சிந்திக்க ஒரு நொடி : நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே…

This entry is part [part not set] of 35 in the series 20050304_Issue

வாஸந்தி


மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையில் இடைத்தரகர்கள் தேவையில்லை

சாத்திரங்கள் ஒன்றும் காணார்–பொய்ச்

சாத்திரப் பேய்கள் சொல்லும் வார்த்தை நம்பியே

…தோத்திரங்கள் சொல்லி அவர் தாம்–தமைச்

சூதுசெய்யும் நீசர்களைப் பணிந்திடுவார் —- சுப்பிரமண்ய பாரதி

புராணகதைகள் புதிய அர்த்தத்துடன் இன்று நம் கண்முன் அரங்கேறி வருகின்றன. தேவாம்ருதத்தை வேண்டி திருப்பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் கடைந்தபோது, அக்கடைசலில் பயங்கர அசுத்தங்களும் ஜந்துக்களும் ஆலகால விஷமும் பொங்கி எழுந்து கடைபவர்களை பீதிகொள்ள வைத்தனவாம்.தமிழகம் என்ற கலியுகத்துச் சாகரம் இன்று ஒரு மிகப் பெரிய கடைசலில் இருப்பது போல் இருக்கிறது.காஞ்சி சங்கர மடத்துப் பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வரதராஜ பெருமாள் கோவில் வளாகத்தில் பட்டப்பகலில் நடந்த ஒரு கோரக்கொலையில் நேரிடையாக சம்பந்தப்பட்டிருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டதிலிருந்து பயங்கர பூதங்கள் கிளம்பிப் பாமரனை சரமாரியாகத் தாக்க ஆரம்பித்திருக்கின்றன.நிஜமான பூதங்கள்; கற்பனை பூதங்கள்.அரசியல் ஜோடனைகள்;ஊழ்வினையின் மறு பிரவேசங்கள் என்ற ராட்சஸ அலைகளில் மிதப்பவர் போன்ற தோற்றத்துடன் இன்னமும் தண்டத்தை ஏந்தியபடி தொலைக் காட்சித் திரையில் போலீஸ் வண்டியிலிருந்து இறங்குவதும் ஏறுவதுமாகக் காட்சியளிக்கும் அந்த காவி உடை சன்யாசியின் தோற்றம்–..சாமான்யனின் மனத்தில் சம்மட்டியாக விழுந்துவிட்ட கல். அவனது நம்பிக்கைகளை எதிர்பாராமல் தகர்த்து உலுக்கிவிட்ட ஏமாற்றுச் சின்னம். நிஜக் குற்றவாளியோ, நிரபராதியோ, நீதி மன்றமே தீர்பளிக்கும் என்றாலும் அவன் வரையில் ஏற்பட்டுவிட்ட சந்தேகம் பரிதாபமானது. நாத்திகர்களை அவன் மன்னிப்பான். கடவுளின் பெயரைச் சொல்லி துறவுப் போர்வையில்

உள்ளவர் குற்றவாளி என்று சொல்லப்பட்டால், அவர் இருவித நிந்தனைகளுக்குப் பொறுப்பு. சட்டத்தை நிந்தித்தவர்; அவன் நம்பும் மதத்தை நிந்தித்தவர். தனது மதத்தின் பாதுகாவலர் என்ற அவனது நம்பிக்கையை சிதைத்தவர்.இந்த சிதைத்தலே அவர் செய்த மிகப் பெரிய துரோகம். இது அவனுக்குத் தேவையா ? நம்பியவன் என்பதைத் தவிர அவன் செய்த குற்றம் என்ன ?

நம்பியதே அவன் செய்த குற்றம். எல்லா மதங்களிலும் நம்புபவர்கள் செய்யும் குற்றம்.இயற்கையை வழிபட்ட கால கட்டத்தில் மட்டுமே மனிதனுக்கும் இறைவனுக்கும் நேரிடைத் தொடர்பு இருந்தது. மழையில், பனியில், காற்றில், தீயில், காக்கைச் சிறகினில் நீரில் அவன் இறைவனைக் கண்டான். அதனுடன் இசைந்து வாழ்தலே தரணிக்கும் தனக்கும் நல்லது என்கிற ஞானத்தில் திளைத்த காலம் முடிவுக்கு வந்த போது எல்லாம் தலைகீழாக மாறிப்போனது. நிலமும் பெண்ணும்,பொன்னும் பொருளும் தேவைப்பட்டபோது கடவுளும் தேவைப்பட்டார். கடவுளைக் காக்க மதங்கள் வந்ததும் குருபீடங்கள் தேவைப்பட்டன. இறைவனை அடையும் குறுக்குச் சாலைகள் அவை என்று சொல்லப்பட்டன.மிகப் பிற்போக்குத்தனமான நில உடமைப் போக்குக்குச் சாதகமான சாலை என்பதால் இறைவனுடனான நேரிடை தொடர்பில் மனிதனுக்கு சுவாரஸ்யம் போய்விட்டது. இடைத் தரகு சாமிகளின் செல்வாக்கு அதிகரித்ததற்கு அவனே காரணம். அவனுக்குத் தனது பக்தியை,விசுவாசத்தைப் பணத்தாலும் பொருளாலும் காட்டித்தான் பழக்கம். செய்யும் குற்றங்கள் ,பாவங்கள் எல்லாம் கோவில் உண்டியலில், மடத்துக்குக் கொடுக்கும் பணத்தில் கரைந்துவிடும் என்ற உறுதியான நம்பிக்கை அவனுக்கு.

