தமிழ்ப் படங்களும் ஆங்கிலப் பெயர்களும்

This entry is part [part not set] of 49 in the series 20050225_Issue

மணி வேலுப்பிள்ளை


தமிழ்த் திரைப்படங்கள் ஆங்கிலப் பெயர்களுடன் வெளிவருவதால் இன்னும் 50 ஆண்டுகளுள் தமிழ் சிதைந்துவிடும் என்று நெடுமாறன், ராமதாஸ், திருமாவளவன், சேதுராமன் போன்ற தமிழ் பாதுகாப்பு இயக்கத் தலைவர்கள் அஞ்சுகின்றனர் (முழக்கம், ரொறன்ரோ, 2005-02-04). அதனைக் குறித்து முதல்வர் ஜெயலலிதா, கண்ணன் பழனிச்சாமி, மயிலாடுதுறை சிவா, வரதன் முதலியோர் தத்தம் எண்ணங்களை வெளியிட்டுள்ளார்கள் (திண்ணை, சென்னை, 2005-02-03).

ஆங்கிலப் பெயர்களுடன் கூடிய தமிழ்த் திரைப்படங்களை ஒரு சிதைவின் தோற்றுவாயாகக் கொள்வதைக் காட்டிலும், ஒரு நிகழ்வுக் கோவையின் தருக்கரீதியான தொடர்ச்சியாகவும், நடப்பு நிலைவரத்தின் தவிர்க்கவியலாத விளைவாகவும் கொள்வதே சாலவும் பொருந்தும். அதனை மெய்ப்பிக்கும் வண்ணம் ஈழத்திலிருந்து நடிகர் திலகத்துக்கு வரையப்பட்ட ஒரு கடிதத்தில் தமிழ்ப் படவுலகின் அன்றைய நிலையும் நேற்யை நிலையும் இன்றைய நிலையும் நயம்படுமுறையில் ஒப்பிடப்பட்டுள்ளன:

‘என் பிராண நாதா! உங்கள் மேல் கொண்ட பிரேமையால்… எனத் தொடங்கும் வடமொழி ஆட்சி கொண்ட அன்றைய தமிழ்ச் சினிமாப்பட வசனங்களும்…

‘கோயில்களை எதிர்த்தேன், கோயில்கள் கூடாதென்பதற்காக அல்ல, கோயில்கள் கொடியவர்களின் கூடாரமாக இருக்கக் கூடாதென்பதற்காக… என்ற உங்கள் சிம்மக் குரல்ஸ நீங்கள் பேசிய அழகான சுத்தமான தமிழ் வசனங்கள்ஸ தமிழ்த்தாய்க்குக் கிடைத்த வரப்பிரசாதம்…

‘பத்துக்கு எட்டுச்சொல் ஆங்கிலமாக, காதை எவ்வளவு தீட்டிக்கொண்டு கேட்டாலும் முழுமையாய் விளங்காத வகையில் இன்றைய தமிழ்ச் சினிமாக் கதாநாயகர்கள் அரையிருட்டில் முணுமுணுக்கும் வசனங்கள்… தமிழ்த்தாய்க்குக் கிடைத்த சாபங்கள்… (கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ், பழம் பண்டிதரின் பகிரங்கக் கடிதங்கள், நர்மதா பதிபபகம், சென்னை, 2002, ப.60-61).

