போப் ஜான் பால் – II : மெளனமான சாதனைகளின் பாப்பரசர்

This entry is part [part not set] of 42 in the series 20050408_Issue

அரவிந்தன் நீலகண்டன்


கத்தோலிக்க சமுதாயத்தின் தலைமை பீடத்தில் இன்று ஒரு வெற்றிடம் உள்ளது. கத்தோலிக்கருக்கு மட்டுமின்றி ஏனைய கிறிஸ்தவ பிரிவுகளுக்கும் கூட தூய கிறிஸ்தவத்தின் அதிகார பூர்வ குரலாக போப் ஒலித்தார். கத்தோலிக்கம் இழந்த செல்வாக்கினை மேற்கத்திய சமுதாயத்தில் மீண்டும் அடைய வைத்தவர் இவரே. கடந்த நூறு ஆண்டுகளில் எப்போதும் இல்லாத அளவு ஒரு வலுவான சக்தியாக கத்தோலிக்கம் விளங்க அவரே காரணம். இத்தகையதோர் தலைமையை இழந்துள்ள கத்தோலிக்க சமுதாயத்தின் ஆதங்கத்திலும் துக்கத்திலும் ஒவ்வோர் உலகக் குடிமகனும் பங்கேற்கவே வேண்டும். இம்மகத்தான தலைவரது கால் நூற்றாண்டுகளுக்கும் மேற்பட்ட பாப்பரசு செயல்பாட்டின் பல்வேறு பரிமாணங்கள் நாம் அனைவரும் ஏற்கமுடியலாம் இயலாமல் போகலாம். ஆனால் தம்மால் சரியென ஏற்கப்பட்ட குறிக்கோளான உலகில் ஏசுவின் சாம்ராஜ்ஜியத்தைக் கொணர்தல் என்பதனை நோக்கி ஆரவாரமின்றி அழுத்தமாக அவர் எடுத்த முயற்சிகள் எவ்வித தன்னலமும் இல்லாதவை. கத்தோலிக்க திருச்சபை மீண்டும் அரசதிகார வலு பெறுவதனை இறை சாம்ராஜ்ஜிய மீள்வருகைக்கு முதல்படியாக போப் அவர்கள் கண்டிருக்க வேண்டும். உலகளாவிய ஒரு மத சாம்ராஜ்ஜியம் உருவாக இருபத்தியொன்றாம் நூற்றாண்டில் வலுவான அடித்தளத்தை அவர் உருவாக்கியுள்ளார்/

கிபி 1523 க்குப் பின்னர் இத்தாலியரல்லாதவரான முதல் போப் 1978 இல் போப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போலந்தைச் சார்ந்த கரோல்

