The Almond: முஸ்லிம் பெண் எழுத்தாளரின் புதிய நாவல்

This entry is part [part not set] of 40 in the series 20050630_Issue

ஆசாரகீனன்


புனைப்பெயரில் எழுதப்படும் கிளுகிளுப்பூட்டும் நாவல் ஒன்றை வெளியிடக் கூடிய பிரபல பதிப்பாளர்களையும், அதற்குப் பெரும் வாசகர் கூட்டத்தையும் கண்டுபிடிப்பது மிகவும் கஷ்டமான வேலை. ஆனால், அதையே ஒரு பழமைவாத அரபு சமூகத்தைச் சார்ந்த முஸ்லிம் பெண் ஒருவர் எழுதுவாரானால், இந்த வேலை மிகவும் சுலபமாகிவிடும். சமீபத்தில் வெளிவந்துள்ள நாவல் – ‘வாதாம் பருப்பு ‘ (The Almond). எழுதுபவரின் சொந்த அனுபவங்களை ஓரளவுக்கு அடிப்படையாகக் கொண்டு, பால் சுதந்திரத்தைத் தேடுகிறது இந்த நாவல். Iditions Plon பதிப்பகத்தால் சென்ற ஆண்டு பிரான்ஸ் நாட்டில் வெளியிடப்பட்ட இந்தப் புத்தகம் ஐம்பதாயிரம் பிரதிகளுக்கும் மேல் விற்றுள்ளது. தற்போது, ஆங்கிலம் உட்பட எட்டு மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.

உடலுறவு பற்றி வெளிப்படையாகச் சித்தரிக்கும் இந்தப் புத்தகம், மார்கரிட் டுராவின் ‘பருவமடைதல் ‘ (coming-of-age) வகை நாவலான ‘காதலர் ‘ மற்றும் காத்தரின் மில்லட்டின் சமீபத்திய ஒப்புதல் வாக்குமூலக் கட்டுரையான ‘காத்தரின் எம். மின் படுக்கையறை வாழ்க்கை ‘ ஆகியவற்றோடு ஒப்பிடத்தக்கது. ஆனால் இதை ‘நெட்ஜ்மா ‘ (Nedjma) என்ற புனைப்பெயரில் எழுதியிருக்கும் நாற்பத்து சொச்ச வயதுக்கார வட ஆப்பிரிக்க எழுத்தாளரின் நோக்கம் கிளுகிளுப்பூட்டுவது மட்டும் அல்ல.

அமெரிக்காவில் க்ரோவ் பதிப்பகத்தாரால் இந்த மாதம் இப்புத்தகம் வெளியிடப்பட்டது. அதையொட்டி அமெரிக்கா வந்திருந்த நெட்ஜ்மா, உடலின்பத்தை அனுபவிக்கும் ஒரு பெண்ணைச் சித்தரிப்பதன் மூலம் வாழ்வின் ஒரு வெளிப்பாடாக உடலைக் கொண்டாடுவதோடு மட்டுமல்லாமல், முஸ்லிம் பெண்களுக்கு எதிரான பல நூற்றாண்டு கால அடக்குமுறைக்கு ஒரு பலத்த அடியைக் கொடுக்க விரும்பியதாகவும் சொல்லி இருக்கிறார்.

தன்னை முதலில் எழுதத் தூண்டியது செப்டம்பர் 11, 2001 அன்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலும், அதற்கு வாஷிங்டன் கொடுத்த பதிலடியும்தான் என்கிறார் அவர். ‘அடிப்படைவாதிகள் செய்தது ஈடு செய்ய முடியாத, அதிர்ச்சியூட்டும், மட்டரகமான காரியம். ஆனால், அதற்குத் தரப்பட்ட பதிலடியும் அத்தகையதே. இரு தரப்பினரும் கொலையையும் ரத்தத்தையும் பற்றி மட்டுமே பேசி வருவதை நான் பார்க்கிறேன். மனித உடலைப் பற்றி எவரும் கவலைப்படவே இல்லை. ‘

ஆகவே, கொந்தளிக்கும் காதலை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட ஒரு கதையின் மூலம், முஸ்லிம் உலகில் ஒளித்து மறைக்கப்படும் காமம் பற்றி எழுத முடிவு செய்தார் நெட்ஜ்மா.

