கம்யூனிஸ்ட் கட்சிகளின் வெட்கக்கேடான வெற்றி

This entry is part [part not set] of 32 in the series 20050623_Issue

தருண் கங்கூலி


1972இன் தேர்தலின் போது, சித்தார்த்த சங்கர் ராய் அவர்களின் தலைமையில் மேற்கு வங்காளத்தில் தேர்தல் தில்லு முல்லுகளினாலும், ஒரேயடியாக போடப்பட்ட கள்ள ஓட்டுகளினாலும், வாக்குச்சாவடி அபேஸ்களினாலும் காங்கிரஸ் பெற்ற மாபெரும் வெற்றி வங்காளத்தில் இன்னும் பேசப்படும் விஷயம். அந்த தேர்தலில் எல்லா இடது சாரி கட்சிகளும் முழுமையாக தோல்வியுற்றன. கல்கத்தாவின் வடக்கில் உள்ள பாராநகர் தொகுதியில் ஜோதிபாசு படுதோல்வி அடைந்தார். அதனால், 24 பர்கானா கிராமப்புறத்தின் சாட்காச்சியா தொகுதிக்கு அவர் மாற வேண்டியிருந்தது.

மார்க்ஸிஸ்ட் கட்சி அந்தத் தோல்வியை லேசாக எடுத்துக்கொள்ளவில்லை. அடுத்த ஐந்து வருடங்களுக்கு ஜோதிபாசும் அவரது கட்சியும் மாநில அவையை பகிஷ்கரித்தன. 1977இல் ஜனதா அலையின் காரணமாக அவை ஆட்சிக்கு வந்தன. அப்போதிலிருந்து தேர்தல் தில்லுமுல்லுகளை நிறுவனமயமாக்க மெல்ல மெல்ல முயற்சி எடுத்தன. தேர்தல் தில்லுமுல்லு இன்று ஒரு வைரஸ் போல ஆழப் பதிந்திருக்கிறது. அதே நேரத்தில் இந்த முறை ‘ஆயுதம் தாங்கிய போராட்டத்தை ‘ கட்சி கைவிடுமாறும் செய்தது. அதற்கு பதிலாக கட்சி தொண்டர்கள் எவ்வாறு வாக்காளர் பட்டியலை மாற்றுவது என்பதிலும், எப்படி தேர்தலுக்கு முன்பாகவே தேர்தலுக்கு தயாராவது என்பதிலும் பயிற்சி தரப்பட்டனர். இடதுசாரியற்ற மற்ற கட்சிகள் தேர்தல் காலத்தில் மட்டுமே விழிக்கின்றன. ஆனால், காலம் கடந்து செய்யப்படும் இவர்களது எதிர்ப்புக்குரல்கள் தேர்தல் கமிஷனிலும் செல்லுபடியாவதில்லை. தாராளவாத ஜனநாயக அமைப்புகளும் வெற்றி பெற்ற அணியுடன் சமாதானமாக ஒத்துப் போகின்றன. கடந்த 28 வருடங்களாக இடதுசாரி முன்னணி தான் இந்த வெற்றி பெற்ற அணி.

ஆனால் மார்க்ஸிஸ்ட் கட்சித் தொண்டரகள் தம் உற்சாக மிகுதியினால் மிதமிஞ்சிவிடுகிறார்கள். கடந்த மே மாதம் நகரவைகளை , எந்த எதிர்ப்பும் இல்லாமல் மார்க்ஸிஸ்ட் கட்சி கைப்பற்றியது. இப்போது இந்த வெற்றி மார்க்ஸிஸ்ட் கட்சியையே சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. வடக்கு 24 பர்கானா பகுதியில் தொழிற்சாலை மையங்களில் மார்க்ஸிஸ்ட் கட்சி வலுவிழக்கிறது என்று கட்சியே ஒப்புக் கொள்கிறது. அடுத்த ஆண்டு வரவிருக்கும் சட்டசபை தேர்தலுக்கு ஆயத்தம் செய்யும் வகையில் எல்லாத் தொகுதிகளையும் ‘கைப்பற்ற ‘லானார்கள். மார்க்ஸிஸ்ட் கட்சி தலைமை பீடம் ஒரு சில பகுதிகளில் மட்டும் வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றினால் , மக்கள் மார்க்ஸிஸ்ட் கட்சியைக் குற்றம் சொல்ல மாட்டார்கள் என்று எண்ணியது.

