சிந்திக்க ஒரு நொடி – சாஸனம் பொய்த்ததா, மானுடம் பொய்த்ததா ?

This entry is part [part not set] of 41 in the series 20050415_Issue

வாஸந்தி


மக்கள் பிரதிநிதிகள் என்ற கெளரவத்தைப் பெற்றவர்களால் மக்கள் மன்றத்துக்கு இழுக்கு

‘It is the best of times;It is the worst of times ‘

–Tale of Two Cities, Charles Dickens.

அந்தப் புகழ் பெற்ற வரியை- இது மிக உன்னதமான காலம்; மிக மோசமானதும் இதுவே ‘ என்ற வரியை எழுதிய பதினெட்டாம் நூற்றாண்டு ஆங்கில நாவலாசிரியர் சார்ல்ஸ் டிக்கன்ஸ், தான் பல நூற்றாண்டுகளுக்குப் பொருந்தக்கூடிய ஒரு வரியை எழுதிப்போனதை அறியமாட்டார். இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டு இந்தியாவுக்கு மிகச் சரியாகப் பொருந்துவதாக இருக்கும் என்று சத்தியமாக நினைத்திருக்கமாட்டார்.

இது எமது பொற்காலம் என்று இந்திய பங்குச் சந்தைக் காளைகள் களி நடம் புரிகின்றன.பொருளாதார முன்னேற்றம் எதிர்பார்த்த விகிதத்தைவிட அதிவேகப் பாய்ச்சலில் செல்வதாகப் பொருளாதார நிபுணர்கள்

கணக்கிட்டுச் சொல்கிறார்கள். அமெரிக்காவின் The Economist என்ற உலக நாடுகளின் பொருளாதார நாடித் துடிப்பையும் எதிர்கால ஜாதகத்தையும் கணிக்கும் பத்திரிக்கை, இந்தியாவின் வளர்ச்சி இன்னும் பத்து ஆண்டுகளில் சீனாவை முறியடிக்கும் என்று கணிக்கிடுகிறது. இந்தியாவில் முதலீடு செய்வீர்களா என்று யாரையும் இப்போது கையேந்திக் கேட்கவேண்டியதில்லை. பன்னாட்டு நிருவனங்கள் நமது இடது சாரிகள் அலற அலற போட்டி போட்டுக் கொண்டு உள்ளே நுழைந்துக் கொண்டிருக்கின்றன. கம்யூனிச மேற்கு வங்கத்து வாசலும் வெளிச்சந்தைக்குத் திறந்திருப்பதை காம்ரேடுகள் மறந்துவிட்டது விந்தை என்றாலும் அதுவே அவர்களது பலவீனம் என்பது பெரிய செளகரியம். இந்துத்துவ வாதிகள் மேற்குக் கலாச்சாரத்தை எதிர்த்து கோஷமிட சந்தர்பத்தைத் தேடிய வண்ணம் இருக்கையில் அது நமது உதிரத்தில் கலந்து கொண்டுவிட்டது. அமெரிக்க குழந்தைகள் சாப்பிடுவதையெல்லாம் நமது குழந்தைகள் ருசி உணர்ந்து சாப்பிடுகின்றன. அமெரிக்காவில் பிறந்து வளராமலே அமெரிக்க உச்சரிப்பில் ஆங்கிலம் நமது கால் சென்டர்களில் இந்திய இளைஞர்களின் நாவில் அனாயாசமாக விளையாடுகிறது. இந்திய மூளைகளுக்கு முன்னெப்போதும் இல்லாத கிராக்கி இப்போது. படித்த வல்லுனர்கள் இஷ்டப்பட்டு வெளியேறுவதால் நாட்டுக்கு நஷ்டம் என்று நினைத்த காலம் மலையேறிவிட்டது. இப்போது ‘எங்கிருந்தாலும் வாழ்க ‘ என்று வாழ்த்தும் நேரம். இந்தியன் இங்கிருந்தாலும், அங்கிருந்தாலும் நாட்டுக்கு அன்னிய செலாவணி கிடைக்கும் காலம். சராசரி இந்தியனின் வாழ்க்கைத்தரம் வெகுவாக உயர்ந்துவிட்டது கண்கூடாகத் தெரிகிறது.ஷாப்பிங் மால்களைக் காண குறைந்தபட்சம் சிங்கபூருக்குக்கூடச் செல்ல வேண்டியதில்லை. நாம் வசிக்கும் தெருவுக்கே வந்துவிட்டன பாம்புகளாய் நெளியும் உருள் படிகள் கொண்ட கண்ணைக்கவரும் மால்கள்.

டி.வி, காஸ் அடுப்பு இல்லாத வீட்டுப்பணியாளர் மனை சொற்பம். சன் டி.வியில் நான் பார்க்கத் தவறும் செய்தியை என் பணிப்பெண் பார்த்துச் சொல்கிறாள்.கெளரவமான வாழ்வைத்தேடி கடுமையாக உழைத்ததன் பயனாகக் கண்ட பொருளாதார முன்னேற்றத்தால் சிக்கென்று உடை உடுத்துகிறாள். ‘இங்கிலீஷ் மீடியம் ‘ பள்ளிக்குக் குழந்தைகளை அனுப்புவதில் பெருமை கொள்ளுகிறாள்.