வோஜ்தைலாவாகப் பிறந்த இரண்டாம் ஜான் பால் தான். பொருளாதார வலுகரமாக ரோமன் கத்தோலிக்கத் திருச்சபைக்கு விளங்கிய ஓபஸ் டெய் எனும் அமைப்பின் பிடி வத்திகானை இறுக்கிய போது அதனை எதிர்த்தவர் இவரது முந்தைய போப்பான போப் ஜான் பால் -I. அவரது திடார் மரணத்தின் பின்னர் போப்பாக பதவியேற்ற போப் ஜான்பால் – I.I., தம் பதவியேற்பு முடிந்ததும் முதன்முதலாக செய்த விஷயங்களில் ஒன்று ஓபஸ்டெய் அமைப்பின் ஸ்தாபகரான ஜோஸ்மரியா ஈஸ்க்ரிவா எனும் ஸ்பானிய கத்தோலிக்க பாதிரியின் கல்லறை முன்னர் சென்று பிரார்த்தித்ததாகும். ஓபஸ் டெய் எனும் அமைப்பு பல சர்ச்சைகளுக்கு ஆளாகியதோர் அமைப்பு. இந்த அமைப்பின் ஸ்தாபகர் . ஸ்பானிய பாசிஸ சர்வாதிகாரியான பிரான்ஸிஸ்கோ பிராங்கோ அரசின் பொருளாதாரக் கொள்கைகளை நடைமுறைப்படுத்த அந்த சர்வாதிகாரிக்கு உதவிய ‘பெருமை ‘ இந்த அமைப்பிற்கு உண்டு. கத்தோலிக்க திருச்சபை எடுத்த எந்த பரந்தமனப்பான்மை கொண்ட சீர்திருத்தங்களையும் கடுமையாக எதிர்த்த அமைப்பு ஆகும். பெரு நாட்டில் உள்ள ஓபஸ் டெய் ஸ்தாபனத்தின் முன்னாள் முக்கிய தலைவர்களில் ஒருவரான அல்பெர்டோ மொன்காண்டா, ஒரு பேட்டியில் ஓபஸ் டெய் ஸ்தாபகர் இரண்டாம் வத்திகான் மாநாடு மூலம் ‘அனைத்து மதங்களிலும் இறை அருள் வெளிப்பட முடியும் ‘ எனும் நிலைப்பாட்டினை மேற்கொண்ட போப் ஜான் XXIII குறித்து ‘திருச்சபையின் தலைமையில் இப்போது சைத்தான் ஏறிவிட்டது ‘ எனக் கடுமையாகக் கூறியதை நினைவு கூர்கிறார். இந்த அமைப்பு போப் ஜான்பால்-II தலைமையில் வெகுச்சிறப்பாக வளர்ந்தது. 1982 இல் இந்த அமைப்பிற்கு தனி சுதந்திரம் போப்பால் அளிக்கப்பட்டது. அதாவது ஓபஸ் டெய் பிராந்திய தலைவர்கள் எடுக்கும் முடிவு ஒரு மறை மாவட்டத்திற்கு ஒரு ஆயர் எடுக்கும் முடிவுக்கு இணையானது. இன்னமும் சொல்லப்போனால் மறைமாவட்ட ஆயர்களின் முடிவுகளுக்கு ஒரு பிராந்திய அளவில் மட்டுமே கட்டுப்படுத்தும் தன்மை உண்டு. ஓபஸ் டெய் தலைவர்களுக்கு இப்பிராந்திய கட்டுப்பாட்டுத்தன்மை கிடையாது. ஒரு விதத்தில் போப் ஜான்-IIதான் ஓபஸ் டெய்யின் உண்மையான வலிமைக்கு காரணம் என்றே கூறிவிடலாம். இன்று 80,000 க்கும் மேற்பட்ட யாரென அறியப்படமுடியாத இரகசிய அங்கத்தினர்களுடன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசியல் அமைப்புகள், ஊடக அமைப்புகள், வர்த்தக அமைப்புகள் மற்றும் பல்கலைக்கழக அமைப்புகள் ஆகியவற்றில் இணைந்திருக்கும் இவ்வுறுப்பினர் மிக நுண்ணிய ஆனால் வலிமையான விதங்களில் கத்தோலிக்க தலைமைப்பீடம் மற்றும் ஓபஸ் டெய்யின் தலைமைப்பீடம் ஆகியவற்றிற்கு சாதகமான சூழல்களை உருவாக்குவர். இத்தகைய வலிமையான அமைப்பினை கத்தோலிக்க திருச்சபைக்கு உருவாக்கியதன் மூலம் அதனை மத்திய காலங்களுக்குப் பின்னர் மீண்டும் வலிமையானதோர் அரசியல் சக்தி கேந்திரமாக மாற்றிய ராஜ தந்திரி போப் ஜான் பால் ஆவார். நிச்சயமாக கத்தோலிக்க திருச்சபையும் சமுதாயமும் அவருக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளன.