நாங்கள் ஆங்கிலேயரால் கட்டியாளப்பட்டவர்கள். அவர்களுடைய நாடாளுமன்ற மக்களாட்சியை ஏற்றுக்கொண்டவர்கள். அவர்களுடைய சட்டதிட்டங்களை உள்வாங்கியவர்கள். அவர்களுடைய கல்வித்திட்டத்தை வரவேற்றவர்கள். அவர்களுடைய நிருவாக முறையினைப் பயின்றவர்கள். மேல்நாட்டுக் கண்டுபிடிப்புகளும் வசதிகளும் உத்திகளும் நெறிகளும் எண்ணங்களும் பெரிதும் ஆங்கில மொழி வாயிலாகவே தமிழினுள் நுழைந்தவை. நடப்புலகில் ஆங்கிலமே தலையாய ஊடகம். மழை தானும் எமக்கு உணவாகி, எமது உணவுப் பயிர்களுக்கும் உணவாகுவது போலவே (குறள் 12), ஆங்கிலம் தானும் ஊடகமாகி ஏனைய ஊடகங்களுக்கும் ஊடகமாக விளங்குகிறது. ஆங்கிலமே நடப்புலகின் தலையாய உறவு மொழி, அறிவியல் மொழி, பல்வேறு நாடுகளில் ஆட்சி மொழி. அறிவையும் தொழில்வாய்ப்பையும் உறவையும் நாடும் மக்கள் அனைவருக்கும் கைகொடுக்கும் மொழி. தமிழ் உட்பட அதற்கு வேறெந்த மொழியினாலும் ஈடுகொடுக்க முடியாது. இத்தகைய ஒரு சூழ்நிலையில் தமிழ் மக்கள் மத்தியிலும் தமிழ் மொழியிலும் ஆங்கிலத்தின் தாக்கம் மேலோங்குவது இயல்பே. எங்கள் சொந்த நலன்களுக்காக ஆங்கிலேயரின் மதங்களுக்கு நாங்கள் மாறத் தொடங்கினோம். அவர்களின் பண்பாட்டை நாங்கள் இயன்றவரை பின்பற்றத் தொடங்கினோம். ஆங்கிலக் கல்வி நிலையங்களைப் பெரிதும் நாடத் தொடங்கினோம். ஆங்கிலக் கலை, இலக்கிய, அரசியல் அம்சங்களை உள்வாங்கத் தொடங்கினோம். ஆங்கில மொழி வாயிலாகவே அவை அனைத்தும் கைகூடியுள்ளன.

அதன் தொடர்ச்சியாகவும் விளைவாகவுமே எங்கும் ஆங்கிலம், எதிலும் ஆங்கிலம் என்னும் நிலைமை இன்று தமிழகத்தில் நிலையூன்றியுள்ளது. தமிழ்ச் சஞ்சிகைகள் முற்றிலுமாகவும் அரைக்கரைவாசியும் ஆங்கிலப் பெயர்சூடி வெளிவருகின்றன. தமிழ்க் கலைநிகழ்ச்சிகள் ஆங்கில மயமாகியுள்ளன. தமிழ்த் திரைப்பட உரையாடல்கள் பெரிதும் ஆங்கிலத்தில் இடம்பெறுகின்றன. தமிழ்க் கலைநிகழ்ச்சிகளில் தமிழ்க் கலைஞர்கள் முற்றிலும் ஆங்கிலத்தில் உரையாடுகிறார்கள். தமிழ்த் திரைப்படங்களிலும் தொலைக்காட்சி நாடகங்களிலும் ஏறத்தாழ 50 விழுக்காட்டுக்கு மேல் அநாவசியமான ஆங்கிலச் சொற்கள் செறிந்துள்ளன. கேவலம், ஒரு தமிழ்க் குழந்தையின் முழுமுதற் சொற்களாகிய அம்மா, அப்பா கூட மம்மி, டடி ஆகியுள்ளன. இத்தகைய போக்கின் தொடர்ச்சியாகவும் விளைவாகவுமே தற்பொழுது தமிழ்த் திரைப்படங்கள் ஆங்கிலப் பெயர் தாங்கி வெளிவரத் தொடங்கியுள்ளன.

ஏற்கெனவே தமிழ் பேசும் மக்களின் பெயர்கள் பெரிதும் கடவுள்களின் வடமொழிப் பெயர்களாகவே காணப்படுகின்றன. அவை தமிழ்ப் பெயர்களே அல்ல. எனினும் அவை தமிழ் பேசும் மக்களின் பெயர்கள்தாம். அவற்றை எழுதுவதற்கு 247 தமிழ் எழுத்துக்களும் போதாது! அதற்காக ஹ, ஷ, ஜ, ஸ… போன்ற கிரந்த எழுத்துக்களை நாங்கள் இரவல்பெற நேர்ந்துள்ளது. எவ்வாறாயினும் கமல்ஹாசன், ஜயேந்திரர், ராமதாஸ் என்று தமிழ் இலக்கண விதியை மீறி எழுதுவதால் தமிழ் மங்கப் போவதுமில்லை. கமலகாசன், சயேந்திரர், இராமதாசு என்று தமிழ் இலக்கண விதிப்படி எழுதுவதால் தமிழ் ஓங்கப் போவதுமில்லை.

