்றன. போதிய பிரதிந்தித்துவம் இல்லாத தரப்பினர் அதைப் பெற வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டுள்ளன. அமெரிக்காவின் தேசிய அறிவியல் அமைப்பு சில பல்கலைகழகங்களில் குறிப்பிட்ட புலங்களில் பெண்கள் சேர்வதையும், அறிவியல், தொழில்நுட்பத் துறைகளில் பெண்கள் ஆய்வு மேற்கொள்வதையும் ஊக்குவிக்க நிதி உதவி வழங்குகிறது.

இவையெல்லாம் பெண்கள் போதிய பிரதிநிதித்துவம் பெற வேண்டும் என்பதற்காக செய்யப்படுபவை. இவை இரக்கத்தினால் தரப்படும் சலுகைகளோ அல்லது கருணையினால் செய்யப்படும் முயற்சிகளோ அல்ல. சமத்துவம் என்பது முழு அளவில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமெனில் இது போன்ற முயற்சிகள் தேவை.

இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு முக்கியமானப் பிரச்சினை பெண்கள் ஆரம்பக் கல்வி கற்ற பின் அடுத்தக் கட்ட படிப்பினைத் தொடர்வது. ஆரம்பக் கல்வியுடன் நின்று விடும் பெண்களின் எண்ணிக்கையை குறைப்பது தேவை. இந்தியாவை பொறுத்த வரையில் அறிவியல், பொறியியல் துறைகள் பெண்களுக்கு உகந்தவை இல்லை என்று சமூகரீதியாக கருதப்படுவதும் ஒரு தடையாக உள்ளது. முனைவர் பட்ட ஆய்வுகளை மேற்கொள்ளும் நிலையில் பெண்களின் எண்ணிக்கை, பட்ட மேற்படிப்பு படித்த பெண்களின் எண்ணிகையுடன் ஒப்பிடுகையில் 37% ஆகவே உள்ளது. சில துறைகளில் உ-ம் வேளாண்மை, பொறியியல்,விவசாயம் பல்கலைகழகங்களில் பெண் மாணவிகள் எண்ணிக்கை 20%க்கும் குறைவாகவே உள்ளது. இங்கு மாநிலங்களுக்கிடையே பெண் கல்வி, எழுத்தறிவில் பெரும் வேறுபாடு காணப்படுவதையும் கருத்தில் கொள்ள வேண்டும். உயிரியதொழில் நுட்ப அமைச்சகம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆகியவற்றில் அறிவிவலாளர்கள் மட்டத்தில் பெண்களின் எண்ணிக்கை 25%க் கும் குறைவென்றால், வேறு பல அமைப்புகளில் இது 15%க்கும் குறைவாகவே உள்ளது. பெண் அறிவியலாளர்களிடையே செய்யப்பட்ட ஆய்வுகள், கருத்துக்கணிப்புகளிலிருந்து பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பலவகைப்பட்டவை என்பது புலனாகிறது. பல பெண்கள் தாங்கள் இரட்டை சுமையை, அதாவது வீட்டிலும் வேலை செய்வது, அலுவலகத்திலும் வேலை செய்வது சுமப்பதாகக் கூறுகின்றனர். ஆண்களை விட வீட்டு வேலைகளுக்கு அதிக நேரம், உழைப்பினை தாங்கள் செலவிட வேண்டியுள்ளதாகக் குறிப்பிடுகின்றனர்.ஒரு ஆய்வில் கேள்வி கேட்கப்பட்ட பெண்களில் 90% திருமனம் தங்கள் ஆய்வுப் பணிகளை பாதிப்பதாகக் குறிப்பிட்டனர். இதற்கு காரணம் திருமணமான பெண்களின் சமூகப் பொறுப்புகள்.