மிகவும் பிரபலப்படுத்தப்பட்ட அவரது ‘புத்தாயிரமாவது ஆண்டில் திருச்சபை செயல்பாடுகளுக்காக மன்னிப்பு தெரிவித்தல் ‘ எனும் வைபவத்தில் ‘கடந்த காலத் தவறுகளுக்கு (குற்றங்களல்ல: errors not crimes) கத்தோலிக்க திருச்சபை பொறுப்பில்லை எனும் நிலைப்பாட்டிலிருந்து மன்னிப்பு கோருதல் ‘ எனும் நிலைப்பாட்டினை அவர் எடுத்துக்கொண்டார். இஸ்ரேலின் யூதப்படுகொலை காட்சியகத்தினை பார்வையிட்ட முதல் பாப்பரசர் இவரே. அங்கும் இரு-தன்மை கொண்ட நிலைப்பாட்டினை அவர் எடுத்தார். ‘யூதர்களிடம் அவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட படுகொலைகளுக்கு வருத்தம் தெரிவித்த அவர், ஹிட்லரின் படுகொலைகள் ஒரு மதச்சார்பற்ற கோட்பாடுகளாலும் (read evolution) கிறித்தவத்துடன் தொடர்பற்ற பாகன் (pagan) சிந்தனையாலும் வெறிபிடித்த ஒரு அரசே இப்படுகொலைகளுக்கு காரணம் என்றும் கூறினார். மேலும் முக்கியமாக யூதர்களை தம் ‘மூத்த சகோதரர் ‘ என அழைத்தார். இந்த விளி கத்தோலிக்க-கிறித்தவ-இறையியல் பரிபாஷயில் தனிப்பொருள் கொண்டது. வெளியிலிருந்து காண மிகுந்த பாசத்துடன் கூறப்பட்ட விளியாகத்தோன்றும் இது உண்மையில் குறிப்பதென்ன ? மூத்த சகோதரன் என்பவன் யூத-தொன்மத்தில் வரும் காயின் எனும் கொலைக்காரனைக் குறிக்கும் சொல்லாகும். மத்திய கால இறையியலாளர் பலர் ஆதமின் மூத்த மகனான காயின் ஆண்டவனுக்குப் பிரியமான அவனது இளைய சகோதரனைக் கொன்று அவனது இரத்தப்பழியைச் சுமந்து பூமியெங்கும் அலையும் படி பழிக்கப்பட்டதையும், ஏசுவின் பாடுகள் எனும் கற்பனைச் சித்தரிப்பில் ஏசுவின் இரத்தப்பழியை யூதர்கள் ஏற்றதாகவும் அவர்களும் பூமி எங்கும் சிதறடிக்கப்பட்டதையும் இணைத்து மூத்த சகோதரத் தொன்மம் மூலம் அவர்களுக்கு எதிரான கொடுமைகளை நியாயப்படுத்துவது வழக்கம். இன்றைய வத்திகானும் அந்நிலைபாட்டில் இருந்து மாறவில்லை என்பதனை போப் ஜான் பால் அவர்களது ‘வருத்தத்திற்கு ‘ அப்பால் நிலவிய உண்மைத்தொனியில் காணலாம். இதற்கு சான்று பகரும் மற்றோர் நிகழ்ச்சி சிரியாவில் யூதர்களுக்கு எதிரான இரத்தக் குற்றம் எனும் நாசி கால உரையொன்றினை முழுமையாக அமர்ந்து போப் கேட்டதுடன், அந்த உரை நிகழ்த்தியவரை அமைதிக்கு மிகவும் துணை போனவர் என புகழ்ந்ததும் ஆகும். இவ்வாறு மிகக் கடுமையாக கத்தோலிக்க மரபு சார்ந்த நிலைபாடுகளை எடுத்தபோதிலும் உலக அளவில் தம்மீதும் அதைவிட முக்கியமாக தாம் சார்ந்திருந்த திருச்சபை மீதும் எத்தகைய பெரும் வெறுப்புணர்ச்சியும் எதிர்ப்பும் சர்வதேச ஊடகங்களில் வராமல் கவனித்துக் கொள்ளும் கலையினை மிகநன்றாக பயின்று செயல்படுத்திய அரிய உலக சமயத்தலைவர் போப் ஜான் பால் II.