இந்தியா ஒளிர்கிறது. சந்தேகமில்லாமல். நாட்டு அரசியலுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இந்த மாற்றத்துக்கும் சம்பந்தமில்லாததாலேயே ஒளிர்கிறது.தாராளமயமாக்கலுக்கு நன்றி. உந்துசக்திமிக்க தனி நபர்களுக்கு நன்றி. திறன் உள்ளவர்களும் வல்லமை படைத்தவர்களும் சுய முன்னேறிகளும் நாட்டை முன்னேற்றிக்கொண்டு போகிறார்கள் அரசுகளின் பங்களிப்பு பெறாமலே. அதன் பலாபலன்களைத்தடுக்கும் சக்தி அரசியல்வாதிகளுக்குக் கூட இல்லை.

ஆனால் சமீபகாலமாக நாட்டின் பல்வேறு மாநிலங்கள் அவையிலும் நாடாளுமன்றத்திலும் உறுப்பினர்களும் அரசியல் கட்சிகளும் ஈடுபடும் அதிகாரப்போட்டியையும் கீழ்த்தர அரசியல் சூதாட்டத்தையும் பார்க்கும்போது,

கவலை ஏற்படுகிறது வெண்ணைத் திரண்டு வரும்போது தாழி உடைந்த கதையாக முடிந்து விடக்கூடாதே என்று. இப்போது பொருளாதாரம் இருக்கும் சூழலில் அதற்கு ஊறு விளைவிக்கவேண்டுமானால் அரசியல் ஸ்திரமற்ற நிலை வந்தாலே சாத்தியப்படும். அதற்கு என்னென்ன செய்யவேண்டுமோ எல்லாவற்றையும்

காங்கிரஸ் கட்சியே செய்துகொண்டிருக்கிறது. தீர்கதரிசனமும் தேசாபிமானமும் கொண்ட சட்டச் சிற்பிகளால் வடிவமைக்கப்பட்ட அரசியல் சாஸனம் என்ற மகத்தான வழிகாட்டு சாஸனத்தைத் துச்சமாக நினைக்கும் போக்கு பதவியைப் பிடிக்கும் ஒரே வெறியில் இருக்கும் எல்லா கட்சிகளுக்கும் இருக்கிறது. சாஸனத்தை மதிக்கத் தவறும் எந்தக் கட்சிக்கும் ஆட்சியைப்பிடிக்கும் அதிகாரம் இருக்கமுடியாது. சட்ட மன்றங்கள் உறுப்பினர்களுக்குப் பொழுது போக்கு மேடையாகிவிட்டன.அல்லது புறக்கணிப்பு மேடையாக. சபா நாயகர்கள் ஆளும் கட்சிக்குத் தலையாட்டி பொம்மைகள் என்பதோடு பலர் நீதிமன்ற வழக்குகளை சந்திப்பவர்கள்.சாஸனத்தை மதிக்கத் தெரியாதவர்களுக்குப் பிரஜைகளை மதிக்கத் தெரியாது. சாமான்ய மனிதனும் ஏற்றம் காணும் வகையில் தங்கள் ஆட்சி இருக்கும் என்ற முழக்கத்துடன் ஆட்சிக்கு வந்த கட்சிக்கு தான் முழங்கியது மறந்துவிட்டது. இந்தியா ஒளிர்கிறதா ? அந்த முகத்திற்கும் அரசுக்கும் சம்பந்தமில்லை.

ஏழ்மை இன்னும் இருக்கிறது. பிச்சைக்காரர்கள் கோவில் வாசலில் நிரந்தர குத்தகை எடுத்திருக்கிறார்கள். கோடிக்கணக்கான பேருக்கு இருக்க இடமோ அடுத்த வேளை சாப்பாடோ கிடைக்க வழியில்லை. பட்டினிச் சாவுகள் தொடர்கின்றன. நெக்சலைட் எதிர்ப்பு உத்வேகம் கொண்டிருக்கிறது. இந்த முரண்பாட்டுக்குக் யார் காரணம் ? தனி நபர் முயற்சி எப்படி நாட்டை முன்னேற்றிக்கொண்டு செல் கிறதோ அரசுகளின் நிர்வாகத் திறன் இன்மையே ஏழ்மைக்கும் பட்டினிச்சாவுகளுக்கும் நக்சல் எதிர்ப்புக்கும் வித்து. உற்பத்திப் பெறுகி என்ன பயன் ? எல்லா தரப்பு மக்களுக்கு அது போய்சேரும் வகையில் சரியான பங்கீடு செய்யத் தவறுவது நிர்வாகத்தின் குறையல்லவா ? எதற்கெல்லாமோ

ஸ்பாஞ்ச் உறிஞ்சிக் கொள்வதைப்போல அமெரிக்க நாகரிகத்தைப் பின்பற்றுகிறோமே, அவர்களது அரசு நிர்வாகத் திறனை ஏன் கற்றுக்கொள்ளவில்லை ? அடிப்படை வசதிகள் என்பது தனி மனிதனின் பிரஜா உரிமை என்று கருத்தோடு மேலை நாடுகள் அதை நோக்கி தமது அரசு நிர்வாகத்தை செயல்படுத்துகின்றனவே, நம்மால் ஏன் அது முடியவில்லை ? ஆ- அதற்கு தார்மீக மதிப்பீடுகளில் நம்பிக்கை வேண்டும். அரசியல் சாஸனத்தில் நம்பிக்கை வேண்டும். கோவிலின் கர்பக்கிரகத்துக்கு ஒப்பான மக்களவை என்பதன் புனிதத்தை உணரும் பணிவு வேண்டும்.

அப்போது தான் புரியும்–மக்கள் சேவையே மகேசன் சேவை என்று. எல்லோரும் ஒன்று சேர்ந்து இழுக்கவேண்டிய தேர் அது என்று.

—-

vaasanthi@hathway.com

Series Navigation

வாஸந்தி

வாஸந்தி