21 ஆம் நூற்றாண்டு மரபணுவியலும் 18 ஆம் நூற்றாண்டு இனக்கட்டுமானங்களும்

This entry is part [part not set] of 29 in the series 20050422_Issue

எஸ் அரவிந்தன் நீலகண்டன்


“When discussing the genetics of Indian populations, different authors have now and then stressed the enormous complexity of their social systems, perhaps dating back much longer than written evidence. While that is certainly true, it nevertheless seems to us that knowledge accumulated thus far allows us not only to draw the first reasonably well-supported conclusions concerning what one may call the basic time-and-space oriented landmarks of the Indian maternal and paternal lineages, but also to avoid the pitfalls so easily created by an obvious desire ‘to tell an exciting tale ‘. -Kivisild et.al. The Genetics of Language and Farming Spread in India, Chapter-17, Examining the farming/ language dispersal hypothesis Edited by Peter Bellwood & Colin Renfrew [Mcdonald Institute Monographs]

மரபணுக்கள் மூலம் ஆரிய படையெடுப்புக் கோட்பாடு நிரூபிக்கப்படுகிறதா ? ‘ஆம் ‘ என்றது சமீபத்தில் பிரபலப்படுத்தப்பட்ட ஒரு ஆய்வு முடிவு. மக்கள் தொகை மரபணுவியலாளரான மைக்கேல் பாம்ஷாத்தின் வழிகாட்டுதலில் அமெரிக்க யுடா பல்கலைக்கழகம் ஆந்திர பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்தியதோர் ஆய்வு 265 இந்திய ஆண்களின் மரபணுக்களில் சில அடையாளத் தொடர்களை ஆய்ந்த பின் இவ்வாராய்ச்சி முடிவுகள் குறித்து பின்வருமாறு கூறினார், ‘(Y க்ரோமோஸோம் மரபணு அடையாளத் தொடர்களை பொறுத்தவரை) மேல்ஜாதியினர் ஐரோப்பியர்களுக்கு அருகிலும், மத்திய ஜாதியினர் ஐரோப்பிய/ஆசிய இனத்தவருக்கு சமதூரங்களிலும், கீழ் ஜாதியினர் ஆசிய இனத்துக்கு மிக அருகிலும் இருப்பதைக் காண முடிகிறது. ‘ டெக்ஸாஸ் பல்கலைக் கழகத்தின் இராபர்ட் ஹார்ட்க்ரேவ் இம்முடிவுகள் ஆரிய இன படையெடுப்புக் கோட்பாட்டினை உறுதி செய்யும் ஆதாரமாக அமைவதாக கூறுகிறார். இந்த ஆராய்ச்சி முடிவுகளை பிரசுரித்த மேற்கத்திய பிரபல பத்திரிகைகள் பலவும் அவ்வாறே கூறின1.