பொதுவாக அமெரிக்க சிஐஏ ஏதோ படுசக்தி வாய்ந்ததாக கருதுவதுண்டு. ஆனால் அமெரிக்க சிஐஏ மற்றும் நிர்வாகத்தை தமது இஷ்டத்திற்கு கைப்பாவையாக மாற்றிய மதபீடாதிபதி போப் ஜான்பால்-II தான். போலந்தில் கம்யூனிச அரசு வீழ்ந்து சாலிடாரிடி அரசு எழ திருச்சபை சிஐஏயுடன் இணைந்து சிறந்த முறையில் செயல்பட்டது. அதே நேரத்தில் எத்தருணத்திலும் சிஐஏயின் கைப்பாவையாக கத்தோலிக்க திருச்சபை மாறிவிடாமல் கவனத்துடன் செயல்பட்டவர் போப் ஜான்பால்-II. இது எத்தனை அபாயகரமானதென்று கூறவேண்டியதில்லை. இறையியல் காரணங்களுக்காக யூத அரசு எதனுடனும் தாம் இறுதிவரை ஒத்துப்போக முடியாது என்பதையும் அதே நேரத்தில் வெளிப்படையான யூத எதிர்ப்பு தமக்கு நல்லதல்ல என்பதையும் அவர் மிக நன்றாக உணர்ந்திருந்தார். இதுவே சிஐஏயுடனும் அவரது உறவுகளை மட்டுப்படுத்துவதுடன் சர்வ ஜாக்கிரதையாக செயல்பட வைத்தது. இதன் விளைவாக கத்தோலிக்கத் திருச்சபையே எந்நேரத்திலும் இவ்வுறவில் மேல்தன்மையுடன் விளங்கியது. உதாரணமாக ஈராக் போர் எதிர்ப்பின் போது பல மானுடப்படுகொலைகளை செய்த ஈராக்கிய அதிகாரிகளுக்கு போப் தமது நேரத்தை ஒதுக்கினார். அமெரிக்காவின் ஈராக் போருக்கு எதிராக ஐரோப்பா அண்மை சரித்திரத்தில் கண்டிராத பெரும் ஆர்ப்பாட்டத்தை அவர் ஏற்பாடு செய்து நடத்திக்காட்டினார். தெளிவாக தாம் ஒரு தனி சர்வதேச அரசியல் வலுகொண்ட அதிகார மையம் என்பதனை தெளிவுபடுத்தினார். கத்தோலிக்க சமுதாயத்தின் வலுவினை சர்வதேச அளவில் எவ்வாறு பயன்படுத்துவது என்பதற்கு இனிவரும் பாப்பரசர்களுக்கு இவரே தெளிவான பாடம் சொல்லிக் கொடுத்தவராவார்.

உலகத்தையே உலுக்கிய குழந்தைகளுக்கு எதிரான கத்தோலிக்க பாதிரிகளின் பாலியல் குற்றங்களை அவர் எதிர்கொண்ட விதம் அலாதியானது. அரசல் புரசலாக இக்குற்றங்கள் ஊடகங்களில் (அதற்கு முன் கத்தோலிக்க திருச்சபை நன்றாகவே அறிந்திருக்கும்) தெரிய வந்தபோது அமெரிக்க சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட போப் இவற்றினை தவறுகள் எனவும் அதே நேரத்தில் கரு கலைப்பினை பாவமாகவும் கூறினார். பின்னர், பெரும் அதிர்ச்சிப் புயலாக இக்குற்றங்கள் வெளிவந்த போது அவற்றினை அறிந்து கொண்டும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைச் செய்த பாதிரிகளை காப்பாற்றி அந்த குழந்தைகள் இருந்த மறைமாவட்டங்களிலேயே ‘ஊழியம் ‘ செய்ய அனுமதித்த போஸ்டன் கார்டினல் பெர்னார்ட் லாவுக்கு அமெரிக்க சட்டவிசாரணைகளுக்கு தப்பி அடைக்கலம் அளித்தது வத்திகான் தலைமைபீடம். போப் இதன்மூலம் உலகப்பேரரசாக தன்னை நினைக்கும் அமெரிக்காவுக்கு கூறியது தெளிவான செய்தி: கத்தோலிக்க பாதிரிகளை விசாரிக்கும் உரிமை இவ்வுலக அரசுகளுக்கு இல்லை. பல நூறு (ஆயிரம் ?) குழந்தைகளை பாலியல் பலத்காரம் செய்த ஒருவர் வத்திகான் நினைத்தால் எவ்வித அச்சமுமின்றி ‘பண்பட்ட ‘ ஐரோப்பாவின் மத்தியில் வாழ முடியும் – அமெரிக்காவினால் அவர் விரலைக் கூடத் தொடமுடியாது. போப் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் கத்தோலிக்கத்திற்கு அளித்த இந்த ஆற்றல் வேறெந்த மானுட அமைப்பாலும் கற்பனை கூட செய்ய முடியாதது. போப்பின் ஆளுமைக்கு இதில் உள்ள பங்கு மகத்தானது. ஜிகாதிகள் இந்த இடத்திற்குத்தான் வர முயற்சிக்கின்றனர். ஆனால் அவர்களால் இன்னமும் முதல் பத்தடிகளைக் கூட தாண்டமுடியவில்லை.

