துப்பாக்கி முனையில் மிரட்டப்படும் இதழியல் சுதந்திரமும் மாற்று இதழ்களும்

This entry is part [part not set] of 25 in the series 20050812_Issue

தமிழில்: அசுரன்


இந்தியாவானது உலகிலேயே மிகப்பெரிய சனநாயக நாடு என்று மார் தட்டப்படுகிறது. சனநாயகத்தின் நான்காம் தூணாக இதழ்கள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் அதன் உண்மை நிலை என்ன என்பதைக் குறித்து நாம் வெளிப்படையாக அறிந்துகொள்ளும் சந்தர்ப்பங்கள் மிகக் குறைவானவையே (மொ-ர்).

2001ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் நாள். இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் டெல்லி பிரிவில் பணியாற்றும் வினோத் கே. ஜோஸ் என்ற நிருபரிடம் டெல்லி நாடாளுமன்றத்திற்கு எதிரே கேரள விவசாயிகள் நடத்தும் போராட்டம் பற்றி செய்தி சேகரித்து வருமாறு அனுப்பினார் அதன் ஆசிரியர். குறிப்பாக வினோத் அனுப்பப்பட காரணம் அவர் மலையாளி என்பதே.

தான் அனுப்பப்பட்ட செய்திகளை சேகரித்து முடித்ததும் அருகிலுள்ள ஒரு தேனீர்க் கடையில் தேனீர் அருந்திக்கொண்டிருந்தார் வினோத். அப்போது துப்பாக்கிச்சூடு, குண்டுவெடிப்பு ஒலிகளும் தொடர்ந்து எச்சரிக்கை மணி ஒலிக்க விரையும் வாகனங்களும் அவரது கண்களில் பட்டன. டெல்லி நாடாளுமன்றம் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டுக்கொண்டிருப்பதாக அருகிலிருந்தவர்கள் செய்தி சொல்லியிருக்கின்றனர்.

வினோத் உடனடியாக தனது ஆசிரியரைத் தொடர்பு கொள்ள, விரைந்து சென்று முடிந்தவரை அதிகளவு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துகளைஸ்ரீ கேட்டுவிட்டு வருமாறு நெறிப்படுத்தியுள்ளார். வினோத் உள்ளிட்ட சில பத்திரிகையாள˜கள் மட்டுமே அந்நேரத்தில் அங்கே இருந்தனர். வினோத் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயுமாக சுமார் 80 நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பேட்டி எடுத்தார். அது பொடா சட்ட நிறைவேற்றம், காபின் வழக்கு போன்ற முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் நடந்துகொண்டிருந்த நேரமாகும். அப்போது அவரது பார்வையில் பட்ட விசயங்கள் மிக முக்கியமானவையாகும். முக்கியமாகக் குறிப்பிட வேண்டுமானால், நாடாளுமன்றம் தாக்கப்பட்டுக்கொண்டிருந்தபோதுகூட ஆளும் பாரதீய சனதா நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்குள் கொண்டாட்ட மனநிலையில் இருந்தனர், இன்னமும் குறிப்பாக- நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரமோத் மகாஜன் இந்நிகழ்வுகளால் எள்ளளவும் பதற்றமடையாதவராக இருந்தார். காவல்துறையினர்ி முதலில் 6 தீவிரவாதிகள் இத்தாக்குதலை மேற்கொண்டதாக அறிவித்தனர். ஆனால், 5 உடல்கள் மட்டுமே காண்பிக்கப்பட்டன. 6வது உடல் அல்லது தீவிரவாதிக்கு என்னவானது ?. இதனடிப்படையில் வினோத் ஒரு செய்திக்கட்டுரையை எழுதினார்.

வினோத்தின் செய்தி அறிக்கையைப் பார்த்த இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆசிரியர் அதன்மீது எவ்வித ஆர்வமுமின்றி ‘டெல்லி நாடாளுமன்றத் தாக்குதல் போன்ற நேரங்களில் போக்குவரத்து நெரிசலினால் ஏற்படும் பிரச்சினைகள் ‘ என்பது குறித்து ஒரு கட்டுரை எழுதுமாறு சொன்னார். வினோத் கண்டறிந்த நெஞ்சை உறையவைக்கும் செய்திகள் குப்பைத் தொட்டியில் போடப்பட்டு, மறுநாள் டெல்லி காவல்துறை தலைமை அதிகாரியான அஜய்ராஜ் சர்மாவின் பத்திரிகையாளர் சந்திப்பு செய்தி பெரியளவிலும் முதன்மையாக வெளியிடப்பட்டிருந்தது. வினோத் போக்குவரத்து நெருக்கடி குறித்து எழுதிய கட்டுரையும் சிறப்பாக வெளியிடப்பட்டிருந்தது. ஆனால், நாடாளுமன்றம் மீதான தீவிரவாதிகளின் தாக்குதலின்போது அவ்வளாகத்தினுள் என்ன நடந்துகொண்டிருந்தது என்பது குறித்து வினோத் நேரடியாக அறிந்த செய்திகளை எழுத இயலவில்லை.