ஆனால் இந்திய சமுதாய அறிவியலாளர்கள் மற்றும் வரலாற்றாசிரியர்கள் மற்றும் புள்ளியியலாளர்கள் இந்த ஆய்வின் நம்பகத்தன்மையையும் அது பிரபலப்படுத்தப் பட்டிருக்கும் முறைமையையும் கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கியிருக்கிறார்கள். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்துள்ள பல ஆழமும் விரிவும் அதிகமான பல இந்திய மக்கள் தொகை மரபியல் ஆய்வுகளின் முடிவுகளும் இவ்வாய்வின் அடிப்படைகளை ஐயத்திற்குரியதாக்குகின்றன. மென் அறிவியலான மானுடவியலின் பதங்களை கடும் அறிவியலான மரபணுவியலின் பதங்களுடன் இணைப்பது மிகவும் மடத்தனமான அதையும் விட மிகவும் அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தலாம். மேலும் இந்த ஆய்வு ஆந்திரப் பிரதேசத்தில் ஒரு சிறு பூகோளப் பிரதேசத்தில், மிகச்சிறிய மாதிரி அளவுகளுடன் மேற்கொள்ளப் பட்டது. ஜாதியையும் இனத்தையும் முடிச்சு போடும் யுடா பல்கலைக் கழக ஆய்வு முடிவுகள் முழுமையானவையல்ல. அதிகபட்சம் அது ஒரு குறிப்பிட்ட இடத்தின் சில ஜாதிகளில் ஒரு சில மரபணுத் தன்மைகளை வெளிப்படுத்துவதாக மட்டுமே அமையமுடியும் என கூறலாம். 1 பில்லியன் மக்களை தன்னகத்தே கொண்ட சாதிய சமுதாய அமைப்புகளின் மரபணு இயற்கையை அறிய 265 மாதிரிகளைக் கொண்ட ஒரு ஆய்வு எவ்வளவு உதவ முடியும் ? (சில சாதி பிரிவுகளின் மாதிரி அளவு வெறும் 10!) மேலும் ‘கீழ் ஜாதி ‘ ‘மேல் ஜாதி ‘ என பிரிக்கும் முறை வரலாற்றறிவியல் சார்ந்ததல்ல, இன்றைய சமுதாய லைச்சார்ந்தது. (பல ‘கீழ் ஜாதியினர் ‘ ஷத்திரிய வர்ணத்தைச் சார்ந்தவர்கள் என அம்பேத்கர் கூறுவது இங்கு நினைவு கொள்ளத் தக்கது.) வேறுபட்ட வர்ணங்களைச் சார்ந்த பல தொழில் குழு ஜாதிகள் வேறுபட்ட பிராந்திய சமூகக் காரணிகளின் அடிப்படையில் அச்சமுதாய அமைப்பில் வெவ்வேறு உயரங்களில் விளங்குகின்றன. இந்லையில் ‘மேல் ஜாதி ‘ ‘கீழ் ஜாதி ‘ பாகுபாடுகளில் இனத்தன்மையைக் காண விழைவது தவறான முடிவுகளுக்கு வரவே வழி வகுக்கும் என்பதும் இந்த ஆய்வின் மற்றொரு பிரச்சனை. எனவே இந்த ஆய்வு எவ்விதத்திலும் முடிவானதென்றோ அல்லது இந்தியா முழுமைக்கும் பொருந்துவதென்றோ கூற முடியாது2. சர்ச்சைக்கிடமற்று அறிவியல் உலகால் ஏற்கப்பட்ட இந்திய மக்கட்தொகை சார்ந்த மரபியல் ஆய்வு முடிவுகள் ஆரிய இன மற்றும் படையெடுப்புக் கோட்பாட்டினை மறுதலிக்கின்றன. இந்த ஆய்வினைக் காட்டிலும் அதிகமான மாதிரி அளவுகளுடன் மேற்கொள்ளப்பட்ட மரபியல் ஆய்வொன்று வடஇந்தியர்களுக்கு மரபியல் ரீதியாக தென்னியந்தியர்களுடனான ஒற்றுமை வட இந்தியர்களுக்கு ஈரானியர்களுடனான ஒற்றுமையைக் காட்டிலும் அதிகமானதென்று கூறுகின்றது3.