மேலும், ‘உடல் பற்றி நான் பேச வேண்டியிருக்கிறது. எல்லா அரசியல் மற்றும் மதத் தடைகளும் தம் கவனத்தைக் குவிக்கும் அறுதி விலக்கான பொருள் (taboo) உடல்தான். ஜனநாயகத்துக்கான இறுதிப் போரும் இதுவே. நான் அரசியல் ரீதியாக எழுத விரும்பவில்லை என்றாலும், தீவிரமான ஒன்றைப் பற்றி எழுத விரும்பினேன். இது ஒரு எதிர்ப்புக் கூக்குரல்தான் ‘ என்கிறார் அவர்.

தன்னிலைக் குரலில் (First person) எழுதப்பட்டுள்ள வாதாம் பருப்பு நாவல் மொராக்கா நாட்டின் கிராமம் ஒன்றில் பிறந்து வளர்ந்து, நாளாவட்டத்தில் தன் பெண்மையைக் கண்டறியும் ‘பாத்ரா ‘ (Badra) என்ற அரபு முஸ்லிம் பெண்ணின் கதையைச் சொல்கிறது. உண்மையான காதலைப் பற்றி அவள் கனவு கண்டு கொண்டிருக்கும் போதே, வயதில் முதிய ஓர் ஆணை மணந்து கொள்ளும்படி நிர்பந்திக்கப்படுகிறாள். அவன் அவளைக் கருவுறச்செய்ய முயலும் போதெல்லாம் மிகுந்த வேதனைக்கு ஆளாகி அவனை வெறுக்கிறாள். ஒருவழியாக, ஐந்து வருடங்களுக்குப் பின்னர் அவனிடமிருந்து தப்பிச் சென்று, டேஞ்ஜியர்ஸ் பகுதியில் வசிக்கும் தாராளப் பார்வையுள்ள தம் அத்தை ஸெல்மா வீட்டில் தஞ்சம் புகுகிறாள். அங்கு அவள் ஐரோப்பியக் கல்வி கற்ற மருத்துவரான ‘ட்ரிஸ் ‘ (Driss)-ஐச் சந்திக்கிறாள்.

அவனுடனான உறவு பாத்ராவின் வாழ்வையே மாற்றி அமைத்தாலும், அது நேரான ஒன்றாக இருக்கவில்லை. அவளைத் திருமணம் செய்துகொள்ள ட்ரிஸ் மறுத்ததால், அவர்களுக்கு இடையேயான உறவு உலகின் கண்ணிலிருந்து மறைக்கப்பட்ட ஒன்றாக இருந்தது. அவளை உடல்ரீதியாக ட்ரிஸ் திருப்திப்படுத்தி வந்தாலும் கூட, அவள் அவனை தீவிரமாகக் காதலித்தும் கூட, அவன் அவளுக்கு உண்மையாக இருக்கவில்லை. நாளாவட்டத்தில் அந்த உறவிலிருந்து விடுபடும் பாத்ரா தன்னுடைய பாதையில் போகத் தொடங்குகிறாள். ஒரு பத்தாண்டுக்குப் பின் முற்றிலும் வேறுபட்ட சூழ்நிலையில் அவனை மீண்டும் சந்திக்கிறாள்.

இந்த நாவலில் சுமார் 40 சதவீதம் தன் சொந்த வாழ்க்கையே அடிப்படையாகக் கொண்டது என்று மதிப்பிடும் நெட்ஜ்மா, நாவலில் எஞ்சிய பகுதியும் வாழ்க்கைக்கு உண்மையாக இருப்பதே என்று கருதுகிறார். பெண்மை முழுமையாகப் பொருந்திய ஒரு பழங்குடியின் வாக்குமூலமே இந்த நாவல் என்றும், அத்தைமார்கள், அண்டை அயலார், ஒன்றுவிட்ட சகோதரிகள் போன்ற எல்லாப் பெண்களின் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்ட கதை என்றும், இதுதான் ஒரு பெண்ணின் வாழ்க்கை என்பதைச் சொல்ல வேண்டிய தார்மீகக் கடமை தனக்கு இருப்பதாகவும் அவர் சொல்கிறார்.