அவரது பாரத விஜயத்தின் போது அன்றைய பாஜக அரசினால் அவருக்கு சிவப்புக்கம்பள மரியாதை அளிக்கப்பட்டது. அது ஹிந்துக்களின் தீபாவளி பண்டிகை காலமும் கூட. சீனாவும் இலங்கையும் அனுமதி மறுத்த சூழலில் போப்பிற்கு பாரதம் அனுமதி வழங்கியிருந்தது. பாரதத்தில் உரையாற்றிய போப் ஜான்பால் தமது உரையில் தெள்ளத்தெளிவாக தமது இலட்சியத்தைக் குறிப்பிட்டார். அதாவது ‘இந்த ஆயிரமாவது ஆண்டில் ஆசியாவில் ஆன்மாக்கள் அறுவடை செய்யப்பட்டு இங்கு சிலுவை ஊன்றப்பட அனைவரும் உழைக்க வேண்டும். ‘ என அவர் குறிப்பிட்டார். உலகின் மிக நீள புனித விசாரணையான கோவா புனித விசாரணை குறித்து மன்னிப்போ அல்லது வருத்தமோ தெரிவிக்கப்படமாட்டாது என்பதையும் அவர் தெளிவாக்கினார்.கார்டினல் ராட்ஸிங்கர் போன்ற தெளிவான கத்தோலிக்க அடிப்படைவாதிகள் மூலம் அண்டோனி திமெல்லாவின் தியான இலக்கியங்களை ‘கத்தோலிக்க நம்பிக்கைகளுடன் ஒவ்வாதவை மற்றும் தீவிர சேதத்தை ஏற்படுத்தக்கூடியவை ‘என நிராகரித்தார். அண்மையில் வெளிவந்த டாமினியஸ் ஈஸஸ் எனும் பாப்பதிகார அறிக்கை, எந்த சர்வசமயத்தொடர்பும் , உரையாடலும் கத்தோலிக்க மதத்தினை பரப்புவதற்கான உக்தி என்பதனை நினைவு கொள்ள வேண்டும் என்பதுடன் கத்தோலிக்க மதத்தினை தவிர ஏனைய சமய நெறிகள் அனைத்துமே ஆன்மிகக்குறைபாடுடையவை; மீட்பினைத் தர இயலாதவை ‘ என அறிவித்தார். போலந்தில் அஸ்ட்விச்சில் கார்மல் சகோதரிகளின் மடத்தையும் ஏற்படுத்தி சிலுவைகளையும் நட கத்தோலிக்கத்திருச்சபை முயற்சித்தது. உலகளாவிய யூத எதிர்ப்பினால் அது கைவிடப்பட்டது. இச்செயல்கள் நடந்த அதே நேரத்தில் போப் யூத அமைப்புகள் சிலவற்றுடன் கத்தோலிக்க-யூத உரையாடலை நிகழ்த்துவது குறித்து முயற்ச்சித்துக்கொண்டிருந்தார்.