யுடா பல்கலைக்கழக ஆய்வு கூறும் மரபணுக் கலப்புகள் எப்போது ஏற்பட்டன என்பதும் கால ஓட்டத்தில் கணிக்கப்பட முடியாத ஒன்று. எனவே இந்த ஆய்வு முடிவு சற்றேறக்குறைய 5000 ஆண்டுகளுக்கு முன் நடந்ததாக கருதப்படும் ஆரிய படை யெடுப்பினை உறுதிப்படுத்துவதாக எடுத்துக் கொள்ள அப்படையெடுப்புக்கான அகழ்வாராய்வுச் சான்றுகள் போன்ற பல இணைப்புல சான்றுகள் கட்டாயமாக வேண்டும். அலெக்ஸாண்டர் கிறிஸ்டென்ஸன் மற்றும் பிரியன் இ. கெம்பில் தாம் மேற்கொண்ட பழம் உலகின் கலாச்சாரங்களின் அகழ்வாய்வு கண்டுபிடிப்புகளில் மரபியல் ஒற்றுமைகளை ஆராய்ந்த பின் ஆரிய இன புலப்பெயர்வு கோட்பாட்டினைக்கூட(Aryan MigrationTheory -AMT) நிராகரிக்கின்றனர். மொழியியலாளரான அஸ்கோ பர்போலா முன்வைக்கும் புலப்பெயர்வுக் கோட்பாடான ‘கி.மு இரண்டாயிரங்களில் பாக்தீரியத்திலிருந்து சிந்து சமவெளிக்கு மக்கள் இடம் பெயர்ந்தமைக்கான ‘ எந்த சான்றுகளும் இல்லை என தம் ஆய்வுகள் நிரூபிப்பதாக அவர்கள் கருதுகின்றனர்4. நியூயார்க் பல்கலைக் கழகத்தின் மானுடவியல் துறையைச் சார்ந்த டிசோடெல் ஆரிய படையெடுப்பு/புலப் பெயர்வு குறித்து மரபணு ஆய்வுகளின் மூலம் நாம் பெற்றுள்ளத் தெளிவினை பின்வருமாறு கூறுகிறார், ‘…அண்மையில் செய்யப்பட்ட ஆய்வுகள் 3000 அல்லது 4000 ஆண்டுகளுக்கு முன் நடந்ததாகக் கூறப்படும் ஆரிய படையெடுப்பு, கூறப்படுவது போல் நடந்த ஒன்றாகக் காட்டவில்லை. (அவ்வாறு நிகழ்ந்திருந்தால்) நிச்சயமாக அது (மரபியல் ரீதியாக) முக்கியத்துவமில்லாத ஒரு சம்பவமாகத்தான் தோன்றுகிறது. ‘5

பார்த்தா மஜூம்தார் போன்ற மானுடவியல் மரபணுவாளர்கள் இன்னமும் ஆரியப்படையெடுப்பு மனமண்டலத்திலிருந்தே(paradigm) செயல்படுகின்றனர். Y க்ரோமோசோம்களின் மரபணு அடையாளக்குறி எனும் கடும் அறிவியல் (hard science) பதத்தின் மூலம் ‘பிராமணர் ‘, ‘ஷத்திரியர் ‘ என்பது போன்ற மென்-மானுடவியல் பதங்கள் குறிக்கும் இயக்கத்தன்மை கொண்ட (dynamic) மக்கள் கூட்டங்களை ஆராய்வதில் மனமண்டலங்கள் கடும் சார்பு-நிலைகளை ஏற்படுத்தக்கூடும். இதன் மூலம் ஆரியப்படையெடுப்புக் கோட்பாடு நிரூபிக்கப்பட்டுவிட்டதாகக் கூறுவது நிச்சயமாக தவறானதாகும். வேத இலக்கியங்களை தவறாக புரிந்துவிட்டு உருவாக்கிய கோட்பாடு ஆரியப்படையெடுப்பு என்பதனை இன்று பெருமளவு வரலாற்றாசிரியர்கள் உணர்கின்றனர். உதாரணமாக, சமஸ்கிருதவியலாளர் ஹான் காக், பாரத வேத அறிஞர்கள் ஏற்கனவே எடுத்துக்காட்டியவாறு, பல இனரீதியாக அறிந்துகொள்ளப்பட்ட ரிக்வேத பதங்கள் இனரீதியாலான பொருள் தராதவை என்பதனை ஏற்றுக்கொண்டுள்ளார்6. மஜூம்தார், பாம்ஷாட் ஆகியோர் எந்த ஆராய்ச்சி தகவல்களின் அடிப்படையில் ஆரியப்படையெடுப்பு கண்ணோட்டத்திற்கு வருகின்றனரோ அதே தரவுகளையும் அதற்கு அதிகமான தரவுகளையும் கொண்டு மற்றொரு மரபணுவியலாளர் வரும் முடிவு இவர்களுக்கு நேர் எதிராக உள்ளது. இந்த மரபணு ஆராய்ச்சிகளில் பயன்படுத்தப்பட்டுள்ள M17 எனும் மரபணு அடையாளக்குறி ஆரியப்படையெடுப்பின் நிரூபணமாகக் கருதப்படுவதே அடிப்படையில் தவறு எனும் முடிவுக்கு வருகிறார் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தினை சார்ந்த ஸ்டாபன் ஓப்பன்கைமர். அவரது வார்த்தைகளில்: ‘நியாயமாகப் பார்த்தால் தெற்காசியாவே M17 மரபணு அடையாளக்குறியின் பூர்விகமாக இருக்கவேண்டும். ஏனெனில் அக்குறி இங்குதான்(பாரதம், பாகிஸ்தான், மற்றும் கிழக்கு ஈரான்) காக்கஸ் பிரதேசத்தைக் காட்டிலும் அதிக அளவிலும் மிகப்பெரும் வேறுபாட்டு வளமையுடனும் காணப்படுகிறது. அதன் இருப்பு தனித்து வாழும் வனவாசி மக்களிடம் கூட கண்டறியப்பட்டுள்ளது. எனவே M17 ‘ஆண்-ஆரியப் படையெடுப்பின் அடையாளம் ‘ எனக் கருதப்படுவதற்கு ஆதாரமற்றுப்போகிறது. ‘7

