புரட்சியாளர்களும் தலைவர்களும் – 5 – மா சே துங் – பாகம் 1

This entry is part of 28 in the series 20050506_Issue

கே ஜே ரமேஷ்


உலகத்தில் இதுவரை வாழ்ந்த, வாழுகின்ற தலைவர்களுள் மிகச் சக்தி வாய்ந்தவராக இருந்த ஒருவரை உங்களுக்குத் தெரியுமா ? இன்றைய கணக்குப்படி பல ஆயிரம் பில்லியன் அமெரிக்க டாலருக்கும் மேல் மதிப்புள்ள நாட்டை (இன்று கிடைத்த தகவலின்படி வாங்கும் திறனை அடிப்படையாகக் கொண்ட குறியீடு அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தை சீனா பிடித்துவிட்டதை உறுதி படுத்துகிறது. ஜப்பான் மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுவிட்டது), 9 மில்லியன் சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை, 100 கோடி மக்களை 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டு வந்தவர் – வேறு யாருமில்லை, சீனாவின் முந்தைய தலைவரான மா சே துங் தான். மா தனது அரசியல் வாரிசாகத் தேர்ந்தெடுத்த லின் பியாவ் கூற்றுபடி மார்க்ஸியத்தையும் லெனினிஸத்தையும் கலந்து புத்தாக்கச் சிந்தனையோடு முழுமையான ஒரு சிந்தனையைக் கொடுத்ததோடு அதை ஒரு புதிய உயரமான தளத்திற்கும் கொண்டு சென்றார். இந்தப் புதிய சித்தாந்தத்திற்கு மாவோயிஸம் என்ற பெயரும் உண்டு. ஆனால் மாவோயிஸம் என்ற வார்த்தையை அவரது எதிரிகள் இழிவாகப் பயன்படுத்தியதால் அதிகாரப்பூர்வமான அறிக்கைகளில் மாவோயிஸம் என்ற வார்த்தை புறக்கணிக்கப்பட்டது. மிதமிஞ்சிய அதிகாரத்தைப் பெற்று மக்களின் ஏகோபித்த ஆதரவையும் அனுபவித்தவரே பல மில்லியன் கணக்கான மக்களின் இறப்புக்குக் காரணமாகிவிட்டது ஒரு வகையில் எதிர்ப்பாராத எதிர்வினையாகிவிட்டது. அவருடைய ‘Great Leap Forward ‘ என்ற அதிவேக தொழிற்துறை முன்னேற்றத்திற்கானத் திட்டம் அவர் எதிப்பார்ப்பிற்கு மாறான விளைவுகளை உண்டாக்கி விட்டது. அந்தத் திட்டத்தின் படி விவசாயத்திலும் தொழில் துறையிலும் ஒருசேர முன்னேறுவதற்காக கிராமப்புறங்களில் உள்ள மிஞ்சிய மனித வளத்தை தொழிற்சாலைகளிலும் கட்டுமானப் பணிகளிலும் ஈடுபடுத்தினர். தொழிற்சாலைகளில் வேலை செய்யாதோர் குடிசைத் தொழிலாக இரும்பு தயாரிக்கும்படி (backyard furnaces என்று இதைக் கூறினர்) வற்புறுத்தப்பட்டனர். ஒவ்வொரு குடிமகனும், CCP உறுப்பினர்கள், படித்தவர்கள், அறிவாளிகள், பொறியியலாளர்கள், விவசாயிகள் என்ற எந்த பாகுபாடுமின்றி தொழிசாலைகளிலும் சுரங்கங்களிலும் வேலை செய்ய வற்புறுத்தப்பட்டனர். அவர்கள் எல்லோரும் கம்யூன் என்று அழைக்கப்பட்ட இடத்தில் தங்க வைக்கப்பட்டனர். இதன் விளைவாக விவசாயிகள் நிலம் உழுவதைப் புறக்கணிக்க வேண்டியதாயிற்று. அதனால் ஏற்பட்ட பஞ்சத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பட்டினியால் செத்து விட்டனர். சில அதிகாரப்பூர்வமற்ற அறிக்கைகளின் படி சுமார் 30 மில்லியன் மக்கள் வரை மடிந்திருக்கக் கூடும் என்று கூறப்பட்டது.

