மகளிர் இட ஒதுக்கீட்டுப் பிரச்சினை!

This entry is part [part not set] of 25 in the series 20050812_Issue

அக்னிப்புத்திரன்


விஞ்ஞான வளர்ச்சியின் உன்னதமான உயரத்தை உலகம் எட்டிப் பிடித்திருக்கின்றது! அறிவியல் அகிலத்தையே ஆட்டிப் படைகின்றது! ஆனால், இன்றும் பெண்கள் என்று வரும்போது அனைத்துலக அளவிலும் சரி நம் இந்திய சமூகத்திலும் சரி, அவர்களுடைய முன்னேற்றத்தை எதிர்க்கும் போக்கு, சம உரிமையை மறுக்கும் போக்கு ஆண் ஆதிக்கம் மிக்க இச்சமுதாயத்தில் அதிமாகவே காணப்படுகின்றன. குறிப்பாக இந்திய சமுதாயத்தில் இப்போக்கு இன்னும் சற்று அதிமாகவே காணப்படுகின்றது.

மேல்நாடோ, கீழ் நாடோ பெண்களை எதிர்க்கின்ற வி ?யங்கள், எதிர்ப்பின் தன்மை, அதன் தீவிரம் ஆகியவற்றில் வேண்டுமானால் நாட்டுக்கு நாடு சமுதாயத்துக்குச் சமுதாயம் வேறுபாடு இருக்கலாம். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது பெண்களுக்கு எதிரான போக்கு உலகு எங்கும் காணப்படுகின்றது.

இந்திய சமுதாயத்தில் ஆணாதிக்க மனப்பான்மை முன்பைவிட சற்றுக் குறைந்திருக்கிறது, ஆனால் முற்றிலுமாக மறையவும் இல்லை! மகளீருக்குச் சம உரிமை கொடுக்கப்படவும் இல்லை!

பெண்களிடம் இந்திய சமூகம் எதிர்ப்பார்ப்பதெல்லாம் அவர்கள் கூண்டுப்பறவைகளாக வீட்டிலேயே தங்கித் தங்களின் பல்வேறு தேவைகளையும் நிறைவேற்றித் தங்களுக்குத் தொண்டு செய்து திருப்திபடுத்தப் வேண்டும். விரல் சொடுக்கினால் வந்து நிற்கும் சேவகியாக பெண்கள் இருக்க வேண்டும். அடக்க ஒடுக்கமாக வீட்டிலேயே அடங்கிக் கிடக்க வேண்டும்.

சிறுவயதில் பெற்றோர்களுக்குப் பயந்தும் பணிந்தும், வாலிப வயதில் கணவனுக்குப் பயந்தும் பணிந்தும், முதுமைப்பருவத்தில் பிள்ளைகளிடம் பயந்தும் பணிந்தும் வாழ வேண்டும். இப்படி வாழ்நாள் முழுவதும் பயந்து பயந்து, பணிந்து பணிந்து, பெண்கள் வாழ வேண்டும்… இதுவே இந்திய சமுதாயத்தின் எதிர்ப்பார்ப்பு!

இன்றும் இந்தியாவில் பெண்சிசுக்கொலை, வரதட்சிணைக் கொடுமை, பாலியல் வன்கொடுமை என்று எத்தனை எத்தனையோ தாக்குதல்கள் பெண்ணினம் மீது!

அடுப்பு ஊதும் பெண்களுக்குப் படிப்பு எதற்கு என்ற இந்திய சமுதாயத்தின் பழமைவாதக் கருத்துக்கு எதிராக, பெண் கல்வியை ஆதரித்தும் போற்றியும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அன்றே முழக்கமிட்டார்.

கல்வி இல்லாத பெண்கள் களர் நிலம்!

அந்நிலத்தில் புல் விளைந்திடலாம்! நல்ல

புதல்வர்கள் விளைதல் இல்லை!

என்று பாடிய அவரின் அன்றைய கனவு, இன்றைக்காவது நிறைவேறியதா என்றால் ஏதோ ஓரளவுக்குத்தான் நிறைவேறி உள்ளது என்று கூறலாம். மேலோட்டமாய்ப் பார்க்கும் போது ஏதோ பெண்களுக்கு உரிமைகள் கொடுக்கப்பட்டு விட்டதைப் போல ஒரு மாயத்தோற்றம் தெரியும். ஆனால் நன்கு ஆராய்ந்து பார்த்தோமானால் அதன் அடியில் பல கசப்பான உண்மைகள் ஒளிந்திருக்கின்றன என்பதே உண்மை!

பெண் குழந்தைக்குக் கள்ளிப்பால் கொடுத்து கொல்லும் கொடூரம் இந்தியக் கிராமங்களில் இன்னும் தொடருகின்றது.

பெண் குழந்தையை விட ஆண் குழந்தையைத்தான் இந்திய சமூகத்தில் அதிகம் விரும்புகின்றார்கள். பெண் குழந்தையே கடன் என்ற பார்வையும் ஆண்குழந்தை வரவு என்ற பார்வையும் உள்ளது. இப் பிரச்சினையைத் தீர்க்க நகர படித்த மக்கள் கையாளும் வழி சற்று வித்தியாசமானது. கர்ப்பத்தில் சிசு இருக்குப்போது ஆணா, பெண்ணா என்பதை நவீன மருத்துவத்தின் வழி கண்டறிந்து கர்பத்திலேயே பெண் குழந்தையைக் கொன்று விடுகின்றார்கள்.

பெண் குழந்தைகள் பிறக்கவே உரிமை கொடுக்க மறுக்கின்றது இந்திய சமுதாயம். பிறந்த பின்னும் உரிமையைத் தர மறுக்கின்றது. அன்றும் சரி இன்றும் சரி இந்திய சமுதாயத்தில் பெண்களுக்குச் உரிய உரிமைகள் கொடுக்கப்படவில்லை. முப்பத்தி மூன்று சதவீத இட ஒதுக்கீட்டுக்கே ஆயிரம் தடைகள். நாடாளுமன்றத்திலும், சட்டப்பேரவையிலும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதில் ஏற்பட்டுள்ள தேக்க நிலையைப் போக்க மத்திய அரசு அண்மையில் ஒரு புதிய யோசனையை முன் வைத்துள்ளது. நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைத் தொகுதிகளைத் தற்போது உள்ளதைவிட மூன்றில் ஒரு பங்கு அதிகரிக்கலாம் என்பதுதான் அந்த யோசனை. இதன் மூலம் நீண்ட காலமாக தேக்கத்தில் இருந்து வரும் மகளீர் இட ஒதுக்கீட்டுப் பிரச்சினைக்கு ஒரு நல்ல தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

—-agniputhiran@yahoo.com

Series Navigation

அக்னிப்புத்திரன்

அக்னிப்புத்திரன்