இத்தகைய ஆட்டம் காணும் அறிவியல் அடிப்படையில் நின்று கொண்டு பாறையின் மீது நின்று கொண்டிருப்பதாகக் கருதிக்கொண்டு திண்ணையில் தாம் எழுதியுள்ளக் கட்டுரையில் திரு.அன்பழகன் என்பவர் ஏறத்தாழ நம் சமுதாயத்தின் சமுதாய தீமைகள் எனக் கருதப்பட்ட அனைத்துக்கும் ‘ஆரியப் பார்ப்பனரின் ‘ இனத்தூய்மை காக்கும் போக்கே காரணம் எனக் கூறுகிறார். அவரது வார்த்தைகளில்: ‘இந்திய ஐரோப்பிய மொழிக் குழுவினரான ஆரியப் பார்ப்பனர்கள் சுமார் கி.மு. 4000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் நுழைந்தனர் என்றும் கி.மு. 2000 அளவில் தென்னகத்தில் பரவினர் என்றும் கருதப்படுகிறது. இக்காலக் கட்டத்தில் எழுந்த தமிழ் இலக்கியமான மதுரைக் காஞ்சியில் ஆரியப் பார்ப்பனர்களின் வைதீக மதமும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.ஆரியப்பார்ப்பனர்கள் தங்கள் இனத்தூய்மையைக் கட்டிக் காப்பதற்காக தங்கள் இரத்த உறவுக்குள்ளேயே திருமணம் செய்து கொள்ளும் அகமானமுறை, இனக்கலப்பிற்கு எதிரான குழந்தைத் திருமணம், சதி எனும் உடன் கட்டை ஏறுதல், விதவைக் கோலம், சாதிக் கேற்ற தனித்தனி குடியிருப்புகள், தீண்டாமை, மத நிபந்தனைகள், வட்டாரக் கட்டுப்பாடுகள் ஆகியவை நிலை நிறுத்தப்பட்டன. ‘8

திரு.அன்பழகன் மதுரைக்காஞ்சியின் காலத்தை கிமு இரண்டாயிரத்துக்குக் கொண்டு சென்ற விந்தை அபரிமிதமானது. ஒருவேளை எழுத்து வேகத்தில் இது எழுதப்பட்டிருக்கலாம். அவ்வாறு இல்லையெனில் இந்த அரிய கண்டுபிடிப்பிற்கான ஆதாரங்களை அவர் முன்வைப்பது தமிழ் சங்க காலம் குறித்த ஆராய்ச்சியாளர்களுக்கு உறுதுணையாகும். இது ஒரு புறமிருக்க, ஆரிய படையெடுப்பினை ஏற்றுக்கொண்டோர் கூட ஆரியர் வருகைக்கு முன்னரே இங்கு சாதி அமைப்பின் மூந்தைய வடிவம் இருந்திருக்க வேண்டும் எனக் கூறுவதை திரு அன்பழகன் சிந்தித்திருக்கலாம். உதாரணமாக கோசாம்பி 1964 இல் தாம் எழுதிய ‘The Culture and Civilisation of Ancient India in Historical Outline ‘ எனும் நூலில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஐராவதம் மகாதேவனும் ஹரப்பா நாகரிகக் குறியீடுகள் குறித்த தம் ஆய்வில் பிற்கால சமுதாய அமைப்பினுடன் தொடர்புடைய சமுதாயப் பிரிவுகளின் அடையாளங்களை அவற்றில் ஊகித்துள்ளார்.9