குழந்தைகளை கவனித்துக் கொள்ள ஆட்கள் கிடைக்கும் போது சுமை ஒரளவிற்குக் குறைந்தாலும், அனைவராலும் இதனால் பயன் பெறுகின்றனர் என்று கூற முடியாது. ஏனெனில் பல நகரங்களில் குழந்தைகளை கவனித்துக் கொள்வோர் எந்த அளவிற்கு பொறுப்பாக இருப்பார்கள் என்பது குறித்து சந்தேகம் நிலவுகிறது. ஆய்வு நிலையங்கள், பல்கலைகழகங்களில் இவ்வசதிகள் இல்லாததும் ஒரு குறையாக உள்ளது. திருமணமான பெண்கள் திருமணமாகாத பெண்களுடன் ஒப்பிடப்படுகையில், சில அளவுகோல்களில், திருமணமாகாத பெண்களைவிட அதிகமாக செயல்புரிவதாக ஒரு ஆய்வு கூறுகிறது. இதற்கு ஒரு முக்கிய காரணம் திருமணமான பெண்களுக்கு சாதகமான சமூகச் சூழல் ஒரளவிற்கு நிலவுவதாகும். பல பெண் அறிவியலாளர்கள் திருமணம், குழந்தைப் பெற்றுக்கொள்தல், வளர்ப்பு போன்றவற்றால் தாங்கள் சில ஆண்டுகளேனும் அறிவியலில் ஈடுபட முடியாத நிலை உள்ளதையும், பல சமயங்களில் கூட்டுக் குடும்பச் சூழல் தங்களுக்கு பாதகமாக உள்ளதையும் குறிப்பிடுகின்றனர். பலருக்கு திருமனம் என்பது இடம் பெயர்விற்கு இட்டுச் செல்கிறது. இதுகாரணமாகவும் சில பிரச்சினைகள் எழுகின்றன.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது சமூக்ச்சூழல், ஆய்வு நிலையங்களில் உள்ள சூழல் பெண்கள் அறிவியலில் ஈடுபட பெருமளவிற்கு சாதகமாக இல்லை. ஒரு பெண் அறிவியலாளர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அவர் மட்டும் தனிப்பட்ட முறையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அல்ல. அதற்கான சமூக காரணிகள் உள்ளன. எனவே பெண் அறிவியலாளர்கள் ஒன்றுபட்டு தங்கள் பிரச்சினைகளை எதிர்கொள்வது தவிர்க்க இயலாததாகிறது.

பெண்களுக்கு எதிராக உள்ள நேரடி, மறைமுகக் காரணிகளை கண்டறிந்து அவற்றை நீக்க முயற்சி அவசியம். ஏட்டளவில் சமத்துவம் நிலவுவதாலோ அல்லது பெண்கள் அதிக அளவில் பட்டங்கள் பெறுவதாலோ மட்டும் இக்காரணிகள் மறைந்து விடாது. மாறாக பெண்கள் அறிவியலில் பங்கேற்பதை அதிகரிக்க பல்வேறு கட்டங்களில் பல்வேறு விதமான முயற்சிகள் தேவைப்படும். ஒரு பெண் பேராசிரியர் சில பெண் ஆய்வாளர்களுக்கு வழிகாட்டியாக, ஆலோசகராக இருந்து உதவுவது, அவர்கள் பொருத்தமான வேலைகளுக்கு விண்ணப்பிக்கும் போது உதவுவது, போன்று பலவிதங்களில் செயல்படுவதை mentoring என்று அழைக்கிறார்கள். இதனை ஊக்குவிக்கும் பல்கலைகழகங்கள் பெண் அறிவியலாளர்கள் வேலை தேடும் ஆரம்ப கட்டங்களில், பணி செய்யும் துவக்க காலங்களில் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகளை தீர்க்க mentoring உதவுகிறது என்பதால் அதை ஆதரிக்கின்றன. எனவே பெண்கள் அதிக அளவில் அறிவியலில் பங்கேற்க ஒற்றை தீர்வென்று ஏதுமில்லை. அமெரிக்காவில் செய்யப்படும் சில முயற்சிகள் இந்தியாவில் பெருமளவு பொருந்தாதவையாக இருக்கலாம். நிலவும் சூழல், சமூக அமைப்பு,விழுமியங்களைக் கருத்தில் கொண்டு தீர்வுகளை முன்னிறுத்த வேண்டும். மேலும் பெண்களிடையே பெண்கள் அறிவியலில் அதிக அளவில் பங்கேற்பதின் தேவை குறித்து விழிப்புணர்வும், தடைகளை சமாளிக்கும் வழிகள் குறித்த புரிதலும் அதிகரிக்க வேண்டும்.

இருபத்தியோராம் நூற்றாண்டின் துவக்கத்தில் அறிவியலில் பெண்களில் நிலை அவ்வளவு சிறப்பாக இல்லை. இதை மாற்ற வேண்டும் என்ற விழிப்புணர்வினை சம்மர்ஸ் போன்றவர்களின் கருத்துக்களால் குறைத்துவிட முடியாது. ஒரு பல்முனைப் போராட்டத்தின் தேவையை இன்று பெண் அறிவியலாளர்கள் அதிகமாகவே உணர்ந்திருக்கிறார்கள். இதன் விளைவாக சம்மர்ஸ்களையும் மீறி சாதகமான மாற்ற்ங்கள் வரும். அதை எப்படி துரிதப்படுத்த வேண்டும் என்பதில் அனைவரும் அக்கறை காட்ட வேண்டும். அறிவியல் என்ற செயல்பாடு சமூகத்திற்கு வெளியே இல்லை. இதைப் புரிந்து கொண்டால் அறிவியலில் பெண்கள் அதிக அளவில் பங்கேற்பது, உரிய இடத்தினைப் பெறுவது என்பது சமூக மாற்றத்தின் விளைவாகவும், காரணியாகவும் இருக்கும் என்பதை எளிதில் அறிய முடியும்.