நீந்துவதில் மாவுக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தது. அவர் சீனாவின் முடிசூடா மன்னனாக இருந்த போது நீச்சல் அவரது வாழ்வில் ஒரு முக்கிய அங்கமாக ஆகிவிட்டது. அவரது முக்கியமான முடிவுகளை எல்லாம் தலைவர்களுக்காகக் கட்டப்பட்ட அந்தப் பெரிய பிரத்யேக நீச்சல் குளத்தில் தான் எடுக்கப்பட்டது என்று கூறுவார்கள். பல சமயம் அவரது மருத்துவர்களின், மெய்க்காப்பாளர்களின் அறிவுரைக்கெதிராக தெற்கு சீனாவில் இருக்கும் கழிவுப் பொருள்கள் நிறைந்த நதிகளில் பல மைல் தூரம் மிதந்து கொண்டே செல்வாராம். அப்போது நீந்துவதற்குத் தயங்கும் மற்ற தலைவர்களை நீரில் மூழ்கிவிடுவோம் என்ற பயமா என்று கடிந்து கொள்வாராம். ஆனால் மா மூழ்குவதைப்பற்றிக் கவலையே பட்டதில்லை – நீரிலும் சரி, அரசியலிலும் சரி. ‘மூழ்குவதைப்பற்றி சிந்தனையே இருக்கக்கூடாது! அதைப்பற்றிச் சிந்தித்தால் மூழ்குவது நிச்சயம். அதைப்பற்றி நினைக்காவிடில் மூழ்கவே மாட்டார்கள் ‘ என்று கூறுவாராம். அரசியலில் மூழ்காமலிருப்பதைப் பற்றி முற்றிலுமறிந்த அதிபுத்திசாலி அவர். இத்தனைக்கும் அவருக்கு, ராணுவ அதிகாரிகளின் திறமையின்மையைப்பற்றி அவர் இடித்துரைத்ததினால் அவர்களது எதிர்ப்பு, கோமிண்டாங்கிடம் அவருக்கிருந்த பற்றுதலினால் அதிருப்தியடைந்த அவரது உட்கட்சி எதிரிகளின் எதிர்ப்பு, ஏழை விவசாயிகளுக்கு அவர் அளித்த ஆதரவினால் கோபமடைந்த நிலச்சுவாந்தார்களின் எதிர்ப்பு, சீனாவின் வடக்குப் பகுதியில் அவருக்கிருந்த செல்வாக்கை உடைக்கத் துடித்த ஜப்பானியர்களின் எதிர்ப்பு, கொரியப்போரில் பங்கெடுத்தமைக்காக அமெரிக்காவின் எதிர்ப்பு, குருஷ்சேவின் ஸ்டாலினுக்கு எதிரான கொள்கைகளைத் தாக்கியதற்காக ரஷ்யாவின் எதிர்ப்பு என்று பன்முனைத் தாக்குதல்கள் இருந்தவண்ணமிருந்தன. அவற்றையெல்லாம் சமாளித்து சீனாவை தொடர்ந்து நீண்ட காலம் ஆண்ட தலைவர் அவர்.

மா பிறந்த ஆண்டான 1893ல் சீனாவில் பொருளாதாரச் சரிவும் அதனால் ஏற்பட்ட சமூகக் கலவரங்களும் கொழுந்து விட்டெரிய அதனைக் கட்டுப்படுத்த முடியாத ஆயின் டைனாஸ்டி வெளிநாடுகளின் உதவியை நாடி தனது நாட்டின் பொருளாதாரத்தையும் இயற்கை வளங்களையும் அவர்களிடம் அடகு வைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது. நான்கு குழந்தைகளில் மூத்தவராகப் பிறந்த மாவின் குடும்பம் ஒரு வசதியான கிராமப்புர விவசாயக் குடும்பம். தனது எட்டாவது வயதில் அருகிலிருந்தப் பள்ளிக்குச் சென்ற மா, தந்தையின் விருப்பப்படி தனது 14வது வயதில் ஒரு பெண்ணை மணந்தார். ஆனால் அந்தப் பெண்ணுடன் அவர் வாழவே இல்லை. மேலும் அந்தத் திருமணத்தையே அவர் அங்கீகரிக்கவில்லை. அடுத்த இரண்டாண்டுகளில் தனது தந்தையின் விருப்பத்திற்கெதிராக தனது படிப்பைத் தொடர்ந்தவர், அரசியலில் ஈடுபாடு கொள்ள ஆரம்பித்தார். பின்பு சாங்ஷாவில் தனது முறையான கல்வியைத் தொடர்ந்து தேர்ச்சி பெற்றார். முதல் மனைவியை வெறுத்தாலும் திருமணத்தையோ பெண்களையோ அவர் வெறுக்கவில்லை. தனது ஆசிரியரின் மகளான யாங் கய்ஹூய் என்பவரை 1921ம் ஆண்டு மணந்தார். ஆனால் யாங் கய்ஹூய்யை கோமிண்டாங் அரசு 1930ம் ஆண்டு மரணதண்டனை நிறைவேற்றி கொன்றுவிட்டது. அவர் இறப்பதற்கு முன்பே ஹி சிஷென் என்பவரை 1928ம் ஆண்டு மணந்தார். பின்பு அவரும் இறந்த பிறகு 1939ம் ஆண்டு ஜியாங் சிங் என்பவரை மணந்தார். அவர் மா இறக்கும்வரை அவருடைய மனைவியாகவே வாழ்ந்தார். இந்த நான்காவது மனைவியைப் பற்றி பிறகு பார்ப்போம்.