எனவே சாதிய அமைப்பு அல்லது வர்ண அமைப்பு ‘ஆரியரால் ‘ இங்கிருந்த ‘தஸ்யுக்களை ‘ அடக்க உருவாக்கப்பட்டது எனக் கூறுவது முழுமையாக அனைத்து தரப்பு அறிஞர்களாலும் மறுக்கப்பட்ட ஒரு காலனிய கதையாடலை அரசியல் விருப்பத்தால் மீள்-கக்குவதே ஆகும். பிற்காலத்தில் எழுந்த ஸ்மிருதிகளிலும் கூட பன்மைத்தன்மை இருப்பதும் அவற்றுள் வர்ண-மாற்றத்தை அனுமதிக்கும் ஸ்மிருதிகளும் இருப்பதும் கடந்த முன்னூறு ஆண்டுகளில் நாம் பெரிதும் மறந்த ஒன்று. மேலும் இந்த படையெடுப்புக் காதைகள் ஏதுமற்ற நாடுகளிலும் கூட சாதிய அமைப்புகள் இன்னமும் தீவிரமாக அகமணத்தன்மையுடன் இருந்திருப்பது ஓர் வரலாற்று உண்மை. சாதி எனும் பதத்தின் நேரடி பெயர்-காரணத்தில் குலத்தூய்மை எனும் பொருளைக் காணமுடியாது. ஆனால் போர்ச்சுகீசிய சமுதாய அமைப்பின் caste எனும் பதம் குலத்தூய்மைக்கு தொடர்புடையதாகும். இந்நிலையில் பெரும் மூலதன உள்ளிறக்கமும், காலனியம் மூலம் சமுதாய பேர்-விரிவாக்கமுமே ஐரோப்பிய சமுதாயத்தில் இக்குலத்தூய்மைத்துவ சமுதாய அமைப்பினை பெரும் அளவிற்கு மாற்றி தொழில்-சமுதாயமாக மாற்றியது. பல ஐரோப்பியர் இயல்பாகவே பாரத சமுதாய அமைப்பிற்கு இணையாக தம் நாட்டு சமுதாய அமைப்புகளினை ஒப்பிட்டுள்ளமையும் நினைவுகூறத்தக்கது.10 மேலும் அகமண முறைகள் இன்றைக்கும்- இத்தனை மூலதன உள்ளிறக்கத்திற்கும் சமுதாய பரவலுக்கும் பின்னரும்- பல ஐரோப்பிய சமுதாய ‘உயர் ‘ குடும்பங்களில் சட்டப்பூர்வ கட்டுப்பாடுகளுடன் உள்ளன. இன்னமும் கூறினால் உயர்குலப் பெண்டிருக்கு புறக்கலப்புகளை தவிர்க்கும் chastity belt போன்ற கண்டுபிடிப்புகள் ஐரோப்பாவில்தாம் நிகழ்ந்தன என்பதனையும் நினைவுகொள்ள வேண்டும். இத்தகையதோர் முறை இங்கு இருந்திருந்தால் அது கட்டாயமாக ஆரியசூழ்ச்சி எனக் கூறப்பட்டிருக்கும். ஆனால் ஐரோப்பாவில் அது காலத்தின் கோலம் மட்டுமே. இங்கென்றால் அது ஆரிய சூழ்ச்சி அதுவும் ஆரியப்பார்ப்பன சூழ்ச்சி. எனில் அங்கெல்லாம் அக-மண சமுதாய அமைப்பு எத்தகைய இனத்தூய்மையை காப்பாற்ற உருவானது ? இங்கெல்லாம் இயல்பான மானுட சமூக பரிணாமமாக இத்தகைய சமுதாயமுறை தோன்றலாமெனில் ஏன் பாரதத்திலும் அவ்வாறு இந்த அமைப்பு உருவாகியிருக்க முடியாது ?