வேதாசலம் சுவாமிகள் என்னும் பெயர் மறைமலை அடிகள் ஆகியதும், சூரிய நாராயண சாஸ்திரி என்னும் பெயர் பரிதிமாற்கலைஞர் ஆகியதும் உருப்படியான மாற்றங்களே. எனினும் இத்தகைய உருப்படியான மாற்றங்களுக்கும் தமிழின் மேம்பாட்டுக்கும் எதுவித தொடர்பும் கிடையாது. மறைமலை அடிகள், பரிதிமாற்கலைஞர் இருவரின் காலத்திலும், அதற்கு முன்னரும் பின்னரும் தனித் தமிழை மீறியே தமிழ் மொழி வளர்ந்து வந்துள்ளது.

எழுத்துக்களின் கதை சொற்களுக்கும் பொருந்தும். எவ்வாறு கறி (curry), காசு (cash), வெற்றிலை (betel), சுருட்டு (cheroot), கூலி (coolie), மிளகுதண்ணீர் (mulligatawny)… போன்ற தமிழ்ச் சொற்கள் ஆங்கிலத்துக்கு இன்றியமையாத இரவல்-சொற்களாக வழங்கி வருகின்றனவோ, அவ்வாறே கார் (car), வான் (van), நாவல் (novel), காஃபி, பேனா (ஈழத்தில் கோப்பி, பேனை)… போன்ற ஆங்கிலச் சொற்கள் தமிழுக்கு இன்றியமையாத இரவல்-சொற்களாக வழங்கி வருகின்றன. இரவல்-சொற்களால் ஆங்கிலம் அடைந்த அதே பயனைத் தமிழும் அடைந்துள்ளது. ஈழத்தில் சவர்க்காரம் (soapி), துவாய் (towel), பாண் (bread)… போன்ற சொற்கள் வழங்கி வருகின்றன. அவற்றுடன் சோடா, பெட்ரோல், காஃபி, (ஈழத்தில் பெற்றோல், காப்பி) போன்ற ஆங்கிலச் சொற்களும் தமிழினுள் நுழையவே செய்யும். தமிழ் நிலைப்பதற்கு அவை நுழைய வேண்டும். நுழையாவிட்டால் தமிழ் எப்பொழுதோ துஞ்சியிருக்கும்.

எங்கள் பேச்சு வழக்கில் ஆங்கிலச் சொற்கள் பலவும் இடமபெறுகின்றன. இடம்பெற வேண்டியுள்ளது. எடுத்துக்காட்டாக bicycle-ஐ பைசிக்கிள் அல்லது சைக்கிள் என்று எழுதுவது எழுத்திலக்கண விதிக்கு அமைவாக உள்ளது. அப்படி எழுதுவதற்குக் கிரந்த எழுத்துக்களே தேவையில்லை. ஆதலால் இலங்கை அரச கலைச்சொற்றொகுதியில் சைக்கிள் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. சைக்கிள் என்று குறிப்பிடுவதால் தமிழ் தாழ்ச்சியும் அடையாது. அதனை ஈருருளி, துவிச்சக்கர வண்டி, கைபிடி கால்மிதி வண்டி என்றெல்லாம் குறிப்பிடுவதால் தமிழ் எழுச்சியும் அடையாது. மக்கள் வழக்கை ஒட்டியே தமிழ் வளர முடியும், வளர முடிந்துள்ளது. ஆகவே சைக்கிளை, சைக்கிள் என்று குறிப்பிடுவதே புத்திசாலித்தனம்.