ஆனால் நடந்ததோ ஒரே குழப்பம் தான். வடக்கு டம்டம் நகரவையில், 30 இடங்களில் ஒரு இடம் தவிர்த்து எல்லா இடங்களையும் கைப்பற்றியது. ஹூக்ளியில் ஆரம்பாக்கில் பாதி இடங்களுக்கு எதிர்த்து நிற்க ஆளில்லை. காங்கிரஸ், திருணமூல் காங்கிரஸ் இரண்டு கட்சிகளுமே யாரையும் நிற்கவைக்க முடியவில்லை. சில வாக்குச் சாவடிகளில் எதிர்க்கட்சிக்கு ஒரு வாக்குக் கூட விழவில்லை. மார்க்ஸிஸ்ட் கட்சியின் தலைமைக்குச் சங்கடம் விளைந்ததால் அது நகரக் கிளைகளின் பொறுப்பாளர்கள் மீது பாய்ந்தது.

மேற்கு வங்கம் சில வினோதமான அரசியல் கூட்டுகளைக் கொண்டது. கொல்கத்தாவில் திருணமூல், காங்கிரஸ், பாஜக மூன்று கட்சிகளும் இணைந்து சுப்ரத முகர்ஜி தலைமையில் வலுவாகவே இருந்தன. மார்க்ஸிஸ்ட் கட்சியுடனும் முகர்ஜி நல்ல உரவு பூண்டிருந்தார். மார்க்ஸிஸ்ட் கட்சியும் தான் சிறுபான்மையாய் இருப்பதை உணர்ந்து இணக்கமாகவே நடந்து கொண்டனர்.

ஆனால் அடுத்த வருடம் சட்டசபைத் தேர்தல் வருவதால், கொல்கத்தா நகரவையைக் கைப்பற்றியே ஆக வேண்டும் என்று மார்க்ஸிஸ்ட் கட்சி முடிவு செய்தது. க்ட்சியின் செயலாளர் அனில் பிஸ்வாஸ், தொண்டர்களிடம் கொல்கத்தா நகரவையைக் கைப்பற்றியே தீர வேண்டும் என்று தெரிவித்தார். வங்காள வாக்காளர்களுக்கு இது நன்றாய் விளங்கியது. ஆனால் கட்சியின் மானில குழு, கொல்கத்த நகரக் குழுவினை உதாசீனம் செய்து, பிகாஷ் ரஞ்சன் பட்டாசார்யாவை மேயர் வேட்பாளராய் அறிவித்தது. திரிபுராவில் அட்டார்னி ஜெனரல் பதவியில் இருந்தவர் இவர். திருணமூல் சார்பில் அஜித் குமார் பாஞ்சா.

ஆனால் முகர்ஜியுடன் ஒப்பிடும்போது , தற்போதைய மேயர் பாஞ்சாவின் இடம் பரிதாபமானது தான்.

ஆனால் மார்க்ஸிஸ்ட் கட்சி ஜூன் 19ம் தேதி – வாக்களிப்பு நாளன்று – மார்க்ஸிஸ்ட் கட்சிக்கு எதிரானவர்கள் வாக்குச்சாவடிக்கே செல்லமுடியாதபடி திட்டமிட்டுள்ளது. இடதுசாரி அல்லாத வேட்பாளர்கள் ஏற்கனவே மார்க்ஸிஸ்ட் கட்சித் தொண்டர்களின் மிரட்டலுக்கு ஆளாகியுள்ளனர். வாக்க்ச் சாவடிகளில் மார்க்ஸிஸ்ட் கட்சி தவிர்த்த மற்ற கட்சிகளின் ஏஜெண்டுகள் கூட வரமுடியாதபடி செய்யப்படும். இது மார்க்ஸிஸ்ட் கட்சியின் பழைய உத்தி தான்.