‘ஆரியப் பார்ப்பன ‘ சதி என்பது இனத்தூய்மையை பாதுகாக்க உருவாக்கப்பட்டது என்று சொல்வதற்கு எதிராக மிகத்தெளிவான வரலாற்றுச்சான்றுகள் உள்ளன. இலக்கியங்கள் முழுவதிலுமே அந்தணர்கள் உடன்கட்டை ஏறத் துணியும் பெண்களை தடுக்க முயற்சித்தமை ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இருபத்தொன்றாம் நூற்றாண்டில் திரு.அன்பழகன் உடன்கட்டை ஏறுதல் பார்ப்பனச் சூழ்ச்சி என்றால் புறநானூற்றுக் காலத்திலோ அதனைத் தடுப்பதே சூழ்ச்சி என பூத பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு கருதியுள்ளாள்:

பல் சான்றீரே! பல் சான்றீரே!

‘செல்க ‘ எனச்சொல்லாது ‘ஒழிக ‘ என விலக்கும்

பொல்லாச்சூழ்ச்சிப் பல் சான்றீரே ‘

எனக்கூறும் அவள் ‘எமக்கு எம்

பெருந் தோட் கணவன் மாய்ந்தென, அரும்பு அற

வள் இதழ் அவிந்த தாமரை

நள் இரும் பொய்கையும் தீயும் ஓரற்றே! ‘ (புறம்: 246)

என்றும் கூறுகிறாள்.

கணவனை இழந்து வாழ விரும்பாத பெண்டிர் குறித்து புறம் மேலும் பேசுகிறது. குயவனிடம் தம் கணவனுடன் தானும் சேர்ந்து புதைக்கப்பட பெரிய தாழியாக வேண்டுமெனக் கேட்ட பெண் குறித்து புறம்-256 கூறுகிறது. சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதனும் சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற் கிள்ளியும் போர்களத்தில் சண்டையிட்டு இறந்து கிடக்க அவரது பெண்டிர் அந்நிலை கண்டு அங்கேயே உயிர்விட்டனர் என்பதனை புறநானூறு (62) கூறுகிறது:

‘களம் கொளற்கு உரியோர் இன்றி, தெறுவர

உடன் வீழ்ந்தன்றால் அமரே; பெண்டிரும்

பாசடமு மிசையார் பனி நீர் மூழ்கார்

மார்பகம் பொருந்தி ஆங்கு அமைந்தனரே ‘

கணவனின் இறப்புச்செய்தியைக் கேட்டவுடனேயே கற்புடைப் பெண்டிர் மரணமெய்துவர் எனும் வழக்கம் பாரதம் முழுவதும் வழக்காற்றில் உள்ள ஒன்றாக இருந்துள்ளது. உதாரணமாக ஜெயதேவர் சரிதத்தில் உள்ள நிகழ்ச்சி ஒன்றும் இதே கருத்தினைக் கூறுகிறது. மத்தியகாலத்தைச் சார்ந்த முகமது ரிஸா நயுய் எனும் இஸ்லாமிய புலவர் மணப்பெண் ஒருத்தி பலர் தடுத்தும் தானே உடன்கட்டை ஏறியமை குறித்து, அவளது காதலினைப் புகழ்ந்து பாடியுள்ளார். 1825 இல் ஆர்.ஹர்ட்லி கென்னடி என்பார் சூழ்ந்திருப்போர் பலர் தடுத்தும் உடன்கட்டை ஏறிய நிகழ்ச்சிகளை கூறியுள்ளார்.11 படையெடுப்புக் காலங்களைத் தவிர்த்து நோக்கினால் வங்காளத்தில் காலனியாதிக்கத்தினைத் தொட்டடுத்து நடைபெற்ற பல உடன்கட்டை நிகழ்ச்சிகளைத் தவிர பாரதமெங்கும் அங்கொன்றும் இங்கொன்றுமாகவே உடன்கட்டை நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. (போருக்கு புறப்படும் முன் தமது மனைவியரையும் அந்தப்புர பெண்டிரையும் கொன்றுவிட்டு கிளம்பிய இஸ்லாமிய தளபதியும் உண்டு.) அஷிஸ் நந்தி போன்ற ‘மதச்சார்பற்ற ‘ அறிவுஜீவி வங்காளத்தில் மிகப்பரவலாகக் காணப்பட்ட உடன்கட்டை ஏறும் வழக்கத்தை அங்கு கொண்டுவரப்பட்ட காலனிய சொத்துரிமை சட்டங்களால் ஏற்பட்ட சமுதாய குழப்பத்தின் விளைவாக காண்கிறார்.12