பேச்சு வழக்கைப் பொறுத்தவரை ஈழத்தில் ஓரளவும் தமிழகத்தில் பெரிதும் ஆங்கிலச் சொற்கள் வழங்கி வருகின்றன. எனினும் பாய்ஸ், யூனிவாசிட்டி, ஸ்டூடன் நம்பர் ஒண், மும்பாய் எக்ஸ்பிரஸ்ஸ என்றெல்லாம் தமிழ்ப் படங்களுக்குப் பெயரிடுவதால் முறையே பையன்கள், பல்கலைக்கழகம், தலைமாணாக்கர், கடுகதி போன்ற தமிழ்ச் சொற்களோ தொடர்களோ மறையப் போவதில்லை. ஆங்கிலப் பெயருடன் கூடிய எத்தனை திரைப்படங்களைக் கொண்டும் அவற்றை ஒழிக்க முடியாது. உலகளாவிய தமிழ்ப் பேச்சு வழக்கிலும் எழுத்து வழக்கிலும் கஷ்டம் என்னும் வடமொழிச் சொல்லை எடுத்தாளாத தமிழரைக் காண்பது கஷ்டம். அதனால் கடினம் என்னும் சொல் மறைந்திடவில்லை. அண்ணாவின் உரைகளில் ததும்பும் தமிழின் செழுமை, சி.என். என்னும் அவருடைய ஆங்கில முதலெழுத்துக்களினாலோ, நான்ஸென்ஸ் என்னும் தலைப்பில் அவர் நேருஜியை விளித்து வெளியிட்ட கட்டுரையினாலோ மழுங்கப் போவதில்லை. சண் டிவி எத்தனை மடங்குகள் ஒளிர்ந்தாலும் கலைஞரின் பராசக்தி வசனத்தில் மிளிரும் தமிழை விஞ்ச முடியாது. அத்துணை வன்மையும் வண்மையும் கொண்ட தமிழை, எத்தனை பாய்ஸ் சேர்ந்தும் தீண்ட முடியாது.

திரைப்படத்துறை ஒரு கலையாக மேலோங்கியதைவிட, ஒரு தொழில்துறையாக மேலோங்கியதே அதிகம். ஏனைய தொழில்துறைகளைப் போலவே திரைப்படத்துறைக்கும் ஆதாய நோக்கம் உண்டு. ஆதாயம் அடைவதற்கு ஆபாசம் ஒரு குறுக்கு வழி. ஆதலால் தற்காலத் தமிழ்ப் படங்கள் பெரிதும் ஆபாசப் படங்களாக உருமாறிவிட்டன. உடலுறவை ஒலிப்பதிவு செய்யும் பாடல்கள் வேறு அவற்றை அணிசெய்கின்றன. இவற்றைத் தணிக்கைச் சபை அங்கீகரித்தது எங்ஙனம் ? இவற்றை எதிர்த்து எவரும் வெகுண்டெழுவதாகத் தெரியவில்லை! அன்று அரிசிக்குள்ளிருந்து கற்களைப் பொறுக்கி எறிந்த அதே தமிழ் மக்கள், இன்று கற்களுக்குள்ளிருந்து அரிசியைப் பொறுக்கி எடுக்க வேண்டியுள்ளது.

தமிழை அழிப்பதற்கு வெளிநாட்டவர்கள் தமிழ்நாட்டுக்கு வரத்தேவையில்லை, அதற்கெல்லாம் உள்நாட்டவர்களே தயாராய் இருக்கிறார்கள் என்று யூனிவாசிட்டி என்னும் திரைப்படத்தில் விக்ரம் (தமிழ் எழுத்திலக்கணப்படி விக்கிரம்!) அங்கலாய்க்கிறார் (2005-02-05 அன்று TVI என்னும் 24 மணித்தியால கனடிய தமிழ்த் தொலைக்காட்சியில் இத்திரைப்படம் ஒளிபரப்பப்பட்டது). ஆங்கிலப் பெயருடன் கூடிய இத்திரைப்படத்தில் இடம்பெறும் இக்கூற்றில் அரியதோர் உண்மை பொதிந்துள்ளது: அதாவது நாங்கள்தான் எங்கள் தாய்மொழியைக் கெடுத்து வருகிறோம். ‘ஊடகம் தோறும் நம் தமிழ் குற்றுயிரும் குலையுயிருமாகவே ஆளப்படுகிறது. வானொலி, தொலைக்காட்சிகளில் ஒரு தமிழ்ச் செய்தியறிக்கைகூட இலக்கணப் பிழையோ, குறிப்பாக வினைமுற்றுப் பிழையோ உச்சரிப்புப் பிழையோ இல்லாமல் செவிமடுக்க வாய்ப்பதில்லை… அனைத்திலும் ஆங்கில நெடி வேறு! ‘ (திருக்குறளன், மஞ்சரி, சென்னை, யூன் 2003, ப. 77).