தனது பத்திரிகையுலக வாழ்வில் ஒரு புதிய பாடத்தைப் படித்தார் வினோத். நான்காம் தூணின் தார்மீகக் கடமைகள் குறித்தும் பத்திரிகையாள˜களின் சமூக ஈடுபாடு குறித்தும் அவர் கற்றுக்கொண்டார்.

2002ஆம் ஆண்டில் நியூ யார்க்கை மையமாகக் கொண்டு செயல்படும் ரேடியோ பசிபிகா என்ற வானொலியின் தெற்காசிய தலைவராக பொறுப்பேற்றார் வினோத். முதலாம் உலகப்போரில் அமெரிக்கா ஈடுபட்டதை ஆதரித்து எழுதச்சொன்னதை மறுத்து பல்வேறு இதழ்களிலிருந்து வெளியேறிய பத்திரிகையாளர்களால் உருவாக்கப்பட்டது அந்த வானொலி. ‘செப்டம்பர் 11 எப்படி அமெரிக்காவுக்கு முக்கியமானதோ அதுபோல டிசம்பர் 13 இந்தியாவிற்கு முக்கியத்துவம்வாய்ந்த நாள். எனவே அதனை தொடர்ந்து கவனித்துக்கொண்டிருங்கள் ‘ என்று வினோத்திற்கு அறிவுறுத்தினார் ரேடியோ பசிபிக்காவின் ஆசிரியர்.

‘நாடாளுமன்றத் தாக்குதல் சம்பவம் என் வாழ்நாளில் மிகக்குறிப்பிடத்தக்க ஒரு விசயம். ஒரு பத்திரிகையாளன் என்பதற்கு மேல், மனிதாபிமானக் கண்ணோட்டத்தில் நான் பார்த்தேன். டிசம்பர் 13ன் பின்னர் அதைத்தொடர்ந்து நடைபெற்ற சம்பவங்கள் எனது முந்தைய ஐயப்பாடுகளை உறுதிபடுத்தின. அதன் பின்னுள்ள விசயங்களை அறிந்துகொள்ளவேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. பல்லாயிரம் பக்கங்கள் நீளும் அவ்வழக்கு ஆவணங்களைப் படித்தாலே ஒருவர் உண்மைகளைப் புரிந்துகொள்ளமுடியும். பொடா சட்டத்தின்கீழ் கொண்டுவரப்பட்ட முதல் வழக்கு இதுவாகும். எதற்காக, ஏன் இந்த சட்டம் உருவாக்கப்பட்டது என்பதை இது நமக்குத் தெரிவிக்கிறது.

நான் ஒவ்வொரு நாளும் பொடா வழக்குமன்றத்திற்குச் சென்று அன்றாடம் அங்கு நடக்கும் விவரங்களை அறிந்துவந்தேன். எவ்வகையிலும் இந்த வழக்கோடு தொடர்பு இல்லாதவர் டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் அப்துர்ரஹ்மான் கீலானி. ஆனால் எல்லா ஊடகங்களும் அவரைத் தீவிரவாதியாக சித்தரித்தன. கை விலங்கு அணிந்த நிலையிலுள்ள கீலானியின் உருவம் என்னைப் பெரிதும் வருத்தப்படுத்தியது. ஒவ்வொரு நாளும் அவரது அப்பாவி முகம் என்னைக் காயப்படுத்தியது. அதற்கு முன்பு எனக்கு கீலானியைத் தெரியாது. கீலானி கைவிலங்குடன் கொண்டுசெல்லப்படுவது உறுதியானதும் நான் ஏதாவது செய்தாகவேண்டும் என்று எண்ணினேன். உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும் மனித உரிமை செயல்பாட்டாளருமான நந்திதா ஹஸ்கர் உதவியுடன் நாங்கள் கீலானி பாதுகாப்புக் குழு அமைத்தோம். டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம் ‘ என்று நினைவு கூர்கிறார் வினோத்.

இந்த வழக்கானது இந்திய ஊடகங்களுக்கு பரபரப்பு செய்தி தருவதாக இருந்தபோதிலும்கூட பொடா வழக்கு மன்றத்தில் இவ்வழக்கு நடந்துவந்தபோது வெறும் 3 வழக்கறிஞர்கள் மட்டுமே தொடர்ந்து அதில் பங்கேற்று வந்தனர். வினோத்தைத் தவிர ரெட்டிஃப் டாட்காமைச் சேர்ந்த பசரத் பீர், தி இந்து நாளிதழைச் சேர்ந்த அஞ்சலி மோடி ஆகியோரே மற்ற இருவரும். இந்திய ஊடகங்கள் டெல்லி காவல்துறையின் அறிக்கைகளையே எதிரொலித்தன. ஆனால் இது தமது நாளிதழின் கருத்து என்றே அவற்றின் வாசகர்கள் எண்ணிவந்தனர்.