குறிப்புகள்

1, பெண்ணிய நோக்கில் அறிவியல் குறித்த விமர்சனங்கள், ஆய்வுகளை இக்கட்டுரையில் குறிப்பிடவில்லை. அதனளவிலேயே அது ஒரு விரிவான அலசலைக் கோருவது. இக்கட்டுரை ஒரு குறிப்பிட்ட அம்சத்தின் சில பரிமாணங்களை முன்னிறுத்தி விவாதிக்கும் முயற்சி.

2, சம்மர்ஸ் கூறியதை ஒரு பின்புலமாகக் கொண்டு இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. இச்சர்ச்சை குறித்த விவாதங்கள் இன்னும் தொடர்கின்றன, இனியும் தொடரும். ஏதேனும் ஒரு சந்தர்பத்தில் அதை தொகுத்துக் கொண்டு எழுதுவதும் பொருத்தமாயிருக்கும் என்பதால் இக்கட்டுரையில் அச்சர்ச்சைக்கு ஒரள்விற்கு மேல் இடம் தரப்படவில்லை. இக்கட்டுரைக்கு தொடர்பில்லை என்பதால் சம்மர்ஸ் உலக வங்கியில் பணியாற்றிய போது முன் வைத்த சுற்றுச்சூழல் குறித்த கருத்தினையும், அதற்கான எதிர்வினைகளும் இக்கட்டுரையில் இடம் பெறவில்லை.

3, இக்கட்டுரையில் சில ஆய்வுகள், சான்றுகள் மட்டுமே தரப்பட்டுள்ளன.இந்த விஷயம் ஒரு நூலிற்குரியது என்பதால் விரிவஞ்சி கட்டுரையில் சிலவற்றைம் மட்டுமே குறிப்பிடுகிறேன். வேறு பல காரணங்கள் குறித்தும் எழுதப்பட்டுள்ளன. இவற்றுள் சில, உ-ம் queen bee syndrome, சர்ச்சைக்குரியவை. அவற்றை கருத்தில் கொண்டு இக்கட்டுரையை எழுதவில்லை.

நூல்,கட்டுரைப் பட்டியல்

Margaret Alic – Hypatia ‘s Heritage: A History of women in science from antiquity through 19th Century-Boston:Beacon Press-1986

Henry Erkowitz and others – Athena Unbound: The Advancement of Women in Science and Technology – Cambridge University Press-2000

Etzkowitz, Henry and others. ‘The Paradox of Critical Mass for Women in Science. ‘ Science 266 (October 1994): 51-54.

Namrata Gupta ,Arun K.Sharma – Women Academic Scientists in India – Social Studies of Science Vol 32 No 5-6 – 2002

Robin Wilson – Women in Higher Education – The Chronicle of Higher Education – Dec 3, 2004

Richard Gallagher, Ivan Oransky – Women, Science and Academia- The Scientist-vol 19 no 7 April 11 2005

Abha Sur – The Life and times of a Pioneer – The Hindu – Sunday Magazine Oct 14 2001

Veena Poonacha – Uncovering the Gender Politics of Science Policies and Education – Economic and Political Weekly Jan 15 2005 www.epw.org.in

Patricia Campion, Wesley Shrum – Gender and Science in Development : Women Scientists in Ghana, Kenya and India-

Science, Technology and Human Values – Vol 29 No 4 2004

Greta Noordenbos – Women in Academies of Science : From Exclusion to Exception – Womens ‘ Studies International Forum-Vol 25 No 1 2002

Londa Schiebinger – The Mind Has No Sex – Women in the origins of modern science- Harvard University Press-1989

Londa Schiebinger- Has Feminism Changed Science-Harvard University Press-1999

E.F.Keller – A Feeling For Organism-The Life & Work of Barbara McClintock-W.H. Freeman-1983

Mary Terrall -Book Review: Pandora ‘s Breeches: Women, Science and Power in the Enlightenment-

European History Quarterly, Jan 2005; 35: 187 – 190.

R.Ramachandran- Sexism and Science , The Indian Situation – Frontline- Vol 22 No 6 March 12-25 2005

இணையமுகவரிகள் இப்பட்டியலில் தரப்படவில்லை.

—-

Series Navigation