இதற்கிடையில் 1912ம் ஆண்டு தேசிய மக்கள் கட்சியான கோமிண்டாங் தொடங்கப்பட்டு அதற்கு அடுத்த ஆண்டு நடந்த தேர்தலில் அக்கட்சி மாபெறும் வெற்றி பெற்றது. ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையால் அந்தப் புதிய இரண்டு அடுக்குப் பாராளுமன்ற ஆட்சிக்கு யுவான் ஷிகாய் என்ற கொடுங்கோலனை அதிபராக நியமிக்க வேண்டிய கட்டாயம் உருவானது. உலகளாவிய அங்கீகாரம் பெறும் பொருட்டு அந்தப் புதிய ஆட்சி, மங்கோலியாவின் ஒரு பகுதிக்கும் திபேத்திற்கும் சுயாட்சி கொடுக்க முன்வந்தது. அந்த ஆண்டின் கடைசியில் யுவான் ஷிகாய் பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டு தனக்கு பூரண அதிகாரம் கிடைக்குமாறு அரசியல் சட்ட சாசனத்தையே மாற்றி அமைத்துக்கொண்டான். இதன் விளைவாக 1916ம் ஆண்டு யுவான் ஷிகாய் இறந்த போது சீனா பற்பல மாகாணங்களின் படைகளுக்கிடையேயான உட்பூசலில் சிக்கித் தவித்தது. இதனை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்ட ஜப்பானிய ராணுவம் ஷாண்டோங் மாகாணத்தைக் கைப்பற்றியது.

பிறகு முதலாம் உலகப்போர் முடிவடைந்த போது வெர்ஸெயில்ஸ் ஒப்பந்தம் ஏற்பட்டு அதன் படி ஷாண்டோங் மாகாணத்திற்கான உரிமையை ஜெர்மனியிடமிருந்து ஜப்பானுக்கு மீண்டும் மாற்றினார்கள். இந்த முறை அதை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு சுமார் 3000 மாணவர்கள் பெய்ஜிங்கில் உள்ள தியானன்மென் சதுக்கத்தில் கூடினார்கள். அது நடந்த தேதி 1919ம் ஆண்டு மே மாதம் 4ம் தேதி. இந்தப் போராட்டமே பின்னர் ‘மே 4 இயக்கம் ‘ (May Fourth Movement) ஆக உருப்பெற்றது. அந்த இயக்கத்தின் கீழ் கல்வியாளர்களும் அறிவாளிகளும் ஒன்று கூடி சமூகம் நவீனமயமாக்கப் படவேண்டும் என்றும் ஜனநாயகம் கோரியும் போராட்டம் தொடங்கினர். அந்த சமயத்தில் மா பெய்ஜிங்கில் ஒரு நூலகத்தில் வேலையில் இருந்தார். அந்த காலக்கட்டத்தில் தான் அவர் ஒரு மார்க்ஸீய-லெனினிச வாதியாக மாறினார் என்று நம்பப்படுகிறது. ஆனால் மார்க்ஸீய-லெனினிச கருத்துக்கு மாறாக மாவின் நம்பிக்கை சீனாவின் கிராமப்புற பகுதிகளிலேயே இருந்தது. சீனாவில் புரட்சி ஓங்க வேண்டுமென்றால் அதற்கான வாய்ப்பும் ஆதரவும் நகர்ப்புற படித்த மக்களைவிட கிராமப்புற விவசாயிகளிடமிருந்தே கிடைக்கப்பெறும் என்று தீவிரமாக நம்பினார். அதன் விளைவாக இயக்கத்தை வழிநடத்தும் பொருட்டு மீண்டும் சாங்ஷாவிற்கே திரும்பினார். ஆனால் அங்குள்ள படைகளினால் விரட்டியடிக்கப்பட்டார். மா சாங்ஷாவில் தோல்வியுற்றாலும், மே 4 இயக்கத்தினால் ஊக்கமடைந்த கோமிண்டாங் கட்சி அந்த ஆண்டு அக்டோபர் மாதம் மீண்டும் நிறுவப்பெற்று மாகாணத் தலைவர்களின் உதவியுடன் சீனாவின் தெற்குப் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். அதற்கு அடுத்த ஆண்டு மீண்டும் சாங்ஷாவிற்குத் திரும்பிய மா, ஒரு தொடக்கப்பள்ளியின் முதல்வராக இருந்து கொண்டே பொது மக்களுக்குக் கல்வி புகட்டும் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். இந்த அவரது முயற்சிக்கும் பங்கம் வந்துவிடவே அரசியலில் நுழைவது ஒன்றே வழி என்று கண்டு கொண்டவர், அதன் முதல்படியாக ஒரு சிறிய கம்யூனிஸ குழுவை சாங்ஷாவில் தொடங்கினார்.