கீலானி வழக்கு தொடர்பான மைய நீரோட்ட ஊடகங்களின் கருத்துகளை மறுக்கும்விதமாக ‘அனைத்திந்திய சையது அப்துர்ரஹ்மான் கீலானி பாதுகாப்புக்குழு ‘ உருவாக்கப்பட்டது. பஞ்சாப், காஷ்மீர், தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் இப்பணியை ஒருங்கிணைக்கும் பணியை வினோத் செய்துவந்தார். இப்பணியின்போது ஒரு புதிய மலையாள இதழை தொடங்கவேண்டியதன் தேவையை வினோத் உணர்ந்தார்.

இதன் அடிப்படையில் ‘ஃபிரீ ஃபிறஸ் ‘ என்ற இதழை அவர் தொடங்கினார். இரண்டு இதழ்கள் வெளிவந்த நிலையிலேயே பல்வேறு முனைகளிலுமிருந்தும் தாக்குதல்கள் வந்தன. கடைகளில் இருந்த அந்த இதழ்களை ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பறித்து எரித்தனர். மலையாளம் அறியாதவர்களும்கூட புன்னகை முகத்துடன், கையில் தேனீர் கோப்பையை ஏந்தியபடி இருக்கும் கீலானியின் அட்டைப்படத்தைப் பார்த்து கவரப்பட்டனர். இதழை விற்கக்கூடாது என்று கடைக்காரர்கள் மிரட்டப்பட்டனர். கீலானி குறித்த சிறிய உண்மைகள்கூட மக்களிடம் கொண்டுசெல்ல விடப்படவில்லை.

ஒரு இதழில் அம்பானி எவ்வாறு ரிலையன்ஸ் குழுமத்தினை உருவாக்கினார் என்பது குறித்த செய்திகள் வெளியிடப்பட்டன. கட்சி வேறுபாடுகள் இன்றி எல்லா அரசியல்வாதிகளும் எவ்வாறு முறைகேடான வழியில் உதவி உலகின் மிகப்பெரிய வணிகக் குழுமத்தினை உருவாக்கினர் என்பதும் வெளிப்படுத்தப்பட்டது. அதுபோல ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஹமிஸ்க் மெக்டொனால்டு என்ற பத்திரிகையாள˜ ரிலையன்ஸ் நிறுவனம் குறித்து எழுதிய பாலியெஸ்டர் இளவரசன் என்ற நூல் கடந்த 10 ஆண்டுகளாக ஏன் இந்தியாவில் தடை செய்யப்பட்டிருக்கிறது என்பதைக் குறித்து ஒரு புலனாய்வுக் கட்டுரை எழுதினார். அந்த இதழ் இந்தியாவிற்கு வெளியிலும் ஒரு இலட்சம் பிரதிகளுக்கும் மேல் விற்றது. வாசகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மறுபதிப்பும் செய்யப்பட்டது. இந்தியாவிலுள்ள வேறு எந்தவொரு ஊடகமும் வெளியிட அஞ்சும் செய்திகளை ஃபிரீ ஃபிரஸ் வெளியிட்டது. அதற்கு உரிய ‘சன்மானமும் ‘ கிடைக்கத் தவறவில்லை. ஆம், அண்மையில் கீலானியைக் கொல்ல நடந்த முயற்சியைப் போல வினோத்தையும் கொல்ல முயற்சி நடந்தது.

கீலானியைக் கொலை செய்ய முயற்சி நடந்ததற்கு 4 நாட்களுக்கு முன்பு, வழக்கறிஞர் நந்திதா ஹஸ்கரின் வீட்டிற்குச் சென்றுவிட்டு தனது அலுவலகத்திற்கு வினோத் பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது, எண்கள் மறைக்கப்பட்ட ஒரு அம்பாசடர் காரை ஏற்றிக் கொல்ல முயற்சி நடந்தது. ஃபிரீ ஃபிரஸ்-க்கு வரும் வாசகர் கடிதங்கள் கண்காணிக்கப்பட்டன, தடுக்கப்பட்டன. பல சந்தாதாரர்களுக்கு இதழ் கிடைக்காமல் தடுக்கப்பட்டது. அதன் துணை ஆசிரியரான நிசாத் என்பவர் இசுலாமியத் தீவிரவாதி என்று குறிப்பிடப்பட்டார். அவரது வீட்டு உரிமையாளரை மிரட்டி காலி செய்ய வைத்தனர். அதன் சிறப்புச் செய்தியாளரான சஜித் என்பவர் டெல்லி காவல்துறையின் போலி மோதல் கொலைகள் குறித்து எழுதியதற்காக அவரையும் வேட்டையாடத் தொடங்கினர். கேரளாவின் வயநாடு மாவட்டத்திலுள்ள தனது வீட்டில் வினோத் இருந்தபோது அங்கு சென்ற கேரள காவல்துறையினர் டெல்லிக்குச் செல்லவேண்டாம் என்று சொன்னதோடு, வினோத் இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாக உள்ளூர் மக்களிடம் செய்தி பரப்பினர்.