இந்தப் புத்தகம் பிரசுரிக்கப்படும் என்று தான் எதிர்பார்க்கவே இல்லை என்று சொல்லும் அவர், இந்த நாவலைப் பிரெஞ்சு மொழியில் எழுதியதற்குக் காரணம், காமம் பற்றித் தன் தாய்மொழியில் எழுதுவதை விட பிற மொழியில் எழுதுவது அவ்வளவு அதிர்ச்சியைத் தராது என்பதாலேயே என்றும் சொல்கிறார். மேலும், எது எப்படி இருந்தாலும், இந்தக் கதையை அரபி மொழியில் எழுதியிருந்தால் அது பிரசுரமாகியே இருக்காது என்றும் நெட்ஜ்மா அடித்துச் சொல்கிறார். ‘முஸ்லிம்கள் பாலுறவு பற்றி எழுதி ஆயிரம் வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. இந்தப் புத்தகத்தை வெளியிடத் தயாராக இருக்கும் ஓர் அரபுப் பதிப்பாளரைக் கண்டுபிடித்துக் கொடுத்தால், உங்களுக்கு ஒரு பாட்டில் உயரிய வகை மதுவை (champagne) பரிசாகத் தருகிறேன் ‘ என்றும் சவால் விடுகிறார் நெட்ஜ்மா.

ஒரு நண்பரின் உதவியால் Iditions Plon பதிப்பகத்தாரின் கவனத்தை இந்தப் புத்தகம் பெற்றாலும், இந்தப் புத்தகத்தை எழுதியவர் தாம்தான் என்று அடையாளம் காட்டிக் கொள்ள நெட்ஜ்மா விரும்பவில்லை. தான் எந்த நாட்டைச் சார்ந்தவர் என்பதைக் கூட அவர் இதுவரை சொல்லவில்லை. அப்படி ஒரு கேள்வி எழும்போது பொதுவாகத் தாம் ஒரு வட-ஆப்பிரிக்க நாட்டைச் சார்ந்தவர் என்று மட்டும் பதிலளிக்கிறார். பாரிஸ் நகருக்கு அவர் சமீபத்தில் சென்றிருந்த போது கூட, வாதாம் பருப்பு நாவலை எழுதியவர் அவர்தான் என்பதை அவருடைய பிரெஞ்சு நண்பர்களே அறிந்திருக்கவில்லை.

பிரபல அல்ஜீரிய கவிஞர் கதெப் யாஸின் (Kateb Yacine) நெட்ஜ்மா என்ற புனைப்பெயரில் ஒரு புத்தகத்தை எழுதினார். அந்தப் பெயரையே தாமும் வைத்துக் கொண்டதாகச் சொல்கிறார் நெட்ஜ்மா. இந்த வார்த்தை நட்சத்திரத்தைக் குறிக்கிறது. மேலும், நட்சத்திரம் என்பது இஸ்லாமிய அடையாளங்களுள் முக்கியமானதும் கூட.

‘நானும் இந்த கூட்டத்தைச் சேர்ந்தவளே. நான் வெளியிலிருந்து வந்தவள் அல்ல. நான் இந்த (முஸ்லிம்) உலகின் ஒரு அங்கமே, என்னை எவரும் இங்கிருந்து வெளியேற்ற முடியாது ‘ – என்பதைத் தன்னுடைய பாணியில் தெரிவிக்கும் முயற்சியே இது என்று சொல்லும் அவர், தான் ஒரு ‘கடைபிடிக்கும் முஸ்லிம் ‘ (practicing Muslim) என்றும் தெரிவிக்கிறார்.

ஆனால், அந்த உலகம் தனக்கு மிகவும் வேதனை தருகிறது என்றும், தம் புத்தகத்தில் சொல்லப்படுவதைப் போல பெண்களின் மீதான ஒடுக்குமுறை போன்றவற்றால் அரபு உலகின் பெரும்பாலான பகுதிகளைத் தாம் நிராகரிக்க விரும்பும் அளவுக்கு சூழ்நிலை மோசமாக இருக்கிறது என்றும் அவர் சொல்கிறார். ‘முஸ்லிம் பெண்களின் இன்றைய பரிதாபகரமான நிலைக்கு முகமது நபியையோ அல்லது கடவுளோ காரணமல்ல; இஸ்லாமிய சமூகமே காரணம் – ஷரியா சட்டங்களும், இவை அர்த்தப்படுத்தப்படும் விதமும், கடவுளின் பெயரால் இஸ்லாத்தை ஆட்சி செய்யும் மதகுருமார்களுமே இதற்குக் காரணம் ‘

என்கிறார் நெட்ஜ்மா.