ஸ்டாலினிஸ்ட் பயங்கரவாதத்தைப் பின்பற்றியவாறே, மார்க்ஸிஸ்ட் கட்சி மேற்கு வங்கத்தில் அபாயமற்ற இடதுசாரிக் கட்சியாய்ப் பார்க்கப் படுகிறது. பிரிட்டிஷ் லேபர் கட்சியைப் போலவே, மார்க்ஸிசத்தைத் துறந்துவிட்டு, முதலாளிகளை வரவேற்கிறது. முதல்வர் புத்ததேவ் பட்டாச்சாரியா தொழிலதிபர்களின் செல்லப்பிள்ளை ஆகிவிட்டார். பிர்காஷ் காரத், எம் கே பாண்டே போன்றோரின் ஸ்டாலின்ஸ்ட் கொள்கைகள் இங்கே செல்லுபடியாவதில்லை. தாராளவாத முகமூடி அணிந்திருந்தாலும், மேற்கு வங்க தேர்தல்களை முறையாக நடத்துகிற காரியத்தைச் செய்ய மார்க்ஸிஸ்ட் கட்சியால், முடியாது. மேற்கு வங்கத்தைத் தன் கட்டுபாட்டில் வைத்திருப்பது தான் மார்க்ஸிஸ்ட் கட்சியின் ஒரே பிழைக்கும் உபாயம். உதட்டளவில், ஜனநாயகம், மனிதாபிமானம் என்றெல்லாம் உதட்டளவில் பேசினாலும், மேற்கு வங்கத்தைத் தக்கவைத்துக் கொள்ள எந்த அநியாயமும் செய்யலாம் என்பது தான் மார்க்ஸிஸ்ட் கட்சியின் செயல்திட்டம். அதனால் சமூகத்தின் குண்டர் கலாசாரத்துடனும் தொடர்பை மார்க்ஸிஸ்ட் கட்சி விட்டுவிடமுடியாது. மானிலத்தின் மற்ற பகுதிகளில் போலிஸ், அதிகாரவர்க்கத்தின் துணையுடனும் ஜனநாயக எதிர்ப்பைத் துடைத்து எறிந்து விட்டது.

இதனால், சாமானியர்கள் பயங்கரவாதிகளைத் துணைக்கழைக்க நேர்கிறது. வடக்கு வங்காள மாவட்டங்களில் ஜல்பாய்குரி, காம்தாபுரி விடுதலை இயக்கம் போன்றவை வலுப் பெற்று வருகின்றன. பான்குரா, புருலியா பகுதிகளி நக்சல்பாரிகள் சில பகுதிகளில் மார்க்ஸிஸ்ட் கட்சியினரை நுழைய விடுவதில்லை.

தேர்தல் அரசியலில் ஊழல் செய்வதன் விளைவுகளை மார்க்ஸிஸ்ட் கட்சி உணரத் தொடங்கியிருக்கிறது. வலுக்கட்டாயமா நகரவைகளைக் கைப்பற்றுவது தற்காலிக வெற்றியைத் தரலாம். ஆனால் பல மார்க்ஸிஸ்ட் தலைவர்கள், வெகுஜன எதிர்ப்பு எப்போது வெடிக்குமோ என்று அஞ்சுகின்றனர். அதனால், போலிஸ் பாதுகாப்பு இல்லாமல் அவர்கள் வெளியே செல்வதில்லை. ஜோதி பாசு, பட்டாச்சாரியா புருலியாவில் சமீபத்தில் ஒரு அமைச்சரின் கார் தாக்கப் பட்டது.

இதன் பாடங்கள் வெளிப்படை. புலியின் மீது சவாரி செய்தால் இறங்கமுடியாது. மார்க்ஸிஸ்ட் கட்சி திருப்புமுனை ஒன்றில் நிற்கிறது. வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றுவதையும், வாக்குகளை ஒட்டுமொத்தமாய்ப் போடுவது, என்று பழக்கப்பட்டுவிட்ட மார்க்ஸிஸ்ட் கட்சி ஒழுங்கான தேர்தல் அரசியலுக்குத் திரும்புவது கடினம் தான்.

(The author, a former Political Editor with The Telegraph, Kolkata, is now a television personality & commentator)

Series Navigation

தருண் கங்கூலி

தருண் கங்கூலி