அந்தணர்களாக ஏனைய குலத்தோர் ஏற்றுக்கொள்ளப்பட்டமையும், அந்தண குலத்தோர் வேறு வர்ணங்களுக்கு – நாலாம் வர்ணம் உட்பட மாறியமையும் தமிழ்நாட்டிலும் பாரதத்தின் இன்ன பிற பாகங்களிலும் நடந்தேறிய நிகழ்ச்சிகளாகும். திரு.அன்பழகன் கூறுதற்கு நேர்மாறாக பெற்றோர் விருப்பத்திற்கெதிராக உடன்போக்கில் சென்றோரை ஆதரித்து அவ்வாறு அவர் மணந்து கொள்வது அறத்திற்கு உட்பட்ட செயலே என்று கூறிய அந்தணரை தமிழ் இலக்கியத்தில் காணலாம். ஆக, அந்தண சூழ்ச்சியால் தென்னகத்தில் இனக்கலப்பு நடக்கவில்லை என்பது வெறும் வெறுப்பியல் வெப்பத்தில் கக்கப்பட்ட வார்த்தைகளே அன்றி வேறல்ல. இந்த இனக்கண்ணோட்டம் கடந்த மூன்று நூற்றாண்டுகளாக ஐரோப்பாவிலிருந்து இங்குள்ள அரசியல்வாதிகளும் அன்னிய சக்திகளால் பொம்மலாட்டம் செய்யப்படுபவர்களும் பரப்பி வரும் தவறான பார்வை. நாம் அனைவரும் ஒரே மக்கட் கூட்டமே ஆகும். பாரதத்தின் வரலாற்றில் பல ‘இனங்கள் ‘ வெளியிலிருந்து வந்து நம்முடன் கலந்திருக்கலாம். நம்மிலிருந்து வெளியில் பலர் சென்றிருக்கலாம். ஆனால் ‘ஆரியர் ‘ என தன்னை அழைத்துக் கொண்டதோர் ‘இனம் ‘ இங்கு நுழைந்து இங்கிருந்தோரை அடிமை கொண்டமைக்கு எவ்வித இலக்கிய வரலாற்று அகழ்வாய்வுச் சான்றுகளும் இல்லை. அது ஒரு காலனியக் கட்டுக்கதையன்றி வேறில்லை. அரசியல் இலாப -ஹிந்து விரோத காரணங்களைப்பற்றி ஜீவித்திருக்கும் கட்டுக்கதை. டாக்டர் அம்பேத்கரின் வார்த்தைகளில்: ‘அந்தணர் ஆரியர் என்றால் தீண்டத்தகாதவர் என ஒதுக்கிவைக்கப்பட்டவர்களும் ஆரியரே. அந்தணர் திராவிடரெனில் தலித்துகளும் திராவிடரே ’13

பயன்படுத்தப்பட்ட கட்டுரைகள்:

1. அனில் ஆனந்தசுவாமி, ‘The origins of India ‘s rigid caste systems are confirmed by DNA tests ‘, நியூ ஸயிண்டிஸ்ட், Vol-170, வெளியீடு எண் 2291, 19/5/2001.

2. ஆர்.இராமச்சந்திரன், ‘The genetics of caste ‘, ப்ரண்ட்லைன் Vol-18 இதழ் 12, 09-22/6/2001.

3.லுயியா கவேலி, ‘Genes, Peoples and Languages ‘, சயிண்டி•பிக் அமெரிக்கன், நவம்பர், 1991.

4.ஹெம்பில் & கிறிஸ்டென்ஸன், ‘The Oxus Civilization. A non-metric analysis of Bronze age Bactrian biological affinities ‘, தெற்காசிய ஆய்வு மாநாட்டில் வாசிக்கப்பட்ட ஆய்வுதாள்கள், 3-5 நவம்பர், 1994. *

5.டி.ர்.டிசாடெல், மானுடவியல் துறை, நியூயார்க் பல்கலைக்கழகம், ‘மானுட பரிணாமம்: ஆசியாவிற்கான தெற்கு பாதை ‘, கரண்ட் பயலாஜி, 1999, டிசம்பர் 16-30.