இவை காரணமாக சுதந்திரமான சிந்தனை ஒடுக்கப்பட்டு, அரபு சமூகங்கள் முடக்கப்படுவதோடு, பெண்களின் மீதான ஆணாதிக்கமும் ஓங்கி வளர்கிறது. விடுதலையை நோக்கிப் பெண்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் தங்களுடைய அதிகாரத்தைக் குறைக்கும் சதியாக முஸ்லிம் ஆண்கள் கருதுவதாகவும் அவர் சொல்கிறார். இதன் காரணமாக அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் அரபு உலகம் மேலும் குறைவுபட்டதாக ஆகிறது. படிப்பறிவின்மை, வறுமை, ஏதேச்சாதிகாரம், அடிப்படைவாதம் ஆகியவற்றால் பீடிக்கப்பட்டு உடல் அழுகிவரும் ஒரு வியாதிக்கார கிழவரைப் போன்றதே அரபு உலகம் என்றும் ஒப்பிடுகிறார் நெட்ஜ்மா.

அரபு உலகின் ஆண் பெண் உறவு பற்றிச் சொல்லும் போது, ‘திருமணத்தின் பொருட்டும் சந்ததியினரை உண்டாக்கவும் அவர்கள் இணைந்தாலும், பெரும்பாலான பெண்களுக்கு பாலுறவு என்பது பெரும் சுமையாகவே அமைந்து விடுகிறது. இதற்குக் காரணம் மிகச் சில ஆண்கள் மட்டுமே பெண்ணின் உடல் பற்றிச் சரியாக அறிந்திருக்கின்றனர் என்பதே. சமூகத்தில் பாலுறவு பற்றி கேள்விப்பட்ட கருத்துகளும், பாரம்பரியமாகத் தொடரும் அச்சங்களும், அறியாமையும் நிரம்பியுள்ளது. தாங்கள் சட்டபூர்வமான பால் வன்முறைக்கு ஆளாக்கப்படுவதில்லை என்று பெண்களும், பெண் என்பவள் அடிமையோ அல்லது கீழான பிறவியோ அல்ல என்று ஆண்களும் உணரும் நிலை ஏற்படும்போதுதான் காதல் என்பது சாத்தியமாகும் ‘ என்கிறார் நெட்ஜ்மா.

தன்னிடம் பாத்ரா கொள்ளும் தீவிரமான காதலை அலட்சியம் செய்யும் அளவுக்கு ட்ரிஸ்ஸிடம் அரபு ஆண்களின் பழக்க வழக்கங்கள் ஊறிக் கிடப்பதை இந்த நாவலில் நெட்ஜ்மா சுட்டிக் காட்டுகிறார். அவன் இந்தப் பெண்ணைக் காதலித்தாலும், ஆணாதிக்க அரபு சமூகத்தின் பாரம்பரிய சட்டகத்தை மீறி அந்தக் காதலை எப்படி வெளிப்படுத்துவது என்பது அவனுக்குத் தெரிவதில்லை. உடலுறவு என்ற தளத்தில் அவன் விடுதலை அடைந்திருந்தாலும், சமூக அளவில் அவனால் விடுதலை அடைய முடியவில்லை.

அவருடைய காதலனை விட அவர் அதிகம் விடுதலை அடைந்தவரா என்ற கேள்விக்கு சற்றுத் தயக்கத்துடன் ‘ஆம் ‘ என்று பதிலளிக்கிறார் நெட்ஜ்மா. ‘அரபு உலகைச் சார்ந்தவர்களுக்கு எப்படிக் காதலிப்பது என்பதே தெரியவில்லை. இவர்கள் சலிப்புற்றிருக்கும் காரணத்தாலேயே தொலைக்காட்சிகளில் காதலை மையப்படுத்தும் கேளிக்கை நாடகங்களை பார்க்கின்றனர். ஓர் அசல் காதலைப் பற்றிக் கனவு காண்கின்றனர். அது பற்றிய பாடல்களைக் கேட்கின்றனர். இவர்கள் உணர்வுபூர்வமானவர்கள் என்றாலும் மென்மையானவர்கள் அல்ல. அழகிய காதல் கவிதைகளைப் பாராட்டத் தெரிந்தவர்கள் என்றாலும், காதலிப்பதற்குத் தேவையான இதய வலிமை அற்றவர்கள் ‘ என்கிறார் நெட்ஜ்மா.

(அலன் ரிடிங் மற்றும் ஸோஃபி ஹாரிஸன் ஆகியோர் நியூயார் டைம்ஸ் பத்திரிகையில் எழுதிய விமர்சனங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.)

aacharakeen@yahoo.com

Series Navigation

ஆசாரகீனன்

ஆசாரகீனன்