எதற்காக நான் வாழ்ந்திருக்கிறேன் ? ( மூலம்: பெர்ட்ரெண்டு ரஸ்ஸல் )

This entry is part [part not set] of 28 in the series 20050729_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


[பிரிட்டாஷ் மேதை பெர்ட்ரெண்டு ரஸ்ஸல் [Bertrand Russel (1872-1970)] எழுதிய சுய சரிதையிலிருந்து இக்கட்டுரை எடுக்கப் பட்டது. அவர் ஈடுபட்ட துறைகள் கணிதம், வேதாந்தம், விஞ்ஞானம், மதம், அரசியல், சமூகவியல், கல்வி, வரலாறு, தர்க்கம் ஆகியவை. அவர் போர் எதிர்ப்பாளி. சமூக நியாயக் காப்பாளி. இரண்டாம் உலகப் போருக்குப் பின் அணு ஆயுத ஒழிப்புக்கு மக்களைச் சத்தியாகிரகம் செய்யத் தூண்டினார். அணு ஆயுதச் சோதனை, அணு ஆயுதப் பெருக்கத் தடுப்பாளி. 1960 ஆண்டுகளில் வியட்நாம் போரில் பல்லாண்டுகள் ஈடுபட்ட அமெரிக்காவை எதிர்த்துப் பேசிவந்தார். 1963 இல் பெர்ட்ரெண்டு ரஸ்ஸல் அமைதி நிறுவனத்தை ஏற்படுத்தி உலக சமாதானத்துக்குப் பாடுபட்டார். 1950 இல் இலக்கிய நோபெல் பரிசு ரஸ்ஸலுக்கு அளிக்கப் பட்டது.]

****

மூன்று இச்சை வெறிகள் என் வாழ்வை ஆட்கொண்டு என்னை வழிநடத்திச் சென்றன: அவை எளியவை. ஆனால் தீவிரமாய்ப் பொங்கி எழுந்தவை. அன்புக்கு ஏங்கும் பிணைப்பு உணர்ச்சி, மெய்யறிவை தேடும் தாக உணர்ச்சி, இடர்ப்படும் மாந்தர் மீது அடங்காத இரக்க உணர்ச்சி. சூறாவளிப் புயல் போன்று, இந்த மூன்றும் என்னை இங்குமங்கும் அலைத்து ஆழ்ந்த மனக்கசப்புத் துயர்க்கடலின் எல்லையைத் தொடும்படி தள்ளி விட்டன!

காதலை முதலில் தேடிச் சென்றதின் காரணம், மெய்மறந்த இன்பத்தை எனக்கு அது அளித்தது! பேருவகையில் விளைந்த அச்சிறு நேர இன்பத்திற்காக வாழ்வின் மற்றைய காலத்தை எல்லாம் தியாகம் செய்யத் துணிந்தேன். பயங்கரத் தனிமைத் தவிப்பிலிருந்து காதற் பிணைப்பு என்னை விடுவித்தது! நடுங்கும் மனித உணர்ச்சி உலகின் விளிம்பிலிருந்து ஆழங் காண முடியாத, உயிரற்ற பாதாளத்தை நோக்கும் தனிமையிலிருந்து விடுவிப்புக் கிடைத்தது. முடிவாக அதைத் தேடி அடைந்தேன். கருதொருமித்த காதல் இணைப்பில் சித்தர்களும், கவிஞர்களும் மாயச் சிற்றுலகில் சொர்க்கத்தைக் கற்பனித்த காட்சியைக் கண்டேன்! அதைத்தான் தேடினேன்! மனித இனத்திற்கு கிட்டிய பெரும் பேறாகத் தோன்றிய அதனை, இறுதியில் நான் தேடி அடைய முடிந்தது.

முதல் இச்சைக்குச் சமமான தாக வெறியில் அடுத்து மெய்ஞானத்தையும் தேடிச் சென்றேன். மனிதர் இதயத்தைப் புரிந்து கொள்ள விரும்பினேன். அண்டவெளியில் விண்மீன்கள் ஏன் ஒளிவீசுகின்றன வென்று அறிய விழைந்தேன். எண்களின் ஆட்டம் கணிதத் திணிவுக்கு (Numbers holds sway above the flux)

மீறிய தென்னும் பித்தகோரஸின் ஆற்றலைப் புரிந்து கொள்ள முயற்சி செய்தேன். எல்லாம் சொற்பந்தான், பெருகிய அளவில் அதைப் பெற்றுக் கொள்ள வில்லை.

காதற் பிணைப்பு, மெய்யறிவு இரண்டும் பெற்றுக் கொள்ள முடிந்தவை. அவை என்னைச் சொர்க்கத்துக்கு ஏற்றிச் சென்றன. ஆனால் மனித இரக்கம் என்னை மீண்டும் பூமிக்கு இழுத்து வந்தது. மனிதர் படும் இடர்ப்பாடுக் கூக்குரல்களின் எதிரொலிகள் நெஞ்சில் அலைமோதி என்னைத் துடிக்க வைத்தன! பஞ்சத்தில் நோகும் பச்சிளம் குழந்தைகள், கொடுமை வர்க்கத்துக்குப் பலியாகும் வலுவற்ற மக்கள், புத்திரருக்குப் பாரமாகப் போன வயோதிகப் பெற்றோர், தனிமையில் நோகும் ஏழ்மை உலகம், வறுமை, வேதனை ஆகியவை எல்லாம் மானிட வாழ்க்கையை ஏளனம் செய்கின்றன! அந்தச் சீர்கேடுகளை நீக்க எனக்குப் பேராவல் உள்ளது. ஆனால் முடிய வில்லையே என்னால்! மனத்துயரில் அதனால் நானும் தவிக்கிறேன்.

இதுவே என் வாழ்க்கை. இந்த வாழ்க்கை வாழத் தகுதியானது எனக் கண்டேன். எனக்கொரு வாய்ப்பு இன்னும் கிடைக்குமாயின், அவ்வாழ்வில் மகிழ்ச்சியோடு மீண்டும் பங்கெடுக்க விருப்பம் உள்ளது.

தகவல்:

‘What I have Lived For ‘ By Bertrand Russell [From His Autobiography]

*******

jayabarat@tnt21.com [S. Jayabarathan (July 25, 2005)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா