புலம்பெயர் வாழ்வில் தமிழ்ப்பெண்கள் எதிர்நோக்கும் உளவியல் பிரச்சனைகள்

This entry is part [part not set] of 32 in the series 20050623_Issue

சந்திரவதனா


உளவியல் பிரச்சனையில் பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பது இன்றைய புலம்பெயர் வாழ்வில் அதிகமாகிவிட்டது. ஏன், எதற்கு என்று குறிப்பிட்ட ஒரு சில காரணங்கள் மட்டுமில்லாமல், எந்த வயதில் என்றும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாமல் இந்த உளவியல் பிரச்சனை பெண்களின் பல்வேறு வளர்ச்சிப் பருவங்களிலும் பல்வேறு வளர்ச்சிப் படிகளிலும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.

இங்கு நான் பெற்றோருடன் வாழ்கின்ற திருமணமாகாத எங்கள் பெண்பிள்ளைகள் உளவியல் பிரச்சனையில் மாய்வதற்கான காரணங்களை ஓரளவுக்கோ அல்லது மேலோட்டமாகவோ பார்க்க முயற்சிக்கிறேன்.

எங்களது ஆண்பிள்ளைகளும், பெண்பிள்ளைகளும் பிறந்ததிலிருந்து ஒரேமாதிரி உண்டு உறங்கி வளர்கிறார்கள். ஆனால் ஒரு குறிப்பிட்ட வயது வந்ததும் அதாவது பெண் குழந்தைக்குப் பத்து வயது வந்ததும் எமது வளர்ப்பில் வித்தியாசம் ஏற்படத் தொடங்குகிறது. அப்போதே ஒரு பெண் குழந்தையின் மனதில் விசனங்களும் ஏற்படத் தொடங்கி விடுகின்றது. ஏன் என்ற கேள்வி மனசைக் குடையத் தொடங்கி விடுகின்றது.

ஆண்பிள்ளை வெளியில் போய் விளையாடலாம். நினைத்த நேரம் வெளியில் போய் நினைத்த நேரம் வீட்டுக்குத் திரும்பலாம். ஆனால் ஒரு பெண்பிள்ளை ஏதாவதொரு காரணத்துக்காகப் பத்து நிமிடங்கள் பிந்தினாலே ஏன்… ? ஏதற்கு… ? என்ற கேள்விகளால் குடைந்தெடுக்கப் படுகின்றாள்.

பெண்பிள்ளைகளைக் கவனமாக வளர்க்கிறோம் என்ற பெயரில் எத்தனை அநாவசியத் தடைகள் போடப் படுகின்றன. இந்தத் தடைகளும் அளவுக்கு மீறிய கண்டிப்பும் பெண்பிள்ளைகளைச் செப்பனிட்டு வளர்த்து விடப் போதுமானவை என்றுதான் அனேகமான பெற்றோர்கள் நினைக்கின்றார்கள். இதுதான் பெண்பிள்ளைகளை வளர்க்கும் முறை என்றதொரு ஆழ்ந்த கருத்தை அவர்கள் தமக்குள் பதித்தும் வைத்திருக்கிறார்கள்.

பெற்றோர்களது இந்தச் செயற்பாட்டுக்கான முக்கிய காரணங்களில்

ஒன்று, அவர்கள் தம் பிள்ளைகளின் மேல் வைத்திருக்கும் அளவுக்கதிகமான பாசம். இரண்டாவது, இந்த சமூகத்தின் மேலுள்ள அதீத பயம்.

இரண்டையும் முடிச்சுப் போட்டுப் பார்த்தீர்களானால் இந்த சமூகம் தமது பெண்பிள்ளையை அடக்கமில்லாதவள் என்றோ, ஆட்டக்காரியென்றோ சொல்லி விடும் என்றும், அதனால் தமது மகளுக்கு திருமணம் நடக்காது போய் விடும் என்றும் பெண்ணைப் பெற்றவர்கள் பயப்படுகின்றார்கள். இது போன்று இன்னும் வேறு சில காரணங்களும், அதனால் ஏற்படும் பயங்களும்தான் பெற்றோர்களை இப்படியான முடிவுகளை எடுக்க வைக்கிறது. அவர்களின் இந்த முடிவினால் அவர்கள் பெண் பிள்ளைகளின் முன் கட்டி யெழுப்பும் தடைகள் அதிகமாகின்றன.

தடைகள் அதிகமாக அதிகமாகத்தான் அதை உடைத்தெறியும் வீறாப்பு ஏற்படும் என்பதை எந்தப் பெற்றோரும் சிந்தித்துப் பார்ப்பதில்லை.

அதேநேரம் இந்த உடைத்தெறியும் துணிவு எத்தனை பேருக்கு வரும் ? உடைத்தெறியும் துணிவு வந்தாலும் அதை செயற்படுத்தும் தைரியம் எத்தனை பேருக்கு வரும் ? இந்தத் துணிவு, தைரியம் எதுவும் வராதவர்கள் தான், எல்லாவற்றையும் மனதுக்குள்ளே வைத்து வருந்தி வருந்தி உளவியல் பிரச்சனைக்கு அடிமையாகிறார்கள்.

வீட்டிலே அம்மாவும் அப்பாவும் ஐரோப்பிய ஸ்ரைலில் எல்லாம் செய்வார்கள். ஆனால் அவர்களின் பெண் பிள்ளை வகுப்பு மாணவியின் அல்லது நண்பியின் பிறந்தநாள் விழாவுக்குப் போகவேண்டுமென்று கேட்டால் மட்டும் எமது கலாச்சாரத்தைச் சொல்லித் தடுத்து விடுவார்கள்.

பெண்பிள்ளை பாடசாலையால் வீட்டுக்கு வந்ததும் வராததுமாய் வீட்டுக்கு வரப்போகும் விருந்தினரை வரவேற்க அவளைக் கொண்டும் வேலைகள் செய்விப்பார்கள். விருந்தினர் வந்தவுடன் அப்பா போத்தலும் கிளாசுமாக இருந்து நண்பர்களுடன் அரட்டை அடிப்பார். அம்மா அப்பாவின் நண்பர்களது மனைவியருடன் சமையலறையில் சமையலும் அரட்டையுமாக நிற்பார்.

அண்ணன், தம்பி எல்லோரும் நண்பர்களிடமோ அல்லது விளையாடவோ வெளியில் போய்விடுவார்கள். அந்தப் பெண்பிள்ளை என்ன செய்யும் ?

அப்பாவும் அப்பாவின் நண்பர்களும் தொலைக்காட்சியில் என்ன பார்க்கிறார்களோ! அதையே பார்த்து… அம்மாவும் அப்பாவின் நண்பர்களின் மனைவியரும் என்ன அரட்டை அடிக்கிறார்களோ! அதையே கேட்டு… இதுதான் பத்து வயது தாண்டிய ஒரு பெண்பிள்ளையின் அறிவை வளர்க்கும் விடயங்களா ? அல்லது அந்த வயதில் அவளின் மனிதில் சிறகடிக்கும் இனிய கனவுகளுக்கும், நினைவுகளுக்கும் போடும் தீனியா ?

வீட்டு வேலைகளைப் பிள்ளைகள் பழகத்தான் வேண்டும். ஆனால் அதுதான் அவர்கள் வாழ்க்கை என்றில்லை. அது போகப் பெண்பிள்ளைகள் மட்டும் தான் வீட்டு வேலைகளைப் பழக வேண்டுமென்றுமில்லை. பெண்பிள்ளைகள் வெளியுலகத்தையும் பார்க்க வேண்டும்.

இந்த வயதில் அவர்களிடம் பல ஆசைகள் இருக்கும். ஆனால் அனேகமான பெற்றோர்கள் நினைக்கிறார்கள், இந்த வயதில் பிள்ளைகளிடம் காதல் ஒன்று மட்டும் தான் இருக்குமென்று. அந்த நினைவுகள் அவர்களைப் பயமுறுத்த தவறுகள் ஏற்பட்டு விடக் கூடாதே என்ற ஒரே எண்ணத்தைக் கருத்தில் கொண்டு பெண்பிள்ளைகளைக் கட்டிப் போட்டு விடுகிறார்கள். இங்கு கூட பெண்பிள்ளைகளை மட்டுந்தான் கட்டிப் போடுகிறார்கள். ஆண் பிள்ளைகள் தவறினால், அது தவறு இல்லை, இயல்பு என்பது எமது சமூகத்தின் கணிப்பீடு.

பெற்றோர்களினதும், சமூகத்தினதும் இந்தத் தவறான கணிப்பீடு, பெண் பிள்ளைகளின் மனதில் ஒரு வித விரக்தியையும், வேதனையையும் ஏற்படுத்தி அதுவே நாளடைவில் உளவியல் தாக்கமாகி விடுகிறது.

இதனால் அந்தப் பெண்பிள்ளைகளின் மனம் மட்டுமல்லாமல், உடல் கூடப் பாதிக்கப் படுவது ஆராய்ச்சி ரீதியாகக் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

ஐரோப்பிய மருத்துவர்களும், அமெரிக்க மருத்துவர்களும், ஐரோப்பிய, அமெரிக்கப் பெண்களை விட புலம் பெயர்ந்திருக்கும் ஆசியத் தமிழ்ப் பெண்கள் தோள்மூட்டு வலியாலும், மிக்ரேனே எனப்படும் கபாலஇடியாலும் மிகவும் அவஷ்தைப் படுவதைக் கண்டு பிடித்து ஒரு ஆராய்ச்சியும் செய்தார்கள்.

இந்த ஆராய்ச்சியிலிருந்து அவர்கள் கண்டு கொண்டது புலம் பெயர்ந்திருக்கும் ஆசியத் தமிழ்ப் பெண்களில் நூற்றுக்குத் தொண்ணூறு வீதமான ஆசியத்தமிழ்ப் பெண்கள் ஏதோ ஒரு வித மன அழுத்தத்துக்கு ஆளாகியிருக்கின்றார்கள். அதனால் அவர்களின் தோள் மூட்டில் வலியோ அல்லது தாங்க முடியாத தலை இடியாகிய கபால இடியோ ஏற்படுகின்றது. அல்லது அதையும் மீறி எல்லோர் மீதும் கோபமும், எரிச்சலும் ஏற்பட்டு அதை வெளியில் கொட்ட முடியாது உள்ளுக்குள்ளேயே அடக்கி, அடக்கி அது மூளையின் சில நரம்புகளுக்கு அழுத்தத்தைக் கொடுக்க, இரண்டு காதின் பின் புற நரம்புகளும் புடைத்து, அவர்களுக்கே, இது ஏன் என்று தெரியாமல் அவர்கள் நோயாளிகள் ஆகிக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்த விடயங்களை அனேகமான பெற்றோர்கள் இன்னும் அறிந்து கொள்ளாமல் இருப்பது சற்று கவலைக்குரிய விடயம்.

பெற்றோர்கள் ஒரு விடயத்தை நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும்.

அதாவது, பெண்பிள்ளைகளை அளவுக்கதிகமாக அடக்கி வளர்ப்பது தான் அவர்களைச் சிறந்த முறையில் வளர்ப்பதற்கான வழி இல்லை, என்பதை.

அவர்களுக்கு ஓரளவுக்காவது சுதந்திரம் கொடுக்க வேண்டும். அவர்களைப் பேச விட வேண்டும். அவர்களை மற்றவர்களுடன் பழக விட வேண்டும். வாழும் முறை பற்றி அவர்களுக்குப் பக்குவமாய்ச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

அதை விடுத்து

‘நீ பெண் – அதனால் இப்படித்தான் இருக்க வேண்டும் ‘ என்றோ

‘நீ பெண் – அதனால் இப்படித்தான் பேச வேண்டும் ‘ என்றோ அல்லது

‘நீ பெண் – அதனால் இன்ன இன்னதுதான் செய்யலாம் ‘ என்றோ வரையறைகள் போடுவது மிகவும் தப்பானது.

ஒரு பெண்குழந்தையின் திறமைகள் இப்படியான செயற்பாடுகளால் கட்டிப் போடப்படுகின்றன. அந்த நிலையில், தன் திறமையை வெளிப்படுத்த முடியாத கோபத்தில், அது பற்றிப் பேசக் கூட முடியாத விரக்தியில் அந்தக் குழந்தை உளவியல் நோயாளியாகிறது.

ஆதலால் பெற்றோர்கள் சற்று அல்ல, நிறையவே சிந்திக்க வேண்டும். தமது பிள்ளைகளை தாமே உளவியல் நோயாளியாக்கும் அவல வேலையைச் செய்யாமல், அன்பு, நட்புடன் சுதந்திரத்தையும் கொடுத்து, ஒழுக்கத்தையும் சரியான முறையில் போதித்து அவர்களை வளர்க்க வேண்டும்.

பிள்ளையின் நடத்தையில் தவறு கண்டால், நீ பெண்பிள்ளை என்றோ, எமது கலாச்சாரம் என்றோ அவளைப் பயமுறுத்தாமல், அவளை அன்போடு அணுகி, ஆதரவோடு பேசி, நானிருக்கிறேன் உனக்கு என்ற நம்பிக்கையை அவள் மனதில் விதைக்க வேண்டும்.

அப்போதுதான் அவள் நட்போடு உங்களைப் பார்ப்பாள். பயம் தெளிந்து உங்களுடன் பேசி நல்ல பாதைக்குத் திரும்புவாள். வீட்டுக்குள்ளேயே வைத்து, அடக்கம் என்ற பெயரில் அடக்கி வளர்க்கப் படும் பிள்ளைகளை விட, உங்கள் பிள்ளை நல்லது, கெட்டதைப் பகிர்ந்துணரும் தன்மை கொண்டவளாக இருப்பாள்.

மிக மிக முக்கியமான விடயம், பெற்றோர்கள் தங்கள் நண்பர்களுடன் அரட்டையடிப்பதற்காகச் செலவு செய்யும் நேரத்தை விடக் கூடிய நேரத்தை தமது பிள்ளைகளுடன் அரட்டை அடிப்பதற்குச் செலவு செய்ய வேண்டும். அது பிள்ளைகளின் மனதில் ஒரு சந்தோஷத்தையும், பெற்றோரிடம் எதையும் மனம் திறந்து பேசி, ஆலோசனை கேட்கும் தன்மையையும் ஏற்படுத்தும்.

அதை விடுத்து கலாச்சாரம், பண்பாடு என்ற பெயரில் பெண்பிள்ளைகளை அடக்க நினைத்தால் இந்த உளவியல் பிரச்சனை எமது பெண்பிள்ளைகளின் மத்தியில் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.

சந்திரவதனா

யேர்மனி

2000

ஒலிபரப்பு – ஐபிசி தமிழ் – அக்கினி-கலா (2001)

பிரசுரம் – ஈழமுரசு – பாரிஸ்(27.12.2001-2.1.2002)

Series Navigation

சந்திரவதனா

சந்திரவதனா