‘பல்வேறு அச்சுறுத்தல்களையும் மீறி இதழை வெளிக்கொண்டுவந்த நிலையில் அதனை அச்சிடுவதையும் தடுக்க முனைந்தனர். இந்த இதழுக்கு எதிராகச் செயல்படுவதற்காகவே டெல்லி காவல்துறையில் தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டது. ஓராண்டுகாலமாக அச்சிட்டுவந்த அச்சகத்தினர் மிரட்டப்பட்டதால் கடைசி இதழ் டெல்லிக்குப் பதிலாக மீரட்டில் அச்சிடப்பட்டது ‘ என்கிறார் வினோத். கடந்த மார்ச் 31ஆம் நாள் இதழ் அலுவலகத்திற்கு வந்த டெல்லி காவல்துறையினர் அறிவிப்புப் பலகையில் ஒட்டப்பட்டிருந்த இதழின் அட்டைகளை கிழித்தெறிந்தனர். ஆசிரியர் அறையினுள் அத்துமீறிப் புகுந்து நிசாத்திற்கு வந்திருந்த ஒரு கொரியரை எடுத்துச்சென்றுவிட்டனர். அதற்கு அவர்கள் சொன்ன காரணம் என்ன தெரியுமா ?, அது ஒரு இசுலாமியருக்கு முகவரியிடப்பட்டிருந்தது என்பதே.

இரண்டு நாட்களின் பின்னர் வினோத்தை அழைத்த டெல்லி காவல்துறையினர் ‘கீலானி கொலை முயற்சி தொடர்பாக 15 நிமிட விசாரணைக்கு வரவேண்டும் ‘ என்று அழைத்தனர். அப்போது வினோத் டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவின் துணை ஆணையரான கபிர் சிங்கிற்கு அதில் பங்கிருக்கலாம் என்று கூறினார். இவர் 26 பேரை போலி மோதலில் கொன்றவர் என்பதும் கீலானியை இவ்வழக்கில் சிக்கவைத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 15 நிமிட விசாரணை என்பது 5 மணிநேரமாக நீண்டது. அப்போது அவர்கள் அதிகம் அறிந்துகொள்ள விரும்பியது வினோத் ஏன் இந்த இதழைத் தொடங்கினார் என்பது குறித்தும் சிக்கலான விசயங்கள் குறித்து ஏன் எழுதுகிறார் என்பது குறித்தும்தான். ரிலையன்ஸ் குறித்த அட்டைப்படக் கட்டுரையும் இதில் அடங்கும். இப்போது டெல்லி காவல்துறையினர் டெல்லியில் எந்தவொரு அச்சகத்திலும் இதழை அச்சிட அனுமதிக்கமாட்டோம் என்றும் தெரிவித்தனர். தொடர்ச்சியான காவல்துறை சோதனை அச்சுத்தொழிலை முடக்கிவிடும் என்பதால் உரிமையாளர்களுக்கும் அச்சம்.

‘மாற்று ஏற்பாடுகள் செய்யப்படுவதுவரை இதழை நிறுத்திவைக்கவேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது. தெகல்கா ஆசிரியர் தருண் தேஜ்பால் தொடக்க விழாவின்போது நல்ல மனிதர்களின் பண உதவியால் இதழை நடத்தலாம் என்றார். சில அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் அல்லது வணிக நிறுவனங்களின் உதவியைப்பெற நாங்கள் விரும்பவில்லை. மீண்டும் இதழைக் கொண்டுவருவதற்காக எமது நோக்கத்தை ஆதரிக்கும், பல்வேறு ஊடகங்களில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் தங்கள் ஊதியத்தின் ஒரு பகுதியை தருவதாக ஒப்புக்கொண்டுள்ளனர் ‘ என்கிறார் வினோத்.

‘மக்களுக்கு மட்டுமே பொறுப்புடனிருப்போம் ‘ என்ற நோக்கத்துடன் வந்த ஃபிரீ ஃபிறஸ் தொடரவேண்டியது அவசியம்.

(இது Nuiman என்பவரால் For A Free Press என www.countercurrents.orgல் எழுதப்பட்ட கட்டுரையின் சுருக்கமான தமிழாக்கம்)

(asuran98@rediffmail.com)

Series Navigation

அசுரன்

அசுரன்