ஆங்கிலச் சொல் எதனையும் எடுத்தாளாத அதேவேளை தமது கட்டுரைகளை இயல்பான தமிழ் நடையில் ஒப்பேற்றியவர்களுள் பாரதியார், புதுமைப்பித்தன், வெ.சாமிநாத சர்மா மூவரும் முக்கியமானவர்கள். ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு முன்னர் ஈழத்தில் வைத்து, வெ.சாமிநாத சர்மா அவர்களின் பிளேட்டோவின் அரசியல் என்னும் நூலை நாம் வாசித்து மகிழ்ந்ததுண்டு. தற்பொழுது ஒரு கனடிய நூலகத்தில் அவருடைய இன்னொரு நூலைக் கண்டு மகிழ்ந்தோம் (வெ.சாமிநாத சர்மா, கிரீஸ் வாழ்ந்த வரலாறு, சந்தியா பதிப்பகம், சென்னை, 2003). தமிழகத்தில் வைத்து எழுதப்பெற்ற இந்நூல் (இக்கட்டுரையாளரைப் பொறுத்தவரை) ஈழத்திலிருந்து கனடா வரை தமிழை நிலைநாட்டியுள்ளது என்றால் மிகையாகாது. இம்மூவரின் படைப்புகளிலும் ஓர் ஆங்கிலச் சொல்லையோ நடையையோ காண்பதரிது. இத்தகைய நூல்களில்தான் – நூல்களால்தான் தமிழ் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

தமிழை நிலைநிறுத்துவதில் கலை, இலக்கியப் படைப்புகளுக்கு உள்ள அதே இடம் அகராதிகளுக்கும் கலைச்சொற்றொகுதிகளுக்கும் உண்டு. சென்னைப் பல்கலைக்கழக தமிழ்-ஆங்கில அகராதி, சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம்-தமிழ்ச் சொற்களஞ்சியம், ஈழத்துக் கலைச்சொற்றொகுதிகள் போன்றவை தமிழை நிலைநிறுத்துவதில் தலையாய பங்கு வகித்துள்ளன. அவற்றைப் புதுப்பித்து மீள வெளியிடும்படி கேட்டு நாம் திரும்பத் திரும்ப விடுத்த வேண்டுகோளுக்கு தமிழக அரசோ சென்னைப் பல்கலைக்கழகமோ ஈழத்துக் கலை-பண்பாட்டுக் கழகமோ பதில் தரவில்லை. அதே வேண்டுகோளையே பழநெடுமாறன், இராமதாசு, சேதுராமன், திருமாவளவன் உட்பட்ட தமிழ் பாதுகாப்பு இயக்கத்தவர்களிடம் நாம் விடுக்கின்றோம். தமக்கு நன்கு அறிமுகமான ஈழத்துக் கவிஞர் காசி ஆனந்தன் மூலம் கலை-பண்பாட்டுக் கழகத்துடனும் யாழ் பல்கலைக்கழகத்துடனும் தொடர்புகொண்டு இத்தகைய பணியை ஒப்பேற்றுவதற்கு அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரை நூற்றாண்டுக்கு முன்னரே ராஜாஜி (இராசாசி!) இப்படி அறிவுறுத்தியுள்ளார்: பல வேறு விஷயங்களை அறிந்தும் ஆராய்ந்தும் வரும் தமிழர், தாங்கள் சாதாரணமாகப் பேசும்போது முழுதும் தமிழ்மொழிகளாவே பேசினால் தமிழுக்கு வளர்ச்சி ஏற்படும். விஷயங்களைப் பேசும்போது தமிழ் மொழி தெரியாத இடத்திலும், மறந்துபோன இடத்திலும், புதுத் துறைகளில் ஆராய்ச்சி செய்யும்போதும், வாதப் பிரதிவாதம் செய்யும் போதும் அறிவையும் நினைவையும் செலவழித்துத் தமிழ் மொழிகளைத் தேடி உபயோகிப்பதற்குப் பதில், எளிதில் கிடைக்கக்கூடிய ஆங்கில மொழிகளை, அதாவது பிறதேசத்தார் கஷ்டப்பட்டுத் தங்களுக்கென்று உண்டாக்கியிருக்கும் மொழிகளை, எவ்விதக் கூச்சமுமின்றி இடைஇடையே கலந்து பேச்சை நடத்திவிட்டுத் தமிழுக்குச் சோறு போடாமல் கொல்லுகிறோம். சோம்பேறிகளைப் பெற்ற தாயைப் போல், தமிழ் அவதிப்பட்டு வருகிறது. அன்னம் ஊட்டாத தேகம் எப்படி வளரும் ? நுட்பமான பொருட்பேதங்களும் அவைகளுக்குத் தகுந்த மொழிகளும் நடையும் ஒரு பாஷையில் எவ்வாறு தோன்றும் ? தோன்றியவை எவ்வாறு உயிருடன் நிற்கும் ? பொருளைப் புகுத்திப் பேசிப் பழகி வந்தால்தானே பாஷை வளம் பெறும். கிடைத்த புல்லையும் தவிட்டையும் ஆங்கில மாட்டுக்கே போட்டு வந்தால் நம்முடைய பசு எவ்வாறு பால் கொடுக்கும் ? கொஞ்சம் தடை தோன்றிய இடங்களிலெல்லாம் ஆங்கிலத்தைப் போட்டு நிரவிப் பேச்சை ஓட்டிக் கொண்டு போனால், தமிழ் எங்கனம் வளரும் ? அறிஞர்களெல்லாம் தமிழைக் கொல்லுவதற்காகச் சதியாலோசனை செய்தால் கூட இதைவிட யுக்தி கண்டுபிடிக்க முடியாது… (கல்கி, தீபாவளி மலர் 2001, ப. 158).