கோவில்களுக்குப் பணம் சேருவதுபோல் மடங்களுக்குப் பணம் சேரும்போது அதற்குக் கணக்குக் கேட்பது மரபில் இல்லாதது.கடவுளின் பிரதினிதியாகக் கொள்ளப்படுபவர் இச்சைகளுக்கு அப்பாற்பட்டவர்,–அதாவது அது அவனது நம்பிக்கை. நிஜத் தங்கக் காசுகளால் அபிஷேகம் செய்யப்பட்டாலும், சலனமற்று இருக்கவேண்டியவர். பணமும் செல்வாக்கும் அதிகரிக்க அரசியல் தொடர்புகள் தேவை. அரசியலுக்கு மடங்களின் ஆதரவு தேவை. காமக் க்ரோத லோப மோகம் எல்லாம் காவி உடைக்குள் புகுந்துகொண்டால் அது உடையின் குற்றமில்லை. அதை வளர விட்டு ஏதும் செய்யத் துணியாத ,இப்பவும் நம்ப மறுக்கும் பக்தனின் குற்றம்.

ஆலகால விஷத்தை ஏற்க அந்தத் திருநீலகண்டன் வரமாட்டான் என்று உணர்ந்த யதார்த்தவாதி இந்த மடாதிபதி. அவரை தெய்வத்திற்கு ஒப்பாக , இந்து மதத்தின் அடையாளமாக, அதன் கெளரவத்தின் சின்னமாகக் கருதும் கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்திருந்தால் நடக்கும் கதையே வேறு. மடாதிபதியின் கைது இந்து மதத்திற்கு ஏற்பட்ட அவமானம் என்று சொல்லும் இவர்களுக்குப் புராண கதைகள் மறந்து விட்டன. தெய்வங்களும் மனித இயல்புகளைக் கொண்டவை. தப்பு செய்யும். ஆனால் காரண காரிய சுழற்சியிலிருந்து தெய்வமும் தப்பமுடியாது. மும்மூர்த்திகள் உள்பட தண்டிக்கப்படுவார்கள்.

நமக்குச் சரித்திர ஞானமும் கிடையாது. காஞ்சி சங்கர மடம் 2500 வருடத் தொன்மை கொண்டது என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லப்படுகிறது. அதற்கு நிரூபணம் என்ன ? ஆதிசங்கரரின் காலம் கி.பி ஒன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பம் என்று வரலாறு சொல்கிறது. ஆதிசங்கரர் ஸ்தாபித்த நான்கு குருபீடங்களில் காஞ்சி குறிப்பிடப்படவில்லை. அவர் பெயரில் பின்னால் வேறு யாரோ ஆரம்பித்த மடம் காஞ்சியில் இருப்பது. மடத்தின் தொன்மையை வலியுறுத்தி என்ன சொல்ல வருகிறார்கள் ?

அங்கு என்ன நடந்தாலும் கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டும் என்றா ?

கைது பல விதங்களில் அரசியலாக்கப்பட்டுவிட்டதுதான் நமக்கு அவமானம்.நீதிமன்றம் சஙகராச்சாரியரை நிரபராதி என்று சொல்லலாம். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். இந்தக் கைதும் அதன் பின்னணியும் புனிதம் மிக்கவை என்று மக்கள் நம்பிய மடங்களில் நடக்கும் ஊழல்களை அம்பலப் படுத்திவிட்டன.பாமரன் விழித்துக் கொள்ளவேண்டிய தருணம் இது. இந்து மதத்துக்குப் பாதுகாவர்கள் தேவையில்லை. சீர்திருத்தவாதிகள் தான் தேவை. மூட நம்பிக்கை, சாதிப்பிரிவினை, பெண் அடிமைத்தனம் ஆகியவற்றை அடியோடு அதிலிருந்து வேரறுக்க. காலங்காலமாக குரு பீடங்கள் மதம் என்ற பெயரில் ஒரு ஸ்தாபனமற்ற வாழ்க்கை முறையை களங்கப் படுத்தியது போதும்.

நம்பிக்கை உள்ளவர்களுக்கு இடைத் தரகர்கள் தேவை இல்லை.இந்தப் பிரக்ஞையே இந்த மாபெரும் சாகரக் கடைசலில் கிடைத்த அமுதமாக இருக்கட்டும்.

Series Navigation

வாஸந்தி

வாஸந்தி