1921ம் ஆண்டு Chinese Communist Party (CCP) அக்கட்சியின் முதல் தேசிய மாநாட்டை ஷாங்காயில் நடத்தியது. அதில் கலந்துகொண்ட மா, ஹுனான் மாகாணத்துக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளராக நியமனம் பெற்றார். மாநாட்டிலிருந்து திரும்பிய மா தொழிலாளர் சங்கங்களை தோற்றுவித்து அதன் மூலம் போராட்டங்களை நடத்தினார். அதே ஆண்டு தேர்ந்த கம்யூனிஸ்ட்டாக இருந்த தனது ஆசிரியரின் மகளையே மணந்து கொண்டார்.

1922ம் ஆண்டு கோமிண்டாங் மாகாணத்தலைவர்களின் ஆதரவை இழந்தபோது அப்போது புதிதாகத் தோன்றிய சோவியத் யூனியனின் உதவியை நாடியது. சோவியத் யூனியன் தனது ஆதரவை தேசிய ஒருமைப்பாட்டுக்காகப் பாடுபடும் கோமிண்டாங் மற்றும் CCP ஆகிய இரண்டு கட்சிகளுக்குமே கொடுப்பதாகக் கூறியது. இதனால் CCPயின் உறுப்பினர்கள் மிகக்குறைந்த அளவே இருந்த போதிலும் கோமிண்டாங்-CCP கட்சிகளுக்கிடையே ஒப்பந்த உடன்பாடு ஏற்பட்டு, மா பொதுவான மத்திய செயற்குழுவின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இரண்டாண்டுகள் கழித்து CCP கட்சியின் மூன்றாவது மாநாட்டில் அக்கட்சியின் மத்திய கமிட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1925ம் ஆண்டின் கடைசியில் கோமிண்டாங் கட்சியின் கொள்கைப் பரப்பு (எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கு இல்ல!!) செயலமைப்புக்கு தற்காலிகத் தலைமைப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார்.

இதற்கிடையில் கோமிண்டாங் கட்சியின் மிக வேகமாக வளர்ந்து வந்த இளைய தலைவர்களில் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய ‘சியாங் கை ஷெக் ‘ ராணுவப் பயிற்சிக்காகவும், அரசியல் பயிற்சிக்காகவும் மாஸ்கோவிற்கு அனுப்பப்பட்டார். பயிற்சியிலிருந்து திரும்பிய போது கோமிண்டாங்கின் ஸ்தாபகரும் தலைவருமான ஸூன் யாட் சென் இறந்துவிடவே அக்கட்சியின் தலைவர் பதவியை சியாங் கைப்பற்றினார். பதவிக்கு வந்தவுடனேயே CCPயுடன் ஏற்பட்ட உடன்பாட்டில் விரிசல் காணத்தொடங்கியது. தலைவரான பிறகு சியாங் நடத்திய அதிரடி மாற்றங்களையும் அதனால் பாதிக்கப்பட்ட CCPயும் மாவும் என்னவானார்கள் என்பதை அடுத்த பாகத்தில் பார்ப்போம்.

கே.ஜே.ரமேஷ்

kalelno5@yahoo.com

Series Navigation