6. Hans Henrich Hock, Philology and Historical Interpretation of the Vedic Texts, World Association for Vedic Studies, ஜூலை 2000.

7. ஸ்டாபன் ஓபன்கைமர், The Real Eve: Modern Man ‘s Journey out of Africa (New York: Carroll and Graf Publishers, 2003, இந்நூலிலிருந்து பேரா.சுபாஷ் காக் மேற்கோள் ‘The cradle that is India ‘ மார்ச் 07, 2005 : www.rediff.com/news/2005/mar/08kak.htm

8. தி. அன்பழகன், தென்னகத்தில் இனக்கலப்பா ?, மார்ச் 24, 2005, திண்ணை.

9. http://www.harappa.com/seal/16.html

10.உதாரணமாக பிஷப் கால்டுவெல் சான்றோர் (நாடார்) சாதியினரை பிரிட்டிஷ் மேல்குடி மக்களுக்கு ஒப்பிட்டுள்ளார்.

11. ஆனந்த குமாரசாமி, ‘Dance of Shiva ‘,Munshiram Manoharlal Publishers Pvt. Ltd. New Delhi, பக்.128-129

12. கொயன்ராட் எல்ஸ்ட்டால் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது எல்ஸ்ட்டின் Decolonising The Hindu Mind, பக்.513-518

13. பாபா சாகேப் அம்பேத்கர் Writings and Speeches [Govt. of Maharashtra, 1986-90] பாகம்-7 பக். 85 மற்றும் காண்க பக்-302-303

குறிப்புகள்

*மேற்கோள் காட்டப்பட்ட நூல்:டாக்டர்.கொயன்ராட் எல்ஸ்ட்டின் ‘Update on the Aryan Invasion Debate ‘ (Chapter: 4.9. The Evidence from Physical Anthropology)- (ஆதித்ய பிரகாஷன் 1999)

#இன்றைய நவீனத்துவ அரசியல் மேடைத்தன்மையுடன் திரு.அன்பழகன் ஒருவேளை கைம்பெண்டிர் நிலையைக் காட்டிலும் சாவு நல்லதென அவள் கருதினாளோ எனக் கூறலாம். மாறாக, பண்டை சமுதாயத்தின் யதார்த்த நிலையை நாம் சிறிதே ஆழ்ந்து நோக்கினால் இது தவறெனப் புரியும். மிக அரிதாகவே அன்றி கைம்பெண்டிர் முழுமையாக விலக்கி வைக்கப்படவில்லை என்பதுடன், பல மேல்குலப்பெண்டிர் மறுமணம் செய்து கொண்டனர் என்பதுடன் பல கைம்பெண்டிர் தமது சமுதாய அலுவல்களில் எவ்விதத் தடையுமின்றி செயல்பட்டே வந்துள்ளனர். ஆக உடன்கட்டை ஏறியவர்களும் இருந்தனர்; உடன்கட்டை ஏறாது கைம்பெண்டிர் விரதம் பூண்டவர்களும் இருந்தனர்; மறுமணம் புரிந்து கொண்டவர்களும் இருந்தனர். இந்த மாறுபட்ட அனைத்து நிலையை ஏற்றுக்கொண்டவர்களும் (உடன்கட்டை ஏறியவர் தவிர – உடன்கட்டை ஏறுதலை மிகத்தெளிவாக மறுக்கும் வேத வாசகங்களே இருந்தன.) சாஸ்திர சம்மதத்தை காட்டும் படியாகவே நிலை இருந்தது. இந்த ஒவ்வொரு உடன்கட்டை ஏறிய பெண்ணிற்கும் அவ்வாறு ஏறாது சமூக செயலாற்றிய பெண்டிரைக் காட்டமுடியும். உதாரணமாக, ராணி துர்காவதி, ராணி லஷ்மி பாய் முதலியோர்

—-

infidel_hindu@rediffmail.com

Series Navigation

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்