இன்று தலைமைப்பீட போட்டியில் ஒரு இந்தியர் கூட இருப்பதாகக் கூறப்படுகிறது. கவலையான விஷயம் ஜான் தயால் போல இனவெறிக்கோட்பாடுகள் மூலம் அரசியல் செய்யும் கத்தோலிக்கத் தலைவர்கள் இன்று தேசியஒருமைப்பாடு கவுன்ஸில்களில் ஏறியுள்ள நிலையில் பாரதம் ‘ஆசிய ஆன்ம அறுவடைக்கு ‘ ஏற்ற களமாக மாற்றப்பட்டுள்ளது, எனவே 80 கோடிக்கும் மேற்பட்ட ஹிந்துக்களின் ஆன்மாக்களை அறுவடை செய்யும் இலாபக் கணக்கு அடுத்த போப்பாக ஒரு இந்தியரையோ அல்லது ஆப்பிரிக்கரையோ கொண்டுவர வைக்கலாம். எனவே பின்வரும் விஷயங்கள் முக்கியமானவை. டாமினியஸ் ஈஸஸ் அறிக்கைக்கு பாரத கத்தோலிக்க சமுதாயம் எவ்வித எதிர்ப்பையும் காட்டவில்லை. அதைப்போலவே பாரதத்தில் மத எல்லைகளுக்கு அப்பால் மதிக்கப்படும் அண்டோனி திமெல்லாவின் தியான இலக்கியங்களுக்கு எதிரான பாப்பறிக்கையும் எவ்வித முணுமுணுப்பையும் கூட ஏற்படுத்தவில்லை. அதாவது இந்திய கத்தோலிக்க திருச்சபை மத்திய கால ‘தூய கத்தோலிக்க ‘ நிலைப்பாட்டினையே எடுத்துள்ளது. இந்திய கார்டினல்களின் கார்டினல் பதவிக்கும் ஒருவேளை போப் பதவிக்கும் கூட அவர்கள் கொடுக்கும் விலையாக அவர்கள் சர்வ தர்ம ஆன்மநேய ஒருமைப்பாடு எனும் அடிப்படை பாரத மதிப்பீடு என்பது கவலைக்குரிய விஷயம்தான். கத்தோலிக்க ஆப்பிரிக்கர்களால் நடத்தப்பட்ட ருவாண்டா படுகொலைகளை கண்டிக்க போப்பிற்கு ஒருவருடத்திற்கு மேலானது என்பதும் அது குறித்து ஆப்பிரிக்க கத்தோலிக்க கார்டினல்கள் கூட மவுனம் சாதித்தனர் என்பதும் குறிப்பிடப்பட வேண்டிய மற்றோர் விஷயம். ஆனால் இவை அனைத்திலும் வலுவாக வெளிப்படுவது போப்பதிகாரத்தின் வல்லமையை மீள்-கொணர்ந்த போப் ஜான்பாலின் சாதுரியமான தந்நலமற்ற தன்னை திருச்சபையுடன் முழுமையாக பிணைத்துக்கொண்ட ஆளுமைதான். அதன் இழப்பு நிச்சயமாக கத்தோலிக்க சமுதாயத்திற்கு பெரும் துக்ககரமானதுதான். தலைவனை இழந்து தவிக்கும் துக்கத்தில் நாமும் பங்கு பெறுவோம் – போப்புடன் எவ்விதத்திலும் உடன்படாத போதும். எனவே இனிவரும் நாட்களில் பாரதத்தையும் இதர வளரும் நாடுகளையும் தமது ஆன்ம அறுவடை கருவிகளுக்கு தீவிர இலக்காக்கும் ஒரு (தோல் எந்நிறமாயினும் ஆன்மரீதியில் ரோம சாம்ராஜ்யவாதியாக விளங்கப்போகும்) போப்பினை எதிர்கொள்ள ஆன்ம வலிமையை பாரத சமுதாயம் பெற நாம் பிரார்த்திக்கும் அதே நேரத்தில் உண்மையான உலக அமைதி மற்றும் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளும் தன்மை ஆகியவற்றினை நோக்கி எவ்வித உள்நோக்கமுமின்றி நடைபோடும் ஒரு உண்மையான ஆன்மிகத்தலைவர் அடுத்த பாப்பரசராக வர நாம் பிரார்த்திப்போமாக.

—-

Series Navigation

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்