சி.பி.சி. என்னும் கனடிய தேசிய வானொலி வாயிலாக ஒரு தமிழ்ப் பிள்ளையின் தேம்பல் காதில் விழுந்தது (Canadian Broadcasting Corporation, 2005/02/07, 8.30-9.30 AM). காஞ்சிபுரம் சேலை நெசவாலை ஒன்றில் வேலை செய்யும் அப்பிள்ளை இழைத்த தவறுக்காக ஆலை-மேலாளர் அதன் முதுகில் மூன்று தடவைகள் தடி கொண்டு அடித்திருக்கிறார்! ஒரு பிள்ளை வேலைசெய்து பிழைக்க நேர்வதே ஒரு கொடுமை. அத்தகைய பிள்ளையைத் தாக்குவது அதனிலும் கொடுமை. கேரள மாநிலத்து பிளாச்சிமடம் பகுதியில் அமெரிக்க கொக்கோ கோலா கம்பனி ஒவ்வொரு நாளும் குழாயக் கிணறு மூலம் 15 இலட்சம் லீட்டர் தண்ணீரை உறிஞ்சி எடுப்பதால், அங்கு மண் வரண்டு, பயிர்ச்செய்கை ஒழிந்து, மக்கள் வாழ்விழந்த சேதி கனடிய தேசிய செய்தித்தாள் ஒன்றில் காணப்பட்டது (Mark Williams, The Golbe and Mail, Toronto, 2005/02/12).

இத்தகைய கொடுமைகளை இந்தியத் திரையுலகு வெளிக்கொணர்வது அரிது. மக்களால் மக்களுக்காக நடத்தப்படும் மக்களின் ஆட்சி எவ்வாறு கும்பலால் கும்பலுக்காக நடத்தப்படும் கும்பலின் ஆட்சியாய்க் கோணுவதுண்டோ, அவ்வாறே திரைப்படக் கலையும் கும்பலால் கும்பலுக்காக நடத்தப்படும் கும்பலின் கலையாய்க் கோணுவதுண்டு. ‘ஒரு கும்பலை இன்புறச்செய்வது எளிதான, அதேவேளை இழிவான செயல். அவர்களை வியக்கவைப்பது கடினமான செயலன்று. அவர்களுக்கு நன்மை செய்து, அவர்களை மேம்படுத்தும் பணியே தொல்லையும் ஆபத்தும் மிகுந்தது ‘ (Caleb Colton).

____

மணி வேலுப்பிள்ளை manivelupillai@hotmail.com 2005-02-12

Series Navigation

மணி வேலுப்பிள்ளை

மணி வேலுப்பிள்ளை